சாரல் மழையே
அத்தியாயம் 15
மாலைதான் அவர்களை அழைக்க வருவான் என்று நினைத்த கணவன் இப்போதே வருவதால்… கீர்த்தித் தயாராக ஆரம்பித்தாள். அவள் எல்லாம் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர தர்மாவும் வந்திருந்தான். வாசன் வீட்டில் இல்லை. அவரது மனைவி தான் பழச்சாறு கொடுத்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
அவன் வந்து சிறிது நேரத்திற்கெல்லாம் சொல்லிக் கொண்டு குடும்பமாக அங்கிருந்து கிளம்பிவிட்டனர். தர்மா எப்போதுமே வந்தால் அதிக நேரம் இருக்க மாட்டான். மரியாதையான ஒரு இடைவெளியை கடைபிடிப்பான்.
காரில் சிறிது தூரம் வந்தபிறகு, “அப்பா, வெளிய போகலாமா பா….” என அபி கேட்க,
“இந்த நேரத்தில எங்கப் போறது? எனக் கீர்த்தி மகளைப் பார்க்க, பீச்சுக்கு போகலாமா என்றாள்.
“இந்த வெயில்ல உனக்குப் பீச்சுக்கு போகனுமா?” என்றதும்,
“எனக்கு ஸ்கூல் லீவ் விட்டாச்சு. லீவ் விட்டதும் எங்காவது போகலாம் சொன்னீங்க.” என்றாள்.
தர்மாவுக்குமே மனதே சரியில்லை. எங்காவது சென்றால் நல்லது என்றுதான் இருந்தது. கீர்த்தி உண்டானதில் இருந்து எங்குமே வெளியே செல்லவும் இல்லை.
காலை இருந்த மனநிலையில் வீட்டினரிடம் ஒழுங்காகச் சொல்லிக்கொள்ளவும் இல்லை. தாத்தா வேறு எப்படியிருக்கிறார் தெரியவில்லை. அவரையும் பார்க்க வேண்டும் எனக் காரை வீட்டிற்கே செலுத்தியவன், “மகளிடம் வீட்டுக்குப் போய்ப் பாட்டிகிட்ட சொல்லிட்டு பீச்சுக்கு போகலாம்.” என்றதும், அபி மகிழ்ச்சியில் துள்ளவே ஆரம்பித்தாள்.
“பீச்சுக்கா போகப் போறோம்.” எனக் கீர்த்திக் கேட்க,
“எதாவது ரெசார்ட் போகலாம் கீர்த்தி.” என்றதும் கீர்த்திக்கும் மகிழ்ச்சிதான். ரெண்டு மூன்னு நாளுக்குத் தேவையானது எடுத்து வச்சுக்கோ.” என்றதும், அம்மாவுக்கும் மகளுக்கும் இன்னும் குஷியாக இருந்தது.
தர்மாவும் கீர்த்தியும் இருவருமாக அப்போதே கைப்பேசியில் ரெசார்ட்டில் அறை பதிவு செய்தனர். அடுத்து வருவது வாரநாட்கள் என்பதால் அறை இருந்தது.
வீட்டிற்குள் நுழைந்ததும், “நாங்க பீச்சுக்கு போறோம். அங்கேயே இருக்கப் போறோம்.” என்றால் அபி. அங்கேயே எப்படி இருப்பாங்க. எதோ புரியாமல் சொல்கிறாள் என ஜமுனா நினைக்க… தர்மா அவர்கள் ரெசார்ட் போய்த் தங்கப் போவதை சொன்னவன், “நீ தேவையானது எடுத்து வை கீர்த்தி. நான் தாத்தாவை பார்த்திட்டு வரேன்.” என ரங்கநாதனின் அறைக்குச் சென்றான்.
ஜமுனாவும் நாயகியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கீர்த்தி மெதுவாக மாடி ஏறினாள். அவளிடம் எதையும் சொல்லி இருக்க மாட்டான் எனத் தெரியும்.
ரங்கநாதனிடம் எப்படி இருக்கீங்க தாத்தா என்றவன், அருகில் இருந்து உதவியாளரிடம், “சுகர் ப்ரெஷர் செக் பண்ணினீங்களா?” எனக் கேட்க, “எல்லாமே நார்மலா இருக்கு சார்.” என்றதும்,
“நான் ரெண்டு நாள் இருக்க மாட்டேன். நீங்க இங்கயே தங்கி பார்த்துக்கோங்க.” என, அவர் சரியென்றார்.
மணிதான் ரங்கநாதனின் உதவியாளர் மற்றும் கார் ஓட்டுனரும் கூட. காலையில் வந்தால் இரவு வரை இருப்பார். தர்மா இல்லாத நாட்களில் இரவு நேரமும் தங்குவார்.
அவரை வெளியே செல்லும்படி ஜாடை காட்டிய ரங்கநாதன், தர்மாவிடம், “நீ பேசினது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உன்னைப் புரிஞ்சிக்காதவங்களோட நீயும் எத்தனை நாள் சேர்ந்திருப்ப? நான் இருக்கும்போதே பிரிச்சிக்கிறது நல்லது. அடுத்த மாசம் வசீகரன் கல்யாணம் இருக்கு. அது முடியட்டும். ஆனா அதுக்குள்ள எது எது எப்படிப் பிரிக்கனும்னு நான் சொல்றேன். நீ எல்லாம் தயாரா வை.” என்றார்.
“சரிங்க தாத்தா நீங்க சொல்றபடியே பண்ணலாம். அபி வெளிய போகக் கேட்டுட்டே இருக்கா. ரெண்டு நாள் இங்க பக்கத்தில ரெசார்ட் தான் போறோம்.” என அவன் சொல்லும் போதே நாயகியும், ஜமுனாவும் அறைக்கு வந்தவர்கள், “கீர்த்தி இப்போ இருக்கிற நிலையில வெளியில தங்கணுமா.” எனக் கேட்க,
“நான்தான் இருக்கேனே மா… நான் பார்த்துக்கிறேன். குழந்தை பிறந்த பிறகும் ஒரு வருஷத்துக்கு எங்கையும் போக முடியாது. இப்ப போயிட்டு வந்தா தான். வெளிய எங்காவது போயிட்டு வந்தா நல்லா இருக்கும்.” என்றான்.
“கீர்த்தி வெளியே சாப்பிடணுமே அதுதான் யோசிச்சோம்.”
“இப்ப கணேசன் சமையல் முடிச்சிட்டாருன்னா… சாப்பாடு கட்டிக் கொடுங்க எடுத்திட்டு போறோம். பிறகு ரெண்டு நாள் தானே… நான் பார்த்துக்கிறேன்.” என்றான்.
அவனே கிளம்புவது அதிசயம் என்பதால்… அதற்கு மேல் வீட்டினரும் ஒன்றும் சொல்லவில்லை.
கீர்த்திப் பையில் உடைகளை எடுத்து வைக்க, அறைக்கு வந்த தர்மா அவளை உட்கார சொல்லிவிட்டு அவன் எடுத்து வைத்தான்.
கீர்த்தியும் கட்டிலில் படுத்துக்கொள்ள… தர்மா எடுத்து வைத்துக் கிளம்பியதும், இருவரும் கீழே வந்தனர். அதற்குள் அபி அவளுக்குத் தேவையானது ஒரு பையில் எடுத்து வைத்திருந்தாள்.
“என்னது?” எனக் கேட்ட தந்தையிடம், “பீச்ல விளையாட பீச் செட்.” என்றவள், “அம்மா ஸ்விமிங் டிரஸ் எடுத்து வச்சீங்களா?” எனக் கீர்த்திக்கு வேறு ஞாபகப்படுத்த, எல்லாம் எடுத்து வைத்திருக்கு என்றாள் கீர்த்தி.
பீச்சுக்குப் போகிறோம் என்றதும், அதற்குத் தேவையானது பார்த்து எடுத்து வைத்துக் கொண்ட மகளை நினைத்து தந்தைக்குப் பெருமிதமே….
ஜமுனா மூவருக்கும் பருக பழச்சாறு கொடுத்தவர், அவர்கள் அருந்தி முடித்துக் கிளம்பும் சமயம் மதிய உணவு இருந்த பையையும் கொடுக்க… மூவரும் வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.
கர்ப்பிணி மனைவி என்பதால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் எனத் தாஜ் பிஷர்மேன் ரெசார்டில் அறை எடுத்திருந்தான். அறைக்குச் சென்றதும், முகம் கைகால் கழுவி எடுத்து வந்த உணவை உண்டு முடித்தனர். 

அப்போதே பீச் போகலாமா எனக் கேட்ட மகளிடம். “வெயில் குறைஞ்சதும் போகலாம். இப்ப அம்மா ரெஸ்ட் எடுக்கணும்.” என்றதும், அபியும் சமத்தாகக் கேட்டுக்கொள்ள… மகள் உறங்கும் வரை அவளுக்குக் கதை சொன்னவன், அவள் உறங்கியது மனைவியைப் பார்க்க… அவள் எப்போதோ உறங்கி இருந்தாள். 

மாலை சிற்றுண்டி அறைக்கே வரவழைத்து உண்டவர்கள், கடற்கரைக்கு ஏற்ற வகையில் உடை அணிந்து அங்கே சென்றனர். கடற்கரை மணலில் போர்வை விரித்துக் கீர்த்தி அதில் உட்கார்ந்துகொள்ள.. தந்தையும் மகளும் நேராகத் தண்ணீரில் இறங்கினர். 

சிறிது நேரம் உட்காருவது, நடப்பது எனக் கீர்த்தி நேரத்தை போக்கிக் கொண்டு இருந்தாள். இவர்களைப் போல இன்னும் சிலர் குடும்பமாக இருந்தனர். வேறு யாரும் இல்லை. 

இருட்டியபிறகு தான் தந்தையும் மகளும் நீரில் இருந்து வெளியே வந்தனர். அணிந்திருந்த ஷார்ட்ஸ் ஈரமாக இருந்ததால்…. போர்வையில் உட்காராமல் தர்மா விலகி உட்கார…. கணவனின் அருகில் நெருங்கி உட்கார நினைத்த கீர்த்தி, எழுந்து அவனுக்கு மறுபக்கம் உட்கார வந்தவள், சற்று கவனக் குறைவாகப் பொத்தென்று மணலில் உட்கார…. தர்மா அவளை முறைத்த முறைப்பில், அரண்டு போனாள்.
தர்மா அப்படித்தான் கோபம் வந்தால்…. நெற்றிக்கண்ணைத் திறந்து விடுவான். இதே அபி என்றால்… அந்த ஒரு பார்வைக்கே இந்நேரம் அழுதிருப்பாள். 
கணவனின் கையேடு கை கோர்த்தவள், ஒன்னும் ஆகலை என, “நீ விளையாட்டா இருக்க… உனக்குப் பிரசவம் ஆகிற வரை நான்தான் பயந்திட்டே இருக்கணும்.” என்றதும், “அதெல்லாம் ஒன்னும் ஆகாது. டென்ஷன் ஆகாதீங்க.” என்றவள், இன்னும் அவனை நெருங்கி உட்கார… தர்மாவும் மனைவியின் தோளில் கைப் போட்டுக் கொண்டான். 

அவர்களுக்கு முன்னாள் ஈர மணலில் தனது விளையாட்டுச் சாமானை வைத்து அபி விளையாடிக் கொண்டிருந்தாள். 

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் கீர்த்தி.” எனத் தர்மா பீடிகையுடன் ஆரம்பிக்க…. கீர்த்தி என்ன என்பது போலப் பார்த்திருக்க…. அன்று காலையில் வீட்டில் நடந்ததைச் சொன்னவன், “நான் எதுவும் அவசரப்பட்டுப் பேசிட்டேனா?” எனக் கேட்க, 

“நீங்க யோசிக்காம எதுவும் செய்யமாட்டீங்க தர்மா. இப்பவும் ஒன்னுமில்லை… நீங்க எப்போதும் போலச் சேர்ந்திருக்கலாம் நினைச்சாலும் எனக்கு ஓகே தான். தனியா வந்தாலும் எனக்கு ஓகே தான். உங்க விருப்பம் தான்.” என்றாள்.

“நான் இப்பவும் விட்டுக் கொடுக்கத் தயாரா இருக்கேன் கீர்த்தி. ஆனா என்னால என்னோட சுயமரியாதை இழந்து எங்கையும் இருக்க முடியாது.” எனக் கணவன் சொன்னதற்கு, 

“அப்படி இருக்கனும்னு தேவையும் இல்லை. விடுங்க நீங்க சொன்னது சொன்னாதாவே இருக்கட்டும். தாத்தாவும் பிரிச்சுக்கத் தானே சொல்றார். ஒருநாள் பெரிய சண்டை போட்டு, நீ யாரோ நான் யாரோன்னு போறதுக்கு, இப்ப சமாதானமா பேசியே பிரிஞ்சிக்கலாம்.” 

“தனித்தனியா பிஸ்னஸ் தான் பண்ணப்போறோம். நாள், கிழமை எதாவது விசேஷம்னா சேர்ந்து தான் இருக்கப் போறோம். அதனால கவலைப்படமா இருங்க.” என மனைவி சொன்னதும் தான் தர்மாவுக்கும் ஒரு தெளிவு பிறந்தது. அதுவரை எடுத்த முடிவு சரியா தவறா என்ற குழப்பம் இருந்தது. 
கீர்த்தி மட்டும் ஏன் அப்படி பேசினீங்க என்று கேட்டிருந்தால்… ஒருவேளை அவளும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லையோ என உடைந்திருப்பான். 

கீர்த்திக் கணவனோடு பேசும் மும்முரத்தில் அபியை கவனிக்கவில்லை. ஆனால் தர்மா மகளைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். வெகு நேரம் ஆகியிருக்க…. போகலாமா எனக் கீர்த்தி அபியைப் பார்க்க… மகள் நின்ற கோலத்தைப் பார்த்து பயந்துவிட்டாள். 

பின்னே மணலில் வீடு கட்டுவதற்கு மணலில் தண்ணீரைக் குழப்பி, என்னவெல்லாமோ செய்து உடையெல்லாம் அழுக்காகி… அதோடு அவள் மீதும் மண் அப்பியிருந்தது. 

“பூச்சாடி மாதிரி இருக்க… ஹோட்டல்ல இருந்து நம்மைத் துரத்தப் போறாங்க. இப்படியா பண்ணுவ?” எனக் கீர்த்திச் சத்தம் போட…. 

“இப்படிக் கூட விளையடலைனா எப்படி மா…” எனக் கேட்ட தர்மா, மகளை பார்த்து, “அழகா இருக்கீங்க டா.. அப்பா போட்டோ எடுத்துக்கிறேன்.” எனச் சில புகைபடங்கள் எடுக்க…. அபி போஸ் கொடுத்தவள், அம்மாவோட எனக் கீர்த்தியின் கழுத்தைக் கட்டிக்கொள்ள…. தர்மாவும் அவர்களோடு செல்பி எடுத்தான். 

அபியை அங்கே கடல் நீரிலேயே துணியை அலசுவது போலத் தர்மா அலசித்தான் எடுத்து வந்தான். இந்த டிரெஸ்ஸ துவைக்க எல்லாம் முடியாது குப்பைல தான் போடணும் எனக் கீர்த்தி மகளைத் திட்டியபடியே வர… அபி அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை… நினைத்தபடி பீச்சில் ஆடியதில் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள். 

அறைக்கு வந்து மகளைக் குளிக்க வைத்து, தானும் குளித்து, அவர்கள் இருவர் அணிந்திருந்த ஆடைகளைத் தர்மா அலசி எடுத்து வந்து காயப் போட… அதன் பிறகு கீர்த்தியும் முகம் கைகால் கழிவு நைட்டிக்கு மாறி மாறினாள்.  

மதிய உணவே மீதம் இருக்க… அதோடு அபி கேட்ட பிரைட் ரைஸ் மட்டும் அறைக்கே வரவழைத்து இரவு உணவை உண்டனர். 

மாலை சிற்றுண்டி வேறு உண்டிருந்ததால் அபிக்கு உணவு செல்லவில்லை. அவள் தட்டில் இருந்ததை எடுத்து கீர்த்திக்கு வைக்க… 

“உன் தட்டை காலியாக்க என் தட்டில வைக்கிற.” எனக் கீர்த்தி தெரிந்துகொண்டே கேட்க, அபி அதைக் கண்டுகொள்ளாமல் தட்டை வழித்துக் கொண்டிருந்தாள். 

உணவை தட்டில் வைத்து வீணாக்கக் கூடாது எனத் தர்மா சொல்லிருக்கிறான். அதனால் மேடம் அவள் தட்டில் இருப்பதை எடுத்து  கீர்த்தித் தட்டில் வைக்கிறாள். 

“உங்க அப்பா தானே சொன்னார்…. அப்ப அவர் தட்டில் வை….இவ அப்படியே அவங்க அப்பா பேச்சை மீறமாட்டா…” எனக் கீர்த்திச் சொல்ல… அபி அழகாக ஆமாம் எனத் தலையாடியது. மகள் மனைவி செய்யும் சேட்டையைத் தர்மா ரசித்திருந்தான். 

அன்று இருந்த களைப்பில் மூவரும் இரவு நேரமே உறங்கிவிட்டனர். காலை நான்கு மணிக்கே, கீர்த்தியின் வயிற்ருக்குள் கபடி விளையாடும் சத்தம் கேட்க, இரவு உண்டது பத்தவில்லை போல….கீர்த்தி எழுந்து வாழைப்பழங்கள் உண்டுவிட்டு மீண்டும் படுத்தாள். 

தர்மா அதிகாலையே விழித்தவன், அறையின் பால்கனிக்கு சென்று சிறிது நேரம் யோகா செய்துவிட்டு, மகளை எழுப்பினான்.
“என்னப்பா?” என்ற மகளிடம்,
“பீச்சுக்குச் சன்ரைஸ் பார்க்க போகலாமா?” எனக் கேட்க, அபி உடனே எழுந்து உட்கார…. அவளைக் கிளப்பிக் கொண்டு கடற்கரைக்குச் சென்றவன், உறங்கட்டும் என மனைவியை எழுப்பவில்லை. 

கடற்கரையில் மகளை விளையாட விட்டு, அவளோடு தானும் விளையாடியவன், எட்டு மணி போல அறையின் வாயிலில் நின்று கீர்த்தியின் கைப்பேசிக்கு அழைக்க…. அப்போது எழுந்த போதுதான் அவர்கள் இருவரும் அறையில் இல்லை எனக் கீர்த்திக்குத் தெரியும். 

“எங்க இருக்கீங்க?” என்றால் எடுத்ததும், 

“நாங்க வெளிய தான் இருக்கோம். கதவை திறந்து விடு. மெதுவா வா  அவசரம் இல்லை.” என்றான். 

கீர்த்தி எழுந்து சென்று கதவைத் திறந்து விட…. இருவரும் உள்ளே வந்தனர். கீர்த்தி மகளை ஆராய… இப்போது பார்க்க பரவாயில்லை. நேத்து போல மோசம் இல்லை என நினைத்துக் கொண்டாள். 

மூவரும் கிளம்பிக் காலை உணவுக்குச் சென்றனர். பஃப்பே உணவு என்பதால்… வேண்டியது எடுத்து வந்து உண்டனர். இரண்டு வகைகளில் பழச்சாறு எடுத்து வந்து கீர்த்தி அருந்த… “ஒரே நேரத்தில இப்படியா குடிப்பாங்க?” எனத் தர்மா கேட்க, 

“உள்ளே ரெண்டு பேர் இருக்காங்க இல்ல… வேற வேற டேஸ்ட் இருந்தா?” என்ற மனைவியின் அறிவைப் பார்த்து வியந்தவன், நீ சாப்பிடுற சாப்பாடோட சத்துதான் குழந்தைக்குப் போகும், சாப்பாடு அப்படியே போகாது.” 

“உள்ளே எதோ ரெண்டு பேரும் உட்கார்ந்து வாழை இலைப்போட்டு சாப்பிடுற மாதிரி சொல்ற…” எனக் கணவன் சொன்னதைக் கீர்த்திக் கற்பனை செய்து பார்க்க… தர்மாவும் அதேப் போல நினைத்துப் பார்த்து  அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்தான். 

இருவரும் மகளைப் பார்க்க… அவள் நேற்று செய்த வேலையைத்தான் இப்போதும் செய்து கொண்டிருந்தாள். நிறைய வகை உணவுகளைப் பார்த்ததும், அது இது என எல்லாவற்றையும் கேட்டு வாங்கியிருந்தவள், இப்போது தட்டைக் காலியாக்க…. அவள் தட்டில் இருந்ததை அவள் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பங்கு வைத்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து இருவருக்கும் மேலும் சிரிப்புதான்.