வெளிநாட்டில் வேலை, படிப்பு என இருக்க.. தர்மாவிற்குத் திருமணம் என்றதும், அவனை விடவும் மனமில்லை. அவனைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பு இருக்கவில்லை.
ஏனோ அவளுக்குப் பிடித்த மாதிரியும் இன்னும் வேறு யாரையும் அவள் சந்திக்கவில்லை. உண்மையில் இனியா யாரோடும் ஓட்டும் ரகமும் இல்லை. அவளுக்கு நெருங்கிய தோழிகள் என யாருமே இல்லை. அவள் இருக்கும் இடத்தில் அந்த நேரத்திற்குப் பொழுது போவதற்காக வேண்டுமானால் பேசுவாளே தவிர…. அவளிடம் உண்மையான நட்பு இருக்காது. எல்லோரிடமும் மேம்போக்காகத் தான் பழகுவாள். இந்த மாதிரி குணாதிசயங்கள் கொண்டவர்கள் யாரையும் அப்படி எளிதாகத் திருமணம் செய்து கொண்டு விடமாட்டார்கள். அதே அலைவரிசையில் அவளைப் போல யாராவது கிடைத்தால் தான் உண்டு. எதையும் எளிதாக எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் எதையும் எதிர்ப்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும். அதோடு அவளின் சுதந்திரத்தில் தலையிடாதவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படியொரு வரன் வர வேண்டுமே?
அவள் பெற்றோருக்கும் அது புரிந்திருந்தது. அதனால்தான் சின்ன மகளுக்காவது காலாகாலத்தில் திருமணம் செய்வோம் என நினைத்து. அதற்குரிய வேலையில் இறங்கினர்.
இனியாவிற்குத் தர்மா மீது காதல் எல்லாம் இல்லை. தான் மட்டுமே சிறந்தவள், உயர்ந்தவள் என்ற எண்ணம். தன்னைத் திருமணம் செய்யாதது தர்மாவை பாதிக்கவேயில்லை. அவன் கீர்த்தியை விரும்பி மணந்து, இப்போது நன்றாக வாழ்வது அவளுடைய ஈகோவை தூண்டியிருக்க… ஏற்கனவே தர்மாவுக்கும் விஷாலுக்கும் ஆகாது என்று தெரியும். அவனை வைத்து தர்மாவை கொஞ்சமாவாது பழி தீர்க்க நினைத்தாள்.
“நீங்க அப்படியெல்லாம் தனியா பிசினஸ் செஞ்சிட மாட்டீங்களாம். உங்க அண்ணன் சொல்றார்.” எனத் தர்மா சொன்னதை மாற்றி விஷாலிடமும் சொன்னாள்.
“இவரை விட்டு எல்லாம் நாம தனியா முன்னேரிடக் கூடாது. இவருக்குதான் எல்லாம் தெரியும். இவரை நம்பித்தான் நாம இருக்கோம்னு எண்ணம்.” எனச் சூரியா வேறு ஏற்றிவிட…. வசீகரன் ரித்விகாவுக்கு எல்லாம் சொந்த புத்தியே கிடையாது. இனியா மற்றும் சூரியா சொன்னதை அப்படியே இருவரும் மண்டையில் ஏற்றி, அதற்குத் தலையும் ஆட்டினர். விஷால் தீவிரமான யோசனையில் இருந்தான்.
“எல்லாமே இவரால்தான் நடக்குது. இவருக்குதான் எல்லாமே தெரியும்னு நினைக்கிறார் பாரு, முதல்ல நாம அதை உடைக்கணும்.” எனச் சூரியா சொன்னதற்கு, “அது நீங்களும் எங்களோட பிஸ்னஸ்ல சேர்ந்தா தான் முடியும்.” என இனியா தான் திட்டமிட்டிருந்ததைச் செயல்படுத்தினாள்.
அபிக்கு பிறந்தாநாள் அன்று. காலையில் கோவிலுக்குச் சென்று வந்திருந்தனர். அதோடு ஒரு ஆசிரமத்திற்கும் அபி பெயரில் மதிய உணவும் வழங்க ஏற்பாடும் செய்திருந்தனர். அதெல்லாம் ஒரு பக்கம் நடந்தாலும், தர்மா மதியமே அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியிருந்தான்.
மதிய உணவை உண்டுவிட்டு, தர்மாவும் கீர்த்தியும் சேர்ந்து வீட்டு ஹாலை அலங்கரித்தனர். அபியும் அவர்களுக்குப் பலூன் ஊதிக் கொடுப்பது என உதவிக்கொண்டு இருந்தாள்.
மகள் வெட்ட வேண்டிய கேக்கையும் கீர்த்தி அவளே தயார் செய்திருந்தாள். கணேசன் வந்திருக்க… அவரும் ஜமுனாவும் இரவு உணவுக்கு வீட்டிலேயே ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எல்லாம் தயாராக இருக்க… அபிக்குக் கீர்த்திப் புது உடை அணிவித்து, ஒப்பனை செய்து விட…. அந்த வீட்டின் இளவரசி குட்டி தேவதையாக சுற்றித் திரிந்தாள்.
அவர்கள் குடும்பத்திற்கு மற்றும் அபியின் நெருங்கிய நண்பர்கள் வீட்டினருக்கு மட்டுமே அழைப்பு.
மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பின்னர், அபி கேக்கை வெட்ட, “அம்மாவுக்குக் கொடு.” எனத் தர்மா சொல்ல… அபி முதலில் கீர்த்திக்கு ஊட்டி விட… அடுத்து அம்மா மகள் இருவருமாகத் தர்மாவிற்குக் கொடுத்தனர். பிறகு ஜமுனா, ரங்கநாதன் மற்றும் நாயகிக்கு அபியே சென்று கேக்கை ஊட்டிவிட்டாள்.
சுனிதா, சுபா, ஸ்ருதி, ரித்விகா மற்றும் அவளின் நண்பர்களுக்கு எனக் கீர்த்திக் கேக்கை வைத்துக் கொடுக்க, அபியே சென்று அவர்களிடம் கொடுத்து எல்லோரின் வாழ்த்துக்களையும் பெற்றாள். பிறந்தநாள் விழாவுக்கு வீட்டுப் பெண்கள் மட்டுமே வந்து கலந்து கொண்டனர்.
இரவு உணவை பஃப்பே முறையில் அவர்கள் வீட்டு டைனிங் ஹாலில் வைத்திருக்க அவரவருக்குத் தேவையானது எடுத்து உண்டனர்.
இரவு உணவை பஃப்பே முறையில் அவர்கள் வீட்டு டைனிங் ஹாலில் வைத்திருக்க அவரவருக்குத் தேவையானது எடுத்து உண்டனர்.