மாடியில் ஒரு அறையும், பெரிய தோட்டமும் உண்டு. நிறையப் பூ, காய்கறி மற்றும் பழவகைகள் என நிறையச் செடி, கொடிகள் வைத்திருந்தான். அதிக வெயில் தாக்காமல் இருக்க… அதற்குரிய வகையில் ஏற்பாடு செய்திருக்க… அதனால் அந்த இடமே குளுமையாக இருக்க… தந்தையும் மகளும் செடிகளுக்கு நீர் விட்டனர்.

அபிக்கு இந்த வேலை செய்ய ரொம்பப் பிடிக்கும். தண்ணீர் விட்டு முடித்து, அன்று பூத்திருக்கும் பூ, காய், மற்றும் பழங்கள் என என்ன இருக்கிறதோ, அதை அவளே பறிப்பது அவளுக்கு மிகவும் பிடித்தமான வேலை. அதற்கே அரை மணிநேரம் மேல் ஆகியிருக்க… தந்தையும் மகளும் கீழே வந்த போது கீர்த்திக் குளித்துவிட்டு வந்திருந்தாள்.

முதலில் மகளைக் குளிக்க வைத்து அனுப்பிய தர்மா, அவனும் குளித்துவிட்டு வர.. மூவரும் கிளம்பி கீழே சென்றனர்.

அவர்கள் மாடி தோட்டத்தில் பறித்த மலர்களைச் சாமிக்கு வைத்து கும்பிட்டவர்கள், பிறகு அன்று பரித்த காய்கறிகளை உணவு மேஜையில் வைத்தனர். நிறைய இருந்தால் ஜமுனா அன்றே செய்து விடுவார்… இல்லையென்றால் பிரிட்ஜில் வைத்து மேலும் சேர்ந்ததும் செய்வார்.

அலுவலக நாளில் காலை இட்லி, தோசை, சட்னி என எளிய உணவுதான். அதனால் ஜமுனாவே செய்து விடுவார். நாயகியும் அவருக்கு உதவுவார். கீர்த்திக்கு ஒன்றும் பெரிதாக வேலை இருக்காது. அவள் தோசை மட்டும் ஊற்றுவாள்.

கிளாஸ் செல்லும் அன்று மதிய சமையலை வேலைக்காரர் உதவியுடன் ஜமுனா செய்வார். கீர்த்தி இருந்தால்.. அவளும் கூடச் சேர்ந்து செய்வாள். இரவு சமையல் மட்டும் கீர்த்தித் தான் செய்வாள். ஜமுனாவிற்கு அந்த நேரம் ஓய்வு.

திருமணமான புதிதில் கீர்த்திக்கு சமையல் வேலை ஒன்றுமே தெரியாது. அதிலும் அவள் உடனே உண்டாகியிருக்க, ஜமுனாவும் அவளைச் சமையல் அறைப்பக்கம் விடவில்லை. அபி பிறந்து சில மாதங்கள் சென்றுதான் கீர்த்திக் கொஞ்சம் கொஞ்சமாகச் சமையல் பழகினாள். இப்போது மகளுக்காக நிறைய விதவிதமான உணவுகளைக் கற்றும் கொண்டாள்.

உண்மையில் பிள்ளைகள் தான் அம்மாக்களைச் சமையர்கலையில் வல்லுநர் ஆக்குவது. கீர்த்தியும் அபிக்காகப் பிசாவும், பர்கரும் கூடச் சத்தான வித்தத்தில் செய்ய முடியும் எனக் கற்றுக்கொண்டாள்.

அபி உண்டு முடித்துப் பள்ளிக்குச் சென்றிருக்க… தர்மா வீட்டினரிடம் கீர்த்தி உண்டாயிருப்பதைச் சொல்ல…. கேட்ட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. மாலை இருவரும் மருத்துவமனை செல்வதாகச் சொன்னவன்,  சொன்னது போல மாலை நேரமே வந்து கீர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்தும் சென்றான்.

நாயகியும் ஜமுனாவும் இருக்கும் தைரியம் கீர்த்திக்கு. அதனால் தான் பத்து கூடப் பெற்றுக் கொள்வேன் எனச் சொல்வது. அபி பிறந்திருந்த போது, பால் கொடுக்கும் நேரம்தான் அவளிடம் கொடுப்பார்கள். மற்ற நேரம் ஜமுனாவும் நாயகியும் தான் வைத்திருப்பார்கள். வீட்டில் பெரியவர்க்ள இருப்பது எவ்வளவு நிம்மதி.

கீர்த்திக் காலையில் அவள் அறையில் இருந்து இறங்கினால்… பிறகு இரவு வரை கீழேதான் இருப்பாள். நடுவே அறையைச் சுத்தம் செய்யப் பணிப்பெண் செல்லும்போது மட்டும் உடன் செல்வாள். மத்தபடி கீழேதான். தர்மாவும் அதைதான் விரும்புவான். ஒரே வீட்டில் தனித்தனி தீவுகளாக இருப்பது கூடாது என்பான்.

சமையல் வேலை முடிந்ததும், பெண்கள் மூவரும் ஹாலிலோ அல்லது ஜமுனாவின் அறையிலோ உட்கார்ந்து பேசிக்கொண்டிபார்கள். அவர்கள் டிவி பார்க்கும் நேரம், கீர்த்தி லேப்டாப்பில் எதாவது வேலை இருந்தால் செய்வாள். பிறகு மதியம் அபி வந்துவிட்டால், அவளோடு நேரம் செல்லும்.

தினமும் தாத்தாவுடன் நேரம் செலவு செய்ய வேண்டும் என மகளுக்குமே  சொல்லி வைத்திருக்கிறான். அதனால் மாலை ரங்கநாதனின் அறையில் தான் அவருடன் கட்டிலில் சாய்ந்தபடி அபி டிவி பார்ப்பாள்.

வீடென்றால் சின்னச் சின்னச் சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் யாரும் அதைப் பெரிய குறையாக எடுத்து பேசுவதில்லை. அதனால் சண்டை சச்சரவின்றி அவர்கள் குடும்பம் இருந்தது.

அடுத்த இரண்டாவது மாதத்தில் வசீகிரன் சௌமியா நிச்சயதார்த்தம் ரொம்பவும் விமர்சையாக நடந்தது. நிச்சயதிற்கே கல்யாணம் போலப் பிரம்மாண்டமாகச் செய்தனர்.

நிச்சயம் முடிந்து நண்பர்களின் உற்சாகக் கூச்சலின் இடையே தம்பதிகள் கேக் வெட்ட… அதன் பிறகு ஆட்டம்பாட்டம் எனக் களைகட்டியது.

நிச்சயத்திற்கு வந்த விருந்தினர்கள்தான், ஏன் இனியாவிற்குப் பண்ணாமல் முதலில் சௌமியாவிற்குத் திருமணம் செய்கிறீர்கள் எனக் கேட்க, அதில் கொஞ்சம் சௌமியாவின் பெற்றோருக்கு மனவருத்தம்.

அதற்கு எதோ தர்மாதான் காரணம் என்பது போலச் சுனிதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார். அதை அவர் வாய்விட்டு சொல்லவும் செய்ய… இனியாவிற்கு அது கவுரவக் குறைச்சலாகப் போய் விட…

“அத்தை, நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க என்னைப் பத்தி. எனக்குப் பிடிச்ச மாதிரி யாரும் இல்லை. அதனால நான் கல்யாணம் பண்ணிக்கலை.. அதுக்காக இப்படியே இருந்திடுவேன்னு அர்த்தம் இல்லை. எனக்குப் பிடிக்கும் போது பண்ணிப்பேன்.” என்றாள்.

“எப்போ கிழவியான பிறகா.” எனச் சுனிதாவும் இடக்காகக் கேட்டவர், “ஒழுங்கா தர்மாவையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்.” எனவும் சொல்ல…

“யாரு அந்த நல்லவனையா…. நல்லவேளை நான் அவரைப் பண்ணிக்கலை…. அவரும் வாழ்க்கையை அனுபவிக்க மாட்டார். மத்தவங்களையும் அனுபவிக்க விட மாட்டார். எப்பவும் ரூல்ஸ் பேசிட்டு இருப்பார். சரியான போர்.” என இனியா சொன்னதற்கு, அவள் எதோ அரிய கண்டுபிடிப்பு செய்தது போல… சூரியாவும், சந்துருவும் அவளுக்குக் கைகொடுத்து பாராட்டினர்.

தர்மாவுக்கு இது எதுவும் தெரியவில்லை. தெரிந்தாலும் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டான். அவன் மனைவி மகளோடு சந்தோஷமாக நேரம் செலவழித்துக் கொண்டிருந்தான். உண்மையில் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது அவன்தான். அது இவர்களுக்குப் புரியவில்லை.

கீர்த்தி உண்டாகியிருப்பது அவர்கள் வீட்டினரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மூன்று மாதங்கள் முடியட்டும் என நாயகி சொல்லி இருந்தார்.
கீர்த்திச் சில்க் காட்டன் சுடிதாரில் அளவான நகைகள் மட்டும் அணிந்து இருந்தாள். மசக்கை என்று எதுவும் இல்லாததால்…. சாதாரணமாக இருந்தாள்.

இரவு பஃப்பே உணவு என்பதால்… அவரவருக்குத் தேவையானது எடுத்து வந்து உண்ண… கீர்த்தி நிறைய எடுத்து வந்து உண்டாள்.

“நீயே போனா கண்ணு படப்போகுது. இரு நான் எடுத்திட்டு வரேன்.” என அருணா வேறு சென்று தட்டு நிறைய எடுத்து வந்து தம்பி மனைவிக்குக் கொடுத்தாள்.

“போதும் கீர்த்தி எதாவது பண்ணப் போகுது.” எனத் தர்மா சொன்னதற்கு,

“பசிக்குதுங்க.” எனக் கீர்த்திப் பாவமாகப் பார்க்க…

“மாசமா இருக்கப் பொண்ணு சாப்பிடட்டும் விடுடா…” என ஜமுனா வேறு சிபாரிசு செய்ய…

“இந்த மந்திரவாசல் நாடகத்துல ஒரு குழந்தை இருக்குமே… அது போலப் பிறக்கும் போதே உன் மகன் அஞ்சு கிலோ இருப்பானோ.” என அருணா கேலி செய்ய…. எல்லோருக்கும் சிரிப்பு வந்தாலும், மனைவியும் குழந்தையும் அதிக எடைப் போட்டு, அதனால் பிரசவத்தில் எதுவும் சிக்கல் வந்துவிடுமோ எனத் தர்மா மட்டும் கவலையாகப் பார்த்தான்.

இந்தத் தடவை ஹாஸ்பிடல் போகும் போது கண்டிப்பா டாக்டர்கிட்ட கேட்கணும் என நினைத்துக் கொண்டான்.

அதே போல அந்தத் தடவை மருத்துவமனை சென்றபோது, தர்மா கீர்த்திக்கு அதிகம் பசிப்பதாகச் சொல்ல…. மருத்துவர் கீர்த்தியின் எடையைப் பார்க்க… அவள் சரியான எடையில் தான் இருந்தாள்.

ஏன் இவ்வளவு பசிக்குது என டாக்டருக்கே தெரியவில்லை. “இந்த மாசம் ஸ்கேன் எடுக்கனுமே எடுத்திட்டு வாங்க பார்க்கலாம்.” என்றார்.

என்ன சொல்வாரோ எனத் தர்மா மனதிற்குள் பயந்து போய் இருந்தான். ஆனால் கீர்த்தியிடம் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.

அதே மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் எடுத்த மருத்துவர், இவர்கள் பார்த்த மகப்பேறு மருத்துவரை போன்னில் அழைக்க… அவரும் ஸ்கேன் பார்க்கும் இடத்திற்கு வந்துவிட….என்னவோ ஏதோவென்று தர்மா இன்னும் பயந்து போனான்.

ஸ்கேன்னில் ரெட்டை துடிப்பு தெரிய….தர்மாவையும் அழைத்துக் காட்டினர். மருத்துவர் ரெட்டை குழந்தை என்று சொல்ல…. இருவருக்கும் ஆச்சர்யம் என்றால் கீர்த்திக்குப் பயங்கிற சந்தோஷம். ”நீங்க இந்தக் குழந்தையோட போதும் சொன்னீங்க இல்ல… அதுதான் கடவுள் எனக்கு ரெண்டு கொடுத்திருக்கார்.” எனச் சொல்லி கீர்த்தி மகிழ்ச்சியாக இருக்க…. அவளின் சந்தோஷம் தர்மாவுக்கும் தொற்றியது.

ரெட்டை குழந்தை என்பது ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், மனைவி எப்படிப் பெற்றெடுப்பாள் என்ற கவலையும்  தர்மாவுக்கு இருக்க…. அதை மருத்துவரிடம் அவன் சொல்ல…

“இப்போதைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நார்மலா இருக்காங்க. ஒரே நேரம் அதிகமா சாப்பிடாம கொஞ்சம் கொஞ்சமா அஞ்சு வேளையா கொடுங்க. ரொம்ப எடையும் போடாது.” என… அதன் பிறகே நிம்மதியானான். இருவரும் சந்தோஷமான மனநிலையில் வீடு திரும்பினர். 

வீட்டில் வந்து சொன்னதும் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. நிச்சயம் முடிந்து அருணா இன்னும் இங்கேதான் இருந்தாள். சந்துரு மட்டும் சென்றிருந்தான். 
“உன் புருஷன் ஒரு குழந்தைக்கே அவ்வளவு ரூல்ஸ் போடுவான். இன்னும் இதுல ரெண்டு குழந்தை வேற….உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு கீர்த்தி.” என அருணா சொல்லவும்தான். கீர்த்திக்கும் “ஆமாமில்லை….” என தோன்றியது. ஆனாலும் பார்த்துக்கலாம் என கூலாகவே இருந்தாள். அவள் என்ன செய்ய வேண்டும் என கணவன் ஒரு பட்டியலே தயாரித்து வைத்திருக்கிறான் என தெரியவரும் போது…. என்ன ஆவாளோ?