சாரல் மழையே

அத்தியாயம் 11

புதுமணத் தம்பதிகள் வீடு வர… அருணா அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள். கீர்த்திப் பூஜை அறையில் விளக்கேற்றி வந்ததும், அருணா அவர்களுக்குப் பால் பழம் கொடுக்க…. உண்டு முடித்தும், தர்மா கீர்த்தியுடன் சென்று அவனது தாத்தா பாட்டி, மற்றும் தன் அம்மாவிடம் ஆசிவாதம் வாங்கினான்.  பிறகு கீர்த்தியின் பாட்டியிடமும் வாங்கினர். 


கீர்த்தியை உள்ளே அழைத்துச் சென்றுவிட… தர்மா வாசனுடன் ஹாலில் உட்கார்ந்துதான் பேசிக்கொண்டிருந்தான். மதிய விருந்து தயார் ஆனதும், மீண்டும் எல்லோரும் மண்டபத்திற்குச் சென்றே உணவருந்தினர். வீட்டினர் மட்டும் அல்லாது உள்ளுரில் இருக்கும் சொந்தங்களுக்கும் மதியம் அங்குதான் உணவு. 

மதிய விருந்து முடிந்து, முதலில் கீர்த்தியின் தாய்மாமா வீட்டினர் கிளம்பினர். தர்மாவையும் கீர்த்தியையும் தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என அழைப்புவிடுத்த பின்னரே விடைபெற்றனர். அடுத்து அருணாவின் புகுந்த வீட்டினரும் கிளம்பினர். 

நண்பர்கள் கிளம்பும் சமயம் தர்மாவும் கீர்த்தியும், அவர்கள் இருந்த வீட்டிற்கு வழியனுப்ப சென்றனர். 

“நீ எப்போ சென்னை வர…” எனச் சுமந்த் கேட்க, 

“ரெண்டு மூன்னு நாள் இங்க இருந்திட்டுதான் கிளம்புவேன்.” என்றான் தர்மா. 

“நீ இங்க இருக்கிறதே நல்லது. அங்க வந்தா வேலை வேலைன்னே இருப்ப.” என்றான் தீபக். 

“அதை நீங்க சொல்றீங்களா…” என நிஷா கணவனை முறைக்க, 

“கீர்த்தி, நீயும் இனி அவங்க கூட்டணி தானே…” என ராஜேஷ் கேட்க, 

“அவங்க எல்லாம் தெரியாம வந்து மாட்டினாங்க. ஆனா கீர்த்தி அப்படியில்லை. அதனால நம்ம அளவுக்குத் தர்மாவுக்குச் சேதாரம் இருக்காது.” என விஷ்ணு சொல்ல… 

“அப்படியா கீர்த்தி?” என எல்லோரும் கீர்த்தியைப் பார்க்க, 

“அதெல்லாம் இப்பவே சொல்ல முடியாது.” என்ற கீர்த்தியின் பதிலில்…. தர்மா ஆச்சர்யமாகப் புருவத்தை உயர்த்தியவன், “மேடம் மாட்டிக்காம பதில் சொல்றாங்களாம்.” என, எல்லோரும் சிரித்தனர். 

அவர்கள் விடைபெற்றுச் சென்றதும், தர்மாவும் கீர்த்தியும் நடந்தே வீடு வந்தனர். வாசலில் வைத்தே “ஒரு வேலை இருக்கு போயிட்டு வந்திடுறேன்.” எனத் தர்மா வெளியே செல்ல… கீர்த்தி மட்டும் உள்ளே சென்றாள். 

திண்ணையில் உட்கார்ந்திருந்த சந்துரு, “இந்தப் பெண் உங்க அண்ணனை கல்யாணம் பண்ணதுக்குச் சந்நியாசம் வாங்கிட்டு போயிருக்கலாம்.” எனக் கிண்டலாகப் பேச…. சூரியவும் வசீகரனும் அதை ஆமோதித்தனர்.  
அவர்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பது ஆடம்பரமாக செலவழிப்பது, குடித்து விட்டு கொண்டாடுவது, வகைவகையாக உண்பது. அதனால் அவர்களைப் பொறுத்தவரை தர்மா சந்தோஷமாக வாழத் தெரியாதவன். அவனைத் திருமணம் செய்த கீர்த்தி மட்டும் எப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுவாள் என்ற எண்ணம்.
அருணா தூரத்தில் இருந்து பார்த்தாலும் கணவன் தன் தம்பியை பற்றித்தான் எதோ பேசி சிரிக்கிறான் என அவளுக்கு புரியாமல் இல்லை. முதல்ல இவரை இங்க இருந்து கிளப்பணும். இல்லைனா தர்மா என்ன பன்றான்னே பார்த்திட்டு இருப்பார் என நினைத்தவள், உள்ளே சென்று சத்துருவின் பையை எடுத்து வந்தாள். 
“நீங்க போற வழியில இவரைச் சேலத்துல விட்டுட்டு போங்க.” என ஒரு பையைச் சந்துருவின் அருகில் வைக்க… 

“நாளைக்கு நீயும் என்னோட வா… நாம சேர்ந்தே போகலாம்.” என்றான் சந்துரு. 

“ஒன்னும் தேவை இல்லை. என் தம்பி கல்யாணம், நான் அப்படி உடனே எல்லாம் வர முடியாது. நான் இங்க ரெண்டு நாள் இருந்திட்டு, அப்படியே அவங்களோட சென்னைக்குப் போய், அங்க ஒரு வாரம் இருந்திட்டுதான் வருவேன். அத்தை மாமாகிட்ட நான் சொல்லிட்டேன். நீங்க கிளம்புங்க.” என மனைவியே விரட்டும் போது, என்ன செய்வது? சந்துரு வேறு வழியில்லாமல் கிளம்பினான். 

ரவீந்தர் குடும்பமும், உமாநாத் குடும்பமும் வந்தது போலச் சேர்ந்தே கிளம்பினர். அவர்களுடன் சத்துருவும் சென்றான்.  

மாலை விமானத்தில் ரங்கநாதனும் நாயகியும் சென்னைக் கிளம்ப, விஷாலும் அவர்களுடன் சென்றான். 

“நாளைக்குக் காலையில தாத்தாவை பார்த்துக்க மணி வந்திடுவார். நான் வர்ற வரை நைட் மட்டும் நீ துணைக்கு இரு.” எனத் தர்மா சொல்ல, விஷால் சரி என்றான். 

செல்லும் வழியில் விஷால், “தாத்தாவுக்கு இன்னைக்கே போனா களைப்பா இருக்காதா… நாளைக்குக் கூட கிளம்பியிருக்கலாம்.” என,

“நாங்க இங்க இருந்தா தர்மா எங்களையே தான் பார்த்திட்டு இருப்பான். அதனால்தான் இன்னைக்கே கிளம்பிட்டோம். அவனும் கொஞ்சம் ப்ரீயா இருக்கட்டும்.” என்றார் நாயகி. 


எல்லோரும் கிளம்பி இருக்க, வீட்டில் தர்மா, கீர்த்தி, ஜமுனா, அருணா மற்றும் அவளின் பிள்ளைகள் தான். 

எல்லோரும் சென்றதும் கீர்த்திக் கீழே இருந்த அறைக்குள் சென்றவள், உடைமாற்றிவிட்டு நகைகளைக் கழட்ட, எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு. 

நகைகளைப் பத்திரப்படுத்தியவள் வெளியே வந்து பார்க்க, ரங்கநாதன் இருந்த அறையில் ஜமுனாவும் அருணாவும் பிள்ளைகளுடன் படுத்திருந்தனர். தர்மாவைக் காணவில்லை. 

கீர்த்திக்கும் களைப்பாக இருக்க…. மீண்டும் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள். 

தர்மா மாடி அறையில் உடைமாற்றி விட்டு கீழே வந்து பார்க்க… ஆளுக்கொரு அறையில் படுத்திருந்தனர். கீர்த்தி இருந்த அறைக்குச் சென்றவன், கதவை லேசாகச் சாற்றிவிட்டு, அவனும் அவள் அருகில் சற்று இடைவெளிவிட்டு படுத்துக் கொண்டான். கீர்த்திக்கு அவன் வந்ததே தெரியாது. 

கீர்த்திக்கு ஆழ்ந்த உறக்கம் இல்லை. வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் பெற்றோர் இல்லாமல் திருமணம் செய்தது அவளை மிகவும் பாதித்து இருந்தது. அதோடு முந்தின இரவு சரியாக உறங்கி இருக்கவும் இல்லை. கல்யாண அலுப்பு வேறு சேர்ந்துகொள்ள….அசந்து உறங்க முடியாமல் ஏதேதோ கனவுகள். அதில் திடுக்கிட்டு விழித்தவள், கண்விழித்துப் பார்க்க, அறை இருட்டாக இருந்ததும் பயந்து விட்டாள். என்ன நேரம்? எந்த இடத்தில் இருக்கிறோம் என ஒன்றும் புரியவில்லை. 

தனியாக இருக்கிறோம் என்ற அச்சத்தில், அம்மா என அலறியபடி அவள் எழுந்து அமர… தர்மா அந்தச் சத்தத்தில் எழுந்துவிட்டான். 

“கீர்த்தி என்ன மா?” எனத் தர்மாவின் குரல் கேட்க, அப்போது கூட அவனும் அந்த அறையில் இருக்கிறான் என அவளுக்குத் தெரியவில்லை. 

“ரொம்ப இருட்டா இருக்கு.” என,

“நான் உன் பக்கத்தில் தான் இருக்கேன். என்றவன், அவளின் தோள் தொட…. 

“இங்கதான் இருக்கீங்களா?” என்றவள் அவனை நெருங்கி அமர்ந்தாள். 

அவளை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டவன், “என்ன ஆச்சு?”  என, 

“எதோ கனவு. டைம் என்ன காலையில ஆகிடுச்சா?”
அவள் கேட்டதும் தர்மாவுக்கே குழப்பம், அவன் பக்கத்தில் இருந்த தனது கைபேசியில் நேரம் பார்க்க, நேரம் ஆறு பத்து எனக் காட்ட… 

“இப்போ சாயங்கலாம் ஆறு மணி.” என, “சாயந்திரம் தானா…” என்றவள், பிறகே தாங்கள் இருவரும் நெருங்கி உட்கார்ந்திருப்பதைக் கவனித்து விலகி அமர்ந்தாள். 

தர்மா எழுந்து வெளியே வர… இன்னும் அருணாவும் ஜமுனாவும் உறங்கிக் கொண்டுதான் இருந்தனர். அவர்களுக்கும் அலுப்பு இருக்கும் தானே…. 

தர்மா ஹாலில் விளக்கை போட்டவன், வெளி விளக்குகளையும் போட்டு விட்டு மீண்டும் அறைக்கு வந்து கதவை சாற்றிவிட்டு கீர்த்தியை பார்க்க, அவளுக்கு இன்னும் உறக்கம் தெளியவில்லை. 

தர்மா அங்கிருந்த ஓய்வறைக்குச் சென்று முகம் கழுவி வந்தவன், கண்ணாடி பார்த்து தலைவாரிவிட்டு, கீர்த்தியின் அருகே சென்றவன், அவள் கைப்பிடித்து எழுப்பி, “போ முகம் கழுவிட்டு வா….” எனக் குளியல் அறைக்குள் அனுப்பி வைத்தான். 

கீர்த்தி வந்து பார்த்த போது தர்மா அறையில் இல்லை. தன்னைக் கண்ணாடியில் பார்த்து சீராக்கியவள், அறையில் இருந்து வெளியே வர… தர்மா சமையல் அறையில் இருப்பதைப் பார்த்து அங்கே சென்றாள். 

அவன் டீ வைத்துக் கொண்டிருந்தான். சமையல் மேடையில் ஏறி அமர்ந்தவள், “நிஜமாவே இப்போ சாயந்திரம் தானா… எனக்கென்னவோ காலையில மாதிரி இருக்கு.” என… 

“வெளியில போய் வானம் வெளுக்குதா, இல்லை கருக்குதான்னு பாரு தெரியும்.” எனத் தர்மா சிரிக்க…. 

சமையல் அறை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு, “ஆமாம் சாயங்காலம் தான். எனக்கு ரொம்ப நேரம் தூங்கின மாதிரி இருந்தது.” என கீர்த்தி அசடு வழிய…. 

“ஆனா நீ எழுப்பலைனா… விடியும் வரை தூங்கிதான் இருப்போம் போல….” என்றான். 

முதலில் ஜமுனா எழுந்து வந்தவர், நேரத்தை பார்த்துவிட்டு பதட்டமாக சென்று அருணாவை எழுப்பினார். தர்மா அவர்களுக்கும் சேர்த்து தான் டீ வைத்திருந்தான். நால்வரும் ஹாலில் அமர்ந்து டீ குடித்தனர். இன்னும் பிள்ளைகள் இருவரும் உறங்கிக் கொண்டுதான் இருந்தனர். 

“இப்படி விளக்கு வைக்கிற நேரம் வரை தூங்க கண்டோமா?” என ஜமுனா புலம்ப… 

“விடுங்க மா, நாம தான இருக்கோம். அதுவும் எல்லோருக்கும் அலுப்பு.” என்றவன், நைட்டுக்கு சாப்பாடுக்கு என்னப் பண்ண போறீங்க. என விசாரிக்க… 

“மதிய சாப்பாடே மீதம் இருக்கு. தோசை வேணா ஊத்திக்கலாம்.” என்றதும்,

“சாப்பாடு இருந்தா வேஸ்ட் பண்ண வேண்டாம். அதே சாப்பிட்டுக்கலாம்.” என்றான் தர்மா. 

“பாட்டி இல்லாம நல்லாவே இல்லை. பாட்டி ஏன் அதுக்குள்ள போனாங்க.” எனக் கீர்த்திக் கேட்டுக் கொண்டிருக்க, அந்நேரம் நாயகியே அழைத்து விட்டார். 

“நாங்க வீடு வந்துட்டோம். நீங்க என்ன பண்றீங்க?” எனக் கேட்க, 

“இப்பதான் பாட்டி தூங்கி எழுந்தோம். இன்னும் ஒன்னும் பண்ணலை. கீர்த்தித் தான் நீங்க இல்லாம நல்லாவேயில்லைன்னு உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கா…” என்றால் அருணா. “அவகிட்ட கொடு நான் பேசுறேன்.” என நாயகி சொல்ல… அருணா போன்னை ஸ்பீக்கரில் போட்டாள். 

“என்ன கீர்த்தி என்ன பண்ற?” 

“நீங்க இல்லாம போர் அடிக்குது பாட்டி.” 

“நீ இங்க வந்த பிறகு நாம சேர்ந்து தான இருக்கப் போறோம். இப்ப நீ என் பேரனை கவனி.” 

“அவர் என்ன சின்னக் குழந்தையா கவனிக்க… அவர்தான் எங்களுக்கே டீ வச்சு கொடுத்தார். நைட் டிபனும் நல்லதா பண்ணி கொடுக்கச் சொல்லுங்க.” எனக் கீர்த்தி வாயடிக்க, 

“அடிங்க, நீங்க மூன்னு பொம்பளைங்க இருந்திட்டு என் பேரனை டீ வைக்க வச்சீங்களா?” என நாயகி சண்டைக்கு வர… 

“நாங்க ஒன்னும் அவரைக் கேட்கலை… அவரேதான் போட்டார்.” எனக் கீர்த்திச் சிரிக்க, 

அவர்கள் பேசுவதைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த தர்மா, “இல்லைனா மட்டும் உங்க பேத்திக்கு டீ போட தெரியுமா கேளுங்க பாட்டி.” என அவளை மாட்டிவிட…. 

ஏன் என்பது போல அவனைப் பார்த்தவள், “நான் முன்னாடியே எனக்கு டீ வைக்கத் தெரியாதுன்னு சொன்னேன் தானே…” என அவள் அழுவது போலச் சொல்ல… அவள் டென்ஷன் ஆகிவிட்டாள் எனப் புரிந்து, “சும்மா விளையாட்டுக்கு… பாட்டி உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” எனத் தர்மா கண்களால் மன்னிப்பை யாசிக்க,  
தன் புகுந்த வீட்டினரையே மிரட்டி வைத்திருக்கும் தம்பி, இப்படி ஒரு சின்ன பெண்ணிடம் பணிவது பார்த்து அருணாவுக்கு ஆச்சர்யமே… 
“நீ இப்போ டீ எல்லாம் வைக்க வேண்டாம். போய்க் குளிச்சிட்டு, சாமிக்கு விளக்கேத்து போ… பத்து நிமிஷத்துல வரணும். ஏற்கனவே ஆறரை மணி ஆச்சு.” என, சரியெனக் கீர்த்தி எழுந்து அறைக்குள் செல்ல… ஜமுனாவிடம் இரவு உணவை விசாரித்தவர், அருணாவுக்குச் சில வேலைகள் கொடுத்துவிட்டு வைத்தார். 

கீர்த்திச் சீக்கிரமே குளித்து ஒரு சுடிதார் அணிந்து வந்தவள், நாயகி சொன்னது போல விளகேற்ற, தர்மாவும் சென்று அவளுடன் நின்று கண் மூடி வேண்டினான். 
“எங்க அப்பா அம்மாவை நான் காயப்படுத்திட்டேன். அவங்க எங்களை சீக்கிரம் மன்னிச்சு ஏத்துக்கணும்.” என கீர்த்தி மன்னிப்பை வேண்ட…
“என்னை நம்பி ஒரு பொண்ணு எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கா… என்னைக்கும் அவ எடுத்த முடிவு தப்புன்னு மட்டும், நான் அவளை நினைக்க வச்சிடக் கூடாது.” என தர்மா வேண்டினான்.