சாரல் மழையே

அத்தியாயம் 10

கீர்த்தியின் தாய் மாமா அவளை அழைத்துப் பேசி இருந்தார். எப்போது திருமணம்? எங்கே என எல்லாம் விசாரித்து இருந்தார். கீர்த்தி அதைத் தர்மாவிடம் சொல்லி இருக்க, அவன்  அவர் எண்ணை வாங்கித் தானும் அழைத்துப் பேசினான். கீர்த்தியின் பெற்றோர் பற்றி எதுவும் பேசவில்லை. அவருக்குப் பத்திரிகை வைக்க விரும்புவதாகச் சொல்ல… சென்னையில் இருக்கும் அவர் வீட்டிற்கு வர சொன்னார்.

தர்மா அன்றே சென்று அவருக்குப் பத்திரிகை வைத்தவன், வேறு யாருக்கும் வைக்க வேண்டுமா எனக் கேட்க, கீர்த்தியின் பாட்டி தங்களுடன் இருப்பதால், அவருக்கு மட்டும் சொல்லிவிடச் சொல்லி, அறையில் இருந்த தன் அம்மாவை வாசன் அழைத்தார்.

தர்மா அவரை நலம் விசாரித்துவிட்டு, அவருக்கும் பத்திரிகை கொடுத்து, அவர்கள் திருமணத்திற்கு வந்தால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். அதோடு கீர்த்திக்கும் ஆறுதலாக இருக்கும் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தான். 


தங்கை மகள் வயது கோளாரில் காதல் என யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனத் தர்மாவைப் பார்த்ததும் புரிந்தது. அசட்டு பேச்சோ அல்லது தற்பெருமையோ இல்லாமல் அவன் சாதாரணமாகப் பேசி சென்றது வாசனைக் கவர்ந்தது. 

அருகில் நின்ற அவரின் மனைவி, “நாம கல்யாணத்துக்குப் போறோமா இல்லையா?” என்றதற்கு, யோசிக்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார்.

விஷால் வெள்ளி மாலை கொடைக்கானலில் இருந்து திரும்பிவிட்டான். அதற்கு மேல்அண்ணனின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் கிளம்பி வந்திருந்தான்.

“ஒருத்தர் என் மேல கொலை காண்டுல இருப்பாரே… என்னை நல்லா திட்டினாரா?” என விஷால் விசாரிக்க…

“உன்னை எங்கன்னு கேட்டான். கீர்த்திதான் இங்கயும் அவருக்கு ஒன்னும் பெரிசா வேலை இல்லைன்னு சொன்னதும் விட்டுட்டான்.” என அருணா சொல்ல… விஷால் நம்பவில்லை.

“அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லையே…” என நினைத்துக் கொண்டான். முதல் நாள் தர்மா அழைத்ததுதான். விஷால் அழைப்பை எடுக்கவில்லை. பிறகு அவனும் அழைக்கவில்லை.

மறுநாள் அதிகாலை திறந்திருந்த ஜன்னல் வழியாகத் தர்மாவின் குரல் காதில் விழ…. இவருதான் கடைசியில வருவாருன்னு நினைச்சேன், எப்படி அதுக்குள்ள வந்தார்? நல்லவேளை நேத்து வந்தோம். இல்லைனா அதுக்கும் ஒரு பாட்டு வாங்கி இருக்கணும் என நினைத்தவன், எழுந்து கீழே வர… தர்மா திண்ணையில் உட்கார்ந்து வீட்டினருடன் பேசிக் கொண்டிருந்தான்.

“காலையிலேயே வந்திருக்கீங்க எதுல வந்தீங்க?” எனக் கேட்டபடி விஷால் எதிரில் அமர…

“நான் மதுரை வர ஸ்லீப்பர் பஸ்ல வந்தேன். பிறகு டவுன் பஸ் மாறி… இங்க பஸ் ஸ்டாண்ட்ல இருந்து நடந்து வந்துட்டேன்.” என்றான்.

ப்ளைட்ல வந்திருக்கலாம், இல்லை கார்ல வந்திருக்கலாம், அட்லீஸ்ட் ட்ரைன்லையாவது வந்திருக்கலாம். எவ்வளவு பெரிய பிசினஸ் நடத்துறார். பஸ்ல வந்து நடந்து வந்தாராம். இவரை வச்சிகிட்டு என விஷால் மனதிற்குள் நொந்து கொண்டான்.

“கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரு.” என நாயகி சொன்னதற்கு,

“இல்லை பாட்டி பஸ்ல நல்லா தூங்கிட்டு தான் வந்தேன்.” என்றவன், தனது பையை ஜமுனாவிடம் கொடுத்து, “உள்ளே நகை இருக்குமா.” என்றான்.

செலவு செய்வதற்குக் கூடச் செலவு செய்யாமல் இருப்பவனின் கார்டை எடுத்து இஷ்டத்துக்குப் பணத்தைக் காலி செய்து விட்டோமே என ஒரு எண்ணம் விஷாலுக்குத் தோன்றத்தான் செய்தது. பிறகு அவனே, “இவருதான் செலவு பண்ண மாட்டேங்கிறார். நாமாவது பண்ணுவோம்.” என எப்போதும் போல அலட்சியப்படுத்தவும் செய்தான்.

கீர்த்திக்கு இன்னும் தர்மா வந்தது தெரியாது. இன்று காலையில் இருந்து ஒவ்வொருவராக வருவார்கள். அதனால் நல்ல உடையில் தயாராகும்படி அருணா சொல்லி இருந்ததால்…. குளித்து விட்டு டிஸைனர் புடவை கட்டிகொண்டு வந்தாள்.

சிறிது கூந்தலை மட்டும் எடுத்து அவள் கிளிப் போட்டிருக்க… நடுமுதுகு வரை விரித்திருந்த கூந்தலில் இரண்டு பக்கமும் வழியும்படி அருணா மல்லிகை பூவை வைத்துவிட்டாள். முகத்திற்கு லேசாக ஒப்பனை செய்து, சின்னப் பொட்டு வைக்க… அழகில் ரதியே தான்.

கீர்த்திக் கண்ணாடியில் தன்னைச் சரிபார்க்க, “தர்மா வந்திருக்கான்.” என அருணா சொன்ன நொடி… எங்கே என கேட்டுக்கொண்டு, வாசலுக்கு விரைந்தவள், தர்மாவின் எதிரே சென்றுதான் நின்றாள்.

நாளிதழை படித்துக் கொண்டிருந்தவன், கீர்த்தியைப் பார்த்ததும் அதை மடித்து வைத்தபடி, “ஹாய் கீர்த்தி எப்படி இருக்க?” என்றான் புன்னகையுடன்.

வந்ததுமே கீர்த்திக் குளித்துக் கொண்டிருக்கிறாள் என ஜமுனா சொல்லி இருந்தார். அவள் வரட்டும் என்றுதான் பல் கூடத் துலக்காமல் வாசலிலேயே உட்கார்ந்து இருந்தான்.

கீர்த்தி அவன் பக்கத்தில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து அவனின் நலம் விசாரிக்க… மற்றவர்கள் உள்ளே செல்ல, விஷால் மட்டும் அங்கேயே உட்கார்ந்து இருந்தான். அருணா கண்ணைக் காட்டியும் அங்கிருந்து நகரவில்லை.

“உனக்கு இங்க பொழுது போச்சா? எப்படி இருந்தது?” எனத் தர்மா கீர்த்தியை விசாரிக்க… கீர்த்தித் தான் என்ன செய்தேன் என அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இத்தனை நாள் இல்லாத மலர்ச்சி அவள் முகத்தில். அதைப் பார்த்தபடி விஷால் எழுந்து உள்ளே சென்றான்.

தீபக்கும், திவ்யாவும் உறக்கத்தில் இருந்து எழுந்து வர… அவர்களைக் தன் அருகில் அழைத்தவள், “இவங்க இல்லைனா ரொம்பக் கஷ்டம். இவங்க இருந்ததுனால எனக்கு டைம் போனதே தெரியலை.” என்றாள்.

“அத்தையை ரெண்டு பேரும் நல்லா பார்த்துகிடீங்களா?” எனத் தர்மா அவர்களிடம் கேட்க, திவி வெட்கப்பட்டுக் கீர்த்தியை ஒட்டிக்கொள்ள… தீபக் ஏறி தன் மாமனின் மடியில் அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரம் அவர்களுடன் பேசிய தர்மா, “இருங்க ரெடி ஆகிட்டு வரேன்.” என எழுந்து உள்ளே சென்றான்.

உள்ளே வந்த தர்மா விஷாலைப் பார்த்து, “சீக்கிரம் ரெடி ஆகு. வேலையைப் பார்ப்போம்.” எனச் சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றான். அண்ணனும் தம்பியும் கிளம்பி வர… அருணா அவர்களுக்குக் காலை உணவை பரிமாற… கீர்த்தியும் அவர்களுடன் உண்டாள். பிறகு நாயகியிடம் என்னென வேலைகள் இருக்கு எனக் கேட்டுக் கொண்டு இருவரும் பைக்கில் கிளம்பி மண்டபம் சென்றனர். 


கோவிலில் தான் திருமணம். ஆனால் மற்ற அனைத்து வைபவங்களுக்கும் அருகிலேயே ஒரு மண்டபம் பிடித்திருந்தனர். நெருங்கிய உறவினர்கள் என்றாலும் பெரிய குடும்பம் என்பதால் அதுவே நிறையப் பேர் இருந்தனர். 

மண்டபம் சென்று முடிக்க வேண்டிய வேலைகள் முடித்து, பிறகு இருந்த மற்ற வேலைகளையும் முடித்துக் கொண்டு இருவரும் மதியம் தான் வீடு திரும்பினர். 

இருவரும் மதிய உணவை உண்டு முடிக்க, தர்மாவின் நண்பர்கள் அருகில் வந்துவிட்டதாகக் கைப்பேசியில் அழைத்துச் சொல்ல, அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டு தர்மா செல்ல, தானும் வருவதாகச் சொல்லி கீர்த்தியும் உடன் சென்றாள்.
பக்கத்தில் என்பதால் இருவரும் பேசிக் கொண்டு நடந்தே சென்றனர். 

“என்ன இப்ப எனர்ஜி லெவல் எப்படி இருக்கு?” என்ற தர்மா ஓரக்கண்ணால் கீர்த்தியைப் பார்க்க… 

“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு?” எனக் கீர்த்திப் பதில் கேள்வி கேட்க, 

“நீ செமையா இருக்க… நான்தான் கொஞ்சம் லோவா இருக்கேன். உன்னோட எனர்ஜியை எனக்குத் தர்றியா? ” எனத் தர்மா புன்னகைக்க… கீர்த்திக்கு மொத்த ரத்தமும் அவள் முகத்திற்குப் பாய…. தர்மா அதனை ரசனையுடன் பார்த்துக் கொண்டான். 

இவர்கள் வீடு போய்ச் சேர்வதற்கும் நண்பர்கள் வருவதற்கும் சரியாக இருக்க…. அவர்களை வரவேற்றுப் பேசிக்கொண்டிருந்த தர்மா, அவர்களுக்குத் தேவையான வசதிகள் எல்லாம் இருக்கிறதா எனப் பார்த்து விட்டு, வீட்டிற்குக் கிளம்ப, கீர்த்தி அவர்களுடனே இருந்து கொள்வதாகச் சொல்ல… சரியென்று அவளை அங்கேயே விட்டுவிட்டு அவன் மட்டும் சென்றான். 

ரவீந்தர் குடும்பமும், உமாநாத் குடும்பமும் ஒரே காரில் வந்திருந்தனர். சந்ருவின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் குடும்பமும் வந்திருந்தது. மேலும் ஜமுனா வழி உறவினர்கள் சிலரும் வந்திருக்க… வீடே நிரம்பி வழிந்தது. 

மாலை வீட்டில் பூஜை இருக்க… அருணா கொண்டு வந்து கொடுத்த புடவை நகைகளை அணிந்து, கீர்த்தி அவளே ஒப்பனை செய்து கொண்டாள். நாயகியின் புடவையும் அதற்குப் பொருத்தமாகத் தன்னிடம் இருந்த வைர நகைகளை அணிந்தவள், ஜமுனாவின் ஆரத்தையும் போட்டு இருந்தாள்.
ஏழு மணி போலக் கீர்த்தி நண்பர்களின் குடும்பத்தினருடன் தனது புகுந்த வீட்டிற்கு வர… திருமணப் புடவை நகைகளை வைத்து அதோடு பலகாரங்கள் எல்லாம் செய்து வைத்து சாமி கும்பிட்டனர். 

வீட்டில் உணவு பரிமாற இடம் போதாது என எல்லோரும் மண்டபத்திற்குச் சென்று அங்கு இரவு உணவை உண்டனர். இரவு உணவிற்குப் பிறகு மண்டபத்திலேயே உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தனர். 

சுனிதாவிற்கும் சுதாவுக்கும் கீர்த்தி அணிந்திருந்த புடவை பரிட்சையமாக இருக்க… அவர்கள் இருவரும் அதைப் பற்றிப் பேச… 

“என்னோட புடவைதான் அது. நான்தான் கட்டிக்கச் சொன்னேன்.” என்றார் நாயகி. 

புடவையைப் போல அவரது நகைகளைத் தூக்கி கொடுத்துவிட்டால் என்ற அச்சத்தில், “அத்தை, உங்களுக்குப் பிடிச்ச பேரன் பொண்டாட்டின்னு எல்லாத்தையும் அவளுக்கே கொடுத்துடாதீங்க. எங்களுக்கும் மிச்சம் வைங்க.” என்றார் சுனிதா இடக்காக. 

“எனக்குப் பிடிச்ச பேரன் பிடிக்காத பேரன் எல்லாம் இல்லை. எங்களைப் பார்க்கிற பேரன்னு வேணா சொல்லு. நான் கொடுத்தாலும் நீங்க கட்டிப்பீங்களா? யாருக்கு அதோட மதிப்பு தெரியுதோ அவங்களுக்குத் தான் கொடுக்க முடியும்.” என்றார் நாயகியும் மாமியார் தோரணையில். 

மாமியார் பேசியதில் மருமகள்கள் இருவரும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டனர். சிலர் வீட்டில், சிலர் மண்டபத்தில், சிலர் அவர்களுக்கு ஏற்பாடு செய்த ஹோட்டல் அறையில் என இரவு பொழுதை கழித்தனர். 

வீட்டு மொட்டை மாடியில் விஷால், சூரியா, வசீகரன் மற்றும் சந்துரு அமர்ந்து குடித்தவர்கள், பிறகு சீட்டு விளையாடினார்கள். 

சீட்டு விளையாடியபடி சூரியா, “கல்யாணத்தைக் கிராண்டா பண்ணுவாருன்னு பார்த்தா, சிம்பிள்லா பண்றார்.” என, 

“பொண்ணு வீட்ல ஒத்துக்கலை… எல்லாரையும் கூப்பிட்டு பண்ண ஒரு மாதிரி இருந்ததோ என்னவோ.” என்றான் வசீகரன். 

“அவர் எப்பவும் கிராண்டா பண்ண நினைச்சதா எனக்குத் தோணலை. காசை ஏன் செலவு பண்ணனும்னு யோசிப்பார்.” என்றான் விஷால். 

“இதே பொண்ணு வீட்ல ஒத்துகிட்டு இருந்தா, கல்யாணம் அவங்க செலவு ஆகியிருக்கும். இவர் செலவு பண்ணவே வேண்டியது இல்ல… பாவம் இப்ப எல்லாம் இவர் தலையில்.” எனச் சூரியா சிரிக்க.. 

“அப்படியெல்லாம் அவர் யோசிச்சதா எனக்குத் தெரியலை.” என்றான் விஷால்.