“இன்னும் அத்தான் வரலையா கா…” 

“கார் எதோ ரிப்பேர் போல.. வேற வண்டி பிடிச்சு வர்றார் அதுதான் லேட். நைட் பயணம் வேண்டாம்னு சொன்னா எங்க கேட்கிறார். இவர் வரும் வரை நான்தான் பயந்திட்டு இருக்க வேண்டியதா இருக்கு.” 

“அதெல்லாம் பத்திரமா வந்திடுவார். நீங்க டென்ஷன் ஆகாதீங்க.” 

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, “வா தர்மா, இப்பதான் வர்றியா?” என ரவீந்தரின் குரலும், “அப்பா…” என அபிநயா கத்துவதும் கேட்க, கீர்த்திக் கணவனைக் காணும் ஆவலில் ஹாலுக்கு விரைய… அதற்குள் மகளை அள்ளி தூக்கியிருந்த தர்மா, எல்லோரின் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லியபடி நின்றான். 

மனைவியைப் பார்த்ததும் தர்மாவின் புன்னகை மேலும் விரிய… அவனைப் பார்ப்பது ஒன்றே போதும் என்பது போலக் கீர்த்தி நின்றிருந்தாள். 

கடமை அழைக்க, மீண்டும் ஷ்ருதியுடன் சேர்ந்து அவள் வேலை செய்யச் செல்ல, ஷ்ருதி சுட்ட வடைகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, சூரியாவிடம் மகளைக் கொடுத்து விட்டு, தர்மா சமையல் அறைக்குச் சென்றான். 

கணவனைப் பார்த்ததும் கீர்த்தியின் முகம் புன்னகை கொள்ள, “சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிட வாங்க.” என்றாள். 

சரி என்றாலும் தர்மா அங்கிருந்து நகரவில்லை. கீர்த்தி என்ன என்பது போலப் பார்க்க, அவளை அணைத்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலக, அப்போது அபியை தூக்கிக்கொண்டு வந்த சூரியாவும், ஷ்ருதியும் திகைத்துப் போனார்கள். 
சட்டென்று வெளியே செல்லவும் தோன்றாமல் அங்கேயே நிற்கவும் முடியாமல் திணற…. தர்மா எதுவும் நடக்காதது போல மென்னகையுடன் அவர்களைக் கடந்து சென்றான். அபிநயா தந்தையிடம் தொற்றிக் கொண்டாள். 

கீர்த்தியும் எதையும் காட்டிக்கொள்ளாமல் வேலை செய்ய….. கணவனோடு வெளியே வந்த ஷ்ருதி, “உங்க அண்ணனுக்குக் கூட ரொமான்ஸ் வருமா?” என ஆச்சர்யமாகக் கேட்க,
அவளை முறைத்த சூர்யா…. “ரொமான்ஸ் பண்ணாமலா மூன்னு வயசில ஒரு பெண் குழந்தை இருக்கு.” என்றதும், 

“நமக்குக் கல்யணம் ஆன இந்த ஒரு வருஷத்தில நான் இன்னைக்குதான் உங்க அண்ணனை இப்படிப் பார்க்கிறேன்.”  

“நாம ரெண்டு பேரும் யார் இருந்தாலும் இல்லைனாலும் கட்டி பிடிப்போம். அவங்க நம்மைப் போல இல்லை. அதனால உனக்கு அப்படித் தோணுது.” கணவன் சொன்னதை ஷ்ருதியும் ஆமோதித்தாள். 

தர்மா குளித்து விட்டு வர, அதற்குள் மற்றவர்களும் வந்திருக்க, காலை உணவு ஆரம்பமாகியது. அவரவருக்குத் தேவையானதை அவர்களே போட்டுக் கொண்டு உண்ண, மகளை மடியில் வைத்து அவளுக்கு ஊட்டியபடி தர்மாவும் உணவு உண்டான். 

எல்லோரும் உணவு முடித்து ஹாலில் அரட்டையில் இருக்க… விஷால் முந்தின இரவு எதுவுமே நடக்காதது போல… எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான். 

தர்மா கைப்பேசியில் முகநூலை பார்க்க, அவன் புருவம் சுருங்கியது. இன்டெர்காமில் வாயில் காவலனை அழைத்து, விஷால் இரவு எந்த நேரம் வந்தான் எனக் கேட்டு உறுதி செய்து கொண்டான். 

“விஷால் உன்னோட கார் எங்க?” தர்மா கேட்க, எல்லோரும் பேசுவதை நிறுத்திவிட்டு இருவரையும் கவனித்தனர். 

“கார் என்னோட பிரண்ட்கிட்ட இருக்கு.” என்றான்.
தர்மா அவனது கைபேசியைக் காட்ட… விஷாலின் கார் மரத்தில் மோதி நிற்பது போலப் புகைப்படம் அதில் இருந்தது. 

“என்னோட பிரண்ட் ஒட்டி பார்க்க ஆசைபட்டான். ஆனா புதுக் கார் இல்ல… ரொம்ப ஷார்ப்… அவனுக்கு ஹான்டில் பண்ண தெரியலை… மரத்தில மோதிட்டான். என்ன பண்றது? இட் ஹப்பென்ஸ்…” என விஷால் பேசுவதை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் தர்மா கேட்டுகொண்டிருக்க…. அவன் சொன்னதை உண்மை என நம்பி மற்றவர்கள் பரிதாப்பட…
“உன் பிரண்டே காரை சரி பண்ணி கொடுத்திடுவான் தானே….” என்றார் உமாநாத் வேகமாக. அவருடைய கவலை அவருக்கு. 

“அப்பா, அவன் என் ப்ரண்ட் பா….அவன்கிட்ட நான் பணம் கேட்க முடியுமா? இன்சுரன்ஸ்ல கவர் பண்ணிடலாம் கவலைப்படாதீங்க.” என விஷால் சரளமாக அடித்து விட… அவன் சொன்னதை மற்றவர்களும் நம்பி விட்டனர். அதுவரை அமைதியாக இருந்த தர்மா பேச வாய்த் திறந்தான். 

“இங்க அப்படிப் போடலையே…. நைட் குடிச்சிட்டு வண்டி ஓட்டி மரத்தில மோதிட்டு, ஆளுங்க வர்றதை பார்த்ததும், வண்டியை விட்டுட்டு ஓடிட்டாங்கன்னு தானே போட்டிருக்கு.” என்றதும்,
எங்கே எல்லாம் வெளி வந்துவிடுமோ என்ற அச்சத்தில், விஷாலுக்குப் பதட்டமாக, கோபத்தில் எடுத்தெறிந்து பேச ஆரம்பித்தான். 

“சோசியல் மீடியால வர்ற எல்லாம் உண்மை கிடையாது. இது கூட உங்களுக்குத் தெரியாதா? படிச்சிருந்தா தானே தெரியும். நீங்க தான் படிக்கலையே.” எனத் தர்மாவை அவமானப் படுத்துவது போலப் பேசினால்… அவன் இதோடு விட்டு விடுவானோ என நினைத்து பேச, 

“அவன் பிரண்ட் பண்ணதுக்கு அவன் என்ன பண்ணுவான்.” எனச் சுபாவும் மகனுக்குப் பரிந்து கொண்டு வர…. 

விட்டுடுங்களேன் என்பது போலக் கீர்த்திக் கணவனைப் பார்க்க, ஆள் பார்க்க அமைதியாகத் தெரிந்தாலும் மிகுந்த ஆளுமைக் கொண்டவன் தர்மா, அவ்வளவு எளிதாக விட்டு விடுபவன் இல்லை. அதை அப்போதும் நிரூபித்தான். 

“மரத்தில இடிச்ச உன் பிரண்ட் யாரு? அவன்கிட்ட நான் பேசணும்.” 

“என் பிரண்ட்கிட்ட எதுக்கு நீங்க பேசணும்?” 

“நான் அவன்கிட்ட பேசினா உனக்கு என்ன டென்ஷன்?” 

“எனக்கு ஒன்னும் டென்ஷன் இல்லை. என் ப்ரண்ட் பேர் வெளிய வர்றது எனக்கு விருப்பம் இல்லை. போலீஸ் கேட்டா நான்தான் இடிச்சேன்னு சொல்லுவேன்.” 

“நீ விடியக் காலை தான் வீட்டுக்கு வந்திருக்க… அவ்வளவு நேரம் வெளியில உனக்கு என்ன வேலை?” 

அவன் எந்நேரம் வந்தால்… இவனுக்கு என்ன? தர்மா தேவையில்லாதது பேசுவது போலத்தான் மற்றவர்களுக்குத் தோன்றியது. 

“ஏன் இவ்வளவு பொய்? நான்தான் இடிச்சேன்னு உண்மையைச் சொல்லிட்டு போயேன்.” எனத் தர்மா குரலை உயர்த்த…. 

“ஆமாம் நான்தான் இடிச்சேன். அதைப் பத்தி உங்களுக்கு என்ன? எங்க அப்பா இருக்கார் என்னைக் கேட்க.” என விஷாலும் அதற்கு மேல் கத்தினான். இவர்கள் இருவரும் சண்டை இட்டுக்கொள்வதைப் பார்த்து நாயகிக்கு படபடப்பாக இருக்க… கணவர் படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்துக் கொண்டார்.

“மரத்தில மோதினது யாராவது ஆள் மேல மோதி இருந்தா, இந்நேரம் கம்பி எண்ணிட்டு இருந்திருப்ப.” என அவன் சொன்னதும், அப்படியும் ஆகி இருக்க வாய்ப்பிருக்கிறது தானே… உடனே எல்லோரின் பார்வையும் மாற…. 

“மரத்தில மோதின வேகத்துக்கு உனக்கே எதாவது ஆகி இருந்தா?” என அடுத்துத் தர்மா கேட்டதும், மகனுக்குப் பரிந்து பேசிக் கொண்டிருந்த சுபா கூட, இப்போது அச்சத்தில் மகனைப் பார்க்க…. 

இவ்வளவு நேரம் நடித்ததெல்லாம் வீணாகப் போனதே என விஷால் மானசீகமாகத் தலையில் கைவைக்க, 

“டேய், உனக்கு எதாவது ஆகி இருந்தா, எங்க நிலைமையை யோசிச்சு பார்த்தியா டா….” எனச் சுபா அழவே ஆரம்பிக்க, நாயகி, ஜமுனா என எல்லோரும் விஷாலுக்கு அறிவுரை சொல்ல… “டேய் தம்பி, பார்த்து நிதானமா இருடா.” என்றான் சூரியாவும். 

“நான் கொஞ்சமாத்தான் மா குடிச்சிருந்தேன். நாய் குறுக்க வந்திடுச்சு… அதுக்காக வண்டியை திருப்பினேனா மரத்துல மோதிடுச்சு.” என விஷால் ஒரு புதுக் கதை சொல்ல, அதையும் மற்றவர்கள் நம்ப, தர்மாவுக்குக் கடுப்பாக இருந்தது. 

அந்நேரம் காவல் அதிகாரி வந்திருப்பதாக இண்டர்காமில் தகவல் வந்தது. 

“என்னைக் கேட்டா குடிச்சிட்டு வண்டி ஓட்டினதுக்கு என்ன தண்டனையோ அதை இவன் அனுபவிகட்டும்னு தான் சொல்வேன். அப்பத்தான் இதே தவறை இன்னொரு முறை செய்ய மாட்டான். ஆனா நீங்க கேட்பீங்களா என்ன? என்னவோ செய்யுங்க.” என்றவன், மகளைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான். 

உமாநாத்தும் மற்றவர்களும் சேர்ந்து பேசி, காரின் ஓட்டுனர் உறக்க கலக்கத்தில் மரத்தில் மோதியதாகக் கதை திரித்து அதைக் காவலர் ஏற்கும்படி ஒரு தொகை கொடுத்துக் கேசை முடித்து விட ,விஷாலுக்கு அப்போதுதான் நிம்மதி ஆனது. 

“கண்டிப்பா ஜெயிலுக்கு அனுப்பியே தீருவேன்னு இல்லாம விட்டானே…” என்ற அளவில் விஷாலும் அமைதி காத்தான்.