தினேஷும், பைரவியும் பேசிக்கொள்ள, ஜானும் சந்தோஷியும் அமைதியாய்த் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். ஜானுக்கு இதுவரைக்கும் தினேஷ் வீட்டில் பைரவியை திருமணம் பேசுவது தெரியாது. அதனால் சாதாரணமாய் தினேஷை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்.
இப்போது பைரவியின் முக பாவனைகளைப் பார்த்துத்தான் அவனுக்கு ‘என்னவோ இருக்கிறது…’ என்று புரிய, சந்தோஷியிடம் ஜாடையில் கேட்டான்.
அவளோ ‘பொறுமையாய் இரு…’ என்று சைகை செய்ய, செல்விக்கோ அங்கே இருப்பதா போவதா என்ற நிலை.
என்னவோ நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள். வேலையும் இல்லை. இதற்குமேலே அங்கே நிற்க அவருக்குப் பிடிக்கவில்லை.
“நா… நான் கிளம்புறேன் பாப்பா…” என்று பைரவியிடம் சொல்ல,
“ம்ம் சரி…” என்றுவிட்டாள் உடனே..
“சயந்திரம் வர்றேன்..”
“நான் போன் போடுறேன் செல்விம்மா.. அப்புறம் வாங்க போதும்…” என, செல்வியும் கிளம்பிவிட்டார்.
அங்கே நண்பர்கள் நால்வர் மட்டுமே.
“பேசு பைரவி… ஏன் அமைதியா இருக்க நீ?!” என்று தினேஷ் கேட்க,
“நீ என்ன போலீஸா வந்திருக்கியா? நீ பேசுறது பார்த்தா விசாரணை செய்றது போல இருக்கு…” என்ற பைரவி இருக்கையில் அமர, மற்றவர்களும் அமர, தினேஷோ லேசாய் சிரித்து “நீ மட்டும் தான் இப்படி சொல்லாம இருந்த. இப்போ நீயும் இப்படி சொல்லிட்ட…” என,
“நீ பேசுறது அப்படித்தான் இருக்கு…” என்றாள் பைரவி.
“நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லவே இல்லை…”
“பதில் இல்லாத கேள்வி கேட்டா அப்படித்தான் தினு..” என்றவள் ஜானிடம் “இந்த வியாழக் கிழமை, ஷூட்டிங் டைம் என்ன?” என்று பேச்சை மாற்ற,
தினேஷ் “பைரவி…” என்றான் கொஞ்சம் கடிந்து.
“சொல்லு டா…”
“என் பர்த்டே பார்ட்டிக்கு ஏன் வரல…?! அன்னிக்கு உனக்கு எந்த ப்ரோக்ராமும் இல்லை.. ஆனாலும் நீ வரலை. ஏன்?!” என,
“ஷ்…! இப்போ நீ இதெல்லாம் கேட்கத்தான் வந்தியா?” என்றாள் கடுப்பாக பைரவி.
“ஆமா…”
“இங்க பார் தினு, சில நேரம் எனக்கு மனசு சரியில்லன்னா, நான் எங்கயும் போகமாட்டேன்னு தெரியாதா…”
“உனக்கு மனசு சரியில்லாம போக என்ன நடந்தது?” என்றான் அடுத்து.
தினேஷ் சிறு வயது முதலே இப்படித்தான். ஒருவரின் பேச்சில் இருந்தே அவரிடம் கேள்வியைத் திருப்புவான். அப்போதே நண்பர்கள் கிண்டல் செய்வர். பேசாம நீ போலீஸ் ஆகிவிடு என்று. அதுவே இன்று நிஜமும் ஆகிப்போனது.
“ஒண்ணுமில்ல…” என்று பைரவி பேச, சந்தோஷியோ பொறுத்தது போதுமென்று “தினு நீ பைரவிய இவ்வளோ கேள்வி கேட்கிறதுக்கு பதிலா, உங்க அம்மாவ கேட்டிருந்தா பதில் வந்திருக்கும்…” என,
பைரவியோ “சந்தோஷி..” என்று அதட்ட,
தினேஷோ “என்ன சொல்ற?” என்றான் புரியாது.
அவனின் அந்த ஒரு கேள்வியிலேயே புரிந்து போனது, நடந்திருக்கும் எதுவும் தினேஷுக்கு தெரியவில்லை என்று.
“போதும் சந்து.. பேச்சை விடு.. நான் பார்ட்டிக்கு வரலன்னு அவன் கோபமா இருக்கான்…” என்று பைரவி பேச,
“இல்ல அவ வேற ஏதோ சொல்ல வர்றா… நீ டைவர்ட் பண்ணாத…” என்றவன் “சொல்லு சந்தோஷி.. எங்கம்மாவ என்ன கேட்கணும் நான்?” என,
“அ… அது… அது வந்து…” என்று சந்தோஷி இழுக்க, பைரவி அப்பட்டமாய் முறைத்தாள்.
இத்தனை நேரம் பார்வையாளராய் இருந்த ஜானோ “கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்ன நடக்குது இங்க? சந்தோஷி நீ சொல்லு. என்ன மறைக்கிறீங்க எங்கட்ட. பைரவி, எங்கக்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சு நீ என்ன செய்யப் போற? உனக்கு ஒண்ணுன்னா யார் செய்வா?” என்று கடிய, பைரவிக்கு இதனை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, சந்தோஷியோ “சரி சரி ஆளாளுக்கு ஒன்னு பேசிட்டு இருக்காம, வேற பேசலாம்…” என்று பேச்சை மாற்ற,
“இப்போ சொல்ல முடியுமா முடியாதா? இல்லன்னா நான் எங்கம்மாக்கே கூப்பிட்டு கேக்குறேன்…” என்றவன் தன் அலைபேசியை எடுக்க,
“ஏய் தினு…” என்று வேகமாய் அவனின் அலைபேசியை பறித்தவள் “நீ கொஞ்சம் சும்மா இரு முதல்ல…” என்று அவனை அடக்கினாள் பைரவி.
“ஷ்..! தினேஷ்… ம்ம்ச்…” என்று சலித்தவள் சரி எப்போதிருந்தாலும் இவனுக்குத் தெரியத்தான் வேண்டும் என்று எண்ணி “அது ஆன்ட்டி, நம்ம கல்யாணம்…” எனும்போதே,
“என்னது?!” என்றான் அதிர்ந்து.
பைரவி மேற்கொண்டு எதுவும் பேசாது அவனைப் பார்க்க “நம்ம கல்யாணமா?!” என்றான் மீண்டும்.
“ம்ம்… அவங்களுக்கு அப்படி நடக்கனும்னு ஆசை போல…”
“அதுக்கு?!”
“என்கிட்ட பேசினாங்க…”
“என்னன்னு…?”
“ம்ம்ச்… இப்படி நீ விசாரணைப் போல பண்ணா நான் என்ன பேசுறது சொல்லு. அவங்க ஆசையை என்கிட்ட சொன்னாங்க. பட் எனக்கு அதுல விருப்பமில்லை.. அதான், அந்த நேரத்துல எனக்குக் கொஞ்சம் குழப்பம்…”
“என்ன குழப்பம்..? முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லிட்டு எப்பவும் போல இருக்க வேண்டியது தானே…” என்று தினேஷ் சாதாரணமாய் சொல்ல, அது அத்தனை சாத்தியமா என்ன?!
ஜான் தான் “ஏன் முடியாதுன்னு சொன்ன பையு?” என்று கேட்க,
“டேய்… இவன் என் ப்ரண்ட் டா… இவனை எப்படி நான் கல்யாணம் பண்ண முடியும்…” என்ற பைரவி “தினேஷ் உனக்காவது நான் சொல்றது புரியுதா இல்லையா?” என்றாள் ஆற்றாமையாய்.
“எனக்கு உன்னைத் தெரியாதா பையு…” என்றவன் “அதுக்காக நீ என்னை அவாய்ட் பண்ணலாமா?” என,
“நீயே யோசி, உங்கம்மாட்ட, நான் வேணாம் சொல்லிட்டு, அடுத்து உங்க வீட்டுக்கே உன்னோட பர்த்டே பார்ட்டிக்கு வந்தா அது எப்படியிருக்கும்?” என்று பைரவி கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.
“நிச்சயம் எனக்கு அங்க வந்து தர்மசங்கடமா இருக்கும்தானே?!”
“சரி விடு.. அம்மா அடுத்து எதுவும் பேசினா நான் பார்த்துக்கிறேன்…” என்ற தினேஷ் எதோ கேட்க சந்தோஷியைப் பார்க்க, அவளோ தீவிர சிந்தனையில் இருந்தாள்.
“ஓய் என்ன?”
“இல்ல இப்படி டக்குன்னு நீங்க ரெண்டு பெரும் இதை பேசி முடிச்சிட்டீங்கலே. எங்கம்மா எப்படியும் இவளை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு இருக்காங்களே.. அதான் யோசிச்சேன்…” என,
“என்னது உங்கம்மாவா?!” அடுத்த அதிர்ச்சி தினேஷிற்கு இது.
“ஆமா…” என்று சந்தோஷி தலையை ஆட்ட, அப்போதுதான், இந்த விஷயம் எத்துனை தீவிரமாய் இருக்கிறது என்று புரிந்தது.
எல்லோரும் சேர்ந்து இப்படி ஒரு முடிவில் இருக்க, பைரவியின் நிலை கொஞ்சம் சங்கட்டமே. அதனால் தான் அவள் தன்னிடம் இருந்து விலகி இருந்திருக்கிறாள் என்று புரிய,
“சாரி பையு…” என்றான்.
“ஏய் லூசு..!”
“இல்ல.. எனக்கு இதெல்லாம் தெரியாம நானும் உன்னை பேசிட்டேன்…” என்றவன் “எதுவும் வொர்ரி பண்ணாத. நான் இருக்கேன்.. பாத்துக்கிறேன்…” என, நண்பனின் இந்த சொற்கள் அவளுக்கு பெரும் தெளிவையும், தைரியத்தையும் கொடுத்தது.
மனது ஒரு நிலைக்கு வந்து நிம்மதியும் கொடுத்தது.
ஆனால் சந்தோஷிக்கு இதில் சந்தோசம் இல்லை. எப்படியும் தினேஷை திருமணம் செய்ய, பைரவியை சம்மதிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தால், இதனை தினேஷ் இத்தனை இலகுவாய் முடிப்பான் என்று நினைக்கவில்லை.
தினேஷோடு, பைரவி நிம்மதியாய் பாதுகாப்பாய் வாழ்வாள் என்று சந்தோஷி மட்டுமல்ல, அவர்களின் குடும்பம் எல்லாமே நினைக்க, அந்த எண்ணம் பைரவிக்கும் இருக்க வேண்டுமே..
தினேஷிற்கும் அப்படி எதுவும் இருப்பதாய் தெரியவில்லையே..!
இதற்கிடையில் ஜான் அனைவரும் உண்பதற்கு உணவு ஆர்டர் செய்திருக்க, அதுவும் வந்துவிட, நால்வரும் சந்தோசமாகவே உண்டனர்.
தினேஷ் அடுத்து சிறிது நேரத்தில் கிளம்பிவிட, சந்தோஷியும் கூட கிளம்ப, ஜான் தான் “ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடு பையு.. ஷூட்டிங் எதுவும் இப்போ இல்லை.. ஜஸ்ட் ரீல்ஸ் போடறதுன்னா கூட ரெண்டு மூணு நாள் போகட்டும்…” என,
“நானும் அதான் நினைச்சேன்.. நல்லா தூங்கி எழணும் போல இருக்கு…” என்றாள் பைரவியும்.
“நல்லது அப்படியே செய்…” என்றவர்கள் கிளம்ப, இப்போது வீட்டினில் பைரவி மட்டுமே இருந்தாள்.
என்னவோ மனதில் இருந்த பெரும் பாரம் குறைந்ததால், அன்றைய அந்தத் தனிமை அவளுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. மாறாக ஆழ்ந்த நல்லுறக்கதைக் கொடுக்க, அங்கே சிவாவோ கொஞ்சமும் நிம்மதியில்லாது அமர்ந்திருந்தான்.
“மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடு…” என்று ரஞ்சிதம் அழைத்திருந்தார்.
“வேணாம்…” என்றதற்கு
“நீ வா சிவா.. சாப்பிட்டு போ.. மீனு, கறி எல்லாம் எடுத்திருக்கேன்…” என,
“அவங்களுக்குப் போடும்மா.. நான் நைட்டு வர்றேன்…” என்றவனை வம்படியாய் வரவேண்டும் என்று சொல்லியிருந்தார்.
மணி சொன்னதே அவனுக்கு ஓடிக்கொண்டு இருந்தது..
இந்த வயதில் திருமணம் செய்யாமல் வேறு எப்போது செய்வது?!
ஷாலினிக்கும் இப்போது வயது கம்மித்தான்.. இப்படியே யோசனைப் போக “அண்ணே எல்லாம் சரி பண்ணிட்டேன்.. இந்த பைக் சரியாகவே இல்லண்ணே…” என்று வந்து நின்றான் சிண்டு.
“என்னடா உன்னோட…” என்றபடி எழுந்து வந்தவன், பைக்கை ஒரு உதை உதைத்து உறும விட, தன்னைப்போல் ஸ்டார்ட் ஆனது.
“நல்லத்தானடா இருக்கு…” என்று சிண்டுவை முறைக்க,
“இவ்வளோ நேரம் இதைத்தான் நானும் பண்ணேன்…” என்றவன் “ரெண்டு நூறு…” என்று வாடிக்கையாளரிடம் பணம் வாங்க, சிவா அமைதியாகவே இருந்தான்.
வேலை செய்ய முடியும் போல தோன்றவில்லை. வெறுமென அமர்ந்திருக்கவும் பிடிக்கவில்லை. மணி இதனை கவனித்தவன் “மாப்ள நான் சொல்றதை யோசி. உனக்கு இப்போ வாழ்கையில ஒரு மாற்றம் வேணும்.. கண்டிப்பா.. இல்லன்னா இப்படித்தான் ஒவ்வொண்ணுத்துக்கும் இப்படி குழம்பி குழம்பி நிக்கணும்…” என,
சிவாவும் அவனின் அம்மா சொன்னதை சொல்ல “பின்ன என்னடா… தேடி வந்து தர்றேன்னு சொல்றாங்க.. பாரு.. பிடிச்சிருந்தா சரின்னு சொல்லு. இதுல என்ன இருக்கு? சொந்தக்காரங்க அப்படின்னா உங்கம்மாக்கும் அந்த பொண்ணுக்கும் ஒத்து போகும்.. குடும்பத்துல பிரச்னை எதுவும் இல்லாம நீயும் நிம்மதியா இருக்கலாம்…” என, அவன் சொல்வதும் சரியாய் தான் இருந்தது.
நாம் தான் தேவையில்லாமல் கண்டதையும் யோசித்து குழம்பிக்கொள்கிறோமோ என்று எண்ணியவன்
வீட்டிற்கு வந்தவன், நேரே சென்று ஒருமுறை குளித்து, உடைமாற்றி வர, வந்த ஆட்களில் பாதி பேரைக் காணோம்.
“எங்கம்மா..?” என,
“எல்லாம் வெளிய போயிட்டு வர்றோம்னு போயிருக்காங்க… ரெண்டு மணிக்கு வந்துடுவாங்க…” என, சிவாவின் கண்கள் கடிகாரத்தைப் பார்க்க அப்போதே மணி ஒன்னே முக்கால்.
“அப்பா சாப்பிட்டாரா…?”
“எல்லாம் ஆச்சு.. இனிதான் கொடுக்கணும்..”
“குடு.. நான் தர்றேன்…” என்றவன், ரஞ்சிதம் போட்டு வைத்தவற்றை எடுத்துக்கொண்டு போய், அவனின் அப்பாவிற்கு ஊட்ட, என்னவோ அவனுக்கு தான் செய்யும் இந்த செயல் பெரும் நிம்மதியைக் கொடுத்தது.
அவனின் அப்பாவும் மகனின் முகத்தைப் பார்த்தவர், சிறு புன்னகையோடு அமைதியாய் உண்டுவிட்டு, ரஞ்சிதமை சைகை செய்து அழைக்க “என்ன வேணும்…” என்றபடி அவரும் வர,
உக்கார் என்பது போல் கை காட்ட, ரஞ்சிதமும் அமர்ந்துகொள்ள சிவாவிற்கு அப்பா என்னவோ சொல்ல வருவது புரிந்தது.
“ப்பா என்னப்பா…” என,
திக்கித் திக்கியே தான் அவர் பேசினார்.
விஷயம் வேறோன்றுமில்லை. மணி சொன்னதுதான்..
கணவனின் பேச்சிற்கு நிச்சயம் மகன் மறுப்பு தெரிவிக்கமாட்டான் என்று ரஞ்சிதம் சிவாவின் முகம் பார்க்க “ம்மா இப்போ இருக்க வீடு நிச்சயமா இடம் போதாது.. இந்த வீடை இடிச்சுக் கட்டவும் முடியாது. அதனால கண்டிப்பா ஒரு நல்ல வீடு வாங்கிட்டுத்தான் கல்யாணம்..” என,
அப்பாவின் முகத்திலும் அதே தான் தெரிய “வேற என்ன பண்றது?” என்று சிவா யோசிக்க,
“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா… சொந்தமோ அந்நியமோ எந்த பொண்ணா இருந்தாலும், இங்க இருக்க முழுசா சம்மதிக்க மாட்டா.. வீட்ல உன் தங்கச்சி வேற இருக்கா. உடம்புக்கு முடியாத அப்பா வேற.. யாருக்குன்னாலும் கஷ்டம் தான். நாளைக்கு உனக்கும் தர்ம சங்கடம் வரும் தான். அதனால..” என்று பேசும்போதே,
“அதனால?!” என்று கேட்டு நிறுத்தினான் சிவா.
“உன் மெக்கானிக் செட் இருக்குல்ல…”
“ஆமா…”
“அதுக்கு மேலே ஒரு மாடி போர்சன் போல எடுத்துட்டா, கல்யாணம் ஆகவும் நீயும் உன் பொண்டாட்டியும் அங்கனயே இருந்துக்கலாம். புதுசா வீடு கட்டுறப்போ கட்டலாம். இட வசதி இல்லன்னு நமக்கும் சங்கடம் இல்லையே. பின்னாடி இருக்க இடம் அவங்க காலி பண்ணி தர்றப்போ கூட கட்டிக்கலாம்…” என்று ரஞ்சிதம் தன்மையாகவே தான் பேசினார்.
சமையல் செய்தபடி இத்தனையை யோசித்து வைத்திருந்தார்.
“ம்மா அதுக்காக தனியா போகனுமா?!”
“தனியா போறதுன்னு ஏன் நினைக்கிற… நம்ம வீட்ல ஒரு ரூமு அங்கன இருக்குன்னு நினைச்சுக்கோ… செலவும் கம்மியாத்தானே ஆகும். கடனும் வாங்க வேண்டியது இல்லை…” என, சிவா அப்பாவின் முகம் பார்க்க, அவரும் சரி என்று தலையை ஆட்டினார்.
“சரி நான் யோசிச்சிட்டு சொல்றேன்…” எனும்போதே ஆட்கள் எல்லாம் வந்திட, அதன் பிறகு அங்கே மதிய விருந்து நடக்க, சிண்டுவும் மணியும் கூட வந்து உண்டுவிட்டு செல்ல, சிவாவிற்குத் தான் இதெல்லாம் சரியா என்றே மனது கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தது.
செட்டிற்கு மேலே, வீடு எடுக்க வேண்டும் என்றால், நிச்சயமாய் ஒற்றை படுக்கையறை கொண்ட வீடே எடுக்கலாம்.. எப்படியும் பத்து லட்சமேனும் ஆகும். கையில் அத்தனை இருக்கிறதா என்றால், முழுதாய் இல்லை என்றாலும் முக்கால்வாசி இருக்கிறது.
மிச்சத்திற்கு சீட்டு போட்டால் போதும்.
திருமணம் செய்கிறோமோ இல்லையோ, சரி இப்படி ஒரு வீடாவது எடுக்கலாம் என்ற முடிவிற்கு சிவா வந்துவிட, அதை செல்வியிடம் கூட மாலையில் சொன்னான்.
“அட.. அதுக்கென்ன.. நல்லதுதானே.. குடும்பம் பெருசாச்சுன்னா இடம் வேணுமில்ல.. நல்லது கண்ணு.. நல்லா கட்டு…” என்று சந்தோசமாய் சொல்ல, சிவாவிற்கும் மனதில் ஒரு தெளிவு வந்திருந்தது.