“ஹேய் பைரவி வாட் ஆர் யூ டூயிங் ஹியர்..?”என்றபடி பைரவியை தேடி வந்தாள், அவர்களுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்களுள் ஒருத்தி.
“நத்திங் ரூப்பா..” என்று சொல்லி பைரவி வழக்கம்போல் ஒரு புன்னகை சிந்த,
“தென்… ஏன் தனியா வந்து உக்காந்திருக்க…” என்றபடி ரூப்பாவும், அவள் முன்னிருந்த இருக்கையில் அமர, ஆஸ்திரேலியாவின் ஒரு எழு நட்சத்திர ஹோட்டல் அரை ஒன்றில் தான் இவர்கள் இருவருக்குமான அறை ஒன்று ஒதுக்கப்பட்டு இருந்தது.
பைரவி, இந்த ஓராண்டு காலத்தில் பெயர் சொல்லக் கூடிய வளர்ந்து வரும் பின்னணி பாடகர்களுள் ஒருத்தியாய் இருக்க, அவளை போலவே தான் ரூப்பாவும்.
என்னவோ பொதுவாய் தன் நட்பு வட்டம் தவிர்த்து மற்றவர்களோடு எல்லாம் சற்றே அளவோடு பழகும் பைரவிக்கு, ரூப்பாவோடு அப்படி இருக்க முடியவில்லை. வடக்கில் இருந்து வந்து, பல வருடங்களாய் சென்னையில் செட்டில் ஆன குடும்பம் அவர்களது.
ரூப்பாவின் அப்பா ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. ரூப்பாவின் அப்பாவிற்கும், அம்மாவிற்கும் மிக தாமதமான திருமணம். ரூப்பாவின் அப்பாவை காண்கையில் யாருமே அவளின் தாத்தாவா என்றுதான் கேட்பர். அப்படித்தான் ஒருநாள், ஒரு சிறிய இசை நிகழ்ச்சியில் ரூப்பா அவளின் அப்பாவோடு வந்திருக்க பைரவியும் ‘உன்னோட கிராண்ட்பா வா?’ என்று கேட்டுவிட, ரூப்பாவிற்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.
அப்படியொரு சண்டையில் ஆரம்பித்தது தான் இவர்களின் இந்த நட்பு.
பைரவியின் பதிலுக்காக ரூப்பா அவளது முகத்தினையே பார்த்திருக்க, பைரவிக்கோ மனது முழுக்கா சிவாவின் எண்ணங்கள் ஆக்கிரமித்து இருந்தது. கடந்துவிட முடியாது என்று ஆணித்தரமாய் தெரிந்தாலும், வேறு என்ன செய்வது என்றும் அவளுக்குத் தெரியவில்லை.
சிவா இப்படி வம்படியாய் அவளை அன்று அனுப்பியது இன்றளவும் அவளால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அதுவும் தினேஷை வரவழைத்து அவளை அனுப்பியது என்னவோ அவளுக்கு அப்படியொரு காயத்தை கொடுத்திருந்தது.
அதுவும் ‘இனி இந்த பக்கம் நீ வரவே கூடாது பைரவி. அதேபோல நீ யாரோட பொண்ணுன்னு எப்பவுமே, எங்கயுமே நீ வெளிப்படுத்திக்கக் கூடாது. இது என் மேல சத்தியம்…’ என்று அவள் கை பற்றி அவன் தலைமீது வைத்து சொன்னவன், அவளது அதிர்ந்த பாவனைகளை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
தினேஷிடம் “பார்த்துக்கோங்க..” என்று சொல்லி அனுப்ப, தினேஷின் முகம் காட்டிய பாவனை இப்போதும் பைரவிக்கு மறக்காது.
அவளது நண்பன் தான். இருந்தும் இருவருக்குமான திருமண பேச்சு வந்தது இருவரும் அறிந்ததே. அவனை வேண்டாம் என்றுசொல்லி, சிவாவை அவள் விரும்பியதும், அதில் அத்தனை பிடிவாதமாய் நின்றதும் கூட தினேஷ் அறிவான்.
ஆனால் இன்றோ அந்த சிவாவே நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லி அனுப்புகையில், அவளுக்குத்தான் எப்படி இருக்கும். தினேஷ் எதுவும் பேசவில்லை என்றாலும், ஒரு நண்பனாய் பைரவியின் அழுகை அவனை அசைத்துப் பார்க்க, காரில் அவளை ஏற்றியவன் “எங்க போறது பையு..?” என்று கேட்க,
“அதையேன் என்கிட்டே கேக்குற. உன்னை இங்க வர சொன்னான்ல அவன்கிட்டவே கேட்டிருக்க வேண்டியது தானே.. எங்க கொண்டு போய் அவளை விடணும்னு கேட்டிருக்க வேண்டியது தானே…” என்று அவள் கத்த,
“இல்ல என் வீட்டுக்கு நான் கூட்டிட்டு போக எனக்கு எந்த தயக்கமும் இல்லை பையு. உனக்கு அது ஓகே வா?” என்று அவன் கேட்க, அவன் என்ன அர்த்தத்தில் கேட்கிறான் என்று பைரவி மேலும் திகைத்து பார்க்க,
“லூசு.. நான் வேற எந்த மீனிங்லயும் கேட்கல.. அங்க போனா எங்கம்மா ஏதாவது கேட்பாங்க.. அதான் கேட்டேன். இல்ல சிவாக்கிட்ட நான் பேசி பார்க்கவா?” என்று கேட்க,
“வேணாம். யாரும் எனக்காக அவனோட பேச வேணாம்…” என்று பிடிவாதமாய் மறுத்தவள் “சந்தோஷி வீட்டுக்கு போ…” என்றாள்.
சந்தோஷிக்கு தினேஷ் ஏற்கனவே ஒரு குறுஞ்செய்தி தட்டிவிட, பைரவி அங்கே வந்ததுமே யாரும் எதுவும் கேட்கவில்லை. சந்தோஷியின் அம்மா மேகலா “முதல்ல இந்த ஜூஸ் குடி…” என்று கொண்டு வந்து கொடுக்க, வேண்டாம் என்று வேகமாய் தட்டிவிட்டாள் பைரவி.
“பையு…” என்று மேகலா அதிர,
“ஏன் ஆன்ட்டி? ஏன் இப்படி பண்ணீங்க? அந்த வீட்டுக்கு நான் போக போறேன்னு தெரிஞ்சதுமே, என்கிட்டே ஏன் எல்லாத்தையும் சொல்லலை நீங்க?” என்று பைரவி கேட்க,
“நான் அங்க போகவே வேண்டாம்னு தானே பையு சொன்னேன்…” என்றார் ஆற்றாமையுடன்.
“போகவே வேண்டாம்னு சொன்னீங்க தானே. அதுக்கான ரீசன் நான் கேட்டேன் தானே. அப்போவே சொல்லி இருக்கலாம் இல்லையா நீங்க?” என்று அவள் அழ,
“இப்போவும் என்னாச்சு பையு? அங்க அங்க எதுவும் பிரச்சனையா?” என்று மேகலா கேட்க, அவருக்குத்தான் இவளது காதல் கதை இன்னும் தெரிய வரவில்லையே.
ஆனால் சந்தோஷி அறிவாளே.
“ம்மா ஸ்டாப் திஸ். என்ன பேசிக்கிறீங்க ரெண்டு பேரும்? பையு நீ சொல்லு என்னாச்சு? உன்னை கூட்டிட்டு வர்றேன். உனக்கும் சிவாக்கும் பிராப்ளம்னு தினு சொன்னான். அதுக்கும் உங்கம்மாக்கும் என்ன சம்பந்தம்?” என்று சந்தோஷி பைரவியிடமே கேட்க, பைரவி ஒரே மூச்சில் அனைத்தையும் சொல்ல, அங்கேயோ பேரமைதி.
சொல்லி முடித்தவள், தன் மனதின் பாரம் தாங்காது, அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள் முகத்தினை மூடி.
ஆனால் சந்தோஷியோ “ம்மா, என்னதிது? பையு சொல்றதெல்லாம் நிஜமா?” என்று கேட்க,
தினேஷும் “என்ன ஆன்ட்டி இதெல்லாம்..?” என்று கேட்க,
மேகலாவோ வேறு வழியில்லாமல் “கிருஷ்ணா பத்தி இதெல்லாம் பைரவிக்கு தெரிஞ்சு என்னாகப் போகுதுன்னு தான் சொல்லலை. அப்படி சொல்லி ஒருவேளை வேற ஏதாவது பிரச்சனைகள் முளைச்சா என்னாகும்னு ஒரு பயம். அதுனால தான் உங்க யார்கிட்டயும் கூட நாங்க யாருமே இதெல்லாம் பேசினது இல்லை. கால போக்குல இதெல்லாம் எல்லாரும் மறந்துடுவாங்கன்னு நினைச்சோம். ஆனா கிருஷ்ணா பைரவியை அங்க போய் தங்க சொல்லுவன்னு நாங்க நினைக்கல..
பைரவி அங்க போகும்போதாவது இதை நான் சொல்லிருக்கணும் தான். சொல்லிருந்தா, இந்த சில மாசம் கூட பைரவி அங்க நிம்மதியா வாழ்ந்திருக்க முடியாது. அங்கிருக்கவங்க கூட இயல்பா பழகி இருக்க முடியாது. நல்லது பண்றேன் போய் இவளே வம்ப விலைக்கு வாங்கிட்டு வந்திருப்பா…” என்று சொல்ல,
“இப்போ மட்டும் என்னம்மா? சிவாக்கு தெரிஞ்சதுனால, இதோ இவளோட பாதுகாப்பு தான் முக்கியம்னு, காதலை கூட தூக்கி போட்டுட்டு அனுப்பிட்டான். நல்லவனா இருக்கப் போய் அனுப்பிட்டான். இதேது வேற குணம்னா, இதையே காரணமா வச்சு இவளை என்னவும் செஞ்சிருக்கலாம் தானே…” என்று சந்தோஷி பேச, மேகலாவிற்கு எதையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
பைரவியை அங்கே செல்லவே விட்டிருக்கக் கூடாது என்று இப்போது தோன்றி என்ன செய்ய?!
ஆனால் அவளும் தான் சொல் பேச்சு கேட்டாள் இல்லையே.
பைரவி விசும்பிக் கொண்டே இருக்க, மேகலா அவளின் அருகே சென்றவர் “பையு.. போனது போகட்டும் விடு டா.. இனி நீ எங்கயும் போகாத. எங்களோட இங்கயே இருந்துடு…” என்று சொல்ல,
பட்டென்று அவர்பக்கம் திரும்பியவள் “எங்கம்மா பத்தி எனக்கு தெரியாம எதுவும் இருக்கா ஆன்ட்டி..?” என்று கேட்க,
“நிஜமா வேற எதுவும் இல்லை பையு..” என்று மேகலா சொல்ல,
“ஆன்ட்டி, இது எனக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கும்னு உங்களுக்கு புரியுதா?” என்றாள், அவளுக்கு மேற்கொண்டு அவர்களிடம் என்ன பேசுவது என்று கூட தெரியாமல்.
“சாரி தங்கம்.. நான், இப்படியெல்லாம் நடக்கும்னு யோசிக்கவே இல்லை. உனக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிடலாம்னு தான் நானும் அங்கிளும் பேசிட்டு இருந்தோம்…” என,
“கல்யாணமா? எனக்கா? ம்ம்ச்…” என்றாள் வலியுடன்.
“அப்படி ஏன் டா சொல்ற? இப்போ என்ன அங்கிருந்து நீ பாதுகாப்பா வந்துட்ட தானே. அது நீ அங்க தனியா இருந்த தானே, அதுனால உனக்கு அங்க அந்த பையனை பிடிச்ச மாதிரி தோணி இருக்கும். அதெல்லாம் சும்மாடா, கொஞ்ச நாள் போனா எல்லாம் மாறிடும்…” என்று மேகலாவும், தவித்துப் போய் பேச, பைரவி அப்பட்டாமாய் அவரை முறைத்தாள்.
“எ.. என்ன பையு?” என்று அவள் கன்னம் பற்றி மேகலா கேட்க,
“சிவா விஷயம் எனக்கு எப்பவுமே மாறாது ஆன்ட்டி. இப்போ கூட அவன் என்னை பிடிக்காம அனுப்பல, அங்க இருந்தா எனக்கு எதுவும் ஆகிடுமோன்னு தான் அனுப்பினான். எனக்கு இப்போ எப்படி வலிக்குதோ அதுப்போல தான் அவனுக்கும்…” என்றவளுக்கு அப்படியொரு அழுகை வந்தது.
தினேஷிற்கு பாவமாய் இருந்தது பைரவியை காண. இந்த காதல் தான் எத்தனை பாடு படுத்துகிறது ஒருவரை. சிவா பற்றி பேசினாலே, பைரவி கொடுக்கும் பதில்கள் எல்லாம், பதிலுக்கு யாராலும் பேச முடியாத ஒன்றுதானே.
அவளது காதல் எத்தனை உறுதி என்பதினை அவளின் பேச்சே சொல்லாமல் சொல்கிறதே. இதோ இப்போது கூட, அவளுக்கு அவன்மீது கோபம் வரவில்லையே. அவன் என்ன காரணத்திற்காக தன்னை போக சொல்கிறான் என்பதை புரிந்துகொண்ட தானே பேசுகிறாள்.
சிவாவும் அப்படித்தானே, பைரவி யாரின் மகள் என்று தெரிந்தும், அவள்மீது வேறெதுவும் குற்றம் குறை சொல்லாது, அவளது பாதுக்காப்பை மட்டுமே கருத்தில் கொண்டு எல்லாம் செய்தான்.
இருவரின் காதலும் ஒன்றுக்கு ஒன்று குறைந்தது இல்லை. ஆக, அந்த காதலே அனைத்தையும் தாண்டி அவர்களை சேர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை இதோ இந்த நொடி, தினேஷிற்கும் சரி சந்தோஷிக்கும் சரி மனதில் தோன்றியது.
மேகலா எத்தனை சொல்லியும், பைரவி அங்கே இருக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.
“என்னோட பிளாட் ஒன்னு காலியா தான் இருக்கு ஆன்ட்டி. எனக்கு இப்போ தனிமை வேணும்…” என்று விடபிடியாய் அவளது முடிவில் நின்றுவிட, வேறு வழியே இல்லாமல் அவளோட சந்தோஷியை அனுப்பினார் மேகலா.
ஆனால் அதற்கும் பைரவி சம்மதிக்கவில்லை. ஒரே நாளில் சந்தோஷியை திரும்ப அனுப்பிவிட்டாள்.
“ப்ளீஸ் டி.. என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்களேன்…” என, சந்தோஷிக்கும் அவளது நிலை புரியாமல் இல்லை.
விஷயம் அறிந்து அகிலாவும் ஜானும் வர, யார் என்ன சொல்லியும் பைரவி தன் நிலையில் இருந்து மாறவில்லை.
தனக்கு வேண்டியதை அவளே சமைத்துக்கொண்டாள். வீட்டினுள்ளே தான் இருந்தாள். வெளியே செல்வதையே அறவே தவிர்த்தாள். அத்தனை ஏன் தினமும் பாடி ஓரிரு ரீல்ஸ் போடுபவள், அதெல்லாம் மறந்தே போனாள்.
அவள் மூச்சாய் நினைக்கும் இசையை கூட அவள் மறந்துபோனாள் என்றுதான் சொல்லவேண்டும்.
சிவாவிற்கோ அவளை அனுப்பியதில் இருந்து ஊன் உறக்கமில்லை.
“பைரவி… பைரவி…” என்று சொல்லி சொல்லி அவன் நெஞ்சை நீவிக்கொண்டு இருக்க, இவன் அவளை வம்படியாய் அனுப்பியதை மணி எதேர்ச்சயாய் பார்த்துவிட்டான்.
வந்து என்னவென்று நண்பனிடம் கேட்க “எங்களுக்குள்ள ஒத்து வராது மச்சி. அதான் அவளை இங்க இருக்கவேணாம்னு அனுப்பிட்டேன்…” என்று சிவா, இலகுவாய் சொல்வது போல் சொல்ல,
“பொய் சொல்றன்னு பச்சையா தெரியுது. என்னன்னு சொல்லு மச்சா…” என்று மணி கேட்க,
“ம்ம்ச் என்னடா? இதான் நிஜம்.. எங்களுக்குள்ள ஒத்து வரலை. அவ ரொம்ப பேசுறா.. இதெல்லாம் நமக்கு செட் ஆகாது. இங்க இருந்தா அவளுக்கும் எனக்கும் இனி சண்டையும் தான் நிறைய வரும். அதான் இந்த பக்கம் வரவே வராதன்னு அவளை அனுப்பிட்டேன்…” என்று சிவா இப்போது வரைக்கும் கூட அதையே சொல்லித்தான் சாதித்துக் கொண்டு இருக்கிறான்.
என்னவோ நடந்திருக்கிறது என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் என்னவென்று தான் தெரியவில்லை. தாமஸை பிடித்து கேட்டதற்கு கூட அவனும் தெரியாது என்றுவிட்டான். பைரவியின் நண்பர்கள் யாரும் இதனை எல்லாம் வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை.
சிவா, அவளை அனுப்பிய தினம், தினேஷிடம் மீண்டும் பேசினான். அவள் எங்கிருக்கிறாள் என்ன என்று விசாரித்தான்.
“பைரவியை நாங்க பார்த்துக்கிறோம். திரும்ப நீங்க கால் பண்ண வேணாம் சிவா. அப்படி அவளைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சே ஆகணும்னா நீங்க பைரவிக்கே பேசிக்கோங்க…” என்று தினேஷ் சொல்லிட, இந்த பிடிவாதக் காரன் பேசுவானா என்ன?!
அதன் பின்னே அவள் பற்றியே செய்திகள் எதுவும் அவனுக்குத் தெரியவராமல் போக, அவள்தான் ரீல்ஸ் கூட எதுவும் போடுவது இல்லையே.
அவள் பாடிய பழைய பாடல்களை எல்லாம் திரும்ப திரும்ப போட்டுக் கேட்பான். அவளது புகைப்படத்தை இரவு உறங்கும் முன்னே எத்தனை நேரம் பார்ப்பானோ அவனே அறிவான்.
பைரவி இப்படி எல்லாவற்றையும் மறந்து, வீடே கதி என்று கிடக்க, இதற்கிடையில் தான் அவள் பாடிய முதல் சினிமா பாடல் வெளியாகியது. மிகப் பெரிய வெற்றி இல்லையெனிலும், பைரவி பாடிய அந்த பாடல் அவளுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்க, அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் அவளைத் தேடி வந்தது.
ஆனால் யாராலும் அவளை நேரடியாய் அணுக முடியவில்லை. ஜான் தானே அவளுக்கு எல்லாம் ஏற்பாடு செய்துகொடுப்பான். இத்தனை வாய்ப்புகள் வருகிறது என்று ஜான் சொல்லியும், அவள் செவி சாய்க்கவில்லை.
“பையு ப்ளீஸ்.. உனக்கு இப்படியொரு ரீச் கிடைக்கனும்னு நீ எவ்வளோ கார்ட் வொர்க் போட்டிருக்க.. இப்போ உன்னை தேடி எல்லாம் வரும்போது நீ இப்படி பண்ணலாமா?” என்று ஜான் கேட்க,
“எனக்கு இப்போ பாட இஷ்டமில்லை…” என்றாள் ஒரேதாய்.
“பாடாம? நீ என்ன டி தப்பு பண்ண? உங்கம்மாவும் இப்படித்தான் பண்ணாத தப்புக்கு பாடுறதை நிறுத்தினாங்க. இப்போ நீ. அப்போ உங்கம்மா பண்ணதை தப்புன்னு நீயே நம்புற மாதிரி இருக்கு நீ பண்றது…” என்று அகிலா பேசவும், பைரவி திடுக்கிட்டு பார்த்தாள்.
“என்னடி பாக்குற.. சிவா பண்ணது தப்பு சரின்னு எல்லாம் நான் ஆராய்ச்சி பண்ணல. ஆனா நீ இப்போ பண்ணிட்டு இருக்க பாரு ஒரு விஷயம் அது ரொம்பத் தப்பு. உங்கம்மாவுக்காவது நீ இருந்த. உனக்கு அடுத்து என்னன்னு யோசி. இத்தனை பட வாய்ப்புகள் தேடி வருது. எதுவும் பண்ண மாட்டேன் பாட மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? உங்கம்மா பண்ணது தப்புன்னு நீயும் நினைக்கிறது போலத்தான் இருக்கு..” என்று பேச, அவள் பேசிய விதம் கொஞ்சம் வேலை செய்தது.
அதன்பின்னே தான் பைரவி கொஞ்சம் கொஞ்சமாய் தன் கூட்டை விட்டு வெளியே வந்தாள்.
இதெல்லாம் முழுதாய் ரூப்பாவிற்கு தெரியாது தான். ஆனால் பைரவிக்கும் அவளின் காதலனுக்கும் ஏதோ ஒத்துவரவில்லை என்பது வரைக்கும் அவளுக்கு தெரிந்திருக்கிறது. இருவரும் பிரிந்துவிட்டாலும், அவர்கள் நினைவு இல்லாமல் இல்லை என்பது புரிய, அவ்வப்போது ரூப்பா பைரவியிடம் சிவா பற்றி பேசுவாள்.
இப்போதும் கூட “என்ன உன் லவ்வர் நியாபகமா? இத்தனை லவ் இருக்கு, ஆனா ஏன் இவ்வளோ பிடிவாதம்? போய் நீயே பேசேன்…” என,
“ம்ம்ஹும்…” என்று பிடிவாதமாய் மறுத்தவளோ, உறங்குவதற்கு முன்னே சிவாவின் புகைப்படம் பார்த்து, அவனுக்கு முத்தமிடாமல் உறங்க மறக்கவில்லை.