சிவாவின் மார்பில் சாய்ந்து விசும்பிக்கொண்டு இருந்தாள் பைரவி. அவனும் எதுவும் பேசாமல் மௌனமாய் அவள் தலை கோதிவிட, மனது அவனுக்கு பலவற்றையும் யோசிக்கச் செய்தது.
“என்ன பைரவி இது?” என்று ஆதுரமாய் கேட்க,
“நீ.. நீங்க ஏன் அப்படி கேட்டீங்க?” என்றாள் விசும்பலோடு அவன் முகம் பார்த்து.
“என்ன கேட்டேன்?” என்று சிவாவும் நெற்றி சுருக்க,
“உனக்கு குழப்பமா இருக்கா? என்ன இருந்தாலும் சொல்லு பேசிக்கலாம்னு சொன்னீங்க தானே சிவா. ஏன் அப்படி கேட்டீங்க? குழப்பமா இருந்தா அதுக்காக உங்களை விட்டு நான் விலகனும்னு எதுவும் இருக்கா என்ன?” என்று அவள் கேட்க,
மெல்ல புன்னகை செய்தவன் “லூசு…” என்று நெற்றி முட்டி சொன்னவன் “நான் அந்த அர்த்தத்துல சொல்லல…” என்று சொல்ல,
“பின்ன வேற எப்படி?” என்றாள்.
“உன்னோட மனசுல எது இருந்தாலும், அது எதைப் பத்தியா இருந்தாலும் என்கிட்டே மனசு விட்டு பேசலாம்னு அர்த்தம். அதாவது வெளிப்படையா பேசலாம்னு அர்த்தம்…” என, அவன் முகத்தையே அலைபாயும் கண்களோடு பார்த்தவள், மீண்டும் அவன் பார்பில் சாய்ந்துகொள்ள, அவள் தோள்மீது கரம் போட்டு லேசாய் அணைத்தபடி அவனும் அமர்ந்துகொண்டான்.
அது ஒரு மோன நிலை இருவருக்கும்.
பைரவிக்கு சிவாவின் மீதிருக்கும் நேசத்தில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்த காதலால் எங்கே தன் நண்பர்கள் எல்லாம் தன்னை விட்டு விலகிவிடுவார்களோ என்று பயமாகவும் இருந்தது. அவளது பயம் அவனுக்கு தெளிவாக புரிந்தும் இருந்தது.
“எத்தனை நேரம் இப்படி விசும்பிட்டே இருப்ப பைரவி…” என்று சிவா கேட்க,
“ஏன் நான் சாஞ்சிட்டு இருக்கிறது கஷ்டமா இருக்கா?”என்றாள் குத்தலாய்.
“நீ சாஞ்சிட்டு இருக்கிறதுக்கு தான் நான் இத்தனை வருஷம் காத்திருந்தேன்னு எல்லாம் எனக்கு வசனம் பேசத் தெரியாது. ஆனா ரொம்ப நேரம் இப்படி இருந்தா, உனக்கு கழுத்து வலிக்கும். எனக்கு நெஞ்சு வலிக்கும்…” என்று சொன்னவனின் முகத்தை, ஒரு விதமாய் பார்த்தவள்
“தனி பீசு நீங்க…” என்றாள் அபிநயமாய்.
“ஹா ஹா…” என்று சற்றே சத்தமாய் சிரித்தவன் “சரி.. உன்னோட பாராட்டுக்கு நன்றிம்மா…” என்றவன், மென்மையாய் அவள் கன்னம் பற்றி “என்னாச்சு உனக்கு?” என்று அதனினும் மென்மையாய் வினவ,
“நீங்க பேசுற பேச்சுக்கும், உங்க குரலுக்கும் சம்பந்தமே இல்லை…” என்று பைரவி, சோகம் விட்டு ரசித்து சொல்ல,
“இப்போ இந்த ஆராய்ச்சிக்குத்தான் என்னை நீ பார்க்கனும் சொன்னியா…” என்றவன், மெல்ல நகர்ந்து அமர்ந்து “உன்னோட பிரண்ட்ஸ் ரொம்ப திட்டினாங்களா?” என,
“ம்ம்ம்…” என்றவளுக்கு மேற்கொண்டு என்ன பேச என்று தெரியவில்லை.
“அதுக்கு அழுதுட்டு இருப்பியா? நான்லாம் அடிதடி சண்டை போட்டா கூட இப்படி அழ மாட்டேன்…” என,
“அதெல்லாம் முன்னாடி எப்பவோ. இப்போ ஏரியாக்குள்ள எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. அதை அப்படியே மெயின்டைன் பண்ணிட்டு, முன்னேறி போயிட்டே இருக்கணும்…” என்று லேசாய் சட்டை காலரை உயர்த்தி, கைகளை மேலே தூக்கிக் காட்டிச் சொல்ல,
“எப்படி முன்னேறுவீங்க?” என்றாள் அடுத்து.
அவள் இப்படியொரு கேள்வி கேட்கவும், சட்டென்று சிவா பதில் சொல்லாமல், ஒரு யோசனை பாவனை செய்து பைரவியைப் பார்க்க “ஏன் சிவா, நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?” என்றாள் வேகமாய்.
“தப்பா கேட்கல.. ஆனா இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்லனும்னு பார்த்தேன். ம்ம் சரி நீ சொல்லு முன்னேற்றம் அப்படின்னா என்ன? அதாவது நான் எந்த வகையில முன்னேறனும்னு நீ எதிர்பார்க்கிற…” என்று அவளையே திரும்பக் கேட்க, இப்போது பைரவியும் புரியாத பார்வை ஒன்றை பார்த்து வைத்தாள்.
“என்ன பைரவி சொல்லு…”
“இல்ல.. நான் என்ன எதிர்பார்க்கப் போறேன். எனக்கு புரியலை நீங்க எதை மீன் பண்ணி கேட்கிறீங்கன்னு. எனக்கு நீங்க உங்க இயல்பு மாறாம இருந்தாலே போதும்…” என்று பேச,
“ம்ம்ஹூம் நான் அதை கேட்கல. இப்போ பிராங்கா பேசுறேன் இப்போ உன்னோட பிரண்ட்ஸ் நம்ம லவ்வுக்கு ஓகே சொல்லல. ஒருவிதத்துல அவங்க சொல்றதும் சரிதான். உன்னோட வாழ்க்கை முறையும் என்னோடதும் வேற. எனக்கு தூக்கம் வந்தா, இதோ அப்படியே தலைகாணி கூட இல்லாம கீழ படுத்துடுவேன்.
ஆனா உன்னால அப்படி இருக்க முடியுமா? முடியாது தானே…” என்று கேட்டு நிறுத்த, பைரவி என்ன சொல்ல வருகிறான் என்று பயமாய் பார்த்தாள்.
ஒருவேளை ஒத்துவராது என்று சொல்லிடுவானோ என்று இருந்தது அவளுக்கு.
“நீ பயந்து எல்லாம் பார்க்காத பைரவி. நமக்குள்ள நிறைய வேறுபாடுகள் இருக்கு. அதுக்கு நீயும் சரி நானும் சரி நம்மளோட நிறைய இயல்பான விசயங்களை மாத்திக்கணும். அது லவ் பண்றப்போ தெரியாது. ஆனா புருஷன் பொண்டாட்டியா வாழும் போது, இதெல்லாம் கண்ணுக்குத் தெரியும். அதை தான் உன்னோட பிரண்ட்ஸ் சொல்லிருப்பாங்க…” என்று சிவா பேச,
“அப்.. அப்போ நீங்க என்ன தான் சொல்ல வர்றீங்க சிவா?” என்றாள் மேலும் பதறி.
“நான் எதுவும் சொல்ல வரல பைரவி. முதல்ல உன்னோட பார்வைல நான் எந்த வகைல முன்னேறனும்னு நீ நினைக்கிற?” என,
“ம்ம்ம் எனக்கு தெரியலை. நீங்க சும்மா ஒன்னும் இல்லைதானே.. உங்களுக்குன்னு ஒரு தொழில் இருக்கு.. மன்த்லி இன்கம் வருது..” என்று அவள் பேச,
சிவிடம் இருந்து பட்டென்று பதில் வரவுமே, பைரவி பக்கென்று அவனைப் பார்க்க “நிஜம் தானே. நான் இப்பவும் நூறு ரூபா செலவு செய்றதுக்கு கூட அத்தனை யோசிப்பேன். ஆனா நீ அசால்டா ஆயிரக் கணக்குல செலவு செய்வ தானே…” என,
“நீங்க வேற நான் வேறன்னு நினைச்சா தானே இந்த பிரச்சனை எல்லாம் சிவா. இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்.. இன்னும் எத்தனை வருசத்துக்கு, பசங்க தான் அதிகம் சம்பாரிக்கனும். பொண்ணுங்க அவங்களை விட கம்மியா தான் பார்க்கணும். அப்போதான் குடும்பம் நடத்த முடியும்னு பேசிட்டு இருப்பீங்க?
வசதியான பசங்கன்னு சொன்னா, பொண்ணுங்க உடனே ஓகே சொல்லிடுவாங்கன்னு ஒரு எண்ணம் இப்பவும் எல்லார்க்கிட்டயும் இருக்கு. இதேது பொண்ணு வசதியா இருந்தா, உங்களை நிஜமா விரும்பினா கூட அவளோட சேர்ந்து வாழணும்னு வரும்போது, உங்களோட ஈகோ தடுக்குது அப்படிதானே…” என்று யாரும் யோசிக்காத வகையில் பைரவி பேச, சிவாவிற்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை.
நிஜமும் அதுதானே..
சிவா பதில் சொல்லாமல் பார்க்க “என்ன சிவா? நான் சொல்றது கேட்டு திடுக்குன்னு இருக்கா. இந்த ஸ்டேடஸ்.. வசதி அது இதுன்னு எல்லாம் நான் பார்க்கல.. அப்படி உங்க பழக்க வழக்கத்துல எனக்கு பிடிக்காத விஷயங்கள் இருந்தா, கண்டிப்பா அதை உங்கக்கிட்ட நேராவே சொல்வேன்.
இன்னும் ஒன்னு, நான் ஒன்னும் நம்ம கல்யாணம் சீக்கிரம் பண்ணனும். நீங்க இங்கயே வந்துடனும்னு எல்லாம் சொல்லல. நீங்களே இப்போ புதுசா வீடு கட்டுறீங்க. நான் அங்க வந்துடுறேன்.
இந்த வீடு என்னோட வேலைக்காக நான் யூஸ் பண்ணிப்பேன். நீங்களும் சம்பாரிக்கிறீங்க. நானும் சம்பாரிக்கிறேன். நீங்க ஒரு செலவு பண்ணா, நான் ஒன்னு பண்ணிட்டு போறேன். ரெண்டு பெரும் பேசி வச்சு செய்யலாம். அதுக்கும் மீறி எதுவும் வந்தாலும், இதோ இப்படி உக்கார்ந்து பேசுறோமே அதுபோல பேசிக்கலாம்…” என,
அவள் இத்தனை தெளிவாய் பேசும்போது, அவன் என்ன பதில் சொல்ல முடியும். அவளுக்கு புரிய வைக்க முயன்றான். ஆனால், அவளோ வேறு விதத்தில் மிக தெளிவாய் அவளது எண்ணவோட்டத்தை சொல்லிவிட, சிவாவிற்கு இதை இதோடு விடுவது தான் நல்லதாய் பட்டது.
அவனது பின்வாங்கலை முழுமனதாய் ஒத்துக்கொண்டவன் “இத்தனை தெளிவா பேசுற நீ, அப்போ எதுக்கும்மா அழுதுட்டே என்னை கூப்பிட்ட…” என்று கேட்க,
“அது.. அது உங்களைப் பார்க்கணும் போல இருந்தது. அதான்…” என்றாள் இப்போது புன் சிரிப்போடு.
“சரி.. சிரிப்பு வந்திடுச்சுல்ல.. இது போதும்.. செல்வியக்கா வந்திடும்.. நான் கிளம்புறேன்…” என்று சிவா எழுந்து நிற்க, அமர்ந்தபடி அவனை அண்ணாந்து பார்த்தவள், அப்படியே அவனது இடையோடு லேசாய் அணைத்து, அவன் வயிற்றில் முகம் வைத்து சாய்ந்துகொள்ள, சிவாவிற்கு இன்னமும் புன்னகை விரிந்தது.
“இதென்ன இது.. அடிக்கடி நீ இப்படி பண்ணிடுற…” என்று கேட்க,
“ஏன் பிடிக்கலையா?” என்றாள்.
“பிடிக்கலைன்னு சொன்னேனா? ஏதோ கோழி குஞ்சு வந்து ஒட்டிக்கிற மாதிரி ஒட்டிக்கிற…” என்று சிவா சொல்ல,
“ம்ம் ஆமா…” என்று அவளும் விலகியவள் “உங்களோட பேசவும் தான் எனக்கு மனசுக்கு ரிலாக்ஸா இருக்கு சிவா..” என,
“அப்படியா, அப்படியே கொஞ்சம் பாடவும் செய். இன்னும் ரிலாக்ஸ் ஆகிடலாம்…” என்றவன், அவள் தலையை பிடித்து ஆட்டிவிட்டு, கிளம்பியும்விட்டான்.
இதற்குமேல் தனிமையில் இருக்கக் கூடாது. அவனும் அனைத்து உணர்வுகளும் இருக்கும் மனிதன் தானே. தனிமையில் தான் காதலிக்கும் பெண்ணோடு எத்தனை நேரத்திற்கு உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்து பேசிக்கொண்டு இருக்க முடியும்.
பைரவியின் புரிதாலன பேச்சு, சிவாவிற்கு மனதினில் ஒரு தனி உற்சாகத்தை கொடுத்திருக்க, பல நாட்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தவனின் கால்கள் தன்னைப்போல் இப்போது வீட்டிற்கு நடைபோட, சொக்கன் முன்னே அமர்ந்து இருந்தார். ரஞ்சிதம் அவர் பக்கத்தில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்க, மகனைக் கண்டதும், சொக்கனின் முகம் மலர்ந்து விகசித்தது.
அவருக்கு எப்போதும் மகனிடம் ஒரு தனி அபிப்ராயம் உண்டு.
“சி.. சி.. சிவா…” என்று திக்கி திணறி மகனை அழைக்க, ரஞ்சிதம் அப்போதுதான் டிவியில் இருந்து பார்வையை திருப்பி
“வா சிவா…” என்றார் அவரும் கொஞ்சம் சந்தோசம் போலவே.
“வர்றேன் வர்றேன்.. என்ன ஜோடிங்க புன்னகை முகமா இருக்கீங்க..? என்ன விஷயம்…” என்று கேட்க,
“இதென்ன கேள்வி கேக்குற, உன்னைப் பார்த்தா எங்களுக்கு சந்தோசமா இருக்காதா? நீதான் வூட்டுக்கே வர்றது இல்லை…” என்று ரஞ்சிதம் பேச,
“வேலை இருந்தது…” என்றான் பொதுப்படையாய்.
“நீ.. நீ.. சா.. சாப்பிட்…டியா..?” என்று சொக்கன் கேட்க,
“நீதான் ப்பா இந்த கேள்வி எப்பவுமே கேக்குற…” என்று லேசான ஒரு வலியோடு சொன்னவனின் பார்வை ரஞ்சிதத்தை தொட்டு மீள,
“ஏன் டா நான் உன்னை வூட்டுக்கு கூப்பிடுறதே இல்லியா?” என்று பாய்ந்தவர்,
“சரி சரி.. வஞ்சிரம் கொழம்பு தான் வச்சிருக்கேன்.. வா…” என்று மகனுக்கு தட்டு வைக்கப் போக,
“கொஞ்ச நேரம் போகட்டும் ம்மா..” என்றவன் குளித்து வீட்டினில் அணியும் எளிய உடையில் வர, அதற்குள் ரஞ்சிதமும் மகனுக்கு எல்லாம் சூடாக எடுத்து வைத்திருந்தார் .
“ஹ்ம்ம்…” என்று வாசம் பிடித்து அமர்ந்தவன், நிதானமாகவே உண்ண, அவன் பாதி உண்டு முடிக்கும் வரைக்கும் அமைதியாய் இருந்த ரஞ்சிதம்
“சிவா, அந்த பொண்ணு வந்திடுச்சா?” என்றார்.
“எந்த பொண்ணு..?” என்றவனின் கவனம் எல்லாம் பல நாள் கழித்து உண்ணும் வீட்டு உணவில் இருக்க,
“அதான்டா.. அந்த பாட்டுக்காரி…” என்றவர் பட்டென்று சுதாரித்து “ப.. பைரவி…” என்றுசொல்ல, சொக்கனின் பார்வை அம்மாவையும் மகனையும் கூர்ந்து கவனித்து.
ரஞ்சிதம் ஓரளவு கணவரிடம் இதனை பேசி வைத்திருந்தார். சொக்கனுக்கு என்னவோ பைரவி என்ற பெயரை கேட்டதுமே மனதினில் ஒரு உணர்வு. அது இன்னது என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் கூட ஒருவித உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை.
‘பாட்டுக்காரி… பைரவி…’ என்று அவர் மனம் இப்போதும் உச்சரித்துப் பார்க்க, பார்வை எல்லாம் இப்பொழுது மகன் மீதிருக்க, உணவில் கவனம் கொண்டவனின் கரம் அப்படியே நின்று, அம்மாவை ஏறிட்டுப் பார்க்க
‘என்ன நடக்குது இங்க…’ என்பது போல பார்த்துவைத்தான் சிவா.
“என்னடா பாக்குற? ஏன் உன்கிட்ட போட்டோ இல்லியா?” என்றவர் “அதான் அவ பாடி நெறைய வீடியோ எல்லாம் போட்டிருக்கான்னு ஷாலினி சொன்னா.. அது இருக்கும்ல…” என, சிவாவிற்கு ஓரளவு அம்மாவின் போக்கினை யூகிக்க முடிந்தது.
என்னவோ தனக்கு தெரியாமல் இடையில் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிய, அமைதியாய் மீதியிருந்த சாப்பாட்டினை உண்டு கை கழுவியவன்
“ப்பா.. அம்மா என்ன சொல்லுச்சு..?” என்றான் சொக்கனிடம்.
“ஆ..!” என்று திகைத்த சொக்கன் ‘நீ போட்டோ காட்டு…’ என்று சைகை செய்ய,
“எல்லாம் சேர்ந்து என்னவோ பண்றீங்க…” என்றவன் பைரவியின் புகைப்படம் ஒன்றை காட்ட, அதனைப் பார்த்தவரின் நெற்றி சுருங்கியது.
மனது எங்கெங்கோ செல்ல, கண்கள் விரிய பைரவியின் முகத்தினை பார்த்தவர் இதழ்கள் மெதுவாய் “கி.. கி.. கிருஷ்ணா…” என்று உச்சரித்தது.