காலம் யாருக்கும் காத்திருப்பதில்லையே. இதோ கண் மூடி திறப்பது போல் இருபது நாட்கள் ஓடிவிட்டது. பைரவி உடல் நிலை சரியில்லாது போகவும், முதல் ஒருவாரம் முழுக்க முழுக்க, வீட்டினில் தான் இருந்தாள். சிவா அன்றைய தினம் வந்து போனது மட்டும் தான் அதன்பின் வரவே இல்லை.
இதோ இப்போது வரைக்கும் கூட வரவே இல்லை.
இருவரின் அன்றாடமும் தொடங்கியிருக்க, பைரவி, எப்போதும் போல் ஷூட்டிங், ரிக்கார்டிங் செல்வது, பின் வீட்டினில் ரிக்கார்டிங் செய்து வளை தளங்களில் பதிவிடுவது என்று அவளது வேலையில் மும்முரமாய் இருந்தாள்.
சிவா, தனது மெக்கானிக் ஷெட்டின் மேல்புறம் வீடு கட்ட, தகுந்த என்ஜினியரை தேடிக்கொண்டு இருந்தான். அதன்பின்னும் கூட ஓரிருவர் வந்து பார்த்துச் சென்றனர்தான். ஆனால் அனைவருமே சொன்னது, செல்வி கடை போட்டிருக்கும் இடத்தையும் சேர்த்து கட்டினால் தான் உண்டு என்று. சிவாவிற்கு மனதே இல்லை செல்வியை இடம் காலி செய்யச் சொல்லி.
கோவில் திருவிழா வேறு இன்னும் சிறிது நாளில் ஆரம்பிக்க உள்ளதால், அதன் வேலைகள் வேறு சிவா இந்த முறை மேலும் பொறுப்பேற்று இருந்தான். அதாவது அவனிடம் பொறுப்புகள் கொஞ்சம் திணிக்கப்பட்டு இருந்தது.
கிட்டத்தட்ட இருநூறு குடும்பத்திற்கும் மேலே அங்கே அந்த ஏரியா சுற்றி இருக்க, ஏரியா காவல் துறையில் இருந்து முன்னரே சொல்லிவிட்டார்கள்
‘எந்த பிரச்சனையும் இல்லாம திருவிழா பண்ணுங்க. சண்டை அது இதுன்னு வந்தா, நாங்க எங்க சைட் ஆக்சன் தான் எடுப்போம். சும்மா எல்லாம் விட மாட்டோம்… ’ என்றிட, கோவில் தலைவரோ
“சிவா, இந்த பயலுங்க நீ சொன்னாத்தான் கேப்பானுங்க பார்த்துக்கோ. எல்லாம் தண்ணி போட்டுட்டு பேஜார் பண்ணாம இருக்கணும். போலீஸ் கேஸ் அது இதுன்னு ஆச்சுன்னா, அதுக்கும் சேர்த்து அலையணும்.. பார்த்துக்கோ..” என,
சிவா அமைதியாகவே சரி என்றான்.
“அப்புறம்.. அந்த பாட்டுக்கார பொண்ணு சரின்னு சொல்லிடுச்சா?” என,
“இல்ல மாமா இன்னும் பேசவே இல்லை..” என்றான்.
“இன்னாது பேசலியா? இன்னா சிவா நீ. நாள் இல்லை.. இப்போவே நோடீஸ் எல்லாம் அடிக்கக் குடுத்தாதான் வசூல் எல்லாம் போக சரியா இருக்கும்..” என்று அவர் புலம்ப,
அவரோடு வந்திருந்தவர்களில் ஒருவர் “அதெல்லாம் தோஸ்துங்க சொன்னா கேட்டுக்குமாம் அந்த பொண்ணு. நம்ம பத்திரிக்கைல பேர் போட்டுடலாம்…” என,
“அப்படில்லாம் பண்ணக் கூடாது…” என்றான் வேகமாய்.
“பின்ன இன்னாது சிவா நீ.. ஆளுக்கு முன்ன நீதான் வந்து நிப்ப. இப்போ உன்னிய தேடி நாங்க வந்துன்னுகீறோம்..” என்றார் ஒருவர்.
“வந்தா இன்னாவாம்..” என்று மணி எகிற,
“டேய்..” என்ற சிவா,
“நான் பேசிட்டு சொல்றேன். ஆனா அந்த பொண்ணு சரின்னு சொல்லாம, பத்திரிக்கைல பேர் போட்டீங்க.. திருவிழா நடக்காது…” என்று மிரட்டலாகவே சொல்ல,
“அடடா… சிவா சொன்னா சரின்னு சொல்லின்னு போறோம்..” என்று தலைவர் எழுந்துகொள்ள, மற்றவர்களும் ஆளுக்கு ஒன்று பேசியபடி எழுந்துச் செல்ல, இத்தனை சம்பாசனைகளும் வீட்டினில் தான் நடந்தது.
சிவா அன்றைய தினம் காலையில் வீட்டினில் இருக்க, இவர்கள் எல்லாம் ஷெட்டிற்கு சென்று இருக்க, மணிதான் அழைத்துக்கொண்டு வந்திருந்தான் இங்கே.
அனைவரும் கிளம்பவும், ரஞ்சிதமோ “அந்த மினிக்கி பாடனும்னா அவக்கிட்ட போய் நிக்க வேண்டியதுதான. உன்னிய ஏன் கேட்கணும்…” என,
“ம்மா..” என்று கண்டனப் பார்வை பார்த்தான்.
“எல்லாம் என் காதுக்கும் வந்துச்சு. எதுவும் எனக்கு சந்தோசமா இல்ல..” என்று சடைக்க,
“என்ன காதுக்கு வந்துச்சு?!” என்றான் சிவா.
“ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை…” என்று ரஞ்சிதம் மகனிடம் முறைத்தே பேச,
“சரி சொல்லாத…” என்றுவிட்டான் பட்டென்று.
“சிவா!” என்று ரஞ்சிதம் மகனை அதிர்ந்து பார்க்க,
“யக்கா அந்த பொண்ணு நல்ல பொண்ணுக்கா.. நீயா பேசாத..” என்று மணியும் சொல்ல,
“ஏன் நம்ம தெருவுல நல்ல பொண்ணுங்க எல்லாம் எத்தினியோ இருக்கு. அதுங்க கூட எல்லாமா இவன் பழகுறான்..” என்று ரஞ்சிதம் கேட்க,
“யக்கா நீயே அசிங்கமா பேசாத. நம்ம சிவா என்ன அப்படியா?” என்ற மணி,
“மாப்ள.. இதுக்குத்தான் சொல்றேன்.. கல்யாணம் பண்ணு.. யாரும் உன்னிய பேச முடியாது பாரு…” என்றுவிட்டு செல்ல, சிவாவோ ஏகப்பட்ட எரிச்சலில் இருந்தான்.
காரணமே இல்லாமல் கோபம் வந்தது. அன்றிலிருந்து இப்படித்தான்.
பைரவியை தன் மீது சாய்த்த நாளில் இருந்து, அவன் மனது அவள் பக்கம் முழுதாய் சாய்ந்து போனது நிஜம். தன் மீது சாய்த்து கொண்டதுமே, அவள் விலக என்னாது அதை அவன் ஒரு சந்தோஷ அதிர்வோடு தான் உணர்ந்துகொள்ள, பைரவிக்கும் தன்னை பிடித்து இருக்கிறது என்று அவனுக்கு நன்கு புரிந்தது.
பைரவி போன்ற பெண்ணிற்கு, தன்னை பிடித்து இருக்கிறது என்பதே எத்தனை பெரியது என்றுதான் எண்ணினான்.
ஆனால் அந்த பெருமிதம் எல்லாம் ஒரே ஒரு நொடிதான். அவன் மார்பில் சாய்ந்து இருந்தவள், வெளியே செல்வியின் குரல் கேட்கவும், வேகமாய் நிமிர்ந்தவள், அதைவிட வேகமாய் தள்ளியும் அமர்ந்து இருந்தாள்.
செல்விக்காக என்று எண்ணி, சிவா மெதுவாய் எழுந்து நின்றுகொள்ள,
“என்ன பாப்பா?” என்று பதறி செல்வி வர,
“எங்க போன நீ? உன்னிய என்ன சொல்லிட்டு போனேன்..?” என்று சிவா திட்ட,
“இல்ல கண்ணு, வீட்ல கொஞ்சம் ஒதுங்க வச்சிட்டு…” எனும்போதே,
“ரொம்ப முக்கியம் போ.. போய் எதுன்னா ஜூஸ் போட்டு எடுத்து வா…” என்று விரட்ட,
“இந்தா…” என்று வேகமாய் ஓடினார் செல்வி.
அவன் இந்த அளவிற்கு அளவாய் திட்டினானே என்ற நிம்மதி. தேன்மொழி உள்ளே எட்டிப் பார்த்தவள், ஹாலில் சென்று எழுத அமர்ந்துவிட,
“பை.. பைரவி…” என்று சிறு ஆவல் கலந்த தொனியில் அவன் அழைக்க,
“உன்னோட சாரி, தேங்க்ஸ் எல்லாம் நீயே வச்சிக்கோ…” என்றவன், திரும்பி நடக்கப் போக,
ஐயோ போகிறானே என்று இருந்தது அவளுக்கு. அதுவும் அவனின் குரல், கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிக்காட்ட,
“சிவா…” என்று அழைத்தாள்.
“வேற ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்ட தானே. விடு…” என்றவன், அப்படியே நடந்துவிட்டான்.
அவனது தொனியில் அப்பட்டமாய் ஒரு ஏமாற்றம் தெரிய, பைரவியோ செய்வது என்று அறியாது அமர்ந்திருந்தாள்.
சிவாவோ, அன்றிலிருந்து, அனைவரின் மீதும் காரணமில்லாமல் தான் கோபித்துக்கொண்டு இருக்க, இப்போது ரஞ்சிதம் பேசிய பேச்சு வேறு, அவனை இன்னும் உச்சாணிக் கொம்பில் நிறுத்தியது.
“யம்மோவ்.. வாய மூடு…”என்றான் அதட்டலாய்.
“நான் ஏன்டா வாய மூடனும்.. அப்படியே நான் மூடினாலும் ஊர் வாய் மூடுமா என்ன? வீட்ல வயசு பொண்ணு ஒன்னு இருக்கு. இனிமே நீ அந்த வீட்டுக்கு போனது என் காதுல விழுந்தா அவ்வளோதான்..” என,
“என்ன பண்ணுவ?!” என்றான் எழுந்து நின்று.
மகன் என்றும் தன்னிடம் இப்படி பேசியதில்லை. அவன் எழுந்து நின்ற விதமும், பார்த்த பார்வையும், பேசிய விதமும், ரஞ்சிதம் மனதினில் ஒரு சஞ்சலத்தைக் கொடுக்க, அந்த நேரம் பார்த்து ஷாலினியும் வீட்டினில் இருக்க,
“சிவா…” என்றார் ஆற்றாமையாய்.
“நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்லை. அப்படியே ஏதாவது இருந்ததுன்னா, நான் ஊர் பேசுற மாதிரி எல்லாம் நடந்துக்கமாட்டேன். என்ன நினைச்ச நீ என்னிய? பொண்ணு பின்னாடி சுத்துறவன்னா..? அப்படியிருந்தா எப்பவோ எனக்கு கல்யாணம் ஆகி குடும்பம்னு இருந்திருக்கும். இப்படி இருந்திருக்க மாட்டேன்…” என்றவன் நடக்கப் பார்க்க,
‘அய்யய்யோ கெட்டது குடி…’ என்று எண்ணிய ரஞ்சிதம்.
“நில்லு நில்லு…” என்று மகன் கை பிடித்து நிறுத்தியவர்,
“இத்தினி நேரம் இருந்துட்டு நாஸ்டா துண்ணாம போற நீ…” என,
“அது ஒண்ணுதான் எனக்கு இங்க குறை…” என்றான் கையை உதறி.
“நா… நான் எதோ கோவத்துல பேசிட்டேன்…” என்றவர் “ஏய் ஷாலினி அண்ணனுக்கு தட்டு வை. தோசை ஊத்து…” என்று மகளை விரட்ட, அம்மாவின் மாய்மாலம் எல்லாம் அவனுக்கு புரியாதா என்ன?!
இருந்தும் அவர் பேசியது அவனுக்கு பொறுக்கவில்லை. யாரால் ஏற்க முடியும்.
“ஒன்னும் வேணாம்.. எப்பவும் போல செல்வியக்கா கடை இருக்கு…” என்று கிளம்ப,
“டேய் டேய்.. சிவா.. இருடா…” என்று தடுத்தார் ரஞ்சிதம்.
“என்ன வேணும்?!”
“நான்தான் கோவத்துல பேசிட்டேன்னு சொல்றேன்ல…” என்று அம்மா கை பிசைந்து நிற்க, சொக்கனும் இதனை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.
மகன் முகத்தை ஒரு பார்வை பார்க்க, அவனும் அப்பாவைப் பார்த்தவன், அடுத்து எதுவும் பேசாமல் உண்ண அமர, ரஞ்சிதமோ மகன் அமைதியாய் உண்ண அமர்ந்திருப்பது பார்த்து “இந்த ஏரியால என் மவனில்லைன்னா என்ன நடக்கும்? ஆனா பாரு நமக்குத்தான் ஒருவேலையும் ஆக மாட்டேங்குது. இன்னுமா ஆள் கிடைக்கல?!” என்றார் மகனிடம்.
அவனோ பார்வையை மட்டும் நிமிர்த்தி “இப்போ நான் சாப்பிடனுமா வேணாமா?” என, அவ்வளவுதான் ரஞ்சிதம் கப்சிப்பென்று ஆகிட, சிவா எதுவும் பேசாமல், உண்டுவிட்டு கிளம்பி வந்துவிட்டான்.
மனது முழுக்க பைரவியின் வாசம் தான்.
எங்கிருந்தோ வந்து, தன்னை இப்படி ஆட்டிப்படைக்கிறாள் என்று அவள் மீது கோபமே வந்தது. தினமும் அவள் பாடலை பார்க்காது, அவளது குரலை கேட்காது உறங்க முடிவதில்லை.
பித்தாகித்தான் கொண்டு இருந்தான் கொஞ்சம் கொஞ்சமாய்.
என்ன இதெல்லாம் வெளிக்காட்டாமல் இருப்பதுதான் மிகவும் கஷ்டமாய் போனது.
அங்கே பைரவியின் வீட்டினிலோ ஜானும், அவனின் தம்பி தாமஸ் வந்திருந்தனர். ஜானுக்கு இன்னுமே கூட பைரவி மீது கோபம் தான். உடல்நிலை சரியில்லாது, மருத்துவமனையில் வேறு இருந்து வந்திருக்கிறாள். தங்களிடம் ஒருவார்த்தை சொல்லவில்லை என்று சரியான கோபம்.
ஊருக்கு வந்ததுமே வந்து ஆடித் தீர்த்துவிட்டான்.
அவன் போதாது என்று தேனிலவு சென்று வந்திருந்த அகிலா வேறு. அவனோடுதான் வந்திருந்தாள்.
“அதென்ன உனக்கு அப்படியொரு திமிர் பைரவி. நாங்க யாரும் வேணாம்னு நினைச்சிட்டியா? ஒருவார்த்தை சொல்றதுக்கு என்ன?” என்று சத்தம் போட,
“சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை..” என்றாள் பைரவி இறுகிய குரலில்.
“பின்ன ஏன் சொல்லலை. எல்லாரும் அவங்கவங்க வேலையில இருந்தோம் தான். ஆனா உனக்கு ஒண்ணுன்னா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வர மாட்டோமா என்ன? அவ்வளோ ஏன் தினேஷ் இங்கதானே இருக்கான். அவன்கிட்டயாவது சொல்லிருக்கலாம் தானே. சந்தோஷி அம்மாக்கு சொல்லிருக்கலாம்..” என்று அகிலா பேச,
“ப்ளீஸ் அகில்.. இந்த பேச்சு விடு.. நீ சொல்லு உன்னோட ஹனிமூன் எப்படி போச்சு?” என்று பைரவி பேச்சினை மாற்ற முயற்சிக்க,
“இங்க பார் சும்மா பேச்சை மாத்தாத. எல்லாம் நானும் கேள்வி பட்டேன். யார் யாரை எங்க வைக்கனுமோ அங்கதான் வைக்கணும். நீ மனசு ரொம்ப குழப்பத்துல இருக்கன்னு நினைக்கிறேன். கிளம்பு முதல்ல.. எங்களோட வந்து இரு..” என்று அழைக்க,
“உன்னோடயா?!” என்றாள் பைரவி சின்ன சிரிப்போடு.
அகிலா தனக்கு திருமணம் ஆனதை அதன்பின்னே தான் உணர்ந்து “சரி சரி… வந்து சந்தோஷி வீட்ல இருக்கலாம் தானே. அது உனக்கும் பழக்கம் தானே…” என,
அத்தனை நேரம் அமைதியாய் இருந்த ஜான் இப்போது வாய் திறந்தான் “என்ன நீயா மேனேஜ் பண்ணிப்ப நீ?” என்று.
“ஜான் உனக்கு இதெல்லாம் புரியாது. ஸோ விடு..” என்று தன்மையாகவே சொல்ல,
“என்ன விடனும்? இல்ல என்ன விடுன்னு சொல்ற நீ. இப்போல்லாம் வர வர நீ சரியில்லை பைரவி. ஒருவார்த்தை நாங்க சொல்ற பேச்சை நீ கேட்கிறது இல்லை. எப்போ பார் உன்னோட இஷ்டத்துக்குத்தான் ஏதாவது பண்ற..” என்று ஜான் கோபமாய் பேச, பைரவிக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததுவோ தெரியவில்லை.
“ஏன் நான் தனியா இருக்கேன் அப்படிங்கிறதுக்காங்க, இது வீடு இல்லையா.. குடும்பம் இல்லையா, எப்பவும் நீங்க எல்லாரும் சொல்றதை மட்டும்தான் செய்யனுமா நான். எனக்குன்னு புத்தி, மனசுன்னு எதுவும் இல்லையா.. எனக்கான விருப்பம்னு எதுவுமே இல்லையா என்ன?” என்று பதிலுக்கு பேசிவிட்டாள் பைரவி.
அவளே நான்கைந்து நாட்களாய் பெரும் மன சஞ்சலத்தில் இருக்க, இதில் இவர்கள் வேறு வந்து இப்படி பேசவும், தன் மீது எழும் எரிச்சலை யார் மீது கொட்டுவது என்று தெரியாமல், நண்பர்கள் மீதே கொட்ட, ஜானும் அகிலாவும், அதிர்ந்து போய் பார்த்தனர்.
‘பையு…’ என்று இருவருமே, நீயா இப்படி பேசியது ஒருவித வலியோடு பார்க்க,
‘ஐயோ…!’ என்று தலையில் அடித்துக்கொண்டவள்,
“சாரி.. சாரி.. சாரி.. ஐம் ரியலி சாரி…” என்று அவர்கள் இருவரின் கரத்தையும் பற்றிக்கொண்டு அமரச் சொல்ல,
“பேசாத விடு…” என்ற ஜான், அகிலாவிடம் ”வா அகில் கிளம்பலாம்…” என,
“ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சலாய்.
“என்ன ப்ளீஸ்…?! ”
“எனக்கு உடம்பு முடியாம போகும்னு நான் நினைக்கவே இல்லை. எனக்கு அதுல இருந்தே ஒரு மாதிரி ஸ்ட்ரெஸா இருக்கு. நான் பேசினது தப்புதான் சாரி…” என்று பைரவி நிஜமாகவே வருந்திக் கேட்க, அவ்வளவுதான் அகிலா கண்கள் கலங்கிவிட்டாள்.
அவளது இயல்பே இதுதான். கோபமா கத்துவாள், இல்லையா உறுகிடுவாள்.
“அச்சோ.. இதுக்கெல்லாம் இவ்வளோ பீல் பண்ணுவியா நீ.. உடம்பு முடியலன்னா அப்படித்தான்.. ப்ரீயா விடு.. நம்ம இதுபோல எத்தனை சண்டை போட்டிருக்க மாட்டோம்…” என்று பைரவியை சமாதானம் செய்ய, ஜான் பேசவே இல்லை.
அவனுக்கு என்னவோ சிவா பக்கம் பைரவியின் மனது சாய்கிறதோ என்ற சந்தேகம் வலுவாக
“இங்க பார் பையு. நீ என்ன நினைச்சு இதெல்லாம் செய்றன்னு புரியலை. ஆனா ஒன்னு உனக்கு இப்போதான் நல்ல டைம்.. உன்னோட பீல்ட்ல சரியான வளர்ச்சிப் பாதைல போயிட்டு இருக்க. தடுமாறிடாத.. அப்புறம் தேவையில்லாத ஏதாவது பிரச்சனையில சிக்கினா, வெளிவர்றது ரொம்பவே சிரமம்..” என்று ஜான் சொல்ல, பைரவி பதிலே சொல்லவில்லை.
அன்று சென்றவன் தான் இன்று வந்திருக்கிறான்.
அதுவும் கூட அவளுக்காகத்தான்..
ஒரு பெரிய இசையமைப்பாளரிடம் இருந்து அவளுக்கான அழைப்பு வந்திருந்தது. இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு.. அவளின் கனவும் அது கூட.
ஜான் தானே அவளது தொழில் சம்பந்தப்பட்ட விசயங்களை எல்லாம் பார்ப்பது. அதனால் வந்திருந்தான். உடன் அவன் தம்பி தாமஸ்.
“வாடா சின்னவனே எப்படி இருக்க நீ?” என,
“நல்லாருக்கேன் க்கா.. பார்த்து ரொம்ப நாளாச்சு.. அதான் வந்தேன்..” என்று அவனும் பேச,
செல்வி வந்து நிற்க “அக்கா.. எல்லாருக்கும் சேர்த்து டீ..” என,
“உன்னவிட டீ யாரு பாப்பா நல்லா போடுவா?” என்றபடி அவர் உள்ளே செல்ல,
“சொல்டா.. எப்படி போகுது?” என்றாள் தாமஸிடம்.
“எங்கக்கா.. சிவில் எஞ்ஜினியர் படிச்சிட்டு, இன்னும் ஒரு ப்ராஜக்ட் கூட கிடைக்கல. எத்தன நாளைக்குத்தான் அசிஸ்டென்ட்டாவே இருக்கிறது…” என்று வருந்த, சட்டென்று பைரவிக்கு ஒரு யோசனை.
அன்றைய தினம் காலையில் கூட செல்வி சொன்னாரே,
“பாவம் சிவா.. இன்னும் வூடு கட்ட ஆள் சரியா அமையல…” என்று.
“தாமஸ் நான் ஒருத்தரை இன்ட்ரோ பண்றேன். அவர்கிட்ட ஒரு ப்ராஜக்ட் இருக்கு…” என்று பைரவி சொல்ல,
“யாருக்கா?! கண்டிப்பா நல்லா பண்ணுவேன்…” என்று தாமஸ் நம்பிக்கையாய் சொல்ல,
ஜானோ அவளை முறைக்க “என்ன ஜான் நீ, நான்தான் சரின்னு சொல்லிட்டேனே. எப்போ ரிக்கார்டிங் போகணும்னு சொல்லு போலாம். இப்போ ஏன் முறைக்கிற நீ..?” என,
“நீ ரொம்பவே மாறிட்ட…” என்றான்.
“இன்னும் நான் பாப்பா இல்லை.. சரியா…” என்று பழுப்பு காட்டியவள், செல்வி வந்து டீ கொடுக்கவும்,
“உங்க சிவா தம்பி எங்க இருக்கார்னு கேட்டு சொல்லுங்க செல்விம்மா…” என்றாள்.
அவளுக்கு என்னவோ அவனைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. அவனைக் காணாது இருக்க முடியும் போலவும் தோன்றவில்லை. அன்று அவன் மீது சாய்கையில், அவனது பிரத்யேக வாசம், இன்னும் கூட அவள் நாசி உணர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
அடிக்கடி அப்படியொரு அணைப்பு வேண்டும் போலவும் இருக்க, முதலில் மனதை திசைதிருப்ப முயல, பின்னரோ எனக்குப் பிடித்து இருக்கிறது, இதிலென்ன தவறு என்று முடிவில் வந்து நின்றது அவளது ஆசை கொண்ட உள்ளம்.
இது சாத்தியமா என்ற கேள்விக்கு, அவனுக்கென்ன குறை என்று அதுவே பதிலும் சொல்லிக்கொண்டது.
நீயெங்கே, அவனெங்கே என்றும் புத்தி எட்டிப் பார்க்க, உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால், மற்ற பேதங்கள் எல்லாம் காணாது போய்விடும் என்று உறுதியாய் மொழிந்துகொண்டாள்.
‘ம்ம்ஹூம் இது சரிபடாது. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எனக்கு வேணாம்..’ என்று இருந்தவளுக்கு, எந்த பாடல் வரிகள் பாடினாலும் அவனது எண்ணமே.
‘முதல்ல அவன்கிட்ட பேசிட்டுத்தான் மறுவேலை..’ என்று யோசித்து அலைபேசியில் பேச எண்ணியவளுக்கு அன்று கடற்கரையில் இருவரும் அமர்ந்து பேசியது நினைவு வர, மீண்டும் ஆசைக்கொண்டது உள்ளம்.
அவனது அருகாமை, அக்கறை, அன்பு, ஆளுமை எல்லாம்.. எல்லாமே முழுதாய் அவளுக்கே சொந்தமாகவேண்டும் போலிருக்க,
‘காதல் இதுதானா… காதல் இதுதானா…’ என்று தானாகவே ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள்.
இப்போது தாமஸ் விஷயம் வேறு சேர்ந்துகொண்டதால், அவனை வீட்டிற்கு அழைத்து பேசுவது முறையல்ல, தானே நேரில் செல்வது தான் முறை என்று கேட்டாள். அதுவும் தாண்டி, அவனுக்கு பணம் வேறு கொடுக்கவேண்டுமே.
சிவாவின் பெயரைக் கேட்டதும், ஜானோ “பைரவி…” என்று எதையோ பேசவர,
“இங்க பாரு. தாமஸ்காக நான் ஒரு முயற்சி பண்றேன். அவ்வளோதான் இதுல நீ ஆர்கியு பண்ண எதுவுமில்லை.. ஏன் எனக்கு அந்த ரைட்ஸ் இல்லையா?” என, ஜானினால், தாமஸ் முன்னர் எதுவும் பேசவும் முடியவில்லை.
பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, செல்வி வந்து “சிவா கடைல தான் இருக்கானாம் பாப்பா…” என,
“தாமஸ் வா போலாம்…” என்று கிளம்பிவிட்டாள்.
அவளுக்கு, அன்று அவனை பார்த்தே ஆகவேண்டும் போலிருந்தது. அதென்ன அப்படியொரு கோபம். திரும்ப வந்து பார்க்கக் கூட முடியாமல் போகும் கோபம். பார்க்கலாம், நேரில் சென்று நின்றாள் என்ன செய்வான் என்று பார்க்கலாம் என்ற ஒரு வீம்பு பிறக்க, கிளம்பிவிட்டாள்.
செல்வி கூட “நான்வேணா கூட வரட்டுமா?” என,
“வேணாம் செல்விம்மா நானே பார்த்துக்கிறேன்…” என்றவள், தாமஸ் உடன் கிளம்ப, ஜான் “நான் போறேன்…” என்று கிளம்பியே விட்டான்.
“நீயும் வா ண்ணா…” என்று தாமஸ் அழைக்க,
“நீ போயிட்டு வா…” என்று தோளில் தட்டியவன், கிளம்பிவிட,
“அவன் வரமாட்டான்டா. அவனுக்கும் சிவாக்கும் சண்டை. வரமாட்டான்…” என்று சொல்லிக்கொண்டே பைரவி நடக்க, அவள் சென்று சேர்வதற்குள், செல்வி அழைத்து பைரவி வரும் விபரம் சொல்ல, சிவாவிற்குத்தான் புதிதாய் ஒரு படபடப்பு.
இந்த உணர்வு அவனுக்குப் புதிது.
ஒருமாதிரி உற்சாகமாகவும் இருந்தது, ஒருப்பக்கம் ‘என்னவாம்?! என்ன திடீரென்று..’ என்று சிறு சுனக்களும் இருக்க, மணி பேசியதோ, சிண்டு பேசியதோ எதுவுமே அவனுக்கு புத்தியில் ஏறவில்லை.
வெறும் பனியன் மட்டுமே அணிந்து ஒரு காருக்கு அடியில் படுத்து வேலை செய்துகொண்டு இருந்தவன், வேகமாய் சட்டையை மாட்டி, தன்னை சீர் செய்துகொண்டு அமர, மணியோ “என்ன மாப்ள?” என,
“ஒண்ணுமில்லியே…” என்றான்.
“என்ன பொண்ணு வீட்ல இருந்து யாரும் வர்றாங்களா?” என்று கேட்க, அதற்குள் பைரவி வந்துவிட்டாள்.
வந்தவள் உள்ளே வராமல் “உள்ள வரலாமா?” என்று குரல் மட்டும் கொடுக்க, அவளைக் கண்டதுமே, மணிக்கும் சிண்டுவிற்கும் உற்சாகமோ உற்சாகம்.
சிவா வெகுபாடு பட்டுப்போனான் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க.
‘டேய் கடைசியில அவளே வந்துட்டா டா.. உன்னைத் தேடி.. உன்னைப் பார்க்க…’ என்று மனது சந்தோஷ கூச்சலிட, அப்போது தான் பார்ப்பது போல், உள்ளே வா என்பது தலையை மட்டும் ஆட்ட,
அதற்குள் மணியோ “பைரவி வா வா..” என்று அழைத்தவன், புதிதாய் ஒருவன் உடன் வரவும் கேள்வியாய் பார்க்க, சிண்டு அதற்குள் இரண்டு இருக்கைகள் எடுத்துப் போட்டுவிட, பைரவியின் பார்வை மொத்தமும் சிவா மீது தான் இருந்தது.
அதிலும் அவள் பார்வை பேசிய பாஷை இருக்கிறதே, அவனை ஆளை விழுங்கும் பார்வை தான் பார்த்து வைத்தாள்.