அத்தியாயம் 7
நீ விட்டுச் சென்ற
நினைவுகள் மட்டுமே
என்னை தினமும்
வாழச் செய்கிறது!!!
நிர்மல் காலேஜ் சென்றதும் ஆஷா மட்டும் லீவுக்கு வீட்டுக்கு வருவாள். அப்போது நைசாக மீண்டும் மனோஜைப் பார்க்க செல்வாள் ஆஷா. அவள் போவது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாள். சில நேரம் புஷ்பாவிடம் “கடைக்கு போறேன்”, என்று சொல்லிக் கொண்டு போவது உண்டு.
மகள் வருடத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வருவதால் புஷ்பாவும் அதிகம் கண்டிப்பை காட்ட வில்லை. ஆனாலும் ஆஷாவை நினைத்து புஷ்பாவுக்கு சிறிது பயம் இருந்து கொண்டே தான் இருந்தது. 
புஷ்பா பயமும் உண்மை தான். வயது ஏற ஏற மனோஜ் மீது இருந்த உணர்வுக்கு காதல் என்று பெயர் வைத்துக் கொண்டாள் ஆஷா. எப்போதுமே அவனை நினைக்காமல் இருக்க மாட்டாள். 
ஊட்டி சென்ற பின்னர் முதல் முறை அவனைக் காண வந்த போது அவளைக் கண்டு அதிர்ந்தான் மனோஜ். எப்போதும் யூனிபார்ம், இல்லையென்றால் ஸ்போர்ட்ஸ் டிரஸில் அவளை பார்த்திருக்கிறான். இப்போதோ பாட்டுப்பாவாடை போட்டுக் கொண்டு வந்தவளை ஒரு நொடி ஆவலாக பார்த்தான். 
அடுத்த நொடி தன்னுடைய உடையை பார்த்துக் கொண்டவனுக்கு இருவருக்கும் இடையே இருந்த வேற்றுமை நன்கு புரிந்தது. உடனே தன்னுடைய தந்தையிடம் எதுவோ சொல்லி விட்டு ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். 
அவளை கண்டு கொள்ளாமல் ஒதுங்கிச் செல்பவனைக் கண்டு திகைத்துப் போனாள் ஆஷா. தன்னை கண்டு கொள்ளாமல் அவன் சென்ற போது மீண்டும் அவனை தேட தான் சொல்லியது அவள் மனது. 
அவன் ஒதுக்கத்தை கண்டு வருந்தியவள் மற்றொரு நாள் தன்னுடைய சைக்கிளை வேண்டும் என்றே பஞ்சர் ஆக்கி விட்டு கடைக்கு சென்றாள். அவன் தான் சரி செய்து கொடுத்தான். அடுத்த சில முறை அவள் இதே யுக்தியை பின்பற்றினாள். 
சில நேரம் அவள் கடைக்கு செல்லும் போது அவர் தந்தையும் இருப்பார். அவனோ அவளை கண்டு கொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்துவான். அவளோ அவனைப் பார்த்த படியே இருப்பாள். 
அவளைக் கண்டதும் சில நேரம் அவன் முகமும் மலரும். ஆனால் அடுத்த நொடி அதை அவளுக்கு காட்டாமல் மறைத்துக் கொள்வான். 
“இவனை நினைச்சு நான் ஒவ்வொரு நாளும் உருகிட்டு இருக்கேன். இவன் என்னடான்னா என்னைக் கண்டுக்கவே இல்லையே”, என்று எண்ணிக் கொண்டு அவனிடம் பேச முயற்சி செய்வாள். பலன் தான் பூஜ்ஜியமாக இருக்கும். சில நேரம் நிர்மல் பற்றி அவளுடைய படிப்பு பற்றி அவனே அவளிடம் பேசுவான். அதுவும் ஒரு லிமிட்டோட தான். அவள் பேச்சை வளர்க்க நினைப்பாள். அவன் நிறுத்திக் கொள்வான். 
ஆஷா பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் அவனை ஒரு நாள் பார்க்கச் சென்றாள். அப்போதும் அவன் சாதாரணமாகவே அவளிடம் பேச கடுப்பானவள் “இங்க பாருங்க பாஸ், எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. இப்ப நேத்து இல்லை, உங்களுக்கு என்னோட பேர் தெரியலைன்னு சொன்னதுல இருந்து எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனா அது காதலான்னு இவ்வளவு நாள் யோசிக்கலை. என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் அதை லவ்னு தான் சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க?”, என்று அவனிடம் நேரடியாகவே சொல்லி விட்டாள்.  
அவள் திடீரென்று சொன்னது அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அவள் பேச்சு காதில் விழாதது போல “ஏய் வாலு, அது என்ன பாஸ்? ஊட்டில எல்லாரும் இப்படி தான் பேசுவாங்களா?”, என்று சிரிப்புடன் கேட்டான். 
“இந்த பேச்சை மாத்துற வேலை எல்லாம் வேண்டாம். எனக்கு ஒரு முடிவு சொல்லுங்க”
“இங்க பாரு ஆஷா. நிர்மல் என்னோட ஃபிரண்ட். அவன் தங்கை நீ. வேற எதுவும் நமக்குள்ள இல்லை. நான் அபப்டி எதுவும் உன்னைப் பத்தி யோசிக்கலை”, என்று தெளிவாகச் சொன்னான் மனோஜ். 
“மனோஜ் நீங்க உண்மைலே தான் சொல்றீங்களா? நான் உங்களையே தான் நினைச்சிட்டு இருக்கேன்”
“நானா உன்னை நினைக்க சொன்னேன்? ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாரு. இனி என்னை பாக்க வராத ஆஷா. எங்க அப்பாவே சந்தேகப் பட்டு யார் இந்த பிள்ளை? அடிக்கடி வருதுன்னு கேட்டுட்டார். இனி தேவையில்லாம எனக்கு பிரச்சனை உண்டாக்குற வேலை இனி வச்சிக்காத”
“நீங்க சொல்றது கஷ்டமா இருக்கு மனோஜ். எனக்கு உங்களை பாக்கணும் போலவே இருக்கும் தெரியுமா?”
“அதெல்லாம் கொஞ்ச நாள் பாக்காம இருந்தா மனசுல இருந்து மறைஞ்சு போயிரும். கிளம்பு போ”
“நிராகரிப்போட வலி எப்படி இருக்கும்னு நீங்க அனுபவிச்சது இல்லைல்ல? நீங்க அனுபவிக்கும் போது உங்களுக்கு ஒரு நாள் அது புரியும்”, என்று சொன்னவள் அவனைப் பார்த்த படியே கிளம்பிச் சென்றாள். 
ஆனாலும் அடுத்த நாளே அவனை காண வந்தவள் “என்ன பாஸ் செய்றீங்க? ஆயில் மாத்தூறீங்களா?”, என்று சாதாரணமாகவே பேச்சு கொடுத்தாள். 
“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? கிளம்பு போ, இங்க இருந்து”, என்று எரிந்து விழுந்தான் மனோஜ். 
“என்னோட அன்பு உங்களுக்கு புரியவே இல்லைல்ல? நானா தேடி வந்தா உங்களுக்கு பெருசா தெரியலையா? இனி நான் உங்களைப் பாக்க வரவே மாட்டேன். ஆனா உங்களை நினைச்சிட்டே தான் இருப்பேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்றவள் பின் அவனைக் காண வரவே இல்லை. ஆனால் தூரத்தில் இருந்தே அவனைப் பார்ப்பாள். 
அதன் பின் அவளும் காலேஜ் சேர்ந்து விட்டாள். இவர்கள் இருக்கும் மதுரையில் தான் அவள் சேர்ந்திருக்கும் காலேஜ் இருந்தாலும் ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள். 
வீட்டில் இருந்தால் அவனை பார்க்க போக வேண்டும் போல் தோன்றும் என்பதால் தான் இந்த முடிவு.  
கடைசி வருடம் என்று தான் அவள் ஹாஸ்டலை விட்டு வீட்டுக்கு வந்தது. ஆனால் முதல் நாளே அவனைக் காண வேண்டும் போல் இருக்க அவன் முன்னே போய் நின்று விட்டாள். 
அவளைப் பார்த்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால் ஆவலாகவே அவன் அவளிடம் பேசினான். அவளுக்கும் குதூகலமாக இருந்தது. 
அன்று இரவே நிர்மலிடம் மனோஜை பார்த்ததை சொல்லி விட்டாள். தங்கை சொன்னதைக் பொறுமையாக கேட்டவன் “உனக்கு இது தேவையா ஆஷா? அவன் தான் விலகி போறானே?”, என்று கேட்டான். 
“என்னால அப்படி இருக்க முடியலை நிர்மல். சரி என்னை விடு. அவங்க நம்பர் தரேன். நீ பேசுறியா?”
“இத்தனை வருஷம் கழிச்சு பேசும் போது போனில் வேண்டாம் ஆஷா. நான் கொஞ்ச நாள்ல அங்க வருவேன். அப்ப நேர்ல பாத்துக்குறேன். நீ கொஞ்சம் நான் சொன்னதை யோசி. நீ அவனையே நினைச்சிட்டு இருந்தாலும் ஒரு யூசும் இல்லை. அம்மா அப்பா இன்னும் அப்படியே தான் இருக்காங்க. ஸ்டேட்டஸ் பாக்குறதுல இன்னும் மோசமா ஆகிட்டாங்கன்னு தான் தோணுது. அவன் வேற படிக்கவும் செய்யலை. பொறுமையா யோசிமா”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். 
அவள் எவ்வளவு யோசித்தாலும் அவளால் அவனை மறக்க தான் முடிந்ததில்லை. சில நேரம் அவளை நினைத்து அவளுக்கே எரிச்சலாக இருக்கும். எப்போதுமே அவனை அவளால் மறக்க முடியாது என்ற உண்மை அவளுக்கு மட்டும் தான் தெரியும். 
விலகி போ என்று சொன்னவனை இன்னும் நெருங்க தான் அவளுக்கு தோன்றும். வெட்கத்தை விட்டு அவனை தேடிச்
செல்வது, அவனுக்காக காத்திருப்பது தான் அவளுடைய வேலையே. சில நேரம் அவளை நினைத்து அவளுக்கு அழுகை வரும். ஆனால் எதை நினைத்து அழுகிறோம் என்று தெரியாமலே அழுவாள். 
அவளுடைய ஒருதலைக் காதலை நினைத்தா? இல்லை வாழ்க்கையில் தோற்று விட்டோம் என்று  நினைத்தா? என்று அவளுக்கே தெரியாது. 
அவளுடைய அண்ணன் மட்டும் இல்லை என்றால் மனதளவில் மிகவும் ஒடுங்கியிருப்பாள். அனைத்தையும் நிர்மலிடம் சொல்லி தான் அழுவாள். 
நிர்மலும் வேண்டாம் டா என்று எவ்வளவோ சொல்லியும் அவளால் அவனை விட முடியவில்லை. 
எப்போதும் கண்ணீருடன் தன்னிடம் பேசும் தங்கையைக் காணும் போதெல்லாம் நிர்மலுக்கு தோன்றுவது “இவளுக்கு என்ன இல்லை? இவளுடைய மதிப்பு தெரிந்தும் வேண்டாம் என்பவனை நினைத்து இவ்வளவு வேதனை படணுமா?”, இது தான். 
அதே நேரம் தன்னுடைய நண்பனின் கட்டுப்பாடான மனதை நினைத்தும் ஆச்சர்யம் எழும். ஒரு பெண் தேடித் தேடி வந்தாலும் விலகிச் செல்லும் மனோஜை நினைத்து எப்போதுமே பெருமையாக தான் நிர்மல் எண்ணுவான். 
ஆஷாவுக்கு நிர்மல் எவ்வளவு புத்தி மதி சொன்னாலும் அவள் மனது மனோஜ் விட்டு வேறு எதையும் யோசிக்காது. அவளுடைய இதயச் சிறையில் அவளையே கேட்காமல் பதிந்து போன அவனை மறப்பது அவ்வளவு எளிதா என்ன?
இப்போது அவளிடம் இருப்பது வெறும் உடல் கூடு மட்டும் தான். அதற்கு உயிர் கொடுப்பவன் மனோஜ் மட்டுமே. 
மாதத்தில் ஒரு முறையாவது அவனைப் பார்ப்பாள். ஆனால் பேச முயற்சி செய்ய மாட்டாள். தூரத்தில் இருந்தே அவனை பார்ப்பது அவள் மனதுக்கு ஒரு அமைதியைக் கொடுக்கும். 
ஆனால் பார்க்கும் நொடி அவன் அருகே செல்ல அவள் மனது துடிக்கும். அதை அடக்கி வைப்பதற்குள் அவள் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டும். 
அவனை முழுதாக பார்த்து ரசித்து அவனுடைய உருவத்தை இதயச் சிறையில் பத்திரப் படுத்திக் கொள்வாள். 
சில நேரம் அவளை வார்த்தைகளால் வறுத்தெடுப்பாள் புஷ்பா. அவள் வார்த்தைகளால் அதிகம் காயப் படுவாள் ஆஷா. புஷ்பாவும் வேண்டும் என்றே சில நேரம் சொல்ல மாட்டாள். அவளையும் மீறி சில வார்த்தைகள் வந்து விடும். 
பழைய கதைகள் அனைத்தையும் யோசித்த படியே படுத்திருந்தவளின் கண்களில் மட்டும் கண்ணீர் வடிந்தது. 
“என்ன கண்ணகி, பாப்பா சாப்பிட்டாளா?”, என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள் புஷ்பா. 
“இல்லைங்க அம்மா, பாப்பா வேண்டாம்னு சொல்லிருச்சு. அப்ப ரூமுக்கு போனது இன்னும் வெளியவே வரலைங்கம்மா”, என்று கண்ணகி சொன்னதும் மகளை நினைத்து எரிச்சல் தான் வந்தது. 
“எவ்வளவோ திட்டியாச்சு, அடிச்சு பாத்தாச்சு, மிரட்டி பாத்தாச்சு. ஆனாலும் ஏதாவது பரி கொடுத்த மாதிரியே இருக்காளே. வயசு பொண்ணு மாதிரியா இருக்கா? எப்பவும் எங்கயாவது பாத்துக்கிட்டு எதையோ யோசிச்சிக்கிட்டு? என்ன பெண் இவள்? நான் தான் இவளை சரியா வளக்களையோ? ஒரு வேளை இன்னும் அந்த மெக்கானிக் பையனை தான் நினைச்சிட்டு இருப்பாளோ? அந்த பையன் மேல தப்பு இருந்தாலாவது அவனைக் கண்டிக்கலாம். அவன் மேலயும் எந்த தப்பும் இல்லை. இவளை என்ன தான் செய்யுறது? சீக்கிரம் படிப்பு முடிஞ்ச உடனே இவளுக்கு கல்யாணத்தை முடிச்சு வச்சிரனும்”, என்று எண்ணிக் கொண்டாள் புஷ்பா. 
தன்னுடைய நினைவுகளில் ஒருத்தி அனுதினமும் செத்துக் கொண்டிருக்க தனக்கு தேவையான பொருளை வாங்கிக் கொண்டு ஷெட்டுக்கு நுழைந்தான் மனோஜ். உள்ளே நுழைந்ததும் அங்கே எதுவோ கெட்ட வாடை வீசுவதாகவே அவனுக்கு பட்டது.
அவனையே பயத்துடன் பார்த்த படி நின்ற ராம் மற்றும் மூர்த்தியை பார்த்தான். அவர்கள் என்ன சொல்ல என்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
சில நொடியில் அது மதுவின் வாடை என்று மனோஜ்க்கு புரிந்து விட்டது. “யார் குடித்திருப்பது?”, என்று பார்த்தான். 
உள் அறையில் ஜெகன் தான் மது போதையில் புலம்பிக் கொண்டிருந்தான்.