அதில் திவ்யாவுக்கு அதிக வருத்தம். தன்னுடைய பொருள் எல்லாம் புதிதாக இருக்கிறது என்று சந்தோஷப் பட்டவள் அதை புழங்க வேண்டிய நிலை வந்துவிட்டதை அறிந்து வருந்தினாள். 
அவர்கள் கிளம்பிச் சென்றதும் சோகமாக அமர்ந்திருந்த நித்யாவை பார்த்தாள் திவ்யா. அந்த பார்வையில் “நீ எப்ப கிளம்ப போற?”, என்ற கேள்வி இருந்தது. 
அதில் கடுப்பான நித்யா இதற்கு மேல் இங்கேயே இருந்தால் மரியாதை கிடையாது என்று எண்ணி “என்னங்க, பாப்பாவை எழுப்புங்க. நாம ஊருக்கு போகலாம்”, என்றாள். 
“என்னக்கா, இந்நேரம் கிளம்புற? காலைல போக வேண்டியது தானே?”, என்று திலீபன் கேட்பான் என்று நித்யா எதிர்பார்க்க அவனோ “அக்கா கடைசி பஸ்க்கு இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு. நீங்க கிளம்புங்க. நான் பஸ் ஸ்டாண்ட் போறதுக்கு ஆட்டோ கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றான். 
அப்போது தான் அனைவரின் மேலும் அக்கறையாக இருக்கும் மனோஜ் நித்யாவுக்கு நினைவில் வந்தான். 
அவனை அவள் எப்படி பேசி இருந்தாலும் போகும் போது “இதை வச்சிக்கோ”, என்று சொல்லி சில ரூபாய் நோட்டுகளை வைப்பான். 
திலீபனையும் மனோஜையும் ஒப்பிட்டு பார்த்த படியே எல்லாம் எடுத்து வைத்துக் கிளம்பினாள் நித்யா. “இனி இந்த வீட்டுக்கு அடிக்கடி வார முடியாது”, என்று வெகுவாக சோர்ந்து போனாள். 
மனோஜ் காரை ஓட்டிக் கொண்டிருக்க காரில் அமர்ந்திருந்த மற்றவர்களும் அவரவர் எண்ணத்தில் இருக்க அங்கே மௌனமே ஆட்சி செய்தது. அந்த அமைதி எதுவோ செய்ததா, இல்லை அம்மா அப்பா ஆஷாவை பத்தி ஏதாவது கேட்டுய் விடுவார்களோ என்ற பயத்திலோ இனிமையான பாடல்களை ஒலிக்க விட்டான் மனோஜ். 
அதில் வந்த பாடல்கள், ஆஷாவின் நினைவை அதிகப் படுத்த வெகுவாக தடுமாறிப் போனான். அவன் அருகில் அமர்ந்திருந்த சிவானி தன்னுடைய அண்ணனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். 
அவன் மனம் புரிந்து அவளுக்கும் வலித்தது. அதே நேரம் “அண்ணா ஒரு தடவை என்னை மனோஜைப் பாக்க கூட்டிட்டு போயேன்”, என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஆஷா. 
நிர்மலோ திகைப்புடன் அமர்ந்திருந்தான். “என்ன பெண் இவள்?”, என்று தான் அவனுக்கு தோன்றி வைத்தது. அவளை கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையாக பைத்தியக்காரி பட்டம் கட்டி அனுப்பி வைத்தான் அவன். அதன் பின்னரும் அவனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறாளே என்று அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது. 
ஆனால் அவள் கண்களில் இருந்த கெஞ்சல் அவனையும் எதுவோ செய்தது. “புரிஞ்சிக்கோ ஆஷா. இவ்வளவு நடந்த அப்புறமும் நீ அவனை பாக்கணும்னு நினைக்கிறது எனக்கு எரிச்சலா இருக்கு. வேண்டாம் மா விட்டுரு”, என்று பொறுமையாகச் சொன்னான். 
ஒரு விரக்தி சிரிப்பை சிரித்தவள் “அப்படி அவனை விட முடிஞ்சா சூடு வாங்கினப்பவே விட்டுருப்பேண்ணா”, என்று சொன்னாள். 
“நீ பண்ணுறது பைத்தியகாரத் தனமா இருக்கு ஆஷா. அவன் தான் உன்னை ஒதுக்குறான்ல?”
“அவன் என்னை ஒதுக்க ஒதுக்க அவன் என் மனசுல உயர்ந்துட்டே தான் போறான் அண்ணா. சரி நான் ஒரு விஷயம் கேக்குறேன். பதில் சொல்லு. மனோஜ் நல்லவனா கெட்டவனா? அவனை உன் பிரண்டா பாக்காம ரோட்ல போறவனா நினைச்சு சொல்லு”
“அதெல்லாம் நல்லவன் தான். ஆனா அவனுக்கு உன்னைப் பிடிக்கலையே”
“அது உனக்கு தெரியுமா? கண்டிப்பா அவனுக்கு என்னைப் பிடிக்கும். அதை என்னால உணர முடியும் அண்ணா”
“அவன் உன்னை லூசுன்னு சொன்னான் டி”
“ஏன், நாளைக்கு உனக்கு ஒரு பொண்டாட்டி வந்து உன்னை லூசுன்னு சொன்னா நீ அவளை வேண்டாம்னு சொல்லிருவியா?”
“ஆஷா”
“ப்ச், அவங்க கிளம்புறதுக்குள்ள ஒரு தடவை அவனை பாக்கணும் பிளீஸ்”
நீ திருந்தவே மாட்டல்ல? சரி இப்ப என்ன காரணம் சொல்லிட்டு வெளிய போக முடியும்? போராடி உன்னோட கல்யாணத்தை நிறுத்திருக்கேன் டி. அம்மா அப்பா என்ன சொன்னாங்களோ தெரியலை. ஜெயா வேற எனக்கு போன் மேல போன் போட்டுட்டு இருக்கான். இப்ப போல நான் உன்னை வெளிய கூட்டிட்டு போகனும்னா அம்மா அப்பா எனக்கு டின் கட்டுவாங்க”
“பிளீஸ் அண்ணா, என்னை கூட்டிட்டு போ. ஒரே ஒரு தடவை”
“ஒரே ஒரு தங்கச்சியை வச்சிக்கிட்டு நான் எப்பவும் அவஸ்த்தை பட்டிட்டே இருக்கேனே கடவுளே. சரி வந்து தொலை. உன்னோட மனசை மாத்த பக்கத்துல இருக்குற பார்க் வரைக்கும் கூட்டிட்டு போறேன்னு சொல்றேன். என்ன சொல்வாங்கன்னு தெரியலை”, என்று புலம்பிக் கொண்டே வெளியே வந்தான். 
அண்ணனும் தங்கையும் கண் முன் வந்து நின்றதும் புஷ்பாவுக்கு திக் என்று இருந்தது. ஜெயா வீட்டில் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி சமாளித்ததில் அவளுக்கு நாக்கு தள்ளி விட்டது. 
“ரெண்டு பிள்ளைகளை பெத்து வச்சிட்டு இவ்வளவு வருஷமா அல்லாடுறனே. இப்ப என்ன சொல்ல போறாங்களோ?”, என்று அவர்களை பார்த்தாள். முத்துவேலும் இருவரைக் கண்டு புருவம் உயர்த்தினார். 
“என்ன ஆச்சு நிர்மல்? ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டீங்க?”, என்று கேட்டார் முத்துவேல். 
“பக்கத்துல இருக்குற பார்க் வரைக்கும் போயிட்டு வரோம் பா. ஆஷா கிட்ட கொஞ்ச நேரம் பேசணும்”
“ஏன், அதை வீட்டு தோட்டத்துல வச்சு பேச முடியாதா? இல்லை மொட்டை மாடில வச்சு பேச முடியாதா?”, என்று கேட்டாள் புஷ்பா. 
“புஷ்பா, கொஞ்சம் சும்மா இரு. நிர்மல் நீ பாப்பாவை கூட்டிட்டு போ. சீக்கிரம் வந்துருங்க. நான் சென்னைல பாப்பா தங்குறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல சென்னை கிளம்பலாம். இப்ப போயிட்டு சீக்கிரம் வாங்க”, என்று அனுப்பி வைத்தார் முத்துவேல். 
இருவரும் கிளம்பி வெளிய வந்ததும் நிர்மல் அவன் வண்டியை எடுக்க ஆஷாவும் அவளுடைய வண்டியை எடுத்தாள். 
“எதுக்கு ஆஷா உன் வண்டி? என்னோடது இருக்கே?”
“ஒரு காரணமா தான் அண்ணா. நீ வா”, என்று சொல்லி அவள் வண்டியை எடுத்தாள். அவனும் அவன் வண்டியில் கிளம்பினான். “என்ன செய்கிறேன் நான்? என்னோட தங்கையை அவளோட காதலனைப் பாக்க கூட்டிட்டு போறேன்னா நான் எல்லாம் ஒரு நல்ல அண்ணனா?”, என்று அவன் மனசாட்சியே அவனைக் குத்தியது. 
ஆனால் அவனுக்கு என்ன செய்ய என்று தான் தெரியவில்லை. “எங்களைப் பாத்ததும் இந்த மனோஜ் வேற என்ன சொல்ல போறான்னு தெரியலை. மானம் ஈனம்ன்னு எல்லாம் இவளை நம்பி அவன் கிட்ட பேசிட்டு வந்தேன். இவ இப்படி மாறுவான்னு நான் கனவுல கூட நினைக்கலையே? காதல்னா மானம் ரோஷம் கூட பாக்காது போல? இந்த கர்மம் பிடிச்ச காதலை செய்யவே கூடாதுப்பா”, என்று எண்ணிக் கொண்டே தான் சென்றான். 
அவனின் நல்ல நேரம் மனோஜ் அங்கு இல்லை. இவர்களை இந்நேரம் எதிர் பார்க்காத ஜெகன் “வாங்க அண்ணி, என்றான். 
“இனி நான் உனக்கு அண்ணி இல்லை ஜெகா. அக்கான்னு கூப்பிடு”, என்றாள் ஆஷா. அதில் நிர்மல் ஆச்சர்யமாக அவளைப் பாக்க ஜெகன் குழப்பமாக அவளைப் பார்த்தான். 
“உண்மையை தான் சொல்றேன் ஜெகா. உங்க அண்ணன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு. அதனால இனி அண்ணி எல்லாம் வேண்டாம். இனி உங்க அண்ணன் யாரோ? நான் யாரோ?”, என்று ஆஷா சொன்னதும் “ஆஷா திருந்திட்டாளா? என் தங்கச்சிக்கு மானம் ரோஷம் எல்லாம் இருக்குன்னு நிரூபிச்சிட்டாளா? அதைச் சொல்லத் தான் இங்க வந்துருப்பாளோ? நான் தான் தப்பா நினைச்சிட்டேனா?”, என்று எண்ணினான் நிர்மல். 
“இல்லை, அண்ணி கூப்பிட்டதை மாத்த முடியாது அண்ணி. எப்பவும் நீங்க எங்களுக்கு அண்ணி தான்.  உங்களை யாரு கல்யாணம் பண்ணிக்கிறாங்களோ, அவங்களை நாங்க அண்ணனா ஏத்துக்குறோம். சரி இந்நேரம் வந்துருக்கீங்க? அண்ணனைப் பாக்க வந்தீங்களா? அண்ணன் சென்னை கிளம்பிட்டாரு”
“யார் எங்க போனா எனக்கென்ன? நான் ஒண்ணும் உங்க அண்ணனைப் பாக்க வரலை”
“என்ன இவ இப்படி சொல்றா? மனோஜைப் பாக்க கூட்டிட்டு போன்னு தானே சொன்னா?”, என்று யோசித்த படி நின்றான் நிர்மல். 
“அப்புறம் என்ன விஷயம்? வண்டில ஏதாவது பிரச்சனையா அண்ணி?”, என்று கேட்டான் ஜெகன். 
“ஆமா. இந்த வண்டி சரியே இல்லை. புது வண்டி எடுக்கலாம்னு இருக்கேன். பழசு இல்லைன்னு ஆனதுக்கு பிறகு புதுசு மாத்திரலாம்னு தான். இதை விக்கணும். இங்க வாங்கிக்குவீங்களா?”
“அண்ணி என்ன சொல்றீங்க? அன்னைக்கு இதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களே?”
“அதெல்லாம் பழைய ஆஷா. அடுத்தவங்களுக்கு தக்க மாதிரி நாமளும் நம்மளை மாத்திக்கணும். உங்க கடைல இதை எடுத்துப்பீங்களா?”
“பழைய வண்டி எடுத்துப்போம் அண்ணி. ஆனா ரேட் எல்லாம் 
அண்ணன் தான் சொல்லணும்”
“அதெல்லாம் எனக்கு பணம் வேண்டாம். நான் இதை சும்மாவே தறேன்னு உங்க அண்ணன் கிட்ட சொல்லிரு. என்னையவே பிடிக்கலைன்னு உங்க அண்ணன் சொன்ன பிறகு எங்களுக்குள்ள எந்த கணக்கு வழக்கும் வேண்டாம்”
“அண்ணி, கண்டிப்பா அண்ணனுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அண்ணானோட போன்ல கூட உங்க போட்டோ தான் ஸ்கிரீன் சேவரா இருக்கு தெரியுமா?”, என்று ஜெகன் கேட்டதும் நிர்மல் புறம் திரும்பிய ஆஷா “நான் சொன்னேன் நீ நம்புனியா அண்ணா? அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஆனா ஏதோ காரணத்துல தான் அவன் இப்படி நடந்துகுறான்.”, என்று குதூகலமாகச் சொன்னாள்.  
“இவளாவது திருந்துறதாவது?”, என்று எண்ணிய நிர்மல் “ஏப்பா, நீ உண்மையா தான் சொல்றியா?”, என்று ஜெகனிடம் கேட்டான். 
“ஆமாங்க சார். நிஜமாவே அண்ணி போட்டோ தான் அண்ணா போன்ல இருக்கு. நீங்க வேணும்னா ராம் கிட்ட கேட்டுப்பாருங்க. அடிக்கடி அந்த போட்டோவையே பாப்பாங்க. அண்ணி வந்தாலே அண்ணன் முகம் பிரகாசமா மாறிரும்”, என்று ஜெகன் சொன்னதும் நிர்மல் முகத்தில் யோசனை வந்தது. 
“ஆஷா, அப்படின்னா ஏதோ குழப்பம் இருக்குன்னு தோணுது. எதுக்கும் கொஞ்சம் பொறுமையா இருப்போம். ஏதாவது வழி பிறக்கும். நீ வண்டியை விட்டுட்டு வா. ஏப்பா, ஜெகன் தானே உன் பேரு. உன்னோட நம்பர் கொடு. நான் எதுக்காவது உனக்கு போன் பண்ணுவேன். உங்க அண்ணனுக்கு தெரியாம எனக்கு பேசணும் சரியா?”, என்று கேட்ட நிர்மல் ஜெகன் மற்றும் ராமின் போன் நம்பரை வாங்கிக் கொண்டான். 
“அப்புறம் ஜெகா, நான் இங்க அவனை தேடி தான் வந்துருக்கேன்னு அவன் கிட்ட சொல்லிராத. என்னை வேண்டாம்னு சொன்னவனை என்னை தேடி வர வைக்கணும். அதனால வண்டியை விக்க வந்தேன்னு மட்டும் சொல்லு”, என்று சொல்லி விட்டு நிர்மலுடன் கிளம்பி விட்டாள் ஆஷா. 
வீட்டில் வண்டி எங்க என்று கேட்டவர்களுக்கு “அது ரொம்ப பழசா ஆகிருச்சு. அதான் கொடுத்துட்டோம்”, என்று சொல்லி சமாளித்தார்கள் இருவரும்.
 
பூக்கள் மலரும்….