சிவானிக்கு இன்று நடந்ததைப் பார்த்து திகைப்பு தான். முதலில் ஆஷா வீட்டுக்கு வந்ததும் குழம்பியவள் தன்னுடைய அண்ணன் வந்து பேசியதும் தான் அவளுக்கு தெளிவாக விஷயம் புரிந்தது.
“இந்த ஆஷா மனதில் அண்ணன் இருந்தானா? அதனால தான் அண்ணனைப் பத்தியே அதிகம் பேசுவாளா? இது அண்ணனுக்கும் தெரியுமா? அண்ணன் ஏன் ஆஷா காதலை ஏத்துக்கலை? இன்னைக்கு எதுக்காக வீட்டுக்கே ஆஷா வந்தா? என்ன காரணமா இருக்கும்?”, என்ற பல கேள்விகள் அவளுக்குள் உதயமானது.
அதுவும் வீட்டுக்குள் வந்ததில் இருந்து தன்னுடைய அண்ணனின் முகத்தையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகள் வேறு, அவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் வேறாக தான் இருந்தன. அதை சிவானி தெளிவாக கண்டு கொண்டாள்.
ஆஷாவை வேண்டாம் என்று சொன்ன போது அவன் கண்களில் இருந்த வலியே அவளை அவனுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று சொல்லாமல் சொன்னது. வேறு பெண்ணைப் பார்க்க சொல்லும் போதும் அவன் முகத்தில் ஒரு மரக்கட்டை உணர்வு தான் வந்து போனது. ஆஷாவை நிர்மல் அழைத்துக் கொண்டு போகும் போது மனோஜ் முகத்தில் வந்து போன உணர்வுகள் வார்த்தையில் சொல்ல முடியாதவை.
தன்னுடைய அண்ணனுக்கும் ஆஷா மேல் அன்பிருக்கிறது என்று சிவானிக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது. “இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு தான் இவன் அவளை வேண்டாம் என்கிறானா? ஆனால் ஏன்?”, என்று எண்ணியவளுக்கு ஆஷாவை நினைத்து கவலை வந்தது.
ஒரு பெண் வலிய வந்து ஒரு ஆணிடம் என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கெஞ்சினால் அந்த சமுதாயம் அவளை எப்படி
நினைக்கும்? அதை எல்லாம் துடைத்து விட்டு தன்னுடைய அண்ணனுக்காக கெஞ்சிக் கொண்டிருக்கும் தோழியின் நிலையை நினைத்து ஒரு பெண்ணாக மிகவும் கவலை கொண்டாள் சிவானி. கூடவே ஆஷா தான் தன்னுடைய அண்ணனுக்கு பொருத்தமான ஜோடி என்ற எண்ணமும் உண்டானது.
காதல் என்பது சாதாரண ஒன்றா? காதலித்தவன் கிடைத்தால் அது சொர்க்கம். அதுவே காதல் கை கூடவில்லை என்றால் எப்படிப் பட்ட வாழ்க்கை கிடைத்தாலும் கண்டிப்பாக அது நரகம் தானே?
“அண்ணனும் எதுக்கு இப்படி செய்யனும்? ஒரு பெண் இவ்வளவு ஆசையா விரும்பினா அவளை கல்யாணம் செய்ய வேண்டியது தானே? அப்பா யோசிச்சாலும் அம்மா சம்மதம் தானே சொல்றாங்க? திலீபன் கல்யாணம் கூட காதல் கல்யாணம் தானே? அப்படி இருக்க இவன் எதற்கு ஆஷாவை புறக்கணிக்கணும். உண்மையிலே பிடிக்கலைன்னா கூட பரவால்ல. ஆனா புடிச்சிருந்தே சேர முடியாம இருக்குறது கொடுமை. எப்படியாவது ஆஷா கூட அண்ணனை சேத்து வை கடவுளே”, என்று வேண்டுதல் வைத்தாள்.
வெளியே வந்த மனோஜோ ஒரு வெறுத்து போன மனதுடன் தான் வண்டியை எடுத்தான். அப்போது அங்கு நின்ற ஆஷாவின் வண்டி கண்ணில் பட்டது. நிர்மல் அவனுடைய வண்டியில் தான் அவளை அழைத்து சென்றிருக்கிறான் என்று புரிந்தது.
உடனே ஜெகனை போனில் அழைத்து “உடனே வீட்டுக்கு வா டா”, என்றான்.
ஜெகன் வரும் வரை அவள் வண்டியின் அருகில் நின்று அவள் வண்டியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அமர்ந்திருந்த இடம், அவள் கை வைத்த ஹேன்ட் பார் என அனைத்தையும் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
மாடியில் காயப் போட்ட துணிகளை எடுக்க சென்ற சிவானி கண்களில் அந்த காட்சி விழுந்தது.
தன்னுடைய அண்ணனா இப்படி? நடு ரோட்டில் அனைவரும் பார்க்கும் இடத்தில் நின்று கொண்டு உலகையே மறந்து வண்டியை வருடிக் கொண்டிருப்பது?
“ஆஷா மேல் எவ்வளவு காதல் இருந்தால் இவன் இதைச் செய்வான்?”, என்று எண்ணியவளுக்கு எப்படியாவது இவர்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. .
தன்னுடைய அண்ணனின் செய்கைகளையே பார்த்துக் கொண்டு நின்றாள். தூரத்தில் ஜெகன் வருவது தெரிந்தது. அவன் வந்ததும் தன்னை சமாளித்துக் கொண்ட மனோஜ் “இது ஆஷா வண்டி டா. இதை அவளோட வீட்ல விட்டுட்டு வந்துரு”, என்றான்.
“அண்ணி எங்கண்ணா?”, என்று கேட்டான். அவன் அப்படி அண்ணி என்று சொன்னதை நினைத்து சிவாணிக்கு ஆச்சர்யம் வந்தது. மனோஜ் கோபப் படுவான் என்று சிவானி எதிர் பார்க்க “அவளோட வீட்டுக்கு போயிட்டா டா. நீ வண்டியை அவ வீட்ல விட்டுரு. நிர்மல் தவிர வேற யாராவது காரணம் கேட்டா மெக்கானிக் ஷெட்ல விட்டுருந்தாங்க, திருப்பிக் கொடுக்க வந்தேன்னு சொல்லிட்டு வந்துரு”, என்று சொல்லி தன்னுடைய வண்டியை எடுத்தான்.
ஜெகனும் ஆஷா வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். “இவன் அண்ணன் அவ அண்ணியா? அப்படிச் சொல்லாதேன்னு கூட இந்த அண்ணன் சொல்லலையே? இவ்வளவு பாசத்தை வச்சிட்டு தான் இப்படி அவளையும் தவிக்க விடுறியா? என் மேல உயிரையே வச்சிருக்குற உன்னை ஆஷா கூட சேத்து வைக்காம விட மாட்டேண்ணா. என்ன செஞ்சாவது உங்க கல்யாணத்தை நான் நடத்துவேன்”, என்று தனக்குள் கூறிக் கொண்ட சிவானி முதலில் அண்ணனிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
அழுது வீங்கிய முகத்துடன் நிர்மல் கையை பிடித்த படியே வீட்டுக்கு சென்றாள் ஆஷா. அவளைக் கண்டு பெற்றவர்கள் இருவருக்கும் நிம்மதியாக இருந்தாலும் சுள்ளென்ற கோபமும் வந்தது.
புஷ்பா எதையோ கேட்க போக ஆஷா பயந்து அண்ணன் முதுகின் பின் மறைந்தாள். மற்ற நேரமாக இருந்திருந்தால் புஷ்பா என்ன சொன்னாலும் பதில் கொடுத்து விட்டு சென்று விடுவாள். ஆனால் இப்போது இருக்கும் அவளுடைய மன நிலை அவளை எதுவுமே பேச விடாது.
அவளுடைய பயத்தையே தான் முத்துவேல் பார்த்துக் கொண்டிருந்தார். சிறு குழந்தையாக இருக்கும் போது ஏதாவது தப்பு செய்தால் இப்படி தான் செய்வாள்.
“கட்சி கட்சி என்று அலைந்து பிள்ளையை கவனிக்காம போய்ட்டோமோ?”, என்று எண்ணினார் முத்துவேல். காலம் கடந்த நினைவு என்று எடுத்துரைத்தது அவர் மனசாட்சி.
அவளுடைய பயத்தை கணக்கில் கொள்ளாமல் புஷ்பா கத்த ஆரம்பிக்க “அம்மா ஒரு நிமிஷம்”, என்று சொன்ன நிர்மல் ஆஷாவை அவளுடைய அறையில் விட்டு விட்டு வெளியே வந்தான்.
“நிர்மல், நீ அவளுக்கு ரொம்ப தான் செல்லம் கொடுக்குற? இப்ப அவ எங்க போனாளாம்? நாலு இழுப்பு இழுத்தா தான் அவ அடங்குவா”, என்று கத்தினாள் புஷ்பா.
“நீங்க இப்படி பேசி பேசியே தான் அவளை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்கம்மா”, என்று எரிச்சலில் சொன்னான் நிர்மல்.
“உங்க அத்தை வீட்ல இருந்து இப்ப வந்துருவாங்க. அவங்களுக்கு நான் என்ன சொல்லன்னு பயந்தது எனக்கு தான் தெரியும்”
“எங்க கிட்ட கேட்டுட்டா நீங்க அவங்களை வரச் சொன்னீங்க? உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டு, அப்புறம் பயந்தா எல்லாம் ஆச்சா? ஆஷா சின்ன வயசுல பிடிவாதமா இருக்கும் போதே அவ
மனசை பொறுமையா பேசி மாத்துறதை விட்டுட்டு திருப்பி திருப்பி பேசி பேசியே அவளை ஏத்தி விட்டது நீங்க தான்”, என்று கோபத்தோடு கத்தினான் நிர்மல்.
“நிர்மல் முடிஞ்சதைப் பத்தி பேசாத. இப்ப பாப்பா எங்க போயிருந்தா? அதைச் சொல்லு”, என்று கேட்டார் முத்துவேல்.
“அவளுக்கு ஜெயாவைப் பிடிக்கலைப்பா. நிச்சயதார்த்ததை நிறுத்த என்ன செய்யனு தெரியாம அவ ஃபிரண்ட் வீட்ல போய் உக்காந்துருந்தா. நான் அம்மா அப்பா கிட்ட பேசி நிறுத்துறேன்னு சமாதானப் படுத்தி கூட்டிட்டு வந்தேன்”
“எந்த பிரண்டு வீட்டுக்கு போயிருப்பா? அந்த நாயை பாக்க தான் போயிருப்பா”, என்றாள் புஷ்பா.
“அம்மா முதல்ல எல்லாரையும் மரியாதையா நடத்த கத்துக்கோங்க. அவன் வீட்டுக்கு தான் ஆஷா போயிருந்தான்னு நான் சொன்னா உடனே அவங்க ரெண்டு பேரையும் சேத்து வச்சிருவீங்களா?”
“நிர்மல்”
“கத்தாதீங்க, அவ சும்மா வெளிய போயிட்டு வந்தாலே மனோஜ் பத்தி பேசி பேசி அவ மனசுல ஆசையை வளத்தது நீங்க தான். இப்ப அவ மனசுல அவன் தான் நிறைஞ்சு இருக்கான். நீங்க போட்ட விதை தான் மரமா வளந்துருக்கு. அவளை சமாதானப் படுத்தி கூட்டிட்டு வந்துட்டேன். இனி அவ மனசை மாத்துறது கஷ்டம். கொஞ்சம் ஆறப் போடுங்க”
“ஆறப் போடுறதா? அவனை அப்பவே முடிச்சிருந்தா இவ இப்படி நம்ம மானத்தை வாங்காம இருந்துருப்பா”, என்றாள் புஷ்பா.
“திருப்பி திருப்பி நீங்க அதே தப்பை தான் செய்றீங்க? இப்ப அவளுக்கு இருபத்தி ஒரு வயசு தானே ஆகுது? அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்? கொஞ்ச நாள் போகட்டுமே? அத்தை மாமா கிட்ட பேசுங்க”
“அதெல்லாம் முடியாது. இவளை இப்படியே விட்டா அவன் பின்னாடி தான் போவா. என்னங்க அவன் கதையை முடிச்சிருவோம். இவளுக்கும் சீக்கிரம் கல்யாணம் முடிக்கணும்”
“அப்படி முடிச்சா ஆஷா ஏதாவது தப்பான முடிவு எடுத்தா அதுக்கப்புறம் நான் எதுவும் செய்ய முடியாது. உங்களால ஆஷா ஏதாவது செஞ்சிக்கிட்டா அம்மானு கூட பாக்க மாட்டேன். கொஞ்ச நாள் பொறுங்கன்னு தானே சொல்றேன்? ஒரு இருபத்தஞ்சு வயசுக்கு அப்புறம் அவ கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசுங்க. முதல்ல அவ வேலைல சேரட்டும். நான் நாளைக்கே அவளை சென்னைக்கு கூட்டிட்டு போகப் போறேன். ரெண்டு மூணு வருஷம் அவ வேலைக்கு போகட்டும். அப்புறம் அவளுக்கே விவரம் புரியும். சும்மா கட்டாயப் படுத்தாதீங்க மா. அப்பா அம்மாவுக்கு புரிய வைங்க. அப்புறம் சென்னைல அவளை ஹாஸ்டல்ல சேத்து விடப் போறேன். நல்ல ஹாஸ்டலா பாத்து சொல்லுங்க. இதுக்கப்புறம் நீங்க தான் முடிவு பண்ணனும்”, என்று சொல்லி விட்டு ஆஷாவைக் காணச் சென்றான்.
மனது வெறுமையினாலோ, இல்லை அண்ணன் மேல் உள்ள நம்பிக்கையோ எதுவென்று தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் ஆஷா.
அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை கோதி விட்டவனுக்கு தான் மனோஜிடம் பேசிய அதிகப் படியான பேச்சு நினைவில் வந்தது.
தான் பேசியது தவறு என்று மனதுக்கு பட்டது. ஆஷா காதலை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் மனோஜ் விருப்பம். அதில் இவன் கருத்து சொன்னது தவறு தானே?
“இப்ப ஒரு பொண்ணு வந்து என் கிட்ட விரும்புறேன்னு சொன்னா நான் பிடிச்சா தானே ஏத்துக்க முடியும்? பிடிக்காம ஏத்துக்க முடியாதே”, என்று நினைத்தவன் மனோஜிடம் சாரி கேட்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அதை உடனடியாக கேட்க மனதில்லை.
அப்போது ஆஷா போன் அடித்தது. உடனடியாக அதை எடுத்து பார்த்தான். சிவானி தான் அழைத்திருந்தாள். அதை உடனடியாக கட் பண்ணி விட்ட நிர்மல் அடுத்த நொடியே போனை ஸ்விட்ச் ஆப் செய்து கையோடு எடுத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டான்.
இங்கே மனோஜின் நிலைமையும் தலை கீழாக தான் இருந்தது. எந்த வேலையிலும் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. அவளுடைய நினைப்பு தான் அவனை ஆக்ரமித்தது. “என்ன தப்பு செஞ்சேன் நான்? எதனால அவ என்னோட வாழ்க்கையில் வந்தா? எதுக்கு விதி எங்க ரெண்டு பேரையும் சேத்து வச்சு விளையாடுது? நான் என்ன திட்டினாலும் சிரிச்ச முகமா பேசுவாளே? இன்னைக்கு அவளையே அழ வச்சிட்டேனே?”, என்று எண்ணிக் கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் இருந்து எதை உணர்ந்தார்களோ ராமும் ஜெகனுமே அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டார்கள்.
மாலை ஆறு மணிக்கு தான் சென்னை போக வேண்டுமே என்ற நினைவே வந்தது. அவசரமாக காரை தயார் செய்தவன் தன்னுடைய உடைகளையும் எடுத்துக் கொண்டு அனைவரிடமும் சொல்லி விட்டு வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான்.
அங்கே துரைப்பாண்டி, பார்வதி, சிவானி மூவரும் கிளம்பி தயாராக இருக்க அவர்களை ஏற்றிக் கொண்டு கார் பறந்தது. தேவையான சாமான்களையும் ஏற்றிக் கொண்டு பின்னால் குட்டி யானை சென்றது.
முதலில் அங்கே போய் எல்லா பொருளும் வாங்கலாம் என்று மனோஜ் சொல்லி இருந்தான். ஆனால் பார்வதி தான் “பிரிட்ஜ் அடுப்பு எல்லாம் அங்க போய் வாங்கிட்டு இருக்க முடியாது மனோஜ். அது பாத்திரம் எல்லாம் கொண்டு போயிரலாம். நீ ஒரு வண்டியைப் பிடி”, என்று சொல்லி விட்டாள்.
“இல்லைம்மா, திலீபன் புழங்குவானே?”, என்று இழுத்தான் மனோஜ்.
“திவ்யா கொண்டு வந்த சாமான் எல்லாம் புழங்காம இருக்கு. அதை அவங்க எடுத்துக்கட்டும்”, என்று சொல்லி அனைத்தையும் வண்டியில் ஏற்றி விட்டாள் பார்வதி.