கண்ணில் கனவு. கனவில் நீ. கண் திறந்தால் கலைந்து விடுவாயென்று கண்மூடி காத்திருந்தேன். இன்று கண்முன் நீ.. கண் திறக்கவா? கலைந்துவிட மாட்டாயே?
ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தாள் பிருந்தா, அஷோக்கைக் காண.. கண்ணில் ஒரு கனவோடு. அவன் அறை வாயில் வரை வந்தாயிற்று.. இன்று அவனிடம் தன் இதயம் திறக்கும் நோக்கம் இருக்கவே நடந்து வந்த கால்களில் ஒரு நடுக்கம்.. துணிவில்லை அடுத்த அடி எடுக்க.
அவளுக்குத் தெரியும் சொல்லாத காதலுக்கு விலையில்லையென்று! சொல்லியே ஆகவேண்டும்.. மூச்சை நன்றாய் உள்ளிழுத்து வாய் வழியே வெளியே விட்டாள். நான்கு முறை இழுத்துவிட்டு, தன்னை சமன் படுத்தி கதவைத் திறந்தவளை, இன்முகமாய் வரவேற்றான் அவள் உள்ளம் கவர்ந்தவன்.
தோழனுக்கு உதவ ஆள் வந்ததும், “நீங்க பேசிட்டு இருங்க ஒரு டென் மினிட்ஸ்ல வரேன். ஒரு ஆஃபிஸ் கால் போட வேண்டி இருக்கு!” என பொதுவாய் கூறிக் கொண்டே கைப்பேசியை உயிர்ப்பித்து வெளியே சென்றான்.
“என்ன பிருந்தா இவ்வளவு காலையில… ஏதாவது எமர்ஜென்சி வேலை வந்திடுச்சா?” நொண்டி நொண்டி நடை பழகிக்கொண்டே அஷோக் கேட்க,
“நேத்தே பாக்க முடியல, அது தான் உன் கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்னு வந்தேன்…” வெங்கட் விட்ட கையை அவள் பிடித்துக் கொள்ள
“நீ வா, வந்து உக்கார்.. அவன் தான் சொன்னாலும் கேட்காம கைய பிடிச்சு படுதினான்னா… நீயுமா? நான் பார்த்துகறேன். நீ உக்கார். ரவுண்ட்ஸ் ஆரம்பிச்சா ரெஸ்டே இருக்காது!”
‘எனக்காக பார்க்கிறானே!’ அவன் என்ன பேசினாலும் அவளுக்கு உச்சி குளிரும் நிலை.
“சொல்லுவதெல்லாம் உண்மை ஜீ! நீ தான் இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகரியே.. அது தான் போனா போகுதேனு வந்தேன். இன்னைக்கு விட்டா அப்புறம் எப்போ பார்ப்பேனோ.. சார் வேற எப்பவும் பிஸி!! இங்க இருந்து போனதும் திரும்பவும் என்னை மறந்து போகமாட்டேன்னு என்ன நிச்சயம்? அது தான்..” என்று ஏக்கத்தோடு அலுத்துக்கொள்ள
“என்ன நீ இப்பிடி சொல்லிட்ட? உன்ன மறக்க முடியுமா? எனக்கு இரத்தம் கொடுத்து உயிர் மீட்ட டாக்டர் ஆச்சே நீ..”
அவன் வார்த்தைகள் அவள் உள்ளம் தொட்டு நின்றது. ‘இவன் என்னைக் கவனிக்கின்றானா..’
“எப்படி தெரிஞ்சுது?”
“நீ சொல்லாட்டி எனக்கு தெரியாதா.. காத்தோட நியூஸ் வந்தது நீ யுனிவர்சல் டோனராமே.. என்னோட சேர்த்து இதுவரைக்கும் எத்தனை உயிர காப்பாத்தி இருக்க?” ஆர்வமாய் பார்த்தான்
“நான் அவ்வளவு தைரியசாலி எல்லாம் இல்ல அஷோக். அடுத்தவங்களுக்காக கத்தி எடுக்கணும்னாலும் கை நடுங்காது… ஊசி எனக்குனா கண்ல நீர்கோர்த்திடும்… பயம். சோ சமுக சேவை எல்லாம் இல்ல. உனக்குங்கரனால மட்டும் தான்..
எத்தனை ஊசி வேண்ணும்னாலும் குத்திப்பேன்.. ஒரு பாட்டில் ரத்தமில்ல.. என் உடம்புல இருக்க கடைசி சொட்டு வரைக்கும் உனக்குன்னா கொடுக்க தயார் தான் அஷோக்” என்று அவனைப் பார்த்தாள்.
அவனுமே அவள் சொல்ல நின்றுவிட்டான். ‘இன்னும் எண்ணம் மாறவில்லையா?’ என்ற பார்வை.
‘நீ என்ன நினைத்தாய்…?’ அவள் பதில் பார்வை!
அறையின் ஓரத்திலிருந்து இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி, “உனக்குத் தான் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சுடுச்சே.. நான் கொஞ்சம் காலரா நடந்திட்டு, சாப்பிட்டுட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டார்.
சிறிது நேரம் அங்கு வெறும் அமைதி.
அவள் தான் மீண்டும் ஆரம்பித்தாள். அப்படியே அவர்கள் பல வருடக் கதையில் மூழ்கினர்.
“நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்”, நர்சிடம் கூறியவள் தன் இருக்கையை விட்டு எழுந்தாள்.
அவளிடம் ஏதோ சரியில்லை, உடல் மொழி உணர்த்தியது. அவன் ஒன்றும் பேசவில்லை.
நர்ஸ் வெளிச்சென்றதும், “கட்டை மாத்திடலாமா?” என்று அமர்ந்திருந்தவன் அருகில் சென்று பொறுமையோடு அவன் கட்டை அவிழ்க ஆரம்பித்தாள்.
ஏ.சி மட்டும் உறுமிக்கொண்டிருந்தது. எதிரில் நின்று கொண்டிருப்பவள் அவன் சிந்தனையை ஆக்கிரமித்திருக்க.. அவன் மனமும் நிலையிலில்லை.
“ஏதாவது சொன்னியா பிருந்தா?”
“ம்ம்ம்… என்ன? என்ன சொன்னேன்?” ‘சொல்லிட்டேனா?’ அவளுக்குக் குழப்பம்!
“ஹேய்… கூல்.. ஏதோ சொன்ன மாதரி இருந்துது.. அது தான் கேட்டேன்… காம் டவுன்”
இதயத்துடிப்பு அவனுக்குக் கேட்டுவிட்டிருக்குமோ என்று ஒரு தவிப்பு… படபடப்பு… மனதோடு கையும் நடுங்கிவிட்டது.
“ஆஆஆ… ஸ்ஸ்ஸ்ஸ்” வலியில் கண் சுருக்க…
அவள் கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. அவளால் அவள் அஷோக் கண் கலங்குவதா?
“அச்சோ… ஸாரி… ஸாரி…” ஆயிரம் சாரி கேட்டுவிட்டாள். அடுத்த நொடி நர்ஸ்சோடு வந்துவிட்டாள்.
“நீங்க ட்ரெஸிங் பண்ணிடுங்க” என்று.
அவளைத் தான் பார்த்தான். முகத்தில் ஒரு பதட்டம்.
அவனிடம் நெருங்கிய நர்ஸ்சிடம், “நீங்க போங்க.. அவங்களே பார்த்துப்பாங்க” என்று வந்தவரை அனுப்பிவிட்டான்.
மீண்டும் அமைதி.
“இங்க வா..”
தயங்கித் தயங்கி அவன் அருகில் வந்தாள்.
“சொல்லு… என்ன ஆச்சு? ஏதோ சரி இல்ல… உன்ன என்ன பாதர் பண்ணுது?”
“…”
“என்னைப் பார் பிருந்தா…”
பார்த்தாள்… பார்த்துக்கொண்டே நின்றாள்.
ஆரம்பித்த வேலையை முடித்தாள். தள்ளி நின்றுக் கொண்டாள். அவனருகில் வரவில்லை. உள்ளுக்குள் ஒரு நடுக்கம்.
“இங்க வா பிருந்தா..” கை நீட்டிக் கூப்பிட்டான்.
இதயம் அறுந்து விழுந்துவிடும் பயம் அவளுக்குள்… அருகில் வந்தவள் கையை பிடித்து அவள் முகம் நோக்க… அவள் கண் அவன் கையை உள்வாங்கிக் கொண்டிருந்தது.
அவனுக்கும் வார்த்தைகள் மறந்துவிட்டது.
இதயம் கையில் வந்து மாட்டிகொள்ள.. அது தடதடத்தது. அவனால், உயிரற்ற அவள் விரல்கள் உயிர்பெற்றுவிடுமா என்ற பார்வை அவளிடம்.
வருடத்திற்கு ஒன்று என ஒன்பது கண்ணீர் துளி அவன் கையில் விழுந்து சிதறியது. அதற்கு மேல் இருந்திருக்கலாம் அவனுக்கு ஒன்பதாய் தான் தோன்றியது. ஒன்பது பெருங்கடல் அவனை அடித்துச் சென்றது. அடியோடு அவனை சாய்த்துவிடுமா?
அவள் கண் வழி சொட்டிய இதயத்துளி அவன் கை வழி இதயம் தொட்டது.
“பிருந்தா..” என்றான்.. அதில் கொஞ்சம் வலி தெரியத் தான் செய்தது.
அவள் கண் கீழே இருந்த வெள்ளை தரையைத் தழுவியது. அந்த வெள்ளை தரையில் ஏதேனும் வண்ணம் தெரிகிறதாவென்று. தெரிந்துவிடேன் என்று இதயம் கெஞ்சியது.
“இங்க உக்கார்”
தன் அருகில் அமர்த்திக்கொண்டான்.
மீண்டும் மௌனம்.
“பிருந்தா…” அவனுள் தயக்கம்.
அவளுக்குத் தெரிந்தாக வேண்டும் ஏன் அவன் மனதில் அவளால் புகமுடியவில்லை என்று!
‘ஏன்?’ என்ற பார்வை அவளிடமிருந்து
‘தெரியவில்லை’ என்ற பதில் அவனிடம்… ஆனால் அவளிடம் கூறப்படவில்லை.. அவன் கண் இன்னும் அவள் கையில்… அவன் ஏந்தியிருந்த அவள் கையில்.
‘பிடித்தால்.. கையை பிடித்தால்.. கடைசி வரை இவள் தான்!’ சொல்லிக் கொண்டான்.
அவள் அவனையே பார்ப்பது தெரிந்தது. இப்பொழுது தயக்கமில்லாமல் அவளைப் பார்த்தான்.
வந்த அழுகையை உள்ளிழுத்திருக்க வேண்டும்… கண்ணீர் விட்டதிற்கான சவடு இல்லை. அது மீனின் கண்ணீர்.. இவனால் மட்டும் பார்க்க முடியுமா என்ன?
காதல் தாங்கிய இதயம் கனத்து அவன் மௌனம் உடைக்க காத்திருந்தது. ஒன்பது வருடம் நீளமில்லை… இந்த ஒன்பது நிமிடம் ஒன்பது யுகங்களாக நீண்டது. மிக நீளமான யுகம்… யுகத்திற்கு ஒரு முறை என்று ஒன்பது முறை செத்து பிழைத்துவிட்டாள்.
அவள் சொல்ல வந்த விஷயம் தொண்டைக்கடியில் மாட்டிக் கொண்டது. வாய் வார்த்தையாய் வெளிவரவில்லை. கண் வஞ்சனையில்லாமல் பேசியது.
கண் பேசும் பாஷையை ஒருத்தி ஏற்கனவே பாடம் எடுத்துவிட்டே சென்றிருந்தாள். அதனால் அவனுக்கும் புரியவே செய்தது பிருந்தாவின் காதல் பாஷை!
“உன் மனசு எனக்கு புரியாம இல்ல… ஆனா நான் ஏன்?”
“…” பதில் தெரியவில்லை.
“எனக்குக் கொஞ்சம் டைம் குடுப்பியா… மறந்து போன கொஞ்ச காலத்தை தேடணும்.. தேடதுக்கு அதுல ஏதாவது இருக்காணு கூட தெரியல… கொஞ்சம் டைம் வேணும்”
எடுத்துக்கொள்… ஒரு யுகம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்… அவள் காத்திருப்பாள். இதே சிரித்த முகமாய்.. கண்களில் உன்னைத் தாங்கி.. உன் காதலுக்காய் காத்திருப்பாள். ஆனால்.. ‘சரி’ என்று சொல்லிவிட்டு அந்த சின்ன இதயத்தை கிழித்து கொதரிவிடாதே… இலவு காத்த கிளியாய் அவளை ஆக்கிவிடாதே.. அவள் காதல் கதறியது. அவனுக்கும் கேட்டது.
மெல்லிய கீற்றாய் ஒரு புன்னகை.. வரவழைக்கபட்டதா.. அதுவே வந்ததா? அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பளிங்கு முகம் கற்றுக்கொண்டது அவனிடமிருந்து உணர்வுகளை மறைக்க.
அவளிடம் பதிலில்லை.. அதே புன்னகை மட்டும் பதிலாய்.
கதவு திறக்கப்படவும் அவன் கையை விடுவிக்க… அவன் ஒற்றைக் கையை இரண்டு கைகளால் அவள் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்… கை நடுங்கியது..
‘விட்டுவிடாதே..’ என்ற ஆற்றாமை.. இதயம் நின்றுவிடும் அபாயம்.
மனமெல்லாம் என்ன சொல்லப் பொகிறானோ என்ற எண்ணம்!
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்…
காதல் வலி அவள் விரல் வழி அவன் இதயம் தொட்டது.
மென்மையாக அவன் பெருவிரலால் பிடித்திருந்த கையை தடவி விட்டான். அவன் இதயம் அவளுக்காக திறப்பதாய் தோன்றியது. அவள் இதயம் மீண்டும் இயங்கியது.
கதவைத் திறந்து கொண்டு வெங்கட் உள்ளே நுழைந்தான். அவள் மருத்துவராய் மாறிவிட்டிருந்தாள்.
வெங்கட் அஷோக்கிடம் ஏதோ கேட்க அவனிடம் ஓரிரு வார்த்தை பேசி விட்டு பிராந்தாவைப் பார்த்தான்.
“என்ன டாக்.. எப்படி இருக்கான்? இன்னும் வலி இருக்கே..” – வெங்கட்
“நல்லா இருக்கார்! கொஞ்சம் வலி இருக்கத் தான் செய்யும்.. இதுக்கும் மேல பெயின் கில்லர் வேண்டாம். இந்த மைல்டு டோஸ் போதும். ரொம்ப வலி இருந்தா எனக்கு கால் பண்ணுங்க” அவனிடம் அவள் கைப்பேசி எண்ணைக் கொடுத்தாள்.
வெங்கட் கைப்பேசி அழைக்க.. “ஒரு நிமிஷம்” என்று அறையின் ஓரத்திற்குச் சென்றான்.
“கட்டு போட்டாச்சு… வெங்கட் வந்துட்டார் நான் கிளம்பவா?” கிளம்ப மனமே இல்லாமல்..
“ஃபோன் நம்பர் குடு பிருந்தா”
“ஃபோன் குடு சேவ் பண்றேன்”
“நீ சொல்லு.. எனக்கு மறக்காது. செல் ஃபோன் ஆக்ஸிடென்ட்ல நாஸ்தி ஆகிடுச்சு.. புதுசு வாங்கணும்!”
அவள் கைப்பேசி எண்ணை அவன் கை காட்டின் மேல் எழுதி வைத்தாள்.
“உடம்ப பார்த்துக்கோ… மனசைப் போட்டு குழப்பிக்காதா. நல்லா ரெஸ்ட் எடு. மூனு நாள் கழிச்சு வா செக்கப்புக்கு. எப்போ வருவனு டைம் சொல்லு.. அபாய்ன்மேன்ட் போட்டுறேன்.. எதனாலும் எனக்கு கால் போடு, நேரம் காலம் பார்க்காத அஷோக். உடம்பு பத்திரம்.. பார்த்துக்கோ.. மருந்த வேளா வேளைக்கு சாப்பிடு.. உடம்போட மனசையும் பார்த்துக்கோ… பழச யோசிக்கறேன்னு எதையும் போட்டு குழப்பிக்காத.. ரெஸ்ட் ரொம்ப முக்கியம்.” ஆயிரம் பத்திரங்கள் சொல்லி, மனதை அவனிடம் கொடுத்துவிடவே, மனமில்லாமல் சென்றாள்.
நிம்மதியாய்.
ஏன் இந்த நிம்மதி? கொடுத்த அவள் இதயத்தை அவன் வாங்கி கொண்டதாலா? உண்மையில் வாங்கிக் கொண்டானா? அப்படியே வாங்கியிருந்தால் அவன் பங்குக்கு எதை கொடுப்பான்?