சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 68_2
“ஒரு இடத்துக்கு போகணும்னா நேரத்துக்குப் போக வேண்டாமா? இங்க இருக்க ஏர்போர்ட் போய்ட்டு வர இவ்வளவு நேரமா..?” தானே புலம்பிக் கொண்டிருந்தாள் சுதா!
அங்குள்ள தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கலை விழா அது. அதற்குத் தான் தமிழர் பாரம்பரிய உடையில் தயாராகிக் கொண்டிருந்தாள்.
“மணி இங்கேயே ஆறு. இன்னும் காணம்.. போகவே ஒரு மணி நேரமாகும்..” கரையில்லாத பட்டுப் புடவையை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டே கார்த்திக்கை வாய்விட்டுத் திட்டிக் கொண்டிருந்தாள்.
காதில் ஜிமிக்கி ஆட, “சுதா நீ ஒரு அழகி டி!” கண்ணாடி பிம்பத்திடம் சொல்லிக் கொண்டு இன்னும் கொஞ்சம் உதட்டுச் சாயத்தை அதிகப்படுத்தி, கண்ணைச் சிமிட்டி பார்த்துக் கொண்டாள். மஸ்கார மீண்டும் ஒரு முறை இமையை முத்தமிட்டது.
“டூ மச்சா இல்லியே?..
கொஞ்சம் ஓவரா தான் இருக்கோ?
பட்டு புடவைக்கு சரியா தான் இருக்கு!” அவளே கேள்விக் கேட்டுக் கொண்டு அதற்கு அவளே பதில் அளித்துக் கொண்டாள். 
காற்றில் புடவை கொஞ்சமாய் விலகி அவள் வயிற்றை வெளிக்காட்ட.. வயிற்றைத் தொட்டு சென்ற குளிர் தென்றல் உஷ்ணமான தருணத்தை நினைவு படுத்தியது. கண்ணாடி வழியே வயிற்றைப் பார்க்க, யாரோ.. என்றோ.. அங்கு முகம் புதைத்த நினைவு… பூர்வ ஜென்ம நினைவு.. இன்று நடந்தது போன்ற வலியை ஏற்படுத்திச் சென்றது. ‘அந்த மூச்சுக் காற்று’ வயிற்றை ஊடுருவி நெஞ்சங்கூட்டை அடைத்தது.
கண்ணை இறுக்கி மூடியவள், புடவையை இழுத்து வயிற்றை மூடிக்கொண்டாள். ‘நினையாதே மனமே நினையாதே…’ ஆயிரம் முறை சொல்லிக்கொண்டாள். ‘தவறு… இனி இப்படி நினைப்பது பெரிய தவறு பெண்ணே!’ வலியோடு நினைவு படுத்திக் கொண்டாள். ‘ஒரு நரகம் போதும்… என் நினைவால் நான் செய்யும் பாவத்திற்கு மீண்டும் ஒரு நரகத்தைத் தந்து விடாதே இறைவா..’
என்னதான் சொல்லிக் கொண்டாலும்.. நினைவுகளைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. இன்று அது தலைவிரித்தாடியது. அவனைப் பார்த்ததாலோ? கண்ணை மூட.. மல்லியின் மணம் உள்ளிருந்து வெளிவந்து நாசியை நிறைத்தது. மணம் கூடவா மறக்காது.. அவன்  மேல் தவழும் மணம் கூட இன்னும் நாசியை விட்டு போகவில்லை.. வருடங்கள் ஆனப்பின்னும். அவன் மணம்? முன்தினம் நடந்த நிகழ்வு தொண்டையில் சிக்கித் தவித்தது.
மீண்டும் சொல்லிக்கொண்டாள்…’தப்பு… உன் நினைவு மிகவும் தவறு… அது பாவம். உனக்கு நரகம் தான்’ என்று..
தண்ணியைத் தொண்டைக்குள் இறக்கிக்கொண்டாள். அண்ணா முதல் குட்டி வாண்டு வரை அனைவரையும் நினைத்துக் கொண்டாள். மனம் அடங்கியது. ‘நான் துரோகி அல்ல!’ சொல்லிக்கொண்டாள்.
இயல்புக்கு வந்தவளுக்கு நினைவில் வந்தது தலையில் இன்னும் மல்லி இல்லை என்பது. “ஆஹா.. மல்லி மிஸ்ஸிங்க்!”
குளிசாதனப்பெட்டியை திறந்து ஆன்-லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கிய மல்லியை எடுத்தாள். அது மல்லி இல்லை என்பது திண்ணம். மதுரை மல்லி போல் குண்டாய்.. அழகாய் இருந்தது. ஆனால் மலரில் மணமில்லை. இனி வாசமில்லா மலரை வாங்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டாள். எண்ணம் அதோடு நிற்கவில்லை.
‘சுசிமா.. நல்லா இருக்கீங்களா?’ மனம் கேட்டது. எத்தனை நாள் ஆசையாய் மல்லி கட்டி தந்திருப்பார்? அதற்குத் தான் எத்தனை மணம்? என்ன அழக்காக அடர்த்தியாய் கட்டிக் கொடுப்பார்? எத்தனை முழம் வைத்தாலும் ஆசை தீராது. அதன் மணமே தனி.
எத்தனை நாள் பூ வைத்த பத்தே நிமிடத்தில் அதை அவன் கசக்கி இருப்பான்?’ கண்களில் மளுக்கென்று நீர் கோர்க்க, அவளுக்கே அவளைப் பார்த்து எரிச்சலாய் வந்தது!
‘உன் வாழ்க்கையை பாரு லூசு! அவரோடான உன் வாழ்க்கை முடிந்து வருடங்கள் ஆகிறது. நீ செய்வது தவறு!’ என்றது மனது.. மீண்டும் மீண்டும்!
“ம்ம்.. தப்பு தான்.. நினைக்காதே மனமே..” இம்முறை வாய் விட்டு சொல்லிக் கொண்டாள்.
பூ வைத்து முடிக்கவும் அழைப்புமணி அடித்தது. “ஹப்பா.. ஒரு வழியா வந்திட்டார்.. ரெண்டு பேரும் கிளம்பினதும்.. அர மணி நேரத்தில போய்டலாம்!”
இத்தனை மன போராட்டத்தோடு அவளால் எப்படி நிதானமாக வாழ முடிகிறது? அது, வாழ்க்கையின் ஓட்டத்தோடு வாழப் பழகியதால் வந்த மாற்றம். எதையும் எதிர்க்கவில்லை. உணர்வுக்கும் வாழ்விற்கும் நடுவே பெரிய சுவர் எழுப்பி இருந்தாள். சொந்தம் என்ற சுவர். நதி பாய.. கூர்மையான கற்கள் கூழாங்கற்கள் ஆவதில்லையா? குத்தி கிழித்த நிகழ்வுகள் அவளைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்வைக் கிழிக்காமல் பார்த்துக்கொண்டாள். கூர் நினைவுகள் மதிலுக்கு அப்பால் கூழாங்கல்லாய் யாரையும் கிழிக்காமல்… அவளை மட்டுமே பாரமாய் அழுத்த.. வாழப்பழகிக் கொண்டாள்.
மீண்டும் அழைப்பு மணியின் சத்தம்! முகம் புன்னகையைப் பூசிக்கொண்டது. வாசனை திரவத்தை மிதமாய் தன் மேல் அடித்துக் கொண்டு, ‘உள்ள வரமா எதுக்கு பெல் அடிசுகிட்டு?’ யோசனையாய் மாடியிலிருந்த அவள் அறை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.
கருப்பு சட்டை முரடன் நின்று கொண்டிருந்தான். ‘நேற்று பார்த்தவனே!’ என்றது புத்தி. ஆனால் மனம் வேறு பெயரை உச்சரித்தது! ‘பனை மரம்?’ மனம் உறக்க கூப்பிட்டது.
உடல் முழுவதும் ஏதோ சூடாய் பரவியது. இதயம் படு வேகமாகத் துடிக்க, புடவையை கையில் பிடித்துக்கொண்டு படியில் இதயம் தடதடக்க ஓடினாள். கதவைத் திறந்தவள் வாசலில் நின்றிருந்தவனைப் பார்க்க.. பலமெல்லாம் வடிய.. இமைக்க மறந்து நின்று விட்டாள்.
இதயம் துடிக்கிறதா? துடிக்கவில்லை.. கதறியது! பார்க்கத் துடித்தவனைப் பார்த்தேவிட்டாள்.
கண்ணில் நீர் கோர்க்க.. சுற்றம் மறக்க… சொந்தங்கள் மறக்க.. தன்னை மறக்க.. அவன் மட்டும் தான் அவளுக்குத் தெரிந்தான். நடுவே வந்த மூன்று வருடம் மறந்தே போனது!! அவன் மார்பில் சாய்ந்துகொள்ள வேண்டும்…. வாழ்வின் பாரமெல்லாம் இன்றோடு போக அவனிடம் சரணடைய மனம் துடிக்க.. ஒன்றும் யோசிக்காமல்… “கண்ணா…” என்றாள்… அவள் உயிரோடு அவன் உயிரும் உருக.
அவனுக்கும் அதே நிலை தான். ஏன் வந்தோம்.. எதற்கு வந்தோம்… தன் நிலை என்ன… அவன் யார்? எதுவுமே அவன்  கவனத்தில் இல்லை. அவன் கனவு… நித்தம் நித்தம் அவனைக் கொன்று தின்னக் கனவு.. பாரையில் படிந்த பாசியாய் அவன் இதயத்தில் ஒன்றிப் போனவள் இன்று அவன் முன் தங்கச் சிலையாய் உயிரோடு அவன் கைக்கெட்டும் தூரத்தில், கண்ணில் காதலைத் தாங்கி. “லட்டு” என்றான்.. அவன் ஒட்டுமொத்த காதலை ஒற்றை வார்த்தையில் ஊற்றி..
அவன் மார்பில் சாய அவள் முன் வர.. அவளை அணைக்கும் ஆவலில் அவன் கை நீட்ட..
“என்ன சுதா.. பார்த்துட்டே நிக்கர…. உள்ள வாங்க பாஸ்.. சுதா நம்ம பாஸ் மிஸ்டர்.அஷோக் கண்ணன்” கூறிக்கொண்டே கார்த்தி அவனை உள்ளே அழைத்தான்.
‘அஷோக்?’ அவளுக்கு உயிர் வடிந்தே போனது! ‘இவன் பிருந்தாவின் கணவன்..’ கசப்பான உண்மை… ‘இவனைக் கண்டால் எல்லாம் மறந்துவிடுமா? என்ன காரியம் செய்யத் துணிந்தேன்!’
தொண்டை வறண்டது. இல்லாத எச்சிலை விழுங்கினாள். கைகள் வியர்க்க, இதயம் தட தட-க்க… பிரித்த உதட்டை மூடாமல், இமைக்க மறந்து.. கண்ணெல்லாம் அவனை நிரப்பிக்கொண்டு கண்ணீர் மல்க.. சிலையாய் நின்றுவிட்டாள்.
‘சுதா!?’ அவன் கை தானாய் கீழே இறங்கியது. 
அவன் கருப்பு கண்ணாடியைக் கழட்ட… அந்த உயிரற்ற கண்கள் அவள் உயிரை அவளிடமிருந்து பிடுங்கி எடுத்தது. எத்தனை முறை இந்த வலியை அனுபவிக்க வேண்டும்.
அவன் முகத்தில் ஏகப்பட்ட அதிர்ச்சி! அவளை எதிர்பார்த்து வரவில்லை அவன். இது அவள் வீடு என்று அவனுக்குச் சத்தியமாகத் தெரியாது. அவன் லட்டை அங்கு எதிர் பார்த்து வரவேயில்லை. ஏதேச்சையாக கார்த்திக்கைப் பார்க்க.. கார்த்திக்கின் அழைப்பின் நிமித்தம் வீட்டிற்கு வந்தான். சுதாவைப் பார்க்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரியும்… ஆனால் நிற்பது அவனின் லட்டல்லவா?
சுதாவைக் கடந்து சென்றவன் புஜம் லேசாக அவள் தோளை உரசிச் செல்ல.. அவள் சித்தம் கலைந்தது. மிக லேசான உரசல்.. உணரும் அளவு கூட இல்லை. இருந்தும் அது சுதாவினுள் சென்ற ஆழம் தான் மிக அதிகம். உச்சி முதல் பாதம் வரை புரட்டிப் போட்டது. மூன்று வருடப் பிரிவு அவர்கள் உணர்வை மாற்றவே இல்லையா?
சுதா கை கால் உதர ஆரம்பித்துவிட அவளுக்குப் பேச்சே வரவில்லை. நாக்கு எங்கோ உள்ளே ஒட்டிக் கொண்டது.
“இந்தா உன் குட்டி கண்ணன்… உன்ட்டயே விட்டுட்டு போயிருக்கணும்.. ஒரே அழுகை” அவன் சொல்லி முடிக்கும் முன்னே.. தோளில் அரைத் தூக்கத்தில் அழுது முகம் சிவந்திருந்த ஒன்பது மாத குழந்தை “ம்மா..” என்று கார்த்தி கையிலிருந்து ஏக்கத்தோடு அவளிடம் பாய்ந்தது.
சுதா தவிப்பாய் அஷோக்கைப் பார்க்க அவன் முகத்திலிருந்து ஒன்றுமே புரியவில்லை. ஒரே நாளில் இன்னும் எத்தனை அதிர்ச்சியைத் தாங்குவான்.
அவன் லட்டு தான் கார்த்திக்கின் சுதாவா? மூன்று வருடம் முன் யோசித்தான் இருவரும் ஒருவராய் இருக்குமோவென்று. என்று சுதா அவனிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் தலை மறைவானாளோ அன்றே அவனுக்கு அந்த நினைப்பு மாறிவிட்டது. 
சுதா கார்த்திக்கின் காதலி… அவன் லட்டு வேறு என்று தான் நினைத்தான். அப்படி ஒருத்தி இருப்பது உண்மை என்றால்.. கண்டிப்பாக அவளால் அவனை தவிர வேறு ஒருவனை நினைக்கக் கூட முடியது.. அதால் அது சுதாவாக இருக்க வாய்பே இல்லை என்று எண்ணியிருந்தான். அதுவும் அவள் அமெரிக்கா தான் பயணப்பட்டுள்ளாள் என்று தெரிந்ததும் அவன் வேறு என்ன நினைப்பான்?
அதனாலேயே பிருந்தா என்ன சொல்லியும் சுதாவைக் காணும் நோக்கமில்லை அவனுக்கு! இன்று?  
எல்லாம் இடிந்து தலையில் சரிந்து விழுந்தது. கனவு கனவாகவே இருந்திருக்கலாம். அவன் காணும் கனவுக்கு அர்த்தம் தான் என்ன? கனவு பொய்யா? அவள் தான் கூற வேண்டும்!
கார்த்திக் சுதாவை அஷோக்கிற்கும், அவனின் பழைய பாஸ் அஷோக்கைச் சுதாவிற்கும் அறிமுகப் படுத்தியதெல்லாம் இருவர் காதிலும் எட்டவில்லை.
சுதாவைப் பார்த்தான்.. பார்க்கவே அவ்வளவு அழகு. அவன் கனவில் கண்டவள் போல் இல்லை. புசு புசு கன்னமில்லை. கையில் அடக்க முடியாதளவு நீள் கூந்தல் இப்பொழுது தோளுக்குக் கொஞ்சமே கீழே இருந்தது. உடல் செதுக்கி வைத்தது போல் இருந்தது. கனவில் வந்தவள் அழகு என்றால் நேரில் இப்படி முழு அலங்காரத்தில் நிற்கும் இவள்?.. கண்ணைப் பறித்து அவன் மதியை மயக்கும் அழகு!
அவள் முகத்தில் தவிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. அழுதுவிடுவாள் போலும்! இதயத்தோடு கடித்து பிடித்த உதடும் துடித்தது.
“ம்மா..” என்றுகொண்டே கையிலிருந்த குழந்தை அவள் தோளில் சாய்ந்து கழுத்தில் கிடந்த சங்கிலியை இழுத்துச் சூப்ப… அவன் கண் தானாய் அதில் தொங்கிக் கொண்டிருந்த தாலியில் நிலைத்தது.
அந்த தாலியின் பின்னால் இருந்த இதயத்தின் கதறலும் கண்ணீரும் அவளுக்கும் நமக்கும் மட்டுமேயானது.