செந்தூரன், லாவண்யா மற்றும் அவர்களின் குழந்தையோடு ரெசார்ட் வந்துவிட்டான்.
கருணா சாரதா இருவரும்தான் குருவினை கூட்டிக் கொண்டு வந்தனர். குருவிடம் எதுவும் சொல்லவில்லை. கருணா, வீட்டாரிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டான், அவன் போக்கில் விடுங்கள் என.. அதனால் எதையும் சொல்லவில்லை. சாரதாவிற்கு இதில் பெரிதாக விருப்பமில்லை, ஆனால், அண்ணனை மீற முடியவில்லை.
ரெசார்ட்டில், செந்தூரனை தெரிந்தவர்கள் எல்லோரும் வந்து பேசினார். லாவண்யாவிடமும் வந்து பேசினர்.. லாவண்யா முற்றிலும் மாறியிருந்தாள், தாய்மையின் பூரிப்பில் மினுமினுப்பாக இருந்தாள். குழப்பமில்லாத கண்களோடு.. தயக்கமில்லாத நடையோடு.. எதுவும் நினைவில்லாதவளாகவே இருந்தாள்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். கருணா, மகன் முன்னாள் ஓட பின்னால் வந்தான், அவளை கவனித்துக் கொண்டே. தன்னிடம்தான் குறையோ என எண்ணி விடுவோமோ என சுதாரித்துக் கொண்டான். அப்படி நன்றாக இருந்தான் லாவண்யா. கருணா, தன் பார்வையை மீட்டுக் கொண்டான். இதென்ன வேண்டாம் என்றவளை.. பார்ப்பது என.
குரு எதையும் கவனிக்கவில்லை.. அடிக்கடி வந்ததில்லை இங்கே.. அதனால், வரவேற்பறையை ஓடி ஓடி.. அங்கிருந்த பிள்ளையார்.. பெயிண்டிங்ஸ்.. ப்ளவேர்ஸ் என வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
கருணா, செந்தூரனை பார்த்தான். செந்தூரன் குழந்தையை கையில் வைத்திருந்தான்.. அப்படியே வந்தான் கருணாவை நோக்கி. கருணாவிற்கு என்ன செய்வதென தெரியவில்லை.. பிடிக்கவில்லை இந்தநிலை. ஆனால், தெரியுமே.. சந்திக்கிறார்கள் என.. அப்படியானால், இதை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்.. ‘இப்போது ஓடிபோனால்.. நான் தவறியவனாவேனே’ என அவனின் மனம் எடுத்துரைக்க.. அப்படியே நின்றான்.
சாரதா பின்னால் போன் பேசிக் கொண்டே வந்தவள்.. அந்த காட்சியை பார்த்ததும்.. அழைப்பினை துண்டித்து “செந்தூரன்..” என்றாள்.
கருணா தங்கையிடம் திரும்பி “கத்தாதே” என்றான் நிதானமாக. பின் தன் அறையை நோக்கி கைகாட்டினான். சாரதா சென்றுவிட்டாள்.
செந்தூரன் “தேங்க்ஸ் கருணா.. “ என்றான்.
கருணா புன்னகைத்தான்.
லாவண்யா வரவில்லை.. அங்கேயே எழுந்து நின்றாள். கருணா லாவண்யாவை பார்த்தான் ஒருநொடி.. எந்த பாவனையும் காட்டாமல்.. “குரு..” என்றான்.
வரவேற்பறையில் பணி செய்பவர்கள் எல்லோரும்.. வேலையாக இருப்பது போல.. கண் காதுகளை இங்கேதான் வைத்திருந்தனர்.
கருணா அழைத்ததும் பிள்ளை ஓடி வந்தான்.. யாரென அடையாளம் தெரியவில்லை பிள்ளைக்கு, செந்தூரனை.
குரு திருதிருவென விழிக்க.. கருணா பொதுவாக “பீச்.. மேல ரூம்.. ரெஸ்ட்டாரண்ட்.. எங்க வேண்டுமாலும் பேசுங்க.. ஒன்ஹௌர்..” என சொல்லி கருணா நகர்ந்துவிட்டான் தன்னறைக்கு.
குருவிடம் செந்தூரன் “ஹாய்.. குரு” என்றான்.
லாவண்யா இப்போது அருகே வந்தாள்.. குருவை கட்டிக் கொள்ள.. குருவிற்கு, முதலில் புரியவில்லை.. பயந்தான். பின்தான், அன்னை என உணர்ந்தான்.. என்ன செய்வதென புரியவில்லை.. சட்டென நின்று அன்னையை பார்த்தான் இமைக்காமல்.
செந்தூரன் “அம்மா டா” என்றான்.
குருவின் கண்களில் கண்ணீர்.. லாவண்யா, அமர்ந்து மகனை அனைத்துக் கொண்டாள். எல்லோரும் பட்டும் படாமல் பார்த்தனர் இந்த காட்சியை. ஆயிரம் இருந்தாலும்.. அன்னையின் அன்பிற்கு.. ஈடுஇணை இல்லைதானே.
கருணாவின் கண்களும் இதை பார்த்தது.. நெஞ்சம் வலிக்கத்தான் செய்தது.. இதெற்கெல்லாம் மாற்று ஏற்பாடு செய்யவே முடியாது போல.. என தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இப்போது குரு தன் அன்னையை தொட்டு பார்த்தான்.. தானே கட்டிக் கொண்டான். செந்தூரன் “குரு, வா ஏதாவது சாப்பிடலாமா” என உள்ளே கூட்டி செல்ல முயன்றான். எல்லோரும் வேடிக்கை பார்ப்பது போலிருக்க, இருவரையும் உள்ளே அழைத்தான்.
குரு இப்போது திரும்பி திரும்பி பார்த்தான்.. அவனுக்கு, செந்தூரன் புதிதாக இருந்தான், தன்னோடு வந்த அத்தை அப்பாவை காணோம் என தேடியது அவனின் விழிகள். கண்கலங்க.. எங்கோ ஓடினான்.
கருணாவின், அறைக்கு வந்தான் மகன்.. கருணா இதை எதிர்பார்க்கவில்லை.
குரு கதவை திறந்துக் கொண்டு வந்தவன் அழுகையோடு தந்தையின் கை பற்றியவன் “மாம்.. மாம் ப்பா.. மை மாம்.” என்றான் சந்தோஷமும் அழுகையும் கலந்த குரலில்.
கருணா, மகனை லாவகமாக தூக்கிக் கொண்டான். மகன் நெஞ்சில் சாய்ந்து முகம்காட்ட மறுத்தான்.
குரு தன் தந்தையின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு “ஏன் சொல்லலை.. என்கூடவே இருப்பாங்களா.. ம்.. மாட்டாங்களா” என்றான்.. தெளிவில்லாத குரலில்.
கருணா, மகனின் தலை முதுகு என ஆறுதலாக வருடினான்.. “சரி, சரி..” என்றான்.
செந்தூரன், கருணாவின் அறை வாசலுக்கு வந்துவிட்டான் இப்போது, என்ன ஆகிற்றோ என. கருணா, கண்களால் ‘அங்கேயே இரு’ என்பதாக அறிவுறுத்தினான்.
குரு கொஞ்சம் சமாதானம் ஆனதும்.. தந்தை “இங்க பாரு குரு.. அவங்க உன்னை பார்க்க வந்திருக்காங்க.. அவ்வளவுதான். நீ அழாத. அவங்க பயந்துடுவாங்க.. கொஞ்சநேரம் அவங்களோட இரு, அதுக்குதான் வந்திருக்காங்க.” என்றான் கருணா.
குரு பெரிய விஷயத்தை கேட்டான் “அந்த அங்கிள் யாரு” என்றான்.
தந்தை இப்போது விளக்கம் சொல்ல வேண்டும். எல்லாம் தெரிந்த புரிந்த மனங்களால் கூட சட்டென இந்த உறவினை விளக்கிட முடியுமா.. புரிந்திட முடியுமா தெரியவில்லை.. பலநேரம் ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறுகிறோம். இந்த பிள்ளைக்கு எதோ புரிகிறது.. அதுதானா என உறுதி செய்ய கேட்க்கிறது பிள்ளை.. கருணாவின் முகம் மீண்டும் உணர்வுகளை துடைத்துக் கொண்டது.. “நான் சொன்னேனே.. அன்றே” என்றான் மகனுக்கு நினைவுப்படுத்தும் விதமாக.
குரு நிமிர்ந்து தந்தையின் முகம் பார்த்தவன் “உங்களுக்கு ஏன் லவ் கொடுக்க தெரியலை” என்றான்.
கருணா ஓய்ந்து போனான்.
குரு “இப்போ நீங்க என்கிட்டே அப்பாவதானே இருக்கீங்க, அப்போ ஏன் அம்மாகிட்ட இல்லை” என்றான், அன்றைய சிந்தனையின் புரிதலில்.
கருணா சிரித்தான்.. இப்போது நான் அவனிடம் பாசமாக இருப்பதை போல.. ஏன் அம்மாவிடம் அப்போது இல்லை, அதனால்தான் இந்தநிலை என இப்போதுதான் மகனுக்கு புரிய கேள்வி கேட்க்கிறான்.. என எண்ணி சிரித்துக் கொண்டான். அன்று இதெல்லாம் அவனுக்கு தெரிய வேண்டும் என்று எண்ணி சொல்லியவன்.. இன்று எதுக்கு குழந்தை இதையெல்லாம் புரிந்துக் கொள்ளவேண்டும் என தோன்றியது போல.
குரு கீழே இறங்கினான் “பைன்..” என சொல்லி, தன் கண்களை துடைத்துக் கொண்டவன்.. ரகசிய குரலில் “அந்த பாப்பா யாரு.. அந்த அங்கிள் பாப்பாவா.. அம்மாதான் அதுக்கும் அம்மாவா” என்றான்.
கருணாவின் பார்வை எதிரில் தன் அறைக்கு வெளியே நின்ற செந்தூரனை அனிச்சையாய் பார்த்து மீண்டது.. மகனிடம் கருணா “ம்.. ஆனால், அதெல்லாம் ஏதும் கேட்க்காத. வேண்டாம்” என்றான் மகனிடம்.
குரு “எனக்கு மட்டுமான அம்மா இல்லையா” என்றான், அந்த பிஞ்சு குரலின் வலியை தந்தையால் உணர முடிந்தது.
கருணா நொந்து போனான், பொறுமையை அவனால் இதற்குமேல் இழுத்துபிடிக்க முடியும் என தோன்றவில்லை தன் இருகைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு மகனை முறைத்தான்..
குரு புன்னகைத்தான் “ஒகே.. எனக்கும் அம்மா வேண்டும்.. வேற” என்றான்.
குரு “என்ன பேசணும்” என்றான்.. விழித்துக் கொண்டு. பெரியவர்களே ஒரு நிகழ்வினை புரிந்துக் கொண்டு நடக்க காலம் தேவைப்படும் போது.. குழம்பும் குழந்தை என்ன செய்யும்..
கருணா “சும்மா.. பேசு போ.. இந்தியா பாகிஸ்தான் மேட்ச் பத்தி பேசு போதும். போ.. சீக்கிரம் வா ஓன் ஹௌர்தான் டைம்” என்றான்.
குரு தன் இருகைகளாலும் தலையை கோதிக் கொண்டு.. தந்தையை பார்த்து லேசாக சங்கடமாக புன்னகைத்துவிட்டு திரும்பி நடந்தான்.
கருணா பெருமூச்சு விட்டு அமர்ந்தான்.
லாவண்யா குரு செந்தூரன் அந்த குட்டி பெண் எல்லோரும் மேலே ஒரு அறைக்கு சென்றனர்.
மகனிடம் என்ன படிக்கிறான் எங்கு படிக்கிறான்.. ஏன் ஹாஸ்ட்டல்.. என்ன சாப்பிடற என் கேட்டு மூவரும் எதோ ஆர்டர் செய்து உண்டனர்.. குருவின் கையில் குட்டி பாப்பாவையும் கொடுத்தனர். குரு விளையாடினான். அன்னை கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லினான்.. எதிர் கேள்வி ஏதும் கேட்கவில்லை. சட்டென அம்மா என அழைக்கவில்லை.. அருகில் வந்து தானாக அனைத்துக் கொள்ளவில்லை.. நெருங்கி கூட அமரவில்லை.. எதோ விலகல்.. குருவிடம். லாவண்யாவும் அதை அறிந்தும் கொண்டாள். மகனிடம் கேட்கவில்லை என்னை அம்மாவென அழை என. மகன், அவள் எண்ணி வந்தது போல.. இல்லை போல. அன்னைக்கு வருத்தம்.. செந்தூரன் கண்களால், லாவண்யாவை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தான் அடிக்கடி.
நேரம் சற்று அதிகமாகவே ஆகியது. ஒரு பணியாளர் வந்து ‘குருவை கூட்டி வர சொன்னார் கருணா சர்’ என தகவல் சொன்னான்.
செந்தூரன் லாவண்யா இருவரும் புரிந்துக் கொண்டு.. குருவிடம் விடைபெற்று கிளம்பினர்.
செந்தூரன் கருணாவின் அறைக்கு வந்தான் விடைபெற.. கருணா வெளியே வந்து தலையசைத்து விடைகொடுத்தான் ஏதும் பேச அனுமதிக்கவில்லை.
சாரதாவும் குருவும் முன்பே வீடு வந்துவிட்டனர்.
கருணா, சுபிஷாவின் வேலை விஷயமாக சென்றுவிட்டான்.
மறுநாள் குருவின் பிறந்தநாள். காலையில் பாட்டி தாத்தா அத்தை குட்டி பசங்களோடு கோவில் சென்றான் குரு.
விசாகன் பள்ளி சென்றுவிட்டான். மாலையில்தான் இருவரும் பார்க்கலாம் என ஏற்பாடு. கருணா, கோவிலுக்கு செல்லவில்லை. மகனை வாழ்த்திவிட்டு கிளம்பி சென்றுவிட்டான்.
மாலையில் வீட்டு அளவில் சின்னதாக கேக் கட் செய்து கொண்டாடினர். விசாகன் ஸ்கேட்டிங் சைக்கிள் போல வாங்கி கொடுத்தான். எதிரில் இருந்த இவனோடு விளையாடும் பிள்ளைகள் எல்லாம் வந்திருந்தனர் அவர்களுக்கு கேம்ஸ்.. இரவு உணவு.. என விழா நல்லபடியாக முடிந்தது.
விசாகனின் தாத்தா ஒன்பதுமணிக்கு வந்து பேரனை அழைக்கும் வரை.. விசாகன் வீடு வரவில்லை.
மறுநாள் காலையில் குரு பள்ளி கிளம்பிட்டான். என்னமோ இந்தமுறை தந்தையிடம் பேசிவிட்டு சென்றான்.
கருணாவும் வழியனுப்ப கீழே வந்தான்.. குரு அருகில் நிற்கவும் கண்ணில் எதோ ஏக்கமாக தந்தையை ஏறிட.. கருணா மகனை தூக்கிக் கொண்டான் நெஞ்சோடு.. குரு தந்தைக்கு முத்தம் வைத்தான். கருணா “டேய்.. பிக் பாய் டா நீ..” என சொல்லி தானும் அவனின் நெற்றியில் முத்தம் வைத்து கீழே மகனை இறக்கிவிட்டான். பின் “சமர்த்தா இரு.. பிக்கப் பண்ண நான் வரேன்” என்றான்.
குரு “கண்டிப்பா வரணும்..” என்றான்.
கருணா சிரித்துக் கொண்டே தலையாட்டி “ டைம் ஆச்சு.. பை.. தாத்தா வெயிட் பண்றார்.. கிளம்பு..” என்றான்.
மகனும் புன்னகையோடு ஓடி சென்று காரில் ஏறிகொண்டான்.
நல்ல மாற்றங்கள் அனைவருக்கும் தேவைதானே.
நாட்கள் வேகமாகவே நகர்ந்தது.
கருணா, எதற்கும் சுபியை அழைக்கவில்லை. எல்லா வேலைகளையும் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக ஏற்பாடு செய்தான்.
சங்கீதாவிடம் பேசியிருந்தான் கருணா. அதன்பின் அவனுக்கு, சங்கீதாவின் நிலை புரிய.. எல்லா ஏற்பாடுகளையும் வேகமாகவே செய்தான். இவன் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை.. எப்படி வழி என்பதை காட்டினான்.
அதேபோல, சுபிக்கு அழைத்து ஏதும் அதன்பின் பேசவில்லை கருணா. தன் தந்தையிடம் எல்லாம் சொல்லிவிட்டான், எப்போது சென்று பார்க்க வேண்டும் யாரை பார்க்க வேண்டும் என எல்லா விவரமும் சொல்லியிருந்தான்.
அதன்படி மாசிலாமணி தம்பதி பார்த்து வந்தனர்.. தேவையான டீட்டைல்ஸ் கொடுத்து வந்தனர். சுபிதான் அவர்களை கூட்டி போனாள். அதன்பின் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கேட்டு சொல்லியிருந்தான் தன் தந்தையிடம்.
இப்படி எல்லா ஏற்பாடுகளையும் கருணா தந்தையிடம் சொல்லியோ.. சங்கீதாவிடம் சொல்லியோ.. செய்ய சொல்லிவிட்டான்.
சுபிக்கு, சங்கீதா பேசும் போதுதான்.. கருணா என்ன என்ன செய்து தந்தார் என விவரம் சொன்னால், அக்கா. அப்போதுதான் தெரிந்தது சுபிக்கு, கருணா தன்னிடம் பேசவில்லை.. அக்காவிடமும் தந்தையிடமும் எல்லாம் பேசியிருக்கிறார் என.
அதனால், கொஞ்சம் கஷ்ட்டமாக போனது பெண்ணுக்கு, அன்று பேசியது தவறாகிவிட்டதோ என. கருணாவை பார்த்து ‘விளக்கம் சொல்ல வேண்டும் போலவும் இருந்தது.. வேண்டாம்..’ எனவும் இருந்தது. அதனால் குருவை பார்க்கும் போதெல்லாம் கருணா தென்படுகிறானா.. சற்று பேசி.. நான் ஒன்றும் நினைக்கவில்லை என சொல்லும் எண்ணம் சிலநேரம் எழுந்தது அவளுள். ஆனால், கருணா கண்ணில் படவேயில்லை.
போனில் அழைத்து பேச.. பெரிய தயக்கம் சுபிக்கு. அதனால், அழைக்க தயக்கம் அவளுக்கு. இப்படியே நாட்கள் கடந்தது.
வேலைகள் நடந்தது தன்போல. சங்கீதா போன் செய்து சுபிக்கு எல்லாம் ஏற்பாடுகளும் கவனிக்க சொன்னால்.. அப்படியே செய்தாள் சுபி, விசா கிடைத்துவிட்டது சுபியின் பெற்றோருக்கு.
சுபி பெற்றோரை ஆஸ்ட்ரேலிய அனுப்புவதில் பிஸியாகினாள். அவர்களுக்கு தேவையானவைகளை வாங்குவது.. மசாலா சாமான்கள் சேகரிப்பது.. சங்கீதாவிற்கு தேவையானவற்றை வாங்குவது என.. அதில் பிஸியாகினாள்.
தன் சம்பந்தியை வழியனுப்பி விட்டு, சுபியோடு உடனிருக்க என.. சுபியின் மாமனார்.. வினு, அவர்களின் இளைய மகன் சபரி.. இவர்களுக்கு காரோட்டியாக வீரா.. நால்வரும் இன்று காலையில் வந்துவிட்டனர்.
மாசிலாமணிக்கு வருத்தமே இப்போது சுபியை பற்றிதான். எப்படி சமாளிப்பாள் என இருந்தது. ஆனால், பெரியமகளையும் கவனிக்க வேண்டுமே.. சுபி நான் பார்த்துகிறேன் என்றிருந்தாள். இளையவள் தைரியம்தான்.
சுபி, தனது சென்டரில் புதிதாக இரண்டு நபர்களை வேலைக்கு எடுத்திருந்தாள். முன்பே மூவர் இருப்பர்.. இப்போது ஐந்துநபர்கள் இருந்தனர். காலை மாலை என இருவேலையும் பிராக்டீஸ்க்கு என இவர்கள்.. வீடு தேடி செல்வர். சிலநேரம் சென்டர் வருபவர்களையும் கவனிக்க வேண்டும். சுபி, முக்கியமான மருத்துவமனைகளுக்கு செல்லுவாள்.. இவள் எலும்பு நரம்புகளுக்கான ப்ராக்டீஸ் பெற்றவள், அது சம்பந்தமான அறுவைசிகிச்சை நபர்களை பழையபடி தங்கள் வேலையை தாங்களே பார்க்குமாறு உடலின் இயக்கங்களை பயிற்றுவிப்பது இவளின் வேலை.
இரவு நேர விமானம். சுபிதான் காரெடுத்தாள். வீரா, தான் வருவதாக சொல்ல.. எத்தனை நபர்கள் போவது என முனகினாள்.
சுபியின் மாமனார் வீராவை வீட்டில் இருக்குமாறு பணித்தார்.
விசாகனுக்கு, விளையாட சபரி வந்ததில் விளையாடியபடியே உறங்கிவிட்டான். அதனால் வினு பிள்ளைகளோடு வீட்டில் இருந்தாள். சுபியின் மாமனார் உடன்வந்தார்.. ஏர்போர்ட்டிற்கு.
அருணகிரி வந்தார் நண்பனை வழியனுப்ப.. இப்போது ஒருதரம் அவரிடம் சொன்னார் மகளை பார்த்துக் கொள்ளும்படி. மாசிலாமணி முன்பே தெருவில் உள்ளவர்களிடம் சொல்லியிருந்தார்.. மகள் பேரன் இருவரும் இருப்பார் பார்த்துக் கொள்ளுங்கள் என. இந்த தெருவில் நான்கு வீடுகள் மட்டுமே பழைய ஆட்கள் இப்போதும் இருந்தனர். இப்போதும் அவர்கள் பேசிக் கொண்டும் விருந்து விழா என்றால் அக்கம் பக்கம் அழைத்துக் கொண்டும் இருந்தனர். மற்றபடி எல்லா வீடுகளும் கமர்ஷியலாக மாறிவிட்டது. சுபி கார் நிறுத்துமிடம், பெரிய வீட்டில் ஒரு பெரிய பொட்டிக் இருக்கிறது. அப்பார்ட்மெண்ட் என ஒரு வீட்டினை மாற்றிவிட்டனர். இப்படி நிறைய. மாசிலாமணி தன் சம்பந்தி வருவதை அறிந்து பேச்சினை விட்டு ‘வருகிறோம்’ என சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
சுபி ஏர்போர்ட்டில் எல்லா பெட்டிகளையும் இறக்கி.. ட்ராலியில் வைத்து.. என அவளின் தந்தையும் அவளும் செய்துக் கொண்டிருந்தனர்.
சுபியின் மாமனார் “இதற்குதான் வீரா வந்திருகணும் எல்லாம் செய்திருப்பான்” என்றார்.
சுபி இந்தமுறை “எதுக்கு மாமா லக்கேஜ் எடுக்கவா. அதெல்லாம் எதற்கும் அவர் வேண்டாம் மாமா.. நீங்கதான் எதோ அடியாள் மாதிரி அவரை கையோடவே வைச்சிருக்கீங்க, எனக்கு அடியாள் வேண்டாம் மாமா” என்றாள்.. முகமெல்லாம் கடுகடுவெனவே இருந்தது.. இப்படி பேசுபவள் இல்லை, ஆனால், என்னமோ தன் மாமனார் செய்வது சரியில்லை என தோன்ற சொல்லிவிட்டாள் பெண்.
அவளின் மாமனார் அமைதியானார்.
சுபியின் பெற்றோர் லேசாக பெண்ணை அதட்டினர். ஏதும் பெரிதாக அதை பேசவில்லை.. சுபியின் அன்னை மகளை சமாதானாப்படுத்தினார்.
சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.. சுபி அன்னை தந்தையை அணைத்து “குட்டி பாப்பாவை பத்திரமா கொண்டுவாங்க.. அவளை சந்தோஷமா இருக்க சொல்லுங்க.. மாமாவை கேட்டேன்னு சொல்லுங்க.. நான் வாங்கி கொடுத்த எல்லாவற்றையும் மறந்திடாமல் நான்தான்னு வாங்கினேன்னு சொல்லுங்க” என்றாள்.
இருவரும் விடைபெற்று உள்ளே சென்றனர்.
சுபியும் மாமனாரும் பேசிக் கொண்டே காரில் வீடு வந்து சேர்ந்தனர்.