சரியாக விசா, எழுந்து வந்து அன்னையின் கால்களை கட்டிக் கொண்டான்.. பெண்ணவள் அப்படியே நின்றாள்.. எதோ நினைவில்.

விசாகன் “ம்மா.. எங்க போற” என்றான்.. பாலகன்.

அடுத்தநொடி கீழே அவனுக்கு ஈடாக அமர்ந்த அவனின் அன்னை “நாம எல்லோரும்தான் போறோம்.. அத்தை கல்யாணத்துக்கு.. நர்மதா அத்தை கல்யாணம் டா.. போலாமா” என்றாள், பொறுமையாக. 

விசாகன் “நான் எப்போ கிளம்பனும்” என்றான்.

சுபிக்கு புன்னகைதான் வந்தது.. “போ.. பாத்ரூம் போயிட்டு வா” என்றாள்.

விசாகன் அன்னையை விட்டு சென்றான்.

சுபி புடவையை சரியாக கட்டிக் கொண்டாள். மகனுக்கு உடைகளை எடுத்துக் கொண்டிருந்தாள். 

மகன் பிரஷ் செய்து வந்ததும்.. புடைவை இழுத்து சொருகிக் கொண்டவள்.. குளிக்க வைக்க கூட்டி சென்றாள் மகனை. 

மகனை கிளம்பி வெளியே கூட்டி வந்தாள்.

காலை 3:30க்கு காரெடுத்தாள் சுபி. தந்தை, தான் ஓட்டுக்கிறேன் என்க.. “இல்ல ப்பா.. ரிட்டன் வரும்போது டிரைவ் பண்ணுங்கப்பா..” என்று காரெடுத்தாள்.

மாசிலாமணி வைதேகி தம்பதியின் இளையமகள் சுபிக்ஷா 28. மூத்தவள் சங்கீதா 35. சங்கீதா திருமணமாகி கணவனோடு ஆஸ்ட்ரேலியாவில் இருக்கிறாள். திருமணமாகி ஒன்பது வருடங்கள் சென்று இப்போதுதான் கருவுற்றிருக்கிறாள்.

அஹ.. சுபிக்ஷா திறமையானவள். கல்லூரி இறுதி வருடம் முடித்ததும்  திருமணம்.. வேலைக்கு செல்ல வேண்டும் என்றாள் பெண். தந்தை, நல்ல இடம் டா.. எனக்கும் இந்த வருடம் ரிட்டயர்மென்ட்.. என பெண்ணினை சம்மதிக்க வைத்தார்.

லட்சுமிகாந்தன், மூத்த மாப்பிள்ளையின் தூரத்து உறவு. அத்தோடு வேலை.. மாத சம்பளம் என இல்லை.. வியாபாரம். பெரிய குடும்பம்.. தனியே முத்தமகள் போல தூரத்தில் இருக்க வேண்டாம்.. சொந்தங்களோடு இருப்பாள் என யோசித்து உடனே அவர்கள் பெண் கேட்கவும்.. சம்மதித்தார். ஜாதகம் மணமக்களின் மன பொருத்தம் என எல்லாம் பார்த்துதான் திருமணம் நடத்தினர்.

இப்போது, மண்டபம் வந்துவிட்டனர். பொறுமையாக இடம் பார்த்து தனது i20 பார்க் செய்துவிட்டு. மூவரும் இறங்கி வந்தனர்.

மண்டபம் நெருங்கியதும்.. இவர்களின் வரவினை எதிர்பார்த்திருந்த சுபியின் மாமனார்.. வந்து வரவேற்றார்.

மண்டபம் உள்ளே வந்திருக்க.. லக்ஷ்மிகாந்தனின் அண்ணன் அண்ணி இருவரும் வரவேற்றனர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.. தனீஷ் 10, சபரீஷ் 6.. கொஞ்சம் பெரிய பசங்க தான். 

சுபியின் மாமனார் தன் தம்பியை தேட.. உறவுகள் எல்லாம் வந்தனர் தங்கள் மருமகளையும் சம்பந்தியையும் வரவேற்க. இன்முகமாக எல்லோரும் வரவேற்று.. ஏன் சுபியின் அன்னை வரவேயில்லை என செல்ல சண்டையிட்டு.. பேசிக் கொண்டிருந்தனர். அமரந்தனர்.

எங்கிருந்தோ வேகமாக வந்த வீரா ஆர்பாட்டமான குரலில் “மாமா வாங்க.. ஏன் நேற்றே வரலை..” என கேட்டவனின் பார்வை, சுபியை மொய்த்தது கபடமில்லாமல்.. கேள்வி அவளுக்கானதாம். அப்படியே  விசாகனை தூக்க முற்பட்டான்.

விசாகன் “சித்தப்பா.. விடுங்க” என்றான் வீராவை விட சத்தமாக.

வீரா “ஹே.. விசா, ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் வா” என சொல்லி மீண்டும் தூக்க எத்தனிக்க..

விசாகன் “நோ சித்தப்பா..” என சொல்லி ஓடிவிட்டான்.

இப்போது சுபி எதையும் கண்டுக் கொள்ளாமல்.. அவளின் ஓரகத்தியோடு நடந்தாள். மணமகள் அறைக்கு சென்றனர்.

இளைய நாத்தனார் நர்மதா. மணகோலத்தில் தயாராகி அமர்ந்திருந்தாள். சுபியை பார்த்ததும் எழுந்து அணைத்துக் கொண்டாள் “ஏன் ரிசப்ஷன் வரலை.. அண்ணி. அண்ணனுக்கும் சேர்த்து நீங்க இருந்திருக்க வேண்டாமா” என்றாள்.. கண்களில் நீர் தளும்ப. 

‘உண்மைதானே’ ஆனால், முடியவில்லை.. ஒருமாதிரி வலிக்கிறதே பெண்ணவளுக்கு. எங்கோ! தன் சோகம் சந்தோஷமானவர்களை தாக்கிடுமோ என எண்ணினாள் போல. அமைதியாகினாள்..

இப்போது சட்டென சுதாரித்து “அதான் வந்துட்டேனே.. ச்சு, அழகூடாது.. மேக்கப் கலையுது பார்..” என்றவள்.. புன்னகையோடு.. புதுபெண்ணின் கன்னம்தட்டி.. அவளை சமாதானம் செய்தாள்.

மூவரும் சற்று நேரம் பேச.. “முகூர்த்தத்திற்கு நேரமாகிறது பெண்ணை அழைச்சிண்டு வாங்கோ” என்ற குரல் வர.. சுபி, போன் பார்ப்பது போல.. சற்று தள்ளி நின்றுக் கொண்டாள். 

மாப்பிள்ளையின் அக்கா.. பெண்ணின் சித்தி என வந்தவர்கள் நர்மதாவினை மணமேடை அழைத்து சென்றனர்.

வீரா நர்மதாவின் உடன்பிறந்தவன். மேடையில் நின்றான், தன் பெற்றோரோடு.

திருமணம் இனிதாக நடந்தது. விசாகன் பெரியப்பா பிள்ளைகளோடு விளையாட சென்றுவிட்டான். அன்னை வந்து உணவு ஊட்டவும்தான் உண்டான். அதுவரை, கண்மண் தெரியாமல் விளையாட்டு.. அங்கும் இங்கும் ஓடி ஆட்டம்தான்.

நேரம் கடந்தது.. மணமக்கள் அவர்கள் வீடு சென்றனர். 

சுபியின் மாமனார் “வீட்டுக்கு வரதானே” என்றார், தன் இளைய மருமகளிடம். வா எனும் உத்தரவாக இருந்தது அது.

சுபி, தலையசைத்து காரெடுக்க செல்ல.. அவள், கணவனின் அண்ணன்.. தன் மனைவியிடம் “சாவி வாங்கு” என வாங்கிக் கொண்டு.. காரெடுத்து வந்தார். தன் தந்தையையும் சுபியின் தந்தையையும் பின்னால் தன் சொந்தத்தோடு அனுப்பிவிட்டு.. தானும் தன் மனைவி பிள்ளைகள் சுபி என எல்லோரையும்  கூட்டிக் கொண்டு வீடு வந்தார். 

சுபிக்கு, எப்போதும் போல தன்னவன் நிழல் தாக்கியது.. ‘அவனோடு வாழ்ந்த வீடு.. எங்கும் அவனோடு இருந்த ஞாபகங்கள்..’ என ஒரு ஓரமாக நின்றாள்.. சுபி. 

பிள்ளைகள் உறங்கியிருந்தது.. அதனால், அவளின் மச்சினரும்.. ஓரகத்தியும் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு அவர்களின் அறைக்கு சென்றனர். 

சுபி, பூஜையறை சென்றாள் முதலில்.. தன் கணவன்.. மாமியார் இருவரின் புகைப்படமும் இருந்தது அங்கே. இருவரையும் வாங்கினாள். சற்று நேரம் அவர்கள் முன் நின்றாள்.. ஒருமாதிரி சங்கடமாக இருந்தது.. ‘எத்தனை ஆனந்தமாக இருந்த வீடு இது’ என தோன்றியது. 

தங்களின் அறைக்கு வந்துவிட்டாள். இன்னமும் அந்த அறையில் அவனின் வாசம் இருப்பதாக உணர்ந்தாள்.. மூச்சினை இழுத்து, அவன் காற்றினை வாங்கிக் கொண்டாள். அமைதியாக கட்டிலில் சாய்ந்து அம்ர்ந்துக் கொண்டாள்.

சுபிக்கு சமையல் தெரியாது.. திருமணமான புதித்தில். மாமியார் தன் ஓரகத்தி வினு என இருவரும் பார்த்துக் கொள்வர். இவள் கிட்சென் பக்கமே வரமாட்டாள். அவர்களின் கடைக்கு செல்வது.. அங்கே சென்று வேலை பார்ப்பது.. கஸ்டமர் அட்டென் செய்வது.. பில் போடுவது.. கணக்கு எடுப்பது.. பார்ப்பது.. மாலையில் வண்டி எடுத்துக் கொண்டு மார்கெட் செல்வது.. தன் கணவரின் அண்ணன் பிள்ளையை பள்ளி விடுவது.. கூட்டி வருவது.. என மற்ற எல்லா வேலைகளையும் செய்வாள்.. 

அவளின் கணவன் கிண்டல் செய்வான்.. கொஞ்சம் குறைபட்டுக் கொள்வான்  ‘என்னால் ஹஸ்பன்ட்டா பீல் செய்யவே முடியலை டி.. கொஞ்சம் வீட்டில்தான் இரேன். நான் வரும் போது. அண்ணி பாரு.. அண்ணனை எப்படி கவனிக்கிறாங்க.. நீ நான்  வீட்டுக்கு வரும் போதெல்லாம் இருப்பதேயில்லை..’ என குறைபட்டுக் கொள்வான்.

இன்று அவன் இல்லை.. நினைவுகள் சிலநேரம் ரணமானவை. கண்ணீர் இல்லை கண்ணில்.. பாரம் மட்டும் மனதில். பழகிவிட்டது அவனில்லாமல். அஹ.. காலம் ஏன் ஓடியது என தெரியவில்லை.. எப்படி பழகினேன் என புரியவில்லை.. ஆனால், எதுவும் என் கையில் இல்லை.. என மனம் தத்துவம் சொல்ல.. எப்போதும் போல.. விசாகன் சத்தம் கேட்டது.. அதை கேட்டு மீண்டாள் பெண்.

தன் தந்தை.. மாமனார்.. உறவுகள் சிலர் என எல்லோரும் இருக்க.. சுபி தனியே அமர்ந்திருப்பது ஒருமாதிரி இருந்தது, பெரியவர்களுக்கு.

சுபியின் மாமனார்க்கு வருத்தமாக இருந்தது, சுபியின் நிலையை பார்க்க. ஆனால், காலம் அவரையும் தானே தண்டித்திருக்கிறது. இதில் யார் துயரம் பெரிதென பேச. ஆனால், மாமனாராக தன் வருத்தத்தையும் மீறி அவருள் ஒரு சோகம்.. ‘இப்படி இந்த சின்ன பெண்  பிள்ளையோடு அல்லாடுவதை பார்க்க சங்கடமாக இருக்கிறது’ என. ஆனால், விதியின் வழியில் அவருக்கு, வருத்தப்படுவதையும் சங்கடப்படுவதையும்  தவிர வேறு வழியில்லையே, போல.

மாலையில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். மகனை கவனித்துவிட்டு.. வெளியே வந்தாள். வினுவோடு சேர்ந்து எல்லோருக்கும் காபி கொடுத்தாள் சுபி.

வீரா வந்தான் இப்போது.