சில்லென புது மழைத்துளி!

6

குரு இதுபோல கேட்டதில்லை. 

அருணகிரி “ஏன் குருப்பா.. என்ன ஆச்சு” என்றார்.

குரு தன் தந்தையை பார்த்தான் ஓரகண்ணில். பேசவில்லை அமைதியாக தாத்தாவின் தோளில் சாய்ந்துக் கொண்டான்.

தாத்தா “சொல்லு ப்பா” என்றார். பேரன் இப்போது நன்றாக தன் தந்தையை பார்த்துக் கொண்டே ‘கேட்க்காதீங்க’ என கண்களால் ஜாடை காட்டினான், தந்தையை காட்டி.

தாத்தா “அவனுக்கெல்லாம் நீ பயப்படாத” என்றார், சின்ன குரலில் பேரனின் காதில். பலநேரம் இப்படிதான்.

குரு அமைதியானான்.

கருணா “என்ன குரு வேணும்” என்றான், குரல் குழந்தையிடம் பேசுவது போலில்லை.

மகன் அமைதியாக அமர்ந்துக் கொண்டான்.. ‘ஒன்றுமில்லை’ என தலையசைத்து.

அருணகிரி, கருணாவிடம் “என்ன டா, குழந்தையை மிரட்டுற” என்றார்.

அருணகிரி தீவிரமாக “குரு, ஹோம்வொர்க் இன்னும் செய்யலையா.. இல்ல வேற ஏதாவதா, அத்தை வந்திருக்காளே.. கேளு சொல்லி தருவா” என்றார், பேரனை ஊக்குவிக்கும் எண்ணத்துடன்.

கருணா “பதில் சொல்லு குரு, தாத்தா எத்தனைமுறை கேட்க்கிறார்.. என்ன வேணும் உனக்கு” என்றான்.

குரு சின்ன குரலில் “ப்பா, நானும் வீட்டிலிருந்து ஸ்கூல் போறேனே” என்றான். தந்தையிடம் அந்த குழந்தை செல்லம் கொஞ்சவில்லை.. அதற்கான இடமேயில்லை அவர்களுக்குள். குழந்தை கோரிக்கைதான் வைத்தது.

கருணா முதலில் விழியிடுங்க பார்த்தான் மகனை. 

அருணகிரி “க்கும்.. என்ன ப்பா” என தன் மகனை திசை திருப்பினார்.

கருணாவும் குழந்தைக்கு புரியவைக்கும் எண்ணத்துடன் “பாட்டிக்கு இன்னமும் சர்வீஸ் முடியலை.. ஈவின்ங் உன்னை யார் பார்த்துப்பா..  காலையில் நீ கிளம்பனும்.. உன்னை கிளப்பணும்.. எப்படி முடியும் அவர்களால்.. வயசாகுதுல்ல. அதனால்தான், கொஞ்சநாள்.. நீ பிவ்த் வந்ததும்.. பக்கத்தில் சேர்ந்துக்கலாம்” என்றான், நிதாமானவனாக.

குரு தந்தையை ஏக்கமாக பார்த்தான்.. பின் “நானே கிளம்பிப்பேன்.. ஹாஸ்ட்டலில் நானாகத்தானே எல்லாம் செய்துக்கிறேன். எனக்கு இங்கதான் பிடிச்சிருக்கு.. தினமும் நானும் விசாவும் விளையாடுவோம்.. அவன் கூடவே படிப்பேன்.. ஜாலியா இருக்கலாம்..” என, குழந்தை மனதில் உள்ளதை சொன்னான்.

கருணாவிற்கு கோவமாக வந்தது.. அம்மா அப்பாவிற்கு சிரமம்.. எதனால் இப்படி கேட்க்கிறான். யார் அவனை பார்ப்பது.. எனத்தான் எண்ணம்.

அருணகிரிக பேரனை நினைத்து யோசனை.. இப்படி அவன் கேட்டதேயில்லை.. இப்படி பள்ளியில் சேர்த்த புதிதில் அழுவான் அடம் செய்வான்.. அவனின் தந்தை ஒரு சத்தம் போட்டதும் கிளம்பிடுவான்.. வழி முழுவதும் அழுது ஆர்பாட்டம் செய்துக் கொண்டேதான் வருவான், தங்களிடம். ஆனால், பள்ளியை பார்த்ததும் கண்களை துடைத்துக் கொண்டு.. யார் முன்னும் அழுது ஆர்பாட்டாமல் செய்யாமல் கிளம்பி சென்றிடுவான் பேரன். அதிகம் அம்மாவை அவன் கேட்டதேயில்லை.. என்ன புரிந்தது.. என பாவம் குருவின் தாத்தாபாட்டி பேசிக் கொள்வார்கள். இப்போது இந்த ஆசை பேரனுக்கு.. என தாத்தா யோசித்தார்.

தாத்தா தன்னோடு அணைத்துக் கொண்டார் பேரனை “உனக்கு இங்கிருந்து படிக்கனுமா” என்றார்.

குரு ஆர்வமாக தாத்தாவை பார்த்தான். தாத்தா “நீ இங்கிருந்து ஒழுங்கா படிப்பியா?” என்றார்.

குரு கண்கள் மின்ன பார்த்தான் தாத்தாவை “ம்..” என்றான்.

தாத்தா “இந்த வருஷம் முடியட்டும்” என்றார்.

குரு “ஹோ.. தாத்தா.. இப்போவே” என்றான், சட்டென முகம் வாட.

கருணா “அப்பா.. என்ன ப்பா, இது..” என்றான்.

இப்போது தீபுவின் சத்தம் கேட்டது.. சாரதா மகளோடு வந்தாள் அங்கே “குரு எழுந்துட்டீங்களா” என்றாள்.

குரு “ம்.. அத்த, தாத்தா என்னை இங்கேயே ஸ்கூல் சேர்க்க போறாங்க..” என்றான் புன்னகையோடு.

சாரதா “ஹோ.. அப்படியாடா.. தங்கம். சூப்பர்.. நீ பெரியா பையனாகிட்டியா..” என தன் தந்தையின் அருகே வந்து குருவை கொஞ்சினாள்.. அத்தை.

குரு “ம்..” என சொல்லி தீபுவை தூக்கிக் கொண்டான்.

இரு பிள்ளைகளும் உள்ளே சென்றனர் பாட்டியை பார்க்க.

கருணா “எதுக்கப்பா, இதெல்லாம்” என்றான்.

அருணகிரி மௌனமானார்.

சாரதா “கருணா, இன்னமும் எதுக்குன்னு கேட்டுக்கிட்டு.. உன் பையன் உன்கூடதான் இருக்கனும். நீதான் அவனை பார்த்துக்கணும்.. பாவம் அவன். உன்கிட்ட எப்போவாவது குழந்தை அம்மாவை பற்றி கேட்டிருக்கா. ஆனால், நீ அவனை யோசிக்கவேயில்லை. இனி யோசி.. அவனுக்காகவே நீ இன்னொரு கல்யாணம் செய்துக்கணும்” என்றாள்.

கருணா “ஹே ஆரம்பிக்காத..” என்றான்.

அருணகிரி, எப்போதும் இப்படி பேசும் போது.. தந்தையாக மகனின் விருப்பம் என ஏதும் சொல்லாமல்..  எழுந்து சென்றிடுவார். இன்று மகனை பார்க்கவில்லை.. ஆனால், பெண்ணின் பேச்சினை ஆமோதிப்பது போல அமர்ந்திருந்தார்.

சாரதா “நான் ஆரம்பித்துவிட்டேன் உனக்கு பெண் பார்க்க.. நீ இப்படியே சொல்லு. ஆனால், கண்டிப்பா நடக்கும்.. உனக்காக இல்லையென்றாலும்.. எங்கள் குருவிற்காக ஒரு நல்ல பெண்ணை நாங்க கொண்டு வருவோம். சரின்னு சொல்லுடா” என்றாள்.. மிரட்டலில் ஆரம்பித்தவளின் குரல்.. இறுதியில் கெஞ்சலில் வந்து நின்றது, தமையனிடம்.

அன்னை காபி எடுத்து வந்தார் பெண்ணுக்கு.

சாரதா அன்னையையும் பேச்சில் இழுத்துக் கொண்டாள். விசாலாட்சியும் பேசினார். கருணா எப்போதடா எழுந்து செல்லலாம் என இருந்தான், பதிலோ ஒரு இணக்கமான பார்வையோ இல்லை.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!

நள்ளிரவு இரண்டுமணி, தன் அருகே கோணல் மாணலாக அசந்து உறங்கிக் கொண்டிருந்த விசாகனை விட்டு, ப்ரயத்தனபட்டு சத்தமில்லாமல் எழுந்து நின்றுவிட்டாள் சுபிக்ஷா.

அதைவிட கவனமாக தன் உடைமைகளை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள். கொஞ்சம் சத்தம் கேட்டாலும் போதும்.. “ம்மா..” என பின்னாலேயே எழுந்திடுவான்.. இராட்சன்.. கொஞ்சநேரம் உறங்கட்டும்.. என எண்ணி சென்றாள்.

தன் கணவர் லக்ஷமிகாந்தனின் சித்தப்பாபெண் திருமணம் திண்டிவனத்தில். கிளம்ப வேண்டும். குளித்து முடித்து ஒரு காட்டன் பேன்ட் டி-ஷர்ட் அணிந்துக் கொண்டு.. அன்னை தந்தையை எழுப்பாலாம்.. என வெளியே வந்தாள் பெண்.

அவளின் அன்னை, டிவியில் எதோ பக்தி பாடல் கேட்டுக் கொண்டே.. அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். பெண்ணை பார்த்ததும்.. “குளிச்சிட்டியா சுபி. அப்பா குளிக்க போயிருக்கார்.. காபி குடிச்சிட்டு.. பசங்களுக்கு பால் எடுத்துட்டு போ” என்றவர் பொங்கும் பாலினை தண்ணீர் தெளித்து அமர்த்தினார். மூவருக்கும் காபி கலக்க தொடங்கினார்.

சுபி, தன் ஈர தலையை அவிழ்த்து.. துடைத்துக் கொண்டிருக்க.. காபி எடுத்து வந்தார் அன்னை. மகளின் கையில் அவளின் காபியை கொடுத்துவிட்டு.. தனக்கும் கணவனுக்கும் என டைனிங் டேபிளில் எடுத்து சென்றுவிட்டார்.

சுபி, தன்னுடைய காபியை கனகச்சிதமாய்.. அங்கே சந்தனமாலை அணிந்துக் கொண்டு கம்பீரமாக சிரித்துக் கொண்டிருக்கும் தன் கணவன் லக்ஷ்மிகாந்தன் போட்டோவின் முன் வைத்து நின்றாள், இரண்டு நிமிடம்.  பின் அந்த காபியை எடுத்து பருகிக் கொண்டே அன்னையின் அருகே அமர்ந்தாள்.

தந்தை வந்து சேர்ந்தார்.. “நாலுமணிக்கு கிளம்பிடனும் சுபி. விசாவை அப்படியே தூக்கிட்டு வா.. அங்க போய் ட்ரெஸ் மாத்திக்கலாம்” என்றார்.

சுபி “அவன் கேட்க்கமாட்டான் ப்பா..” என்றாள்.

தந்தை ஒன்றும் சொல்லாமல் காபி குடித்து முடித்தவர், பூஜை அறை சென்றுவிட்டார். அன்னை அவருக்கு உதவி செய்ய தொடங்கினார். 

சுபி, அறையினுள் வந்தாள்.. புடவையை எடுக்க.. விசாகன் விழித்துக் கொண்டான், சரியாக.. “ம்மா..” என்றான் இருட்டில் சத்தமாக.

சுபி “விசா, அம்மா இங்கதான் இருக்கேன்.. நீ தூங்கு” என்றாள்.

மகன் “ஏன் ம்மா..” என உறக்கத்திலேயே கேட்டு தலையை சாய்த்தான்.

அன்னை “நீ தூங்கு, அம்மா எழுப்புகிறேன்” என்றாள். மகன் உறங்கிவிட்டான். எப்போதும் ஒரு விழிப்புநிலை.. அவனிடம். எதோ சத்தமும் அவன் உறக்கத்தை கலைக்கிறது. 

LKG படிக்கிறான்.  விளையாட்டு விளையாட்டு விளையாட்டு.. அதுமட்டும்தான் அவனின் மனதில் இருக்கும். பள்ளியில் ஹோம்வொர்க் செய்யவில்லை என.. நிறைய கம்ப்ளைன்ட் எழுதி தருவர் அவனின் டைரியில். அடிக்கடி சுபி போய் அவனின் வகுப்பு ஆசிரியையை பார்த்து வருவாள். கொஞ்சம் குறும்பு அதிகம்தான். யாரும் அவனை தூக்க கூடாது, அவனுக்கு பிடிக்காது. அன்னை மட்டுமே தூக்க வேண்டும். தாத்தாதான் அவனின் மிகபெரிய எதிரி.. பாட்டிதான் நிறைய செல்லம். அதிலும் அந்தஊர் தாத்தா, அவனின் பெரிய அடிமை. கேட்பதெல்லாம் உடனே.. அவன் பள்ளி முடித்து வருவதற்குள்.. வீட்டு வாசலில் இருக்கும். ஆக, எல்லோரிடமும் வேலை வாங்க தெரிந்த குட்டி இராட்சன் இவன்.

சுபி புடவை மாற்றத் தொடங்கினாள்.. அந்த பிங்க் வண்ணம் கொண்ட பட்டு புடவையை. கணவன், அவளின் கடைசி பிறந்தநாளுக்கு.. அதாவது தாங்கள் இருவரும் சேர்ந்திருந்த கடைசி பிறந்தநாளுக்கு எடுத்து கொடுத்தது.. என நினைவு வர.. ‘எதையும் எண்ணக் கூடாது’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டு.. கவனமாக கிளம்பத் தொடங்கினாள்.