சில்லென புது மழைத்துளி!

5

இந்த விடுமுறைகாகவும்.. குருவை பார்க்கவும் சாரதாவின் குடும்பம் வீடு வந்திருந்தனர். அதனால் பிள்ளைகள் விசாகன் வீட்டில் உள்ள.. அவனின் ப்ளே ஏரியாவில் விளையாடி சலித்தனர். விசாகனின் அன்னை மேலே தங்களின் மொட்டைமாடியில் சின்னதாக ஒரு விளையாட்டு பொருட்களை வாங்கி போட்டிருக்கிறாள்.. அதில் பேட் பால்.. சின்ன சர்கிள்.. பெட்மிட்டேன் பேட்ஸ், ப்ளே கார்ட்ஸ் என விளையாட்டு பொருட்கள் இருக்கும் அந்த ஹாலில்.. பெரிதான அறை என்பதால்  ஓடி விளையாட முடியும். வசதியானதும் கூட, நால்வரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

மதிய உணவிற்கு என.. சாரதா தன் பிள்ளைகளை அழைக்க.. விசாகனின் வீடு வந்தாள். தெருவின் இறுதியில் இவர்கள் வீடு.. எல்லோரையும் ஒருவருக்கொருவர் தெரியும். சிலநேரம் போனில் சொன்னால்.. பிள்ளைகளை, விசாகனின் பாட்டி அனுப்பி வைப்பார். இன்று, விசாகனின் அன்னை சுபிக்ஷா வீட்டில் இருப்பாள், அதனால் இந்த நேரத்தில் பார்க்கலாம் என வந்தாள் சாரதா. சாரதா தன் பெண்ணின் காதுகுத்து வைபவத்திற்கு அழைத்திருந்தாள்.. தெரியும் அவள் வரமாட்டாள் என. அதற்காக விட முடியுமா?.

இருவரும் தோழிகள்.. முன்பு நெருக்கம் என இல்லை.. ஆனால், திருமணமாகியதும்.. இந்த இருவர் மட்டும்தான் ஒரே இடத்தில் இருப்பதால் நெருக்கமாகிவிட்டனர் சொந்தகதை சோகத்தை பேசி.

சுபிக்ஷா ஒரு ப்பிஸியோதெரப்பிஸ்ட். சென்டர் வைத்திருக்கிறாள். அதை தவிர யோக வகுப்பும் எடுப்பாள். இப்போது, ஒரு பேஷன்ட் பார்க்க சென்டர் சென்றிருக்கிறாள். சாரதா, தோழியை பார்க்க வந்து ஏமாந்து போனாள். பிள்ளைகளை கூட்டி கொண்டு சென்றாள்.

மாலையில் சுபிக்ஷா.. குழந்தை தீபுவை பார்க்க வீடு வந்தாள். குரு விசாகன் உள்ளே வரவில்லை.. வெளியே சைக்கிள் ஒட்டிக் கொண்டிருந்தனர்.

சுபிக்ஷா தீபுவை தூக்கி கொஞ்சி விளையாடி.. அவளுக்கென கொலுசு வாங்கி வந்திருந்தாள். அதை அணிவித்து.. அவள் நடந்து போவதை பார்த்து.. பேசி சிரித்து என இரு தோழிகளும் நீண்ட நாட்கள்.. ஏன் வருடங்கள் சென்று.. பேசி சிரித்தனர். 

இருவருக்கும், நேரமே இல்லை.. அமர்ந்து கதை பேச. இருவரின் வீட்டில் நடந்தது தெரியும்.. துக்கம் எனும்போது.. அருகில் வந்து இரு வீடுகளும் ஒருவருக்கொடுவர் துணையாக நின்றனர்தான். ஆனால், மனம் விட்டு சிரிக்க.. தினம் தினம் நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ள இருவருக்கும் காலம் தோதுபடவில்லை. 

இப்போது, எல்லாம் சரியாகிற்றா என்றால்.. இல்லை. ஆனால் காலம், அந்த செயலின் தன்மையை வீரியத்தை குறைத்துக் கொண்டது போல..சொல்ல போனால் பழகிவிட்டது போல.. கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது.

சாரதா “சுபி, வேலையிருக்கா.. ரூப்’க்கு போலாமா?.. ப்ரீயா” என்றாள்.

சுபிக்ஷா அயர்வாக தோழியை பார்த்தாள்.

சாரதாவும் சலிப்பாக புன்னகைத்து சோபாவில் சாய்ந்துக் கொண்டு “என்ன இப்போ, அவ்வளோ பிஸியா நீங்க” என்றாள்.

சுபி “விசாகன் தேடுவான். அம்மாகிட்ட கேட்கனும்.. வெயிட் பண்ணு” என்றாள், தோழியின் முகத்தில் இருந்த சலிப்பினை பார்த்து. 

இவர்களின் பேச்சினை கேட்டிருந்த விசாலாட்சி “நீங்க போயிட்டு வாங்க.. பசங்களை நானும் உங்க அங்கிளும் பார்த்துக்கமாட்டோமா.. கொஞ்சம் டைம் எடுத்துக்கோங்க.. பேசிட்டு வாங்க” என்றார். 

சுபிக்ஷாவிற்கும் ஆசைதான்.. வெளியே சென்று தன் மகனை பார்த்தவள் “விசா.. நீ ரைட் போயிட்டு, சமர்த்தா சாப்பிட்டு பாட்டி கூட தூங்கு.. நான்வர லேட் ஆகும்.” என்றாள், மகனின் சிகையை கோதிக் கொண்டே.

விசாகன் “ம்மா.. நான் தூங்கும் போது நீ வந்துடு” என்றான்.. கெஞ்சும் குரலில். அருகில் குரு.. சுபியின் விரல்கள்.. தன் நண்பனின் சிகையில் இருப்பதையே பார்த்திருந்தான். சுபி மகனுக்கு பதில் சொல்லும்முன்.. புன்னகையோடு இயல்பாக குருவை பார்க்க.. அவனின் ஏக்கமான பார்வை.. இந்த 

அன்னையின் கண்ணில்பட்டது. சுபி பார்ப்பதை உணர்ந்ததும்.. குரு குழந்தை புன்னகைத்தான்.. “ஆன்ட்டி நீங்க வரும் வரை.. நானும் இவனும் விளையாடறோம்.. ம்..” என்றான் ஆவலாக.

சுபியின் விரல்கள்.. இப்போது குருவின் சிகையை கலைத்தது.. “அஹ.. நான் லேட் ஆகுமே வர..” என்றவளுக்கு பிள்ளைகளை பார்க்கவும் பாவமாக இருந்தது.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

குரு “ஆன்ட்டி, நானும் குருவும்.. சேர்ந்து தூங்கறோம்.. ம்.. இன்னிக்கு ஒருநாள் மட்டும்” என்றான் வெகு குதூகலமாக.

சுபிக்ஷா விழிவிரித்து பார்த்தாள். சுபிக்ஷாவிற்கு புரிகிறது.. நண்பர்களின் ஏக்கம்.. வாரவிடுமுறையில் மட்டுமே பார்த்துக் கொள்வார்கள்.. ஒன்றாகவே சுற்றுவது.. உறங்க மட்டுமே வீடு வருவது.. நானும் வேலை இருப்பதால்.. அதிகம் மகனை கண்டுகொள்வதேயில்லை.. உறங்கும் போது மட்டுமே, அவனருகில் இருப்பது. இருவரும் இந்த வயதில் இப்படி ஏங்குவது ஒருமாதிரி இருக்க.. “விசாகா.. சமர்த்தா இருப்பியா” என்றாள் மகனின் தாடை தடவி.

விசாகன் புன்னகையோடு தலையாட்டினான் ‘ம்..’ என்பதாக. இதனை குரு ஏக்கமாக பார்த்திருந்தான். சுபி, குரு பக்கம் எதோ சொல்லுவதற்கு திரும்ப.. மீண்டும் அதே பார்வை. 

சுபி இயல்பாய்.. குருவின் கன்னம் பற்றி.. “குட் பாய்ஸ்சா இருக்கனும்.. அப்படினா ஓகே” என்றாள். குரு குழந்தை.. எதிலோ கட்டுண்டு அமைதியாக தலையசைத்தது.. ‘ம்..’ என.

சுபி, போன் எடுத்தாள்.. தன் அன்னையிடம் போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு.. உள்ளே வந்தாள்.

அதற்குள்.. இங்கே பிள்ளைகள், விஷயத்தை சொல்லி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

தாத்தா பாட்டி இருவருக்கும் முகத்தில் சின்ன சந்தோஷ புன்னகை..

சதுர்த்தி என்பதால்.. விசாகனின் பாட்டி தெருவின் தொடக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தார். தாத்தா வீட்டில் எதோ டிவி நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார். மகள் அழைத்து சொல்லவும்.. பேரனின் உணவு பற்றி கேட்டுக் கொண்டவர்.. சரி என சொல்லி வைத்துவிட்டார்.

பிள்ளைகள் உணவுக்கு நேரமாகவில்லை என்பதால் மீண்டும் விளையாட வந்தனர் தெருவிற்கு.

பெண்கள் இருவரும் மேலே உள்ள.. ஹோம்தியட்டர் அறைக்கு வந்தனர், கையில் கொஞ்சம் நொறுக்குதீணியுடன். கருணாவின் வீட்டில் இரண்டாவது மாடியில் இப்படி ஒரு அமைப்பு.. அத்தோடு எழிலான மொட்டை மாடியும் இருக்கும். 

பெண்களுக்கு எந்த சேரிலும் அமர தோன்றவில்லை.. அப்படியே கீழே அமர்ந்தனர்.. என்ன பேசுவது என தெரியவில்லை.. சாரதாவை பார்த்து “எப்படி இருக்க” என்றாள் சுபி.

சாரதா “இந்த கேள்வியை நான் கேட்கனும், எப்படி டி இருக்க..” என தொடங்கினாள். சுபியின் கண்களில் கண்ணீர் படலம். அப்படியே பேச்சுகள் தங்களை சுற்றி சுழன்றது. தோழமை இல்லையென்றால் ஆழமான கண்ணீர் கூட வெளியே வராது போல.. ‘யாரேனும் தன்னை ஏதேனும் நினைத்துக் கொள்வார்கள்’ என எண்ணி, அழாமலே இருந்திடுவார்கள் போல, காயம்பட்ட மனிதர்கள்.

நேரம் சென்றதே தெரியவில்லை.. யாரும் அழைக்கவில்லை.. மணி இரவு ஒன்றுக்கு மேல் இருக்கும்.. புன்னகையோடு இரு பெண்களும் வெளியே வந்தனர்.. “தெரியலை சாரு.. நோ ப்ளான்னிங்ஸ். அதான் என்னை வைச்சி நிறையப்பேர் போடுறாங்களே.. திட்டம். நம்ம வேற எதுக்கு போட்டுக்கிட்டு. பார்க்கலாம் இன்னும் என்னை எங்க கொண்டு போறாங்கன்னு” என சொல்லி சிரித்தாள்.. அந்த சிரிப்பில் லேசான வலி. ஒரு 25% மட்டுமே வலி.. மற்ற 75%மும் திமிர் நம்பிக்கை தைரியம்  இருந்தது.

இப்போது இவர்கள் பேச்சு சத்தம் தவிர ஆண்கள் பேச்சு சத்தமும் கேட்க்க. இருவரும் அமைதியாகினர்.. சாரதா “அண்ணனும், என் வீட்டுகாரரும்தான். வா, பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு போ..” என்றாள்.

சுபி “இப்போ வேண்டாம்.. இன்னொரு நாள்.. அவங்க ப்ரைவேட் டைம்” என சொல்ல..

சாரதா “ஆமாம்.. பெரிய டைம்.. இரண்டும் ட்ரிங்க்ஸ்தான்.. வேற என்ன” என்றாள்.

சுபி “ஷூ.. வா “ என சொல்லி கைபிடித்து கீழே இறங்கினாள்.

சாரதா தன் வீட்டின் முன் நிற்க.. சுபி தன் வீடு சென்று.. பை சொல்லி உள்ளே சென்றாள். 

நீண்டநாள் சென்று ஸ்பார்ட்டிப்வைவ்’ல் ARR மெலோடீஸ் என வைத்து கேட்டுக் கொண்டே.. குளித்து.. உணவு உண்டு.. உறங்கினாள்.

காலை ஏழு மணிக்கு சுபியின் அறை கதவினை தட்டினார் அவளின் அன்னை வைதேகி. சுபி சலித்துக் கொண்டே வந்து கதவினை திறந்தாள். அன்னை “உங்க மாமனார் வந்திருக்கார்.. கீழ வா” என்றார்.

சுபிக்கு, கோவமாக வந்தது.. பாத்ரூம் சென்று தன் வேலைகளை முடித்துக் கொண்டு உடைமாற்றி கீழே வந்தாள். மாமனார் மற்றும் அந்த வீரா.. இருவரும் அமர்ந்திருந்தனர். சுபிக்கு எரிச்சலானது.. எதையும் முகத்தில் காட்டாமல்.. “வாங்க மாமா” என தன் மாமனாரை பார்த்து பொறுப்பாக் வரவேற்றவள் , மற்றொருவன் பக்கமே திரும்பவில்லை.

வீரா “பையன் எங்க” என்றான்.

சுபி முறைத்தாள்.

சுபியின் மாமனார் “குழந்தை தூங்குவான் ப்பா” என்றார். 

வைதேகி தன் கணவரை அழைத்து.. அவர்களை உண்பதற்கு வருமாறு சொல்ல.. சுபியின் தந்தை மாசிலாமணி “வாங்க சம்பந்தி சாப்பிடலாம்.. வா வீரா” என இருவரையும் அழைத்தார்.

ஆண்கள் மூவரும் உண்டனர்.

வீரா “பையன் எங்க.. நான் போய் பார்க்கவா” என்றான்.

இந்தமுறை அவளின் மாமனாரும் “எங்க ம்மா.. பேரன்” என்றார்.

சுபி “அவன் பிரெண்ட் வீட்டில் இருக்கான் மாமா.. எழுந்ததும் வந்திடுவான்.. சண்டேதானே தூங்கட்டும்ன்னு” என்றாள்.

வீரா “யாரு வீடு.. பிரெண்ட் வீடா.. என்ன இது.. ஐந்து வயது பையனை இப்படிதான் அனுப்புவதா.. “ என்றான், கண்டிக்கும் குரலில்.

மாமனார் சங்கடமாக புன்னகைத்தார்.

மாசிலாமணி “இல்ல சம்பந்தி.. இதோ ஐந்தாறு வீடு தள்ளி.. நம்ம அருணகிரி, உங்களுக்கு தெரியுமே.. அவங்க பேரனும் இவனும் தோஸ்து..” என நிறுத்தியவர் சம்பந்தியின் முகம் பார்த்து புன்னகைத்து தொடர்ந்தார் “அவன் ஹாஸ்ட்டலில் படிக்கிறான். சனி ஞாயிறுதான் வருவான். நேற்றுதான் பசங்க கேட்டாங்க. எழுந்ததும் வந்திடுவான். நீங்க பயப்படாதீங்க” என்றார் எல்லாம் விளக்கி.

சுபியின் மாமனார் “நீ பிள்ளையை நம்ம ஊருக்கு கூட்டிட்டு வாம்மா.. வாராவாரம். அவனுக்கும் அதுதானே நல்லது. இப்படி எங்கேயும் போகமாட்டான் குழந்தை.” என்றார்..

வீராவின் முகத்தில் புன்னகை “ம்.. பெரியப்பா, நீங்க இப்போதான் சரியா சொன்னீங்க.. நம்ம ஊரில் இல்லாத சொந்தமா.. அதான், ரெண்டு வருஷம் ஆகுதில்ல..” என எதோ தொடங்க.

மாசிலாமணி “தம்பி, காபி குடிங்க” என சொல்லி, மனையாள் கொடுத்த காபியை கொடுத்தார்.

வீரா தன் பெரியப்பாவை முறைத்தான்.

அங்கே அமைதி.

சுபி “நான் விசாவை கூட்டி வரேன்” என சொல்லி வெளியே வர. வீரா “பெரியப்பா.. நானும் போயிட்டு வரேன்” என்றான்.

சுபி “வேண்டாம், நான்மட்டும் போறேன்” என்றவள்.. நடந்தாள். வீரா எழுந்து அவள் பின்னால் போக.. 

வைதேகி “இது நல்லாயிருக்காதில்ல.. இந்த தெருவில்தான் வீடு” என சொல்ல.

சுபியின் மாமனார் சங்கடமானார். மாசிலாமணிக்கும் அப்படியே. வீரா “சும்மா வாசலில்தான் இருக்கேன்” என சொல்லி வெளியே வந்து அவள் எங்கே போகிறாள் என பார்த்தான்.

சுபி, குருவின் வீடு வந்தாள். போர்ட்டிகோவில் கருணாவும் அவனின் தந்தையும் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். கருணா கேட் திறந்து யாரோ வரவும்.. அனிச்சையாய் பார்த்தான்.. ‘சுபி..’ என எண்ணிக் கொண்டவன் ‘இவ எதுக்கு இங்கே வரா’ எனவும் எண்ணினான்.

அருணகிரி “வாம்மா.. பிள்ளையை பார்க்கனுமா” என்றார் சிரித்துக் கொண்டே. அன்னையவள்.. விடிந்ததும் வந்துவிட்டாலே என புன்னகையோடு கேட்டார்.

சுபி “எழுந்துட்டாங்களா அங்கிள்” என்றாள். பக்கத்தில் கருணா இருக்கவும்.. சின்னதாக ஒரு புன்னகை அவனை நோக்கி சிந்திவிட்டு.. உள்ளே சென்றாள்.

கருணாவிற்கு யோசனை என்னவென.. ‘ஏன்.. என்ன ஆச்சு..’ என எண்ணி காதினை அவள் பேச்சில் வைத்தான். ஹாலுக்கு சென்றுவிட்டாள்.. இல்லை கிட்சேன்.. தன் அன்னை இருந்த இடத்திற்கு சென்றுவிட்டாள். ஒன்றும் கேட்கவில்லை. கருணா பேப்பரில் கவனமானான்.

விசாலாட்சி “வா டா.. விசா தூங்கறான். என்ன இப்போ, அவன் மெதுவாகத்தான் வரட்டுமே..” என்றார்.

சுபி “மாமனார் வந்திருக்கார் ஆன்ட்டி” என்றாள்.

“அப்படியா.. சரி சரி.. தூக்கிட்டு போறியா.. அங்கிளிடம் சொல்லவா..” என்றார்.. தங்களின் அறைக்கு அருகில் இருந்த பேரனின் அறையை காட்டினார்.

சுபி “இல்ல ஆன்ட்டி .. நான் பார்த்துகிறேன்” என்றாள்.

சுபி, கதவினை ஜாக்ரதையாக சத்தமில்லாமல்தான் திறக்க எண்ணினாள்.. அதன் இயல்பான “படக்” என்ற சத்தத்தோடு அது திறக்க.. அதில் குரு விழித்து.. பார்த்தான் கதவினை.

உள்ளே எட்டி பார்த்த சுபி தயங்கினாள், அதன் உள்ளே செல்லவே. இதமானAC.. நல்ல ஸ்மெல்.. சுற்றிலும் விளையாட்டு பொருட்கள்.. எல்லாம் நேர்த்தியாக அடிக்கி இருந்தது. லவண்டார் நிற சர்ட்டின் திரைசீலை.. விடிவிளக்கு.. அழகான பெரிய கட்டில்.. அதில் மூவரும் படுத்திருந்தனர்.. பார்த்தாலே அந்த இடத்தின் செழுமை தெரிய.. ஒருமாதிரி இருந்தது, பெண்ணவளுக்கு.

நன்றாக கண் திறந்த குரு கண்களை கசக்கிக் கொண்டே “ஆன்ட்டி..” என்றான்.

இப்போதுதான் எட்டி பார்த்தவள் உள்ளே வந்தாள்.. “குட்மோர்னிங் குருபேபி” என்றாள்.

குரு பற்கள் தெரிய புன்னகைத்தான்.. மாநிறம்.. அடர்சிகை.. வயதிற்கு உண்டான  உயரம் என சிறுவன்.. சந்தோஷத்தில் புன்னகைக்க.. அழகாக இருந்தான்.

சுபி “நான் விசாகனை கூட்டிட்டு போகவா.. டைம் ஆச்சு” என்றான்.

குருவின் முகம் வாட “ஏன் ஆன்ட்டி .. எழுந்ததும் நான் கூட்டிட்டு வரேன்” என சொல்லி, இவள் முகம் பார்த்தான்.

சிறுவனிடம் எப்படி மறுப்பு சொல்லுவது என் தெரியாமல்.. “இல்ல டா, அவனோட தாத்தா வந்திருக்காங்க, ஈவ்னிங் நீங்க விளையாடலாம்” என சொல்லி.. விசாகனை தூக்க.. விசாகன் விழித்துக் கொண்டு.. “ம்மா” என்றான் அவளிடமிருந்து நழுவி. 

விசாகனிடம், சுபி “விசாகுட்டி, தாத்தா உன்னை பார்க்க வந்திருக்காங்க.. நாம பார்க்க போலாமா” என சந்தோஷமாக அவனிடம் கேட்க.. அன்னையின் புன்னகை, விசாகனையும் தொற்றிக் கொண்டது.. மகன் புன்னகைத்தான்.

சுபி, மகனின் முடிகளை ஒதுக்கி “உன் பிரெண்ட்கிட்ட பை சொல்லிட்டு வா..” என அவனின் தலையை முடியை சரி செய்தாள்.. விசாகன் சோம்பல் முறித்துக் கொண்டே “குரு, பை..” என்றான்.

குருவிற்கு அழுகை வரும் போலிருந்தது.. சுபியையே கண்கள் பார்த்திருந்தது.. இப்போது விசாகன் பை என கையசைக்க.. அப்படியே அமைதியாகிவிட்டான் குரு.

சுபிக்கு மீண்டும் குருவை பார்க்க என்னமோ போலாக.. “குருகுட்டி.. பை.. நீ சாப்பிட்டு வா.. விளையாடலாம்” என சொல்லி.. அவனின் தாடை வருடி.. சென்றாள்.

குரு பை சொல்லிக் கொண்டே.. சுபியோடு பின்னாலேயே வந்தான்.. விசாகன் புன்னகையோடு.. அன்னையின் மேல் சாய்ந்துக் கொண்டு அரை உறக்கத்தில் இருந்தான்.

விசாலாட்சியிடம் சொல்லிக் கொண்டு.. சுபி வெளியே வர.. அருணகிரியிடமும் “வரேன் அங்கிள்” என்றவள் கருணாவை பார்க்காமல்.. மகன் இருப்பதால் அப்படியே கிளம்பினாள். விசாகன் நண்பனை பார்த்து பை என கையாட்டினான். குரு, அவர்களை பார்த்தபடியே நின்றான்.

கருணாவும் அப்படியே பார்த்திருந்தான்.

அருணகிரி பேரனை அழைத்தார் “குருப்பா.. இங்க வாங்க” என்றார், மனதேயில்லாமல் வந்து தாத்தாவின் மடிமேல் அமர்ந்தான்.. “தாத்தா, நான் இங்கேயே ஸ்கூல் சேர்ந்துக்கவா” என்றான்.