முதல்நாள் கருணாவே, செந்தூரனை அழைத்து.. “லாவண்யாவை, ரிசார்ட் கூட்டி போ டா.. எனக்கு சொல்லிக் கொடுத்த மாதிரியே இவளுக்கும் சொல்லி கொடு.. பார்த்துக்கோ” என முகவுரை கொடுத்துதான் அனுப்பினான்.

ஆக, தினமும் செந்தூரன் வந்து லாவண்யாவை கூட்டி செல்வான் ரிசார்ட்டுக்கு.

குரு, ப்ளே ஸ்கூல் பழையபடி செல்ல ஆரம்பித்தான். மதியம் வேலை செய்பவர்கள் குழந்தையை பார்த்துக் கொண்டனர். சிலநாட்கள்.. தாத்தா பாட்டியோடு.. குரு தந்தையை பார்க்க மருத்துவமனை வருவான். 

கருணா, மெல்ல மெல்ல தேறினான். எதற்கும் அவசரம் காட்டவில்லை பெற்றோர். மருத்துவமனையிலிருந்து வந்தாலும் கருணா பிசியோ செய்துக் கொண்டு.. உடலை பேணிக் கொண்டு வீட்டிலிருந்தான். போனில் வேலை பார்க்க தொடங்கியிருந்தான் இப்போதெல்லாம். என்ன இருந்தாலும் இந்த ரிசார்ட் வேலை என்பது நேரே சென்று பார்த்தால்தான் அதன் அவசரம் புரியும். அதனால், செந்தூரன்தான் இப்போதும் முழு பொறுப்பு.

ஒரு வருடம்.. கிட்டத்தட்ட பதினோரு மாத  ஓய்வுக்கு பின் மீண்டும் ரிசார்ட் வந்தான் கருணா. அவனுக்கு எல்லாம் புதிதாக இருந்தது. நிறைய நபர்கள் புதிதாக இருந்தனர்.. அதுவும் மேலதிகாரிகள் ஷெஃப் ஹவுஸ் கீபிங் என எல்லா தரப்பிலும் அதிகாரிகள் புதிதாக இருந்தனர். முதலில் அவன் கண்ணில் பட்டது இதுதான். ஏதும் சொல்ல முடியாது.. ஏன் என்னை கேட்கவில்லை என புகார் சொல்ல முடியாது.. எனக்கு உடல்நலமில்லை.. அத்தோடு, இந்த அமைப்பு உடையாமல் செந்தூரன் பாதுகாத்ததே பெரிது.. என எண்ணிக் கொண்டு எல்லோரின் அறிமுகத்தையும் ஏற்றுக் கொண்டான் கருணா.

நாட்கள் செல்ல செல்ல.. ஊழியர்களுக்குள்..  ஒரு வதந்தி போல.. செந்தூரன் லாவண்யா என இருவரையும் சேர்ந்து பேசினர்.

கருணாவிற்கு, சந்தோகப்படுவதா.. இல்லை மனையாளிடம் கேட்பதா.. என யோசனை. இந்த பேச்சில் கவனம் வைக்க கூடாது எனதான் இருந்தான்.. ஏன் அவனுக்கு திருமணமாகவில்லை.. என அவர்களின் பெற்றோரிடம் பேசினான். நிறைய குழம்பினான். இல்லை இதெல்லாம் நான் இல்லாததால் வந்த வதந்தி என எண்ணி மனையாளிடம் ஏதும் கேட்க்காமல் விட்டுவிட்டான்.

வேலைதான் அவனின் ஒரே தீர்வு.. ட்ரிங்க்ஸ் எடுபதில்லை.. உடல்நலத்திற்கு ஒத்துவராது என்றிருந்தனர் மருத்துவர்கள், அதனால்  வேலை வேலைதான். சிலநாட்கள் ரிசார்ட்டில் தங்கிக் கொள்ளவும் செய்தான். ஆனால், மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனின் முழு கவனமும் வேலை.. மகன் என்றானது.

அவன்பிடிக்குள் ரிசார்ட் திரும்ப ஒரு வருடத்திற்கு மேல் ஆனது. அதுவரை.. நிறைய பொருளிழப்புதான்.. உடல் உழைப்பும் முன்போல இல்லையே அதனால், நாட்கள் எடுத்துக் கொண்டது கருணாவிற்கு.

மகனை LKG சேர்த்திருந்தனர்.. நாட்கள் நன்றாக செல்லுவதாக தோன்றிக் கொண்டிருந்தது. லாவண்யா கொஞ்சம் கணவனிடம் பேசினாள். எனக்கு கார் ட்ரிவிங் போக வேண்டும் என்றாள்.. மனையாளை அனுப்பினான். 

ஒருநாள்.. மனையாள் அவளின் போனினை.. அசந்து மறந்து.. கணவன் கண்ணில் படும்படி வைத்துவிட்டு எங்கோ சென்றிருந்தாள். அந்த நேரத்தில் சரியாக செந்தூரன் என திரையில் அவனின் பெயர் ஒளிர்ந்தது.

கணவன் இருக்கும் கோவத்தில்.. அலறினான் “லாவண்யா” என.

மனையாள் அடித்துபிடித்து ஓடிவந்தாள்.. அவளின் போனினை கையில் வைத்துக் கொண்டு.. “என்ன இது” என்றான்.

லாவண்யாவிற்கு, கணவனிடம் பயம்தான் எப்போதும்.. இன்று நடுங்கி போனாள்.. கணவன் “எதுக்கு உனக்கு கூப்பிடுறான். நான் இங்கதானே இருக்கேன்.. என்ன இது” என்றான். உள்ளுக்குள் நிறைய தடுமாறிக் கொண்டிருந்தவன் கண்ணில் செந்தூரன் என மனையாளுக்கு அழைப்பு வரவும்.. கத்த தொடங்கினான்.

லாவண்யா மென்று விழுங்கி “தெரியலை” என்க..

கணவனுக்கு அதிலேயே சந்தேகம் “இல்ல, எதோ சரியில்ல.. என்னை முட்டாளாக்குறீயா” என்றான் கர்ஜனையாக. “உண்மையை சொல்லு.. ஆபீசில் காதுபட பேசினாங்க.. உண்மையை சொல்லு.. எனக்கு தலையை வலிக்குது.. அவன் ஏதாவது தொந்திரவு செய்தானா..” என கேட்டு..  எதிரே இருந்த பொருட்களை உடைத்தான்.

மாலை நேரம் என்பதால்.. பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.. இப்போது பிள்ளையும் பயந்து அன்னையை கட்டிக் கொள்ள.. சத்தம் கேட்டு.. அன்னை தந்தை கீழிருந்தே சத்தம் போட்டனர் “என்ன டா.. சத்தம்” என.

கருணா ஒருவார்த்தை அதிர்ந்து பேசமாட்டான்.. பிள்ளையிடம் மனையாளிடம். தந்தையிடம் சண்டை என்றால் கூட மௌனம்தான்.. பேசமாட்டான்.

நடுங்கி போனாள் லாவண்யா.

பால்கனிக்கு சென்றுவிட்டான் கருணா.

லாவண்யா.. போனோடு தங்களின் அறைக்கு சென்று கதவினை சாற்றிக் கொண்டாள்.

குரு ஓடி வந்து “அப்பா.. அம்மா” என கூட்டி போய் காட்டினனான். கணவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. இடிந்து போனான்.. மனையாளின் மௌனம்.. நிலையிழக்க செய்தது அவனை.. நேராக சென்று.. செந்தூரனை குதறி விடும் கோவத்தோடு எழுந்தான்.

மகனிடம் பேசாமல்.. அவனை தூக்கிக் கொண்டு.. கீழே வந்து.. அன்னையிடம் அவனை அமர வைத்துவிட்டு ஏதும் சொல்லாமல் வெளியே காரெடுத்து சென்றான்.

பெரியவர்கள் எதோ கணவன் மனைவி சண்டை என எண்ணிக் கொண்டனர். பேரனோடு விளையாட பேச தொடங்கினர்.

சற்று நேரத்தில் லாவண்யா கீழே இறங்கி வந்தாள்.. போனோடு. மகனை பார்க்கவில்லை.. மாமியார் என்ன என்பதாக அவளின் முகத்தினை ஆராய.. அழுததற்கான தடம் அதில் தெரிய.. மகன் அடித்துவிட்டானோ என எதோ கேட்க்க வர.. லாவண்யா வரேன் என்பதாக தலையசைத்து.. வெளியே சென்றாள்.

அடுத்த ஒருமணி நேரத்தில் வீட்டில் குழப்பம்.. அருணகிரி “உன் பையன் அடிச்சிருக்கான் போல.. போ.. பிள்ளையார் கோவிலில் இருக்காளா பாரு மருமகள். நான் குருவை ரூமில் விடுகிறேன்” என சொல்லி பேரனை தூக்கிக் கொண்டு நடந்தார்.

வேலை செய்பவரிடம் வீட்டுக்கு கிளம்ப சொல்லிவிட்டு விசாலாட்சி தெரு முனையிலிருந்துக்கும் கோவிலுக்கு வந்தார். அங்கே மருமகள் இல்லை.. போனில் அழைத்தார்.. போன் ஸ்விட்ச் ஆஃப். கணவனுக்கு அழைத்து சொன்னார். மகனுக்கு அழைத்து பேசினார்.

கருணாவிற்கும் தோல்வியே.. ரிசார்ட்டில்.. வீட்டில் எங்கும் செந்தூரன் இல்லை.. போன் கூட எடுக்கவில்லை. இப்போது மனையாளை காணோம்.. என்ன நடக்கிறது என தெரியவில்லை.. காரினை சாலையோரம் நிறுத்தி.. அப்படியே அமர்ந்துக் கொண்டான்.. கண்ணில் நிற்காமல் கண்ணீர் வழியத் தொடங்கியது. எந்த மனிதனும் தோற்றுவிட கூடாத இடத்தில் தோற்று நிற்கிறான் கருணாகரன்.

“அத்தம் அழிந்ததடி அன்னமே..

ரத்தமும் ஒய்ந்ததடி..

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி.. சகியே..

யாதினி கொள்..யானே..”

அருணகிரி, மகனுக்கு அழைத்தார் எடுக்கவில்லை அவன்.

இரவு பனிரெண்டு மணிக்கு வீடு வந்தான்.. மருமகளோடு வருவான் மகன் என காத்திருந்த பெற்றோருக்கு.. அதிர்ச்சி. மகன்.. வெறும்கையோடு வந்தான்.

காலை வரை யாரும் உறங்கவில்லை.. கருணாவின் வாயிலிருந்து ஒருவார்த்தை வரவில்லை. என்ன நடக்கிறது என பெரியவர்கள் மகனை கேள்வியாக கேட்டனர். பதிலே சொல்லவில்லை. 

பேரன் காலையில் எழுந்ததும் “அம்மா..” என்க. கருணா கர்ஜித்தான் “அவ வரமாட்டா டா இனி.. உன்னை விட்டுட்டு போயிட்டா.. உன்னை கூட நினைக்கல அவ” என இடுங்கும் குரலில் கர்ஜித்தான்.

அருணகிரி மகனை ஓங்கி ஒருஅரை வைத்தார்.. என்ன சொல்லுகிறான் என. தன் வாயால் தனக்கு தெரிந்ததை சொன்னான்.. உணர்ச்சியே இல்லாத குரலில்.. “அம்மா.. உன் மகன் நிலையை பார்த்தியா.. எப்படி வாழ்ந்திருக்கேன் பார்த்தியா” என்றான் வேதனையாக.

கருணா சொல்லுவதை நம்பவில்லை யாரும்.. இரண்டுநாட்கள் சென்று.. செந்தூரன் வீட்டிலிருந்து வந்தனர். செந்தூரனை தேடி.. அவர்கள் வீட்டில், வெளியூர் நண்பர்களுக்கு போனில் கேட்க.. அவர்கள்.. மூலமாக செந்தூரன் பேசினான்.. தன் அன்னை தந்தையிடம். அப்போதும் நான் காதலித்த பெண்ணோடு வந்துவிட்டேன் எனதான் சொன்னான். மற்ற விவரங்களை செந்தூரனின் நண்பர்கள் அன்னை தந்தைக்கு சொல்லினர்.

செந்தூரன் வீட்டினர் தலைகுனிந்து நின்றனர்.. நேராக அருணகிரியை பார்க்க வந்து.. செய்தியை சொல்லினர். மொழிகள் எல்லாம் பொய்த்து போகாதா என எல்லோருக்கும் தோன்றியது. தங்களின் பிள்ளைகளை பற்றி தாங்களே இப்படி பேசுவது அசிங்கமாக இருந்தது.