சில்லென புது மழைத்துளி!

3

விழா முடித்து இரண்டு வாரம் ஓடிற்று. விழாவிற்கு வர முடியாதவர்கள் விசாலாட்சியிடம் போனில் அவர்களின் பேத்தியின் காதுகுத்து வைபவத்தை விசாரிக்கிறேன் என.. அவர்களின் முன்னாள் மருமகள் பற்றிதான் நிறைய விசாரித்தனர். விசாலாட்சிக்கு வெறுத்துவிட்டது. வேலைக்கு நடுவில் போன் எடுக்கவே தயங்கி போனார். 

அருணகிரி பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார், அதுவும் மகனின் விஷயத்தில் நடப்பதை என்ன செய்ய முடியும் என.. போனில் பேசுபவர்களிடமே கேட்பார். அதனால், அவரிடம் யாரும் ஏதும் பேசுவதில்லை. ஆனால், விசாலாட்சிக்கு, மகனின் நிலையை எண்ணி வருத்தம்தானே.. அதனால், இந்த பேச்சுகளை எண்ணி இன்னமும் வருந்துவார்.

விசாலாட்சிக்கு மகன் மேல் கோவம்.. வருத்தம்.. சொல் பேச்சு கேட்க்கமாட்டேன் என்கிறானே.. என ஆதங்கம். அத்தோடு ‘இபோதெல்லாம் இரண்டாவது திருமணம் ஒன்றும் அவ்வளவு குற்றமில்லையே.. இவன்மேல் எந்த தவறும் இல்லையே.. சொன்னால் புரிகிறதா..’ என தன் கணவனிடம் புலம்பியவர், என்ன செய்வது.. என கணவரிடம் ஐடியா கேட்டார்.

அருணகிரி “இதெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு செய்ய முடியாது விசா. இரு, அவன் இப்போதுதான் கொஞ்சம் தொழில் பார்க்க தொடங்கியிருக்கிறான். காலம் மாறும்ன்னு நம்புவதை தவிர வேறு விதியில்லை நமக்கு. நீ அமைதியா இரு.. நாளைக்கு வேலையில்லையா உனக்கு. இன்னிக்கு ஏன் இவ்வளோ பேசுற” என்றார்.. இருவரும் இரவு எட்டு மணிக்கு உண்டுவிட்டு, அந்த தெருவில் வாக்கிங் செல்லுவது வழக்கம் அப்படிதான் இன்றும் இந்த உரையாடல் நடந்தது.

விசாலாட்சி அமைதியாகிவிட்டார். இருவருக்கும் வருத்தம்தான், சிலவற்றை மாற்ற முடியாதே என விசாலாட்சிக்கும் புரிகிறது. 

அன்று

அருணகிரி வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு.. தன் மனையாளை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு.. தான் தன் பக்கத்து வீட்டு நண்பர்.. என இருவரும் மட்டும் மருத்துவமனை சென்றனர்.

கண்மண் தெரியாத அடி.. மருத்துவர்களால் சொல்லிமாளாத காயங்கள்.. அவன் கண் விழிக்கவே ஒருநாள் முழுதாக ஆகியது. 

காலையில்தான் அன்னையும் மனையாளும் வந்தனர். லாவண்யாவிற்கு முழுதாக எதையும் சொல்லவில்லை. பெண்ணவள் கலங்கி போனால்.. தூரமாக நின்றுதான் பார்க்க அனுமதித்தனர். பையன் அன்னையை விட்டு நகரவேயில்லை. ஆக, அந்த ஒருநாள் மிகவும் கொடுமையாக இருந்தது.

இரவு ஆகியும் கருணா கண்விழிக்காததால் பயம் அதிகமாகியது எல்லோருக்கும்.. மருத்துவர்களும் செக்கப் செய்துக் கொண்டிருந்தனர். லாவண்யாவின் பெற்றோரும் வந்துவிட்டனர். பெண் பேரனை கவனித்துக் கொண்டனர். லாவண்யாவின் தந்தை மருத்துவர்களின் பேச்சை கவனித்தவர்.. பெண் இங்கே இருக்க வேண்டாம் என முடிவு செய்து.. தன் மனைவி பேரன் பெண் என மூவரையும் வீட்டிற்கு அனுப்பினார் செந்தூரனோடு. கருணாவின் பெற்றோரும் காலையிலிருந்து இங்கே இருக்கிறார்கள் எனவும் சரிதான் என அனுப்பி வைத்தனர்.

கருணாவிற்கு நடுயிரவில்தான் விழிப்பு வந்தது. அதன்பின் அவனின் நிலவரம் என்ன என மருத்துவர்கள் பார்க்க.. முதுகெலும்பில் அடி. அவனால் எழ முடியாது என்றனர். 

மூன்று நாட்கள் சென்று உயரிய மருத்துவர்களை வரவைத்து ஏழு மணிநேரம் அறுவை சிகிச்சை என பலசிகிச்சை தொடங்கியது, கருணாவிற்கு. 

லாவண்யா என்னமோ கணவனை பார்ப்பது தள்ளி வந்துவிடுவது என இருந்தாள். ஆனால், நிறைய பயந்தால்.. அதில் தன்போல அழுகையும் வந்தது.. அன்னை அழுவதை பார்த்து மகனும் அழுதான். என்னமோ ஒருவாரம் பெரியவர்களுக்கு லாவண்யாவின் நிலையை பார்க்கவும் வருத்தம்.

செந்தூரந்தான் கூடவே இருந்தான்.. கருணாவின் பெற்றோருக்கு.. உதவி செய்ய என கருணாவின் உதவியாளரை வைத்துவிட்டு, தான் குருகுகனை கையில் வைத்துக் கொண்டு நின்றான். கருணாவின் உடல்நிலை பற்றி அவ்வபோது லாவண்யாவிற்கு அவன் மூலமாகவும் செய்திகள் வந்தது, பெரியவர்கள்.. மருத்துவர்கள் சொன்ன சிலபல விஷயங்களை.. சரியாக முடிவெடுக்க முடியாத சந்தேகமான விஷயங்களை.. சின்ன பெண்ணிடம் இப்போது சொல்ல வேண்டாம் என முடிவெடுத்திருந்தனர்.. இது லாவண்யாவின் தந்தைக்கும் அப்போது தெரியும். 

ஆனால், செந்தூரன் என்னமோ நல்லது செய்கிறேன் என லாவண்யாவிடம் எல்லா செய்திகளையும் சொன்னான்.. எதனாலோ லாவண்யாவிற்கு செந்தூரன் எது சொன்னாலும் சரியாகவே இருந்தது. 

கருணா இரண்டுநாளில் நன்றாக பேச தொடங்கிவிட்டான். அறுவைசிகிச்சையின் விளைவாக எழ முடியவில்லை.. மற்றபடி ஓகேதான் கருணா. கொஞ்சநாட்கள் மருத்துவமனை வாசம்தான் கருணா. 

காலை மருத்துவமனைக்கு மகனோடு வருவாள் லாவண்யா. குருதான், சமர்த்தாக அந்த சேரில் அமர்ந்துக் கொண்டு.. “ஊவா.. எப்போ.. சரி.. போகும்..” என கேட்ப்பான்.. “நான் போங்..கல்.. சாப்டேன்.. நீ ப்பா” என்பான். தந்தை தன் காயம் எல்லாம் மறந்து மலர்ந்து “போ.. கல் சாப்பிட்டியா, அப்பா இட்லி” என சாவகாசமாக கதை பேசுவான். மனையாள், அதிகம் உள்ளே வரமாட்டாள். குழந்தைதான் “அப்பா… அம்மா பார்த்து வரேன்” என போய் சிரமப்பட்டு கதவினை இழுத்து இழுத்து பார்த்து.. தன் பிஞ்சு விரல்களால் தட்டி தட்டி.. அன்னையை திறக்க வைத்திடுவான். அன்னையின் மடியில் ரெண்டுநிமிடம் வெளியே அமர்ந்துவிட்டு மீண்டும் உள்ளே வருவான்.. இப்போது லாவண்யாவின் கை மட்டும் கதவை திறப்பது தெரியும், அப்போது மகன் உள்ளே வந்து மீண்டும் சேரில் அமர்ந்துக் கொண்டு “அம்மா.. சித்தகிட்ட.. பேசுறா” என்பான்.

கருணாவிற்கு, இப்போதுதான் நெருட தொடங்கியது. உடல் பலகீனமாகும் போது.. மனதும் பலகீனமாவது இயல்புதானே. ஆனால், தனக்கானவளையே உணர மறந்தவன்.. இப்போதுதான் தன்னை மனையாள் பார்க்க கவனிக்க வேண்டும் என எண்ணுகிறான். அது கிடைக்காத போது எதோ தவறாக தெரிகிறது அவனுக்கு.

கருணா சுதாரிக்கிறான். தன் தந்தையிடம் “அப்பா.. எப்போ வீட்டுக்கு போலாம் கேளுங்க அப்பா” என்கிறான்.

ஆனால், மருத்துவர்கள் இன்னமும் இங்கேயே இருக்க வேண்டும் என்றனர்.

கருணா, மனையாளின் பாராமுகத்தை உணருகிறான். மனையாள் தன்னோடு பேசுவதேயில்லை.. கருணா விடாமல் அழைக்கிறான்.. “ம்..” என அமருவாள். ஏதும் பேசமாட்டாள். கருணாவிற்கு சங்கடமாக இருக்கும்.. தன் கண்களை கூட பார்க்க பயப்படுகிறாலே.. அந்த அளவுக்கு நான் விலகிவிட்டேனா.. இல்ல, என்னை பிடிக்கலையா.. என எண்ணம் எழ தொடங்கிவிட்டது.

லாவண்யா நிற்கவேயில்லை.. இரண்டு நிமிடம் கணவன் அமர சொல்லுவான் அமருவாள்.. ஒன்று போன் வரும்.. இல்லை, மகன் ஏதாவது அழுவான். எழுந்து சென்றிடுவாள். கணவனிடம் காதல் வேண்டாம்… இந்த நேரத்தில் கருணை கூட வரவில்லை மனையாளுக்கு.

கருணா, தான் கண்டுக் கொள்ளாமல் வேலை வேலை என இருந்ததால்.. இப்போது  மனையாள் தன்னை பழிவாங்குகிறாள் எனதான் தோன்றியது. அதன்பின் மருத்துவமனையில் இருந்தவரை.. தானாக மனையாளை அழைத்து பேசவில்லை கருணா. மனையாள் வரவே இல்லை அறைக்குள் கூட.

லாவண்யா வருவாள் மகனோடு, மதியம் வரை இருப்பாள்..  பின் கருணாவின் தந்தையோ அன்னையோ வந்ததும் கிளம்பிடுவாள்.

கருணாவின் உடல்நலம் சரியாக இருக்கிறது மருத்துவர்கள் வீடு அனுப்பினர். கருணா வீடு வந்தான். அதிகம் மனையாள் அந்த அறைக்குள்ளேயே வரவில்லை.

கருணா உடலளவில் தேறியிருக்கிறான் என எல்லோரும் நம்பும் நேரத்தில்.. கருணாவின் உடல்நிலை மீண்டும் பதித்தது. அறுவைசிகிச்சையில் எதோ தவறு.. அதில் ரத்தக்கசிவு. மீண்டும் அதே அளவிலான அறுவைசிகிச்சை. கருணா பிழைத்து வந்ததே பெரிதாக இருந்தது எல்லோருக்கும்.

இந்தமுறை எந்த ரிக்ஸ் எடுக்கவும் தயாராக இல்லை. குழந்தையென எல்லோரும் கருணாவை கவனித்துக் கொண்டனர்.. அடுத்த மூன்று மாதம்.

அந்த நேரத்தில் மனையாள் தன்னை கவனிக்கவே இல்லை என்பதை உணர்ந்தான் கருணா. மனையாளை அழைத்து பேசினான்.. “என்கிட்டே எதோ உனக்கு சொல்ல முடியாத வருத்தமிருக்குன்னு நினைக்கிறேன். அது என்னான்னு தெரிந்தால்.. நான் சால்வ் செய்ய ட்ரை பண்றேன்.. நீ இப்படி இருப்பதை நான் எப்படி எடுப்பது” என நேரடியாக கேட்டான்.

லாவண்யா “இல்ல அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நான் எப்போதும் போலதான் இருக்கேன். எப்போதும் நான் இப்படிதானே இருப்பேன்.. நீங்கதான் புதிதா கேட்க்குறீங்க” என்றாள்.

கருணாவிற்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.. மனையாள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

லாவண்யா நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை கணவனை.. சற்று நேரத்தில் போனில் அழைப்பு வர.. மிக பவ்யமாக “நான் போட்டா” என்றாள்.

கருணாவிற்கு உடல் பலகீனம் கோவமாக வெளிப்பட்டது.. “போயிடு ப்ளீஸ்” என்றான். என்னவாக இருக்கும் என யோசனையிலிருந்தவனுக்கு.. அன்று பழிவாங்குகிறாள் என தோன்றியது.. உண்மை என்றானது.

மீண்டும் மனையாளிடம் பேசவில்லை.. அன்பில்லாமல்.. அவள் தினமும் கடனே என மருத்துவமனை வருவது என்னமோ போலிருக்க.. தன் உதவியாளரை  உதவிக்கு வைத்துக் கொண்டு.. மனையாளை அலுவலகம் சென்று.. பார்த்துக் கொள்ள சொன்னான்.

மனையாள் மறுப்போ.. எந்த கருத்தோ சொல்லாமல்.. அலுவலகம் பார்க்க ஒப்புக் கொண்டதை அவனால் நம்பவே முடியவில்லை. எத்தனை பயந்தவள்.. ஒரு போன் அப் யூஸ் செய்ய தெரியாது.. ஆனால், எப்படி இதற்கு சம்மதித்தால்.. ஒருவேளை.. அதைவிட நான் கொடுமைகாரன் போல.. என விரக்தி புன்னகை சிந்திகே கொண்டான் தனக்குள்.