கரண் எதற்கும் அசையவில்லை.. அவளின் மனதில் ஓரமாகயிருந்த அவனின் நினைவுகள் இப்போதெல்லாம் கிளைபரப்பி.. வேர் விடும் அளவிற்கு வந்து நின்றது. வீட்டிலும்.. அதுவும் சங்கீதா வந்ததிலிருந்து அவன் பேச்சு அதிகமாகியது.. ‘கரணிடம் நான் வந்தது சொல்லிட்டியா, நானும் பேசவேயில்லை.. அதான் நீ சொன்னியா கேட்டேன்..’ என்பாள். ‘பாப்பாவை அவன் ஏன் வந்து பார்க்கலை.. சுபி..’ ‘நம்ம பாப்பா பெயர் வைக்கும் பங்க்ஷன்னுக்கு கரணுக்கு கண்டிப்பா கூப்பிடனும்..’ என எதோ ஒருவகையில் அவன் பெயர் அடிபடுகிறது.
சுபி எல்லாம் கேட்டுக் கொண்டாலே தவிர பதில் பேசவில்லை. சங்கீதாவின் பிள்ளையை பார்க்க.. சுபியின் மாமனார் வந்தார். வீடே பற்றிக் கொண்டது இந்தமுறை. கார்த்தியின் தந்தையும்.. சுபியின் மாமனாரும் சித்தப்பா பிள்ளைகள்.. பெரியப்பா பிள்ளைகள்.
கார்த்திக் சென்னை வந்து ஒருவாரம் சென்றுதான் வந்தார்.. தங்கத்தில் சீர் எடுத்து வந்தார்.. வீராவோடு.
சுபிக்கு காலையில் மாமனாரை பார்த்ததும்.. லேசாக அரண்டுதான் போனாள். நேராக சுபி வீட்டுக்குத்தான் வந்தார். காலை உணவு முடித்ததும்.. விசாகன் மாசிலாமணி அவரின் மனைவி என எல்லோரும் சங்கீதா வீடு கிளம்பினர், சுபி கிளினிக் கிளம்பினாள்.. ‘ஹப்பாடா’ என.
சுபியின் மாமனார் இந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் எனலாம். கார்த்திக்தான் சுபியின் சார்பாக பேசுபவன்.. அதனால், கார்த்திக் இப்போது வரவும்.. வீராவோடு வந்துவிட்டார்.
குழந்தையை பார்த்து சீர் செய்துவிட்டு.. கார்த்தியிடம் என்ன ஏது என கேட்டு விட்டு.. பொறுமையாக ஆரம்பித்தார்.
ம்.. பிள்ளையை பார்க்க வந்த சாக்கில்.. கார்த்திக் பெற்றோரிடம்.. கோரிக்கையை வைத்துவிட்டார் ‘எனக்கு வயதாகிறது.. என் மகன் பெரியவன்.. விசாகனை பார்ப்பான்தான். ஆனால், எனக்கு மருமகள் மீதும் அக்கறை உண்டு.. அதனால் வீராவை கண்டிப்பாக சுபி திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். வீரா அவளுக்காகவே காத்துக் கொண்டும் இருக்கிறான். இதை மாற்ற முடியாது.. நீயே உன் மகனிடம் பேசி.. அவனை சுபியிடம் பேச சொல்லி.. நல்ல முடிவாக சொல்லு’ என்றார் பொதுவாக எல்லோரையும் பார்த்து தோரணையாக. அவரிடம் ஒளிவு மறைவு இல்லை.
சுபியின் தந்தைக்குத்தான் சங்கடமாக போனது.. சம்பந்தியிடம் நிறையமுறை சொல்லியாகிவிட்டது. ஆனாலும் அவர் கேட்பதாக இல்லை.. அத்தோடு இன்று நீண்டநாள் சென்று மகள் மாப்பிள்ளை பேத்தி.. அவர்களின் உறவுகள்.. என வந்திருக்க அவர்களிடம் இதுபற்றி பேசுவதும்.. அவர்களின் முகம் வாடுவதும் ஒருமாதிரி சங்கடத்தை கொடுத்தது.
சுபியின் வாழ்க்கையில் பெற்றோருக்கு கொஞ்சம்.. சங்கடம் உண்டு. அப்போது சுபி வேலைக்கு போகனும் என சொன்னால்.. கேட்க்காமல் நாங்கள் கட்டி வைத்தோம்.. என்ன வாழ்ந்தால்.. ஒரு இரண்டு வருட வாழ்க்கை.. அவ்வளவுதான். இப்போது பேரன் அவளுடைய தனி வாழ்க்கை.. என எதோ சென்றுக் கொண்டிருக்கிறது. இதிலும் அவ்வபோது.. வீரா.. திருமணம்.. என மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுப்பது ஒருமாதிரி சங்கடம்தான் மாசிலாமணிக்கு. அத்தோடு, தன் பெண் சுபி எடுக்க வேண்டிய முடிவு இனி இது.. மேலும் பெரிய மாப்பிள்ளைக்கு இது நெருகடியாகிறது.. என மனதில் எண்ணிக் கொண்டார்.
அதனால் இந்தமுறை.. தன் முதல் மாப்பிள்ளைக்கு சாதகமாக வாய் திறந்தார் “சம்பந்தி.. இது பேத்தியின் வைபவம்.. இதில் மீண்டும் சுபியின் வாழ்க்கையை பேச வேண்டாமே.. உங்களுக்கு இதற்கான பதில் தெரியும். கார்த்திக் மாப்பிள்ளை பாவம்.. அவர் விடுமுறையில் வந்திருக்கிறார்.. அவரும் நிம்மதியாக இருக்க வேண்டுமே.. உங்களுக்கு தெரியாதது இல்லை.. இது சுபியுடைய வாழ்க்கை சந்ம்பந்தப்பட்டது. அவள் என்ன முடிவெடுக்கிறாள் என்பதுதான் இறுதி முடிவு. அதனால், நீங்கள் இப்போதைக்கு இதை.. அப்படியே” என்றார்.
சுபியின் மாமனார் அப்படியே எழுந்துக் கொண்டார் சட்டென.. விடுவிடுவென வாசல் வந்தார்.. எல்லோரும்.. அதாவது கார்த்திக் தந்தை.. மாசிலாமணி.. கார்த்திக்.. என எல்லோரும் வந்து சேர்ந்தனர்.
சுபியின் மாமனார்.. வேட்டியை மடித்து கட்டிக் கொண்டவர்.. “நானும் எத்தனை காலம் பொறுமையாக இருப்பது. என் பேரனை இனிமேல்.. நான் பார்த்துக்கிறேன்.. எனக்கு வேறு யாரையும் நினைத்து பயமில்ல.. இவன் ஒருவனுக்காகதான்.. அ..அதுதான்.. என் பயமே. அதனால், இவனை நான் பார்த்துக்கிறேன்..” என பேரனை கையில் பிடித்துக் கொண்டு.. கிளம்பினார்.
இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.. கார்த்திக் “சித்தப்பா.. என்ன இது இருங்க.. குழந்தை எங்கே வந்தது இதில்.. இருங்க” என பேச பேச.. அவரோ “அவனுக்காகத்தான் இதெல்லாம்.. இனி பேரனும் என்னோட பொறுப்பு.. உங்க பெண்ணை நீங்களே வைச்சிக்கோங்க..” என சொல்லினார்.
கார்த்திக் “சித்தப்பா.. பார்த்து பேசுங்க.. இருங்க சித்தப்பா.. அவன் அம்மா இப்போ இங்கே இல்லை.. இது தப்பு.. நீங்களே தப்பு பண்ணலாமா” என்றான், அவர் பின்னோடு பேசிக் கொண்டே வந்தான்.
அவரோ “அதேதான் டா எனக்கும். நான் வாக்கு கொடுத்திருக்கேன்.. அந்த வேங்கடத்திற்கு.. இப்போ போய்.. நீ உன் பையனுக்கு வேறு இடம் பாருன்னு எப்படி சொல்லுவேன்.. எனக்கில்லாத உரிமையா.. என் பேரன் மேலே. என்ன பண்ணனமோ பண்ணுங்கடா.. நான் பார்த்துக்கிறேன்” என்றவர் ஆவேசமாக கிளம்பினார்.
விசாகனுக்கு புரிகிறது ஆனால், தன் பெரியப்பாவை தாத்தா திட்டுகிறார்.. எதோ தவறு கார்த்திக் பெரியப்பா செய்துவிட்டார் என எண்ணிக் கொண்டான். அத்தோடு சங்கீதா ஏதும் பேசாதது.. அதுதான் என எண்ண வைத்தது பிள்ளையை.
கார்த்திக்கு, பாய்ந்து சென்று பிள்ளையை பிடுங்க தெரியும்.. கத்தி பேசி விசாகனை தங்களோடு வைத்துக் கொள்ளவும் தெரியும். ஆனால், விசாகன் பயந்திடுவான் என எண்ணி டாட்டா சொல்லி அனுப்பினர்.
கார்த்திக்கு “உன்னை அன்னுவல் லீவ்க்கு கூப்பிட்டு போறார்.. அம்மா வருவா.. நீ அண்ணாகூட என்ஜாய் பண்ணு” என் சொல்லி அனுப்பினான்.
இன்னும் பதினைந்து நாட்களில் சங்கீதா பிள்ளையின் பெயர் சூட்டும் வைபவம் வைத்திருக்கிறார்கள். அதற்குள் இப்படி ஒரு நிகழ்வு.
வீட்டில் பெரியவர்கள் எல்லோருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி சுபியிடம் இதை சொல்லுவது என எண்ணம்.
கார்த்திக்தான் அழைத்து பேசினான்.. சுபியிடம். முதல் அழைப்பில் அவள் பிசியாக இருக்க.. அவளாக மதியம்தான் அழைத்தாள். அப்போது கார்த்திக்தான் நடந்ததை சொன்னான்.. மேலோட்டமாக சொன்னான். அவர் பேச்சுகளின் கோவத்தை தவிர்த்து.. சொன்னான். சுபி “மாமா.. உண்மையை சொல்லுங்க” என்றாள். அதன்பின்தான் அவளின் மாமனார் பேசியதை சொன்னான் கார்த்திக்.
சுபிக்கு, எப்போதும் போல.. கத்தி அழுது ஆர்பாட்டம் செய்ய தெரியவில்லை.. கண்களில் பரபரவென நீர் இறங்க.. அமைதியான அழுகை அவளிடத்தில். சற்று நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அப்படியே அமர்ந்திருந்தாள்.
கார்த்திக் “நீ வீட்டுக்கு வா.. சுபி, எல்லோரும் நாளைக்கு போய் பேசி கூட்டி வந்திடுவோம். நீ ஒன்னும் நினைக்காத.. அவன் அவங்க தாத்தா வீட்டில்தான் இருக்கான்.. நாம வினு.. ஸ்ரீகிட்ட பேசலாம்” என்றான் தன்மையாக.
சுபி ஏதும் பேசவில்லை.. அப்படியே வைத்துவிட்டாள்.
இருபது நிமிடங்கள் ஆனது.. சுபிக்கு தன்னை மீட்டுக் கொள்ள. அதற்குள் அவளிற்கு சங்கீதா அழைத்தாள்.. வினு அழைத்தாள்.. இருவரின் அழைப்பினையும் ஏற்கவில்லை பெண்.
சுபிக்கு, என்னமோ மகனை வைத்து மிரட்டுவது சரியாக படவில்லை அவளுக்கு.. மகனை தவிர வேறு யாரும் அவளுக்கு முக்கியமில்லையே. ஆனால், என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனது படபடவென அடித்துக் கொண்டது.. ‘இவர்கள்தானே விட்டு கொடுத்துவிட்டார்கள் மகனை’ வீட்டு மனிதர்கள் மேலும் சின்ன கோவம் வந்தது.. அந்த நேரத்தில்தான் கருணா அழைத்தான் அவளை.
அவளிடம் ஒரு விஷயம் பேச அழைத்தான்.. கொஞ்சம் தயக்கம்தான் அவனுக்கு.. ஆனால், அவளிடம் பேசிட வேண்டும் என்ற எண்ணம் உந்த அவளை அழைத்தான்.
சுபிஅவதானித்து நிதானித்து என எந்த யோசனையும் இல்லாமல் உடனே கருணாவின் அழைப்பினை ஏற்றாள்.. “ஹலோ கரண்..” என்றாள், பதட்டமாக.
கருணாகரன் அவளின் பதட்டத்தை கண்டுக் கொண்டவன் “என்ன சுபி,, என்னாச்சு ஏன் டென்ஷனா..” என முடிக்கவில்லை..
சுபி “அ..அது.. அம்மாகிட்டேயிருந்து மகனை பிரிக்கலாமா? தப்புதானே.. நான் போலீஸ்சில் ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும் கரண்.. என்கூட வரீயா” என்றாள்.
கருணாவிற்கு என்ன ஏது என புரிய வேண்டுமே அதனால் “என்னாச்சு சுபி.. பொறுமையா சொல்லு.. அப்போதானே தெரியும்” என்றான்.
சுபி “மாமனார் விசாகனை கூட்டி போயிட்டாங்க.. எனக்கு இப்போவே விசாகனை பார்க்கணும்.. அது” என சொல்லி.. வீட்டில் நடந்தவைகளை.. அவர்கள் சொன்னதை சொன்னாள்.
கருணா “சுபி, பொறுமையா நான் கேட்பதற்கு பதில் சொல்லு..” என்றான்.
சுபி கத்தினாள் இவனிடம் “என்ன கேட்க போற.. நான்.. நான் இப்போ என்ன பண்றது.. போலீசுக்கு போகவா.. எத்தனைதரம் சொல்லுவது.. அவர்களுக்கு..” என்றாள்.
கருணா “இரு சுபி பொறுமையா இரு.. உன் கல்யாணம் பத்தி” என முடிக்க கூட இல்லை.. பெண்ணவள் “என்ன பிரச்சனை கரண் உனக்கு.. நீயும்.. நீயும் அப்படிதான் நினைக்கிறீயா” என்றாள்.
கருணாவிற்கு பிரச்சனையின் ஆரம்பம் லேசாக புரிந்தது.. மீண்டும் வீராவோடு திருமணம் பற்றி பேசியிருக்கிறார்கள் என புரிந்தது. அதன்பின் உடனே திட்டம் போட்டான் “எதுக்கு போலீஸ்.. விசாகனை நீ போய் கூட்டிட்டு வந்திடு” என்றான், இலகுவாக.