வெள்ளிக்கிழமை மாலை என்றால், விசாகன் குருவோடு செல்லுவான் என தெரியும் சுபிக்கும்.. கிளினிக்கில் வேலை செய்பவர்களுக்கும் சரி. அதனால், குருவினை பார்த்ததும் விசாகன் ஆவலாக கிளம்பினான்.
கருணா மேலே வந்தான். கருணா சுபியை பார்த்தே நாட்கள் ஆனது. எப்படி இருக்கிறாள் எனகூட தெரியவில்லையே என எண்ணிக் கொண்டே மேலே வந்தான் கரண். ஆனால், சுபி இல்லை. கரண் பணியாளர்களிடம் சொல்லிடுங்க என சொல்லிவிட்டு பிள்ளைகளோடு சென்றான்.
கருணா சுபிக்கு அழைக்கவில்லை. விசாகனை அழைத்து செல்வது பற்றி சொல்லவில்லை.
திங்கள் அன்று ஹிந்தி எக்ஸாம், ஒன்றும் படிக்கவில்லை. விசாகன் சிறு குழந்தையாக குருவினை பார்த்ததும் கிளம்பிவிட்டான்.. அவர்களோடு.
கருணாவிற்கு, சுபியை பார்க்காதது என்னமோ போலாக.. தன்னையே நொந்துக் கொண்டான். கருணா “விசாகன் அம்மா எப்படி இருக்காங்க” என்றான்.. பின்னால் இரு பிள்ளைகளும் அமர்ந்திருக்க.. கருணா கண்ணாடியில் பார்த்து வினவினான்.
விசாகன் கருணாவை முறைத்தான் எனலாம் பதில் சொல்லவில்லை.
கருணா ‘இவன்வேற.. எப்போதும் நம்மை முறைக்கிறான்..’ என எண்ணிக் கொண்டான். ஆனாலும் விடவில்லை கருணா “என்ன விசா, பதிலே காணோம்..” என்றான்.
விசாகன் “அம்மா குட். ஆனால், பிசியா இருக்காங்க.. எனக்கு எக்ஸாம் வேற.. சொல்லிக் கொடுக்கவே இல்லை.. நாளைக்கு ஹிந்தி எக்ஸாம்.. இன்னும் ஏதும் படிக்கலை” என்றான் சோகமாக.
கருணா “அப்படியா.. இன்னும் படிக்கலையா..” என்றான்,
விசாகன் தலை குனிந்துக் கொண்டான்.
கருணா “நான் வேணும்ன்னா ஹெல்ப் பண்ணவா” என்றான்.
குரு இதை கவனித்துக் கொண்டே இருந்தான்.
விசாகன் குருவின் காதில் எதோ சொன்னான்.. ஆனால் குரு “இல்ல டா.. என் டாட்க்கு தெரியும். சும்மா கொஞ்ச நேரம் ரீட் பண்ணுடா அப்புறம் விளையாடலாம்” என ரகசியம் பேசினான். இருவரும் எதோ பேசி முடிவெடுத்தனர்.
குரு “ப்பா.. அவன் ஹல்ப் ஹௌவர் படிப்பான்.. அப்புறம் நாங்க விளையாட போவோம்” என்றான்.
கருணா “சரி.. நான் பிரெஷ்ஷாகி வரும் வரை.. நீங்க விளையாடுங்க.. வந்து படிங்க” என்றான்.
குரு தந்தையை முறைத்தான்.
கருணா “குரு.. படிக்கணும்” என்றான், குரலில் அழுத்தம் இருந்தது. பிள்ளைகள்தான் எல்லாவற்றையும் கண்டுக் கொள்வார்களே, அதனால் அமைதியாகினர்.
விசாகன் குரு இருவரும் உடைகளை கூட மாற்றாமல் விளையாட்டுதான்.. குரு “விசா நான் இங்கேதான் இருக்க போறேன் இனிமேல்.. பாரேன்” என சொல்லி சொல்லி சைக்கிளில் இங்கும் அங்கும் கத்திக் கொண்டே ஓடினான்.
விசாகனுக்கு அன்னையின் நினைவு.. ஹிந்தி எக்ஸாம் வேறு படிக்கவில்லையே.. இப்போது அங்கிள் சொல்லி கொடுக்க போறாராம் என அவனுக்கு மூட் சரியில்லை. குரு பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.
கருணா இருபது நிமிடத்தில் கீழே வந்தான். விசாகனை அழைத்தான் படிக்க. அவனின் டைரி பார்த்து.. என்ன சொல்லி தர வேண்டும் என பார்த்து.. அவனின் நோட் எடுத்து பார்த்து.. என ஹாலில் சோபாவின் கீழ் சாய்ந்தவாறு அமர்ந்துக் கொண்டான்.
க்ரே நிற ஷாட்ஸ்.. வைட் டி-ஷர்ட்.. என பாந்தமாக நிமிர்ந்த அவனின் உடல்வாகினை எடுத்து காட்டியது. அஹ.. எப்படி இருந்தும் லேசாக தொந்தி வயிறு எட்டி பார்த்தது.. நிமிர்ந்து அமர்ந்தால் ஒன்றும் தெரியாதுதான். அடர் சிகை.. லேசான தாடிமீசை.. நெற்றியில் திருநீறு.. கழுத்தில் கருங்காலி மாலை.. ரீடிங் க்ளாஸ்.. புஸ்த்தகத்தில் கவனம்.. என கருணா என்னமோ புதிதாக இருந்தான் இப்போது.
விசாலாட்சி “என்ன டா இது.. நீ சொல்லி தர போறீயா.. அதுவும் விசாகனுக்கு.” என மிரண்டவராக வினவிவிட்டு ரத்தினாவோடு சமையல் வேலையை கவனித்தார்.
குரு சத்தமில்லாமல் தந்தையின் மீது சாய்ந்துக் கொண்டு போனில் விளையாடிக் கொண்டிருந்தான். காதலும் கடமையும் வேறுவேறாகவே பார்த்துவிட்டான் போல கருணா. இன்று அவனையும் அறியாமல்.. கடமையை செய்கிறான்.. காதல் அமையுமா என தெரியாமல்.
கருணா, விசாகனுக்கு.. வார்த்தைகளை சொல்லி எழுத வைத்து.. ஒப்புவிக்க வைத்து.. என ஒருமணி நேரம் கடந்தும் பாடம் நடந்துக் கொண்டிருந்தது.
சுபி கிளினிக் வந்ததும்தான் தெரிந்தது.. கருணா வந்து விசாகனை அழைத்து சென்றது தெரிந்தது.
அங்கிருந்த ஸ்டாப்ஸ்சிடம் கத்தினாள் “என்கிட்டே சொல்ல வேண்டாமா.. இதென்ன பழக்கம்.. அவனை அனுப்புங்கள் என உங்களுக்கு நான்தானே போன் செய்து எப்போதும் சொல்லுவேன்..” என காய்ந்தாள்.
எல்லோரும் ஏதேதோ சமாதானம் சொல்லினர்.
சுபி கோவமாக கருணாவிற்கு அழைத்தாள். குருவின் கையில் போன்.. குரு “அப்பா.. சுபி” என சொல்லி போனினை நீட்டினான் தந்தையிடம்.
கருணாகரன், கண்ணாடியை கையில் எடுத்துக் கொண்டே.. கண்களால் விசாகனிடம் படி என காட்டிவிட்டு போனோடு குருவின் அறைக்கு சென்றான்.
அதற்குள் சுபி “என்ன நினைச்சிட்டு இருக்க.. ஒரு போன் செய்து கூட சொல்லமாட்டியா.. அவனை கூட்டி போறேன்னு. அவனுக்கு எக்ஸாம் இருக்குன்னு நான் அடித்து பிடித்து சீக்கிரம் வந்தேன்.. நீ இப்படி விளையாட கூட்டி போயிருக்க.. அவன் குழந்தை.. நீ என்கிட்டே கேட்டுதானே கூட்டி போகனும்.. உனக்கு என்னதான் பிரச்சனை” என எங்கோ சென்றுவிட்டாள் பெண்.. ம்.. தனிமையில் இருப்பவளுக்கு.. ஏதும் புரிந்தாலும் பிரச்சனை.. புரியாவிட்டாலும் பிரச்சனைதானே.. கத்தினாள்.