ஒரு விடுமுறைதினம்.. கருணாவிற்கு, காலையிலிருந்து பிரகாஷூம் சாரதாவும் அழைத்து பேசியமயம். ‘இல்ல கண்டிப்பா இன்னிக்கே பாரு..’ என சாரதா நெருக்கிக் கொண்டிருந்தாள் அண்ணனை.
பிரகாஷ் “கருணா, கல்யாணம் செய்துக்கனும்ன்னு ஆகிடுச்சி.. நீ முதலில் பேசணும். அவங்க அப்படிதான் சொல்றாங்க. முன்புபோல.. அம்மா அப்பா பார்த்து வைப்பதெல்லாம் ஆகாது. வா.. ப்ளீஸ்.” என அவன் அழைத்து பேசிக் கொண்டிருந்தான்.
கருணாவினை, பேப்பர் படிக்கவிடலை. அவன் சண்டே எப்போதும் நேரமாக ரேசொர்ட் கிளம்பிடுவான் இன்று, சற்று நேரம் இருந்துவிட்டு போகலாம் என்றால் தங்கை இன்றே பார்க்க வேண்டும் என்கிறாள் என யோசனை.. குருவையும் கூட்டி செல்லலாமா வேண்டாமா என யோசனை. நேராக எழுந்து அறைக்கு சென்றுவிட்டான்.
குருவோடு சென்று பார்த்து விடலாம் என முடிவெடுத்து குளித்து வந்தான். கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டான்.. ‘எந்த உறுத்தலும் இல்லை.. கண்டிப்பா நான் நல்ல லைப் எடுத்துக்கனும்.’ என ஸ்திரமாக சொல்லியும் கொண்டான். கண்டிப்பா குருவிற்கு நல்ல தந்தை நான் என எண்ணிக் கொண்டு.. ‘இன்னுமொரு வாழ்க்கை.. ரெடியாகு கரண்..’ என சொல்லிக் கொண்டான். என்னமோ அந்த பெயர் வந்தது. பள்ளிகாலத்தில் அவனின் தோழர்கள் அழைப்பது. சங்கீதா கூட அப்படிதான் அழைப்பாள்.
தன் அன்னைக்கு அழைத்த கருணா “குருவை ரெடியாக்குங்க ம்மா.. நானும் அவனும் போறோம்” என தகவல் சொன்னான். அன்னை ‘வேண்டாம் டா..’ என சொன்னதும் ‘ம்மா..’ என சொல்லி அழைப்பினை துண்டித்துவிட்டான்.
பிரகாஷ் “அத்தை அவர் இதற்கு ஒத்துக் கொண்டதே பெரிது. பார்த்துட்டு வரட்டும்” என்றார்.
விசாலாட்சி பேரனிடம் ரகசியமாக “உன் அப்பாவிற்கு கல்யாணத்திற்கு பெண் பார்க்க போறீங்க.. அமைதியா பேசு.. உனக்கு பிடித்திருக்கா பாரு.. டிஸ்டர்ப் பண்ணாதா” என சிலபல அறிவுரைகள் சொல்லித்தான் அனுப்பினார்.
அடுத்த ஒருமணி நேரத்தில் ஒரு மால்’லில் சந்தித்துக் கொண்டனர். ஒரு பெண், பளிங்கு நிறத்தில் தன்னை ‘ஸ்வேதா’ என அறிமுகம் செய்துக் கொண்டு அவன் எதிரில் அமர்ந்திருந்தாள். பீச் நிற சாட்டின் ஸ்லீவ்லெஸ் சுடிதார்.. அடர்ந்த முடி.. லேசான ஒப்பணை.. சத்தியமாக அவளை பார்த்தால்.. மூன்று வயது பெண் குழந்தைக்கு அன்னை என சொல்லவே முடியாது, அப்படி ஒரு தோற்றம்.. குழந்தையின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு.. “ஹாய்.. வந்து நேரமாச்சோ” என ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே அவன் எதிரில் வந்து அமர்ந்தாள்.
கருணா “இல்ல.. இப்போதான்” என்றான்.
குரு, திருதிருவென நொடிநேரம் பார்த்தான் பின் “டாட்.. நான் ஐஸ்கிரீம், வாங்கிக்கிறேன்” என சொல்லி.. தந்தையின் போனினை வாங்கிக் கொண்டு சென்றான்.
கருணா “குரு, என்னோட சன்” என்றான்.
ஸ்வேதா “எனக்கு பெண், கமலி. சொல்லுங்க” என்றாள். தன் பெண்ணை மடியில் அமர்த்திக் கொண்டு.
கருணா “நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு என்னை பற்றி தெரியுமா” என்றான்.
ஸ்வேதா “ம்.. நீங்க என்னை பற்றி தெரிந்துக் கொள்ளவில்லையா.. ஏன் விருப்பமில்லையா.. ” என்றாள்.
குரு இப்போது இரண்டு ஐஸ்கிரீம் வாங்கி வந்தான்.. ஒன்றினை குட்டி பாப்பா பக்கம் நீட்டினான்.. கோன் ஐஸ்கிரீம்.
ஸ்வேதாவின் முகம் அப்படியே ஆனந்தத்தில் சட்டென மலர்ந்துவிட்டது.. “அஹ.. தேங்க்ஸ் பேபி.. தேங்க்ஸ்.” என சொல்லி.. பரபரத்த தன் மகளுக்கு ஊட்ட தொடங்கினாள்.
குரு புன்னைத்துவிட்டு, போனோடு சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டான்.
கருணா ஏதும் பேசாமலேயே அமர்ந்திருந்தான்.. அப்போதுதான் அந்த பெண்ணின் விரல்களில், அதாவது சுட்டுவிரலில் அவள் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்தான்.. சட்டென கருணாவிற்கு, இதுபோல எங்கோ பார்த்திருக்கிறேனே.. என தோன்றியது. எங்கே! என தனக்கு தெரிந்த பெண்ணின் விரல்களை எல்லாம் ஓட்டி பார்த்தான்.
சாரதா.. அம்மா.. அவ.. ம்கூம்.. இல்ல இல்ல.. ம்.. சுபி, அன்று பார்த்தேனே, ம்.. வெள்ளியில் ஆமை உருகொண்ட அண்டிக் மோதிரம்.. அணிந்திருந்தாள். அப்போதே நினைத்தான் ‘ப்பா.. இவ எப்படி பிசியோ செய்கிறாள்.. விரல்கள் நிறைய மோதிரத்தோடு..’ என எண்ணிக் கொண்டான். இப்போது அதை எண்ணி முகம் ஒளிர தொடங்கியது. சுற்றம் தெரிந்தாலும், அந்த ஒளி சட்டென வந்திருந்தது.. அதை வெளிப்படுத்தாமல், தன்னையே நொந்துக் கொண்டு.. இரு கைகளிலும் தன் சிகையை கோதி, தன்னை நிலைப்படுத்திக் கொண்டான், கருணா.
ஸ்வேதா “எனக்கு வேலை பெங்களூரில்.. சென்னையில் மாத்திக்கலாம். எனக்கு குழந்தையை பார்க்க பேபி சீட்டர் மட்டும் வைக்கனும்.. குழந்தை வீட்டில் இருக்கனும்.. வேற எங்கேயும் விட விருப்பமில்லை.. அப்புறம் பாப்பாக்கான செலவு.. அவங்க அப்பாகிட்ட இருந்து வந்திடும். அதெல்லாம் பிரச்சனையில்ல..” என சொல்லி சொத்துக்கள்.. நகைகள்.. அதன் பாகம் என எல்லாம் சொன்னாள்.
கருணாவிற்கு எல்லாம் காதில் கேட்க்கிறது, ஆனால்.. மனது அதில் இல்லை.. எதிரில் இருந்தவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆனால், என்னமோ ‘காபிஷாப்.. பிசியோ சென்டர்.. என்ன பிரச்சனை அவளுக்கு.. தயங்கிய பேச்சுகள்.. சங்கீதா சொன்ன, இந்த வருடம் அவளுக்கு வேறு திருமணம் நடந்திடும்..’ என்ற வார்த்தைகளும்.. காட்சிகளும்.. அவன்முன் ஓடிக் கொண்டிருந்தது.
ஸ்வேதா “எனக்கு ஓகேதான்.. நான் எல்லாம் சொல்லிட்டேன்.. உங்களை பற்றி” என்றாள்.
குரு வந்து அமர்ந்தான் “எனக்கு இவன்தான் முக்கியம். நான் அவன்கூட பேசிட்டு சொல்றேன்” என்றான், நிதானமாக.
ஸ்வேதாவின் முகம் விழுந்துவிட்டது, நிதானமாக “ஹாய் குரு.. என்ன படிக்கிற” என எதோ கேட்டுக் கொண்டிருந்தாள். அடுத்ததாக என்ன பேசுவதென கருணாவிற்கு தெரியவில்லை.. கருணா எழுந்து போன் பேச சென்றுவிட்டான்.
குரு, புன்னகையோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால், என்னமோ அவனுக்கு தேவையாக இருந்தது.. அருகில் வந்து கமலியை தூக்கினான்.. விளையாடினான் பேசிக் கொண்டே.. ஆனால், ஸ்வேதா, குருவின் சிகையை தொடவேயில்லை. குருவின் எதிர்பார்ப்பு பொய்யாகி போக.. அமைதியாகினான் சற்று நேரத்தில்.
எல்லோரும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர்.
குரு காருக்கு வந்ததும் “என்ன டாட் புது அம்மாவா..” என்றான் காஸுவல்லாக.
கருணா, முயன்று தன்னை சமாளித்து.. “ம்.. என்ன சொல்ற” என்றான்.
குரு “அழகா இருக்காங்க.. ம்.. பாப்பா ஓகே.. ஆனால்,” என சொல்லி அமைதியாகிவிட்டான்.
கருணா, மகனை திரும்பி திரும்பி பார்த்தான்.. ஆனால், என்னவென கேட்கவேயில்லை. மகனும் வாய் திறக்கவில்லையே. தந்தையும் மகனும்.. கண்ணாமூச்சு விளையாடினர்.
அந்த நேரத்தில் சுபி வீட்டில் இருந்தாள். ஆனால், அவள் நல்லவிதமாக இல்லை.. முகம் கோவத்திலும்.. அழுகையிலும்.. சிவந்திருந்தது.
வீடியோ கால். அவளின் சங்கீதா அக்கா அழைத்து பேசிக் கொண்டிருந்தாள், நல்ல்விதமாகதான் பேச்சுகள் சென்றுக் கொண்டிருந்தது. சுபி “மாமா எங்க அக்கா” என கேட்டகத் தொடங்கியதும், பிரச்சனை தொடங்கியது.
சங்கீதா “ஏன் சுபி, நீ உன் மாமனாரை அப்படி ட்ரீட் செய்யலாமா? அவர் அவ்வளவு வருத்தப்படுறார். என் மகன் போனதிலிருந்து, சுபி என்னை மதிப்பதேயில்லை.. நாங்க எல்லாமே அவள் இஷ்ட்டத்திற்குதானே விடுகிறோம். என்ன நாங்க கொடுமை செய்தோம். இதெல்லாம் சங்கடமா இருக்கு கார்த்திக். பேரன் எப்படி வளருவானோ.. அவனுக்கு என்ன நல்ல பழக்கம் வரும்.. இதெல்லாம் சரியில்ல பா” என வருத்தப்பட்டு பேசியிருக்கார், அதிலிருந்து உன் மாமா வருத்தப்படுறார்.. என சங்கீதா தங்கையிடம் பேசியவள்.. இப்போது கணவனை பற்றி “பேசுவாரா தெரியலை.. நீயும்தான் ஆகட்டும் ஏன் டி இப்படியெல்லாம் பண்ற.. அவர் உன் மாமனார், அவர்கிட்ட பொறுமையாகத்தான் பேசேன்” என்றாள்.
கார்த்திக்கிடம் போன் கொடுக்க.. அதை வாங்காமல், கார்த்திக் “அவளுக்கு நாமெல்லாம் ஏதாவது சொல்ல முடியுமா.. அவளுக்கு எல்லாம் தெரியும், அவளிடம் நீ ஏன் சொல்ற, எனக்கு வேலையிருக்கு நான் அப்புறம் பேசுகிறேன்” என்றார்.