சில்லென புது மழைத்துளி!

1

வேதாரண்யம் அருகே ஒரு அய்யனார் கோவில்.. ஒரு மர நிழலில்..  வெள்ளை வேட்டியில் தன் மருமகளை மடியில் தாங்கி அமர்ந்திருந்தான் கருணா. சுற்றிலும் சொந்தங்கள்.. தன் தங்கை கணவர் உறவில் அங்காளி பங்காளிகள்.. பெரிய குடும்பம். அதில் இளைய வாரிசு தீபு குட்டி. அவளின் முடியிறக்கும் வைபம் இன்று. கிடவிருந்தும் கூட. 

மருமகளின் தலையை ஆடாமல் அசையாமல் பிடித்துக் கொண்டு “சரி.. சரி.. அவ்வளவுதான்..” என பேசிக் கொண்டே அவளுக்கு காயம் ஆகாமல்.. செய்தான் தாய்மாமன் கருணாகரன்.

சுற்றிலும் அவனின் தங்கை.. அவளின் கணவர்.. தன் அன்னை தந்தை பெரியவன் அஸ்வின் என்ற குட்டி வாண்டு எல்லோரும் “இங்க பாருங்க.. அழாத தீபு.. அவ்வளவுதான்” என பேசிக் சமாதனம் செய்து கொண்டிருந்தனர். மூன்று வயது அந்த தேவதைக்கு. அவளின் பால் நிறம்.. பன்னீர் ரோஜா நிறத்தில் இருந்தது இப்போது அழுது அழுது. 

முடியிறக்கி முடித்து.. மாமன் தோள் சாய்ந்து அழுகை தீபு. பொறுமையாக அவளை சமாதானம் செய்த கருணா.. “சாரதா.. பார்த்து, பாபாக்கு வெதுவெதுன்னு குளிக்க வை.. தலையில் எரியும்.. பார்த்து..” என்றவன்  குழந்தையை தங்கையிடம் கொடுத்துவிட்டு சென்றான்.

தங்கையின் கணவர் “மச்சான்.. குளிச்சிட்டு சீக்கிரம் வந்திடுங்க” என்றுவிட்டு மகளை நோக்கி சென்றார் பிரகாஷ்.

கோவிலில் இடம் அவ்வளவு பெரிதில்லை. எப்போதும் விஷேஷ நாட்களில் மண்டபம் புக் செய்துக் கொள்வர். மண்டபத்தில் கறிவிருந்து ஏற்பாடுகள்.. அங்கேயே தங்குவதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர் சாரதாவின் வீட்டார்.

அந்த மண்டபத்திற்கு காரெடுத்துக் கொண்டு சென்றான் கருணா. குளித்து பிரகாஷ் வைத்திருந்த பட்டுவேட்டி அணிந்துக் கொண்டு.. மீண்டும் காரேறி கோவில் வந்தான். 

கூட்டம் இப்போது நிறையவே இருந்தது. கருணா ஒரு பெரும்மூச்சு எடுத்து விட்டுக் கொண்டு காரினை மரநிழலில் நிறுத்திவிட்டு.. செருப்பில்லாமல் நடந்து வந்துக் கொண்டிருந்தான். 

அப்போது அவனின் ஒன்றுவிட்ட மாமா, கருணாவை பார்த்துவிட்டவர் அவனோடு இணைந்துக் கொண்டு நடந்தார்.. அவரே “எப்படி இருக்க கருணா..” என தொடங்கி பேச தொடங்கினார். 

கருணாகரனும் பதில் சொல்லிக் கொண்டே வந்தான்.

அவரும் “இப்போவெல்லாம்.. ஒன்னும் பிரச்சையினையில்லையே..” என்றார்.

கருணா “என்ன மாமா” என்றான் கொஞ்சம் விரைப்பான குரலில்.

மாமா “பிசினஸ்.. அப்புறம் உடம்பு எல்லாம் நல்லா இருக்குல்ல” என்றார்.

கருணாவிற்கு பதில் சொல்ல வேண்டும் என தோன்றவில்லை.. அமைதியானான். அவர் தன்னை பார்க்கும் பார்வையே சரியில்லை.. என எண்ணிக் கொண்டே வந்தான்.

ஆனால், அந்த மாமா சும்மா இருக்கவில்லை.. இந்த விழாவிற்கு வந்த நோக்கத்தினை கனகச்சிதமாக செய்தார். “அதென்னன்னா.. நீ உன் வாழ்க்கையை இப்படி ஈசியா எடுத்திருந்திருக்க கூடாது. பாரு, இப்போ ஊரே என்ன பேசுதுன்னு.. உனக்குதான் தெமில்லைன்னு பேசுது. அத்தோடு சிலதை இலைமறை காய்மறையாக விட்டிடனும் கருணா. கொஞ்சம் பெறுமையாக இருந்திருக்கலாம் நீ. ம்.. எல்லாம் நேரம். விடு.. , நீ இப்போ நல்லாதானே இருக்க” என்றார். அந்த நல்லா என்ற வார்த்தையை சொல்லும் போது அத்தனை வன்மம் குரலில். அதனாலோ  என்னமோ நம்பியார் குரலில் கேட்டது கருணாவிற்கு அந்த வார்த்தைகள்.

அவர் என்ன சொல்லுகிறார்.. எதை  சொல்லுகிறார்.. என ஆராயும் நோக்கில் அவன் இல்லை. ஏதுவும் வேண்டாம் என்பதுதான் அவனின் எண்ணம். நல்லதோ கெட்டதோ.. எனக்கு பழைய கதைகள் வேண்டாம் என எண்ணியவன் “நீங்க போங்க.. நான் வரேன்” என்றான் குரல் இடுங்க.

அந்த மாமா புன்னகைத்தார்.. ஆனால், அது நம்பியாரைதான் நினைவுப்படுத்தியது அவனுக்கு. அவர் புன்னகையோடு “நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்கும் ப்பா.. என்ன நான் சொல்றது” என்றவர் “சரி நீ வா.. முன்னால் போறேன்” என சொல்லிக் கொண்டே விழா நடக்கும் கோவிலுக்கு வந்தார்.

அஹ.. எல்லோரும் ஜாடை பேசுகிறார்கள். எல்லோருக்கும் காலம் வரும் போல. ம்.. எல்லோரையும் காலம் கீழே தள்ளி வேடிக்கையும் பார்க்கும் போல.. அவர்கை ஓங்கியிருக்கிறது போல.. அதான் பேசுகிறார்.. என எண்ணிக் கொண்டே.. சற்று நேரம் மரத்தின் நிழலில் நின்றான், கருணாகரன். சில நிமிடங்கள் தேவைப்பட்டது.. மீண்டும் நினைவு வந்தவைகளை ஒதுக்கி வைக்க.

ம்.. அவனின் ராசியோ என்னமோ.. அவனிருக்கும் இடத்தில், எப்போதும் கூட்டத்தில் ஒருவனில்லை அவன். அவனை பற்றிய பேச்சுகள் அந்த கூட்டத்தில் கேட்டுக் கொண்டே இருக்கும் அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். அவன் வாழ்ந்த காலத்திலும் இப்படிதான்.. அவனுக்கென காசிருக்கு ஆடுகிறான் என்றனர். இப்போதும் பேசுகின்றனர் காசிருந்துதுன்னு ஓவராக ஆடினான்.. அதான் ஆண்டவன் அடக்கிவைச்சிட்டான். ஆனாலும், அந்த திமிரு மட்டும் குறையுதா பாரு.. என பேசுகின்றனர். ஆக, கருணாகரன் எப்போதும் பேசுபொருள்.

பிரகாஷ் வந்து “மச்சான் வாங்க..” என கூட்டி சென்றார்.

கருணா முகம் இயல்பாக மாப்பிள்ளையோடு சபைக்கு சென்றான்.

மாமன் மடியில் அமர்த்தி தீபுவிற்கு காது குத்தியாகிற்று. தீபுவை சமாதானம் செய்தனர் எல்லோரும்.

கருணாகரனை பார்த்த உறவுகள்.. ஒவ்வொருவராக விசாரிக்க தொடங்கினர்.. “உடம்பெல்லாம் பரவாயில்லையா ப்பா..” என. கருணாவும் கனிவாக பேசுபவர்களிடம் அமைதியாக பேசி.. அவர்களின் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தான்.. அப்படியே அமர்ந்திருக்க.. காலையில் இருந்த முகம் நேரம் ஆக ஆக.. வாட தொடங்கியது. காரணம் என புதிதாக ஏதுமில்லை.. வந்திருந்த உறவுகள்.. பிள்ளைகள் குழந்தைகளை பார்க்க.. என்னமோ ஒரு வெறுமை. இவனின்  வெறுமையை யாருமில்லா இருட்டு இரவுகளும்.. சிலபல போதை புட்டிகளும் மட்டுமே அறியும்.. சிலநேரம் நல்ல நண்பர்களும் அறிவர்.

இப்போது, சட்டென எழுந்துக் கொண்டான் கருணா. அன்னையிடம் மட்டும் “அம்மா, மண்டபம் போறேன்.. எல்லாம் வந்துசேருங்க.. நான் போய் சாப்பாடு தயாரா பார்க்கிறேன்” என சொல்லி கிளம்பினான்.

அன்னையோ “டேய்.. நீ சம்பந்தி வீடு டா.. முறை செய்திருக்கிறாய்.. இருடா.. பதில் மரியாதை செய்வார்கள்.. சாரதா தீபுவிற்கு பீட் பண்ண போயிருக்கா இருடா..” என்றார், பையனை யாரும் கண்டுகொள்ளவில்லையோ என.

கருணா “போம்மா நீவேற..” என சொல்லி காரெடுத்து கிளம்பிவிட்டான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பிரகாஷ்டமிருந்து அழைப்பு கருணாவிற்கு. அழைப்பினை ஏற்ற கருணா “சொல்லுங்க மாப்பிள்ளை” என சாகவாசமாக பேசினான்.

பிரகாஷ் “மச்சான் எங்க போய்டீங்க.. முறை செய்யனுமில்ல.. வாங்க” என்றார்.

கருணா “மாப்பிள்ளை, அதெல்லாம் அம்மா அப்பா பார்த்துப்பாங்க.. நீங்க அங்கேயே கொடுத்திடுங்க.. நான் சாப்பாடு ரெடியா பார்க்க போறேன்.. நீங்க வைங்க போனை” என சொல்லி அழைப்பினை துண்டித்துவிட்டான்.

சாரதாவும் அன்னையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர், பிரகாஷ் போன் பேசுவதை. கருணா என்ன சொன்னான் என காதில் விழுந்தது. சாதரணமாக பார்த்தால் ஒன்றுமில்லைதான். ஆனால், 36 வயது ஆண்மகனாக.. ஏழு வயது மகனின் தந்தையாக பார்த்தால்.. எதோ இருக்கிறதுதானே.. இந்த விலகலில்.

பெரிய உணவு கூடம்.. 

வரிசையாக டேபிளி சேர் என போடப்பட்டு.. உணவுகள் பரிமாறிக் கொண்டிருந்தனர். கறி விருந்து அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. பட்டு வேட்டியை மட்டித்து கட்டிக் கொண்டு.. கறி எடுத்து பாரபட்சம் இல்லாமல் உறவுகள் இலையில் வைத்து “என்ன மாம்ஸ்.. பெரிய மருமகன் விழாவில்  வரலை..” என்ற கேள்வியை சற்றுமுன் தன்னை வெறுப்பேற்றியவரிடம் வினவினான்.

பந்தியில் எல்லோரும் புன்னகைத்தனர். அப்போது அந்த மாமா வேளையில் இருந்தார்.. பிசி. இப்போது ரிட்டையர்டு ஆகிட்டார். எல்லா இடங்களுக்கும் வந்துவிடுவார்.. அத்தோடு ஊர் வம்பும் கூட.

அவர் கொஞ்சம் சங்கடமாக தன்னை ஏறிட, அவனே “சரி சரி.. இரண்டு விருந்து சாப்பாடும் சேர்ந்து சாப்பிட்டனும் சொல்லிட்டேன்” என கிண்டல் புன்னகையோடு அவரை சமாதானம் செய்தான்.. அதன்பின் அவர் உண்பதற்கு தவிர வாயே திறக்கவில்லை.

எல்லோரிடமும் கொஞ்சம் கேலி கிண்டல்.. என உணவினை பரிமாறினான் கருணாகரன். நெடுநெடு உயரம்.. ஒல்லியான தேகம்.. கண்ணில் லேசான வருத்தம் அதை மறைக்கும் அவனின் பேச்சு. சிலநேரம் ஒட்டிக் கொள்வான். பலநேரம் எட்டி நிற்பான். எந்தநேரம் எப்படி என புரிவதில்லை அவன் குணம்.

உண்டு முடித்த அந்த மாமா.. நேராக கருணாவின் அன்னையும் தன் தங்கையுமான விசாலாட்சியிடம் வந்தார்.. கணவனோடு அமர்ந்திருந்தார். அந்த மாமா “விசாலாட்சி கருணாவை நல்லா பார்த்துக்கோ.. உடம்பு இன்னும் தேறவில்லை போல.. என்ன ரிசார்ட் போறானா.. வேலையை பார்க்கிறானா.. என்னமோ போ.” என்றார்.

விசாலாட்சி கண்கலங்க தொடங்கினார்.. அவரின் கணவர் அருணகிரி கொஞ்சம் எரிச்சலானார்.. மனைவியின் கையை தட்டி கொடுத்தவர்.. “பேரன் எங்கேன்னு பார்த்தியா” என்றார் பேச்சினை மாற்றும் விதமாக.

அந்த மாமாவோ விடாமல் “உன் பேரனையும் கூடவே வைத்திருந்திருக்கலாம்.. குழந்தை எப்படி இருக்கான். ம்.. பாவம் அவன்தான்.. என்னமோ போ.. உன்கிட்ட ஒன்னும் சொல்லணும்” என்றவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ரகசிய குரலில் “உனக்கு விஷயம் தெரியுமா.. உன் முன்னாள் மருமகளுக்கு குழந்தை பிறந்திருக்கு..” என்றார்.

அதிக அதிர்ச்சி இல்லாமல்.. அதே கலங்கிய கண்களோடு.. தன் கணவரை ஏறிட்டார் விசாலாட்சி. கணவரோ முறைத்தார் தன் ஒன்றுவிட்ட மைத்துனனை. அந்த மாமா “இல்ல விசா, இதெல்லாம் தெரியனுமில்ல.. பையனை கவனமா பார்த்துக்கோ.. திரும்பவும் வண்டி காருன்னு சுத்த போறான்.. இப்போவும் கார் எடுக்கிறான் போல.. பார்த்துக்கோ. எல்லாம் பேரன் நல்லதுக்குதான்.” என்றவர் எழுந்து வெற்றிலைபாக்கு போடுவதற்கு சென்றுவிட்டார்.

விசாலாட்சி எழுந்து தங்களுக்கென இருந்த அறைக்கு சென்றுவிட்டார். 

இந்த செய்தி கூட்டம் முழுவதும் பரவியது. ஆங்காங்கே பேச்சுகள் எழுந்தது. கருணாவின் காதுகளையும் எட்டியது. பரிமாறிக் கொண்டிருக்கும் போது.. கருணாவை பார்த்த தன் பெரியப்பாவின் மாப்பிள்ளை தன் மனையாளிடம்.. பரவி வரும் செய்தியை சொல்ல..  கருணாவின் பெரியம்மா பெண்.. அவரின் மனையாள் “யாரோ எப்படியோ போறாங்க. அதென்னங்க.. இப்போவெல்லாம் கருணா நல்லாதானே இருக்கான். மூணு வருஷம் முன்னாடி எதோ ஆக்சிடென்ட். அதெல்லாம் இப்போ நல்லாத்தான் இருக்கான்.. இன்னும் நாலுபுள்ள பெத்துக்குவான்.. போனவ போற.. நம்ம கருணாவை விட்டு போனவள் எப்படியோ போகட்டும்.. நீங்க இதையெல்லாம் விடுங்க.. கருணா எப்படி ஜம்முன்னு இருக்கான் பாருங்க..” என ரசித்த அக்கா.. “கருணா, நீ சாப்பிடு.. எல்லாம் சாப்பிட்டாச்சி, எங்க சாரதா.. மாப்பிள்ளை.. இரு போனில் கூப்பிடுறேன்.. எல்லாம் ஆட்கள்  பார்த்துப்பாங்க.. நீ சாப்பிடு” என வாஞ்சையாக அழைத்தார்.

கருணாகரன் திணறினான் இந்த இறக்கத்தில். ‘இதெல்லாம் எனக்கு தேவையா’ எனத்தான் அவனின் மனதில் ஓடியது.. கையில் வைத்திருந்ததை வைத்துவிட்டு.. “சாப்பிடு, நான் போன் பேசிட்டு வரேன்..” என்றவன் அங்கே வேலை செய்பவரை பார்த்து “பார்த்துக்கோங்க” என்றவன் வெளியே வந்துவிட்டான்.

தன் நினைவு கூட பிழையாக தோன்றியது இப்போது கருணாவிற்கு. காரெடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.. தாறுமாறாக சென்றது கார்.. ஒருசிலர்.. கைகாட்டி வசை பாடினர்.. அது மெயின் ரோட் என்பதை கிரக்கித்து.. நிதானப்படுத்தினான் தன்னை.. ஒரு ஓரமாக காரினை நிறுத்தினான்.. சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.. ‘என்ன செய்தால் இந்த அவமானம் போகும்.. அஹ.. போகுமா.. அதென்ன எனக்கு மட்டும் நடக்கிறது. எதுவும் மாறாதுதானே.’ என தனக்குள் விரக்தியாக சொல்லிக் கொண்டவன்.. அந்த விரக்த்தியை அனுபவித்தான்.

“தன்னந்தனி வாழ்க்கை போல..

தண்டனைகள் எதுமில்ல..

இந்த மண்ணுல..” அஹ.. காரில் இந்த வரிகள் ஒளிக்க, அவனறியாமல் ஒரு துளி கண்ணீர் அவன் இமையோரம்.

சற்று நேரத்தில் பிரகாஷ் அழைத்தார்.. அழைப்பினை ஏற்று.. கருணா “ஐஸ்கிரீம் வாங்க வந்தேன் மாப்பிள்ளை..” என்றான்.

பிரகாஷ் ஷன நேரம் அமைதியானார்.. கருணாவிற்கும் தான் என்ன சொல்லுகிறோம் என புரிய.. அவனுள்ளும் அமைதி. ம்.. அது கேட்டரிங் சர்வீஸ்.. அதில் பீடா ஐஸ்கிரீம்.. பரிமாறும் ஆட்கள் எல்லாம் அடக்கம். கருணாவாகதான் பரிமாற வந்தான்.. இப்போது அவனாகத்தான் ஐஸ்கிரீம் வாங்க வந்தான். இருவருக்கும் நடுவில் பெரிய புரிதல். பிரகாஷ் “வாங்க கருணா..” என்றார் ஆழ்ந்த குரலில்.

கருணா “ம்ம்ம்..” என சொல்லி காரெடுத்து மண்டபம் வந்தான்.

ஏதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியாக பிரகாஷ் மனையாளோடு அமர.. கருணாவும் அமர்ந்து உண்டான். 

ஒருமணி நேர ஓய்வுக்கு பின்.. கருணாகரன், தன் பெற்றோரோடு சென்னை கிளம்பினான்.

பிரகாஷ் இறுக்கமாக தன் மச்சானை கட்டிக் கொண்டான்.. “இந்த வாரம் டாக்டர் கிட்ட கேட்டு வைச்சிக்கோ.. பார்ட்டி பண்றோம்..” என்றான் புன்னகையோடு.

கருணா, தங்கையை கண்காட்டி  புன்னகைத்தான் உள்ளார்ந்தது.. அது அவ்வளவு அழகாக இருந்தது.. பிரகாஷ் “டேய் மச்சான், இந்த சிரிப்பை மட்டும் விட்டுடாத.. எல்லாம் சரியாகிடும்” என்றான் தோளைத்தட்டி.

கருணா “என்ன தப்பு.. சரியாக. நான் சரி.. அப்போதும்.. இப்போதும்..” என்றான் கர்வமாக. அஹ.. பொதுவில் தன்னை தானே கூட விட்டுக் கொடுக்கமாட்டான் கருணா.

பிரகாஷ் “ம்..” மீண்டும் கட்டிக் கொள்ளும் தூரத்தில்.. அவனருகில்  அருகில் வந்தன்வன் “என்ன சொல்ற..” என்றான் ஆழ்ந்த ரகசிய குரலில்.

கருணாவிற்கு மாப்பிள்ளை என்ன கேட்க்கிறான் என புரியுமே. சாவியை தூக்கி போட்டு பிடித்தவன் “ஊர் வந்து சேர்..” என நக்கலாக சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

பிரகாஷ் இந்த செய்கையை ரசித்து பார்த்தான்.

காரில் சற்று நேரம் சத்தமேயில்லை. தந்தை எப்போதும் போல அதிகம் பேசமாட்டார்.. தாய்தான் “ஏன் டா.. உனக்கு தெரியுமா.. இதெல்லாம் உனக்கு தெரியுமா” என்றார்.

கருணா கண்டுக் கொள்ளவில்லை.. அமைதியாகவே இருந்தான்.

அன்னை “சொல்லுடா.. இதெல்லாம் கேட்கணும்ன்னு இருக்கு. உனக்கென்ன டா.. நீயும் ஒரு கல்யாணம் செய்துகன்னு சொல்றேன் கேட்க்க மாட்டேங்கிற. என்னென்னமோ பேசுறாங்க டா காதுபட.. கேட்க முடியலை டா.. இப்படி தனியாகவே எத்தனை நாள் இருப்ப..” என்றார் ஆதங்கமாக.

கருணா “ம்மா.. BP ஆகிடும். கொஞ்சம் அமைதியா இரு. இதெல்லாம் காதில் வாங்காத. இன்னுமா இதெக்கெல்லாம் யோசிக்கிற. விடும்மா.. அவங்க வாழ்க்கை.. அதுக்காக நம்ம வாழ்க்கையை நாம அழிச்சிக்க முடியாதில்லை. நீ கொஞ்ச நேரம் தூங்கு..” என இயல்பான குரலில் சொன்னான்.

சென்னை வந்து சேர்ந்தனர்.