சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 1
புலரும் காலை என்றும் போல் இன்றும் அவனுக்கு அழகாகவே புலர்ந்தது. சூரியன் துயிலெழுந்து சில மணி நேரமாகியிருக்க..
அஷோக், அவன் வீட்டு மொட்டை மாடியில் அமைக்க பட்டிருந்த தோட்டத்தை பார்த்தவண்ணம் ஒரு கையில் தேனீர் கோப்பையும், மற்ற கையில் கைபேசியுமாய் மாடி கைச்சுவரில் அமர்ந்திருந்தான்.
பாலிய சினேகிதன், வெங்கட்டுடன் சுவாரசியமே இல்லாமல் கடனே என்று வெட்டி பேச்சு
“மிட் நைட் ஃப்லைட் லாண்ட் ஆச்சு… “
“…”
“இல்ல டா லேட்டா தான் எழுந்தேன்”
“..”
“ஃப்ளைட் அதுவா தான் பறந்து வந்தது.. நான் என்னமோ அத தூக்கீட்டு பறந்த மாதரி எத்தன தரம் அதையே கேப்ப? டையர்டா எல்லாம் இல்ல…”
“…”
“வொர்க் அவுட் முடிச்சு, குளிச்சும் முடிச்சுட்டேன்”
“..”
“இன்னைக்கு வேண்டாமே.. டையர்ட் இல்லாட்டியும் ரெஸ்ட் வேணும்னு உடம்பு கெஞ்சுது”
சில ஏக்கர் நிலபரப்பில், அழகாய் வீற்றிருக்கும் பழைய பாரம்பரிய வீடு அது. பணச்செழுமை தெரிந்தாலும் பெரிய மாளிகை போல் அல்லாமல் மிக பெரிய சைஸ் பணக்கார வீடு போல் அழகாக இருந்தது.
பாரம்பரியம் மாறாமல் பழமையின் நடுவே தேவையான அளவு புதுமையும் இணைந்திருந்தது. வீட்டை சுற்றி கண்ணுக்கு தெரிந்த இடமெல்லாம் பசுமையும் பல வர்ணமுமே.
பக்கத்து வீட்டில் ‘ஓ..’வென்று சிறு வாண்டுகள் எழுப்பிய சத்தம் இவன் காது சவ்வை பதம் பார்க்க, தன்னால் அவன் கவனமும் பார்வையும் அங்கு திரும்பியது.
யாருமில்லாமல் தனியே தன் காலத்தை கழித்துக் கொண்டிருந்த மீனாட்சி பாட்டியின் வசிப்பிடம். ஒன்றரை கிரவுண்டில் ஒரு ஓரத்தில் அமைக்கபட்டிருந்த சராசரி நடுதர வர்கத்தினரின் இரண்டு படுக்கை அறையை கொண்ட வீடு.
அந்த தெருவிலேயே பழைய மற்றும் சிறிய வீடது. இவன் வீட்டை சுற்றி வனம் போல் இருக்க, அவர்களதில் பெயருக்கு ஒரு வேப்பமரமும் மூன்று மிக உயரமான தென்னை மட்டுமே.
விளையாடி கொண்டிருந்த சில்வண்டுகள், மீனாட்சி பாட்டியின் வீட்டு மாடிக்கு படை எடுத்தது.
“டேய் நில்லுடா…”
“நான் தான் ஃபர்ஸ்ட்… நீ போடி அங்க..”
“நான் எதுக்கு போகணும்… நீ போடா லூசு!”
“அக்கா இவன் என்னை புஷ் பண்றான்!”
“அவ பொய் சொல்றா அக்கா…”
“அக்கா இவன் என்னை லூசுனு சொல்றான். பாட் பாய் போட அந்த பக்கம்”
சிரு பிள்ளைகளின் சலசலப்பு அவனின் கவனத்தை ஈர்த்தது.
அமைதியாய் இருந்த இடம் கண்சிமிட்டும் நேரத்தில் போர்க் களம் போல அவனுக்குக் காட்சி அளித்தது. கண்ணில் தென்பட்டதென்னவோ ஐந்திலிருந்து பன்னிரண்டு வயத்திற்குட்பட்ட எட்டு, பத்து பிள்ளைகளே..
பேச்சுக்கள் அதிகம் கேட்கவில்லை ஆனால் அவர்கள் எழுப்பிய சத்தமோ… இடி இடித்தால் கூட காதில் விழாது போல!
“ஹலோ.. டேய் இருக்கியா லைன்ல?… ஹலோ?” மறுமுனை இவனை கூப்பிட
“..” இவன் கவனமோ பக்கத்து வீட்டில்.
“டேய் இருக்கியா லைன்ல?”
“பாட்டி வீட்டில ஒரு வானர படை வந்திருக்கு! அதுங்க போடுர சத்ததில.. ஹப்பா.. அப்பரம் கூப்பிடுறேன்… பாய்!” என்று கைப்பேசியை அணைத்து விட்டு உடலைச் சிலிர்த்தவன், தலையை ஒரு முறை வேகமாய் ஆட்டிக் கொண்டான்.
அவனுடைய பொழுது போக்கான செடி பராமரிப்பை மீண்டும் தொடர்ந்தவன் சிந்தனை முழுவதும் பாட்டி வீடு மாடியே.. ‘வழக்கமா ஒரு ஈ காக்கா கூட அங்க வராதே… இன்னைக்கு என்ன புதுசா தெருவே வீட்டுக்குள்ள?’
மீண்டும் மாடியின் ஓரத்தில் வந்து நின்று அங்கு நடப்பதை அவன் பார்க்க, இரு கண்கள் அவனை சுவாரசியமாய் நோட்டமிட்டு கொண்டிருந்தது!
“அக்கா.. அக்கா.. எனக்கு பபுள்ஸ்!”
“அக்கா.. என் பக்கம் ஊதுங்க ப்லீஸ்கா…”
வாண்டுகளோடு மீண்டும் அவள் விளையாட, இப்பொழுது அவன் கவனம் அவள் மேல். முகம் தெரியவில்லை. இருந்தாலும் ஒடி கொண்டிருந்தவளை அளவிட தவறவில்லை அவன்.
முட்டி வரை பாவாடை, தூக்கி போடப்பட்ட குதிரை வால் ஹேர் ஸ்டைல், வெறும் காலுமாய் ஓடிக்கொண்டிருந்தவளைக் கண்டவன் ‘இது தான் காங்க் லீடரா? ஆள பார் அரை ஆழாக்கு சைசுல… மொதல்ல போய் எல்லாத்தையும் அடிச்சு துரத்தனும்!’ தன்னுள் முணுமுணுத்துக் கொண்டான்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சில வாண்டுகள் படிகளில் தடதடவென இறங்கி ஓட..
இவளோ, மாடி சுவரின் மேல் ஏரி, அங்கிருந்து சன் ஷேடில் குதித்து, அங்கிருந்து திறந்திருந்த வீட்டின் வாசல் கிரிலில் கால் வைத்து இரண்டு தாவில் இறங்கி விட்டிருந்தாள்!
ஒரு வித பயத்தோடு பார்த்து கொண்டிருந்தவன் கவனம் முழுவதும் அவள் மேல். கொஞ்சமாய் தலை சுற்றியது!
‘நிஜமாவே இவ என்ன வாலில்லா குரங்கா? கீழ விழுந்திடுவோம்னு ஏதாவது பயம் இருக்கா பார்!’ மீண்டும் சிலிர்த்துக் கொண்டான்.
அவன் பழகிய வட்டாரத்தில் இப்படி ஒரு ஜீவ ராசியை இது வரை அவன் பார்த்ததே இல்லை!
அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மற்ற வானர படைகளும் வந்து சேர, “ஏய்.. நான் தான் ஃபர்ஸ்ட்.. நான் தான் ஃபர்ஸ்ட்” என்ற குதிப்போடு ஒட்டு மொத்த கூட்டமும் அலறிக்கொண்டே வீட்டுக்குள் மறைந்தது. மழை பெய்து ஓய்ந்த அமைதி.
அவன் பிறந்தது முதல் இங்கு தான் வாசம். அன்று முதல் இன்று வரை அவனுக்குத் தெரிந்த வரை மீனாட்சி பாட்டிக்கு உறவென்று இதுவரை யாரும் வந்து போனதில்லை. ‘சகோதரிகளை பார்க்க போகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு அவ்வப்பொழுது இவர் சென்றிருக்கிறார்.. ‘ஆனால் தெருவில் இருக்கும் பிள்ளைகள் இங்குப் படை எடுத்து விளையாடும் வயதில்.. யார்?’ மண்டை குடைந்தது!
‘பாட்டி வீட்டில இதுங்களுக்கு எல்லாம் என்ன வேலையோ?’ ஏதேதோ சிந்தனைகளுடன் மீண்டும் அவன் செடிகளோடு ஐக்கியமானான்.
அந்த சில நிமிடங்களிலேயே ‘அப்பாடா’ என்றிருந்து அவனுக்கு.
ஒத்துக் கொள்ள மனமில்லாவிட்டாலும் உள்ளுக்குள், சத்தமில்லாமல் உயிரற்ற அருங்காட்சியகமாயிருந்த இடத்தில் எழுந்த ஜீவ ஊற்று பிடிக்கத் தான் செய்தது. அவன் வீடும் இப்படி தானே இருக்கின்றது.
அம்மா, மகன் இருவர் தான் வாசம் இத்தனை பெரிய வீட்டில். பேச்சோ சிரிப்போ இவர்கள் இருவர் மட்டுமே. வருடத்திற்கு ஒரு முரை அம்மா வழி சொந்தங்கள் மும்பையிலிருந்து வந்து பத்து நாள் இருந்து செல்வர். அப்பொழுது கேட்கலாம் இப்படி ஒரு சத்தத்தை. மற்றபடி வனத்தின் நடுவில் இவன் இருப்பிடமும் காய்ந்த பாலைவனம் தான்.
அன்று மாலையே அவன் பாட்டி வீட்டிற்குச் சென்றான். கிரில் கேட் பூட்டுப் போடாமல் சாத்தி வைக்கப் பட்டிருந்தது.
கதவு திறந்து கிடக்க, ‘இது என்ன கதவ திறந்து போட்டுட்டு..? பாட்டிக்கு நாட்டு நடப்பு மறந்து போச்சா?’ உள்ளே நுழைந்தவனை இசை மழை வரவேற்றது. எப்போதும் போல டீ.வீ-யில் ஒலிபரப்படும், ‘கருப்பு வெள்ளை’ காலத்துப் பாடல்கள் அல்ல.. மாறாக அங்கிருந்த லேப்டாபிலிருந்து இனிய வயலின் இசை ரசிக்கும்படியாக இருந்தது..
‘எல்லாமே வித்தியாசமா இருக்கு!’ எண்ணி கொண்டே உள்ளே நடந்தவன் பார்வை சோஃபாவில் படுத்திருந்தவள் மேல் நிலைத்தது.
புருவத்தைச் சுருக்கி ‘ஊர்ல ரெண்டு நாள் தானே இல்ல… அதுக்குள்ள யார்ரா இவ? வந்தோமா போனோமானு இல்லாம… இப்படி மொகதுல முக்காடு போட்டுகிட்டு… நடுவீட்டில.. அதுவும் இன்நேரம் கொரட்ட விட்டுகிட்டு…’ அவளைப் பார்த்துகொண்டே உள்ளே சென்றான்.
அடுக்களையில் சத்தம் கேட்கவே கால்கள் நேராகச் சத்தத்தை நோக்கிச் சென்றது.
‘பாட்டி..’ அழைத்துக் கொண்டே உள்ளே சென்றவனைத் திரும்பி பார்த்த மீனாட்சி பாட்டி, ”வா டா… வா வா வா. எப்போ வந்த கண்ணா? ரெண்டு நாளா ஆளையே காணோமே…” அவர் வாய் பேசினாலும் கை தன் செய்யும் வேலையைச் செய்து கொண்டிருந்து!
அடுப்பு மேடையின் அமர்ந்தவன் அருகில் இருந்த பொட்டுக் கடலை டப்பாவை எடுத்து ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டு கொண்டிருந்தான்.
அமைதியாய் அமர்ந்திருந்தவன், “என்ன யோசனை பலமா இருக்கு?” என்ற பாட்டியின் சத்தத்திற்குத் தலை தூக்கி மண்டையை குடைந்த கேள்வியை கேட்டுவிட்டான்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி… ஆமா அது யாரு? நடு வீட்டுல?” என்று இழுக்க
கேட்ட பாட்டிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. “புரியர மாதரி பேசேன்டா..”
முகத்திலும் பேச்சிலும் சலிப்பு மிஞ்ச, “அது தான்… நடு வீட்டுல.. ஒரு பொண்ணு தல விரி கோலமா தூங்குதே… அது தான்!”
“தூங்கிட்டாளா? அது தான் சத்தத்தையே காணோமா?” என்று புன்னகைத்தார்.
“பச்… யாரவ?” என்று சலித்து கொண்டான்.
“பேத்தி டா!”
முகத்தில் நம்பமுடியாத கடுகடுப்புடன், “யாருக்கு?” என
“உம்ம்ம்ம்… யாருக்கா…? எனக்குத் தான்.. ஏன் என்னைப் பார்த்தா பாட்டி மாதரி இல்லையா?” என்று சிரித்தார். ஆனால் அவனால் அதை ரசிக்கத் தான் முடியவில்லை.
ஏற்கனவே ஒருத்தி உயரிமையோடு படுத்திருப்பதே அவனுக்குக் கடுப்பு.. இதில் அவள் பேத்தி என்றதும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது.
“இப்போ எதுக்கு டா கண்ணா இப்பிடி முகத்தைத் தூக்கி வச்சுட்டு இருக்க?”
இன்று வரை தான் மட்டுமே வலம் வந்த வீடு இது. யாரோ வந்து உரிமையோடு படுத்திருப்பது அவனுக்கு பிடித்தமில்லை.
“இப்போ திடீர்னு எங்கிருந்து பேத்தி முளைச்சா?”
அவன் முகத்திலும் பேச்சிலும் பொறாமை வீச..
அவனைச் சமாதானம் செய்யும் பொருட்டு, “நீ தான் கண்ணா எப்பவும் என் செல்லம்… அவ என் பொண்ணோட பொண்ணு கண்ணா. இப்போ தான் என்னை பத்தி தெரிஞ்சுகிட்டா போல.. அவ அத்தையும் மாமாவும் விட்டுட்டு போனாங்க” என்று அவன் முகம் பார்க்க அதில் தெளிவில்லை
“…”
“இன்னும் என்ன கண்ணா… இந்த கிழவி சாகரத்துக்குள்ள என்னைத் தேடி ஒருத்தி வந்தது உனக்குப் பிடிக்கலியா?”
போன போகுது என்று விட்டுக் கொடுக்கும் முடிவிற்கு வந்தவன், “ம்ம்.. சரி சரி இருகட்டும், எனக்கு ஒண்ணும் இல்ல… இன்னும் எவ்வளவு நாளைக்கு இங்க டேரா?”
“ஒரு நல்லவனா பார்த்துக் கட்டி வைக்குர வரைக்கும்!”
“ஓ…” ஏமாற்ற உணர்வும் வந்து ஒட்டிகொண்டது
“என்ன ஓ? ஏதோ கேக்கூடாததை கேட்ட மாதரி!”
“இல்ல… இனி மேல அவ தானா எல்லாம்? அப்போ நான்..”
“ஏன் அப்படி எல்லாம் யோசிக்கர? உன் இடம் எப்பவும் உனக்குத் தான். இது எப்பவும் போல உன் வீடு தான்.. இதுல என்ன சந்தேகம்? அவ பாவம் டா… என்ன விட்டா யாரு இருக்கா அவளுக்கு.. இன்னும் கொஞ்ச நாள் தான். ஒருத்தன பார்த்து கட்டி வச்சதும் கிளம்பிடுவா”
“ஏன்… அவ அம்மா அப்பா என்ன ஆனாங்க? உங்கள விட்டுட்டு போன மாதரி அவளையும் விட்டுட்டு போய்டாங்களா?” அலுப்போடு கேட்டான்.
“ம்ம்.. போய்டாங்க! அவள விட்டுட்டு ரெண்டு பேரும் பரலோகம் போய்டாங்க!”
அப்படியெல்லாம் வருத்தம் தெரியவில்லை அவர் சொன்ன விதத்தில். ஆனாலும் அந்த ஒரு பதில் அவன் எண்ணவோட்டத்தை மாற்ற போதுமானதாய் இருந்தது.
முகம் சட்டென்று தொங்கி விட, குரலிலும் வருத்தம் தொனிக்க, “ஓ.. சாரி பாட்டி” என்று அந்த பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டான்.
பேசிக்கொண்டே புழிந்து சுட்டெடுத்த முருக்கை ஒரு தட்டில் போட்டு நீட்டினார்.
“இந்தா சாப்பிடு.. அவ கேட்டாளேன்னு தான் முருக்கு சுட வந்தேன்.. அவ அங்க தூக்கம்.”
சும்மா கொடுத்திருந்தாலாவது வாயில் போட்டிருப்பான். இதைக் கேட்ட பின் ஏனோ அதைத் தொடக் கூட விருப்பம் இல்லாமல், ஒன்றை உடைத்து ஒரு துன்டை மட்டும் கையில் எடுத்தான். “போன வாரமே லட்டு கேட்டேன்..”
“நாளைக்கு பிடிச்சு தரேன்… இப்போ இத சாப்பிடேன்!”
“இல்ல பாட்டி.. எனக்குத் தோச ஊத்துங்க, பசிகுது!”
தோசையை சாப்பிட்டு, தேனீரை அருந்தி கொண்டே கதை அடித்தவன் சாப்பிட்ட சிறிது நேரத்தில், “சரி பாட்டி வந்து ரொம்ப நேரம் ஆச்சு… நான் கிளம்புறேன். கதவ சாத்திகோங்க!” என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.
“நீ கதவ சாத்திட்டு கிளம்பு.. நான் வந்து தாழ்ப்பாள் போட்டுகறேன்!”
ஹாளை கடந்தவன் கவனத்தை சோஃபாவிலிருந்து நீண்டு தரையில் அலை அலையாய் புரண்ட அவள் கருங்கூந்தல் ஈர்த்தது.
‘அர ஆழாக்கு சைஸ்ல தான் இருக்கா.. இவ்வளவு தலமுடிய எப்பிடி தூக்கிட்டு சுத்துறா?’ அவன் பார்வை அவளை நோக்கிச் சென்றது. ஒரு பக்கமாய் ஒருக்களித்து படுத்திருந்தாள். நெற்றியும் கண்களும் ஒரு துனியால் மூடபட்டு, இரு கைகளுக்கு நடுவில் அவள் உதடு பிதுங்கி கோல்டு ஃபிஷ் போல வாய் குவிந்திருந்தது…
அந்த கை.. வழு வழுவென்று மாலை வெயில் பட்டு தங்கச் சிலை போல்..
தொடை வரை நீண்டிருந்த ஷர்ட்டும், அதிலிருந்து கொஞ்சமே நீளமான ஷாட்சும், வாழைத் தண்டு போல நீண்டிருந்த கால்களும் பார்க்க பார்பி டாள் போலவே..
அழகான நீள நீளமான விரல்கள். கால் நகங்களும் கை நகங்களும் அழகாகப் பராமரிக்கப் பட்டு நேர்த்தியாய் சாயம் பூசப் பட்டிருந்தது.
அளவான உடல், செழிப்பான தேகம்.. “அர ஆழாக்கு இல்ல டா..” என்று நினைத்து முடிப்பதற்குள்
‘இதற்கு மேல் வேண்டாம் போதும்!’ என்றது உள்ளிருந்து ஒரு சத்தம்.
‘ச்ச.. சும்மா தானே பாக்கறேன்..’ அலுப்பாய் பதில் தந்துகொண்டான்.
‘தூங்கரவள இவ்வளவு நேரம் பார்த்ததே தப்பு.. உன் கிட்ட நான் இத எதிர் பாக்கலை’ என்றது மீண்டும்
‘உன்ன யாரு இப்போ கூப்பிட்டா? பேசாம போய்டு.. ஏற்கனவே ஒருத்தியையும் பாக்காம பாதி சன்னியாசியா சுத்திட்டு இருக்கேன்.. இதுல எதுகெடுத்தாலும் ஒரு மனசாட்சி வேர’ நொந்துக்கொண்டே வாயிலை நோக்கி நகர்ந்தவன் காதுகளில் அங்கு இன்னும் இசைத்துக் கொண்டிருந்த ‘விவால்டியின் ஃபோர் சீசன்’ வயலின் இசை ஒரு புன்னகையை மலரச் செய்தது.
அருகிலிருந்த தேநீர் மேசையிலிருந்த வரைப்படம் கண்ணில் பட அவள் ‘ஃபேஷன் டிசைனர் போல..’ என்று எண்ணிக்கொண்டான்.
“பாட்டி… கதவ பூட்டிக்கோங்க… நான் கிளம்பறேன்”
‘இவள் இருக்க, இங்கு முன் போல் வர முடியாதே’ என்று தோன்றவும் கதவின் அருகில் சென்றவன், தலையைத் திருப்பி வீட்டை பார்த்தான். அதில் எத்தனையோ நினைவுகள். அவளை பார்த்தான். நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்தாள்.
கதவை மூடி அமைதியாய் அவன் வீட்டை நோக்கி ஆரம்பித்தான்.