மஞ்சள் வெயில் அவள் உடுத்தியிருந்த இளமஞ்சள் உடுப்போடு பளீர் கோதுமை நிறத்திலிருந்தவளை தங்கத் தேவதையாகவே அவனுக்குக் காட்டியது.
அவனை கண்டு உருண்டு திரண்டு விழித்த அந்த மை இட்ட மருண்ட மான் விழி; மீண்டு வெளி வர முடியாதபடி அதன் சுழலுக்குள் அவனை இழுக்க, அது தெரிந்தே அவனை அவளுக்குள் தொலைத்துக் கொண்டிருந்தான்.
அவளே தான், அதே வேல்விழி தான்… ஆனால் இன்று அது புது கிரக்கம் தந்தது. கதிரவன் கதிரோ இல்லை போட்டிருந்த உடையின் பிரதிபலிப்போ.. தங்கசிலையின் கண்களும் தங்கநிறத்தில் இருக்க அதைத் தான் பார்த்து நின்றான். அவள் கண்ணுக்குள் அவனை தேடினானோ?
பார்த்த இருவருக்கும் போதவில்லை. பார்க்கப் பார்க்க இன்னும் இன்னும் பார்க்க வேண்டும் போல…
அவள் விழி வழி அவன் உள்ளே நுழைய, அவளோ நேரே அவன் நெஞ்சுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டிருந்தாள்.
“மீமீமீயாவ்..” என்று அங்கு ஓடிகொண்டிருந்த பூனையின் சத்தம் சுய உணர்வுக்கு அவர்களைக் கூட்டி வர, அவன் பார்வையை அதற்குமேல் அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.
கண்களை இறக்கி அவன் அருகாமை அவளை ஒன்றும் செய்யவில்லை என்பது போல் அங்குமிங்கும் கண்களை உருட்ட.. அவள் அரும்பாடுபட்டு முகத்தைச் சாதாரணமாக வைக்க முயல்வதை ரசனையோடு பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் தவிப்பிலிருந்து விடுதலை கொடுக்க எண்ணி,
“தனியா இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” எனப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.
நாக்கு வறண்டு பேச்சு வருவேனா என அடம்பிடித்தது. அன்று வாயடித்த சுதாவா இது? சந்தேகமே இல்லை.. அவளே தான்.. ஏனோ இன்று பேச்சு வரவில்லை. ‘ஏதாவது எசக்குப்பிசக்கா உளறி வைக்காதே.. அவனுக்கு என்னைப் பிடிக்கவேண்டுமே..‘. படபடப்பு வந்து ஒட்டிக் கொண்டது.
அவள் உளரலும் அவனுக்கு கவிதை என்பதை யார் அவளிடம் சொல்ல? மழலையின் பேச்சு எந்த தாய்க்கு ருசிக்காது? ஏன்? கொஞ்சும் குழந்தையிடம் மனதை அவள் பறிகொடுத்ததாலோ?
தலை இப்படியும் அப்படியுமாக தன் போக்கில் ஆட, அவள் அழகிய கேள்விக்குறி காதின் முடிவில் அணிந்திருந்த குடை ஜிமிக்கி அதுவும் தன் போக்கில் ஆட, வெயில் பட்டு மின்னிய வைரக் கற்கள் அவன் கண்ணை பறிக்க, ஒன்றோடு ஒன்று மோதி மென்னொலி எழுப்பிய தங்கமும் முத்தும் அவன் இதயத்தை மென்மையாய் தட்டத் தான் செய்தது.
“சும்மா.. அப்பிடியே..“ சத்தம் வந்ததா? வெறும் காற்று தான் வந்ததோ? அவளுக்கே அவளைப் பார்த்துக் கடுப்பாகிப் போனது. என்னவெல்லாம் நினைத்து வந்தாள். இப்பொழுது அவனைப் பார்த்ததும் மூளை ஒட்டுமொத்த வேலை நிறுத்தம் செய்ய, இதயம் மட்டும் முழுவதுமாய் முழித்துக் கொண்டு உள்ளுக்குள் தாறுமாறாய் அடித்துக் கொண்டிருந்தது.
படபடப்பைக் கண் காட்டிவிட்டால்? அவள் கண் நிலம் பார்க்க, அவன் கண் அவள் முகத்தின் மற்ற உருப்புகளையும் பார்க்க ஆரம்பித்தது. தலை, நெற்றி, கன்னம், மூக்கு அடுத்து அவன் கண் நிலைத்தது அவளின் வெடித்த கோவை உதட்டில். ராஸ்பெரி பிங்க நிற லிப் கிளாஸ் அவள் இதழை ஈர படுத்தியிருக்க, பாவம் கண் அதை தாண்டி வெளிவருவேனா என்றது.
அவள் இல்லாத எச்சிலை விழுங்குவதும், உதட்டைப் பிரிப்பதும் மூடுவதுமாய் இருக்க அதைத் தான் பார்த்து நின்றான்.
அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லாமல் போகவே விழி விரித்து அவனைப் பார்க்க.. கண்டிப்பாக அதில் எதோ ஒரு வித்தியாசம் தெரியத்தான் செய்தது. ஆனால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவன் பார்க்க அமைதியாய் தெரிந்தான். அவளுக்கு மட்டும் தான் இந்த புது வித உணர்வா? தெரியவில்லை. ஒன்றுமே யோசிக்கவும் முடியவில்லை. இயல்பாய் இருப்பது போல் காட்டிக்கொள்ளவே பாடு படவேண்டியதாய் போயிற்று. உள்ளங்கை வியர்க்க அவன் பின்னால் சென்றாள்.
அவளை தார் விட்ட வாழை அருகில் கூட்டிச் சென்றவன் அதில் விரிந்திருந்த வாழை பூ கொத்தை பறித்து, பூவின் தொப்பிக்குள்ளிருந்த தேனைக் காட்டி, “இத குடி நல்லா இருக்கும்” என
அதை வாங்கியவள் ஒவ்வொரு பூவுக்குள்ளும் இருந்த அந்த இரண்டு சொட்டு தேன் போன்ற திரவியத்தை உரிஞ்சிக் குடித்துக் கொண்டே, “ம்ம் நல்லா இருக்கு” என்று மண்டையை ஆட்டி வைத்தாள்.
அவன் தலை உயரத்திற்கு இருந்த தென்னையிடம் கூட்டிச் சென்று, “இளனி குடிக்கிறாயா? இது ரொம்ப இனிப்பா இருக்கும்!”
‘வீட்டில் இருப்பவர்கள் அவனை ஏதேனும் சொல்லிவிட்டால்’ என்ற எண்ணமே ஏதோ போலிருக்க, “இல்ல வேண்டா… இப்போ தான் காஃபி குடிச்சேன்”. வார்த்தகளை எண்ணி எண்ணி பேசினாளோ?
“அப்போ, நெக்ஸ்ட் டைம் வரும் போது குடிக்கலாம்!”
அவன் உயரத்திற்குக் கண்களைத் திறந்து, தலையை வேகமாய் ஆட்டி வைத்தாள். இப்போதைக்கு அது மட்டும் தான் சரியாய் செய்ய முடிந்தது.
தோட்டத்தில் ஒவ்வொன்றாய் காட்டிக் கொண்டே வர, அவளுக்கும் ஆர்வம் அதிகமே ஆனது. இன்று அவன் பேசினான். அங்கிருந்தவற்றைப் பற்றி ஏதேதோ பேசினான்.
இலகுவாக ஆரம்பித்தாள். கற்றாழை, கண்டங்கத்தரி, ஓமவல்லி, துளசி, புதினா என்று மருந்து வகை செடிகளோடு தினம் சமைக்கும் காய்கறி வகைகளும், காணக்காண மலைப்பாகவே இருந்தது. சென்னையில் இப்படி ஒரு வீடா?
வீடு மட்டுமல்ல அவன் இருந்த தெருவின் இருபுறமும் மரம் நடச்செய்து தெருவையே நிழலாய் வைத்திருந்தான்.
வெயில் வேண்டிய செடிகளுக்கு வெயிலும்… நிழல் வேண்டிய செடிகளுக்கு நிழலுமாய் யோசித்து அதன் அதன் தேவைக்கேற்ப நடபட்டிருந்த அழகு அவள் இதயத்தை வெகுவாய் கவர்ந்தது. அவனைப் போலவே அவன் பாரமரித்த இடமும் மிகவும் அழகாய் இருக்க.. அவள் மனதுக்கு அந்த தோட்டமும் பிடித்தே போனது!
அதில் என்ன சுவாரசியம் என்றால் அவனுக்கு அதிலிருந்த ஒவ்வொரு செடியின் வரலாறு புவியியல் என்று அனைத்துமே அறிந்திருந்தான். வாய் பிளந்து பார்த்து நின்றாள். செடிகளின் மேல் இத்தனை ஆர்வமா ஒருவனுக்கு?
“யூ ஆர் அமேஸ்ஸிங்! எப்பிடி இவ்வளவு ஈடுபாடு இதுல.. ஒத்த ஆளா எப்பிடி இவ்வளவு பெரிய கார்டன மானேஜ் பண்ண முடியுது?”
“இல்ல.. வெறும் ஐடியா தான் என்னுது! நேரம் கிடைக்கும் போது ஏதாவது கண்டிப்பா செய்வேன்… அவ்வளவு தான்! மத்தபடி இத மெயின்டெயின் பண்ண வேற நிரைய ஆட்கள் இருக்காங்க! இதுக்காக்கவே படிச்சவங்க!”
“ஓ..”
சிறிது நேரத்தில் இருவரும் நன்றாய் பேச ஆரம்பித்திருந்தனர். அவளுக்கு அங்கிருந்த செடிகளைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை, அவளுக்கு அலுக்காதவாறு அவகளைப்பற்றி கூறினான். அவன் எது பேசினாலும் காதில் தேன் பாயும் நிலை சுதாவிற்கு!
“தமிழ் நாட்டோட ஸ்டேட் ஃப்ளவர் இங்க இருக்கு.. கண்டு பிடி பார்ப்போம்!”
“மல்லி?”
“இல்ல.. செங்காந்தள்… அதோ தனியா தொட்டில இருக்கு பாரு.. பூ பார்த்தியா நெருப்பு மாதிரி மேல பார்த்து இருக்கு.
‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து’-னு ஒரு திருக்குறள் இருக்கு. அதாவது ‘தலைவியால தலைவனுக்கு ஏற்பட்ட நோய்க்குத் தலைவி தான் மருந்து’னு அர்த்தம் வரும். அதே மாதரி தான் இந்த செடியும்! இதில இருக்க விஷமே சரியான வைத்தியன் கையில மருந்தாகிடும்! அதலையே விஷமும் மருந்தும்”
இதை அவன் சொல்லவும் மலைப்பாய் அவனைப் பார்த்து நின்றாள். ‘இன்னும் என்னென்ன தெரியுமோ?’ என்பது போல்!
பேசிக்கொண்டே வர அவள் நின்ற இடத்திலிருந்து மூச்சை நன்றாய் உள்ளிழுக்க..
“என்ன ஆச்சு?”
“வாசன… இங்கையே இருந்திடலாம் போல இருக்கு!”
“இருந்திடேன்..” என்றான் அவளை பார்த்துக்கொண்டே
“ம்ம்ம்??” அவனைக் கேள்வியாய் பார்க்க
“வாசன அவ்வளவு பிடிச்சிருக்கா?”
“ம்ம்”
“அது எனக்கு ரொம்ப பிடிச்ச சண்பக பூ வாசம்! செண்பகம்னு கேள்வி பட்டிருப்பியே..”
அங்கிருந்த எல்லாமே அவளுக்குப் புதுமை தான். “இல்ல!” என
“இந்த செண்பகம் ரொம்ப அருமையா மணக்கும், பர்ஃயூம் பண்ண யூஸ் பண்ணுவாங்க… என்னுடைய மனசுக்கு ரொம்ப பிடிச்ச மரம்.. இது கூட எனக்கு ஒரு ஹிஸ்டரியே இருக்கு. ரொம்ப ஸ்ரெஸ்டா இருந்தா இந்த வாசனை மட்டுமே போதும் எனக்கு.. ரிலாக்ஸ் ஆகிடுவேன்.
இது பவழ மல்லி.. சாயங்காலம் தான் பூக்கும்.. இந்த புல்லு மாதிரி இருக்கே இது ‘நரந்தம்’ அதாவது ‘லெமன் கிரஸ்’…” நீளமான புல்லைக் கிள்ளி அதைக் கசக்கி அவளிடம் கொடுக்க, அதை முகர்ந்தவள் “ஓ.. இது தான் லெம்ன் கிராஸ்சா? வாவ்.. புல்லுல.. லெம்ன் மாதிரியே வாசம்!”
“ம்ம்ம் .. உடம்பு ரொம்ப வலிக்கும் பொது.. சுடுதண்ணியில இத போட்டு குளிச்சா..”
“உடம்பு வலி போய்டும்.. நல்லா தூக்கம் வரும்!” அவன் ஆரம்பித்ததை ராகத்தோடு அவள் முடித்தாள்.
அவள் கையை அவன் மூக்கிற்கு நேராய் காட்டி, “ம்ம்.. மோந்து பாருங்க.. லெமன் கிரஸ் ஷவர் ஜெல் போட்டு குளிச்சேன்”
யொசிகாமல் கையை அவன் முன் நீட்ட, கை போன வேகத்தில் லேசாய் அவள் கை அவன் உதட்டில் உரைய, கூடவே அவன் மூச்சுக் காற்று கையில் படவும் உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு.. வயிற்றில் பட்டாம்பூச்சியின் படபடப்பு!
சட்டென்று கையை கீழ் இறக்கிக் கொண்டாள். முன்பிருந்ததை காட்டிலும் நிலைமை மோசமாய் மாறியது அவளுக்கு. இலகு தன்மை போன இடம் தெரியவில்லை.
‘இன்று ஏன் இப்படி? ரொம்ப பக்கி ஆகிட்ட சுதா! முத்தி போச்சு உனக்கு! ஒரு மூச்சு காத்துக்கே இப்படியா?’ தன்னையே கடிந்து கொண்டாள். அவள் வசம் அவளில்லை என்பது இருவருக்கும் வெட்ட வெளிச்சம்.
அவன் முன் தன் நிலை இப்படி மோசம் ஆக வேண்டுமா? வெட்கமாய் போக என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தவளை காப்பாற்ற வந்தது அவன் கைப்பேசியின் அழைப்பு மணி.
அவன் கைப்பேசி சிணுங்க நேரத்தை பார்த்தவன், “உன் கூட இருந்தா நேரம் போரதே தெரியலை. ஹாட் அ நைஸ் டைம்..” பேசிக்கொண்டே தலையை மேலே தூக்கி எதையோ பார்த்துவிட்டு, ஒரே குதியில் அவன் தலைக்கு மேலிருந்த கிளையிலிருந்து மலரொன்றைப் பறித்து அவளிடம் நீட்டினான்.
“இந்தா இது தான் செண்பக பூ.” அவள் வாங்கியதும், “கொஞ்சம் இம்பார்டென்ட் கால்… நான் போகணும். இருடீடுச்சு.. தனியா நிக்காத.. வீட்டுகுள்ள போ.”
நீள நீளமான இதழ்களோடு மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறம், மனதை மயக்கும் மணம்.. முகர்ந்து கொண்டே இருக்கலாம்.
அங்கு கேட்ட சுசிலாவின், “சுதா எங்கமா போய்ட்ட? மணி கணக்கா இங்க என்னடா தனியா பண்ணிட்டு இருக்க?” என்ற சத்தத்திற்குத் தலையைத் மலரிலிருந்து தூக்கியவள் ஏதோ நினைவு வந்தவளாய், “உங்க பேரு..” என்று கேட்டுக்கொண்டே திரும்பிப் பார்க்க அங்கு அவன் இருந்த சுவடு கூட இல்லை.
‘ஐயோ.. பேரும் கேக்கல ஊரும் கேக்கல! திரும்பவும் ஆரம்பத்துல இருந்தா?’ என்று மனம் அலுத்துக்கொண்டது.
“தனியா இருடுல என்னமா பண்ணிட்டு இருக்க? நீயும் தோட்டத்தை பார்த்ததும் மெய் மறந்துட்டியா?” என்று சுசிலா வந்து நிற்க,
“தனியா இல்ல உங்க தோட்டக்காரர் இருந்தார். அவரோட தான் பேசிட்டு இருந்தேன்.”
‘இவன் கண்டிப்பாய் வெறும் தோட்டக்காரனாய் இருக்க வாய்ப்பில்லை என்பது சர்வ நிச்சயம். ஆர்பொரிஸ்ட்-டாவோ (செடி மருத்துவர்) இல்ல ஹார்ட்டிகல்சரிஸ்ட்-டாவோ தான் இருக்கணும். கண்டிப்பா அடுத்த தரம் கேக்கனும்!’ எண்ணிக்கொண்டாள்.
“யாரு? குருவா? அவன் அப்போவே போரதா சொன்னான்? நிறைய செடி இருக்கா.. கூடவே பூச்சியும் இருக்கும். இருட்டில நமக்குத் தெரியாது. சரி நீ வா உள்ள.. கண்ணன் எழுந்துடானானு பார்ப்போம்”
‘குருவா பேரு? இவனுக்குத் தான் கண்ணன் பேரு செட் ஆகுது. நீ ஒரு மயக்கும் மாய கண்ணன் பன மரம்!’ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள். அவன் நினைவே இனித்தது.
வீட்டிற்குள் நுழைந்தவள் கையையில் செண்பக மலரை பார்த்த பாட்டி, “உனக்கும் செண்பக பூ பிடிக்குமா கண்ணு? மாடி பால்கனில இருந்து பறிக்கலாம். கண்ணனுக்கு ரொம்ப பிடிச்ச மரம்..”
சுசிலா, கண்ணனுக்கும் அந்த மரத்திற்கும் உள்ள பிணைப்பைச் சொல்ல ஆரம்பித்தார். “இந்த மரம் அவனுக்கு ரொம்ப ஸ்பெஷல். எங்க அம்மா பேரு செண்பகம். அவனும் அம்மாவுமா வாங்கிட்டு வந்து நட்டது இது. ரெண்டு பேரும் தினமும் காலைல அதுக்கு தரிசனம் தந்திடுவாங்க. அது பூ பூத்திடுச்சானு பாக்க! நாலு வருஷமா பூக்கவே இல்ல.
நான் அப்போலாம் கொஞ்சம் கண்டிப்பு. அம்மா தான் அவன ரொம்ப செல்லம் கொடுப்பாங்க. அதுனாலையே பாட்டினா அவனுக்கு ரொம்ப பிடிக்கும். மனசுக்கு பிடிச்ச பாட்டிக்கு தான் முதல் பூ-னு நினைச்சு இருந்தான். அது அம்மா சாகர வரைக்குமே பூக்கல.
‘பாட்டிக்கு கொடுக்க முடியலன என்ன உன் மனசுக்கு பிடிச்சவளுக்கு குடு’-னு அவன் பாட்டி சொன்னாங்களாம்.. அதனால இன்னைக்கு வரைக்கும் யாருக்கும் கொடுக்க விட மாட்டேங்கரான்.
ஒரு நாள், இதோட வாசம் பிடிச்சு போய் இங்க வேல செய்யர பொண்ணுகிட்ட உங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கவங்க கேக்க.. அவ வந்து பிச்சுகட்டானு கண்ணன் கிட்ட கேக்க, அவன் கொஞ்சம் கூட யோசிக்காம இது என் மனசுக்கு பிடிச்சவளுக்கு மட்டும் தான்-னு சொல்லி அனுப்பிட்டான். இத அவன் சொல்லும் போது அவனுக்கு ஒரு எட்டு வயசிருக்கும்” சிரித்தவர் அதோடு நிறுத்தாமல்.
“அவன் ஒருத்தியைப் பார்த்து இத குடுக்கர நேரம் என் தல முடியெல்லாம் நரச்சே போய்டும் போ..” என்று அலுப்போடு கூற, ‘அதற்கு இப்போ என்ன அவசியம்?’ என்று அவரை வித்தியாசமாய் பார்த்து நின்றாள்.
அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்தில் கீழே வந்த அஷோக், “எங்கமா பாட்டி?” என
அவளை பார்க்கவேண்டும் என்று அவசர அவசரமாய் பேசிவிட்டு வந்தவன், அவள் கிளம்பிச் சென்றுவிட்டாள் என்றதும் உள்ளுக்குள் ஒரு கலியான உணர்வு.
தன் அறையை ஒட்டிய பால்கனியில் போய் நின்றவன் பார்வை தோட்டத்திலிருந்த மூன்று மாடி உயரத்திற்கு வளர்ந்திருந்த செண்பகம் பக்கம் போனது. “குடுத்துட்டேன் பாட்டி” என்றான் கண்ணை மூடி மனதிற்குள்.
அன்று அவள் வாயடித்ததைப் பிடித்தது என்றவன், இன்று அவள் மௌனசாமியாய் இருந்ததைப் பிடித்தது என்றான். அவள் என்ன செய்தாலும் அவனுக்கும் பிடிக்கும் நிலை!
இன்று வரை இது போல் அவன் உணர்ந்தது இல்லையே.. என்ன உணர்வு இது?
முதல் முறை மனம் தடுமாறியது ஒரு பெண்ணால்.
விழியோடு மனமும் அவளைத் தான் தேடியது.
அவள் நினைவு அருவியாய் உச்சந்தலையைக் குளிர்விக்க, அவள் கண் உஷ்ணமாய் அவன் இதயத்தை தகிக்க,
கால் தரையில் உள்ளதா? பறப்பதைப் போன்ற உற்சாகம்..
தானாய் இதழ்கள் அவள் நினைவால் விரிந்தது.
எந்த அலட்டலும் இல்லாமல், மௌனமாய், எந்த ஒரு காரணமும் இல்லாமல் அவன் வறண்ட நெஞ்சுக்குள் சாரலாய், இருண்ட இதய வானில் நிலவாய், தனித்த அவன் வாழ்வின் துணையாய் நுழைந்தாள்.