அத்தியாயம் – 34
வண்டி மூணாரை நோக்கி பயணம் செய்ய வீராவின் மனமோ பின்னோக்கி பயணம் செய்தது. அன்றைய நிகழ்வுகளையும் அவன் மனம் அசைப்போட்டது.
____________________
“இங்க வா” என்றவன் கட்டிலில் அமர்ந்துக்கொண்டு அவளை நோக்கி கையை நீட்டினான்.
அவன் கைக்குள் தன் கையை அடைக்கலமாய் கொடுத்தவளை தன்னருகே அமர்த்திக் கொண்டான்.
“சில விஷயங்களை நான் உனக்கு தெளிவுப்படுத்தணும்” என்றான்.
என்னவென்பது போல் நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் தாமரைக்கிட்ட!!” என்று சொல்லும் போதே அவன் கைக்கொண்டு அவன் வாய் பொத்தினாள்.
“எனக்கு தெரிஞ்சுக்க வேண்டாம்… அன்னைக்கு ஒரு கோபம் புரிஞ்சுக்காம கேள்விக்கேட்டேன்”
“அதுக்கு எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை… நீங்க எதையும் தப்பா செஞ்சிருக்க மாட்டீங்க!!” என்றாள் அவன் கண்ணை ஊடுருவி. அவள் சொன்னது மனதை குளிர்விக்கத் தான் செய்தது அவனுக்கு.
“நீ இப்படி சொன்னேதே எனக்கு சந்தோசம், ஆனாலும் அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு நீயும் தெரிஞ்சுக்கணும்”
அவள் கேட்க பிரியப்படவில்லை என்றாலும் அவன் சொல்வதற்காக கேட்கத் தயாரானாள்.
“அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சா…” என்று நிறுத்த அவளுக்கு என்ன இது என்ற ஆர்வம்.
“நீ என்னை தப்பா நினைச்சுக்க கூடாது வந்தி!! அன்னைக்கு நடந்ததுல என் தப்பு எதுவுமில்லை!!” என்று அவன் ஏகத்துக்கும் கொடுத்த பில்டப்பில் செவ்வந்திக்கு சற்றே கலவரம் தான்.
இன்னும் ஆர்வத்துடனும் பதட்டத்துடனும் அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கவனித்தாள். “அன்னைக்கு அப்படி நடந்ததால தான் நான் தாமரையை கூப்பிட வேண்டியதா போச்சு”
‘அடேய் என்னடா சொல்ற, என்னென்னவோ சொல்லி டென்ஷன் கூட்டுறியே!! பக்கு பக்குன்னு இருக்கு. எதுவும் தப்பு தண்டா!!’ என்று யோசித்தவள் அவன் முகத்தை பார்த்தாள்.
‘ச்சே!! ச்சே!! வாய்ப்பே இல்லை!! இவர் என்னமோ பயமுறுத்துறார்’ என்று தோன்றியது அவளுக்கு.
‘அடியேய் என்னன்னு தான் கேளேன்டி!! நான் வேற மானே தேனேன்னு கொசுறு எல்லாம் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கேன். இவ என்னடான்னு கூட கேட்காம இருக்கா’
‘அடுத்து நான் சொல்லப் போறதுல நீயா சொல்லுங்கன்னு சொல்ல வைக்குறேன் பார்’ என்று மனதிற்குள் சூளுரைத்தவன் “வந்தி என்னை அப்படி பார்க்காதம்மா!!”
“நடந்த தப்புக்கு நானும் ஒரு காரணம் ஆனா நான் மட்டுமே காரணமில்லை!! என்ன இருந்தாலும் நீயும் அப்படி இருந்திருக்கக் கூடாது” என்று சொல்ல செவ்வந்தியின் பொறுமை எப்போதோ சென்றிருந்தது அவளைவிட்டு.
அவன் சட்டையை பிடித்து தன்புறம் இழுத்து “என்ன தான்டா அன்னைக்கு நடந்திச்சு… அதை சொல்லாம இப்படி என்னென்னவோ சொல்லி கலவரமாக்குற!! சொல்லேன்டா!!” என்று உரக்கவே கேட்டாள்.
உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன் “பெரிசா ஒண்ணும் ஆகலை… அன்னைக்கு வீட்டை விட்டு வெளிய போகணும்ன்னு நினைச்சேல… அப்போ நீ என்ன பண்ணியிருக்கணும்”
“என்ன பண்ணியிருக்கணும்??”
“ஒழுங்கா சுடிதார் போட்டிருக்கணும்”
“என்ன??” என்றாள் முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு.
“ஆமா நீ சுடிதார் போட்டிருக்கணும்…”
“ஏன்?? என்னாச்சு??” என்று அவள் பதட்டக் குரலில் கேட்கவும் வீரா இப்போது கேலியை விட்டான்.
“ஒண்ணும்மில்லை நீ இதுல பதட்டம் ஆக எதுவுமில்லை!! அன்னைக்கு தூங்கிட்டு இருக்கும் போது உன் டிரெஸ் அப்படி இப்படின்னு இருந்துச்சு”
“நீயே சொல்லு நான் அதெல்லாம் சரி பண்ண முடியுமா!! யாருக்கும் தெரியாம தான் உன்னை கூட்டிட்டு போய் உங்க வீட்டில விடணும்ன்னு நினைச்சிருந்தேன்”
“வேற வழியில்லாம தான் தாமரையை கூப்பிட்டேன், அப்போ கூட எனக்கு யோசனை தான் கூப்பிடவா வேண்டாமான்னு”
“வெளிய வந்து பார்த்தா வீட்டில யாருமில்லை தாமரை மட்டும் தனியா தான் வீட்டில இருந்தா!! சரின்னு தான் நான் அவளை கூப்பிட்டேன்”
“அப்பவும் கூட இதைப்பத்தி யாருக்கும் எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன். அவ லூசு மாதிரி அதை உன்கிட்டவே உளறி வைச்சுட்டா!!” என்று முடித்தான்.
“ச்சே!! இவ்வளவு தானா இதுக்கா இவ்வளவு பில்டப் பண்ணீங்க, பயந்தே போயிட்டேன்” என்றாள் வெகு கூலாக.
‘இருந்தாலும் இவன் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு நல்லவனா இருந்திருக்க வேணாம்’ என்று நினைக்காமலும் அவளால் இருக்க முடியவில்லை.
அவளுக்கு அவனிடம் இன்னுமொன்றை கேட்க வேண்டி இருந்தது. ஆனால் அதை எப்படி ஆரம்பிக்க என்று தான் அவளுக்கு புரியவில்லை.
“என்னங்க” என்றழைத்திருந்தாள் அவனை.
அவளின் குரலில் இருந்த மாறுபாட்டை அவனால் உணரமுடிந்தது.
அவள் அடுத்து எதைப்பற்றி பேச போகிறாள் என்பதை ஓரளவிற்கு ஊகித்திருந்தான் அவன். அதோ இதொவென்று அந்த தருணமும் வந்துவிட்டது.
அவனை அழைத்த மனைவிக்கு பதிலாய் “என்னம்மா” என்றான்.
அவனை அழைத்துவிட்டாலே தவிர எப்படி பேசுவது என்ன பேசுவது என்ற எண்ணத்தில் சற்று அமைதியாய் இருந்தாள்.
அவனிடம் பேசும் கேட்கும் விஷயமல்ல என்றாலும் அவர்கள் இருவரால் மட்டுமே அதைப்பற்றி பேசிக் கொள்ள முடியும் என்று தோன்ற வார்த்தைகளை கோர்த்து மெதுவாய் ஆரம்பித்தாள்.
“நீங்க எப்படி எல்லாத்தையும் மனசுக்குள்ளவே பூட்டு பூட்டிவைச்சுட்டு இத்தனை காலமா இருக்கீங்க?? உங்களுக்கு கஷ்டமாயில்லையா??” என்றுவிட்டு அவன் பதிலுக்காய் அவனை பார்த்தாள்.
வீரா அவளுக்கு சட்டென்று எந்த பதிலும் சொல்லவில்லை. அவன் எதுவும் சொல்வான் என்று பார்த்திருந்தவள் அவன் பேசாது இருப்பது கண்டு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
அதில் வேதனையின் சாயல் மட்டுமே தெரிந்தது. எதற்காய் வருத்தப்படுகிறான்!! நடந்ததில் இவன் தப்பென்ன இருக்கிறது!! என்று எண்ணியவள் “என்னாச்சுங்க நான் எதுவும் தப்பா கேட்டுடேனா??” என்றாள்.
“என்னால முடியலைங்க!! ஆச்சி சொன்னதை இப்போ கூட நம்ப என்னால முடியலை!! அவங்க சொன்னதை நினைச்சு இப்போ கூட எனக்கு என்னமோ பண்ணுது. நடந்ததுல சரி தப்பு எனக்கு சொல்லத் தெரியலை”
“சரின்னு எதுவுமில்லை தப்பு தான்” என்றுவிட்டு பெருமூச்சொன்றை விட்டாள்.
“நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்… நான் மட்டுமே பேசிக்கிட்டு இருக்கேன்… நான் கேட்டது பத்தி நீங்க எதுவுமே சொல்லலையே!!”
“உனக்கு என்ன பதில் சொல்லன்னு எனக்கு தெரியலை வந்தி!! இப்படி ஒரு நாள் வந்திடக் கூடாதுன்னு பல நாள் வேண்டியிருக்கேன்”
“ஏன்??”
“உனக்கு பதில் சொல்ல என்னால முடியாதுன்னு தோணிச்சு. எனக்கு தெரியும் உன்னோட அப்பா பாசம் பத்தி. முல்லையை விட நீ அவரோட அதிக நாட்கள் இருந்திருக்கே!!”
“அதிகம் அவரை நீ தான் மிஸ் பண்ணியிருப்பேன்னு தெரியும்….”
“நான் உங்களை தப்பா நினைப்பேன்னு நினைக்கறீங்களா??” என்று கண்ணில் நீர்கோர்க்க கேட்டாள்.
“இல்லை ஆனா என்னால முடியலை வந்தி!! நீ சக்தின்னு கூப்பிடுன்னு சொல்லும் போது கூட ஒரு நாளும் நான் உன்னை அப்படி மட்டும் கூப்பிட்டதேயில்லை”
“உனக்காக கூப்பிடணும்ன்னு நினைச்சிருக்கேன். ஆனா அது உங்கப்பாவை ஞாபகப்படுத்தும்ன்னு தான் நான் அப்படி கூப்பிட்டதில்லை”
“நான் தான் இப்போ உங்களை அப்படி கூப்பிடச் சொல்லி கேட்கலையே”
“நீ கேட்கலைன்னாலும் எனக்கு தெரியும். கார்த்திக் கூட உன்னை அப்படி தான் கூப்பிடுவார் போல, உன்னோட மத்த பிரண்ட்ஸ் கூட உன்னை அப்படி தான் கூப்பிடுவாங்கன்னு தெரியும் எனக்கு”
“நான் அப்படி கூப்பிடாதது உனக்கு வருத்தம்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்”
அவன் சொன்னது சரி தான் அவளுக்கு அந்த வருத்தம் இருந்தது உண்மை தான். ஆனால் அது இப்போது அவளிடத்தில் இல்லை.
“இப்போ எனக்கு அந்த வருத்தம் இல்லைங்க”
“என்னால முடியலைடா!! இத்தனை வருஷமா என் மனசை அழுத்திக்கிட்டு இருக்கற விஷயம்!! யார்கிட்டயும் இதுவரை இதைப்பத்தி பகிர்ந்துகிட்டது இல்லை”
“அத்தைகிட்ட!!” என்று அவள் இழுக்க “ஆச்சிக்கு கூட என் மூலமா தெரியாது” என்றான் அவன்.
“எப்படிங்க உங்களால மனசுக்குள்ளவே வைச்சுட்டு இருக்க முடிஞ்சது…”
“அப்படி பார்க்காதேடா… சாரிடா வந்தி!! நிஜமாவே ரொம்ப ரொம்ப சாரிடா… கோபம்… கண்ணு முன்னாடி ஒரு தப்பு நடக்கறதை பார்த்து கோபம்”
“என்னால தானே எல்லாம்… நான் அப்… அப்படி தெரிஞ்சு பேசலைம்மா!! அதுல வார்த்தைகளை அதிகம் கொட்டிட்டேன்”
“தேவையில்லாத வார்த்தை சொல்லிட்டேன்டா என்னை மன்னிப்பியா” என்றவன் அவள் இருகையையும் பற்றிக்கொண்டான்.
“அந்த பொண்ணு…” என்று இழுத்தாள் செவ்வந்தி.
“கல்யாணம் ஆகிடுச்சு இரண்டு பசங்க அவங்களுக்கு”
“உங்களுக்கு எப்படி தெரியும்??”
“தெரியும்… அவங்களோட மாமா பையனை தான் கல்யாணம் பண்ணிட்டாங்க!! ஆச்சி தான் உதவி பண்ணாங்க!!”
“நானும் என்னாலானதை அவங்களுக்கு செஞ்சேன்” என்று சொல்லவும் முன்னிலும் அவள் மனதில் ஆழப்பதிந்து போனான் அவன்.
“எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு வந்தி!! இப்போ வரை என்னால அதுல இருந்து முழுசா வெளிய வர முடியலை!!”
“நான் பேசினது எவ்வளவு தப்புன்னு எனக்கு புரியுது!! அதனால தான் அன்னைக்கு மாமாக்கு அப்படி… அதுக்கு நெறைய விலை கொடுத்திட்டேன் வந்தி”
“உன்னால உன்னால மட்டும் தான் நான் மீட்சியடைஞ்சிருக்கேன்னு எனக்கு தோணுது. என்னோட நிம்மதி, சந்தோசம் எல்லாமே உன்னால தான் திருப்பி கிடைச்சிருக்கு எனக்கு…” என்றவனால் பேச முடியவில்லை ஓரிரு நிமிடம்.
அவன் வருத்தம் தாங்காதவளாய் செவ்வந்தி பேசினாள். “நான் உங்களை கஷ்டப்படுத்த இதை கேட்கலைங்க!! எனக்கும் இதுல என்ன சொல்றதுன்னு தெரியலை!!”
“எங்கப்பா இப்படின்னு நினைச்சு வருத்தப்படுறதா இல்லை நீங்க செஞ்சதுக்காக உங்களுக்கு நன்றி சொல்றதா இல்லை உங்களை நினைச்சு பெருமை படுறதான்னு தெரியலை!!” என்றவளின் கண்கள் கசிய ஆரம்பித்தது.
அவள் சொல்லி முடித்ததும் அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கிக்கொண்டான். “நீ எதுக்கு வருத்தப்படணும்” என்றதும் அவள் விழி நீர் கரையுடைத்தது.
“எதுக்குடா அழறே??” என்றவன் கட்டை விரல் கொண்டு அவள் கண்ணீர் துடைத்தான்.
“என்னை திட்டுறதுன்னா திட்டுக்கோ??”
“உங்களை நான் திட்ட என்ன இருக்கு!! எதுவுமே சொல்ல முடியாத ஒரு நிலையில இருக்கேன் இப்போ நானு… ஆச்சி நடந்ததை சொன்னப்போ உடைஞ்சு போயிட்டேன். அங்க நான் எதுவும் சொல்லலை”
“அவங்ககிட்ட என்னோட உணர்வுகளை என்னால பகிர்ந்துக்க முடியலை!! நீங்க சொன்ன மாதிரி இந்த விஷயத்தை பத்தி நான் உங்ககிட்ட மட்டும் தானே பேச முடியும்ன்னு தான் அங்க இருந்து உடனே கிளம்பிட்டேன்” என்றவளின் கண்கள் இன்னமும் நிற்காமல் அருவியை பொழிந்தது.
“சொல்லும்மா” என்றான்.
“தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!!” என்றவளுக்கு தொண்டை அடைப்பது போலிருந்தது.
“நான் அப்படி எடுத்துப்பேன்னு யோசிக்கறியா!!”
இல்லை என்பதாய் அவள் தலையாடியது. “அப்போ சொல்லு!!”
“எங்கப்பா தப்பு பண்ணியிருக்கலாம், தப்பானவரா இருந்திருக்கலாம்… ஆனா எங்களை பொறுத்தவரை அவர் நல்ல அப்பாவா தான் இருந்திருக்கார்”
“என்னால அவரை வெறுக்க முடியாது… நீங்க என்னை புரிஞ்சுக்கணும்… ப்ளீஸ்… என்னை தப்பா எடுத்துக்காதீங்க…”
“என்னால அவரை தப்பா நினைக்க…” என்றவளுக்கு பேச முடியவில்லை. சைகையால் முடியவில்லை என்றிருந்தாள்.
“நான் உன்கிட்ட எதையும் எதிர்பார்க்கலையே!! எனக்கு தெரியாதா வந்தி உனக்கு அப்பான்னா எவ்வளவு பிடிக்கும்ன்னு!!”
“இதுவரை உங்கப்பா பத்தி நீ பேசி நான் என்னைக்காச்சும் உன்கிட்ட மறுத்தோ தப்பாவோ சொல்லியிருக்கேனே!!”
அவள் தலை இட வலமாய் ஆடியது. “இப்பவும் நானா ஆரம்பிக்கலை… நீயா தான் பேசினே!! இனிமே நாம இதைப்பத்தி பேசக் கூடாது அப்படிங்கறதுக்காக மட்டும் தான் இப்போவும் உன்கிட்ட நான் இதைப்பத்தி பேசிக்கிட்டு இருக்கேன்”
“இல்லைன்னா எப்பவும் நானா உன்கிட்ட பேசியிருக்க மாட்டேன். கொலையே செஞ்சிருந்தாலும் அப்பா அப்பா தானே!! நான் இல்லைன்னு சொல்லிடுவேனா”
“உனக்கு ஏன் அந்த பயம்??”
“பயமில்லை… நீங்க என்னை தப்பா எடுத்துக்க கூடாதுன்னு தான் சொன்னேன்”
“நான் அப்படி உன்னை எப்பவும் நினைக்க மாட்டேன் அதை தெரிஞ்சுக்கோ!! இனிமே இப்படி கேட்காதே சரியா!!”
“வந்தி ப்ளீஸ் போதும் நாம இந்த விஷயமா இனி நீயும் சரி நானும் சரி மறந்திடுவோம், பேச வேண்டாமே” என்று அவன் சொல்ல அவனையே விழியகல பார்த்தாள் அவள்.
“என்னாச்சு அப்படி பார்க்கறே??”
“ஐ லவ் யூ”
“ப்ச் ருசிகரமாவே இல்லையே!!” என்று கிண்டலடித்தான். “அன்னைக்கு கோவமா சொன்னாலும் அதுல ஒரு கிக் இருந்துச்சு” என்று சேர்த்து சொன்னான் அவன்.
“ருசிகரமான்னா எப்படி??”
“ஐ லவ் யூ அத்தான்னு சொல்லி பச்சக்குன்னு ஒரு இச் கொடுத்திருந்தா ஆஹா ஓஹோன்னு இருந்திருக்கும்”
“இருக்கும் இருக்கும்” என்று செல்லமாய் முறைத்தாள் அவனை.
“வந்தி உனக்கொரு உண்மையை சொல்லட்டுமா!!”
“ஹ்ம்ம் சொல்லுங்க!!”
“நீ பக்கத்துல இருக்கும் போதும் உன்னை பத்தி நினைக்கும் போதும் நான் என்னையே மறக்குறேன்”
“மனசு அவ்வளவு லேசா உணர்றேன். அதனால தான் என்னால உன்கிட்ட இயல்பா இருக்க முடிஞ்சுது, முடியுது இப்போ வரைக்கும்”
“நீ என்னை நெறைய மாத்திட்ட வந்தி!! எந்த பொண்ணையும் நிமிர்ந்து பார்த்து பேச யோசிச்சவனை இப்படியாக்கிட்டியே!!” என்றவன் அவளை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.
செவ்வந்திக்கு சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வர அதை கேட்டுவிட்டாள் அவனிடம். “அப்போ நீங்க ட்ரிங்க்ஸ் எடுத்துக்கிட்டது எல்லாம்…”
“சில விஷயங்களை மறக்கறதுக்கு தான்… இன்னமும் என் கண்ணு முன்னாடி முல்லை அன்னைக்கு இருந்த தோற்றம் தான் கண்ணு முன்னாடி வந்து போகுது. புரிஞ்சும் புரியாம அழுதிட்டு இருந்த உன்னை என்னால மறக்க முடியலை”
“அதனால தான் ஊரைவிட்டே போனேன். வீட்டுக்கு வந்தா கூட உங்க வீட்டுப்பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டேன்”
“பலவருஷம் கழிச்சு உன்னை நான் பார்த்தது நீ எங்க வீட்டு சுவர் ஏறி குதிச்சு வந்தப்போ தான்!!”
“நெஜமா தான் சொல்றேன் அப்போ தான் பார்த்தேன். அப்பவும் யாரோ ஒரு பொண்ணுன்னு நினைச்சு தான் பார்த்தேன்… நீங்கறது ஆச்சி வந்தப்போ தான் தெரியும்…”
“நீ கல்யாணத்தை நிறுத்துன்னு சொன்னப்போ என்னால நிறுத்த முடியலை!! ஆச்சி என்கிட்ட பேசி இருந்தாங்க, கல்யாணம் மட்டும் எக்காரணம் கொண்டும் நிக்க கூடாதுன்னு கேட்டுக்கிட்டாங்க”
“மறுக்க முடியலை என்னால!! எங்க வீட்டில இருக்கவங்களும் என் கல்யாணம் நினைச்சு சந்தோசத்துல இருந்தாங்க”
“அவங்க சந்தோசத்தை எல்லாம் என்னால கெடுக்க முடியலை. அதனால தான் உன்கிட்ட நீயே நிறுத்திக்கோன்னு சொன்னேன்”
“நீ வீட்டைவிட்டு ஓடிப் போக பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கலை!! அதனால தான் அன்னைக்கு உன்னை போகவிடாம தடுத்து உங்க வீட்டில கூட்டிட்டு போய்விட்டேன்”
“நீ கேட்டு நான் அதை செய்யாதது தப்பு தான். அது உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தும்ன்னு அப்போ நிஜமாவே எனக்கு தெரியலை!!”
“அது தப்பில்லை!! சரி தான்!! இல்லைன்னா இப்போ நான் இப்படி உங்க பக்கத்துல இருந்திருக்க முடியுமா” என்று இடையில் பேசிய செவ்வந்தி அவனை இறுக்கிக் அணைத்து அவன் வருத்தமெல்லாம் ஒன்றுமில்லை என்று செய்தாள்.
அதில் வீரா நெகிழ்ந்திருந்தாலும் அவன் பேச்சை தொடர்ந்தான். ‘ஷப்பா இருந்தாலும் இவரு இவ்வளவு கஞ்சிச்சட்டையா இருக்கக் கூடாது’ என்று செல்லமாய் வைதாள்.
“தாமரை வீட்டில இருந்து கிளம்பின பிறகு கார்ல வைச்சு நீ அழுத தெரியுமா!! அப்போ தான் புரிஞ்சுது வந்தி உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன்னு”
“யார் பேச்சையும் கேட்டிருக்கக் கூடாதுன்னு தோணிச்சு”
“அப்படி கேட்டது ரைட்டுன்னு தானே சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்று மீண்டும் இடையில் புகுந்தாள் அவன் மனைவி.
“நானும் அதை அப்பவே உணர்ந்திட்டேன். எப்படின்னு பார்க்கறியா மூணார்ல வைச்சு தான்”
“எனக்கே தெரியாம உன்னை எனக்கு பிடிச்ச தருணம் அது… எனக்கானவன்னு அதிகம் நினைக்க வைச்ச அழகிய நொடிகள் அங்க தான் நடந்துச்சு”
“அன்னைக்கு நைட் நான் பண்ணது ரொம்ப தப்பு தான். அதுவும் நான் பண்ண முட்டாள்த்தனம் சாரிடா வந்தி!!”
“அப்புறம் மறுநாள் காலையில உனக்காக வெளிய போய் பூ வாங்கிட்டு வரும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு”
“நான் வாங்கிட்டு வந்த பூவை நீ வைச்சுக்கிட்டப்போ என்னோட உள்ளம் நிறைஞ்சு போனது உண்மை!!”
“உனக்கு தெரியாம உன்னை சைட் அடிச்சிட்டே இருந்தேன்”
“ஏன் தெரியாம அடிச்சீங்க?? தெரிஞ்சே அடிச்சிருக்க வேண்டியது தானே?? அப்படி செஞ்சிருந்தா அப்படி இப்படி ஆகி ரொமான்ஸ் ஆகி இருக்கும்… நீங்க மிஸ் பண்ணிட்டீங்க!!” என்று வாலி சிம்ரன் போல் சொல்லிக் காண்பித்தாள்.
“அப்படி தெரிஞ்சு செஞ்சிருந்தா நீ என்ன பண்ணியிருப்பேன்னு எனக்கா தெரியாது”
“மூணார் விட்டு வரும் போது உனக்கு தெரிஞ்சு சைட் அடிச்சு உன்கிட்ட மாட்டி நீ தான் அன்னைக்கு காதுல ரத்தம் வர்ற அளவுக்கு பேசினியே!!” என்று நினைவுப்படுத்தினான்.
“ஹி… ஹி…” என்று சிரித்து வைத்தாள் அவள்.
“அதுக்கு பிறகு மனசு உன்னையே சுத்தி சுத்தி வந்துச்சு. அப்புறம் நடந்ததெல்லாம் தான் உனக்கே தெரியுமே!!”
“ஆமா வந்தி உனக்கு எப்போ என்னை பிடிக்க ஆரம்பிச்சுது” என்றான் ஆர்வமாய்.
“தெரியலை” என்று சாதாரணமாய் சொல்லி அவனுக்கு பல்பு கொடுத்தாள். அவன் முகமும் பியூஸ் போன பல்ப் மாதிரி ஆகிப்போனது.
அவன் வாடிய முகம் கண்டு அவனை தன்புறம் திருப்பிச் சொன்னாள். “எப்போ எப்படின்னு எனக்கு தெரியலை, ஆனா உள்ள வந்திட்டீங்க”
“அதை நான் உணர்ந்த நேரம் வேணா எதுன்னு சொல்றேன்” என்றதும் அவன் முகம் மலர்ந்தது.
“அத்தை நம்மைவிட்டு போன அன்னைக்கு!! நைட் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன் ஞாபகமிருக்கும்ன்னு நினைக்கிறேன்”
“காலையில இருந்து உங்களை பார்த்திட்டு தானே இருந்தேன். இறுக்கமா இருந்த நீங்க யார்கிட்டயும் அதிகம் பேசவேயில்லை”
“ஆனா நான் வந்ததும் ஒரு குழந்தை மாதிரி ஓடிவந்து என்னை கட்டிக்கிட்டீங்க!! அழுதீங்க தானே அப்போ!!” என்றதும் அவளை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தான். “பிடிச்சுது அந்த நிமிஷம் உங்களை ரொம்ப பிடிச்சுது”
“உங்களை எனக்கு பிடிக்கும் அப்படிங்கறதை அந்த நொடி மனசு உணர்ந்துச்சு!!” என்று சொல்லி அவன் நெஞ்சில் தேன் தடவினாள் அவள் வார்த்தைகளால்.
“ஐ லவ் யூ வந்தி!!” என்று சொல்லி அவள் இமைகளின் மீது முத்தமிட்டான்.
“எல்லாத்துக்கும் நான் ஆச்சிக்கு தான் நன்றி சொல்லணும்”
“ஆச்சிக்கு ஏன்??”
“பின்னே என்னை நம்பி உன்னை அவங்க கொடுத்ததுக்கு தேங்க்ஸ் சொல்லாம இருக்க முடியுமா என்ன??”
“நானா தானே உங்ககிட்ட சுவர் ஏறி குதிச்சேன்”
“இருந்தாலும் ஆச்சி எங்கம்மா அப்பா எல்லாரும் சேர்ந்து தானே நம்ம கல்யாணத்தை நடத்தினாங்க. அப்போ அவங்களுக்கு நன்றி சொல்ல வேணாமா”
“போய்யா நீ எப்போ பார்த்தாலும் ஆச்சி, அம்மா, அப்பான்னு பாட்டு பாடுறே” என்று சந்தோசமாய் சலித்துக் கொண்டாள் அவள்.
“அப்படி தான் பேசுவேன்”
“பேசினா கேட்டுக்கோ சரியா!! ஆச்சி எவ்வளவு ஸ்ட்ராங் லேடி தெரியுமா!! எல்லாத்தையும் தாங்கிட்டு இரும்பு மனுஷியா இருக்காங்க”
“அவங்க முடிவு ஒண்ணொண்ணும் அவ்வளவு தெளிவா இருக்கும். எனக்கு கூட நீ உங்க ஆச்சி போலவேன்னு தோணும், ஏன்னா உன் முடிவும் பேச்சும் கூட எப்பவும் தெளிவு”
“இது வேணும் இது சரி இது தப்புன்னு தெளிவா பேசுற!! பாவம் அவங்க முல்லை விஷயத்துல கொஞ்சம் டல் ஆகிட்டாங்க!! நீ தான் வந்தி அவங்ககிட்ட பேசி சரி பண்ணணும்” என்றான்.
“நீங்களுமா!! ஆச்சியும் இதே தான் சொன்னாங்க!! நான் அவங்களை மாதிரி இருக்கேன்னு!! நான் அப்படியா இருக்கேன்”
“ஹ்ம்ம் அப்படி தான் இருக்கே!! அதிலென்ன சந்தேகம் உனக்கு”
“சரி அதை விடுங்க!! முல்லை விஷயம் பத்தி நான் ஆச்சிக்கிட்ட பேச மாட்டேன். ஏன்னா எனக்கே அதுல ஒப்புதல் இல்லை”
“தப்பை சரின்னு எங்களால எப்படி சொல்ல முடியும்”
“அப்போ மறக்கறேன்னு சொன்னது”
“ஆமா மறக்க முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன். காலம் மாத்திடும்ன்னு நம்புறேன். என்னால இப்போ வரை அந்த விஷயத்தை ஜீரணிச்சுக்க முடியலை. ஆச்சி என்னை விட அதிகமா அவளை நம்பினாங்க”
“அப்போ அவங்களால மட்டும் எப்படி சட்டுன்னு தன்னை மாத்திக்க முடியும். அவங்களும் மாறுவாங்க கொஞ்ச நாள் ஆகும். ஒரு வேளை அவங்களோட கொள்ளுப்பேரனோ பேத்தியோ பார்த்தா மாறுவாங்களோ!! என்னவோ!!”
வீராவிற்கும் அவள் சொன்னது புரிந்தது. அவன் மதுராம்பாளிடம் பேசிய போது அவரும் இதையே தான் சொன்னார்.
அதிக நம்பிக்கை வைத்துவிட்டேன், அது பொய்யாகிவிட்டது. தவறு சரி செய்யப்பட்டுவிட்டது என்பதற்காக தவறு நடக்கவில்லை என்று சொல்ல முடியாது.
நடந்ததை மாற்ற முடியாது, அது போல் தான் என் மனமும் சட்டென்று தன்னை மாற்றிக் கொள்ளாது. காலம் தான் அனைத்திற்கும் பதில் என்று செவ்வந்தி சொன்னதையே அவர் பாணியில் சொல்லியிருந்தார்.
இப்போது அவரை நினைத்தாலும் அவனுக்கு பெருமையாய் இருந்தது. நடப்பவையெல்லாம் தாங்கிக் கொண்டு தனியொரு மனுஷியாக அந்த குடும்பத்தை தாங்கி நல்ல நிலையில் வைத்திருக்கும் அவரை நினைக்கும் போது அவனுக்கு பிரமிப்பாய் தானிருக்கும்.
அவன் யோசனையினூடே செவ்வந்தி “எனக்கொண்ணு கேட்கணும்??” என்றாள்.
“ஹ்ம்ம்”
“தாமரை அண்ணி மேல மட்டும் இன்னும் ஏன் கோவத்தை வைச்சிருக்கீங்க?? ப்ளீஸ் வேணாமே!!”
“இல்லை அவ பேசினது எனக்கு இப்போ வரை சரியாவே படலை!! என்ன தான் நீங்க அதுக்கு ஆயிரம் காரணம் சொன்னாலும் என்னால ஒத்துக்க முடியலை”
“யோசிச்சு இருக்கணும் கொஞ்சம் எனக்காக யோசிச்சு இருக்கணும்… உனக்காக யோசிச்சு இருக்கணும்… தப்பு பண்ணிட்டா!! என்னால அவ உன்னை பேசினதை சரியா எடுத்துக்க முடியலை”
“நீ முல்லைக்கு சொன்னது தான் மன்னிக்க முடியாது… மறக்க முயற்சி பண்றேன் உனக்காக மட்டும் தான்” என்று சேர்த்து சொன்னான் அவன்.
“ரொம்ப நேரம் பேசிட்டோம்…” என்று இழுத்தான்.
“அப்போ சரி தூங்கலாம்” என்று அலட்டாமல் சொன்னவள் மறுநிமிடமே கட்டிலின் உள்ளே ஏறி படுத்துவிட்டிருந்தாள்.
‘அடிப்பாவி உசுப்பேத்திவிட்டு தூங்கறேன்னு சொல்லிட்டு போய் படுத்திட்டாளே!!’
‘வீரா கண்ட்ரோல்!! கண்ட்ரோல்!!’ என்று சொல்லி தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தான்.
கண்கள் அவனையும் மீறி படுத்திருந்தவளின் அழகை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தது. அவள் மீதிருந்த பார்வையை அவனால் விலக்க முடியவில்லை.
அவனால் உறங்க முடியும் என்று தோன்றவில்லை. ‘இன்னைக்கு என்ன என்னால என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்த முடியலை’ என்று யோசித்தவன் ‘இங்க இருந்தா தானே அவளை பார்க்கத் தோணும்’
‘வேணாம் எழுந்து போய்டுவோம்’ என்று எண்ணியவன் எழப்போக செவ்வந்தி அவன் கைப்பற்றினாள். “எங்க போறீங்க??” என்றவாறே.
“தூக்கம் வரலை எனக்கு?? அதான் பால்கனில ஒரு சின்ன வாக் போகலாம்ன்னு” என்று இழுத்தான்.
“ஏன் இப்படி இருக்கீங்க??”
“எப்படி இருக்கேன்??”
“நான் யாரு??”
“ஹேய் இதென்ன இப்படி கேக்குற??”
“கேட்டா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க… எதிர்கேள்வி கேட்காதீங்க??” என்றாள் சீரியஸ் குரலில்.
வீராவும் அவள் குரல் மாற்றத்தை புரிந்து “என் பொண்டாட்டி” என்றான்.
“அப்போ நான் தூங்குறேன்னு சொன்னா சரி நீ தூங்கும்மான்னு விட்டிருவீங்களா??”
‘என்ன?? என்ன சொல்றா இவ?? என்னை திட்டுறாளா?? இல்லை எதுவும் மெசேஜ் சொல்றாளா??’ என்ற ஆராச்சியில் இறங்க அவன் கேள்விக்கு பதிலாய் ஒன்று தான் தோன்றியது.
ஆனாலும் அதை அவளிடம் எப்படி சொல்ல?? என்று பார்த்திருந்தான் அவன்.
“என்ன பண்ணணும்ன்னு சொல்ல வர்றே??” என்று மீண்டும் ஒரு கேள்வியே கேட்டு வைத்தான், பதில் சொல்ல தயங்கி.
“ஒண்ணும் சொல்லலை சாமி… உங்ககிட்ட சொல்றதுக்கு பேசாம இந்த சுவத்துல போய் முட்டிக்கலாம்”
“வேணாம் வந்தி உனக்கு வலிக்கும்” என்று கிண்டல் செய்தான்.
அவளோ அவனை கொலைவெறியாய் பார்த்தாள். மெதுவாய் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு “உங்களுக்கு என்ன பிரச்சனை?? ஏன் இப்படி நடந்துக்கறீங்க??”
“என்கிட்ட உங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லையா??” என்று வாய்விட்டு கேட்டே விட்டாள் அவனிடம்.
நேரடியாய் பேசுபவளிடம் அதற்கு மேல் மறைத்து பேச அவனால் முடியவில்லை. “இருக்கு” என்று மொட்டையாய் பதில் சொன்னான்.
“அப்போ…” என்றவளால் முடிக்க முடியவில்லை. இதை எப்படி இவனிடம் பேச என்று அவளுக்கு தெரியவில்லை, கூச்சம் முன் வந்து நின்றது.
அவள் பாதியில் நிறுத்தியதும் முகம் சிவந்து அடுத்து என்ன பேச என்று யோசிப்பதும் பார்த்தவனுக்கு பேசாமல் இருக்க முடியவில்லை.
“ஏன் அமைதியாகிட்ட??” என்று கேட்டு வைத்தான்.
“உங்ககிட்ட என்ன பேசன்னு எனக்கு தெரியலை??”
“ஏன் அப்படி சொல்றே??”
“வேற எப்படி சொல்றதாம்??”
“உனக்கு என்கிட்ட என்ன கேட்கணுமோ கேளு??”
“அதே தான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு என்கிட்ட என்ன கேட்கணுமோ கேளுங்க??”
“நான் கேட்டது கிடைக்குமா!!”
“கேட்காம எதுவும் கிடைக்காது”
“இல்லை போன முறை ஊருக்கு வந்திருக்கும் போது நீ வேணாம்ன்னு சொன்னே?? நான் உன்னை கட்டாயப்படுத்திட்டனோன்னு பீல் பண்ணேன்” என்று மனதில் இருந்ததை சொல்லிவிட்டான்.
‘என்ன சொல்றாரு?? நாம எப்போ மறுத்தோம்??’ என்று எண்ணியவளுக்கு அவன் தாமரை அங்கு இருந்த போது நடந்ததை சொல்கிறான் என்று புரிந்தது.
“அன்னைக்கு என் சூழ்நிலை உங்களுக்கு புரியலையா!! தாமரை அண்ணி வீட்டில இருந்தாங்க… நான் இங்க ரொம்ப நேரம் இருந்தா உடனே என்னை கூப்பிடுவாங்க”
“என்னால அன்னைக்கு உங்களோட விருப்பத்துக்கு உடன்பட முடியலை. அவங்க எப்பவும் கூப்பிடுவாங்கன்னு அப்படின்னு இருக்கும் போது நான் எப்படி??” என்று விளக்கம் கொடுத்தாள்.
“நான் எதுவுமே கேட்காம அப்படி நடந்துகிட்டது தப்பு தானே??”
செவ்வந்திக்கு கோபம் வந்துவிட்டது. “அப்போ என்கிட்ட கேட்டுக்கிட்டா முத்தம் கொடுக்கறீங்க??” என்று கேட்க வீராவுக்கு அவளின் நேரடியான தாக்குதல் அதிர்ச்சியாய் இருந்தாலும் சிரிப்பாகவும் வந்தது.
“நான் அப்படி தான் பிகு பண்ணுவேன். ஏன் சார்க்கு என்கிட்ட கேட்க தெரியாதா!! இல்லை இவகிட்ட போய் கெஞ்சணுமான்னு யோசிக்கறீங்களா”
“சண்டை போட்டா என்னை சமாதானம் பண்ணி என்னை சரி பண்ணத் தெரியுதுல்ல… வீட்டுக்கு வந்து தூக்கிட்டு போயிருவேன்னு மிரட்ட தெரியுதுல்ல… இப்போ மட்டும் என்னவாம்” என்று பொரிந்தாள்.
“நீ இதை எப்படி எடுத்துக்கறேன் தெரியலை. ஆனா என்னால உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்த முடியாது. இங்க பாரு மத்த விஷயம் வேற, ஆனா இதுல ப்ளீஸ்”
“நான் என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்தியே பழகிட்டேன். அந்த சம்பவத்துக்கு அப்புறம் தான் எனக்கு நானே ஒரு உறுதி எடுத்திக்கிட்டேன்”
“என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்துறது, கல்யாணமே பண்ணிக்க கூடாதுங்கறது. அப்படி பார்க்காத என்னால பொண்டாட்டியை கூட கஷ்டப்படுத்த முடியாதுன்னு தோணிச்சு”
“ஆனா இதெல்லாம் மீறி உன்னை நெறைய கஷ்டப்பட வைச்சிருக்கேன். என்னால நீயும் நெறைய சங்கடங்கள் அனுபவிச்சிருக்கே!! நான் என்ன தான் முயற்சி பண்ணாலும் உன்கிட்ட மட்டும் ஓவரா உரிமை எடுத்துக்கறதை என்னால விட முடியலை”
“நீ கேட்ட விஷயம் இதுல அடக்கம். ஆனா அதுக்கு மேல உன்னை கஷ்டப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ எனக்கு சங்கடமா இருக்கு” என்று தாழ்ந்த குரலில் சொல்லி முடித்தான்.
“உன்னை யாருய்யா இவ்வளவோ நல்லவனா இருக்கச் சொன்னது. உலகம் அழிஞ்சிரும் போடா!!”
“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு தானே!! எனக்கு உங்களை தான் பிடிச்சிருக்கு உங்களை மட்டும் தான் பிடிச்சிருக்கு போதுமா!!”
“இதுக்கு மேல நான் எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை!! இல்லை நான் இப்படியே தான் இருப்பேன்னா எப்படியோ போய் தொலைங்க” என்றவள் ஓரிரு நிமிடம் பேசாமல் இருந்தாள்.
அவனிடமிருந்து எதுவும் பதில் வருவோமோ என்று எங்கே அவன் வாயை திறந்தால் தானே… ‘சரி தான் போடா!!’ என்று மனதிற்குள் அவனை திட்டிவிட்டு அவனுக்கு முதுகுக்காட்டி படுத்துவிட்டாள்.
‘ஆண்டவா இவனை ஏன் இவ்வளவு நல்லவனா படைச்சே!! முடியலை ரொம்பப்படுத்தறான். இவ்வளவு நல்லவன் எல்லாம் இருந்தா இந்த உலகம் என்னாகறது’
‘நான் என்ன சொல்றேன்னா நீ இவனை கொஞ்சூண்டு கெட்டப் பையன் ஆக்கிடு’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் வேண்டுதல் பலித்ததா இல்லை அவள் பேச்சு வீராவுக்கு புரிந்ததா என்ற தெரியவில்லை. ஆனால் அவளை ஓட்டிப் படுத்த வீராவின் கரம் அவள் இடையை அணைந்திருந்தது.
வெற்றிடையில் விழுந்த அவன் கரம் அதற்கு மேல் சும்மாயில்லை, தன் வேலையை தொடங்கியிருந்தது.
அவளை தன்புறம் திருப்பியவனின் இதழ்கள் அவளிதழுடன் சேர்ந்து புதுக்கவிதைக்கு அச்சாரம் போட்டது. அவர்களின் மகிழ்ச்சியான இல்லறம் நல்லறமாக ஆரம்பித்தது…
ஆறு மாதம் கழித்து…
“டாக்டர் இருக்காங்களா…” என்ற வீராவின் குரலில் வேகமாய் எழுந்து வந்தாள் அவன் மனைவி.
“என்ன வேணும் உங்களுக்கு”
“கைல முள்ளு கிழிச்சிருச்சு” என்று சொல்லி கையை நீட்டினான்.
ரோஜா முள் ஒன்று லேசாய் அவன் கையில் உரசியிருந்தது போலும். துளியாய் சிவப்பாயிருந்தது.
அவன் செய்த அலும்பை பார்த்து “வர வர உங்களுக்கு ரொம்ப கொழுப்பாகிட்டு” என்று சொல்லி கணவனை முறைத்தாள்.
பின்னே அவள் என்று அதே ஊரில் கிளினிக்கை வைத்தாளோ அன்றிலிருந்து அவனுக்கு இதே வேலை தான்.
ஒரு நாள் பூச்சி கடித்துவிட்டது என்பான், ஒரு நாள் முள் கீறியது என்பான், இன்னொரு நாள் வேறு ஒரு காயம் என்று வந்து நிற்பான்.
அவனுக்கு காயத்திற்கு மருந்தாய் அவன் மனைவி கொடுக்கும் முத்தம் வேண்டும். முதன் முதலாய் அவன் அப்படி உண்மையாகவே வந்து நின்ற போது அவள் தெரியாமல் முத்தத்தை மருந்தாக்கினாள்.
அவனோ இது தான் சாக்கு நின்று தினம் வந்து நின்றான் ஒரு வலியை சொல்லி. “மருந்து போடுஎனக்கு வலிக்குது” என்றவன் மனைவியை பார்த்து கண் சிமிட்டினான்.
“முடியாது போடா”
வீரா இப்போது இன்னமும் நெருக்கமாய் அவளிடத்தில் வந்து நின்றிருந்தான்.
“என்ன வேணும் உங்களுக்கு??”
“மருந்து போடணும்??”
“மருந்தெல்லாம் போட முடியாது போடா” என்று மறுத்தவள் திரும்பி செல்லப்போக அவன் அவளைத் தடுத்து “நீயென்ன போடுறது நானே போட்டுக்கறேன் போடி” என்றவன் அவள் இதழை சிறை செய்திருந்தான்…
நீண்டதொரு யுத்தத்தை அவள் இதழுடன் அவனிதழ் புரிய பின் மெதுவாய் அவளை விடுவித்தான்.
அவள் கிறங்கி முகம் சிவந்து நின்றிருக்க அவளை தன் கண்ணுக்குள் நிறைத்தான்.
தன் மழலையை மணி வயிற்றில் தாங்கியிருந்த மனைவியை விழியெடுக்காமல் பார்த்தவன் மெதுவாய் மிக மெதுவாய் அவள் புடவை விலக்கி வயிற்றில் இருந்த அவர்களின் செல்வத்திற்கு முத்தமளித்தான்.
அதில் கூசி சிலிர்த்தவளை இடையோடு கட்டிக்கொண்டவாறே நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“என்ன பார்வை பலமா இருக்கு” என்று அவள் சொல்லவும் அவசரமாய் அவன் கைபேசியை நோண்டினான்.
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
என்ற பாடலை வீரா வேண்டுமென்றே அவன் கைபேசியில் ஒலிக்கவிட்டான்.
“பார்றா பாட்டெல்லாம் பயங்கரமா இருக்கு. அப்போ நீங்க இன்னும் என்னை கண்டுப்பிடிக்கலையா தேடிக்கிட்டே தான் இருக்கீங்களா??” என்றாள்.
“ஹ்ம்ம் ஆமா தேடிகிட்டே தான் இருக்கேன். தினம் ஒரு தேடல் தான் உன்கிட்ட!! ஒரு ஒரு நாளும் உன்னை புதுசா பார்க்கிற மாதிரி தான் இருக்கு வந்தி!!” என்று சிலாகித்து சொன்னவனை காதலாய் பார்க்க வீரா அவள் பார்வையில் பெருமிதமாய் உணர்ந்தான்.
இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத நேசத்தை கொண்டிருந்தனர். “வாக்கிங் போயிட்டு வருவோமா நம்ம தோட்டம் நீ இன்னும் பார்க்கலையே!!”
“உன்னை மாதிரியே அதுவும் பூக்க ஆரம்பிச்சுடுச்சு. எல்லாரும் வந்து பார்த்திட்டு போறாங்க, நீ வந்து பார்க்க வேணாமா!!”
“ஹ்ம்ம் போகலாம்!! எனக்கும் பார்க்கணும்ன்னு ஆசையா தான் இருக்கு”
தோட்டத்திற்கு அவர்கள் செல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரை செவ்வந்தி பூக்களின் அணிவரிசை அங்கு.
விதவிதமான வண்ணங்களில் அணிவகுத்து நின்ற அம்மலர்கள் அவள் கண்ணையும் மனதையும் ஒரு சேர நிறைத்தது.
பார்க்கவே ரம்மியமாக தோன்றியது அந்த இடம். வீராவின் கைவண்ணத்தில் அவை அழகாய் பூத்துக் குலுங்கியது.
பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. அவன் தோட்டம் வாங்கிய புதிதில் அவள் வந்தது, அதற்கு பின் இன்று தான் வருகிறாள்.
மற்றவர்கள் தோட்டம் பற்றி சொல்லக் கேள்வி தான். அதன்பின் இன்று தான் அவள் அதை நேரில் பார்க்கிறாள்.
“வா…” என்றவன் அவளை அணைத்துச் செல்ல அக்கணம் அப்படியொரு பூரிப்பு அவளிடத்தில். பின்னே இது அவளுக்காய் அவன் பார்த்து பார்த்து செதுக்கியதாயிற்றே!!
சொல்லிவிட்டார்கள் ஊரில் அனைவரும் உன் கணவனுக்கு உன் மேல் அவ்வளவு பிரியம் என்று. கண் வைத்துவிட்டார்கள் என்று சொல்லி அவள் அன்னை சிவகாமி இருவருக்கும் சுத்தி வேறு போட்டார்.
வீராவின் கரம் பற்றி செவ்வந்தி அவன் தோள் சாய்ந்து கொண்டாள். படபட பட்டாசாய் பொரிந்து கொண்டிருந்தவள் இன்று தன்னவனின் அன்பில் தன்னை தொலைத்து அவனுடன் இரண்டற கலந்து போனாள்.
வீராவிற்கு இன்னொரு அன்னையாய் அவனை தன் மடி தாங்கியவள் அவனை எப்போதும் அசமஞ்சம் என்று செல்லம் கொஞ்சுபவளின் நெஞ்சத்தில் மஞ்சமிட்டு சொகுசாய் அமர்ந்திருந்தானவன்….
லேசாய் வீசிய தென்றல் காற்று முகத்தில் மோத, காற்றில் கலைந்த அவள் கூந்தலை ஒதுக்கியவனின் கண்களை நோக்க இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் காதலுடன் தழுவியது. அவர்களின் இந்த ஏகாந்தத்தை கலைக்காமல் நாம் அவர்களிடமிருந்து விடைபெறுவோமாக!!
செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம்
வானவில் கோலம் வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே!!