அத்தியாயம் – 16
இருவருமாய் கொஞ்சம் தொலைவில் இருந்த அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர். சிவா கொஞ்சம் இறுக்கமாகவே முகத்தை வைத்திருந்தான்.
வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவளுடன் நடந்தவன் நினைவு வந்தவனாய் “எதுவும் வாங்கணுமா??” என்றிருந்தான்.
“ஹ்ம்ம் ஆமா அர்ச்சனைக்கு வாங்கிக்குவோம்”
“சரி வா…” என்றுவிட்டு அவளுடன் அருகில் இருந்த கடைக்கு சென்று தேவையானதை வாங்கிக்கொண்டான்.
உள்ளே வந்து கடவுளை தரிசிக்க திருப்தியான தரிசனம் அன்று. பாவை இருவரின் பெயரிலும் அர்ச்சனை செய்தாள்.
அவளருகில் நின்று அவள் சொல்வதையே கொஞ்சம் ஆச்சரியமாய் பார்த்தான். ‘என் ராசி நட்சத்திரம் எல்லாம் சரியா சொல்றாளே’ என்று எண்ணி பார்த்திருந்தான்.
‘என்னை பிடிக்காம இருந்தவளுக்கு என்னைப்பத்தி எப்படி எல்லாம் தெரிஞ்சுது. பிடிக்காம ஒருத்தரை பத்தி தெரிஞ்சு வைச்சுக்க முடியாது… அப்போ இவளுக்கு என்னை பிடிக்குமா…’ என்று அவன் எண்ணங்கள் போக முக இறுக்கம் தளர்ந்து பார்வை ரசனையாய் மாறியது.
கோவிலை சுற்றி வந்து கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்கிய பின் அங்கு நிழலாய் இருந்த ஓரிடத்தில் அமர்ந்தனர்.
“அடுத்து எங்க போகலாம், இங்க அதிகம் சுத்திப்பார்க்க இடமில்லை. உங்க ஏரியான்னா அங்க இருந்து சென்னை சிட்டிகுள்ள போய் மால் அது இதுன்னு போகலாம்…”
அவளும் இப்போது யோசித்தாள். “வேணா இன்னைக்கு ஹோட்டல் போய் சாப்பிட்டு அப்புறம் வீட்டுக்கு போவோம். ஈவினிங் எங்காச்சும் பார்க் வேணும்னா போகலாம்” என்று அவனே தொடர்ந்தான்.
“ஹோட்டல்க்கா வேணாம் வேணாம்” என்று அவசரமாய் மறுத்தாள் அவள்.
“ஏன்??”
“வீட்டிலேயே செஞ்சுக்கலாம்…” என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்தாள் போகலாம் என்பதாய்.
அவள் செயல் லேசாய் சுருசுருவென்று வந்தது அவனுக்கு. கோவிலில் இருந்து வெளியில் வந்ததும் “ஹோட்டல்க்கு போய் ரெண்டு பேர் சாப்பிட செலவு தானே…”
“உங்களுக்கு பிரியாணி பிடிக்கும்ன்னு அத்தை சொன்னாங்க… மார்கெட் போய் தேவையானது வாங்கிட்டு போய்டலாம், நம்ம வீட்டில செஞ்சு சாப்பிட்டுக்கலாமே… கோவில் இருந்ததால உள்ள சொல்லலை, அதான் இப்ப சொல்றேன்”
‘டேய் சிவா இவ அந்த பாவையே இல்லைடா இல்லை… இவ ஓவியாடா ஓவியா… பிக் பாஸ் ஓவியா… ச்சே ச்சே என்னோட ஓவியா… எனக்கு இவளை பிடிக்குதே’ என்று மனம் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
மனதிற்குள் அவளை ஓவியா என்றே அழைத்துக்கொண்டான். “என்னங்க ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க” என்று அவன் பதிலுக்காய் காத்திருந்தவளை கண்டு அவனுக்கு மயக்கம் வராதது மட்டுமே குறை.
‘நெறைய மாறி இருக்கா… இவ்வளவு பொறுமை இவளுக்கு எங்க இருந்து வந்திச்சு… ஒரு வேளை இது தான் இவ இயல்போ…’
“என்னங்க…” என்று அவனை உலுக்கி அவள் யோசனையை கலைத்துவிட “ஹாங்…”
“என்ன யோசனை?? வண்டியை நீங்க ஓட்டுறீங்களா?? நான் ஓட்டவா??” என்றவளை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு சிரித்தான்.
“எதுக்கு சிரிக்கறீங்கன்னு தெரியுது… புடவை கட்டிட்டு எப்படி வண்டி ஓட்டுவேன்னு தானே…”
“தெரியுதுல… அப்புறமென்ன??”
“புடவை கட்டிட்டும் வண்டி ஓட்ட முடியும்”
“எப்படி முடியும்??”
“ஸ்கூட்டி ஓட்ட முடியும்”
“இது போங்கு…”
“போங்கெல்லாம் இல்லை நீங்க வண்டி ஓட்ட முடியாதுன்னு சொன்னீங்க… நான் முடியும்ன்னு சொன்னேன்… நீங்க எந்த வண்டின்னு சொல்லலை நான் எந்த வண்டின்னு சொன்னேன் தானே…”
“நல்லா சமாளிக்கற, சரி வண்டியில ஏறு கிளம்புவோம்”
“எங்க?? வீட்டுக்கா?? இல்லை…”
“அப்போ சிக்கன் பிரியாணின்னு சொன்னே??”
“அப்போ மார்கெட் தானே போறோம்…”
“ஹ்ம்ம்…” என்றுவிட்டு அவன் பைக்கை உதைக்க நேரே மார்கெட்டுக்கு சென்று தேவையானதை வாங்கிக் கொண்டனர்.
ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தனர். சமையலறையில் வாங்கி வந்ததை எடுத்து வைத்தவள் “ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம்…” என்று அவர்கள் அறையை நோக்கிக் சென்றவனை நிறுத்தினாள்.
“என்ன??”
“டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்…” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
சில நொடிகளில் வேறு உடைக்கு மாறி வெளியில் வந்தவள் “நீங்க போங்க…” என்றுவிட்டு சமையலறை புகுந்தாள்.
சிவாவும் உடைமாற்றி வந்து ஹாலில் அமர்ந்தான். வீட்டில் யாருமில்லாமல் போரடித்தது அவனுக்கு.
“பாவை…”
“என்னங்க…”
“என்ன பண்றே??”
“சமையலுக்கு தேவையானதை ரெடி பண்ணிட்டு இருக்கேன்…”
“இங்க வந்து செய்யேன்…”
“என்ன??”
“போரடிக்குது எனக்கு…”
“அங்க வந்து சிக்கன் கட் பண்ணவா, வீடெல்லாம் நாறும்… போரடிச்சா டிவி பாருங்க…”
“போடி…” என்று முணுமுணுத்தவன் தன் இயல்பில் இருந்து வெளி வந்ததை உணரவேயில்லை.
பைக் சாவியை எடுத்தவன் “நான் வெளிய போயிட்டு வர்றேன்…” என்றுவிட்டு நகர்ந்தான்.
“என்னை தனியாவிட்டு போறீங்க…”
“ஹ்ம்ம் டிவி பாரு…” என்று அவள் போலவே சொல்லிக் காட்டி வெளியில் சென்றுவிட்டான்.
அரைமணி நேரத்தில் திரும்பி வந்திருந்தான் மனம் கேட்காமல். கையில் வெனிலா பேமிலி பேக் ஐஸ்கிரீம்…
கதவை தட்டவும் வேகமாய் வந்து திறந்தவளின் கண்கள் அவனை கண்டதும் மலர்ந்ததை அவன் கண்கள் தப்பாமல் கண்டுகொண்டது.
“இதை வாங்க தான் அவசரமா போனீங்களா…” என்று அவனிடமிருந்து அதை வாங்கி பிரிட்ஜில் வைத்தாள்.
ஹாலில் அக்காடா என்று அமர்ந்து கொண்டவனுக்கு ஒரு சந்தேகம் “பாவை” என்றழைத்தான்.
“என்னங்க…”
“இங்க எது எது எங்கெங்க இருக்குன்னு உனக்கு தெரியுமா… நீ பாட்டுக்கு கிட்சன்ல சமைக்க போயிட்டியே”
“ஏன் எனக்கு கண்ணு இருக்குல… எது எது எந்த பொருள்ன்னு கூடவா தெரியாது. நேத்து முழுக்க அத்தை கூட தான் இருந்தேன்… கொஞ்சம் கூடவா தெரிஞ்சு வைச்சுக்க மாட்டேன்…”
“ஓ… ஹ்ம்ம் பரவாயில்லை நமக்கு தான் எத்தனை முறை கிட்சன் போனாலும் எது எங்க இருக்குன்னு தெரியறதில்லை” என்று மெதுவாய் சொல்லிக்கொண்டான்.
“உங்களுக்கு கிட்சன்ல வேலையில்லை அதான் தெரிஞ்சு வைச்சு இருக்க மாட்டீங்க” என்றாள் உள்ளிருந்தவாறே.
‘பாம்பு காது… முணுமுணுக்கறது எல்லாம் கேட்டு பதில் சொல்றா’ என்று எண்ணிக்கொண்டான்.
ஒரு வழியாய் இருவரும் சேர்ந்து மதிய உணவை உண்டு முடித்தனர். எவ்வளவு நேரம் தான் நெட்டித் தள்ளினாலும் அவர்களுக்கு பொழுதே போகவில்லை.
இதுவே மற்ற தம்பதிகள் போலிருந்தால் அவர்கள் பொழுது நகர்வதற்கு சொல்லியா தரவேண்டும். இங்கு இருவருமே இன்னும் மனம்விட்டு பேசிக்கொள்ளா நிலையில் ஒருவரை மற்றவர் அறியாமல் பார்க்கத் தான் இருவராலும் முடிந்தது.
சிவா தான் ஆரம்பித்தான். “பாவை பொழுதே போக மாட்டேங்குது… பேசாம உங்க வீட்டுக்கு போயிட்டு வருவோமா…” என்றவனை இப்போது அவன் மனைவி முறைத்தாள்.
‘வா ராஜா வா… நீ மட்டும் உங்க வீடுன்னு சொல்லுவ, நான் சொன்னா முறைப்பியா’ என்று பார்த்தாள் அவள்.
“எதுக்கு முறைக்கிறே??”
“இல்லை அன்னைக்கு உங்ககிட்ட உங்க வீட்டுக்கு போகலாம்ன்னு சொன்னதுக்கு நீங்க மட்டும் முறைச்சீங்க… அதே போல தானே எனக்கும்”
“இது தான் நம்ம வீடு அது எனக்கு புரியுது. அன்னைக்கு வேணும்ன்னு எல்லாம் சொல்லலை. எனக்கு சட்டுன்னு வரலை… ஒரு ப்ளோல சொல்லிட்டேன்”
“அதுக்காக என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வராமவிட்டீங்கல்ல” என்று அவள் சொல்லவும் அவனால் அவளை புரிந்து கொள்ள முடிந்தது.
தவறென்று உணர்ந்து “சாரி” என்றிருந்தான் அவன்.
“நீங்க சாரி எல்லாம் சொல்ல வேணாம்… உங்களுக்கு விளக்கம் சொன்னேன் அவ்வளவு தான்… நீங்க சொன்னது தான் எல்லாமே பழக கொஞ்ச நாள் ஆகும் பழகிட்டா சரியாகிடும்”
‘ஓவியாவே தான் இவ்வளவு தெளிவா எல்லாம் பேசுறாளே’ என்று மலைப்பு அவனுக்கு.
“நாம ட்ரைன்ல போகலாம் வரும் போது மாமா அத்தைகூட கார்ல வந்திடலாம்” என்று அவள் சொல்ல சிவாவும் தலையாட்டினான்.
‘ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா… எப்படி சாத்தியம்?? வாய்ப்பே இல்லை… ஆனாலும் என்னமோ நடந்திருக்கு…’ என்று அவன் மனம் குரல் கொடுத்தது.
அங்கு மாருதியின் வீட்டில் பின் மாலை பொழுது துவங்கியிருக்க அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் சங்கவி கொடுத்த காபியை அருந்தியவாறே.
அப்போது பாவையும் சிவாவும் ஒன்றாய் வர மாலினி தான் என்னவென்று பார்த்தார். ‘இவனை எங்க போகச் சொன்னா என்ன பண்ணிட்டு இருக்கான்’ என்று திட்டிக்கொண்டார் மகனை.
“என்ன நாங்க வந்தது சர்ப்ரைஸ் இருக்கா?? ரெண்டு பேருக்கும் ரொம்ப போரடிச்சது வீட்டில அதான் கிளம்பி வந்திட்டோம்…”
“மாம்ஸ் உங்க தங்கச்சி உங்களுக்கு பிரியாணி கொண்டு வந்திருக்கா…” என்றுவிட்டு பாவையை பார்க்க அவள் அதை அவன் முன் நீட்டினாள்.
மகேஸ்வரிக்கு மகளும் மருமகனும் ஒன்றாய் சேர்ந்து வந்ததை பார்க்கவே நிறைவாய் உணர்ந்தார். தனக்காய் மகள் நெறைய கஷ்டப்பட்டிருக்கிறாள் என்பதை வலியுடன் உணர்ந்தவராயிற்றே…
சங்கவி துணி எடுக்க பின்னால் செல்ல அவள் பின்னேயே சென்ற மாருதி அவளை நிறுத்தி “உங்க அண்ணனுக்கு அறிவே இல்லை…” என்றான்.
சங்கவி தன் கணவனை முறைத்தாள். “நிஜமா தான் சொல்றேன்… எவனாச்சும் பக்கத்துல புது பொண்டாட்டி வைச்சுட்டு போரடிக்குது சொல்வானா… உங்கண்ணன் வேஸ்ட் இப்படி சொதப்புறானே…”
“அவளே இருந்திருந்து இப்போ தான் அங்க போயிருக்கா, ஜாலியா ரெண்டு பேரும் எங்கயாச்சும் போயிட்டு வருவாங்களா…” என்று அவன் தன் போக்கில் புலம்பி தீர்த்தான்.
“எங்கண்ணனை மட்டும் சொல்றீங்க…”
“தப்பு தான்மா என் தங்கச்சியும் மக்கு தான் போதுமா…”
“அது சரி…” என்றவள் “இப்படி புலம்புறதுக்கு எங்கண்ணன்கிட்டவே நீங்க பேசியிருக்கலாம்… ரெண்டு பேரும் எப்போ பார்த்தாலும் ஓவரா ஒருத்தர் மேல ஒருத்தர் பாசத்தை பிழிவீங்களே!!”
“கண்டிப்பா சொல்லியிருப்பேன் சிவா என் தங்கச்சி புருஷனா இல்லாம இருந்திருந்தா… இப்போ நான் போய் எப்படி… நல்லாவா இருக்கும் ச்சே…”
“அடப்போங்க… என்னை வேற நிக்க வைச்சு புலம்பிட்டு இருக்கீங்க…” என்று அவள் உள்ளே நகர எதிரில் சிவா வந்தான்.
“என்ன கவி இங்க என்ன பண்ணுறே??”
“ஹ்ம்ம் போரடிக்குது அதான் என் புருஷன் கூட ரொமான்ஸ் பண்ண வந்தேன்” என்று சொல்லி அவள் கழுத்தை வெட்டிப் போக மாருதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
‘நல்ல தங்கச்சி தான்… நல்லாவே கொடுத்திட்டு போய்ட்டா அவ அண்ணனுக்கு’ என்று பார்த்தான் மாருதி.
“என்னாச்சு மாம்ஸ் இவளுக்கு லூசு மாதிரி உளறிட்டு போறா…”
‘யாரு என் பொண்டாட்டி லூசு… மாப்ள நீ தான்யா லூசு…’ என்று மனதிற்குள் வைதுக் கொண்டான் அவனை.
“ஒண்ணுமில்லை சிவா… உங்களை கிண்டல் பண்ணிட்டு போறா அவ்வளவு தான்”
“சரி மாம்ஸ்” என்றவன் “எல்லாத்துக்கு அவசரப்பட கூடாது மாம்ஸ்… ஆளுக்கு ஒரு ஒரு அடியா தான் எடுத்து வைக்கணும்… ஒரேடியா எடுத்து வைச்சிட கூடாது” என்று தன் போக்கில் அவன் சொல்லிச் செல்ல அந்த பதில் தங்களுக்கானது என்பதை புரிந்துக்கொண்டான் மாருதி.
‘உண்மையிலேயே நீ கிரேட் தான் மாப்ள’ என்று இப்போது பெருமையாய் சொல்லிக்கொண்டான் தன் மனதில். ஏழு மணிக்கு சிவா சொல்லியிருந்த வண்டி வந்திருக்க அனைவரிடமும் விடைபெற்று அவர்கள் கிளம்பினர். சதாசிவத்தை டிரைவர் இருக்கைக்கு அருகில் அமர வைத்தான் சிவா.
பின்னர் அவர்கள் மூவரும் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தனர். முதலில் மாலினியும் நடுவில் பாவையும் கடைசியில் சிவாவும்.
மாலினி கொஞ்சம் தாட்டியமானவர். அவர் தாராளமாய் அமர இடம் கொடுத்து பாவை சிவாவை நெருங்கி அமர்ந்திருந்தாள்.
இதுவரை இவ்வளவு நெருக்கம் உணர்ந்ததில்லை இருவரும். முதலில் சாதாரணமாய் ஏறி அமர்ந்திருந்த சிவாவிற்கு அவள் நெருக்கமும் அவள் மீதிருந்து வந்த பூவின் மணமும் அவனை ஒரு நிலையில் வைத்திருக்கவில்லை.
வேண்டுமென்றே அவள் புறம் நன்றாய் சாய்ந்திருந்தான் இப்போது. ஒருவரின் உடல் சூட்டை மற்றவர் உணர்ந்தனர்.
சிவாவிற்கு அன்று நிம்மதியாய் உறக்கம் வருமென்று தோன்றவில்லை. மனைவியின் ஒற்றை அணைப்பை அவன் மனமும் உடலும் எதிர்பார்த்தது.
பாவையும் கிட்டத்தட்ட அவன் நிலையில் தான் இருந்தாள். ஆனாலும் அருகில் அமர்ந்திருந்த மாலினியின் பொருட்டு அவ்வப்போது உடலை அசைத்து அசவுகரியம் உணர்த்தினாள் அவனுக்கு.
அதெல்லாம் எங்கே அவனுக்கு புரிந்தால் தானே, நல்லவேளையாக வீடும் வந்துவிட மாலினி முதலில் இறங்கிக்கொள்ள சிவா மனமேயில்லாமல் இறங்கினான்.
இறங்கும் வரை தான் அவன் மோன நிலையெல்லாம் இறங்கியதும் முதல் வேலையாய் தந்தையை இறக்க உதவி புரிந்தவன் பாவை கதவை திறந்ததும் அவரை உள்ளே கூட்டிச் சென்றான்.
முதலில் மாலினியும் சதாசிவமும் சாப்பிட்டு விட பின்னர் சிவாவிற்கு தோசை வார்த்தாள். “ரெண்டு பேருக்கும் சுட்டு வைச்சுடு, சேர்ந்து சாப்பிடலாம்” என்றுவிட்டு அவன் உள்ளே சென்றுவிட்டான்.
ஷார்ட்ஸ் ஒன்றை போட்டுக்கொண்டு அதற்கு தோதாய் ஒரு பனியனை அணிந்து வந்திருந்தான் இப்போது. அவள் இருவருக்கும் பரிமாறி அவன் எதிரில் அமர சிவாவின் கண்கள் தோசையை மட்டும் விழுங்கவில்லை.
பாவையை தன் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான். அவளோ இவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை இவன் பார்வையை அவள் மனம் உணர்ந்திருந்தது. குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு எழுந்திருந்தாள். பின்னோடு சிவாவும் வந்தவன் கை கழுவி நகர்ந்திருந்தான்.
பாவையும் அனைத்தும் ஒதுக்கி அவர்கள் அறைக்கு வர இன்னும் அறைக்கு வரவில்லையே என்று அவளைத் தேடி அவன் வெளியில் வர இருவரும் முட்டிக் கொண்டனர்.
சிவாவின் உணர்வுகள் தன் கட்டுப்பாடில்லாமல் தறிகெட்டு ஓடியது. மேலே விழுந்தவளை தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.
வெகு நேரமாய் அந்த அணைப்பைத் தானே அவன் உள்ளம் எதிர்பார்த்தது… பாவையும் அவன் அணைப்பில் கட்டுண்டிருக்க காற்றும் இடைபுகாமல் அவர்களை சுற்றி சென்றது…
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பொய்ப் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி… ஈ…
ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்
ஓ… இன்றேனோ நம் மூச்சின்
மென் காற்றில் இணைந்து விட்டோம்