Advertisement

அத்தியாயம் – 25

 

“ராம்…” என்ற கூவலில் சற்று தள்ளி நின்றிருந்த ராம் வேகமாய் விரைந்திருந்தான் பிரியனிடத்தில்.

 

“சொல்லு வல்லா…”

 

“இங்க பாரு…” என்று அவன் கணினித்திரையை சுட்டிக்காட்ட அதை பார்த்தவன் விழிகளில் சிவப்பேறியது கோபத்தில்.

 

“என்ன ராம்?? இவனை உனக்கு தெரியுமா?? இவன் உள்ள வந்து ஏதோ ஸ்ப்ரே பண்ணியிருக்கான் பார்த்தியா??”

 

“அதுக்கு பிறகு தான் கிரானைட்ஸ் எல்லாம் இப்படி ஆகியிருக்கும்ன்னு நினைக்கிறேன்…” என்று தன் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தான் பிரியன்.

 

அருகில் நின்றிருந்தவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாது போக ராமை உலுக்கினான் அவன்.

 

“ராம்… ராம்…” என்று அவன் தொடர்ந்து அசைக்க ராம் பிரியனை திரும்பி பார்த்தான்.

 

“என்ன ராம்?? ரொம்பவும் தெரிஞ்சவரா?? பீல் பண்ணுறியா??”

 

“பீல் பண்ண என்ன இருக்கு வல்லா?? ஆனா இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை நான் எதிர்பார்க்கலை… இவன் என் கம்பனியோட ஜி.எம். அது மட்டுமில்லை என்னோட கசினோட ஹஸ்பன்ட்”

 

“என்ன சொல்லன்னு எனக்கு புரியலை…” என்று சொல்லும் போது அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்துவது ப்ரியனுக்கு புரிந்தது.

 

“தொழில் வேற குடும்பம் வேற அதுல நான் தெளிவா தான் இருக்கேன் வல்லா…” என்றான் தொடர்ந்து.

 

“என்ன ராம் சொல்றே?? உன் தங்கையோட கணவரா?? அப்போ இந்த விஷயத்தை நிதானமா ஹேண்டில் பண்ணுடா…”

 

“நிதானமா இனி பார்க்க முடியாது வல்லா… லாஸ் லாஸ் தான்…” என்றவன் ஏதோ யோசனைக்கு தாவினான்.

 

“இன்சூரன்ஸ் கிளைம் பண்ண முடியாம இருக்கே ராம்… எனக்கொரு யோசனை, இப்போ நீ ஒரு எப்ஐஆர் போட்டுடு… அதை வைச்சு இன்சூரன்ஸ் கிளைம் பண்ண முடியுமான்னு பாரு…”

 

“மே பீ அவங்க இதை அக்செப்ட் பண்ணிகிட்டா உனக்கு லாஸ் குறையும் இல்லையா… எப்ஐஆர் போட்டா இவர் உள்ள போக வேண்டி இருக்கும்… என்ன பண்ணனும்ன்னு யோசி ராம்…”

 

“நான் முடிவே பண்ணிட்டேன் வல்லா, கேஸ் கொடுக்கறதுன்னு, லாஸ் எனக்கு பெரிய விஷயமில்லை… இத்தனை நாளா வசதியா வாழ்ந்து பழகிட்டேன்…”

 

“ஆண்டவன் எனக்கு ஒரு கஷ்டத்தை கொடுத்திருக்கான், அதை கடக்க எனக்கு துணிவையும் கொடுத்திருக்கான்…”

 

“எத்தனை நாள் உன்னை பார்த்து கொடுத்து வைச்சவன்னு நினைச்சிருக்கேன். ஆனா உன்னோட கஷ்டம் பத்தி தெரிஞ்சப்போ நான் ரொம்ப நல்லா வாழ்ந்திருக்கேன்னு தோணிச்சு…”

 

“இப்போ கடவுள் எனக்கு ஒரு சோதனை கொடுத்திருக்கார்… அதை நான் மகிழ்ச்சியோட ஏத்துக்கறேன்டா…”

 

“நல்லவங்க யாரு நம்பிக்கை துரோகி யாருன்னு தெரிஞ்சுக்க இந்த கஷ்டம்ன்னு நினைச்சுக்கறேன்டா வல்லா…” என்று இந்த நிலையிலும் ராம் தெளிவாகவும் உறுதியாகவும் பேசியது கண்டு பிரியன் அசந்து தான் போனான்.

 

“ஆனா ராம் இது இவர் மட்டுமே செஞ்சிருக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன்…” என்றவன் தன் மனதில் உள்ள சந்தேகத்தை தெளிவாய் ராமிடம் விளக்கினான்.

 

“ஏன் வல்லா?? இதுக்காக எல்லாம் கூட இப்படி செய்வாங்களா??”

 

“என்னையே பிரிச்சு வைக்கும் போது, எங்களை சேர்த்து வைக்கணும்ன்னு நினைச்ச உனக்கு ஒரு கஷ்டத்தை கொடுக்கறது ஒண்ணும் அவங்களுக்கு பெரிய விஷயமில்லை ராம்…”

 

“நீ சொல்றது சரின்னா இனிமே இது மட்டும் தான் என் வேலையா இருக்கும் வல்லா…”

 

“வேண்டாம் ராம் நீ இவ்வளவு தூரம் செஞ்சதே பெரிய விஷயம். வதுவை இனிமே என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது, அப்படி நினைச்சா நானும் சும்மா இருக்க மாட்டேன் ராம்…”

 

“நீ இதுக்கு மேல எந்த ரிஸ்க்கும் எடுக்கறது எனக்கு சரியாப்படலை ராம்… அவங்க எந்த எல்லைக்கும் போவாங்க அப்படிங்கறதுக்கு நானே உதாரணமா இருக்கேன்…”

 

“என்னோட கவலை எல்லாம் இப்போ வேற ராம்…” என்று இடைவெளி விட்டான் பிரியன்.

 

“என்ன வல்லா?? இசையை அவங்க எதுவும் செஞ்சிடுவாங்கன்னு… அப்படி எல்லாம் ஆக நான் விட்டிடுவேனா…”

 

“இசை உங்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் அவ அவ்வளவு முக்கியம் தான்டா…”

 

“இல்லை ராம் என் கவலை இசை பத்தி இல்லை… வேற…”

“வேற என்னடா??”

 

“சரண்…”

 

“வாட்??”

 

“எஸ் சரண் கண்ணா நினைச்சு தான் கவலையா இருக்கு. அவங்க இசையை எதுவும் செய்ய மாட்டாங்க ராம். அவளுக்கு ஒண்ணுண்ணா வது சும்மாயிருக்க மாட்டா…”

 

“எந்த எல்லைக்கும் போவா… ஆனா சரண்க்கு ஒண்ணுண்ணா எதையும் விடத் தயாரா இருப்பா… நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியுதா ராம்…”

 

ராமிடம் இப்போது கனத்த அமைதி. இப்படியும் செய்வார்களா என்ற எண்ணம், சரண் பற்றிய பிரியனின் முன்னெச்சரிக்கை அவனை யோசனைக்குள்ளாக்கியது.

 

வதனா என்ன செய்வாள் என்று அவனுக்குமே இப்போது யோசனையாய்!! பிரியனின் கூற்று சரியே என்று தோன்றியது அவனுக்கு.

 

அன்று முழுதும் அவனுடன் இருந்துவிட்டு மறுநாள் காலை ராம் உடன் போலீஸ் நிலையம் சென்று கம்பிளைன்ட் செய்து வந்தான் பிரியன்.

 

ராமின் கம்பெனி ஜிஎம்மை விசாரிக்க அவன் முதலில் மழுப்பி பின்னர் அதை தான் செய்ததாக ஒப்புக் கொண்டிருந்தான்.

எப்படி கேட்டும் அதற்கு காரணகர்த்தா யார் என்பதை மட்டும் அவன் கூறவேயில்லை. பணத்திற்காகவும் ராமின் பெயரை கெடுப்பதிற்காகவும் செய்ததாக மட்டுமே கூறினான் அவன்,

 

அதுவே அவன் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியது. பிரியன் அன்று மாலையே சென்னைக்கு கிளம்பினான். கிளம்பும் முன் சுகுணா அவனிடம் நெகிழ்ந்து பேசினாள்.

 

“நீங்க வரலைன்னா என்ன ஆகி இருக்கும் தெரியலை அண்ணய்யா…” என்று கண்கலங்க “நான் வரலைன்னாலும் ராம்க்கு நல்லது தான் நடந்திருக்கும்”

 

“நான் பெரிசா எந்த நல்லதும் செய்யலைம்மா… அவன் எனக்காக செஞ்சதுல ஒரு பங்கு கூட நான் திருப்பி செய்யலை…” என்றான்.

 

ராமிற்கே பிரியனின் பேச்சு ஆச்சரியம் தான் இது என்ன மாதிரி புரிதல் என்று அவனுக்குமே புரியவில்லை. ஆனால் பெருமையாக இருந்தது அவனுக்கு அக்கணம்.

 

முன்பே அவனிடம் நல்ல விதமாக பேசியிருக்கலாம் என்று அவனுக்கு தோன்றாமலில்லை. கடந்த நாட்கள் சென்றிருந்தால் என்ன இனி இப்படி ஒரு நட்பும் நண்பனும் கிடைப்பதரிது என்பதை உணர்ந்து உள்ளார்ந்து நட்பு கொண்டான்.

 

இரவே வீட்டிற்கு வந்திருந்தான் பிரியன். அதிசயத்திலும் அதிசயமாய் வதனா அவன் ஹைதராபாத்தில் இருக்கும் தருவாயில் இரு முறை அவனை அழைத்திருந்தாள் ராமை பற்றி விசாரிக்கவென.

 

பிரியன் ராமுடன் அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்ததால் அவன் கைபேசியை சைலன்ட் மோடில் வைத்திருந்தான்.

 

வதனா போன் செய்திருந்ததை கவனிக்கவேயில்லை. பிளைட்டில் ஏறிய பின்னே தான் கைபேசியை எடுத்து பார்த்திருந்தான் வதனாவின் அழைப்பும் இன்னும் சில தவறவிட்ட அழைப்புகளும்.

 

இனி வீட்டிற்கு சென்று தான் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதை மீண்டும் தன் சட்டைப்பையில் வைத்தான்.

 

அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்த பின்னும் கூட வதனா வீட்டிற்கு வந்திருக்கவில்லை. அவனிடம் இருந்த மற்றொரு சாவிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்திருந்தான் அவன்.

 

‘ஏதாவது வேலையாயிருக்கும் அவளுக்கு’ என்று எண்ணிக்கொண்டு சிறிது நேரம் அமைதியாய் இருந்தவனால் அரைமணி நேரத்திற்கு மேல் அப்படி இருக்க முடியவில்லை.

 

அவள் கைபேசிக்கு அழைப்பு விடுக்க இது அவள் முறை போலும் தோள்பையில் வைத்திருந்ததால் அவனின் அழைப்பை தவறவிட்டாள் அவள்.

 

‘பழி வாங்குறாளோ’ என்று எண்ணிக்கொண்டு அமைதியானான். அவள் வந்து இரவு சமையல் செய்ய வேண்டும் என்றால் தாமதமாகிவிடும் என்று எண்ணி வெளியில் சென்று வாங்கி வந்திருந்தான்.

 

பத்து மணி வாக்கில் சோர்வுடன் உள்ளே நுழைந்தாள் வதனா. வீட்டில் வெளிச்சம் தெரியவுமே புரிந்து போனது அவளுக்கு பிரியன் வந்துவிட்டான் என்று.

 

உள்ளே ஒரு இதம் பரவியது அவளுக்குள். அது பிரியன் வந்துவிட்டான் என்பதாலா அல்லது ராமை அவன் பார்த்துவிட்டு திரும்பி வந்ததாலா என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

 

லேசாய் அடைத்திருந்த கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தவள் ஹாலில் அமர்ந்திருந்தவனை பார்த்ததும் “எப்போ வந்தீங்க?? போன் பண்ணா எடுக்கவே இல்லை??” என்று நேரடியாக கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.

 

“நானும் கூட உனக்கு போன் பண்ணேன்…” என்று முடிக்காமல் நிறுத்தினான் அவன்.

 

“எப்போ??”

 

“கொஞ்சம் முன்னாடி…”

 

“சாரி போன் பேக்ல இருந்துச்சு கவனிக்கலை… இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம்…” என்று பதிலிறுத்தாள் அவள்.

“ஹ்ம்ம்…”

 

“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவேயில்லை. என்னாச்சு இந்த ராம்க்கு அவனும் இப்போ வரை எனக்கு போன் பண்ணவேயில்லை…”

 

“ஒரு சின்ன பிரச்சனை…” என்றவன் மெதுவான குரலில் அங்கு நடந்ததை சுருங்கக் கூறினான்.

 

“அவன் ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லலை?? எவளோ பெரிய லாஸ் அவனுக்கு… நம்மால எதுவும் செய்ய முடியாதா…” என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் பிரியன்.

 

பின்னே அவள் பேச்சில் தன்னையும் சேர்த்து சொல்லியிருக்கிறாளே என்று.

 

“அது சின்ன அமௌன்ட் இல்லை வது… தவிர ராம் அதை விரும்பவும் மாட்டான்… அவனோட பிரச்சனைகள் சரியாகிடும், அதுவுமில்லாம அவனா விழுந்து எழுந்து மேல வர்றது தான் நல்லது”

 

“பிசினஸ்ல எப்பவுமே சக்சஸ் மட்டும் இருக்காது, எல்லாமே இருக்கும். இது போல பிரச்சனைகள் இதுவரை அவனுக்கு வந்ததில்லை. இது புதுசு, அவனே அதை சரி செய்வான், மேலயும் வருவான்…”

 

“நீ அவனுக்கு ஆறுதலா இரு, அவங்ககிட்ட பேசு அது மட்டும் போதும்…”

வதனா இப்போது பிரியனை முறைத்தாள். “நீங்க என்ன சொல்றது அவன் என் பிரண்ட் அவனுக்கு ஒரு உதவி நான் செய்யக் கூடாதா…” என்றாள்.

 

“உன்னை உதவி செய்ய வேணாம்ன்னு நான் எங்க சொன்னேன்… இப்போ வேணாம்ன்னு தான் சொல்றேன், நான் அவனை எதுவும் கேட்டிருக்க மாட்டேன்னு நினைக்கறியா…”

 

“அவன் தன் முயற்சியில வெளிய வரணும்ன்னு நினைக்கிறான்… வருவான், நடந்ததுக்கு தக்க பதிலடி அவனே கொடுப்பான்… என்னால முடிஞ்ச உதவியா இதை செஞ்சது யாருன்னு அவனுக்கு காட்டிட்டேன்…”

 

“இனிமே அவன் பார்த்துப்பான்…” என்று முடித்தான் அவன்.

 

வதனாவிற்கு மனம் கேட்கவில்லை. பிரியன் அப்புறம் நகர்ந்ததும் ராமிற்கு அழைத்தாள். இத்தனை நாட்களாய் போனை எடுக்காதவன் அவள் அழைப்பை கண்டு உடனே எடுத்திருந்தான்.

 

வதனா எவ்வளவோ சொல்லியும் ராம் அவளின் உதவியை மறுத்தான். பின் சாதாரண விஷயங்கள் பேசி போனை வைத்தனர்.

 

அவனறையில் இருந்து வந்த பிரியன் அவளை பார்த்துக்கொண்டே ஹாலுக்கு வந்தான். ‘நான் சொன்னது தானே நடந்துச்சு’ என்பதாய் இருந்தது அவன் பார்வை.

நாட்கள் மெல்ல தன் போக்கில் நகர ஆரம்பித்தது. வதனா, பிரியனுடன் அந்த வீட்டில் இருக்க பழகிக்கொண்டாள்.

 

முன்பே இருவரும் ஒன்றாய் இருந்தது தான் என்றாலும் நீண்ட பிரிவிற்குக்கு பின் ஒன்றாய் ஒரே வீட்டில் இப்போது தானே இருக்கின்றனர்.

 

அதிகம் பேசிக்கொள்ளவிட்டாலும் என்னவென்றால் என்ன என்ற ரீதியில் வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்தது.

 

அன்று காலை வதனா சீக்கிரமாக அலுவலகம் செல்ல வேண்டும். சமையலறையில் நின்றுக் கொண்டு சத்தமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

 

“ஒருத்தி தனியா வேலை பார்க்குறான்னு யாருக்காச்சும் அக்கறை இருக்கா… நானே தான் எல்லாம் செய்யணுமா…”

 

“ஒரு காய்கறி வெட்டிக் கொடுக்க கூட இந்த வீட்டில யாருமில்லை…” என்று அவள் புலம்பிக் கொண்டிருந்தது வெளியில் சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் புரட்டிக் கொண்டிருந்தவனின் காதில் விழுந்தது.

 

அவன் ஒன்றும் உதவி செய்யாமல் எல்லாம் இருந்ததில்லை. வீட்டிற்கு தேவையானது அத்தனையும் வாங்கி வந்து கொடுப்பது எல்லாம் அவன் தான்…

 

சமையல் மட்டும் வதனாவே தான் செய்தாள். அந்த வீட்டிற்கு வந்த புதிதில் ஒரு தடுமாற்றம் இருந்தது. தனக்கு மட்டுமாக செய்துக்கொள்ள அவள் மனம் ஒப்பவில்லை.

 

அவனுக்கென்று செய்யவும் விருப்பமில்லை. அது தெரிந்தவன் போல் தான் ராம் ஹைதராபாத் சென்ற அன்று இரவு போன் செய்திருந்தான்.

 

ஒரே வீட்டில் இருந்துக்கொண்டு தேவையில்லாத பிகு செய்ய வேண்டாம் என்றும், வேலைகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்றும்.

 

இருந்தாலும் மறுநாள் ஒன்றும் செய்யாமல் தான் அலுவலகம் கிளம்பிச் சென்றாள். ஆனால் அன்று மாலை பிரியன் வெளியில் இருந்து மாவை வாங்கி வந்து அவனே தோசை சுட்டு சட்டினி எல்லாம் அரைத்து வைத்திருக்க லேசாய் ஒரு குற்றவுணர்ச்சி அவளுக்கு எழத்தான் செய்தது.

 

அது முதல் தன் வீம்பை கொஞ்சம் தளர்த்தி தானே சமையல் வேலைகளை பார்த்தாள். பிரியன் முதலில் வீட்டிற்கு வந்துவிட்டால் அவனே இரவு உணவிற்கு தேவையானவற்றை தயார் செய்து வைத்துவிடுவான்.

 

வதனா தன் போக்கில் புலம்புவதை கேட்டு எழுந்து சமையலறை வந்திருந்தான். “இன்னைக்கு நீ சீக்கிரம் ஆபீஸ் போகணுமா??” என்றான் கேள்வியாய்.

 

“ஹ்ம்ம்…”

“நீ போய் கிளம்பு, நான் சமையலை பார்த்துக்கறேன்…” என்றவன் அவள் வெளியேறவும் என்ன செய்திருக்கிறாள் என்று பார்த்து அதற்கேற்றார் போல் தயார் செய்தான்.

 

அவள் குளித்து முடித்து வரவும் அவளின் மதிய உணவை டப்பாவில் அடைத்து எடுத்து வைத்திருந்தான்.

 

காலை உணவிற்கு பொங்கல் சாம்பார் செய்து அதையும் தயாராய் டைனிங் டேபிளில் வைத்திருக்க ஒரு மெச்சுதலுடன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு சென்றாள் அவள்.

____________________

 

வி.கே.பி இல்லத்தில் வரகுணபாண்டியன் கூண்டில் அடைப்பட்ட புலியின் ஆவேசத்துடன் அங்குமிங்கும் நடைபயின்றுக் கொண்டிருந்தார்.

 

அவரின் மூன்றாம் மகன் குலசேகரன் அவர் முன் வந்து நிற்க “ஒரு வேலையை உருப்படியா முடிக்க உங்களுக்கு எல்லாம் துப்பில்லை, நீங்க எல்லாம் எதுக்குடா இருக்கீங்க??” என்று கத்தினார்.

 

“அப்பா அவன் எப்படி கண்டுப்பிடிச்சான்னே தெரியலை… நாம செட் பண்ணியிருந்த ஆளு அப்படி… அவன் கூடவே இருக்கற ஒருத்தன் தான்…”

 

“அந்த ராமோட சொந்தக்காரன் வேற அவன்… அப்படியிருந்தும் எப்படி அவனை ராம் கண்டுப்பிடிச்சான் புரியலைப்பா… பக்காவா எவிடன்ஸ் எடுத்து வைச்சிருக்கான்…”

 

“அந்த முட்டாளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கவா சொன்னேன் உன்னை… எப்படி கண்டுப்பிடிச்சான்னு கூட இன்னும் நீங்க கண்டுப்பிடிக்கலையா… என்ன தான்டா செஞ்சுட்டு இருக்கீங்க நீங்க எல்லாம்…”

 

“ஆயிரம் தான் இருந்தாலும் என்னை பிடிக்கலைன்னாலும் இந்தர் இது போல விஷயத்துல எல்லாம் ரொம்ப கவனமா இருப்பான்…”

 

“நீங்களும் இருக்கீங்களே… பேசாம இந்தரை வரச்சொல்லி என்ன ஏதுன்னு விசாரி…” என்று குலசேகரனிடம்.

 

தந்தை அப்படி சொன்னதும் அவரின் முகம் சற்று சுருங்கியது. “இந்தர் எப்படி வரமுடியும், கொஞ்சம் லாஜிக்கா யோசிங்க…”

 

“அதுவுமில்லாம சென்னையில அவளையும் அவனையும் கண்காணிக்க அவன் தான் இருக்கான்… அவனை பார்க்க சொல்றது எப்படி சரியா வரும்…” என்றார் அவர் இறுக்கமாய்.

 

“என்னமோ பண்ணி தொலைங்க… எனக்கு எங்க எப்படி தப்பு நடந்துச்சுன்னு தெரிஞ்சாகணும்… அப்போ தான் நாம திரும்ப அந்த தப்பை செய்யாம பார்க்க முடியும்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் அவர்.

 

குலசேகரன் கடுகடுத்த முகத்துடன் தனக்கு முந்தியவரான ராஜசேகரின் அருகில் வந்தார். “இவருக்கு நாம எல்லாம் புள்ளைங்களா தெரியலையா…”

 

“அந்த இந்தர் கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்குறான், அவனை ஆஹா ஓஹோன்னு புகழுறார்” என்று புழுங்கி தள்ளினார் அவர்.

 

“விடு சேகர் அப்பா எப்பவும் அப்படி தானே…” என்று தம்பியை சமாதானம் செய்தார் அவர்.

____________________

 

வதனா அன்று மாலை நேரமாகவே வீட்டிற்கு வந்திருக்க பிரியன் இன்னமும் வந்திருக்கவில்லை. இரவு உணவிற்கு தயார் செய்யலாம் என்று எண்ணி அவள் சமையலறை புகுந்திருந்தாள்.

 

பிரியன் ஏழு மணி போல வீட்டிற்கு நுழைந்தான். சமையலறையில் அவன் மனைவி உருட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது அவனுக்கு.

 

அவனறைக்கு சென்று குளித்து முடித்து வந்தவன் சமையலறையை எட்டிப்பார்த்தான்.

 

வதனா அவனுக்கு முதுகுக்காட்டிக் கொண்டு தீவிரமாய் காய்கறியை வெட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவலாம் என்று எண்ணிக் கொண்டு தான் பிரியன் உள்ளே சென்றான்.

 

“நான் வெட்டி தரட்டுமா??” என்று அவள் காதுக்கருகே கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் அவன் மேல் இடித்துக்கொண்டு சற்று தள்ளி நின்றாள்.

 

“எப்போ வந்தீங்க?? இப்படி தான் சொல்லாம கொள்ளாம வந்து நிப்பீங்களா??”

 

“நான் வந்து இருபது நிமிஷம் ஆகுது…”

 

“அது தெரியும் இங்க உள்ள வரும் போது இப்படி சத்தமேயில்லாம வந்து நிக்கறீங்களே??”

 

“எப்போ அதுக்கு என்ன செய்யலாம்??”

 

“ஒண்ணுமில்லை…” என்றவள் திரும்பிக் கொண்டாள்.

 

“நான் காய்கறி வெட்டி தரட்டுமான்னு கேட்டேன்…”

 

“வேணாம்…”

 

“ஆமா இப்போ வேணாம்ன்னு சொல்லிட்டு அப்புறம் ரூம்ல இருந்துகிட்டு புலம்பிக்கிட்டு இருப்பே… யாரும் உதவி பண்ணுறது இல்லைன்னு…” என்றான் அவன்.

 

வெட்டிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அவன் புறம் திருப்பிவிட்டாள், ‘நீயே செய்’ என்பது போல். அவன் பேசாமல் நின்றிருந்தான்.

 

பத்து நிமிடம் பார்த்திருந்தவள் அவன் எதுவும் செய்யாமல் நிற்கவும் அவனை திரும்பி முறைத்துவிட்டு தானே அந்த வேலையை செய்ய ஆரம்பித்தாள். “வெட்டித் தரேன்னு சொன்னது எல்லாம் வெட்டிப்பேச்சு தான் போல” என்ற முணுமுணுப்புடன்.

 

“நீ என்கிட்ட எந்த வேலையும் கொடுக்கலையே…”

 

“உங்ககிட்ட சத்தம் போட்டு சொல்லணுமோ…” என்று இடித்தாள்.

 

“சரி ரெண்டு பேரும் சேர்ந்து வெட்டுவோம்” என்றவன் அவள் பின்னே நின்றுக்கொண்டு அவள் கையை தன் கையுடன் சேர்த்து காய்கறியை நறுக்க ஆரம்பித்தான்.

 

வதனாவிடம் சற்றும் சலனமில்லை. அவனின் தொடுகையில் ஓர் கணம் அவளுக்குள் பழைய வதனா திரும்பியிருந்தாள்.

 

அவள் அப்படியே நிற்பது கண்டவன் என்ன நினைத்தானோ “வது…” என்றழைத்தவன் கத்தியை வைத்துவிட்டு அவள் இறுக்கி அணைத்திருந்தான் இப்போது.

 

அவள் கழுத்து வளைவில் முகம் பதித்தவன் அவள் காதில் மெல்ல “எவ்வளோ நாளாச்சு வது நாம இப்படி இருந்து… எத்தனை வருஷமாச்சு… என்னால எதையுமே மறக்க முடியலை தெரியுமா…” என்றவனின் குரலில் ஏக்கம் அப்பட்டமாய்.

 

“நீ இல்லாம நான் நானா இல்லை வது…” என்றவன் அவளை இன்னமும் இறுக்கி அணைத்தான்.

அவன் குரலில் தன்னுணர்வுக்கு வந்தவளுக்கு லேசாய் கோபம் எட்டிப் பார்த்தது. இப்படி அவனிடம் குழைந்து நிற்கிறோமே என்று.

 

தன் இயலாமையை கோபத்தை அவனிடத்தில் வேறு விதமாய் வெளிப்படுத்தினாள். “ஏன் வேற யாரும் உங்களுக்கு கிடைக்கலையா??” என்று கேட்டுவிட அவளை அப்படியே உதறினான் அவன்.

 

“சீய்!! உனக்கு எப்படி வது இப்படி எல்லாம் கேட்க தோணுது… அந்தளவுக்கு நான் தரம் தாழ்ந்து போயிட்டேன்னு நினைச்சியா…”

 

“உன்னைத் தவிர வேற பொண்ணு எப்பவும் என் வாழ்க்கையில இல்லை. என்னோட அன்பு இந்தளவுக்கு கொச்சையா எப்படி உன்னால நினைக்க முடிஞ்சது…” என்றவனின் முகத்தில் வேதனையின் சாயல்.

 

விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறியவன் சட்டையை மாட்டிக்கொண்டு கால் போன போக்கில் வெளியில் சென்றுவிட்டான்.

 

வதனா அந்த நிமிடம் அவன் தன்னைவிட்டு சென்றதை எல்லாம் மனதில் கொள்ளவில்லை… அவள் எண்ணம் முழுவதையுமே அவன் பேச்சே ஆக்கிரமித்திருந்தது.

 

எந்த ஒரு மனைவிக்குமே கணவன் தன்னிடம் நேசமாய், பிரியமாய், காதலாய் என்று பலவித வார்த்தைகளில் சொன்னாலும் அன்பாய் இருக்க வேண்டும் அவன் தன்னிடத்தில் என்று எதிர்பார்ப்பாள்.

வதனாவும் அதற்கு விதிவிலக்கல்லவே!! கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு பின்னான சந்திப்பு அவனுடன். தன்னையே அவன் மறக்க இதில் எத்தனையோ வாய்ப்புகள் இருந்திருக்கலாம், ஏற்பட்டிருக்கலாம்.

 

அத்தனையும் விடுத்து அவளுடனான அந்த ஒரு சிறு அணைப்பும் திருமணம் முடிந்த பின் இருவரும் ஒன்றாய் தனித்திருத்திருக்கும் போது நடந்த நிகழ்வுகளை அவன் இப்போது நினைவு கூர்ந்ததும் அவளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்றால் மிகையாகாது.

 

அவன் அணைப்பில் அந்த இறுக்கத்தில் அவளால் அவனை உணர முடிந்தது அவளைக் குறித்தான அவனின் தேடலை.

 

இந்த நிமிடம் அவனை முழுதாய் நம்பினாள் அவள். தன்னை அவன் வேண்டுமென்றே விட்டுச்சென்றிருக்க மாட்டான் என்று.

 

எதுவோ ஒரு காரணம் நிச்சயம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இப்போது அவளை சுற்றி சுற்றி வந்தது.

 

அவள் வேண்டுமென்றோ அவனை காயப்படுத்தும் நோக்கோடோ அந்த வார்த்தைகளை பேசியிருக்கவில்லை. அவளின் காயப்பட்ட மனதின் வெளிப்பாட்டில் தான் அப்படி ஒரு வார்த்தை உதிர்த்திருந்தாள்.

 

அதற்கு அவன் கொடுத்த பதில் அவளின் மனதின் குளிரத்தான் செய்திருந்தது. அவன் கோபித்து கொண்டு வெளியில் சென்றது வெகு நேரம் கழித்து தான் அவளுக்கு உறைக்கவே செய்தது.

 

அவன் வரவிற்காய் மிகச்சந்தோசமாய் ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள் அவள். அரைமணி நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தவன் அவள் முகம் பார்க்காது தன் அறை நோக்கிச் சென்றுவிட்டான்.

 

இன்னமும் சாப்பிட வராதவனின் அறையை நோக்கிச் சென்றாள். “சாப்பிட வாங்க…”

 

“வேணாம்…

 

“ஏன்??”

 

“ஏன்னு தெரிஞ்சே கேட்குறே??”

 

“இப்போ என்ன உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா??” என்றவளை வித்தியாசமாய் பார்த்தான்.

 

“என்ன வேணும் உனக்கு??”

 

“நீங்க சாப்பிட வரணும்…”

 

“நான் ஹோட்டல்ல சாப்பிட்டிருப்பேன்னு நினைச்சுக்க வேண்டியது தானே…” என்றவனின் பேச்சில் உள்ளர்த்தம் இருந்தது.

 

“நீங்க அப்படி சாப்பிடறவர் இல்லைன்னு தெரியும்…”

 

“தெரிஞ்சும் தானே பேசினே…”

 

“இப்போ என்ன பண்ணணும் நானு… நீங்க சாப்பிட வந்தா வாங்க இல்லனா போங்க… இன்னைக்கு நானும் பட்டினியாவே படுக்கறேன்…” என்று சட்டென்று கத்திவிட்டு நகர்ந்தாள்.

 

அவளால் தன் மனதை சட்டென்று அவனிடத்தில் காட்டிக்கொள்ள முடியவில்லை. பாழாய் போன மனது இன்னமும் அவள் காயத்தை முழுதாய் ஆற்றியிருக்கவில்லையே!!

 

வடுக்கள் மிச்சம் இருந்துக் கொண்டிருந்தது அதில். காலம் தான் அதை மாற்றும். அவன் அன்பு மட்டுமே அதை மறக்கடிக்கும்!!

 

பிரியன் இப்போது அவள் பின்னேயே எழுந்து வந்தான். “சாப்பிடலாம்…” என்றவாறே. அவள் ஒரு முறை நிமிர்ந்தவள் அவனை ஆழ்ந்து நோக்கினாள்.

 

கண்கள் இப்புறம் அப்புறம் நகரவில்லை. பிரியனே மலைத்துவிட்டான் காதலிக்கும் போது கூட இவள் இப்படி பார்த்திருக்கவில்லையே, இது என்ன மாதிரியான பார்வை என்று.

 

முதலில் அவனுக்கு ஆச்சரியம் தோன்றினாலும் பின் சுவாரசியமாய் அவளை பார்க்க ஆரம்பித்தான். வதனா சட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்டாள்.

தன் போக்கில் வேலைகளை பார்த்தாலும் அவள் பார்வை அவ்வப்போது அவன் மீது படிந்து மீண்டது தன்னையுமறியாமல்.

 

பிரியன் அதை உணர்ந்திருந்தாலும் மேற்கொண்டு அவள் கவனத்தை தன் புறம் திருப்ப நினைக்கவில்லை அவன்.

 

காத்திருப்பிற்கு ஓர்

அர்த்தம் கொண்டேன்

உன்னால் இன்று!!

மௌனத்திற்கு ஓர்

அர்த்தம் கொண்டேன்

உன்னால் இன்று!!

அன்பிற்கு ஓர்

அர்த்தம் கொண்டேன்

உன்னால் இன்று!!

 

Advertisement