அத்தியாயம் –14
“டேய்பவள் உன்னை எங்கெல்லாம் தேடுறது. நீ இங்கயா இருக்கே??” என்றவாறே அவனருகே வந்து அமர்ந்தான் ராகேஷ்.
“எதுக்கு நீ என்னை தேடினே??”
“ஏன்டா நான் உன்னை தேடக் கூடாதா??”
“அதான் கேக்குறேன் நீ என்னை என்ன விஷயத்துக்காக தேடினேன்னு??” என்றான் அவன்.
“சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு தேடினேன் அது ஒரு குத்தமாடா”
“நான் எவ்வளவு முக்கியமான வேலையில இருக்கேன் அதை வந்து டிஸ்டர்ப் பண்ணுற…” என்ற பிரியனின் பேச்சு மட்டும் தான் நண்பனிடத்தில்.
கண்களோ தொலைவில் நடந்து வந்துக்கொண்டிருந்த வதனாவின் வதனத்தைவிட்டு அகலவில்லை.
“தெரியும்டா இப்படியெல்லாம் நடக்கும்ன்னு அன்னைக்கே தெரியும். அதான் நீ சொன்னதும் நான் கேட்டேன்…” என்ற நண்பனின் குரலில் கலைந்தவன் திரும்பி பார்த்தான் ராகேஷை.
“மொச புடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்தா தெரியாதா” என்றான் அவன் தொடர்ந்து.
ஒன்றும் சொல்லாமல் சிரித்தவன் “அப்போ நீ என்னை நாய்ன்னு சொல்றியா??” என்றான்.
“இல்லைன்னு சொல்லிடுவியா என்ன??” என்றான் ராகேஷும் விடாமல்.
“எப்படி கண்டுப்பிடிச்சே??” என்றவன்பார்வைஇப்போது மீண்டும் தன்னவளின் புறம் திரும்பியிருந்தது.
“உனக்கு வந்த கோபத்தை பார்த்து தான்… எங்க நான் அவகிட்ட எதுவும் சொல்லிருவனோன்னு பைக் எடுத்திட்டு வந்து இடிக்க பார்த்தியே… அப்போவே கன்பார்ம் பண்ணிட்டேன்”
“ஹ்ம்ம்” என்று சொல்லிக்கொண்டே இன்னமும் பார்வையை விலக்காமல் இருந்தவனின் முதுகில் ஒன்று வைத்தான் ராகேஷ்.
“இப்படியாடா வெறிக்க வெறிக்க பார்ப்பே??”