Advertisement

விடு போதும்…

 

அது என்னோட அன்னைக்கு மனநிலை தான்… இன்னைக்கு என் கழுத்துல தாலி கட்டுங்கன்னு உங்ககிட்ட கேட்கும் போது எனக்கு அவமானம் எல்லாம் இல்லை…

 

அவ்வளவு சந்தோசம் தான் எனக்கு… வெட்கம் கூட வரலை எனக்கு… உரிமையா உங்ககிட்ட கேட்டேன்…

 

நம்ம கல்யாணத்துல எனக்கு நெறைய சங்கடங்கள்… அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை நான் கட்டிக்கிட்டேன்னு ஆரம்பிச்சு, அவளோட டிரஸ் எங்கம்மா என்கிட்டே கொண்டு வந்து இனி நீ இதை யூஸ் பண்ணிக்கோன்னு சொன்னது வரை எனக்கு அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு

 

சின்ன வயசுல எனக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாவே இல்லை… ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி வரை என் அக்கா திட்ட திட்ட அவளோட டிரஸ் எடுத்து போட்டுட்டு ஊர் சுத்துவேன்

 

ஆனா மத்த விஷயம் மாதிரி இதை என்னால எடுத்துக்க முடியலை… எனக்குன்னு ஆசைகள் கனவுகள் எல்லாம் இருந்துச்சு…

 

உனக்கு வரப்போற மாப்பிள்ளை பத்தி உன்னோட கனவை நான் தானே கெடுத்தேன்…என்றானவன்.

 

இல்லவேயில்லை… நம்ம கல்யாணம் வேணா ஏனோதானோன்னு நடந்திருக்கலாம்… ஆனா எனக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி என்னை புரிஞ்சவர் தானே எனக்கு மாப்பிள்ளையா கிடைச்சிருக்கார்…

 

அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை, அக்காவோட கல்யாணப் புடவை எல்லாம் எனக்குன்னு ஆனதை கூட ஒத்துக்க முடிஞ்ச எனக்கு தாலியை அப்படி நினைக்க முடியலை… அதுவும் அவளுக்காக தானே உங்க வீட்டில செஞ்சிருப்பீங்கன்னு ஒரு எண்ணம்…

 

பாரமா அது எப்பவும் என்னை உறுத்திட்டே இருந்துச்சு… உங்க மேல எனக்கும் பிரியம் இருக்குன்னு உணரும் போதெல்லாம் அந்த உறுத்தல் தான் என்னை உங்க பக்கத்துல வரவே விடாது…

 

நீங்க நெருங்கி வந்தப்போ ஏத்துக்கவும் முடியாம உங்களை விலக்கவும் முடியாம ஒரு மாதிரி நரக வேதனையா இருந்துச்சு எனக்கு…

 

ஆனா எல்லாத்தையும் ஒரு நொடியில மாத்திட்டீங்க நீங்க… வேண்டுதல்ன்னு சொல்லி அந்த தாலியை கோவில் உண்டியல்ல போட சொல்லி, எனக்காக புது தாலி வாங்கி அதை உங்க கையால கட்டினதை என்னால ஜென்மத்துக்கும் மறக்கவே முடியாது…

 

இந்த நிமிஷம் வரை எனக்கு நடந்ததை நம்பவே முடியலை…என்றவள் ஆனந்தத்தில் அவனை இறுக கட்டிக்கொண்டாள்.

 

அவன் முகம் முழுதும் முத்திரை பதித்து தானாய் அவன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டாள். பின் முகம் சிவக்க அவனிடமிருந்து விலகிநான் சொல்லாமலே என்னை புரிஞ்சு நீங்க எனக்காக தான் அதை செஞ்சீங்க… ஆமா தானே… ஆனா உங்களுக்கு எப்படி என்னை புரிஞ்சுது…

 

அவன் கைபேசியில் அவளும் மேக்னாவும் பேசிய அந்த உரையாடலை போட்டுவிட்டான் இப்போது. அதை பதிவு செய்த தருணத்தையும் அவளிடம் பகிர்ந்தான்.

 

அன்னைக்கு தான் உன் மேல எனக்கு ஒரு பெரிய பிடிப்பே வந்துச்சு ஜெய்…

 

அன்னைக்கு உங்கப்பா உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுக்கறேன்னு சொன்னப்போ நான் மறுத்ததுக்கு ஒரே காரணம் நீ தான்… மத்தப்படி எங்க வீட்டுல இருக்க எல்லாருக்கும் என் கல்யாணம் நிக்க கூடாதுன்னு தான் எண்ணம்…

 

ஆனா எனக்கு தான் மனசில்லை… எனக்கு தான் தெரியுமே உனக்கு என்னை பிடிக்காதுன்னு அந்த ஒரே காரணத்துக்காக தான் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்…

 

உங்கக்காவுக்கு என்னை பிடிச்சு தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்களோ இல்லையோ உன்னை கட்டாயப்படுத்தி தான் உங்கப்பா சம்மதிக்க வைச்சிருப்பார்ன்னு தோணிச்சு

 

எல்லாரும் சொல்ல சொல்ல வேணாம்ன்னு அதுக்காக தான் மறுத்தேன்… ஆனா அடுத்த சில நிமிஷத்துல நீ புயல் மாதிரி உள்ள வந்தே

 

எப்படின்னு தெரியலை… நீ கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்ட விதம் என்னை என்னவோ செஞ்சுது… என்னை வேற மிரட்டுனியா சிரிப்பு வந்துச்சு…

 

உன்னோட என் வாழ்க்கை சுவாரசியமா இருக்கும்ன்னு தோணிச்சு… வேற எதுவும் யோசிக்கலை… உன்னை உனக்காக தான் அந்த நிமிஷம் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்

 

உங்க அக்காகிட்ட பேசின அன்னைக்கு தான் நீ சொல்லாம கொள்ளாம எனக்குள்ள நுழைச்சிட்ட!! அப்புறம் தான் உன்னை சீண்டினேன்… உனக்கும் என்னை கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சதை உணர்ந்தேன்

 

ஆனா நீ இருக்கியே ராங்கி பிடிச்சவ… லேசுல எதையும் வெளிய காட்டிக்கலை… தள்ளி தள்ளி தான் போயிட்டு இருந்தே…

 

நானும் என் மனசுல இருக்கறதை சொல்ல முயற்சி பண்ணப்போ எல்லாம் தேவையேயில்லாம உங்க அக்காவை உள்ள இழுத்துவிட்டே

 

அப்படியே உன்னை இழுத்து நாலு அறை விடலாமான்னு தோணிச்சு அன்னைக்கு மழை பெஞ்சப்போ நீ பேசின பேச்சுக்கு

 

அப்புறம் லாட்ஜ்க்கு வந்து நிதானமா யோசிச்சப்போ உன்னோட மனநிலை கொஞ்சம் புரிஞ்சுது… உங்க அக்காவை மனசுல வைச்சு நான் உன்கிட்ட நெருங்கி வர்றதா நீ நினைக்கறியோ…

 

இல்லை நான் ஒரேடியா அப்படி எல்லாம் நினைக்கலை… ஆரம்பத்துல அப்படி தோணியிருந்தாலும் போக போக நான் அப்படி நினைக்கலை…

 

உங்களை எனக்கு பிடிக்க ஆரம்பிச்ச பிறகு அவளை காரணம் சொல்லி தான் நான் உங்ககிட்ட இருந்து தள்ளி இருக்க பார்த்தேன்…என்றாள் குற்றவுணர்வுடன்.

 

ஏன்??”

 

அது என்னமோ என்னால சட்டுன்னு உங்களோட ஒட்டவும் முடியலை… விலக்கவும் முடியலை, இது எதுவுமே உனக்குன்னு நிச்சயக்கப்பட்டதில்லைன்னு ஒரு உணர்வு உள்ள இருந்திட்டே இருந்துச்சு…

 

நீங்க எனக்குன்னு அந்த கடவுள் முடிவு செஞ்சிருப்பான் போல அதனால தான் இதெல்லாம் நடந்துச்சுன்னு என்னையே நான் கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்க முயற்சி பண்ணேன்

 

அப்போவும் இந்த தாலி விஷயம் மட்டும் தான் உறுத்திட்டு இருந்துச்சு…என்றவள்சரி நீங்க சொல்லுங்க…என்று அவனை தொடரச் செய்தாள்.

 

ராகவிற்கு அவளின் நிலை புரிந்தது. அவள் எண்ணம் தவறென்று சொல்லவில்லை, அது சரியில்லை என்று மட்டும் எண்ணிக் கொண்டான். அது அவளுக்குமே புரிந்து தானே இருந்தது. அன்றைய அவளின் மனநிலையை தானே அவள் சொன்னாள்.

 

உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா… உங்க அக்கா விஷயத்துல ஆரம்பித்துல இருந்தே ஒரே சொதப்பல் தான்… பொண்ணோட பேரு என்னன்னு கேட்டதுக்கு எங்க பாட்டி அப்போவே சூப்பரா சொதப்பிச்சு

 

பொண்ணு பேரு மேனகான்னு நானும் அந்த பேரை மனசுல பதிய வைக்க முயற்சி பண்ணிட்டு இருந்தேன்… உங்க வீட்டுக்கு நிச்சயம் பண்ண வர்ற அன்னைக்கு தான் தெரியும் உங்க அக்கா பேரு மேக்னான்னு…

 

இதென்னடா புது குழப்பம்ன்னு தான் அப்போ தோணிச்சு. ஆனா அதெல்லாம் விட அன்னைக்கு உன்னை பார்த்ததும் தோணிச்சு இந்த நிச்சயம் நடந்த மாதிரி தான்னு…

 

உங்க அக்கா சொன்னது ஒரு வகையில உண்மை தான்… அன்னைக்கு அவங்களை பார்க்கணும்ன்னு நினைச்சு வந்தவன் உன்னை தான் பார்த்திட்டு இருந்தேன்…

 

நீ எப்போ என்ன சொல்லி நிச்சயத்தை நிருத்துவியோன்னு… ஆனா அன்னைக்கு அப்படி எதுவும் நடக்கலை. கல்யாணம்ன்னு மனசுக்கு ஒரு சந்தோசம் கூட ஏனோ வரலை

 

அப்புறம் நடந்தெல்லாம் தான் உனக்கே தெரியுமே… ஒவ்வொரு முறை நான் நெருங்கி வர வர நீ விலகி விலகி போனே… அப்போ எல்லாம் செம கோபம் வரும் என்ன தான்டி உன் பிரச்சனைன்னு தோணும்…

 

கடைசியா அக்கா எல்லாம் வர்றாங்கன்னு உன்கிட்ட சொன்னப்போ நமக்குள்ள நடந்த பேச்சு வார்த்தை உனக்கு மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன்…

 

நீ எதையோ நினைச்சு குழம்பறேன்னு புரிஞ்சுது ஆனா என்னன்னு எனக்கு தெரியலை… நீயும் என்கிட்டே மனசுவிட்டு பேசவே இல்லை…

 

நான் என்ன தான் முயற்சி பண்ணாலும் நீ சொல்லாம நான் என்ன செய்ய முடியும் சொல்லு… நல்லவேளையா அதையும் புரிஞ்சுக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது சென்னை போனப்போ தான்…

 

சாதாரணமா தான் நீயும் அக்காவும் கோவில்ல பேசறதை கேட்டேன்… ஆனா அன்னைக்கு நான் உன்கிட்ட என்னன்னு கேட்டப்போ ஒரு பார்வை பார்த்திட்டு கத்திரிச்சா போல பேசினியா அது மனசுக்கு ஒரு மாதிரி உறுத்தலா இருந்துச்சு

 

அன்னைக்கெல்லாம் யோசிச்சு யோசிச்சு தூங்கவே இல்லை நானு… கடைசியா தான் தாலி விஷயமா இருக்குமோன்னு மனசுக்கு பட்டுச்சு…

 

நீ ஒண்ணும் சாமி எல்லாம் கும்பிடாதவ இல்லை… நல்லா விழுந்து விழுந்து சாமி கும்பிடுற ஆளு தான்… அன்னைக்கு அம்மா சொன்னாங்க என் பிறந்தநாளுக்காக கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டதும் எனக்கு தெரியும்

 

என்கிட்ட அதை பெரிசா காட்டிக்கிட்டு விஷ் பண்ணின்னு நீ எதுவும் செய்யலை தான்… ஆனா இதெல்லாம் ரொம்ப சிரத்தையா செஞ்சே…

 

சந்தியாக்கா செய்யறதை பார்த்தும் பேசாம இருந்தியா… அதுவே பெரிய உறுத்தலா இருந்துச்சு… சரி இதை கடைசி முயற்சியா செய்து பார்ப்போம்ன்னு தோணிச்சு…

 

உனக்காக மட்டுமில்லை எனக்குமே என்னவோ உனக்காக நானே தாலி செஞ்சு வாங்கணும் அதை மாத்திடணும்ன்னு உறுதியா தோணவே தான் அதெல்லாம் செஞ்சேன்…

 

புது புடவையும் எடுத்தேன், இங்க இருந்தே ஊர்ல சொல்லி வைச்சு நமக்கு தெரிஞ்சவங்க மூலமா தாலி வாங்க சொல்லிட்டேன்…

 

அப்போ கூட இது தான் உன் மனசுல இருக்கற நெருடல்ன்னு எனக்கு உறுதியா தெரியாது… எதுவா இருந்தாலும் இதுல சரியாகிடும்ன்னு ஒரு நம்பிக்கை…

 

உங்க நம்பிக்கை பொய்க்கலை தானே… முதல்ல வாங்கின தாலி சந்தியா அண்ணி தான் செஞ்சிருப்பாங்க…

 

எனக்கு பெரிசா தாலி சென்டிமென்ட் எல்லாம் இல்லை தான்… ஆனாலும் பாருங்க இது நீங்க எனக்காக செஞ்சது… மனசுல அப்படி ஒரு நிறைவா இருக்கு எனக்கு…என்றாள் உள்ளார்ந்து.

 

ஏன் ஜெய்?? மணி என்னாகுதுன்னு தெரியுமா??”

 

அவள் அதெல்லாம் கவனிக்காமல்ஆமா என்னை எதுக்கு ஆம்பிளை பேரு சொல்லி கூப்பிடுறீங்க??”

 

நீ தான் ரவுடி மாதிரி அடிக்கறியே உன்னை எப்படி கூப்பிடுறதாம்…என்று வம்பிழுத்தான் அவன்.

 

அவனை அவள் முறைக்க அவன் இப்போது சமாதானமாய்எல்லாரும் ஜெயான்னு கூப்பிடுறாங்க, நான் ஜெய் வித்தியாசமா கூப்பிட்டா தானே நல்லா இருக்கும்…

 

என்னோட அழைப்பு தனியா தெரிய வேணாமா… வேணாம்ன்னா சொல்லு நானும் எல்லார் மாதிரியே ஜெயா ஜெயா கூப்பிடுறேன்…

 

இல்லையில்ல வேணா இப்படியே கூப்பிடுங்க…

 

ஏன்டி டைம் என்ன இப்போ??”

 

அதெதுக்கு இப்போ கேட்டுகிட்டு இருக்கீங்க…

 

பர்ஸ்ட் நைட் அன்னைக்கு தான் நமக்கு ஒண்ணும் நடக்கலை… மறுபடியும் உன்னை கல்யாணம் பண்ணி நான் பிரம்மச்சாரியா தான் இருக்கணுமாடி… ஏன் ஒரு மனுஷனை போட்டு இந்த பாடு படுத்தறே நீ…

 

அதான் உனக்கு எல்லா விளக்கமும் கொடுத்திட்டேன்ல… மாச கணக்குல பக்கத்துல கூட வரவிடாம ஒட்டிவிட்டிட்டே இப்போ என்ன??” என்றான் பாவமாய் முகத்தை வைத்து.

 

அன்னைக்கு ஏதோ சொன்னீங்களே… ஹான் என்னது… ஞாபகம் வந்திடுச்சு… இது ரயில் சிநேகம் இல்லை நம்ம வாழ்க்கை பயணம் நாம பேச வேணாமா…

 

நான் என்ன உன் பின்னாடி அதுக்கா சுத்துறேன்னு ஒருத்தர் சொன்னாரே அந்த மகான் இப்போ எங்கே??” என்று வேண்டுமென்றே அவன் பின்னே தேடினாள் அவள்.

 

அதான் எல்லாம் பேசியாச்சுல… நம்ம வாழ்க்கைய தொடங்க வேணாமா… அன்னைக்கு இன்னொன்னும் சொன்னேன் அதெல்லாம் உனக்கு வசதியா மறந்திட்டியா…

 

உன்னை பார்த்தா வருஷத்துக்கு ரெண்டு பிள்ளை பெத்துக்கணும்ன்னு தோணுதுன்னு சொன்னேன்ல… அதை மறந்திட்டேஎன்று அவன் எடுத்து கொடுக்கவும்சீய்…என்று முகத்தை மூடினாள் அவள்.

 

முகத்தை மூடினா எப்படி??”

 

அதை எப்படி விலக்கணும்ன்னு நான் உங்களுக்கு பாடம் எடுக்கணுமா?? இதெல்லாமா சொல்லித் தருவாங்க…என்று அவள் கிண்டலடித்தாள்.

 

ஆஹா நீ மாஸ்டர்ஸ் வாங்கிடுவ தாயே…என்றவன் அவளை இறுக்கி அணைத்திருக்க இதழ் தீண்டலில் தொடங்கிய பயணம் சங்கமத்தில் முடிய தங்களின் வாழ்க்கை பயணத்தை அவர்கள் இனிதே தொடங்கினர்…

 

ஒரு வருடத்திற்கு பின்

———————————————

 

ஜெயக்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். தம்பதிகள் இருவரின் சந்தோசத்திற்கு பரிசாய் இரட்டை உயிரை சுமந்திருந்தாள் அவள்.

 

அவளின் அன்னை வள்ளியும், ராகவின் அன்னை மீனாட்சியும், பாட்டியும் என்று அவளை தரையில் விடாமல் பார்த்து பார்த்து கவனித்திருந்தனர்.

 

அவள் உண்டான நாளே அவளை பத்திரமாய் தேனிக்கு அழைத்து வந்துவிட்டார் மீனாட்சி. பாவம் ராகவ் தான் தேனிக்கும் மூணாருக்கும் வந்து போய் கொண்டிருந்தான்.

 

முன்பு அன்னையை பார்க்க வாரயிறுதியில் வருபவன் அவளின் உயிரை சுமக்கும் உயிரானவளையும் பார்த்து போக நான்கு நாட்கள் தேனி, மூன்று நாட்கள் மூணார் என்று ட்ரிப் அடித்துக் கொண்டிருந்தான்.

மேக்னாவிற்கும் கூட பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்பது எப்படியோ சரவணன் காதுகளை வந்தடைந்தது. ராகவிற்கு மேக்னாவே போன் செய்து சொல்லியிருந்தாள்.

 

யாருமில்லை தனக்கு என்று அவள் அழுதுக்கொண்டே சொல்லியிருக்க ஒரு முறை சரவணனின் காதுகளில் விஷயத்தை போட்டு விட எண்ணி ராகவ் அவரிடம் பேசினான்.

 

ஆனால் அவருக்கோ மனம் சற்றும் இளகி இருக்கவில்லை. தன் விருப்பம் இதுவென்று சொல்லியிருந்தால் கூட நானே செய்து விட்டிருப்பேன், இப்படி கழுத்தறுத்து சென்றவளை தன்னால் எப்போதும் மன்னிக்க இயலாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

 

வள்ளிக்கு கொஞ்சம் மகளை பார்க்க வேண்டும் என்று மனது அடித்துக்கொண்டது. சரவணன் ஒரு முறை மனைவியிடமே சொல்லிவிட்டார், உனக்கு விருப்பமென்றால் சென்று பார்த்துவிட்டு வா என்று…இந்தளவிற்கு இறங்கி சரவணன் வந்திருக்க வள்ளிக்கு ஏனோ அதன்பின் கணவரை புறக்கணித்து மகளை பார்க்க செல்ல விருப்பமில்லை.

 

இதோ ஜெயக்னாவும் கருவுற்றாள். மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்பட்டிருக்க மருத்துவர் அறுவைசிகிச்சை என்று முன்பே சொல்லியிருந்தார். அவள் ஆபரேஷன் தியேட்டர் சென்று நொடிகள் நிமிடங்களாய் கடந்திருக்க இரு குழந்தைகளை கைகளில் ஏந்திக் கொண்டு செவிலியர் இருவர் வந்தனர்.

 

ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் ஒட்டுமொத்த சந்தோசத்தையும் ஒரே நாளில் கொடுத்திருந்தனர் அச்சின்னஞ்சிறு சிசுக்கள். ஜெயக்னா அறைக்கு மாற்றப்பட்டிருக்க ராகவ் அவளருகில் இப்போது.

 

தங்களின் காதல் பரிசை கைகளில் ஏந்தியிருந்தவன் தன்னவளை பெருமிதமாகவும் அன்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த நிமிடம் அவள் மீது இன்னமும் காதல் பெருக அதையே அவன் கண்களும் பிரதிபலிக்க அதில் வெட்கமாகி ஜெயக்னா அவன் மீதே சாய்ந்துக் கொண்டாள்.

 

ஜெய் பார்த்தியா என் ஆசைப்படி ரெண்டு பேபி பிறந்தாச்சு… இனி அடுத்த வருஷமும் இதே மாதிரி ரெண்டு பேபி… அப்புறம் என் டார்கெட் கம்ப்ளீட் ஆகிடும்என்று மனைவியை பார்த்து கண் சிமிட்டினான்.

 

ஏன்டா நான் என்ன பிள்ளை பெத்துக்கற மிஷினா… உனக்கு இன்னும் ரெண்டு வேற கேக்குதா…என்று முறைத்தவளின் முறைப்பில் நிச்சயம் கோபமில்லை.

 

உனக்கு தான் எங்கம்மா உங்கம்மான்னு ரெண்டு பேரும் வேலை பார்க்குறாங்களே அப்புறமென்ன??” என்றான் அவனும் விடாது.

 

அப்போ பெத்துக்கறது யாராம்…

என் கண்ணுல்ல என் செல்லம்ல இன்னும் இரண்டே இரண்டு தான்…என்றவனின் தோளில் செல்லமாய் அவள் அடிபோடஉன்னை அப்படி கஷ்டப்படுத்துவேனாஎன்ற பார்வை பார்த்து அவளை தன் மீது சாய்த்துக் கொண்டானவன்.

 

கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் மெய்யன்று என்று புரிந்த இரு ஜீவன்களும் விட்டுக்கொடுத்து புரிதலுடனும், ஊடலுடனும், கூடலுடனும் தங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி இனிதே வாழ வாழ்த்தி விடைபெறுவோம்…

 

கோடையாய்

நீ என்னை

சுட்டாலும்

நேர்மாறாய்

இளவேனிலாய்

உன் மனம்

கார்காலமாய்

உன் நினைவு

மண் வாசனையாய்

வீசிப் போக

என் மனவானில்

நீ என்றும்

நிலவாய்

என் நிலவாய்!!

 

 

Advertisement