Advertisement

அத்தியாயம் – 9

 

மையிருட்டாய் காட்சியளித்தது அந்த மாலை பொழுது. சோவென்ற மழை கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் ஆரம்பித்த மழை இன்னமும் விட்டபாடில்லை.

 

வீடுகளில் மின்சாரம் முற்றிலுமாய் துண்டிக்கப்பட்டிருந்தது. வீட்டில் தனியே இருந்த ஜெயக்னாவிற்கு பயம் கூடியது.

 

கையில் இருந்த போன் சார்ஜ் இல்லாமல் அணைந்து போனது. தனியாக இருப்பதற்கு எல்லாம் ஜெயக்னாவிற்கு பயமில்லை, ஆனாலும் இந்த சூழ்நிலை அவளை பயமுறுத்தியது.

 

கொட்டோ கொட்டோவென்று கொட்டிய மழை, கும்மிருட்டு, பழக்கமில்லாத ஊர், யாருமற்ற தனிமை இது தான் அவளை கொஞ்சம் கலவரப்படுத்தியது.

 

வீட்டில் ஒரு லேண்ட்லைன் போன் இருந்தது. ராகவ் இப்போது லாட்ஜில் இருப்பான், ஆனால் அவளிடம் இப்போது அவனின் எண் இல்லை. அது தான் போன் அணைந்து போய்விட்டதே!!

 

அவளுக்கு மனதில் பதிந்த எண்களில் யாருக்கு அழைத்தால் அவன் எண்ணை வாங்கலாம் என்று எண்ணம் வந்ததும் முதலில் தோன்றியது அவள் தந்தை முகமே.

 

அவருக்கு போன் செய்யலாமா வேண்டாமா என்ற பெருத்த குழப்பத்தை அடித்து வீசிய மழை புறந்தள்ள அவருக்கு அழைத்தாள்.

 

“அப்பா ஜெயா பேசறேன்”

 

“சொல்லும்மா ஜெயா எப்படி இருக்கே?? மாப்பிள்ளை எப்படி இருக்கார்??”

 

“ஹ்ம்ம் நல்லாயிருக்கோம்” என்று ஒற்றை வரியில் இருவரின் நலத்தையும் சொன்னவள் “அப்பா எனக்கு அவரோட நம்பர் வேணும்” என்றாள்.

 

“என்ன??”

 

“உங்க மாப்பிள்ளையோட போன் நம்பர் வேணும்ப்பா…” என்றாள் அவருக்கு புரியும்படி.

 

“என்ன ஜெயா விளையாட்டு இது?? மாப்பிள்ளை நம்பர் தெரியாதா உனக்கு… அவர் கூட எதுவும் பிரச்சனையா??” என்று கண்டிப்பான குரலில் அவர் கேட்கவும் அவளுக்கு சலிப்பாய் இருந்தது.

 

‘ஆமா அவன் கூட புதுசா வேற பிரச்சனை பண்றாங்க… இருக்கறது போதாதா… இவரு வேற…’ என்று நினைத்துக் கொண்டு “அப்பா நான் மூணார்ல தான் இருக்கேன், எங்க வீட்டில”

 

“இங்க காலையில இருந்து மழை, கரண்ட் வேற இல்லை… போன் வேற சுவிட்ச் ஆப் ஆகிட்டு… உங்க மாப்பிள்ளை நம்பர் போன்ல தான் இருக்கு… அவர்க்கு போன் பண்ணணும்ன்னா எனக்கு நம்பர் வேணாமா”

 

“இன்னும் அவர் நம்பர் மனப்பாடமா எல்லாம் எனக்கு இல்லை. உங்க நம்பர் தான் ஞாபகத்துல இருந்துச்சு அதான் உங்களுக்கு போன் பண்ணேன்… நீங்க என்னமோ நீளமா விளக்கம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க…”

 

‘ஓ!! இதுக்கு தான் நம்பர் கேட்டாளா!!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவரும் மருமகனின் எண்ணை கொடுத்தார்.

 

“நான் வேணும்ன்னா போன் பண்ணி பண்ணவா மாப்பிள்ளைக்கு??”

 

“ஏன் என் புருஷனுக்கு நான் கால் பண்ண மாட்டேனா… நானே பண்ணிக்கறேன், நீங்க வைங்க…” என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.

 

இப்போது ராகவிற்கு போன் செய்தாள் வீட்டு எண்ணில் இருந்து. வீட்டின் அழைப்பை கண்டதுமே அவள் தான் செய்திருப்பாள் என்று புரியவும் போனை காதில் வைத்தவன் “ஹ்ம்ம் சொல்லு…” என்றிருந்தான் இப்போது.

 

“எப்போ வீட்டுக்கு வருவீங்க??”

 

‘இதென்னடா என்னையும் ஒரு மனுசி விசாரிக்குறா…’ என்று கொஞ்சம் ஆச்சரியம் தான் அவனுக்கு. பின்னே அவள் இங்கு வந்து பத்து நாட்கள் ஓடிவிட்டது.

ஒரு நாளும் இப்படியெல்லாம் போன் செய்து கேட்டதில்லையே. ராகவ் பகலில் வீட்டிற்கு வந்து போனாலும், பெரும்பாலான இரவை அவன் லாட்ஜில் தான் கழித்தான் அவள் இங்கு வந்த இத்தனை நாளில்.

 

அவளும் அதற்கெல்லாம் பெரிதாய் கண்டுக் கொண்டதில்லை. இன்று அதிசயமாய் விசாரிக்கிறாளே என்று தான் அவன் யோசனை.

 

“ஏன் என்னாச்சு??”

 

அவன் அப்படி கேட்கவும் அவளுக்கு ஏறிக் கொண்டது. “வரமுடியுமா?? முடியாதா??”

 

“என்ன விஷயம்?? வீட்டுக்கு யாராச்சும் வந்திருக்காங்களா?? இல்லை யாரும் போன் பண்ணாங்களா??” என்றான் அவன்.

 

“யாராச்சும் வீட்டுக்கு வந்தாலோ இல்லை போன் பண்ணாலோ தான் வருவீங்களா… இங்க ஒருத்தி இருக்கேன்னு நினைப்பிருக்கா உங்களுக்கு??”

 

“காலையில இருந்து இங்க கரென்ட் இல்லை… மழை விடாம அடிச்சு ஊத்துது… கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா வீட்டில ஒருத்தி தனியா இருப்பாளே எப்படி இருப்பான்னு” என்று போனிலேயே சத்தமாய் பேசினாள்.

 

‘தனியா இருக்க பயமா அதுக்கு தான் கூப்பிடுறா போல’ என்று புரியவும் “அதுக்கு நான் என்ன பண்ண முடியும்…” என்று வேண்டுமென்றே கொஞ்சமும் அலட்டாமல் கேட்டான் அவன்.

 

“இங்க வந்து இத்தனை நாள்ல என்னைக்காச்சும் நீங்க ஏன் வரலைன்னு கேட்டிருக்கேனா… லாட்ஜ்ல தான் நீங்க இருப்பீங்கன்னு அத்தை சொன்னாங்க பேசாம தானே இருந்தேன்…”

 

“அதே தான் நானும் கேட்கிறேன்… இங்க வந்து இத்தனை நாள்ல ஒரு நாள் கூட நீ கேட்டதில்லை… இப்போ மட்டும் என்ன புதுசா… ஒரு வேளை நீ கேட்டிருந்தா வந்திருப்பேனோ என்னவோ” என்று நிறுத்தினான் அவன்.

 

“இப்போ என்ன நீங்க வர முடியாதா… இங்க எனக்கு எதாச்சும் ஆனா கூட பரவாயில்லை அப்படி தானே… ஒருத்தியை கூட்டிட்டு வந்தோமே இருக்காளா இல்லையான்னு கூட உங்களுக்கு அக்கறை இல்லை அதானே…”

 

“நான் சாப்பிட்டேனான்னு கூட உங்களுக்கு கவலையில்லை… அவ்வளோ தானே, இதுக்கு தான் என்னை கல்யாணம் பண்ணீங்களா… வேண்டாம் யாரும் வரவேணாம்…” என்று சொல்லி பட்டென்று போனை வைத்துவிட்டாள் அவள்.

 

‘அச்சோ இவ சாப்பிடலையா… அவ எப்படின்னு தான் எனக்கு தெரியுமே, நானும் எதுவும் கேட்காம இருந்திருக்க கூடாது…’ என்று தோன்றியது அவனுக்கு இப்போது.

போனை எடுத்து அவளுக்கு டயல் செய்தான். முதல் ரிங்கிலேயே எடுத்துவிட்டாள் அவள். “நான் இப்போ வீட்டுக்கு கிளம்பி வர்றேன்…”

 

“ஒண்ணும் வேணாம்…” என்றாள் பிடிவாத குழந்தையின் குரலாய்.

 

“வர்றேன்… இங்க இருந்து நைட்க்கு உனக்கு டின்னர் எடுத்திட்டு வர்றேன்… உனக்கு என்ன பிடிக்கும்??”

 

“ஆமா எனக்கு பிடிச்சது தான் கொடுக்குறா போல…” என்று அவள் முணுமுணுப்பாய் பேசியது அவன் காதில் விழத்தான் செய்தது.

 

“மத்த விஷயம் எனக்கு தெரியாது. உனக்கு பிடிச்சதை இங்க சமைக்க சொல்லி என்னால கொண்டு வரமுடியும்…”

 

“என்ன வேணும்ன்னு சொல்லு, லேட் ஆனா என்னால இந்த மழையில வர முடியாம போய்டும் சீக்கிரம்” என்று அவசரப்படுத்தவும் அவளுக்கு பிடித்ததை சொன்னாள்.

 

“இங்க ரொம்ப இருட்டா இருக்கு… எமர்ஜென்சி லைட் இல்லையா??”

 

“நீ வந்ததுனால தான் இப்போ அந்த வீடே புழக்கத்தில இருக்கு… அதுனால அங்க அதெல்லாம் இல்லை… இங்க இருக்கு, நான் வரும் போது எடுத்திட்டு வர்றேன்… அதுவரை மெழுகுவர்த்தி யூஸ் பண்ணிக்கோ”

“அதை நான் எங்க போய் வாங்க??”

 

‘இது வேறயா…’ என்று எண்ணியவன் “அப்போ என்ன தான் செஞ்சே இவ்வளோ நேரம்??”

 

“விளக்கு ஏத்தி வைச்சிருக்கேன்… அந்த வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு…”

 

“சரி நான் ஒரு அரைமணி நேரத்தில வந்திடறேன்” என்றுவிட்டு போனை வைத்தான் அவன்.

 

சொன்னது போலவே அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தான் அவன். அவன் வரும் வழியெங்கும் இருட்டு தான், ஜீப்பின் வெளிச்சத்தில் தான் வீடு வந்து சேர்ந்திருந்தான் அவன்.

 

லாட்ஜிற்கும் வீட்டிற்கும் கொஞ்சம் தான் தொலைவு என்பதால் அவனால் உடனே வரமுடிந்தது. லாட்ஜில் ஹெட் குக்கை அழைத்து இரவு பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான்.

 

இவன் ஜீப்பின் ஒளி கண்டு வேகமாய் வந்து வாசலில் நின்றிருந்தாள் ஜெயக்னா.

 

ராகவ் தானே இறங்கி வந்து கேட்டை திறப்பதற்குள் முழுவதுமாய் நனைந்து போனான். வந்தது அவன் வண்டி என்று தெரிந்ததும் அவளுக்குள் கொஞ்சம் நிம்மதி இப்போது.

 

ராகவ் வண்டியை கொண்டு வந்து உள்ளே விட்டு கேட்டை அடைத்துவிட்டு வரவும் ஜெயக்னா வேகமாய் வந்து அவனருகில் நின்று கொண்டாள் உரசியவாறே.

 

வெகு நேரமாய் தனியே இருந்ததும் பொழுது போவதற்கென்று எதுவும் இல்லாது போனதும் தனிமை அவளை கொன்றதே உண்மை.

 

ராகவ் வந்தது அப்படியொரு சந்தோசம் அவளுக்குள். இருளில் வேறு காலில் எதுவோ ஓடுவது போன்றதொரு உணர்வு, இது மலைப்பிரதேசம் வேறு. எதுவாது இருக்கும் என்ற எண்ணம் வேறு அவளுக்கு.

 

ராகவ் வண்டியில் இருந்து இரவு உணவையும் எமர்ஜென்சி லேம்பையும் எடுத்து வந்தான். லேம்பை ஆன் செய்து அவன் உள்ளே நடக்க ஜெயக்னா அவனை நெருங்கி நடந்து வந்தாள்.

 

அவனுக்கு தான் சற்று தர்மசங்கடமாய் இருந்தது அவளின் இந்த ஒட்டுதல், தடுக்கவும் முடியவில்லை. “இதுல சூப் இருக்கு, கொஞ்சம் குடிச்சுட்டு இரு. நான் குளிச்சுட்டு வந்திடறேன்” என்று நகரப் போனவனின் சட்டையை பிடித்திழுத்தாள்.

 

“என்ன??” என்றான் அவன் திகைத்து.

 

“நானும் வர்றேன்…” என்று அவள் சொல்லவும் லேசாய் சிரிப்பு எழுந்தது அவனுக்கு. புரிந்து தான் சொல்கிறாளா என்று.

 

சொல்லி முடித்த பின்னே தான் அவளுக்கும் புரிந்தது போலும். ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்து “இல்லை தனியா என்னைவிட்டு…” என்று சொல்ல வந்து முடிக்காமலே விட்டாள், பேசுவது எல்லாம் அனர்த்தமாய் போகிறது என்று உணர்ந்து.

 

“சரி எனக்கு கொஞ்சம் ஹாட் வாட்டர் வைச்சு கொடுக்கறியா… ரொம்ப குளிரா இருக்கு…” என்று அவன் சொல்லவும் எமர்ஜென்சி லேம்ப்பை தூக்கிக்கொண்டு சமையலறைக்கு சென்றாள்.

 

அடுத்த பதினைந்து நிமிடத்தில் வெந்நீர் தயாராகிவிட “ரெடி…”

 

“நான் வந்து எடுத்துக்கறேன்…”

 

“இல்லை நான் கொண்டு வர்றேன்… நீங்க இந்த லைட் மட்டும் எடுத்துட்டு வாங்க…” என்று சொல்ல அவன் முன்னே நடந்தான், இவள் பின் தொடர்ந்தாள்.

 

குளியறையில் நீரை ஊற்றிவிட்டு எமர்ஜென்சி லேம்ப்பிற்காய் கையை நீட்டினாள் அவள்.

 

“உன்கிட்ட இதை கொடுத்திட்டா நான் எப்படி குளிக்கறதாம்…”

 

“அப்போ நான் மட்டும் எப்படி வெளிய இருப்பேன்… எண்ணை தீர்ந்து போய் விளக்கும் அமந்து போச்சு…”

 

“நீ கட்டில்ல அந்த பக்கம் திரும்பி உட்காரு… லைட் வெளிய இருக்கட்டும் நான் டோர் லாக் பண்ணாம குளிக்க போறேன்… திரும்பி பார்த்திடாதே…” என்று கண் சிமிட்டி சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்.

 

“இவரு பெரிய மன்மதன், இவரு குளிக்கறதை வேற பார்க்கறாங்க…” என்று நொடித்துவிட்டு அவன் சொன்னது போலவே கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

அவன் குளித்து வெளியில் வரவும் அவன் வரவை உணர்ந்தவள் அது தான் வந்துவிட்டானே என்று எண்ணி கட்டிலில் இருந்து வேகமாய் எழவும் அவள் காலுக்கடியில் எதுவோ ஓடவும் சரியாக இருக்க “அம்மா” என்று கத்திக்கொண்டே வேகமாய் வந்து ராகவின் மீது ஒட்டிக்கொண்டாள் அவள்.

 

சற்று முன் தான் குளித்து வந்திருந்தவன் அப்போது தான் நைட் பேண்ட் ஒன்றை அணிந்திருந்தான். வெற்று மார்புடன் தானிருந்தான் இன்னமும்.

 

ஜெயக்னா தானாய் வந்து அணைத்து நிற்கவும் அவன் உடலில் அதிர்வலைகள். அவள் அதெல்லாம் உணர்ந்தது போலில்லை.

 

“அங்க என்னவோ ஓடுது…” என்று கண்களை இறுக மூடி அவனை அணைத்திருந்தாள்.

 

“எங்க??” என்றவன் கொஞ்சம் இயல்பாக காட்டிக் கொள்ள முனைந்தான்.

அவள் கட்டிலின் கீழே கையை காட்டவும் “வா…” என்று அவளை தள்ளி நிறுத்த அவளோ இன்னமும் நெருங்கி நின்றாள் அவனை.

 

அவளின் அருகாமை ஏனோ அவனை மேலும் மேலும் சோதிக்கவே செய்தது. அவளை மீண்டும் தன்னில் இருந்து பிரித்தான்.

 

“எங்க??” என்று அவள் முகம் பார்க்க கண்ணில் பயத்துடன் நடுங்கும் குளிரில் உதடுகள் துடிக்க “அங்க??” என்று அவள் கைகாட்டிய விதம் அவனை எதுவோ செய்தது.

 

அவள் காட்டிய திசையில் பயணிக்க வேண்டிய அவன் கண்கள் இப்போது பயணம் செய்தது அவள் முகத்தில்.

 

அன்றை விட இன்று இன்னும் அதிக நெருக்கமாய் நின்றிருந்தவளின் முகத்தையே ஆழ நோக்கினான்.

 

ஜெயக்னா அவனிடத்தில் பேச்சில்லாது போகவும் இறுக மூடியிருந்த கண்களை திறந்து அவனை பார்க்க அருகாமையில் அவன் முகம்.

 

அவன் மூச்சுக்காற்று அவள் மேல் படுவது ஏனோ இதமாய். மொழியில்லா மௌனம் இருவரிடத்திலும்.

 

அவள் அமைதி அவனுக்கு தைரியத்தை கொடுத்ததுவோ?? இல்லை அடிக்கும் மழையும் ஊதல் காற்றும் அவளை அணைக்க தூண்டியதோ?? ராகவ் யோசிக்காமல் இடைவெளி குறைத்திருந்தான் தன் அணைப்பில்.

 

எவ்வளவு நேரம் அந்நிலை நீடித்ததோ ஜெயக்னாவும் அந்த நிலையை விரும்பியதாகவே தோன்றியது அவனுக்கு.

 

அப்போது அறையில் பளீரென்ற விளக்கின் ஒளியில் அவர்கள் நிலை உணர்ந்து ராகவின் பிடியில் இருந்து உதறினாள் அவள்…

 

அவன் முகத்தை கூட பார்க்காமல் வேகமாய் அறையை விட்டு வெளியேறினாள். வெளியில் மழை சற்று ஓய்ந்திருந்தது போலும், அதனாலே மின்சாரம் மீண்டும் வந்திருந்தது போல.

 

வெளியில் நின்றிருந்த மழை இப்போது அவள் உள்ளத்தில். இதயத்தின் ஓசை பாலம் கடந்த ரயிலை போல தடக் தடக் என்று வேகமாய் அதிர்ந்தது.

 

ராகவ் பனியனை எடுத்து அணிந்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் வர அவனை கண்டதும் அவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது…

 

இதயம் இரண்டாக

உருவம் இரண்டாக

பார்வை மட்டும்

ஒன்றானதே இனி

நம் வாழ்வும்

ஒன்றாகுமோ!!

Advertisement