அத்தியாயம் – 5

 

சரவணன் வந்து கதவை ஓங்கி ஒரு மிதி மிதிக்கவும் கதவு திறந்துக் கொண்டது. உள்ளே யாருமில்லை என்றதும் அவர் நெஞ்சில் பாரம் ஏறியது.

 

வீட்டில் இருந்து கிளம்பும் போது கூட ஒன்றும் சொல்லவில்லையே அவள்.

 

இப்போது என்ன நடந்திருக்கும் எங்கே சென்றிருப்பாள், யாரும் கடத்தியிருப்பார்களா, சிறு குழந்தை அல்லவே அவள் என்று அவரின் போலீஸ் மூளை நாலாபுறமும் யோசித்தது.

 

மகள் காதல் வயப்பட்டிருந்தால் கண்டுப்பிடிக்க முடியாமல் போயிருக்க முடியாது என்ற உறுதி இருந்ததால் அவர் அந்த எண்ணத்திற்கு மட்டும் போகவேயில்லை.

 

யாரும் அறியாமல் மண்டபம் முழுக்க பெண்ணை சல்லடையாய் சலித்து முடித்து சோர்வுடன் அறைக்குள் வந்து அமர்ந்தவரின் எதிரில் நின்ற ஜெயக்னாவின் மீது தான் அத்தனை கோபமும் அவருக்கு திரும்பியது.

 

“ஆரம்பத்துல இருந்தே இந்த கல்யாணம் வேணாம் வேணாம்ன்னு அபசகுனமா பேசிட்டே இருந்த, இப்போ உன் எண்ணம் போல நின்னு போச்சா… உனக்கு சந்தோசம் தானே!!” என்று பாய்ந்தார் அவள் மேல்.

 

“நான் என்ன செஞ்சேன் என் மேல எதுக்கு பாயறீங்க? அப்போவே சொன்னேன் வேணாம்ன்னு அன்னைக்கே நிறுத்தியிருந்தா இந்தளவுக்கு வந்திருக்காதுல” என்று சொல்லி அவரிடம் அடியை வேறு பெற்றுக் கொண்டாள் அவள்.

 

“பொண்ணு கூட இவளை அனுப்பி வைக்க சொன்னா, இவ ஏதோ சொல்றான்னு நீயும் கூட சேர்ந்து ஜால்ரா போட்டியே இப்போ அவ போய்ட்டா, எங்க போனான்னு தெரியலை…” என்று மனைவியையும் விட்டு வைக்காமல் கத்திக் கொண்டிருந்தார் அவர்.

 

அவர் கைபேசி வெகு நேரமாய் உறுமிக் கொண்டிருந்தது. வைபிரேஷன் மோடில் இருந்ததாலும் அவர் இருந்த டென்ஷனிலும் அவர் அதை கவனிக்கவில்லை.

 

இப்போது கவனித்தவர் ‘இவன் எதற்கு போன் செய்கிறான்’ என்று எண்ணி கட் செய்தார். ஆனாலும் தொடர்ந்து அழைப்பு வரவே மேலும் இரண்டு முறை கட் செய்தவர் இம்முறை போனை அட்டென்ட் செய்தார்.

 

“எதுக்கு செல்வம் இப்போ கால் பண்ணுறே… நான் என் பொண்ணு கல்யாண டென்ஷன்ல இருக்கேன். எதுவா இருந்தாலும் இரண்டு நாள் கழிச்சு பேசறேன்” என்று சொல்லியவர் போனை வைக்க போக எதிர்முனை “ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க” என்றது.

 

“என்ன??”

 

“மேக்னா என் கூட தான் இருக்காங்க… நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்…” என்று மின்னாமல் முழங்காமல் இடியை இறக்கினான் அவன்.

 

“என்ன?? என்ன சொன்னே??”

 

“சார் உண்மை தான் சொன்னேன்…”

 

“நீ பொய் சொல்ற… மேக்னா இங்க தான் இவ்வளோ நேரம் இருந்தா, இப்போ…” என்று ஆரம்பித்தவர் ஒன்றும் சொல்லாமல் நிறுத்திவிட்டார்.

 

“இப்போ அங்க இல்லை… ஒரு நிமிஷம் சார் அவகிட்ட கொடுக்கறேன்” என்றான் அவன்.

 

சரவணனுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை. தன் மகள் இப்படி செய்திருப்பாள் என்று.

 

“அப்பா…” என்ற குரல் கேட்கும் முன் நொடிவரை அவருக்கு நம்பிக்கையே இல்லை.

 

அது மகளின் குரல் என்றதும் அவ்வளவு ஆத்திரம் அவருக்கு. “எதுக்கு இப்படி என்னை அவமானப்படுத்தினே??” என்று கத்தினார்.

 

“அப்பா… அப்பா…” என்று அழுதாளே தவிர மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை அவள்.

 

அவளிடமிருந்து போனை வாங்கிய செல்வம் “சார் உங்களுக்கு வருத்தமா தான் இருக்கும்…”

“எங்களுக்கு புரியுது, எனக்கு உங்க பெண்ணை பிடிச்சிருந்துச்சு… அவங்ககிட்ட என் விருப்பத்தை சொல்லணும்ன்னு நினைக்கும் போது சென்னை ட்ரான்ஸ்பர் ஆகிட்டேன்”

 

“திரும்பி வந்து நான் சொன்னப்போ அவங்களுக்கு நிச்சயம் முடிஞ்சு போயிருந்துச்சு…”

 

“கொஞ்சம் நிறுத்து உன்னோட இந்த கதை எல்லாம் எனக்கு வேணாம்…” என்று கத்தினார் சரவணன்.

 

“நீ பொய் தானே சொல்ற கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னு… இந்த நேரத்துல யாரும் கல்யாணம் பண்ணமாட்டாங்க… ஒழுங்கா என் பொண்ணு எங்க இருக்கான்னு சொல்லிடு”

 

“நானே வந்து அழைச்சிட்டு போய்டறேன், இங்க எல்லாமே ரெடியா இருக்கு… மாப்பிள்ளையும் ரிசப்ஷன்ல வந்து நின்னாச்சு…” என்றார்.

 

“என்ன சார் பேசறீங்க நீங்க… உங்க பொண்ணுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றேன்… நம்ப மாட்டேங்கறீங்க…”

 

“எங்க கல்யாணம் எங்க முறைப்படி சர்ச்ல நடந்துச்சு சார்… உங்களுக்கு தான் இந்த நேரம் காலம் எல்லாம், எங்கள்ள பெரும்பாலும் சாயங்காலம் தான் கல்யாணம் நடக்கும்…”

 

“நீங்க நம்பலைன்னா வாட்ஸ்அப்ல போட்டோ அனுப்பறேன் சார்… கல்யாணம் முடிஞ்சி வெளிய வரவும் உங்ககிட்ட சொல்லிடலாம்ன்னு சொல்லி நான் தான் கால் பண்ணேன் சார்…” என்றான் அவன் நீட்டி முழக்கி.

 

“எதுக்குடா கால் பண்ணே?? இங்க எல்லாரும் உயிரோட இருக்காங்களா செத்துட்டாங்களான்னு பார்க்கவா…”

 

“எனக்கு இனிமே மேக்னான்னு ஒரு பொண்ணே இல்லை… அவ செத்திட்டான்னு நான் நினைச்சுக்கறேன்… இனிமே என் கண்ணு முன்னாடி வந்திடாதீங்க…” என்று கத்திவிட்டு போனை தூக்கி அங்கிருந்த மேஜையில் வீசினார்.

 

அது அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியது. வள்ளிக்கு கணவனின் கோப முகமும் அதுவரை நடந்துக் கொண்டிருந்த பேச்சுமே ஏதோ புரிவது போல்.

 

“என்னங்க என்னாச்சு…” என்றார் கணவரிடம்.

 

“நம்ம பொண்ணு ஓடிப்போய்ட்டாளாம்… அந்த செல்வம் என் ஆபீஸ்ல வேலை செஞ்சான்ல கொஞ்ச நாள் முன்னாடி சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போனானே…”

 

“அவனை தான் இழுத்திட்டு ஓடியிருக்கா… கல்யாணம் முடிஞ்சிருச்சாம்… போன் பண்ணி சொல்றாங்க… மானமே போச்சு… எல்லாத்துக்கும் இவ தான் காரணம்…” என்று திரும்பி இளைய மகளை சாடினார் அவர்.

“நான் என்னப்பா பண்ணேன், என்னமோ தான் அவகிட்ட நீ ஓடிப்போன்னு சொன்ன மாதிரி சொல்றீங்க” என்று பதில் பேசினாள் அவள்.

 

“நீ சொல்லியிருப்ப… இந்த மாப்பிள்ளை வேணாம்ன்னு அன்னைக்கு சொன்னவ தானே நீ… உங்க அக்காகிட்டையும் அதையே நீ சொல்லியிருப்ப…”

 

“இல்லை அவளோட காதல் விவகாரம் உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும்… அதனால தான் அன்னைக்கு நீ அப்படி சொன்னியோ என்னவோ… சொல்லு உனக்கு முன்னாடியே தெரியும் தானே…”

 

“ஏன் எங்ககிட்ட நீ அதை அப்போவே சொல்லலை… நாங்க என்ன காதலிச்சா தப்புன்னு சொன்னோமா… எதுவுமே சொல்லலையே…”

 

“அவகிட்ட கேட்டு தானே மாப்பிள்ளை பார்த்தோம், கேட்டு தானே நிச்சயத்துக்கு நாள் குறிச்சோம்… நாளைக்கு கல்யாணம் வைச்சுட்டு இன்னைக்கு ஓடிப்போனா என்ன அர்த்தம்…”

 

“போச்சு மொத்தமா மானம் மரியாதை எல்லாம் போச்சு…” என்று அவர் தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தார். வள்ளியோ அவர் பேசியது கேட்டு குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தார்.

 

“இப்போ நீங்க புலம்பறதுனாலயும் அழறதுனாலயும் எதுவும் மாறப்போகுது… ரெண்டு பேரும் கொஞ்சம் நடப்புக்கு வாங்க… இப்போ மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு பதில் சொல்லணும். அதுக்கு என்ன வழின்னு யோசிங்க…” என்று நிதர்சனத்தை எடுத்துச் சொன்னாள் ஜெயக்னா.

 

“என்ன சொல்ல சொல்ற?? அவங்ககிட்ட போய் என் பொண்ணு ஓடிப்போய்ட்டான்னு சொல்லணுமா நானு…”

 

“எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்…” என்று தாயையும் இளைய மகளையும் பார்த்து கர்ஜித்து கொண்டிருந்தார்.

 

பெண் ஓடிப்போய்விட்டாள் என்றதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இருவரையும் தான் வறுத்தெடுத்தார் அவர்.

 

அந்நேரம் வெளியில் யாரோ கதவை தட்டினர். மெதுவாய் கதவை திறந்து எட்டிப்பார்த்தாள் ஜெயக்னா. “டைம் ஆச்சும்மா கூட்டிட்டு வரச்சொல்றாங்க” என்று சொன்னார்.

 

“இதோ வர்றேன்…” என்று அவருக்கு இன்முகம் காட்டிவிட்டு மீண்டும் கதவை மூடினாள்.

 

சரவணனோ உச்சபட்ச கோபத்திலும் அவமானத்திலும் முகம் சிவந்து நின்றார். அடுத்து என்ன என்று கூட அவரால் யோசிக்க முடியவில்லை.

 

வெளியில் வந்து நின்றவருக்கு ஜெயக்னா பதில் கொடுத்ததிற்கும் கூட அவளை திட்டி தீர்த்தார்.

 

“அந்த மாப்பிள்ளையை பத்தி எத்தனை முறை நான் விசாரிச்சு இருப்பேன்… இப்போ அவங்க என்னை பதிலுக்கு உன் பொண்ணை எப்படி வளர்த்து வைச்சிருக்கன்னு கேட்டா நான் என்ன செய்வேன்…” என்றார்.

 

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு… எதுக்கு சும்மா திட்டிட்டே இருக்கீங்க… நான் அன்னைக்கு இந்த மாப்பிள்ளை வேணாம் சொன்னது தான் உங்களுக்கு குத்தமா போச்சா…”

 

“நான் என்ன தான் பண்ணணும்ன்னு நீங்க நினைக்கறீங்க…” என்று முறைப்பாய் தந்தையின் முன் நின்று கேள்வி கேட்டாள் அவள்.

 

ஒரு கணம் அப்படியே நின்றவர் எதையோ யோசித்து முடித்திருந்தார் இப்போது. “நான் சொல்றதை நீ செய்வியா??”

 

“என்ன செய்யணும் அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கால்ல போய் விழணுமா…” என்றாள்.

 

“இல்லை… இந்த அவமானம் போக ஒரே வழி தான் இருக்கு…”

 

“என்னன்னு சொல்லுங்கப்பா??”

 

“என் பொண்ணு போய்ட்டா தப்பு நம்ம மேல நாம அவமானப்படலாம்… ஆனா எந்த தப்பும் பண்ணாம அவங்க ஏன் அவமானப்படணும்…”

‘இவரு என்ன தான் சொல்ல வர்றாரு…’ என்று கடுப்பாகியது அவளுக்கு.

 

வள்ளி வாயை திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. என்ன சொன்னாலும் அவர் மனைவியின் மீதே பாய்வார் என்பதை உணர்ந்தவர் போன்று வாய் பொத்தி அழுதவாறே தந்தை மகள் பேச்சை செவிமடுத்தார் அவர்.

 

“நீ அந்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கணும்…”

 

“என்ன!!” என்று அதிர்ச்சியாய் தந்தையை நோக்கினாள் ஜெயக்னா.

 

“ஆமா நீ தான்… உங்கக்கா மாதிரி நீயும் என்னை அவமானப்படுத்தப் போறேன்னா இப்போவே சொல்லிடு…”

 

“என்னப்பா சொல்றீங்க நீங்க?? அக்கா இல்லைன்னா தங்கச்சியை கட்டிக் கொடுப்பீங்களா… நான் என்ன சப்ஸ்ட்யூட்டா…”

 

“நீயும் அப்போ யாரையோ விரும்பற, யார் கூடவோ ஓடிப் போக போறே, அதானே இப்படி பேசிக்கிட்டு இருக்கே… ரொம்ப சந்தோசம் ரெண்டு பேரும் நல்லாயிருங்க…” என்றார் கோபமாய்.

 

அவருக்கு மகள் தான் சொன்னதிற்கு ஒத்துக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கம், மூத்த மகளின் மீது இருந்த கோபம் எல்லாம் சேர்ந்து சின்ன மகளை பற்றி தெரிந்திருந்தாலும் அப்படி பேச வைத்தது.

 

“அப்பா அம்மாக்கு நல்ல பேரு சம்பாதிச்சு கொடுக்கறீங்க…” என்று வாய்க்கு வந்ததை புலம்பி தள்ளினார் அந்த மனிதர்.

 

“அப்பா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க… ஒண்ணு இல்லைன்னா இன்னொன்னு வாங்கிக்கோன்னு சொல்ற மாதிரி என்னை கட்டிக்க சொல்லுவீங்களா…” என்றாள் சற்று எரிச்சலான குரலில்.

 

அதுவரை சரவணன் மட்டுமே சின்ன  மகளிடம் பேசிக்கொண்டிருக்க இப்போது வள்ளி அவளருகே வந்தார்.

 

“எனக்கும் அப்பா சொல்றது தான் சரின்னு படுது ஜெயா… நீ ஏன் வேணாம்ன்னு சொல்றே?? நீயும் மேக்னா மாதிரி யாரையும் விரும்புறியா??”

 

“அம்மா… நீயும் என்னம்மா அப்பா மாதிரியே பேசறே?? நான் யாரையும் விரும்பலை… அப்படியே விரும்பினாலும் உங்ககிட்ட சொல்லிட்டு கல்யாணம் பண்ணிக்கற தைரியம் எனக்கிருக்கு”

 

“அப்புறம் ஏன்டி வேணாம்ன்னு சொல்றே??”

 

“அம்மா அதெப்படிம்மா அக்காக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு அவர்க்கு என்னை கட்டி வைப்பீங்களா… எனக்கு சுத்தமா புடிக்கலைம்மா…” என்றாள் தன் விருப்பமின்மையை.

 

“சரி விட்டிருவோம்… நீயும் போய்டு இங்க இருந்து… இங்க இருந்து இனி நாங்க உயிரோட வெளிய போக போறதில்லை… அவமானம்பட்டு இங்கவே சாகறோம், நீங்க நல்லாயிருங்க…” என்றவர் கணவரின் அருகே சென்றார்.

 

சரவணனுக்கு மனைவியின் உயிரை விடுகிறோம் என்ற பேச்சு பிடிக்கவில்லை தான். அது போன்ற பேச்சுக்களை அவர் எப்போதும் விரும்பமாட்டார் தான்.

 

ஆனாலும் இளைய மகள் ஏதாவதொரு விதத்தில் சம்மதம் சொல்லிவிட மாட்டாளா என்ற நப்பாசை அவருக்கு, அதனாலேயே மனைவியின் பேச்சை தடை செய்யவில்லை அவர்.

 

அன்னையின் பேச்சில் “அய்யோ…” என்று தலைப்பிடித்து அமர்ந்து கொண்டாள் ஜெயக்னா.

 

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு… நான் அந்த மாப்பிள்ளையை கட்டிக்கணும் அவ்வளவு தானே… சரி கட்டிக்கறேன்…” என்று அவள் தன் சம்மதம் சொல்லவும் ஓடி வந்து மகளை அணைத்துக் கொண்டார் வள்ளி.

 

சரவணனோ அவளை கூர் பார்வை பார்த்தார்… “நீ சொல்றதை நம்பலாமா… நம்பி இறங்கலாமா…” என்று கேட்டவரை முறைத்தாள் அவள்.

 

“என்ன வேணும் இப்போ உங்களுக்கு… இவ்வளோ நேரம் வேணாம்ன்னு சொன்னேன்… அதுக்கும் என்னை நம்பாம கேள்வி கேட்டீங்க… சரின்னு சொன்னாலும் கேள்வி கேட்கறீங்க…” என்றாள் சிடுசிடுப்பாய்.

 

“நாளைக்கு வரை உன்னை பாதுகாக்கணுமே நாங்க… அந்த பயம் தானே எங்களுக்கு…” என்றார் அவர்.

 

அவரின் இந்த நம்பாத பேச்சு அவளுக்கு கோபத்தை வரவழைத்தது. “நான் ஏற்கனவே சொல்லிட்டேன் எனக்கு யார் மேலயாச்சும் விருப்பமிருந்தா உங்ககிட்ட சொல்லிட்டே கல்யாணம் பண்ணிக்குவேன்…”

 

“சும்மா சும்மா கேள்வி கேட்டுட்டே இருந்தா அதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது…”

 

இப்போது வள்ளி பேசினார், “அவ தான் சொல்றாளே நீங்க போய் மாப்பிள்ளை வீட்டுல பேசுங்க… நான் அவளை தயார் பண்ணுறேன்…” என்று அவர் கூறவும் சரவணன் அறைக்கதவை திறந்து வெளியில் சென்றார்.

 

எதிரில் சத்யன் வரவும் “வா சத்யா ஒரு பிரச்சனை…” என்று ஆரம்பித்து அவனிடம் மெதுகுரலில் நடந்ததை சுருங்க சொல்லிக்கொண்டே மாப்பிள்ளை வீட்டினரை பார்க்கச் சென்றார்.

 

“சித்தப்பா இதெல்லாம் சரியா வருமா… ஜெயா எப்படி சித்தப்பா… கொஞ்சம் யோசிக்கலாமே…” என்றான் அவன்.

 

சத்யனுக்கு தந்தை இல்லை, தாய் மட்டுமே… சித்தப்பாவின் ஆதரவில் மட்டுமே வளர்ந்தவன் அவன். அவர்க்கு ஒன்று ஒன்றால் துடிப்பவனும் அவனே…

 

தங்கைகளுக்கும் நல்ல அண்ணனாகவே இருந்தான். ஜெயக்னாவின் லட்சியம் அவனறிவான். இன்னமும் அவள் நினைத்த துறையில் எதையும் அவள் சாதிக்கவில்லை.

 

குறைந்தது இரண்டு வருடமாவது பணியாற்ற வேண்டுமென்பது அவள் எண்ணம்… இப்போது இப்படி… என்று தான் யோசித்தான் அவன்.

 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று மீனாட்சி மற்றும் அவருடன் இருந்த சந்தியா இருவரையும் பார்த்து சொன்னார்.

 

அவர்களிடம் நடந்தை எல்லாம் சொல்லி ஜெயக்னா பற்றியும் மெதுவாய் தன் மனதில் உள்ளதை சொன்னார் அவர்.

 

விஷயம் ராகவ்க்கு சொல்லப்பட அவன் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. ஜெயக்னாவை பற்றி தான் அவன் முன்பே அறிவானே, அவளுக்கு நிச்சயம் அவனைப் பிடிக்காது என்று அவனுக்கு தெரியும்.

 

இப்படி அவசரகதியில் உடனே இன்னொரு பெண்ணை மணப்பதும் அவனுக்கு சரியாய் படவில்லை. அதான் உறுதியாய் அவன் மறுத்தான்.

சரவணன் தொய்ந்து போய் அறைக்கு வந்தவர் தன் மனக்குமுறலை மனைவியிடம் கொட்ட கேட்டிருந்த ஜெயக்னா அங்கிருந்து விடுவிடுவென்று வெளியேறினாள்.

 

மணமகன் அறைக்கதவை தட்டியவள் ராகவிடம் தனியே பேச வேண்டும் என்றிருந்தாள். அவர்கள் வெளியேற இருவர் மட்டுமாய் அறையில்.

 

“நீ எப்படி என்னை வேணாம்ன்னு சொல்லலாம்… நான் தான் உன்னை வேணாம்ன்னு சொல்லியிருக்கணும்… நீ எப்படி என்னை சொல்லலாம்…” என்று பத்திரகாளியாய் கண்ணை உருட்டி கேட்டாள் அவள்…

 

இறைவன் வரையும்

கோலத்தில்

மனிதன் செய்யும்

மாற்றங்களில்

மணம் ஒன்றாகி

நடக்குமோ??

மனங்கள் ஒன்றாய்

இணையுமோ?? – இரு

மனங்கள் ஒன்றாய்

இணையுமோ??