Advertisement

அத்தியாயம் – 2

 

ராகவிற்கு அன்னை அவனை அடித்ததும் கொஞ்சம் சுருசுருவென்று வந்தது. தான் என்ன தவறு செய்துவிட்டோம் என்று அன்னையும் தன்னை புரியாமல் அடிக்கிறார் என்று தானிருந்தது அவனுக்கு.

 

தந்தையிடம் கண்டிப்பை கண்டிருக்கிறான், தாயிடம் இதுவரை அரவணைப்பையே கண்டிருக்கிறான். முதன் முறையாக அடித்திருக்கிறார் என்றால் தான் இதில் எதுவும் தவறு செய்துவிட்டோமா என்று சுய அலசலிலும் ஈடுபட்டான் அவன்.

 

மூக்கம்மாள் ஏதோ சத்தம் கேட்டு பின்னால் வந்திருக்க மீனாட்சி என்ன நினைத்தாரோ ஒன்றும் சொல்லாமல் விருட்டென்று எழுந்து சென்றுவிட்டார்.

 

“என்னய்யா ஆச்சு உன் கன்னத்துல மூணு விரல் பதிஞ்சாப்புல இருக்கு…” என்று அவன் மோவாயை தூக்கி கன்னத்தை இப்படியும் அப்படியுமாக திருப்பி பார்த்தார் மூக்கம்மாள்.

 

அவர் அவனின் வலது கன்னத்தை தடவி பார்க்கவும் அம்மா இந்த பக்கம் தானே அடிச்சாங்க பாட்டி ஏன் இங்க பார்க்குது என்று எண்ணியவன் பாட்டியின் கையை தடுத்து வேகமாய் உள்ளே சென்றான்.

 

அவனறைக்கு சென்று நிலைக்கண்ணாடியின் முன் நின்று பார்க்க அப்போது தான் அவன் கண்களில் அந்த தடம் தெரிந்தது.

‘நேத்து எப்படி பார்க்காம விட்டேன்… இது அவ அடிச்சதா தான் இருக்கணும்… அம்மா வலது கையால தானே அடிச்சாங்க… அவ தான் இடது கையில கையெழுத்து போட்டா… அவ தான் செஞ்சிருக்கணும்’ என்றெண்ணியவனுக்கு ஆறவேயில்லை.

 

‘திமிர் பிடிச்ச ராங்கி’ என்று அவளை திட்டிக் கொண்டிருக்கும் போதே மூக்கம்மாள் வந்தார்.

 

“அம்மா…” என்று ஆரம்பிக்கவும் நினைவு வந்தவனாக அறையில் இருந்து அவன் வெளியில் வந்தான்.

 

அவன் அன்னையிடம் சென்று கேட்க வேண்டும் என்று மனம் எண்ணினாலும் அவன் தன்மானம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஹாலில் இருந்த இருக்கையில் சென்று தொப்பென்று விழுந்தான்.

 

“என்னாச்சுய்யா அம்மா மாடிக்கு போனவ இன்னும் இறங்கலையே!!” என்று மூக்கம்மாள் சொல்லவும் இருக்கையைவிட்டு எழுந்தவன் வெளியில் வந்து மாடிக்கு செல்லும் படிகளில் தாவியேறினான்.

 

அங்கு கண் கலங்கிய நிலையில் மீனாட்சி தரையில் அமர்ந்திருப்பதை கண்டதும் மனம் பதற அவரருகே சென்றான்.

 

“அம்மா…”

 

“அம்மா என்னாச்சும்மா??”

 

அவரிடம் இப்போதும் பதிலில்லை. நின்ற வாக்கிலே இருந்தவன் மெதுவாய் அவரருகே அமர்ந்தான். தன்னை நிதானப்படுத்திக் கொண்டு “என் மேல என்ன கோபம்??”

 

“எதுக்காக என்னை அடிச்சீங்க?? இப்போ எதுக்கு நீங்க கண்ணு கலங்கி உட்கார்ந்திருக்கீங்க??” என்றவனை நிமிர்ந்து தீர்க்கமாய் பார்த்தார் அவர்.

 

“அம்மா என்னன்னு சொல்லுங்க இப்படி பேசாம இருந்தா நான் என்னன்னு நினைக்கறது??”

 

அவரோ இப்போதும் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார். ராகவ்க்கு தான் சற்று எரிச்சல் மண்டியது. தான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசியும் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாரே என்று.

 

இந்த விஷயத்தில் அவன் செய்த பிழை தான் என்ன?? தன் தரப்பை மீண்டும் யோசித்தவனுக்குள் இப்போதும் தவறு போல் எதுவும் தோன்றவில்லை.

 

தலையை இரு கைகளாலும் பற்றியவாறே அமர்ந்திருந்தவனை பார்த்து என்ன தோன்றியதோ மீனாட்சியே ஆரம்பித்தார். “ராகவா அந்த பொண்ணு தப்பானவன்னு உனக்கு எப்படி தோணிச்சு??” என்றார் நிதானமாய்.

 

“அம்மா அதான் அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு உங்ககிட்ட சொன்னேன்ல… அந்த சூழ்நிலை எனக்கு என்ன தோணிச்சோ அதை வைச்சு தான்மா நான் முடிவு பண்ணேன்”

 

“அப்போ நாளைக்கு நம்ம வீட்டுக்கு ஒரு ஆம்பிளை வந்து நேரம் கழிச்சு போனா நீ என்னையும் தப்பா தான் நினைப்பியா…” என்ற அவரின் கேள்வியில் திடுக்கென்றிருந்தது அவனுக்கு.

 

எதற்கு எதை இணை கூட்டுகிறார் இவர் என்றிருந்தான் அவன். அதை அவரிடம் கேட்டும் விட்டான்.

 

“அவளை ஏன் உங்ககூட சேர்கறீங்க… நீங்களும் அவளும் ஒண்ணா… யாராச்சும் வீட்டுல வைச்சு இப்படி எல்லாம் செய்வாங்களா என்ன…”

 

“நானும் ஒரு பெண் தான், நீ இல்லாத நேரத்துல இங்கயும் யாருமில்லை… நீ என்னையும் அப்படி நினைக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்…”

 

“உன் வழியிலேயே கேட்கறேன், வெளிய போய் ஒரு ஆம்பிளையை பார்த்தா அப்பவும் நீ தப்பா தான் நினைப்பியா என்னை…”

 

“அம்மா…” என்றான் கோபமாயும் அதிர்வாயும்.

 

“உன் அம்மான்னா தப்பா பேச மாட்டே, மத்தவங்கன்னா தப்பா பேசுவியா…”

 

“அம்மா நான் தப்பா ஒண்ணும் பேசலையே… அங்க நடந்ததை தானே சொன்னேன்… அதுவுமில்லாம இது போல அவ வீட்டுலயோ இல்லை வேற எங்கயோ நடந்தா நான் போய் கேட்டிருப்பேனா என்ன…”

 

“நம்ம லாட்ஜ்ம்மா அது… அதுக்குன்னு ஒரு நல்ல பேரு இருக்கு அந்த ஊர்ல… அதை நான் காப்பாத்த வேண்டாமா… நான் முன்னெச்சரிக்கையா இருக்கறதுல என்ன தப்பு…”

 

“சரி முன்னெச்சரிக்கையா இரு தப்பில்லை… ஒண்ணு மட்டும் சொல்லு… உன் லாட்ஜ்ல ரூம் போடுறவங்க ரூமை திறந்து வைச்சுட்டு தான் இருப்பாங்களா…”

 

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்த போதும் “வைக்க மாட்டாங்க…” என்று அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னான்.

 

“அப்போ எல்லா ரூம்ல இருக்கவங்களையும் நீ தப்பா நினைப்பியா… உன் லாஜிக்படி நீ அவங்களையும் தப்பா தானே நினைக்கணும்…”

 

அவனுக்கு அய்யோவென்றானது… “இப்போ என்ன தான்மா சொல்ல வர்றீங்க…” என்றான் நேரிடையாய்.

 

“நானும் உன் அக்காவும் பொண்ணுங்க தான் எங்களை நீ தப்பா நினைப்பியா…”

 

“அம்மா நீங்களும் அவளும் ஒண்ணில்லை… எதுக்கு உங்களோட எல்லாம் அந்த கழிசடையை கூட்டு சேர்க்கறீங்க…”

 

“ராகவா கேட்டதுக்கு பதில் சொல்லு, தேவையில்லாத வார்த்தையை விடவேண்டாம்…”

 

“உங்களை எப்படிம்மா தப்பா நினைப்பேன்… எனக்கு உங்களை தெரியாதா…”

 

“எங்களை உனக்கு தெரியும் அதுனால நீ தப்பா நினைக்க மாட்டே சரி. அந்த பொண்ணு யாரு என்னன்னே உனக்கு தெரியாது ஆனா தப்பா நினைப்பியா…”

 

ராகவிற்கு அன்னை சொல்ல வருவது புரிந்தது. அவர் சொல்வது சரி தானே, தெரியாத ஒரு பெண் என்பதால் தானே உடனே தப்பாக நினைக்கத் தோன்றியது.

 

இதுவே எனக்கு தெரிந்த பெண்ணென்றால் அப்படி நினைத்திருப்பேனா? அவளிடம் அப்படி பேசியிருப்பேனா? என்று மனம் யோசிக்க ஆரம்பித்து.

 

“நீ பண்ணது ரொம்ப தப்பு ராகவா… எனக்கென்னமோ அவ தப்பு பண்ணுற பொண்ணு மாதிரி தெரியலை… அதுக்கு சாட்சி தான் இது”  என்று அவன் கன்னம் தொட்டு காண்பித்தார்.

 

“சொல் பொறுக்காத பொண்ணா இருக்கா… இத்தனை வருஷமா லாட்ஜை பார்க்கறியே… ஒருத்தரை பார்த்ததும் உனக்கு இவங்க எப்படின்னு எடை போட தெரியாதா…”

 

“உங்கப்பாக்கு பெண்களுக்கு மதிப்பு கொடுத்து பழக்கமில்லை தான்… ஆனா எந்த பொண்ணையும் அவர் தப்பா ஒரு வார்த்தை பேசினதில்லை… நீ அதெல்லாம் மீறிட்டே”

 

“அம்மா நான் என்னமோ பெரிய தப்பு பண்ண மாதிரி நீங்க இப்படி பேசறீங்க… என்னை உங்களுக்கு தெரியாதா…”

 

“எத்தனை வருஷமா என்னை பார்க்கறீங்க… நம்ம லாட்ஜ்ல ஒரு தப்பு நடந்திட கூடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கையில பேசிட்டேன் அது ஒரு தப்பாம்மா…”

 

“உன் முன்னெச்சரிக்கை எல்லாம் முன்னாடியே இருந்திருக்கணும்… என்னவா இருந்தாலும்… தப்பானவங்களாவே இருந்தாலும் தப்பியோ தவறியோ நீ எப்பவும் யாரையும் தப்பா பேசக் கூடாது”

 

“அம்மா…”

 

“சொல்லு ராகவா இனி பேச மாட்டேன்னு சொல்லு…”

 

பள்ளி செல்லும் சிறுவனுக்கு பாடம் எடுப்பது போல் எடுத்துக் கொண்டிருந்தவர் அவனுக்கு புதிதாய் தெரிந்தார்.

 

“பேச மாட்டேன்ம்மா…” என்று அவன் வாயில் இருந்து வார்த்தை வரும் வரை அவர் முகம் தெளியவில்லை.

 

மெதுவாய் மகனின் கன்னம் தடவியவர் “யாரோ ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி நீ அடி வாங்கிட்டு வந்தது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு ராகவா… அதுவுமில்லாம நீ சொன்ன விஷயம் கேட்டதும் அந்த பொண்ணு மேல தப்பில்லைன்னு தோணிச்சு”

 

“அதான் யோசிக்காம உன்னை அடிச்சிட்டேன்… என் பையனை ஒருத்தர் குறை சொல்றதை என்னால தாங்க முடியாது, ஒருத்தி அடிச்சிருக்கா அதான் எனக்கு…” என்றவர் அவன் கன்னத்தை தடவுவதை நிறுத்தவில்லை.

 

“அம்மா விடுங்கம்மா இதெல்லாம் ஒண்ணுமில்லை… நீங்க கீழே வாங்க, பாட்டி ரொம்ப நேரமா நமக்காக காத்திட்டு இருப்பாங்க” என்று சொல்லி அவருடன் சென்றான்.

 

அன்னையிடம் சமாதானமாய் சொன்னானோ இல்லை உணர்ந்து தான் சொன்னானோ அவனே அறியான். மாலையில் வீட்டினரிடம் விடைப்பெற்று ஜீப்பை எடுத்துக்கொண்டு மூணாருக்கு பயணமானான்.

 

செல்லும் வழியெங்கும் அப்பெண்ணின் நினைவுகளே அவன் மனதில். அவனால் ஏனோ அந்த சூழ்நிலையை இயல்பாகவே எடுத்துக் கொள்ள முடியாதது போலவே தோன்றியது.

 

ஆனாலும் அன்னையின் பேச்சை மனதில் கொண்டு அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டு வண்டியில் இருந்த பிளேயரை ஆன் செய்தான்.

இது போன்ற தனிமை சூழலுக்காகவே இசையமைத்திருப்பார் போலும் இளைஞானி என்று தான் தோன்றியது அவனுக்கு.

 

மலையேறும் போது இளங்காற்று வீசுதே இசை போல பேசுதே… என்ற பாடல் காதில் தேனினும் இனிமையாய் வந்து விழுந்தது அவனுக்கு.

 

ஜெயக்னாவை மறக்கடித்திருந்தார் இளையராஜா… மெல்ல பாடல்களுடன் கரைய ஆரம்பித்தவன் லாட்ஜ்க்கு வந்த பின்னே தான் சுயநினைவிற்கே வந்தான்.

 

அங்கு ஒருத்தி இவனை வறுத்து எண்ணெய் சட்டியில் போட்டு பொறிக்காத குறையாய் திட்டி தீர்த்ததை கேட்டிருந்தாள் என்ன செய்வானோ அவன்…

 

ஜெயக்னா இன்றைய மங்கை… யாராவது நீ பெண் தானே என்று சொன்னாளே அதென்ன பெண் தானே… என்று இளக்காரமாய் சொல்கிறாய் என்று அவர்களிடம் சண்டைக்கு செல்லும் ரகம் அவள்.

 

அவள் தந்தை சரவணன் அல்லிநகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். அன்னை வள்ளி குடும்பத்தலைவி.

 

இரு பெண் பிள்ளைகள் அவருக்கு, அதில் இளையவள் தான் ஜெயக்னா, மூத்தவள் அதிகம் பேசாதவள் சற்று பயந்த சுபாவம் என்றால் இவளோ அவளுக்கு நேரெதிர். யாரையும் அடித்து போட்டுவிடும் வேகம் அவளுக்கு எப்போதும் உண்டு. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிவிடும் பெண்ணவள்.

 

பெண்கள் தற்காப்பு கலையை முறையாக பயின்றவள்… தன் பெண் போலீஸ் வேலைக்கு சரியாய் வருவாள் என்று அவள் தந்தை ஆசைப்பட்டு தான் அதெல்லாம் கற்றுக்கொள்ள அனுமதித்திருந்தார்.

 

ஆனால் அவளுக்கோ போலீஸ் வேலையில் எல்லாம் பெரிதாய் ஈடுபாடு இல்லை, விருப்பமும் இல்லை என்பதால் தன் துறையாய் அவள் தேர்வு செய்தது ஹோட்டல் மானேஜ்மென்ட் தான். படிப்பும் அதை தொடர்புப்படுத்தியே படித்தாள் அவள்.

 

அவர் பெண் ஆசைப்பட்டதை படிக்க வைத்திருந்தவர் அவள் ஹோட்டல் வேலைக்கு செல்வதை ஏனோ  விரும்பவில்லை. அதனால் அவள் இப்போது டூர் மானேஜ்மென்ட் செய்துக் கொண்டிருக்கிறாள்.

 

தேனியின் சுற்றுவட்டார பகுதிக்கு சுற்றுலா வர விருப்பம் உள்ளவர்களுக்கு அதற்கான அரேன்ஜ்மென்ட் தகவல் சேகரித்து கொடுப்பது ஏற்பாடு செய்வது அது தான் அவள் வேலையாய் கடந்த இரண்டு மாதங்களாய் செய்துக் கொண்டிருக்கிறாள்.

 

இந்த வேலை அவளுக்கு புதிது தான் என்றாலும் போனிலேயே அவளுக்கு தெரிந்த விபரங்களை கேட்டு பரிமாறுவதும் ஆன்லைனில் வேலை முடிப்பதுமாய் இந்த இரு மாதங்களும் குறைந்தது ஐந்து புது கஸ்டமர்களுக்கு சேவை வழங்கியிருந்தாள்.

ஜெ.எம் ஆன்லைன் டூர் மானேஜ்மெண்ட் கன்சல்டன்ட் என்ற பெயரில் தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள்.

 

அவள் இப்போது பார்க்கும் இந்த வேலை கூட அவள் தந்தைக்கு பிடித்தமில்லை தான். ஆனாலும் மகள் எங்கோ சென்று வேலை செய்வதை விட தன் முயற்சியால் ஏதோவொன்றை செய்கிறாள் என்று அவர் மறுப்பு சொல்லவில்லை.

 

மகளின் பிடிவாதமும் உடன் சேர்ந்துக் கொண்டது. எதுவென்றாலும் நம் கண்காணிப்பில் தானே என்று அவள் முயற்சிக்கு தடை சொல்லவில்லை அவர்.

 

ஆனாலும் அவள் தனியே இதை செய்யவும் அவர் அனுமதிக்கவில்லை. சரணவனின் அண்ணன் மகன் சத்யன் என்பவனிடம் தான் அவளை வேலைக் கற்றுக் கொள்ளவே அனுமதித்தார்.

 

சத்யன் சொந்தமாக டிராவல்ஸ் வைத்திருக்கிறான். வெளியிடங்களுக்கு செல்வதென்றால் அந்த மேல் வேலைகளை அவன் தான் பார்த்துக் கொள்வான்.

 

ஜெயக்னா வீட்டின் மாடியில் இருந்த தனியறையை தனக்கான அலுவல் அறையாக பயன்படுத்திக் கொண்டாள். உடன் அவள் தோழி பவானியையும் இணைத்துக் கொண்டாள்.

 

அவர்கள் மூலதனம் எதுவென்றால் இரண்டு லேப்டாப்பும் இன்டர்நெட் கனெக்ஷனும் மட்டுமே. இது போன்ற புக்கிங் சர்வீஸ்க்கு அவர்கள் ஆளுக்கேற்றார் போல் சார்ஜ் செய்வர்.

 

சென்னையில் உள்ள அவள் தோழி ஒருத்தியின் மூலம் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த விக்டர் சாம்சன் மூலமாய் அவளுக்கு புது வாடிக்கையாளர்கள் கிடைப்பது போல் இருக்க அவனை சந்திக்கும் பொருட்டு தான் அவள் மூணாருக்கே வந்திருந்தாள்.

 

விக்டரும் இவளைப் போல கோஆர்டினேட் செய்பவனே… அவன் சிங்கப்பூரில் வசிப்பவன்… கடந்த ஒரு மாதமாய் அவனுடன் நன்றாய் பேசி நட்பாகி இருந்தனர் இருவரும்.

 

முதல் முறையாய் அவன் அவர்களை நேரில் சந்திக்க வருவதாகக் கூறி முதல் நாள் அவளுக்கு போன் செய்து மூணாரில் அவனுக்கு அறை பதிவு செய்யச் சொல்லியிருந்தான் அவர்களின் மீட்டிங்கிற்காய்.

 

சத்யனோ அவன் டிராவல்ஸ் டிரைவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்திருக்க இவனே ஆக்டிங் டிரைவராக போகவே வேண்டிய சூழல் நிலவ இரண்டு நாட்கள் முன்னர் தான் சென்னை கிளம்பி சென்றிருந்தான்.

 

தங்கையிடம் சொல்ல புதிதாய் யாரும் வந்தால் இரண்டு நாள் தானே பார்த்துக் கொள்வதாக கூறி சத்யனை அனுப்பி வைத்தாள். அவனில்லாது போனதால் வேறு வழியில்லாது அனைத்து வேலையும் இவளே முன்னின்று பார்க்க வேண்டியதாய் போனது.

சத்யனிடம் போன் செய்து கேட்க அவன் வருவதற்கு மறுநாள் காலை ஆகும் என்றிருந்தான். சரி வந்ததும் அவனை நேரே மூணாருக்கு அனுப்பி வைக்கலாம் என்று தான் எண்ணியிருந்தாள்.

 

சத்யனும் அவளிடம் சரியென்றே சொல்லியிருந்தான். ஆனால் முதல் நாளிரவு அவன் சென்னையில் இருந்து கிளம்புவதற்கு வெகு தாமதமாகிப் போனது.

 

மறுநாள் மதியத்திற்கு மேல் தான் அவனால் வரமுடியும் என்றுவிட ஜெயக்னா தானே நேரே சென்று விக்டரை சந்திப்பது என முடிவு செய்தாள்.

 

அன்று காலை எட்டு மணியளவில் விக்டர் மூணாரில் வேறு  ஒருவரை சந்திக்க இருப்பதாகவும் பின்னர் அவள் பதிவு செய்த அறைக்கு சென்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கிளையண்ட்ஸ் சிலருடன் பேசுவதாக ஏற்பாடு.

 

மீட்டிங் முடிந்ததும் மாலையே அவன் கொச்சிக்கு செல்வதாக இருந்தான் வேறு சிலரை பார்ப்பதற்காய். பவானி அலுவலகத்தில் இருந்து மற்ற வேலைகள் பார்த்துக் கொள்ள ஜெயக்னா தான் விக்டர் மூணார் வரும் ஏற்பாடுகளை முழுவதும் கவனித்தாள்.

 

அவன் நண்பர் ஒருவர் சொன்னார் என்று ராகவிற்கு சொந்தமான மீனாட்சி லாட்ஜை பரிந்துரை செய்தது விக்டரே. சரி போனில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று ஜெயக்னா முயற்சி செய்ய அங்கிருந்தவனோ முன் பணம் செலுத்த வேண்டும் எதுவாய் இருந்தாலும் நேரில் வந்து தான் பதிவு செய்ய வேண்டும் என்றிருந்தான்.

 

அதனாலேயே ஜெயக்னா நேரில் கிளம்பி வந்து அறை பதிவு செய்து சென்றிருந்தாள். மறுநாள் விக்டர் அவன் மீட்டிங் முடிந்து வந்ததும் பதினோரு மணியளவில் தான் லாட்ஜிற்கு வந்து சேர்ந்தனர்.

 

விக்டர் கையோடு கொண்டு வந்த ப்ரொஜெக்டரை அங்கு செட் செய்து இருவருமாய் வந்த வேலையை முடித்தனர்.

 

இவளின் பேச்சு பிடித்து போன ஓரிருவர் தங்களின் பயண ஏற்பாடு முழுதும் அவளிடமே ஒப்புவித்தனர். அதில் இரண்டு குடும்பங்கள் தமிழ் குடும்பங்கள்.

 

விக்டருக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது என்பதால் தான் அவன் அந்த வேலையை முழுவதுமாக அவளிடம் ஒப்படைத்திருந்தான்.

 

சிங்கப்பூரில் இருந்து இங்கு வந்து செல்வதற்காக பிளைட் டிக்கெட் ஏற்பாடுகள் அவன் பார்த்துக் கொள்வதாயும் அதன் பின்னான தங்கும் வசதி சுற்றிப்பார்ப்பது போன்ற மற்ற ஏற்பாடுகள் அவள் வசமும் ஒப்படைக்கப்பட்டது.

 

புது வாடிக்கையாளர்களுடன் பேசியதிலும் தங்கள் வேலைகளை பிரிப்பதிலும் பகிர்ந்து கொள்வதிலும் என்று அவர்கள் ஒருவழியாய் முடிவுக்கு வந்திருந்த போது மிகவும் களைத்திருந்தனர்.

மாலை விக்டருக்கு ஏற்பாடு செய்திருந்த வண்டி வரவும் தான் அவர்கள் மற்ற விஷயங்களை வீடியோ சாட்டில் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு கிளம்பினர் அங்கிருந்து.

 

வண்டி வந்து காத்திருப்பதால் விக்டர் அறை பதிவிற்கான காசை அவளிடம் கொடுத்து செட்டில் செய்யச் சொல்லிவிட்டு அவன் கிளம்பியிருந்தான்.

 

எல்லாவற்றையும் ஒன்றாய் இணைத்து ராகவ் அவனாய் ஒரு முடிவிற்கு வந்து தான் அவளிடம் அப்படி பேசியதும். இன்னமும் அவன் பேசியதே அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

என்ன தைரியம் அவனுக்கு?? எப்படி அவன் அப்படி பேசலாம்?? ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாய் ஓர் அறைக்குள் இருந்தால் தவறு தான் செய்கிறார்கள் என்று அர்த்தமாகுமா…

 

என்னை பார்த்தால் அவனுக்கு அப்படியா தெரிகிறது?? வெளிநாட்டில் இருந்து வந்தாலும் அந்த விக்டர் எவ்வளவு கண்ணியமானவன் அவனுடன் ஒரு மாதமாக போனில் தொடர்பிலிருந்தவளிடம் தவறாய் அவன் ஒரு வார்த்தை பேசியதில்லை.

 

ஏன் நேரில் அவனை பார்க்க போகிறோம் என்ற போது கூட அவளிடத்தில் லேசாய் ஒரு பதட்டம் இருக்கத்தான் செய்தது. இது போன்ற பொது வேலைகள் பார்க்கும் போது நாலு மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது அவளறிந்ததே!!

அதன் பொருட்டு தான் அவள் தைரியமாய் கிளம்பியும் வந்திருந்தாள். அவள் வீட்டினரிடமும் தான் எங்கு செல்கிறோம் என்று தெரியப்படுத்தி தான் வந்திருந்தாள்.

 

முதன் முதலாய் நேரில் பார்த்த விக்டர் கூட தன்னை தவறான ஓர் பார்வை பார்க்கவில்லை, நாகரீகமாகவே நடந்துக் கொண்டான்.

 

அவன் பேச்சில் தான் டார்லிங், டியர் என்பது. அதுவும் கூட அவர்கள் இயல்பாய் பயன்படுத்தும் சொல்லாய் தானிருந்தது என்பதால் அதை பெரிதாய் எடுக்கவில்லை. அவன் அவளை மட்டுமில்லை பவானியிடம் பேசினாலும் டியர், டார்லிங் என்று தான் சொல்லி வைப்பான்.

 

இப்படியாக ஒரு வாரம் கடந்திருந்தும் கூட ஜெயக்னாவினால் ராகவ் பேசியதை மறக்கவே முடியவில்லை. தினசரி ஒரு விதமாய் அவனுக்கு வசைமாரி பொழியவும் அவள் தவறவில்லை…

 

காற்று திசை மாறும்

காட்சியும் மாறும்

நீயும் நானும் ஓர் நாளில்

ஓர் உறவாய்

மாறியே போவோம்

என்றறியேன்!!

Advertisement