Advertisement

அத்தியாயம் – 16

 

சென்னையில் இருந்து கிளம்புவதற்கு முதல் நாள் ஜெயக்னாவை தேடி வந்தான் ராகவ் கையில் ஒரு பார்சலுடன்.

 

“இதை பிடி…” என்று அவள் கையில் கொடுத்தான்.

 

“என்ன இது??”

 

“புடவை…”

 

“எதுக்கு??”

 

“நாளைக்கு இங்க இருந்து ஊருக்கு போனதும் கோவிலுக்கு போகணும், ஒரு வேண்டுதல்… அதுக்காக தான் எடுத்தேன்” என்றான் அவன்.

 

“ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை??”

 

“உன்கிட்ட எல்லாமே சொல்லிட்டு தான் செய்யணுமா??”

 

“என்னால வரமுடியாத சூழ்நிலைன்னா என்ன செய்வீங்க…” என்றாள் சற்றே இறங்கிய குரலில்.

 

“அப்படின்னா…”

 

“அடுத்த வாரம் போகலாம்…” என்றுவிட்டு அவள் நகர அவனுக்கு இப்போது தான் புரிந்தது அவள் சொல்ல வந்தது.

“வேண்டுதலை தள்ளி போட வேணாம்ன்னு நினைச்சேன்… அதான் சாரி… நான் முன்னாடியே கேட்டிருக்கணும்” என்றுவிட்டு நகர்ந்தான் அவன்.

 

மறுநாள் இருவரும் தேனிக்கு வந்து சேர்ந்தனர். மீனாட்சியுடன் இரண்டு நாட்கள் கழித்துவிட்டு மூன்றாம் நாள் மூணாருக்கு கிளம்பிச் சென்றனர்.

 

அடுத்தடுத்த அவனுக்கு வேலைகள் இருந்ததாலும் சீசன் நேரமென்பதால் அறைகள் பதிவு செய்யப்பட்ட வண்ணமே இருந்ததாலும் அடுத்து உடனே அவனால் கோவிலுக்கு கிளம்ப முடியவில்லை.

 

எப்படியோ அவன் வேலை கொஞ்சம் ஒதுக்கி அன்று நேரமாக வீட்டிற்கு வந்திருந்தான் ராகவ். இரவு உணவிற்கு பின் ஜெயக்னாவிடம் “வர்ற புதன்கிழமை கோவில்க்கு போகலாமா??” என்று ஆரம்பித்தான்.

 

“என்ன வேண்டுதல்??”

 

“அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்லை, போகலாமா வேணாமான்னு மட்டும் சொல்லு” என்றான் அவன்.

 

“ஏன் அப்படி என்ன சொல்ல முடியாத ஒரு வேண்டுதல்??” என்று மீண்டும் கேள்வி கேட்டாள்.

 

“நீ வரலைன்னா நான் மட்டும் போயிட்டு வந்துக்கறேன்…” என்று கோபமாய் சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டான் அவன்.

 

‘என்ன இவன் ரொம்ப ஓவரா பண்ணுறான்??’ என்று எண்ணிக்கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தாள் அவள்.

 

அவனோ கட்டிலில் குப்புறப்படுத்திருந்தான். “கோவிலுக்கு போக புது சேலை எல்லாம் எடுத்து இருக்கீங்களே?? அதான் என்னன்னு கேட்டேன்… பதில் சொன்னா என்னவாம்??” என்று மீண்டும் ஆரம்பித்திருந்தாள் அவள்.

 

“உன்னால வர முடியும்ன்னா வா இல்லைன்னா விடு, சும்மா தொணதொணன்னு சொல்லிட்டு இருக்காதே…” என்று அவளை நிமிர்ந்து பார்த்து சொல்லிவிட்டு மீண்டும் தலை கவிழ்ந்தான் அவன்.

 

அவள் இன்னமும் அந்த புடவைக்கு ரவிக்கை தைத்திருக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்களுக்குள் அதை தைத்து கொடுப்பானா என்று அவளுக்கு தெரியவில்லை.

 

“பிளவுஸ் தைக்கலை… என்ன செய்ய??”

 

மீண்டும் நிமிர்ந்து அவளை முறைத்திருந்தான் அவன். “நாம ஊருக்கு போயிட்டு வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகப்போகுது இன்னும் இரண்டு நாள்ல கிளம்பணும்ன்னு நான்  சொல்றப்போ தான் உனக்கு இதெல்லாம் தோணுமா??”

 

“எனக்கு இந்த ஊர்ல யாரை தெரியும்… எங்க வீடுன்னா எனக்கு தெரியும், அட்லீஸ்ட் தேனின்னா கூட கடையை தேடி பிடிச்சு தைக்க கொடுத்திருவேன்… இங்க இன்னமும் தெற்கு எது வடக்கெதுன்னே எனக்கு தெரியலை” என்று நொடித்தாள் அவள்.

 

“உனக்கு அதெல்லாம் தெரியாது… ஆனா என்கிட்டே வாயடிக்க மட்டும் நல்லா தெரியும்… உங்க வீடுன்னா தெரியும்ன்னே சொன்னியே, அப்போ இது யார் வீடாம்…” என்று சொல்லி அவளை இன்னமும் அதிகமாய் முறைத்தான்.

 

‘இன்னைக்கு என்ன இவன்கிட்ட நானா வாய கொடுத்து மாட்டிக்கறேன்…’ என்று தானிருந்தது அவளுக்கு.

 

“இப்போ நான் என்ன செய்யணும்??” என்று தன் கெத்து விடாமல் கேட்டாள்.

 

“நாளைக்கு என்னோட வா… எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தர் இருக்காங்க, அங்கவே கொடுத்திடலாம்…” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

 

‘ரொம்ப தான் போடா…’ என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டு அவளும் படுத்துறங்கினாள்.

 

கோவிலுக்கு கிளம்பும் நாளும் வந்தது. அதிகாலை ஐந்து மணிக்கே கிளம்பினர் அவர்கள். “ஏங்க தேனிக்கு போயிட்டு தானே போறோம்…”

 

“எதுக்கு??”

 

“வேண்டுதல்ன்னு சொன்னீங்களே??”

 

“ஆமா…”

 

“அத்தையை கூட்டிட்டு போகவேணாமா??”

 

“வேணாம்… நாம போயிட்டு வந்து அவங்களை பார்த்துக்கலாம்…”

 

‘என்ன ஓவர் சஸ்பென்ஸ் வைக்குறான்…’ என்று தான் தோன்றியது அவளுக்கு.

 

“எந்த கோவிலுக்கு??”

 

“வேலப்பர்…”

 

அவள் கேட்டதிற்கு எல்லாம் அவன் பதில் ஒற்றை வரியிலேயே பெரும்பாலுமிருந்தது.

 

அவன் ஜீப்பில் இருவரும் ஏறியமர்ந்தனர். ‘இந்த இருட்டுக்குள்ள கிளம்பி போயே ஆகணுமா… என்ன பிடிவாதமோ இவனுக்கு… அப்படி என்ன வேண்டுதலா இருக்கும்…’ என்ற யோசனை அவளுக்கு.

 

அந்த அதிகாலை நேரமும் ஈரக்காற்றும் சுகமாய் வருட சீட்டில் அப்படியே உறங்கிப் போனாள் அவள்.

 

அவ்வப்போது அவளை திரும்பிப் பார்த்தாலும் வழியை தவறவிடாமல் வண்டியை ஓட்டினான் அவன். வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி சூடாக தேநீர் வாங்கிக் கொடுத்தான் அவளுக்கு.

 

அந்த நேர குளிருக்கு அது இதமாக அவள் தொண்டையில் இறங்கியது. மீண்டும் வண்டியை கிளம்பியிருந்தான் அவன்.

 

இன்னும் அரைமணியில் அவர்கள் வேலப்பர் கோவிலை அடைந்துவிடுவர். அவளுக்கு லேசாய் பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்திருந்தது.

 

“பசிக்குதா??”

 

“ஹ்ம்ம்…”

 

“கோவிலுக்கு போயிட்டு வந்து சாப்பிடலாம்… வேணா இப்போ வடையும் டீயும் வாங்கி தரேன்…” என்று சொல்லி வழியில் தென்பட்ட கடையில் வண்டியை நிறுத்தி வாங்கிக் கொடுத்தான்.

 

பசி கொஞ்சம் மட்டுப்பட்டது போலிருந்தது அவளுக்கு. அவன் வெறும் டீ மட்டுமே குடித்திருந்தான். ‘இவனுக்கு பசிக்கலையா’ என்று யோசித்தாலும் ஒன்றும் கேட்கவில்லை அவள்.

 

இதோ கோவிலுக்கு வந்து இறங்கியும் விட்டனர். கோவிலுக்கு என்பதால் ராகவ் வெள்ளை வேட்டி அணிந்திருந்தான். மயில் பச்சையில் முழுக்கை சட்டை அணிந்திருந்தவன் லேசாய் மடித்துக் கொண்டான் அப்போது.

“வா போகலாம்…” என்று அவர்கள் படியேறி மேலே சென்றனர். அங்கிருந்த உண்டியலின் அருகே சென்றவன் “தாலியை கழட்டி உண்டியல்ல போடு…” என்றான்.

 

“என்ன??” என்று அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள்.

 

“நான் சொன்னது கேட்கலையா, சொன்னதை செய்…”

 

“எதுக்கு?? ஏன்??” என்றவளின் வலக்கரம் கழுத்தில் இருந்த கயிற்றைப் பற்றிக் கொண்டது விடமாட்டேன் என்பது போல்.

 

“இங்க பாரு தேவையில்லாத சீன் எல்லாம் இங்க வேண்டாம்… கழட்டு போடு முதல்ல…”

 

அவள் கண்களிலோ நீர் கோர்த்துக் கொண்டது. ராகவ் இப்படி சொல்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

“இப்போ இதுக்கு என்ன அவசியம்??” என்றாள் விழிகளில் நிறைந்த நீருடன்.

 

“இப்போ எதுக்கு உன் கண்ணுல தண்ணி நிக்குது… நான் சொன்னதை மட்டும் செய், இல்லைன்னா நானே கழட்ட வேண்டி இருக்கும்…” என்றான் அழுத்தமாய்.

 

அவன் குரலில் சொன்னதை செய்யும் உறுதி தெரிய ஒன்றுமே ஓடவில்லை அவளுக்கு. உள்ளிருந்த தாலி கயிற்றை வெளியே எடுத்துவிட்டாள், ஆனால் அதைப் பற்றியவாறே நின்றவளுக்கு அதை கழற்றும் எண்ணம் மட்டும் வரவேயில்லை.

 

“என்ன பார்த்திட்டே இருக்கே ஜெய்?? உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு நானே கழட்டறேன்…” என்று அவன் உறுதியான குரலில் சொல்லி அவள் கழுத்தருகே கையை கொண்டு வரவும் தானாகவே அதை கழற்றினாள்.

 

“ஹ்ம்ம் உள்ள போடு…”

 

அவளோ அதை கையிலேயே வைத்துக்கொண்டு பார்த்திருக்க அவள் கரம் பற்றி அவனே அதை உண்டியலில் போட்டுவிட்டான்.

 

‘அவ்வளவு தானா இனி எனக்கும் இவனுக்கும் உள்ள பந்தம் அவ்வளவு தானா…’ என்று மனம் ஓலமிட்டது உள்ளே.

 

ஒன்றுமே பேச வராமல் முகம் கடுக்க அவள் நின்றிருக்க அவளை அழைத்துக்கொண்டு அருகிருந்த சன்னிதானத்திற்கு வந்திருந்தான்.

 

அவன் தோளில் மாட்டியிருந்த சிறுபையில் இருந்து எதையோ எடுத்தவன் அதை அவள் முன்னே நீட்டினான்.

 

அவன் கைகளில் இப்போது புதுத்தாலி ஒன்று மின்னிக்கொண்டிருந்தது. ‘என்ன செய்யப் போறான்??’ என்று தான் அவனை பார்த்திருந்தாள் அவள்.

 

“ஹ்ம்ம் இந்தா கட்டு??” என்று அவளிடம் நீட்டினான்.

 

“என்ன விளையாட்டு இது??”

 

“நீ தானே சொன்னே பொண்டாட்டி ஆயுளுக்காக புருஷன் எதுவும் செய்யறதில்லைன்னு… நீ இதை என் கழுத்துல கட்டு உனக்காக நான் வேணா தினமும் இதுல குங்குமம் வைக்குறேன்…”

 

“ஹான்…” என்று வாய் பிளந்து பார்த்தாள் அவனை.

 

“அன்னைக்கு எங்க அக்காகிட்ட நீ தானே சொன்னே?? இப்போ என்னமோ ஹான்னு பார்க்குறே… இந்தா இதை கட்டு என் கழுத்துல” என்றான் அவன்.

 

“அ… அது… அன்னைக்கு ஏதோ சொன்னேன்… நான் ஒண்ணும் இப்படி சொல்லலையே… உங்க அக்கா தானே சொன்னாங்க…”

 

“சரி எங்கக்கா தான் சொன்னா… இருந்தாலும் இதுல உன் ஆசை நிறைவேறும் தானே…”

 

“போதும் விளையாடினது…” என்று முறைத்திருந்தாள் அவனை.

 

“அப்போ இதை என்ன செய்யறது??”

 

“என்ன செய்யணும்ன்னு முடிவு செஞ்சு தானே வாங்கியிருப்பீங்க??”

 

“ஹ்ம்ம் ஆமாம்…”

 

“அப்போ அதே செய்ங்க…”

 

“அதான் நீ செய்ய மாட்டேங்குறியே…” என்றவனை பார்த்து பல்லைக் கடித்தாள் அவள்.

 

“நிஜமா அதுக்கு தான் வாங்கினீங்களா…” என்று புருவமுயர்த்தி பார்த்தாள்.

 

“நான் என்ன பண்ணனும்ன்னும் நீ இப்போ சொல்லு??” என்று திருப்பினான்.

 

“என் கழுத்துல கட்டிவிடுங்க…” என்று அவள் சொன்னதும் அவன் புருவ மத்தியில் இருந்த இருந்த யோசனை முடிச்சு இயல்பாகி இதை தான் எதிர்பார்த்தேன் என்று காட்டியது.

 

“உனக்கு இப்போ கூட ஒரு சான்ஸ் இருக்கு… என்னை கஷ்டப்பட்டு எல்லாம் கட்டிக்க வேணாம்… உங்கப்பா, அம்மான்னு யார் கட்டாயமும் இல்லை…”

 

“நிஜமா சொல்லு இதை நான் இப்போ உன் கழுத்துல கட்டட்டுமா…” என்று அவள் விழிகளை உற்று நோக்கி கேட்டானவன்.

 

அதுவரையிலும் அவன் தன்னிடம் ஏதோ விளையாடுகிறான் என்ற ரீதியில் இருந்தவளுக்கு அவன் செய்வதை உணர்ந்து தான் செய்கிறான் என்று புரிந்தது.

மனம் லேசாகிவிட அவன் மேல் அவளறிந்தும் அறியாமலும் உருவாகியிருந்த நேசம் உயிர்த்துக் கொள்ள “கட்டுங்க…” என்று சொல்லி தலை தாழ்ந்து நின்றாள்.

 

“வா…” என்று அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றவன் தாலியை சாமியின் பாதத்தில் வைத்து கொடுக்குமாறு வேண்டி பின் பூசாரி கொண்டு வந்து கொடுக்கவும் அதை வாங்கினான்.

 

“என்னை நிமிர்ந்து பாரு… தலை குனிஞ்சு எல்லாம் நிற்க வேணாம்… உன்னை பார்த்திட்டே தான் இதை கட்டுவேன்…” என்று சொல்லி அவள் முகம் நிமிர்த்தி அவள் விழிகளோடு உறவாடி அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

 

அவள் மனதில் சொல்லொணாத நிம்மதி அக்கணம். ராகவுடன் விரும்பாத திருமணம் என்பது போய் அவனை தானே விரும்பி மணந்த இக்கணம் அவளால் என்றும் மறக்க முடியாத தருணம்.

 

பூசாரி கொடுத்த குங்குமத்தை அவன் கையாலேயே வைத்துவிட சொன்னாள். இருவருமாய் ஒரு அமைதியுடனே கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

 

மருத மரத்தின் கீழே ஊற்றாய் பெருகியிருந்த சுனைக்கு வந்து அதை பார்த்து நின்றனர். ஜெயக்னா சுனையில் இறங்கி கால் நனைத்து மகிழ்ந்தாள். அவள் விளையாடுவது வேடிக்கை பார்த்து நின்றிருந்தான் ராகவ்.

நேரமாகிப் போகவே “போகலாமா மணி பத்தாகப் போகுது… கீழ போய் சாப்பிட்டு ஊருக்கு கிளம்பலாம் சரியா இருக்கும்…” என்று அவன் சொல்லவும் தான் மேலேறி வந்தாள் அவள்.

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது அவள் விஷயத்தில் உண்மையாய். அவளின் சந்தோசம் அப்பட்டமாய் அவள் முகம் பிரதிபலித்தது. அதை கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டான் ராகவ்…

 

உன் விருப்பே

என் விருப்பு

உன் அகமே

என் அகம்

உன் கனவே

என் கனவு

உன் நினைவே

என் நினைவில்!!

Advertisement