அத்தியாயம் – 14

 

மணமக்கள் இருவருக்கும் ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார் வள்ளி. அவர்களின் திருமணம் முடிந்து ஆறு மாதம் ஓடியிருந்தது.

 

இப்போது தான் முதன் முறையாக மறுவீட்டிற்கென்று ராகவும் ஜெயக்னாவும் வருகின்றனர். வள்ளியின் முகத்தில் சந்தோசம் குடிக்கொண்டிருந்தது. சரவணனின் முகத்தில் திருப்தி அவர்களை கண்டு.

 

வெகு நாளாய் அவர்களை அழைத்து ஒருவழியாய் ராகவ் சரியென்று சொல்லி இதோ வந்திருந்தனர் அவர்கள்.

 

அத்தெருவில் இருந்த ஓரிருவர் அவர்களை கண்டு ஏதோ தங்களுக்குள் கசகசவென்று பேசுவது கண்ணில் விழுந்தாலும் சம்மந்தப்பட்டவர்கள் அதை தங்கள் கருத்தில் பதித்துக் கொள்ளவில்லை.

 

“உள்ள வாங்க…” என்று வாயெல்லாம் பல்லாக அழைத்தார் வள்ளி.

 

வள்ளியின் முகத்தில் அவ்வளவு நிறைவு மகளும் மருமகனும் ஒன்றாய் வந்ததில். எங்கே அவர்கள் மறுவீட்டிற்கு வராமலே போய் விடுவார்களோ என்ற கவலை அவருக்கு இருந்தது.

 

தினம் சரவணனிடம் புலம்பியே தள்ளியிருந்தார் அவர். சரவணனுக்கு நடப்பு புரிந்தாலும் மனைவியின் ஆதங்கமும் புரிய அவர் ராகவிடம் அவ்வப்போது பேசி பேசி சம்மதிக்க வைத்திருந்தார்.

 

திருமண நிச்சயம் செய்யவென்று முதன் முறையாக அங்கு வந்திருந்தவன் தான், அதன்பின் இதோ ஜெயக்னாவின் கணவனாய் இப்போது தான் வந்திருக்கிறான்.

 

அன்று மணப்பெண்ணை பார்க்கலாம் என்று வந்திருந்தவன் தன்னை முறைத்திருந்த ஜெயக்னாவை மட்டும் தான் பார்த்திருந்தான்.

 

ஏனோ எல்லாமே ஏதோ நல்லதிற்காய் தான் நடந்திருக்கிறதோ என்ற எண்ணம் இன்னமும் வலுவாய் அவன் மனதில்.

 

இல்லையென்றால் அன்று மேக்னாவை கொஞ்சமாவது தான் திரும்பி பார்த்திருப்போமே என்று தோன்றியது அவனுக்கு.

 

“நீங்க ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை…” என்று ராகவிடம் சொன்ன சரவணன் “ஜெயா கூட்டிட்டு போ…” என்றிருந்தார்.

 

‘ஏன் அவருக்கு போக தெரியாதா?? விட்டா தூக்கிட்டு போக சொல்லுவாங்க போல…’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு தான் சென்றாள் அவள்.

 

முகம் கடுகடுக்க அவனை நோக்கி அவள் சொன்ன “வாங்க…” என்றதை ரசித்துக் கொண்டே அவள் பின்னே சென்றான் அவன்.

 

அறைக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டான் ராகவ். சத்தம் கேட்டு அவனை திரும்பி பார்த்தாள் ஜெயக்னா.

 

“எதுக்கு கதவை சாத்துறீங்க??”

 

“சும்மா தான்…”

 

“பகல்லயே இப்படி செஞ்சா எல்லாரும் என்ன நினைப்பாங்க??”

 

“என்ன நினைப்பாங்கன்னு நீ தான் சொல்லேன்??” என்றான் அவன் பதிலுக்கு.

 

“அ… அது… த… தப்பா நினைக்க மாட்டாங்களா…” என்றவள் கதவை நோக்கி அடியெடுத்து வைக்க கதவின் மேல் சாய்ந்து நின்றிருந்த ராகவ் அவள் கரம் பற்றி இழுக்க அவன் மீதே சாய்ந்தாள் அவள்.

 

“விடுங்க…” என்று அவள் திமிர அவனோ “முடியாது… எல்லாரும் என்ன தப்பா நினைப்பாங்கன்னு சொல்லு??”

 

“உங்களை…” என்று பல்லைக் கடித்தவள் போடா சொல்ல முடியாது…” என்றாள்.

 

“சரி அதை சொல்ல வேணாம்… வேற ஒரு கேள்வி கேட்குறேன் அதுக்கு மட்டுமாச்சும் பதில் சொல்லு…”

‘என்ன கேட்பான்?? எதுவும் வில்லங்கமா இருக்குமோ??’ என்று எண்ணிக்கொண்டே “ஹ்ம்ம் கேளுங்க…”

 

“நீ சொன்னியே பகல்லவே கதவை சாத்த வேணாம்ன்னு… அப்போ நைட் கதவை சாத்தலாமா… அப்போ என்ன பண்ணணும், நான் கொஞ்சம் மக்கு நீ தான் நல்லா படிச்சிருக்கியே… கொஞ்சம் சொல்லிக்கொடேன்” என்று ஒன்றும் தெரியாதவன் போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.

 

அவன் சொன்னதை கேட்டு கன்னம் கூசி சிவந்த போதும் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு “என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா போகுது…” என்று அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.

 

அவன் அவளை விடுபவன் போல் தெரியவில்லை. “கையை விடுங்க வலிக்குது…” என்றாள்.

 

“ஹ்ம்ம் சரி…” என்றவன் கைவிடவும் அவள் நகரப்போக அவன் இப்போது அவள் இடையை வளைத்து அணைத்திருந்தான்.

 

‘இதென்ன என்னைக்கும் இல்லாம இன்னைக்கு புதுசா சேட்டை பண்ணுறான்… ரொம்ப பண்ணுறான்…’ என்று தான் இருந்தது ஜெயக்னாவிற்கு.

 

அவள் இடையை வளைத்திருந்த அவன் கரத்தை விலக்க முயற்சி செய்ய அவனோ சாதாரணமாய் பற்றியிருப்பது போல தோன்றினாலும் உடும்பாய் வளைந்திருத்தான் அவளை.

“கையை எடு?? இதென்ன விளையாட்டு நேரங்கெட்ட நேரத்துல”

 

“அப்போ எப்போ விளையாடலாம்” என்று ஆர்வமானான் அவன்.

 

அவளுக்கு இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்றாகிவிட “எனக்கு இப்போ வெளிய போகணும், அம்மாவை பார்க்கணும்…” என்று பதினாறு வயதினிலே சப்பாணியாய் மாறி முணுமுணுத்தாள்.

 

அவளின் பேச்சில் அவன் இதழ்கடையில் லேசாய் ஒரு புன்முறுவல் தோன்ற அவன் பிடியை தளர்த்தினான் இப்போது.

 

விட்டால் போதுமென்று நகர்ந்தவள் கதவை திறந்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டாள்.

 

மறுவீட்டிற்கென அவர்கள் காலை உணவுக்கு பின்னே அங்கு வந்திருந்தனர். ராகவ் அங்கிருந்த கட்டிலில் சென்று படுத்துக்கொண்டான்.

 

பெரும்பாலும் அவன் ஓய்வெடுப்பதில்லை, அவனுக்கு லாட்ஜில் ஆட்கள் இல்லையென்றால் கூட வெளியில் வந்து நின்று வேடிக்கை பார்த்தே பொழுது போய்விடும் என்பதால் ஓய்வெடுக்கவே மாட்டான்.

 

இப்போது இங்கு ஓய்வாய் படுத்திருப்பது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. கடந்த இந்த நாட்களில் தன் வாழ்க்கை ஏதோ அர்த்தப்பட்டதாய் உணர்ந்தான் அவன்.

லாட்ஜில் மாற்றம் செய்யட்டுமா என்ற ஜெயக்னா சொன்ன மாற்றங்களில் அவர்களின் லாட்ஜ் புதுப்பொலிவை கொண்டது என்றால் மிகையல்ல!!

 

“புதுசா பெட் எல்லாம் வாங்கணும்…” என்று ஒருநாள் அவன் முன் வந்து நின்றாள்.

 

“எதுக்கு?? இப்போ ரெண்டு வருஷம் முன்னாடி தான் பெட் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாத்தினோம்…” என்றான் ராகவ்.

 

“எப்படி கிளீனிங் எல்லாம்??”

 

“வாக்யூம் தான்…”

 

“பெட் எல்லாம் வெயில்ல போட்டா தான் நல்லா உலரும்…”

 

“நம்ம ஊர்ல வெயில் எப்போவாச்சும் தான் அடிக்கும்…”

 

“அதுக்கு தான் சொல்றேன், இன்னொரு செட் பெட் இருந்தா ஒண்ணை வெயில்ல போட்டு ஒண்ணை ரூம்ல போடலாம்ல…”

 

“ஹலோ இதென்ன வீடா ரெண்டு செட் வாங்கி வைக்க…”

 

“ஹலோ எந்த வீட்டுல ஒரு பெட்க்கு ரெண்டு செட் வாங்கி வைச்சிருக்கோம்…” என்று அவனைப் போலவே கேட்டாள் அவள்.

“இப்போ என்ன தான் சொல்ல வர்றே… கொஞ்சம் நான் சொல்றதையும் கேளுங்க…”

 

கேட்டு தான் பார்ப்போமே என்று அவனுக்கும் தோன்றியது. ஏதோ தோன்றியவனாய் “இது மட்டும் தானா இன்னும் இருக்கா?? எதுவா இருந்தாலும் மொத்தமா சொல்லிரு…”

 

“ஒவ்வொண்ணா சொன்னா நமக்கு கட்டுப்படியாகாது…” என்றான்.

 

“ஓ!!” என்றவள் “அப்போ இப்படி உட்காருங்க, என்னென்னன்னு சொல்லிடறேன்” என்றாள் சீரியசாய்.

 

‘அடிப்பாவி நான் ஒரு பேச்சுக்கு கேட்டா இவ பெரிய பட்ஜெட்டா செலவு வைப்பா போலயே…’ என்று எண்ணிக்கொண்டு அவளருகே அமர்ந்தான்.

 

“மொத்தம் இங்க எத்தனை ரூம் இருக்கு…”

 

“நம்மோட ரூமும் சேர்த்து பதினாறு…”

 

“அப்போ கெஸ்ட் ரூம் பதினைஞ்சு…” என்றவள் முணுமுணுவென்று தனக்குள் ஏதோ காற்றிலேயே கணக்கை வரைந்தவள் “ஒரு பத்து இல்லை இருபது டஜன் ப்ரெஷ், சாம்பிள் பேஸ்ட், ஷாம்பு, சோப்பு…” என்றாள்.

 

“இதெல்லாம் எதுக்கு??”

 

“நீங்க பெரிய பெரிய ஹோட்டல் எல்லாம் பார்த்திருக்கீங்களா… அங்க இதெல்லாம் வைப்பாங்க…”

 

“பேஸ்ட், ஷாம்பு, சோப்பு ஓகே… ப்ரெஷ் கூடவா வைப்பாங்க…”

 

“ப்ரெஷ் எல்லாம் எல்லா ஹோட்டல்லயும் வைச்சிருக்க மாட்டாங்க தான்… ஆனா நாம வைக்கலாமே, திடீர்ன்னு அவசர வேலையா இந்த ஊருக்கு கிளம்பி சிலர் வருவாங்க…”

 

“சிலர் கிளம்புற அவசரத்துல ப்ரெஷ் எடுத்து வர மறந்திடுவாங்க… அந்த மாதிரி இருக்கும் போது இது நம்ம கஸ்டமர்ஸ்க்கு எவ்வளவு யூஸ் ஆகும் தெரியுமா…” என்று நியாயம் பேசினாள் அவள்.

 

அவள் பேசியது சரி தான் என்றாலும் அதை உபயோகப்படுத்தியவர்கள் இரண்டு நாள் அதை உபயோகம் செய்து பின் தூக்கி போட்டு செல்வர் இதற்கு இவ்வளவு செலவு தேவையா என்று அவன் கணக்கு பார்த்தான்.

 

“அதிக செலவாகும்ன்னு யோசிக்கறீங்களா…” என்று அவன் யோசனை முகம் கண்டு கேட்டாள்.

 

ஒன்றும் பதில் சொல்லவில்லை அவன். அவள் சொல்வது போல் செய்தால் பெரிய நட்டம் ஒன்றும் இல்லை தான் என்று யோசித்துக் கொண்டிருந்தான் இப்போது.

 

“நீங்க எப்போ ரூம் வாடகை எல்லாம் ஏத்துவீங்க??” என்றாள் திடுமென.

 

“ஏன்??”

 

“சொல்லுங்க…”

 

“கவர்மென்ட்ல டாக்ஸ் அதிகம் பண்ணும் போது கண்டிப்பா ஏத்துவோம்… இதை தவிர வருஷத்துக்கு ஒரு முறை பராமரிப்பு அது இதுன்னு செலவுகள் கூடும் போது மத்த இடத்தையும் கம்பேர் பண்ணி ஏத்துவோம்…”

 

“அடுத்து நாம எப்போ ஏத்துவோம்…”

 

“இப்போ தானே பட்ஜெட் முடிஞ்சிருக்கு… வொர்க்அவுட் பண்ணி பார்க்கணும்… எப்படியும் வர்ற ஏப்ரல்ல இருந்து ஏத்துவோம்” என்றான் அவன்.

 

“இப்போ எனக்காக இந்த செலவை செய்ங்க, ஏப்ரல் மாசத்துல நீங்க ஏத்தும் போது கூட ஒரு ஐம்பதோ நூறோ சேர்த்திடுங்க, அப்போ உங்க கணக்கு நேராகிடும்ல…” என்று வழி சொன்னாள் அவள்.

 

‘விவரம் தான்…’ என்று மனதிற்குள் மெச்சிக்கொண்டான் அவளை. அவள் கேட்டதை செய்து முடித்திருந்தான். காலியாய் இருந்த அறைகளில் எல்லாம் அவள் நினைத்த மாற்றங்களை செய்தாள்.

 

பின் அறையில் சில அலங்காரங்கள் எல்லாம் செய்து முடித்து தெரிந்த புகைப்படக்காரர் ஒருவரை சத்யன் மூலமாக தேனியில் இருந்து வரவழைத்திருந்தாள்.

 

‘இது எதுக்காக…’ என்று ராகவ் பார்த்திருந்தாலும் என்னவோ செய்கிறாள் என்றுவிட்டான் அவன். வந்தவனோ அறையை விதவிதமாய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

 

வரவேற்பிலும் ஏதேதோ மாற்றங்கள் செய்திருந்தாள். வரவேற்பில் அழகிய கேரள விளக்கொன்று உயரமாய் கொண்டு வந்து வைத்திருந்தாள்.

 

சுற்றிலும் சிறு சிறு குவளைகளில் நீரும் அதில் பன்னீர் ரோஜாக்களும் மிதந்தன. இது அவர்கள் இடம் தானா என்று அவனே வியப்பாய் தான் பார்த்தான்.

 

சிறிய லாட்ஜ் தானே இதற்கெதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தான் இவ்வளவு நாள் தோன்றியது அவனுக்கு.

 

பெரிய ஹோட்டல் என்றால் இதெல்லாம் நன்றாக இருக்கும், இங்கு இது அவசியமா என்ற எண்ணம் தான் இருந்தது. இன்று அழகுற இருந்த அவன் லாட்ஜை பார்க்கும் வரையிலும்.

 

பார்க்கவே பளிச்சென்று களையாய் தெரிந்தது. புகைப்படக்காரன் எடுத்த போட்டோவை எல்லாம் உடனே வரவேற்பில் இருந்த சிஸ்டத்தில் ஏற்றினாள்.

 

அதை பார்த்து அவளுக்கு திருப்தி இல்லாததை எல்லாம் மீண்டும் எடுக்க வைத்து அவளுக்கு சரியென்று தோன்றும் வரை அவனை விடவேயில்லை.

 

அவன் சென்ற பின்னே “எதுக்கு இதெல்லாம்??” என்றவனிடம் “வெப்சைட்ல போட!!” என்றாள்.

 

“வெப்சைட்டா அது வேறயா??”

 

“என்னோட சொந்த வெப்சைட் இருக்கு… அதுல இதை பிரமோ பண்ணப் போறேன்…” என்றவளின் விரல்கள் கீபோர்ட்டில் நர்த்தனம் ஆட விழி எடுக்காமல் அதையே பார்த்திருந்தான் ராகவ்.

 

“எதுக்கு இதெல்லாம்ன்னு தோணுதா??” என்றாள் செய்துக் கொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்தி.

 

இல்லையென்பதாய் தலையசைத்தவன் “இந்த லாட்ஜ் இன்னும் பெரிசானா எனக்கு சந்தோசம் தான்… அப்பா பார்த்திக்கிட்டு இருந்ததை நல்லபடியா கவனிக்கணும்ன்னு மட்டும் தான் நான் நினைச்சேன்”

 

“அதை சிறப்பா எப்படி செய்யணும்ன்னு நீ செய்யறதை பார்த்து எனக்கு புரியுது… நீ என்ன செய்யணுமோ செய், என்னோட ஒத்துழைப்பு உனக்கு கிடைக்கும்” என்றான் மென்மையாய்.

 

“நிஜமாவா…” என்றாள் கண்களில் ஒளியுடன்.

 

“நூத்து நூறு நிஜம்…”

அதன்பின் அங்கு பல மாற்றங்கள் செய்து விருந்தினர்கள் வருகை சற்று கூடியது. அவனுக்கென்று அங்கு தனியாய் இருந்த அறையும் கூட இப்போது விருந்தினர்கள் தங்குவதெற்கென்று மாற்றினாள்.

 

“அப்போ எனக்கு…” என்றவனிடம் “வீட்டுக்கு வந்து படுங்க இனி… இங்க நைட் பார்க்க தனியா ஆள் போடுங்க, நீங்க கண்காணிக்க சிசிடிவி இருக்குல அப்புறமென்ன” என்றாள்.

 

பண பரிவர்த்தனையை கூட கிரெடிட்கார்ட் டெபிட் கார்ட் தேய்த்து செலுத்தும் முறைக்கு மாற்றினாள்.

 

சில வாடிக்கையாளர்கள் கேட்டிருந்தும் அதற்கு வேறு தனியாக வங்கிக்கு சிறப்பு சேவை கட்டணம் செலுத்த வேண்டும் இன்னும் சில கட்டுப்பாடுகள் அவனுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு அதெல்லாம் மாற்ற விருப்பமில்லை.

 

அதனால் இன்னமும் பழைய முறையை தான் கடைப்பிடித்திருந்தான். அத்தனையும் அவனை இழுத்துக்கொண்டு வங்கிக்கு அலைந்து திரிந்து மாற்றியிருந்தாள்.

 

கணினியின் உதவியுடன் பெருமளவு மாற்றங்கள் நிகழ்த்தியிருந்தாள். கடந்த பத்து நாட்களாய் முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகம் செய்திருந்தாள் அவன் மனைவி.

 

ஏனோதானோவென்ற வாழ்க்கை என்றிருந்தது போக அவன் வாழ்க்கையும் அர்த்தம் பெறுவது போல் தோன்றியது அவனுக்கு.

 

இதுநாள் வரை அவனுக்குமே அதிலெல்லாம் ஆர்வம் இருந்ததில்லை என்பதால் பழமை மாறாமல் இருந்தது எல்லாம் இப்போது புதுமையாய் புதுபொலிவுடன் இருப்பது அவனுக்குமே புத்துணர்ச்சியை கொடுத்தது.

 

ஒரு நாள் “நீங்க பேஸ்புக், வாட்ஸ்அப் எல்லாம் பார்க்கா மாட்டீங்களா” என்றாள்.

 

“வாட்ஸ் அப் இருக்கு, அதுவும் எப்போவாச்சும் தான் பார்ப்பேன். பேஸ்புக் என்னை பொறுத்தவரை வெட்டின்னு தோணுது… நான் யூஸ் பண்றதில்லை…”

 

“கம்ப்யூட்டர் யூஸ் பண்ண மாட்டீங்க, சோசியல் மீடியா பிடிக்காது… வேற என்ன தான் உங்களுக்கு ஆர்வம்” என்று அவள் கேட்டதில் அவன் பார்வை அவளைத் தான் ஆர்வமாய் பார்த்து வைத்தது.

 

உன் மேல் தான் என் ஆர்வம் இப்போது என்று சொல்லாமல் சொன்ன அவன் பார்வை அவளை எதுவோ செய்ய ‘ஏன் தான் கேட்டோம்’ என்று அவளை எண்ண வைத்தது.

 

அவளின் சங்கடம் பார்த்து பேச்சை மாற்றினான் அவன். “எனக்கு சில விஷயங்கள் பிடிக்கறதில்லை, அதனால அதை செய்யறதில்லை…”

 

“ஏன் பிடிக்கலை?? கம்ப்யூட்டர் நோண்டதவனும், பேஸ்புக் பார்க்காதவனும் உலகத்துல இருக்கான்னு எனக்கு நம்பவே முடியலை…”

 

“நான் இருக்கேனே…”

 

“ஹ்ம்ம் அதான் எனக்கு புரியலை… நீங்க என்ன மனுஷன்னு…”

 

“அதெல்லாம் பார்த்தா தான் மனுஷனா என்ன… எங்கப்பாவும் தாத்தாவும் இதெல்லாம் பார்த்தாங்களா என்ன…”

 

“இல்லை தான்…”

 

“அப்புறம் என்ன…”

 

“உங்க கருத்தை ஒத்துக்கறேன்… ஆனா நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க, பேஸ்புக்கை சரியா பயன்படுத்தினா அது நமக்கு சிறந்த வழிக்காட்டியா இருக்கும்…”

 

“நீங்க பொழுதுக்கும் அதுலவே இருக்கணும்ன்னு அவசியமில்லை… தேவைக்கு உபயோகம் செய்யறதுல தப்பில்லை… இப்போ நம்ம லாட்ஜ்க்குன்னு நான் புது பேஜ் ஓபன் பண்ணியிருக்கேன்”

 

“நீங்க அதெல்லாம் பார்க்க வேண்டாமா… அதுக்காக கம்ப்யூட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்ன்னு நீங்க அதையும் கொஞ்சம் கவனிக்கலாமே…”

‘இதெல்லாம் எப்போ செஞ்சா…’ என்று தான் பார்த்திருந்தான். “சரி நான் இதுல என்ன பண்ணணும்ன்னு சொல்லு…” என்று அவளிடமே கேட்டு கற்றுக்கொண்டான்.

 

இவளிடம் கேட்பதா என்ற இறக்கமெல்லாம் அவனுக்கு எப்போதுமே இல்லை… தெரியாததை கற்றுணர்வது தவறில்லை என்று நினைப்பவன் அவன்.

 

இத்தனை நாட்களில் ஒன்றும் மட்டும் அவனுக்கு புரிந்தது. தான் அவள் சொல்வதெற்கெல்லாம் மண்டையை மண்டையை ஆட்டுக்கிறோம் என்று. அதில் அவனுக்கு சங்கடமில்லை மாறாய் சந்தோசமே தோன்றியது.

 

இப்படியே அவள் நினைவிலேயே இருந்தவனின் நினைவுகளை கலைத்து அவன் எண்ணத்தின் நாயகி அறைக்கதவை லேசாய் தட்டி உள்ளே வந்தாள்.

 

என்னவென்று அவன் பார்க்க “சாப்பிட வாங்க…”

 

“அதுக்குள்ளவா இப்போ தானே வந்தோம்…” என்றான் அவன் நேரம் சென்றது கூட தெரியாமல். அவனை விசித்திரமாய் ஒரு பார்வை பார்த்தவளின் கண்கள் மேலேயிருந்த கடிக்காரத்தை தொட்டு நின்றது.

 

அவளின் பார்வையை ஒட்டி பார்த்தவனுக்கு நேரம் இரண்டை நெருங்கியிருந்தது புரிய எழுந்து சென்று முகம் கழுவி வந்தான்.

 

இருவருமாய் சாப்பிட்டு முடிக்க அவன் மீண்டும் அறைக்குள் வாசம். ஜெயக்னா பின்னால் வருவாள் என்றிருக்க அவளோ அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.

 

மூணாரில் இருக்கும் வரை ஜெயக்னா வேலை வேலை என்று அதன் நினைப்பிலேயே இவனின் எண்ணங்களையும் மாற்றி வைத்திருந்தாள்.

 

இவன் ஆசையாக ஏதேனும் பேச வந்தால் வேறு பேசு பேச்சை மாற்றி வேறு வேலை என்று சொல்லி எதையாவது செய்துவிடுவாள்.

 

இவளின் இந்த போக்கைக் கண்டு தான் ராகவ் மாமனாரின் அழைப்புக்கிணங்கி இங்கு வர சம்மதித்திருந்தான்.

 

“ஜெயா நீயும் போய் கொஞ்ச நேரம் படு…” என்று அவள் அன்னை மகளை விரட்டியடிக்க அப்போதும் நேரம் கடத்தி வெகு நேரம் கழித்து அறைக்குள் வந்தாள்.

 

அங்கு கட்டிலில் ராகவ் சயனித்திருந்தான். ‘அப்பாடா தூங்கிட்டான்…’ என்று எண்ணிக்கொண்டு அங்கிருந்த மேஜையின் முன் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவள் அதில் சாய்ந்து தூங்கலாம் என்று எண்ணி சத்தமில்லாமல் உள்ளே நுழைந்தாள்.

 

ராகவ் தான் இவள் எப்போது வருவாள் என்று காதை தீட்டி காத்திருக்கிறானே!! சத்தமில்லாமல் இவள் உள் நுழைந்து கதவை தாழிட்ட அடுத்த நொடி அவன் நெஞ்சின் மீது விழுந்திருந்தாள். ஒரே நொடியில் அவளை இழுத்து அவன் மேல் சாய்த்திருந்தான்.

 

“என்னை விடு… என்ன பண்ணுறே நீ??” மரியாதை போய்விட்டிருந்தது.

 

“இதுவரைக்கும் ரொம்பவே வேஸ்ட் பண்ணிட்டேன்… இனிமே அப்படியிருக்க உத்தேசமில்லை…”

 

“இங்க பாரு எனக்கு இதெல்லாம் பிடிக்கலை… அப்புறம் நான் கத்துவேன் எங்கம்மா உள்ள வந்திருவாங்க…” என்று சிறுபிள்ளை போல் மிரட்டினாள் அவள்.

 

“ஹ்ம்ம் கத்து… கத்துடி…” என்றானவன்.

 

“அம்மாமா……….” என்று அவள் வாய் திறந்தது மட்டும் தான் தெரியும் ‘இம்’ என்று அவள் வாய் மூட வைத்திருந்தான் அவன்.

 

அவனிடமிருந்து அவள் திமிரவெல்லாம் இல்லை. ஆழ்ந்த நெடிய முத்தத்தில் அவள் எப்போது முழ்க ஆரம்பித்தாள் என்பதறியாமல் கண் மூடி கிறங்கியிருந்தாள்…

 

அவன் அவளை விடுக்கும் போதும் கண் திறந்தாளில்லை. அவன் அவளை லேசாய் பிடித்து உலுக்கவும் தோளை சிலுப்பி நிகழ்வுக்கு வந்திருந்தாள்.

 

நடப்பு லேசாய் புரிய விழிகளில் ஈரத்தின் பளபளப்பு. வழிந்துவிடுவேன் என்று அது அவளை மிரட்டிக் கொண்டிருக்கும் போதே அதை அவன் விரல்கள் துடைக்க வர அது வழிந்தேவிட்டது…

 

“நான் யாருன்னு தெரிஞ்சு தான் இதெல்லாம் செஞ்சீங்களா??” என்றாள் அவன் விழி பார்த்து.

 

“நான் இப்போ யாரு உனக்கு…” என்றான் அவன் பதிலுக்கு.

 

‘எதற்கிந்த அழுகை’ என்ற குழப்பமிருந்தாலும் அவள் கேள்வி அவனுக்கு எதுவோ உணர்த்த அவளோ மௌனியாய் எழுந்து வெளியில் சென்றுவிட்டாள்.

 

நான் யாரென்ற

கேள்வி எனக்குள்

நீயோ நீ எனக்கு

யாரென்று கேட்கிறாய்

என்னையே என்னால்

அறிய முடியாமல்

உனக்குள்ளும்

தொலைய முடியாமல்

தொண்டைக்குள்

சிக்கிய முள்ளாய்

தவிர்க்க முடியா

சில நினைவுகள்!!