Advertisement

அத்தியாயம் – 15

 

சந்தியா தன் குடும்பத்தினருடன் மூணாருக்கு வந்திருந்தாள் விடுமுறையை கழிப்பதற்கு. சந்தியா வந்திருப்பதால் மீனாட்சியும் பாட்டியும் கூட அங்கு வந்திருந்தனர்.

 

அவள் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து ராகவ் முன்பு போல அவளிடத்தில் பேசவில்லை. யார் முதலில் என்று இருவருக்குள்ளும் பட்டிமன்றம்.

 

நீ தானே வேண்டாமென்றாய் என்று அவனும், வேண்டாமென்றால் விட்டுவிடுவாயா என்று அவளும் தங்களின் மனதிற்குள் வீம்பு பிடித்துக் கொண்டு சுற்றி வந்தனர்.

 

போடிமெட்டில் இருந்து வந்த பின்னே இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கடந்து செல்லும் போது வெட்டியே சென்றுக் கொண்டிருந்தது.

 

மறுநாள் சந்தியா வருவதாக இருந்ததால் முதல் நாள் நேரமாக வீட்டிற்கு வந்திருந்தான் ராகவ்.

 

ஜெயக்னா இரவு உணவுக்கென்று எதையோ சமைத்துக் கொண்டு சமையலறையில் உருட்டிக் கொண்டிருந்தாள்.

 

“நாளைக்கு சந்தியாக்கா வர்றா…” என்று ஹாலில் அமர்ந்தவாறே சத்தமாக சொன்னான்.

 

“தெரியும்… தெரியும்…” என்று உள்ளிருந்து ஒரு குரல்.

“இதெல்லாம் மட்டும் தான் தெரியும்” என்று நொடித்துக் கொண்டான் அவன் வெளியில் சற்று சத்தமாகவே.

 

“வேற என்ன தெரியணும்??” என்று சும்மாயில்லாமல் உள்ளிருந்து குரல் கொடுத்துவிட்டாள் அவள்.

 

ராகவிடமிருந்து பதிலேதுமில்லை, ஓரிரு நொடிகள் அவன் பதில் பேசுவான் என்று அவள் காதை தீட்டிக் காத்திருக்க அமைதி மட்டுமே…

 

“கேள்வி கேட்டா பதில் சொல்லணும், இப்படி கமுக்கமா இருந்துகிட்டா என்னன்னு நினைக்கிறதாம்…” என்று அவனுக்கு கேட்காதவாறு வாய்விட்டு முணுமுணுத்தாள் அவள்.

 

“நான் கேக்கறதுக்கு எல்லாம் நீ பதில் சொல்லிட்டே இருக்கணும்ன்னு எனக்கும் ஆசையா தான் இருக்கு… அது போல உன் கேள்விக்கும் நீ போதும் போதும் சொல்ற அளவுக்கு பதில் கொடுக்க தான் ஆசையா இருக்கு, வார்த்தையா இல்லை” என்று காதுக்கு அருகாமையில் கேட்ட குரலில் அவள் திடுக்கிட்டு திரும்ப ராகவ்வின் மீதே இடித்து நின்றாள்.

 

‘இவன் வில்லங்கமா கேட்பான் அப்படிங்கறதையே மறந்திட்டமே’ என்று மனதிற்குள்ளாக தன்னையே குட்டிக்கொண்டாள் அவள்.

 

வெளியில் ஒன்றும் தெரியாதவள் போல் பாவனை காட்டி மீண்டும் அவள் சமையலில் முழ்க “இப்போ பதில் சொல்லாம இருக்கறது யாராம்??” என்றான் அவன்.

 

“நீங்க எதுவுமே கேட்கவேயில்லையே” அவள் வாய் தான் சும்மாயில்லாமல் அவனுக்கு பதில் கொடுத்து பின் தன்னையே நொந்துக் கொண்டது, ‘வாயை அடக்குடி ஜெயா’ என்று.

 

“கொஞ்சம் திரும்பு” என்ற அவன் குரலுக்கு அடிபணியாமல் வேண்டுமென்றே கடாயில் எதையோ கிளறிக் கொண்டிருந்தாள்.

 

அவளருகே வந்து அடுப்பை அணைத்தவன் அவளை தன் புறம் திருப்பினான். கண்டிப்பாக எதுவோ வில்லங்கமாக செய்யப் போகிறான் என்று இதயம் தாளம் தப்பிக் கொண்டிருந்தது அவளுக்குள்.

 

அவனோ எதுவும் செய்யாமல் “என்ன பிரச்சனை உனக்கு??” என்றான்.

 

“என்ன??”

 

“அதை தான் கேட்குறேன்??”

 

“ஒண்ணுமில்லையே…”

 

“நிஜமாவே ஒண்ணுமில்லையா… அப்புறம் ஏன்??”

 

“ஏன்னா??”

 

“நான் நெருங்கி வந்தா நீ விலகிப் போறியே?? அது ஏன்??”

 

‘இதை இவன் கேட்டக் கூடாது என்று எண்ணினால் அதையே கேட்டு வைக்கிறானே… என்ன பதில் சொல்ல இவனுக்கு…’ என்றிருந்தது அவளுக்கு.

 

‘நான் சொன்னால் இவனுக்கு புரியுமா… சிறுபிள்ளை எண்ணம் என்று நினைத்துவிட்டால்…’ என்று எண்ணும் போதே கண்கள் கரித்தது.

 

முதல் முறை அவனைப் பார்த்த போது அவன் பேச்சை கேட்டபோது அவன் மேல் கொண்டிருந்த தீராத ஆத்திரம், கோபம் எல்லாம் இப்போது எங்கே சென்றது என்று அவளுக்கே தெரியவில்லை.

 

‘நான் மாறிவிட்டேனா!! இல்லை இவன் என்னை மாற்றிவிட்டானா!! இல்லை எனக்காய் இவன் மாறியதால் நான் மாறிப் போனேனா!!’ என்று அடுக்கடுக்காய் யோசனைகள் அவளிடத்தில்.

 

இதில் ஒன்றிற்கும் அவளிடம் விடையில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு புரிந்தது அது ராகவை அவளுக்கு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்று.

 

அவன் அணைக்கும் முன் அவள் தடுக்க முயற்சித்திருக்கிறாள் ஆனால் அவன் அணைப்பில் எதிர்ப்பை காட்டியிருக்கவில்லை.

 

இப்படி ஒவ்வொன்றும் நினைவிற்கு வந்து அவளை இம்சை செய்தது. மௌனமே மொழியாக்கி அவனை நிமிர்ந்து நோக்காமல் விழியை தரையை நோக்கி செலுத்தியிருந்தாள்.

 

அவனிடம் ஏக்கப்பெருமூச்சு இப்போது. “ஹ்ம்ம் சொல்ல மாட்டே??” என்றுவிட்டு சற்று கோபத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறி சென்றுவிட்டான் அவன்.

 

அவன் பேச்சு லேசாய் நெஞ்சை வலிக்கச் செய்ய ஈரம் அவள் விழிகளில்.

 

மறுநாள் சந்தியாவுடன் அவள் பிள்ளைகள், மீனாட்சி, பாட்டி என்று வந்ததில் வீடே கலகலத்தது. இப்போது மழை கொஞ்சம் இல்லாமலிருந்ததால் மீனாட்சி கொஞ்சம் சமாளித்துக் கொண்டார்.

 

ஆனாலும் குளிர் அவருக்கு கொஞ்சம் ஒத்துக் கொள்ளாததில் ஜலதோஷம் மட்டும் தோஷமாய் அவரை விடாமல் பற்றிக் கொண்டது.

 

ராகவ் மற்றவர்கள் முன் அவளிடம் நன்றாகவே பேசினான். அவர்கள் அறையில் இருவரும் முதுகுக்காட்டியே இருந்தனர்.

 

ராகவ் காலையில் எழுந்து குளித்து முடித்திருந்தவன் லாட்ஜிற்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான். ஜெயக்னா அவனிடம் லாட்ஜ் விஷயமாய் ஏதோ சொல்லவென்று உள்ளே வந்திருக்க அவன் உடைமாற்றுவது கண்டு வெளியே செல்லப் போனாள்.

மேஜையில் லேப்டாப் திறந்திருக்க குனிந்து அதை ஷட்டவுன் செய்ய அப்போது சந்தியாவின் நான்கு வயது மகன் கிருஷ் வேகமாய் ஓடிவந்து அவள் மீது மோத எதிர்பாராதவள் கீழே சாய்ந்திருந்தாள்.

 

அவளின் அம்மாவென்ற சத்தம் கேட்டு தான் ராகவ் திரும்பினான். “என்னாச்சு…” என்று அவளருகே வந்தவன் அவளை கைக்கொடுத்து எழுப்பினான்.

 

“என்னாச்சு…” என்றவனின் உதடுகள் அவள் கன்னத்தை தொட்டுக் கொண்டிருக்க அருகில் நின்றிருந்த கிருஷ்ஷை கண்டு “என்ன பண்றீங்க குழந்தை முன்னாடி…” என்று தள்ளிச் சென்றாள்.

 

மிரட்சியாய் நின்று அவனை பார்த்திருந்த கிருஷ்ஷை அப்போது தான் பார்த்தான் அவன். “நீ போ அத்தைக்கு ஒண்ணுமில்லை மாமா பார்த்துக்கறேன்” என்று அவன் பயம்போக்கி அனுப்பி வைத்தான்.

 

“அவனெல்லாம் இடிச்சு நீ கீழ விழுந்திருக்கே, நம்புற மாதிரியா இருக்கு…” என்றான் பழைய குறும்பு தலையெடுக்க.

 

“எனக்கென்ன தெரியும் அவன் வந்து இடிப்பான்னு… உங்ககிட்ட லாட்ஜ் பத்தி பேச வந்தேன்… நீங்க டிரஸ் பண்ணிட்டு இருந்தீங்களேன்னு இந்த லேப்டாப்பை ஷட்டவுன் பண்ணிட்டு இருந்தேன்”

 

“அதுக்குள்ளே வேகமா வந்து மோதிட்டான்… நான் என்ன அதை எதிர் பார்த்தேனா…” என்று தன் கணவனை பார்த்து முறைத்திருந்தாள்.

 

“எதிர்பார்த்திருந்தா மட்டும் விழாம இருந்திருப்பீயா என்ன… நீ தான் குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு சொல்றவளாச்சே!!”

 

“எனக்கு மீசையே இல்லை…”

 

“சரி அப்போ உன் வாயிலை ஒட்டலைன்னு வைச்சுக்குவோம்…”

 

“போடா…” என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டாள்

 

அவளின் போடாவில் உரிமை தெரிய அவளை இப்போது ஆசையாய் பார்த்து வைத்தான் அவன்.

 

“ஏதோ சொல்ல வந்தேன்னு சொன்னே??” என்று ஆரம்பித்தான்.

 

“ஆமாம்ல…” என்றவள் லாட்ஜ் கணக்கு வழக்கை பற்றி அவனிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள், ராகவிற்கு எப்போதும் போல் பெருமூச்சே இப்போதும்.

 

“ஒரு நிமிஷம் நில்லு??”

 

வெளியில் செல்லப் போனவள் பாதியில் நின்று திரும்பி பார்த்தாள் அவனை.

 

“உனக்கு என்கிட்ட என்ன பிரச்சனை??” என்றான் சீரியஸ் குரலில்.

 

அவனுக்கு அவள் ஏன் தன்னிடம் இருந்து விலகிப் போகிறாள் என்று தெரிந்தே ஆகவேண்டி இருந்தது. அவளுக்கு அவனை பிடித்திருக்கிறது என்று புரிந்தது.

 

ஆனாலும் சரிவர பேசாமல் ஏதோவொரு இடத்தில் தன்னை தள்ளி நிறுத்துகிறாள் என்ற கோபம் அவனுக்குள்.

 

“ஒண்ணுமில்லை…”

 

“ஏதோ இருக்கு… என்னன்னு சொல்லு?? உன் பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியணும்??”

 

‘அதை நீங்களே கண்டுப்பிடிங்க” என்றது அவள் மனதின் குரல்.

 

“நீ மனசுல நினைக்கறது எல்லாம் கண்டுப்பிடிக்க நான் ஒண்ணும் மந்திரவாதி இல்லை… நீயா சொல்லாம எனக்கு எதுவும் தெரியப் போறதில்லை…” என்று அவளின் மனக்குரலுக்கு பதில் சொல்லியிருந்தான் அவன் இப்போது.

 

“எனக்கு வேலையிருக்கு நான் போறேன்…” என்று நகரப் போனவளின் கரத்தை உறுதியாய் பற்றி தன் புறம் திருப்பினான் அவளை.

 

“என்னை பார்த்து பதில் சொல்லிட்டு போ…”

 

“அதான் சொல்றேன்ல எதுவுமில்லைன்னு”

 

“ஏதோ இருக்கு?? எதையோ மறைக்குறே என்கிட்ட இருந்து… என்னன்னு எனக்கு தெரியலை… என்னை உனக்கு புடிக்கலையா” என்ற அவன் கேள்விக்கு அவளிடம் இருந்து பதிலில்லை.

 

ஆம் என்றால் மேற்கொண்டு பேச்சை வளர்ப்பான் என்று அவள் அமைதியாயிருக்க அவன் அவள் அமைதியை கண்டு வேறு கேட்டான்.

 

“சரி அப்போ என் முடிவை கேட்டுக்கோ… இதுவரைக்கும் நீ தானே சொன்னே… இப்போ நான் சொல்றேன், உனக்கு நான் டிவோர்ஸ் கொடுக்கறேன்…”

 

“உனக்கு பிடிச்சவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ… உங்கப்பா கட்டாயத்துக்காக என்னை கல்யாணம் பண்ணி நீ கஷ்டப்பட்டது எல்லாம் போதும்”

 

“வாயை மூடுங்க…” என்று கத்தியவள் அவன் வாய் மேலேயே ஒரு அடி வைத்தாள்.

 

அந்த அடி அவனுக்கு வலிக்கவேயில்லை, மாறாய் உள்ளே மகிழ்ச்சியை உண்டாக்கியது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “எதுக்குடி அடிக்கறே??” என்றான் கோபமாய் காட்டிக்கொண்டு.

 

“பின்னே கொஞ்சுவாங்களா…”

 

“அதை தான் நீ செய்ய மாட்டேங்கறியே… இவ்வளோ நாளா நீ தானே தொட்டதுக்கெல்லாம் சொல்லிட்டு இருந்தே டிவோர்ஸ் தர்றேன்னு…”

 

“இப்போ உனக்கு பிடிக்காத பந்தத்துல இருந்து நான் விலக்கு தர்றேன்னு சொல்றேன், அதுக்கும் திட்டுற”

 

“நான் கேட்டனா உங்களை…”

 

“நான் கேட்காதப்போ நீ மட்டும் அதையே சொன்னியே…” என்று திருப்பினான்.

 

“சொன்னா கொடுத்திட்டனா…”

 

“நானும் இன்னும் கொடுக்கலையே, கொடுக்கறேன்னு தானே சொன்னேன்…”

 

“திரும்ப திரும்ப அதையே சொல்லாதீங்க…”

 

“அப்போ டிவோர்ஸ் வேணாமா…”

 

“வேணாம்…”

 

“அப்போ என்னோட வாழ நீ தயாரா இருக்கியா??”

 

இதற்கு மட்டும் பதிலில்லை அவளிடம்… மனம் முழுதும் இப்போது அவன் இருந்தாலும் எதுவோ ஒரு தயக்கம் அதை மீறி வெளியில் வரமுடியவில்லை அவளால்.

 

“உனக்கு ஒரு மாசம் டைம் தர்றேன்… ஒண்ணு உன் பிரச்சனை என்னன்னு என்கிட்ட நீயா வந்து சொல்லு… இல்லைன்னா நான் சொன்னது தான் முடிவு…”

 

“எப்போ பார்த்தாலும் உன் பின்னாடியே அலையறேன் அதுக்காக தான் அலையறேன்னு நினைக்காத… எனக்கு வேற எந்த எண்ணமும் இல்லை…”

 

“மனசு ஒத்து வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே இல்லை… நீயும் நானும் தினமும் பேசிக்கறோம், லாட்ஜை பத்தி, மத்தவங்களை பத்தி மட்டுமே…”

 

“நம்மளை பத்தி நம்ம வாழ்க்கை பத்தி நம்ம எதிர்காலத்தை பத்தி இதுவரைக்கும் மனசுவிட்டு ஒரு நாளும் பேசினதில்லை…”

 

“நீயும் நானும் ரயில் சிநேகிதர்கள் இல்லை… கொஞ்ச நேர பயணத்துக்காக மட்டும் பேசிக்கறதுக்கு… வாழ்க்கை முழுக்க நம்ம பயணம் தொடரும்… அதை கூட நீ என்கிட்ட பேசத் தயாரா இல்லைன்னும் போது நான் என்ன செய்ய”

 

“நம்ம கல்யாணத்தன்னைக்கு நீ எனக்கு டிவோர்ஸ் தர்றேன்னு சொன்னதுக்காக தான் நான் உன்னை கல்யாணம் பண்ணேன்னு நீ நினைச்சிருந்தா அது உன்னோட முட்டாள்த்தனம்”

‘இல்லை நான் அப்படி நினைக்கவில்லை’ என்று அவள் மனம் கூப்பாடு போட்டது.

 

“நீ என் முன்னாடி வந்து நின்னு அப்படி கேட்டவிதம் என்னை எதுவோ செஞ்சுது… உனக்காக சரின்னு சொல்லணும்ன்னு தோணிச்சு”

 

“இனி நீ தான் என் வாழ்க்கைன்னு நினைச்சு தான் உன்னை கல்யாணம் பண்ணேன்… இருந்தாலும் இந்த திடீர் திருமணத்தால எனக்கும் சரி உனக்கும் சரி கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டுச்சு. உன்னை முழுசா என் மனைவியா நான் நினைக்கணும்… என்னை நீ கணவனா ஏத்துக்கணும்…

 

“எனக்கு புரிஞ்சிடுச்சு… நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணலை… இல்லைன்னா புரிஞ்சும் புரியாம நடிக்கணும், இல்லை என்னை புடிக்காம இருக்கணும்…”

 

“எதுக்காக இப்படி பண்ணறேன்னு எனக்கு தெரியலை… எல்லாருக்காகவும் இந்த கல்யாணம் அவசரமா நடந்திருக்கலாம். அதனால தான் ஒருத்தர் மனசு ஒருத்தருக்கு புரியணும்ன்னு இவ்வளவு நாளும் காத்திட்டு இருந்தேன்…”

 

“இனிமேலும் காத்திட்டு இருக்க எல்லாம் எனக்கு பொறுமையில்லை… உன்னை பார்க்கும் போதெல்லாம் வருஷத்துக்கு ரெண்டு குழந்தைன்னு பெத்து நம்ம வீட்டை நிறைக்கணும்ன்னு ஆசை வருது”

 

“என் கூடவே பேசவே நீ தயாரா இல்லைன்னும் போது இதெல்லாம் எப்படி சாத்தியம்… எதுவா இருந்தாலும் இனி உன் கையில தான்… நீயே முடிவு பண்ணு…” என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டான் அவன்.

 

அப்படியே கட்டிலில் அமர்ந்தவளுக்கு அவன் பேசிய விஷயத்தின் சாராம்சம் புரிந்து உயிர் வரை தீண்டி தேகம் சிலிர்க்கத் தான் செய்தது.

 

தான் தான் இந்த விஷயத்தில் இனி முடிவெடுக்க வேண்டும் என்று புரிய மனம் பலவீனப்படுவதும் புரிந்தது. சந்தியா அழைக்கும் குரல் கேட்க எழுந்து சென்றாள்.

 

சந்தியாவின் குடும்பம் விடுமுறை முடியும் தருவாயில் கிளம்பினர், உடன் ராகவையும் ஜெயக்னாவையும் அழைத்துக் கொண்டு.

 

திருமணமாகி இத்தனை நாட்களில் சந்தியா பலமுறை அழைத்தும் அவள் வீட்டிற்கு உடனே செல்ல முடியாத சூழல், இப்போது அவள் தம்பியுடன் மல்லுக்கட்டி இருவரையும் உடன் அழைத்துச் சென்றாள் சென்னைக்கு.

 

வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் அனைவரும் எங்கு சுற்றிப் பார்க்க செல்வார்களோ அதை மாற்றாமல் அவர்களும் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரைக்கு சென்றிருந்தனர்.

 

ஜெயக்னா முதன் முறையாக சென்னைக்கு வருகிறாள். கடற்கரையை அவள் பார்த்திருக்கிறாள் தான் திருச்செந்தூர் சென்ற போது.

 

ஆனால் இவ்வளவு ஜனத்திரள்களுடன் நீளமான கடற்கரையை இப்போது தான் பார்க்கிறாள்.

 

ஆங்காங்கு இளம் காதல் ஜோடிகள் அணைத்துக் கொண்டு ஒரு பக்கம் நடக்க, குடும்பமாய் வந்திருந்தவர்கள் போர்வையை மணலில் விரித்து குடும்பத்தினருடன் சந்தோசமாய் பேசிக் கொண்டிருந்தனர்.

 

அவர்களும் குடும்பமாய் ஓரிடத்தில் அமர்ந்திருந்தனர். ராகவ் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஸ்நாக்ஸ் வாங்கி வரச் சென்றான். ஜெயக்னாவின் பார்வை அந்த கடற்கரையை அங்குலம் அங்குலமாய் அளந்து கொண்டிருந்தது.

 

உடன் யார் இருக்கிறார்கள் இல்லை என்றெல்லாம் பார்க்காமல் வேடிக்கை பார்த்துக்  கொண்டிருந்தவளின் கண்கள் பிரேக் போட்டாற் போன்று ஓரிடத்தில் நின்றது.

 

இதயம் வேகமாய் துடித்தது அங்கு கண்ட காட்சியை பார்த்து. ராகவ் தான் அங்கு நின்றிருந்தான் உடன் அவள் அக்கா மேக்னாவுடன்.

 

இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாத போதும் ஏதோ தீவிர விவாதம் போல் தோன்றியது. பேசி முடித்ததும் ராகவ் தன் பையில் இருந்து எதையோ அவளிடம் நீட்டவும் அவளும் வாங்கிக் கொண்டாள் அதை.

 

‘எனக்கே இவ உறவு வேணாம்ன்னு இருக்கேன்… இவருக்கு என்ன வந்துச்சு…’ என்று கோபம் வந்தது அவளுக்கு.

 

இருவரையும் ஒன்றாய் பார்த்து உள்ளே கடுகடுவென்றது. அதுவரையில் இனிமையாய் இருந்த கடற்கரை இப்போது அவள் கவனத்தில் இல்லை.

 

ராகவ் அருகே வந்திருக்க “கிளம்பலாமா??” என்றிருந்தான்.

 

“ராகவ் நாம வீட்டுக்கு போகும் போது வீட்டு பக்கத்துல இருக்க கோவில்க்கு போயிட்டு போகலாம்டா…” என்று சந்தியா சொல்ல சரியென்று தலையசைத்தான் அவன்.

 

ஜெயக்னா இயந்திரமாய் எழுந்து அவர்களுடன் நடந்து வந்தாள். ‘என்னாச்சு இவளுக்கு, எதுக்கு இப்படி உம்முன்னு வர்றா…’ என்று எண்ணிக் கொண்டாலும் அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை அவன்.

 

கேட்டால் மட்டும் பதில் சொல்லி விடுவாளா என்ன… அப்படியே சொன்னாலும் குதர்க்கமாய் தான் பதில் வரும் என்று எண்ணி அமைதியாக இருந்தான்.

 

ஏழு மணி போல கோவிலை வந்தடைந்தனர். அது அம்மன் கோவில் வெள்ளிக்கிழமை என்பதால் சற்று கூட்டமிருந்தது.

அம்மனை கண்டதும் தன் மனதில் இருந்த பாரத்தை பார்வையால் அம்மனிடம் இறக்கி வைத்துக் கொண்டிருந்தாள் ஜெயக்னா. அய்யர் குங்குமம் கொடுக்க சந்தியா அதை வாங்கி நெற்றியில் இட்டு பின் தன் மாங்கல்யத்தில் வைத்துக் கொண்டிருந்தாள்.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜெயா “இப்படி ஏன் செய்யறீங்க??” என்றாள்.

 

“புருஷன் ஆயுள் நீடிக்கணும்ன்னு வேண்டிக்கிட்டு வைக்கிறது தான்…” என்றாள் அவள்.

 

“அப்போ நமக்காக அவங்க என்ன செய்வாங்க…” என்று எப்போதும் போல் வழக்கடித்தாள் அவள்.

 

“நல்லா தான்டிம்மா பேசறே… என் புருஷன் இதெல்லாம் செய்ய மாட்டாரு, வேணா உன் புருஷனுக்கு தாலி கட்டி உன் ஆயுளுக்கு அவனை வேணா தாலிக்கு குங்குமம் வைச்சுக்க சொல்லு…” என்று அவளுக்கு குறையாதவளாய் பதில் கொடுத்தாள் சந்தியா.

 

அவர்கள் பேசுவதை பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளருகே வந்தான்.

 

“என்னாச்சு உன் முகமே சரியில்லை…”

 

“ஒண்ணுமில்லை…” என்று வெடுக்கென்று முகம் திருப்பினாள். ‘போடி…’ என்று எண்ணிக்கொண்டு அவனும் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை.

 

இரவு உணவுக்கு பின் இருவரும் அறைக்கு வந்திருக்க ராகவ் கட்டிலின் உள்ளே ஏறி படுத்துக் கொண்டான்.

 

“அவகிட்ட என்ன பேச்சு உங்களுக்கு” என்ற குரலில் எழுந்து அமர்ந்திருந்தான் இப்போது.

 

“யார்கிட்ட??”

 

“நானே அவ உறவு வேணாம்ன்னு இருக்கேன்… நீங்க என்ன பேசிட்டு இருந்தீங்க அவகிட்ட??”

 

“ஓ!! நீ பார்த்திட்டியா!! அப்போவே பக்கத்துல வந்திருக்க வேண்டியது தானே…”

 

“எதுக்கு??”

 

“அப்புறம் எதுக்கு இப்போ என்னை கேள்வி கேட்குறே??”

 

“என்ன சொன்னா அவ??”

 

“அதை நீ அப்போவே வந்து தெரிஞ்சிருக்கலாமே!!”

 

“எனக்கு பிடிக்கலை…”

 

“என்ன பிடிக்கலை??”

 

“அவளை பிடிக்கலை… அவகிட்ட நீங்க பேசினது பிடிக்கலை…”

 

‘லைட்டா பொறாமைப்படுறாளோ’ என்று எண்ணியவன் அவள் முகம் கூர்ந்து ‘ச்சே!! ச்சே!! இருக்காது’ என்று சொல்லிக்கொண்டான் தனக்குள்.

 

“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை… என்ன வேணுமாம் அவளுக்கு??”

 

“கண்டிப்பா நான் இல்லை…”

 

“ஓ!! உங்களுக்கு அப்படி வேற எண்ணமிருக்கா??” என்று பாய்ந்தாள்.

 

இதற்கு மேல் வாயை திறக்காமல் இருந்தால் தனக்கு அடி கண்டிப்பாக விழும் என்று எண்ணியவன் “அவங்க ப்ரோப்ளம்ஸ் பத்தி சொல்லிட்டு இருந்தாங்க…”

 

“நீயும் என்னோட தான் இருக்கேன்னு சொன்னேன்… உன்னை பார்க்க சொன்னேன், ஆனா அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க…”

 

“என்னை எதுக்கு அவ பார்க்கணும்?? நீங்க ஏன் அப்படி சொன்னீங்க??”

 

“வேற எப்படி சொல்லியிருக்கணும் நானு… உங்க அக்கா உன்கிட்ட பேசணுமா இல்லை என்கிட்ட பேசணுமா”

 

“அது தான் உங்களுக்கே தெரியுதே அப்புறம் ஏன் அவகிட்ட நின்னு பேசிட்டு இருந்தீங்க… என்னவோ கொடுத்தீங்க வேற”

 

‘அதையும் பார்த்திட்டாளா’ என்று எண்ணியவன் “உனக்காக மட்டும் தான் அவங்ககிட்ட பேசினேன்”

 

“நிஜமா தான் ஜெய் சொல்றேன் உனக்காக மட்டும் தான் பேசினேன். உங்க மாமா வீட்டுல அவங்களை மதிக்கறது இல்லையாம்…”

 

“ரொம்ப வருத்தப்பட்டாங்க… உங்க மாமா இருக்கும் போது ஒரு மாதிரி இல்லாத போது வேற மாதிரின்னு நடக்கறாங்களாம்… அவங்க செலவுக்கு கூட மத்தவங்களை எதிர்பார்த்து நிக்க வேண்டி இருக்குன்னு வருத்தமா சொன்னாங்க…”

 

“அதுக்காக நீங்க உங்ககிட்ட இருந்து காசை எடுத்து நீட்டிட்டீங்களாக்கும்…” என்றாள் அவனைப் பார்த்து.

 

“வேற என்ன செய்ய சொல்றே??”

 

“நல்லா கேட்டுக்கோங்க அவ எனக்கு அக்காவே இல்லை, அந்தாளை என் மாமான்னு சொல்லாதீங்க… இனிமே நீங்க அவங்களோட பேசுறதை பார்த்தேன், கொலைக்காரி ஆகிடுவேன் நானு…” என்று விழிகளை உருட்டி அவள் சொன்ன தினுசில் அமைதியானான் அவன்.

 

ஆனால் அவன் மனதிலோ ‘அவங்க வேணாம்ன்னு போனதுனால தானே நீ எனக்கு கிடைச்சே, அதுக்காக தான் அவங்ககிட்ட பேசினேன்’ என்று எண்ணம் ஓடியது. திரும்பி ஜெயக்னாவின் முகம் பார்த்தான், கடுகடுவென்றிருந்தாள் அவள்.

நீ இன்று

நானாகிப் போனேன்!!

நான் இன்று

நீயாகிப் போனேன்!!

நாம் என்று

ஒன்றாகிப் போவோம்!!

நாள் என்றோவென

வேண்டிப் போனேன்!!

அனுதினமும்

வேண்டிப் போனேன்!!

Advertisement