Advertisement

அத்தியாயம் – 6

 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று மீனாட்சி மற்றும் அவருடன் இருந்த சந்தியா இருவரையும் பார்த்து சொன்னார்.

 

‘இந்த நேரத்தில் என்ன பேச வேண்டும்’ என்ற யோசனை இருவருக்குமே… “உங்க ஹஸ்பன்ட் எங்கம்மா?? அவரையும் கூப்பிடுங்களேன்…” என்றார் சரவணன்.

 

“அப்பாவை கூட்டிட்டு வா…” என்று சந்தியா தன் மகனை ஏவ முருகன் வரவும் அவர்கள் அனைவரும் மாப்பிள்ளையின் அறைக்குள் சென்றனர்.

 

சரவணன் காலில் விழாத குறையாக நடந்ததை அனைவரிடமும் சொல்லி முடித்து மன்னிப்பு கேட்டார். பின் ஜெயக்னா பற்றியும் கூற அங்கு நிசப்தம் மட்டுமே.

 

“நான் இப்படி சொல்றனேன்னு நினைக்க வேண்டாம்… என்னால நீங்க ஏன் அவமானப்படணும்… இந்த கல்யாணம் நினைச்ச மாதிரியே நடக்கட்டுமே…”

 

“ஜெயாவை உங்களுக்கு பிடிச்சிருந்தா அவளையே கட்டிக்கொடுக்க நாங்க தயாரா தான் இருக்கோம்…” சொல்லி முடித்தார்.

 

அங்கிருந்த மற்றவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… பெண் பார்த்தது ஒரு பெண்ணை இப்போது திருமணம் வேறு ஒரு பெண்ணுடனா என்ற எண்ணம் அவர்களுக்கு.

 

சந்தியா தன் அன்னையை பார்க்க அவருக்கு என்ன செய்வதென்று புரியாத நிலை தான்… முருகனுக்கு தான் கோபமாய் வந்தது, ஆனாலும் நொந்து நூலாகியிருக்கும் பெண்ணின் தகப்பனிடம் என்ன பேசுவது என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

 

“அம்மா என்னம்மா??”

 

“இதெல்லாம் சரியா வருமா??” என்றார் மீனாட்சி.

 

“அம்மா கல்யாணம் நிக்கறதை விட இதுவே பரவாயில்லை தானேம்மா…” என்றாள் சந்தியா.

 

“அதுக்காக அவங்க வீட்டு பொண்ணையே கட்டிவைக்கலாம்ன்னு சொல்றியா…” என்று குரலை உயர்த்தினான் முருகன்.

 

அதை கேட்டு ஒரு கணம் கூனி குறுகி தான் நின்றார் சரவணன். தன்னை இப்படி நிலையில் வைத்த மூத்த மகளின் மீது அவருக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.

 

அவர் மனதில் இரண்டு வித குழப்பங்கள் அதற்காக தான் அவர் இவ்வளவு அவசரம் காட்டியதே… ஒரு புறம் மூத்த மகளினால் பின்னால் இளைய மகளின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற கவலை.

 

பல பேர் கூடிய கூடத்தில் மூத்த மகளின் இந்த செயலினால் தான் மட்டுமல்லாது மாப்பிள்ளை வீட்டினரும் பாதிப்படுவர்…

 

அதற்கு பிராயச்சித்தம் செய்யும் வகையிலும் ஜெயக்னாவின் வாழ்க்கை குறித்த அச்சமும் ஒன்று சேர்ந்து தான் அவரை அம்முடிவை எடுக்க வைத்தது. என்ன சொல்வார்களோ என்று அவர் நின்றிருந்தார்.

 

“ஏங்க என்ன பேசறீங்க நீங்க?? அவர் சொன்னதை கேட்டீங்க தானே… அப்புறமும் இப்படி பேசினா என்ன அர்த்தம்… ஒருத்தர் தப்பு பண்ணா எல்லாரும் அப்படியே இருக்கணும்ன்னு அவசியம் இல்லை…” என்று சந்தியா தன் கணவனை கண்டித்தாள்.

 

பின் அன்னையின் அருகில் வந்து “அம்மா மேக்னா ரொம்ப அடக்கம், அமைதின்னு தான் அவளை தேர்ந்தெடுத்தோம். இப்போ அந்த பொண்ணு இல்லைன்னு ஆகிப்போச்சு, இந்த ஜெயா பொண்ணும் அழகு தான்மா”

 

“கொஞ்சம் துருதுருன்னு இருப்பா போல தெரியுது… அதை தவிர அவளை குறையா நினைக்க ஒண்ணுமில்லையேம்மா… சரின்னு சொல்லுங்களேன்…” என்றாள் சந்தியா.

 

“நான் பொண்ணை பத்தி எல்லாம் யோசிக்கலை சந்தும்மா… உன் தம்பி, அவனுக்கு பிடிக்கணும்ல, நாமே பேசினா எப்படி…” என்றார் அவர் யதார்த்தம் உரைத்து.

 

“ஹ்ம்ம் அதுவும் சரி தான்…” என்றவள் “ஏங்க ராகவ்வை கூட்டிட்டு வாங்க… அவன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிறலாம்…” என்றாள்.

 

மனைவியை முறைத்துக்கொண்டே வெளியே சென்றான் முருகன். மேடையில் தனியே நின்றிருந்த ராகவிற்கு ஏதோ பிரச்சனை என்ற அளவில் புரிந்தது.

 

ஆனால் என்ன பிரச்சனை என்பது தெரியாமல் நின்றிருந்தவனை முருகன் அழைக்கவுமே அவன் பின்னேயே சென்றான். மண்டபத்திலும் சொந்தங்கள் தங்களுக்குள்ளே என்னவோ ஏதோவென்று குசுகுசுவென்று பேச ஆரம்பித்தனர்.

 

“என்னாச்சு மாமா??” என்று கேட்டவனிடம் “நீ வா…” என்று மட்டும் சொன்னவன் மணமகன் அறைக்குள் நுழைந்திருந்தான்.

 

இப்போது விஷயம் அவனிடம் சொல்லப்பட அவனோ யோசனையாய் நின்றான். “என்னடா யோசிக்கற, சரின்னு சொல்லு…” என்று அவசரப்படுத்தினாள் சந்தியா.

 

“எனக்கு அம்மாகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…” என்று அங்கிருந்தோரை பார்த்தான்.

 

“எங்களைவிட்டு என்ன ரகசியம் உனக்கு??” என்றாள் சந்தியா லேசான முறைப்புடன்.

 

“உனக்கு தெரியாம எதுவுமில்லை அக்கா… அதுக்கு முன்னாடி நான் அம்மாகிட்ட பேசணும், கொஞ்சம் வெளிய இருங்க… அப்படி பார்க்காதேக்கா, எதுவா இருந்தாலும் உங்களுக்கு தெரியாம இருக்கப் போறதில்லை” என்றான் அவன் குறிப்பாய் சரவணன் சத்யனை பார்த்து.

 

புரிந்துக்கொண்டவர்கள் வெளியேற அவனும் மீனாட்சியும் மட்டுமே. “அம்மா நீங்க என்ன நினைக்கறீங்க??”

 

“இல்லை ராகவா கல்யாணம் நின்னு போயி உனக்கு வேற பொண்ணு கிடைக்காம போய்ட்டா எனக்கு கவலையா இருக்குப்பா…”

 

“நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா அம்மாக்கு சந்தோசம் தான்… எதுவா இருந்தாலும் உன் முடிவு தான்..” என்றார் அவர்.

 

“அம்மா அதுக்காக பெரிய பொண்ணு இல்லைன்னா சின்ன பொண்ணுன்னு கட்டிக்கணுமா?? என்னம்மா இதெல்லாம்??”

 

“இதென்ன சட்டையா இந்த மாடல் கிடைக்கலைன்னதும் வேற மாடல் வாங்கி போட்டுக்கறதுக்கு… என்னோட வாழ்க்கைம்மா… அதுல எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்…”

 

“எனக்கு இப்போ இந்த கல்யாணம் பண்ணிக்கறதுல எந்த விருப்பமும் இல்லை… அந்த பொண்ணையும் கூட அவர் கட்டாயப்படுத்தி தானே சம்மதிக்க வைச்சிருப்பார்… இதெல்லாம் சரியா வராதும்மா” என்று உறுதியாய் சொன்னான் தன் முடிவை.

மகனே சொல்லும் போது அதற்கு மேல் அவர் அவனை வற்புறுத்தவில்லை. வெளியில் இருந்தவர்களை அழைத்து அவன் விருப்பமின்மையை சொல்ல சரவணன் தான் மிகவும் அடிப்பட்டு போனார் அதில்.

 

அந்த கணம் மிக அவமானமாய் உணர்ந்தார் அவர். அங்கு எதையும் காட்டிக்கொள்ளவில்லை. நேராய் தங்கள் அறைக்கு விடுவிடுவென்று சென்றார்.

 

எதிரில் வந்த மனைவியோ “என்னங்க பேசிட்டீங்களா?? ஒண்ணும் பிரச்சனையில்லையே??” என்றார்.

 

“எல்லாம் உங்களால தான் வந்துச்சு…” என்று கத்தலாய் சொன்னார்.

 

“இன்னும் ஏன் என் கண்ணு முன்னாடியே நிக்கறீங்க, இதை விட அவமானம் எதுவும் இருக்க முடியுமா… என் பெரிய பொண்ணு ஓடிபோயிட்டா… சின்ன பொண்ணை அவங்க வேணாம்ன்னு சொல்லிட்டாங்க…”

 

“அப்போ இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்… வளர்ப்பு சரியில்லைன்னு தானே…” என்று அவர் தன் பாட்டில் புலம்பிக் கொண்டிருந்தார்.

 

“என்னங்க நம்ம புள்ளைங்களை நாம அப்படி வளர்க்கலையே!!”

 

“என்ன அப்படி வளர்க்கலை?? நாம சொன்னாலும் யாரும் நம்புவாங்களா, அதான் ஒருத்தி ஓடிப்போய்ட்டாளே…”

“இதோ இவ முன்னாடியே மாப்பிள்ளைகிட்ட பிரச்சனை பண்ணியிருக்கா… என் பொண்ணு அப்படியில்லைன்னு நான் சொன்னாலும் நம்புவாங்களா அவங்க…” என்று தலையில் அடித்துக் கொண்டார்.

 

“சித்தப்பா விடுங்க எதுக்கு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க… நீங்க எவ்வளவு தைரியமான ஆளு…” என்று அவரை தேற்றிக் கொண்டிருந்தான் சத்யன்.

 

அங்கிருந்த ஜெயக்னா தந்தை பேசியதெல்லாம் கேட்டதும் ஒன்றும் சொல்லாமல் விடுவிடுவென்று வெளியேறினாள்.

 

மணமகன் அறைக்கு வெளியே நின்று அவள் கதவை தட்டினாள். சந்தியா தான் வந்து கதவை திறந்தாள், ஜெயக்னாவை பார்த்ததும் விழித்துக்கொண்டு நின்றவள் தன்னை சுதாரித்து “வாம்மா” என்றாள்.

 

“உங்க தம்பிக்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றாள்.

 

‘ஆஹா இது அதிரடி பார்ட்டியா இருக்கும் போலவே’ என்று எண்ணிக்கொண்டு அவள் பின்னால் நின்றிருந்த ராகவை திரும்பி பார்த்தாள்.

 

சந்தியாவின் பார்வை போகும் திக்கை கண்டவள் இப்போது அவனை பார்த்திருந்தாள். “உங்ககிட்ட பேசணும்…” என்றாள் தீவிரமான முகபாவத்துடன்.

 

“என்ன சொல்லு??” என்றான்.

 

“தனியா…” என்றாள் அவள் அழுத்தி.

 

“உன்கிட்ட தனியா பேசணும்ன்னு எனக்கு எதுவுமில்லை… நீ கிளம்பலாம்…” என்றான் அவன்.

 

பல்லைக் கடித்தவாறே அவனை முறைத்தவள் மீனாட்சியை திரும்பி பார்த்தாள். “அத்தை கொஞ்சம் சொல்லுங்க அவர்கிட்ட” என்று அவரை துணைக்கழைத்தாள்.

 

‘ஆத்தி ரொம்பத்தான் விவரம்’ என்று ஜெயக்னாவை மனதிற்குள் சிலாகித்துக் கொண்டாள் சந்தியா.

 

முருகன் சந்தியாவை பார்க்க இருவருமே மெதுவாய் அறையைவிட்டு வெளியேறினர். “ராகவா என்னன்னு தான் கேளேன்…” என்றார் மகனிடம்.

 

“அம்மா வேணாம்மா…”

 

“ஏன் ராகவா??”

 

“அன்னைக்கு சொன்னேன்ல அந்த பொண்ணு இவ தான்… இவளை தான் நான் பேசினது, நீங்க கூட என்னை அடிச்சி…” என்று முடிக்காமல் விட்டான்.

 

தாயும் மகனும் தங்களுக்குள் மெதுவாய் பேசுவது அவள் காதில் விழவில்லை. ஆனாலும் பேச்சு தன்னைப் பற்றியதை என்பதை உணர்ந்தாள் அவள்.

 

இப்போது மீனாட்சி ஜெயக்னாவை திரும்பி பார்த்தார். அவளை பார்வையால் அளவெடுத்தவர் மகனிடம் திரும்பி “நீ பேசு ராகவா… நான் வெளிய இருக்கேன்…” என்று நகர்ந்தார் அவர்.

 

“அம்மா…” என்று அவன் அழைக்க அவரோ மகனுக்கு ஜாடை காட்டிவிட்டு வெளியேறிவிட்டார்.

 

இப்போது அவனருகே வந்திருந்தாள் ஜெயக்னா… “நீ என்ன நினைச்சுட்டு இருக்கே உன் மனசுல…” என்றாள்.

 

“ஏய்?? என்ன மரியாதை தேயுது…”

 

“ஆமாம் அப்படி தான் தேயும்… என்ன பண்ணுவே??” என்று முறைத்தாள் அவனை.

 

அவனோ நீயெல்லாம் ஒரு ஆளு போடி என்ற பார்வை பார்த்து அங்கிருந்து நகரப் போனான். அவனை போகவிடாமல் இடையில் கை நீட்டி தடுத்தாள் அவள்.

 

“நீ எப்படி என்னை வேணாம்ன்னு சொல்லலாம்… நான் தான் உன்னை வேணாம்ன்னு சொல்லியிருக்கணும்… நீ எப்படி என்னை சொல்லலாம்…” என்று பத்திரகாளியாய் கண்ணை உருட்டி கேட்டாள் அவள்.

 

“இப்போ என்ன வேணும் உனக்கு?? என்ன பிரச்சனை?? நான் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னதா…”

 

“நீ என்னை கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னது தான் பிரச்சனை…”

“நான் அப்படி சொல்லவே இல்லை… ஒண்ணு இல்லையின்னா இன்னொன்னு அப்படின்னு எல்லாம் உடனே என்னை என்னால மாத்திக்க முடியாது…”

 

“விருப்பமில்லாம நடக்க போயி தான் இப்படி ஆகிடுச்சோன்னு தோணுது. மறுபடியும் அதே தப்பை பண்ண என்னால முடியாது…” என்றான் அவன் திட்டவட்டமாய்.

 

“எங்கக்கா போனதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்… எங்க வீட்டில யாரும் ஒண்ணும் காதலுக்கு எதிரி இல்லை… அவ விரும்பறான்னு தெரிஞ்சிருந்தாலே நாங்களே கல்யாணம் செஞ்சு வைச்சிருப்போம்…” என்றாள் அவள்.

 

“இப்போ அவ ஏன் போனான்னு எங்களுக்கும் புரியலை… வீட்டில எல்லாரும் அழறாங்க…”

 

“அதுக்கு நான் பண்ண முடியும்…”

 

“எப்படி உங்களால இப்படி மனசாட்சியே இல்லாம பேச முடியுது…” என்று சொல்லும் போது இறங்கிய குரல்  “ஒழுங்கா என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுங்க…” என்ற போது ஏறியிருந்தது.

 

அவள் அப்படி சொல்லவும் அவனுக்குள் சுவாரசியம் பிறந்தது. ‘இவ என்ன என்னை மிரட்டுறாளா…’ என்று மனதிற்குள் அவளை எண்ணி சிரித்துக் கொண்டவன் வெளியில் “சொல்லலைன்னா…”

 

“சொல்றீங்க…”

 

“அதான் சொல்லலைன்னான்னு சொன்னேன்ல…”

 

“உனக்கு என்ன பிரச்சனை என்னை கல்யாணம் பண்ணுறது தானே… இப்போதைக்கு என் வீட்டில இருக்கவங்களுக்கு நிம்மதி வேணும்…”

 

“என்னை முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ… அப்புறம் வேணா உனக்கு டிவோர்ஸ் கொடுத்திர்றேன்… உனக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” என்று பதில் கொடுத்தவளை ஆவென்று தான் பார்த்தான் அவன்.

 

‘என்ன பேச்சு பேசுறா… இவளை…’ என்று எண்ணிக்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை அவளிடம்.

 

பேசி முடித்து விட்டாய் தானே என்ற ரீதியில் அவன் பாட்டிற்கு கதவை திறந்து வெளியில் சென்றுவிட்டான்.

 

அந்த அறையிலேயே சிறிது நேரம் நின்றவள் ‘நான் ஒருத்தி பேசிட்டு இருக்கேன்… இவனுக்கு எவ்வளவு தைரியம் ஒண்ணுமே சொல்லாம வெளிய போறான்…’ என்று ஓங்கி காலை தரையில் உதைத்தவள் வெளியே வந்தாள்.

 

அங்கிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர்கள் அறைக்கு செல்ல சரவணன் எழுந்து வந்து இவள் கைகளை பிடித்துக் கொண்டார்.

“நீ மாப்பிள்ளைகிட்ட என்ன சொன்னே ஜெயா… அவர் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாரு… நீ போய் ரெடி ஆகு… ரிசப்ஷனுக்கு நேரமாச்சு… கொஞ்ச நேரத்துல உனக்கும் அவருக்கு பரிசம் போட்டிறலாம்” என்ற சரவணன் மகிழ்ச்சியாய் வெளியேறி சென்றார்.

 

அவளிடம் ஒன்றும் சொல்லாமல் சென்றவன் எப்படி திருமணத்திற்கு சம்மதம் சொன்னான் என்று அவளுக்குமே புரியவில்லை.

 

‘ஒருவேளை அன்னைக்கு அவனை அடிச்சதை மனசுல வைச்சு பழிவாங்குறானோ… எப்படியிருந்தா தான் என்ன அவன் தான் சரின்னு சொல்லிட்டானே…’

 

‘நம்மகிட்ட வாலாட்டினா என்ன நடக்கும்ன்னு அவனுக்கே தெரியும்… எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டு அடுத்து நடக்கும் நிகழ்வுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள் அவள்.

 

அவனை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்க்கத் தான் செய்தாள். ஆனால் அவன் முகத்தில் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

 

நிஜமாகவே இவன் என்னை திருமணம் செய்ய சம்மதம் சொன்னானா… இல்லை இவன் அன்னை எதுவும் கட்டாயப்படுத்தியிருப்பாரோ என்றெல்லாம் யோசனை தாவியது அவளுக்கு.

 

வந்திருந்த உறவினர்களுக்கு மேக்னா பற்றி தெரிந்து போக காதுபடவே கண்டதும் பேசினர். மாப்பிள்ளை வீட்டினரும் பெண் வீட்டினரும் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

 

சிலரோ நடந்தது நடந்து போச்சுன்னு ஒடுங்கி போய்டாம திடமான முடிவு தான் எடுத்து இருக்காங்க என்றனர்.

 

ஓரிருவர் எப்படியோ பெரியவ போனாலும் சின்னவளை வைச்சு சமாளிச்சுட்டார் என்று கொஞ்சம் கொச்சையாக பேசுவதும் காதில் விழத்தான் செய்தது.

 

தைரியமான பெண் தான் ஜெயக்னா ஆனாலும் இது போன்ற குத்தல் பேச்சுகள் கொஞ்சம் அவளின் சிந்தையை கலைத்தது.

 

மற்ற நேரமாயிருந்தால் கோபம் வந்து கத்தியிருப்பாள். கோபப்படகூட முடியாமல் போனது இந்நேரம் அவளுக்கு. எல்லாம் இந்த மேக்னாவால் தான் என்று தமக்கையும் திட்டிக் கொண்டாள் மனதில்.

 

அவளை நேரில் பார்த்தால் அன்று இருக்கிறது அவளுக்கு கச்சேரி என்று மட்டும் முடிவு செய்துக் கொண்டாள்.

 

மறுநாள் குறித்த நேரத்தில் குறித்த முகூர்த்ததில் ராகவ் ஜெயக்னாவின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து தன் மனைவியாய் ஏற்றுக் கொண்டான்…

 

மனம் ஒன்றாமல்

ஓர் மணம்

இரு மனம் ஒன்றாமல்

திருமணம்

உள்ளமொன்றாமல்

என் கையில் உன் கரம்

சரியன்றோ

தவறன்றோ

இனி நீ தான்

என் வாழ்வன்றோ!!

Advertisement