Advertisement

அத்தியாயம் – 12

 

அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்த செல்வத்தையும் மேக்னாவையும் தூரத்தே கண்டுவிட்ட ஜெயக்னாவிற்கு கோபம் குடம் குடமாக கொப்பளித்ததே உண்மை…

 

செய்வதெல்லாம் செய்துவிட்டு எனக்கென்ன என்று வந்து அவர்கள் அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவளுக்கு அக்கணம்.

 

இதில் எவ்வளவு தைரியம் இருந்தால் இதே லாட்ஜிற்கே வந்து தங்குவார்கள் என்று ஆத்திரம் அவளுக்கு.

 

அருகில் வந்தவர்களை அப்போது தான் பார்த்த மேக்னா உடன்பிறந்தவளை பார்த்த சந்தோசத்தில் ஓடி வந்து அணைக்க முற்பட ஓரடி பின்னே நகர்ந்த ஜெயக்னா ராகவின் மீது இடித்து நின்றாள்.

 

“என்னடி என்னை பார்த்து எதுக்குடி ஒதுங்கி போறே??” என்று குரல் தழுதழுக்க கேட்டாள் அக்கா.

 

“எப்படி உன்னை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கணும்ன்னு நினைக்கறியா?? அப்படி காரியம் தான் நீ செஞ்சுட்டு போனியா??” என்று காட்டமாய் தான் கேட்டாள் ஜெயக்னா.

 

“ஏன் ஜெயா இப்படி வெடுக்குன்னு பேசுறே?? கஷ்டமா இருக்குடி…” என்றவளின் கண்ணில் நீர் நிரம்பியது.

 

“வேற எப்படி பேசுவாங்களாம்… செய்யறது எல்லாம் செஞ்சுட்டு எப்படி மேகா உன்னால இப்படி இருக்க முடியுது… எல்லாத்தையும் விட இவரோட லாட்ஜ்ன்னு தெரிஞ்சே வந்து தங்கி இருக்கீங்க… என்னவொரு திண்ணக்கம் உங்களுக்கு??” என்றவளின் பேச்சில் அனல் பறந்தது.

 

தங்கை சொன்னதை கேட்ட மேக்னா திரும்பி அவளருகில் நின்றிருந்தவனை பார்த்தாள். ஏனெனில் நிஜமாகவே அவளுக்கு இது ராகவின் லாட்ஜ் என்பது தெரியாது.

 

அவளருகில் நின்றிருந்தவனோ அலட்சியமாக “அதெல்லாம் அவளுக்கு தெரியாது. நான் வேணும்ன்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்…”

 

“அதுவும் இல்லாம உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னும் எனக்கு தெரியும்… எனக்கு தெரிஞ்சு தான் இதை செஞ்சேன்…”

 

“இவளுக்கு இவர் மேல எந்த அபிப்பிராயமும் இல்லை… ஆனா இவருக்கு எப்படியோன்னு எனக்கு தெரிய வேண்டி இருந்துச்சு அதுக்காக தான் அப்படி செஞ்சேன்” என்றவனின் பேச்சில் அவ்வளவு அலட்சியம் தெரிந்தது.

 

ராகவிற்கு அவன் தெரிந்தே தான் செய்தேன் என்று சொன்னதும் அவனை அடித்துவிடும் வேகம் தான் வந்தது. அதனை தொடர்ந்து அவன் சொன்னதை எல்லாம் அவனால் காது கொடுத்தான் கேட்க முடியவில்லை.

தன்னை வேண்டாம் என்று சென்றவளை நினைத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு தான் ஒன்றும் பேடியல்லவே!!

 

ஆனால் அதையெல்லாம் அவனுக்கு சொல்லி புரிய வைக்கும் அளவிற்கு அவன் முக்கியமானவனாக ஏனோ அவனுக்கு படவில்லை.

 

இந்த பேச்சை கேட்டு மேக்னாவிற்குமே ஒரு மாதிரியாகிப் போனது. ஜெயாவோ கேட்கவே வேண்டாம். செல்வத்தை அவள் பார்த்த பார்வையில் அவன் பொசுங்கி மட்டும் தான் போகவில்லை.

 

“இதான் நீயே தேடி பிடிச்ச லட்சணமா” என்று வாய்விட்டே கேட்டுவிட்டாள் அவள். ஜெயாவின் பேச்சு ராகவிற்கு ஒரு மாதிரியாக இருக்க அவள் கரம் பற்றி அழுத்தி கண்களால் அவளை பேசாதே என்றான்.

 

அவள் அதையெல்லாம் கவனிக்கும் நிலையிலா இருந்தாள். தன் கரம் அழுத்தியவனை திரும்பி பார்த்து முறைத்தாள், ‘நீ உன் வேலையை பார்’ என்பதாய் ஒரு பார்வை வீச்சு வேறு.

 

‘இவ கேட்க மாட்டா…’ என்று மனதிற்குள் சலித்தவன் “எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு… போன் பேசிட்டு வர்றேன்” என்று பொதுவாய் முணுமுணுத்து நகர்ந்துவிட்டான் அவன்.

 

செல்வம் ராகவை போல் நாசூக்காய் விலகி எல்லாம் சென்றிருக்கவில்லை. சட்டமாய் அங்கேயே நின்று தன்னவளை கேள்வி கேட்பவளை முறைப்பாய் பார்த்தான்.

 

ஜெயக்னாவோ ‘நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை’ என்ற பதில் பார்வை அவனை நோக்கி வீசினாள்.

 

“ஏன் ஜெயா இப்படி பேசறே?? என்னை நீயாச்சும் புரிஞ்சுக்க மாட்டியா ஜெயா?? இப்படி நடந்துக்கு கூட ஒரு வகையில நீ தான் ஜெயா காரணம்” என்ற தமக்கையின் பேச்சில் ஜெயக்னா அவளை அடிக்காமல் விட்டதே பெரிது.

 

“என்ன?? என்ன சொன்னே?? நான்… நான் காரணமா?? நான் என்ன பண்ணேன் மேகா??”

 

“நானா உன்னை இவரோட ஓடிப்போகச் சொன்னேன்?? நீ செய்யறது எல்லாம் செஞ்சுட்டு என்னை சொல்றே??” என்று கண்கள் தீக்கங்காய் ஜொலிக்க பார்த்தாள் அவளின் உடன்பிறந்தவளை.

 

இவளின் பேச்சில் சிலிர்த்தவனாக அவனோ “ஹலோ என்ன ரொம்ப பேசறே?? உங்கக்காவை பிடிச்சு தான் நான் கல்யாணம் பண்ணேன், அவளுக்கும் அப்படி தான்…”

 

“நீங்க யாரு எங்களுக்கு நடுவுல வர்றதுக்கு. நான் பேசினது இவகிட்ட, இவளால பாதிக்கப்பட்டது நாங்க, நீங்க இல்லை…”

 

“நீங்க குறுக்குல பேசாதீங்க, என்ன மேகா இவரை பேசவிட்டு வேடிக்கை பார்க்குற… எனக்கு பேச வேண்டியது உன்கிட்ட மட்டும் தான், இவர்கிட்ட இல்லை…”

 

“இஷ்டப்படலைன்னாலும் உன்கிட்ட பேசணும்ன்னு நினைச்சது நீ திடிர்னு ஏன் இப்படி செஞ்சேன்னு கேட்கத் தான்… வேணாம்ன்னு நினைச்சவ எப்பவோ போயிருக்கலாம், கல்யாணத்துக்கு முதல் நாள் ஏன் ஓடிபோனே??” என்று கொஞ்சம் உரக்கவே கேட்டாள்.

 

மேக்னாவோ இருவரையுமே சங்கடமாய் பார்த்தாள். தங்கையின் பிடிவாதம் குணம் அறிந்தவள் என்பதால் கணவனிடம் திரும்பினாள்.

 

அவன் கைப்பிடித்து சற்று தள்ளிச் சென்றாள். “ப்ளீஸ்ங்க எனக்காக கொஞ்சம் நேரம் ப்ளீஸ்… நான் அவகிட்ட பேசிட்டு வந்திடறேன்… ஏற்கனவே நான் குற்றவுணர்ச்சில இருக்கேன்… நான் என்னை அவளுக்கு தெளிவுப்படுத்திட்டு வந்திடறேனே” என்றாள்.

 

“என்னமோ செய், ஆனா எனக்கு அவ பேசுறது பிடிக்கலை…” என்றுவிட்டு அவன் சற்றுத் தள்ளிப் போனான் இப்போது.

 

“அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்ன நீங்க, இது அவங்களோட லாட்ஜ்ன்னு ஏன் சொல்லலை??” என்று கணவனை பார்த்து கேள்வி கேட்டாள் மேக்னா.

 

“அதுக்கு தான் பதில் அப்போவே சொல்லிட்டனே” என்றவனின் பார்வை அவள் முகத்தில் இல்லாமல் நிலம் நோக்கி இருந்தது.

 

“நாம அதைப்பத்தி அப்புறம் பேசுவோம்…” என்று நகர்ந்தவள் தங்கை முன் வந்து நின்றாள்.

 

“உட்காரு ஜெயா…”

 

“உன்கூட உட்கார்ந்து ஆற அமர பேச நான் வரலை இப்போ… நீ ஓடிப்போனதுக்கு நான் தான் காரணம்ன்னு சொன்னியே ஏன் அப்படி சொன்னே??”

 

“ஏன் ஜெயா நீ தானே சொன்னே?? அவரை கல்யாணம் பண்ணிக்க வேணாம்ன்னு, அப்போ நான் என்ன தான் செய்யறது ஜெயா…”

 

“நான் சொன்னது எல்லாம் கேட்குற ஆளா நீ…” என்று தமக்கையை ஊடுருவும் பார்வை பார்த்தாள் ஜெயக்னா.

 

“நான் கல்யாணம் பண்ணிக்க வேணாம்ன்னு சொன்னது உண்மை தான்… அதுக்கு என்ன காரணம்ன்னு அன்னைக்கே நான் உன்கிட்ட சொன்னேன், அதையும் நான் ஒத்துக்கறேன்…”

 

“ஆனா நீ கல்யாணத்தை நிறுத்த எந்த முயற்சியும் செய்யலையே?? அதைவிட்டு நீ வேற எதையோ செஞ்சிருக்க, அதுக்கு என்னை எதுக்கு பழியாக்குற… நீ செஞ்சதுக்கு பலியானது நான் தான்…” என்றாள் அவள் தொடர்ந்து.

“ஜெயா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு… குறுக்க பேசாதே, அப்போ தான் நான் சொல்ல வர்றது உனக்கு புரியும்…” என்ற மேக்னாவிற்கு ‘இன்னும் என்ன மிச்சமிருக்கு’ என்ற பார்வை கொடுத்தாலும் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை தங்கை.

 

“அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்தப்போ நான் எதுவும் சொல்லலை தான் ஒத்துக்கறேன்… வீட்டில பார்த்து எது செஞ்சாலும் சரின்னு தான் இருந்தேன்…”

 

“உனக்கே தெரியும் நம்ம அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்ன்னு… எப்போமே மிலிட்டரி ரூல் மாதிரி நம்மை கண்ட்ரோல் பண்ணிட்டே இருப்பார்…”

 

“எனக்கு மாப்பிள்ளை பார்த்தப்போ எனக்கு தோணின ஒரே விஷயம், மாப்பிள்ளை நம்ம அப்பா மாதிரி நம்மை கண்ட்ரோல் பண்ணக் கூடாதுன்னு மட்டும் தான்…”

 

“பொண்ணு பார்க்க வந்தவங்களுக்கு என்னை பிடிச்சு நிச்சயத்துக்கு நாளும் குறிச்சிட்டாங்க… மாப்பிள்ளை நேர்ல தான் வந்து பார்க்கலை…”

 

“ஆனா போன்லயாச்சும் பேசுவார்ன்னு நினைச்சேன் அப்பவும் அவர் பேசலை. நிச்சயத்துக்கு வந்த அன்னைக்கு கூட அவர் என் முகத்தை பார்க்கவே இல்லை தெரியுமா…”

 

“அதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் நீ அம்மா அப்பாகிட்ட இந்த மாப்பிள்ளை வேணாம், கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிட்டு இருந்தே…”

“ரெண்டு ரூம்க்கு நடுவுல இருந்த சன்னல் திறந்து இருந்ததால நீங்க பேசினது தற்செயலா அடுத்த ரூம்ல இருந்த என் காதுல எல்லாம் விழுந்துச்சு”

 

“அன்னைக்கு மனசுக்கு ரொம்ப நெருடலா இருந்துச்சு இந்த கல்யாணம் வேணுமான்னு. பொண்ணு பார்த்திட்டு போன பிறகு மாப்பிள்ளை பேசாம இருந்தது கூட ஓகே தான்…”

 

“ஆனா நிச்சயம் ஆனபிறகும் அவர் என்கிட்ட பேசாம இருந்தது, ஏன் என்னை நிமிர்ந்து ஒரு பார்வை கூட அவர் பார்க்கலை அன்னைக்கு. ஒண்ணு அவர்க்கு பிடிக்காம இந்த கல்யாணம் நடக்கணும், இல்லை அவரும் அப்பா மாதிரி ஆளா இருப்பார்ன்னு தோணிச்சு”

 

“நீ எதுவும் சொல்லாத ஜெயா… நான் முதல்ல சொல்லி முடிச்சிடறேன். நானே குழம்பி போயிருந்த நேரத்துல தான் நீ வந்து இவரை கல்யாணம் பண்ணிக்க வேணாம்ன்னு சொன்னே…”

 

“அதுக்கு காரணமும் சொன்னே… நான் முடிவே பண்ணிட்டேன், அவரும் அப்பா மாதிரியேன்னு, அது மட்டுமில்லாம பொண்ணுகளை மதிக்க தெரியாதவர்ன்னு தோணிச்சு”

 

“என்ன ஆனாலும் சரி அவரை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்… ஆனா வீட்டில எல்லாரையும் மீறி பேசவும் எனக்கு முடியலை…”

 

“அந்த நேரத்துல தான் ஒரு நாள் பார்லர் போயிட்டு வரும் போது இவரை பார்த்தேன். என்கிட்டே பேசணும்ன்னு சொன்னார்…”

 

“என்னை விரும்புறதா சொன்னார்… நான் எனக்கு நிச்சயமாகிடுச்சுன்னு சொன்னேன்… நானே இப்போ தான் கேள்விப்பட்டேன், எல்லாம் தெரிஞ்சு தான் உங்ககிட்ட சொல்றேன்னு சொல்லிட்டு போய்ட்டார்”

 

“என் பதில் எல்லாம் கேட்கவேயில்லை… என்னைக்காச்சும் சொல்லாம விட்டுட்டோமேன்னு எனக்கு தோணக்கூடாது அதுனால தான் சொன்னேன்னு சொன்னார்”

 

“அன்னையில இருந்து அவர் நினைப்பாவே இருந்துச்சு… இவ்வளவு நடந்தும் என்னை விரும்பறேன்னு சொல்லி என்னை வந்து பார்த்து பேசின அவரை மறக்க முடியலை எனக்கு… அவர்கிட்ட பேசினா நல்லாயிருக்கும்ன்னு தோணிச்சு…”

 

“அப்பாவோட போன்ல அவரோட நம்பர் எடுத்து நான் போன் பண்ணேன். அப்புறம் பேசி பேசி அவரை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது…”

 

“கல்யாணம் நிச்சயம் ஆகிட்டதாலயும் நாள் ரொம்ப நெருங்கிட்டதாலயும் என்னை வீட்டை விட்டே வெளிய அனுப்பலை. அதனால தான் கல்யாணத்துக்கு முதல் நாள் நான் அவரோட போக வேண்டியதா போச்சு…”

 

“இல்லைன்னா கண்டிப்பா அதுக்கு முன்னாடியே தான் எங்க கல்யாணம் நடந்திருக்கும்” என்று ஒருவாறு தான் சொல்லவந்ததை சொல்லி முடித்திருந்தாள் மூத்தவள்.

 

ஜெயக்னாவின் பார்வை தற்போது மாறியிருக்கும் என்று நம்பி அவளை பார்த்த மேக்னாவிற்கு ஏமாற்றமே!! அவள் முகம் முன்பை விட இப்போது அதிகமாய் வெறுப்பையும் கோபத்தையும் கக்கியது.

 

“கடைசில உன் சுயநலத்துக்கு நான் பலி அதானே!!” என்றாள் ஒற்றை வரியில்.

 

“என்ன ஜெயா நான் இவ்வளோ தூரம் சொன்னது உனக்கு புரியலையா… உன்னை அவருக்கே கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு நான் நினைக்கலை ஜெயா…”

 

“அதைப்பத்தி நீ பேசாத… உனக்கு நம்ம அப்பாவை எத்தனை வருஷமா தெரியும்??”

 

“என்ன கேள்வி இது ஜெயா??”

 

“கேட்டதுக்கு பதில் சொல்லு…”

 

“நான் பிறந்ததில இருந்தே தெரியும்…”

 

“இப்போ உனக்கு இருபத்தி அஞ்சு வயசு இருக்குமா… உனக்கு விவரம் நல்லா தெரிஞ்சது ஒரு அஞ்சு வயசுன்னே வைச்சுக்கலாம்… சோ இருபது வருஷமா உனக்கு நல்லா தெரிஞ்சு நீ அப்பாவை பார்க்கிற தானே…”

‘இவள் என்ன சொல்ல வருகிறாள்’ என்று புரியாமல் தங்கையை பார்த்தாள் மேக்னா. “அவர் புதுசாவா அப்படி இருக்கார்… எப்பவும் அப்பா அப்படி தானே… அப்படி என்ன அவரு நம்மகிட்ட கண்டிப்பை காட்டிட்டார்…”

 

“என்கிட்டயும் அவர் கண்டிப்பா தான் இருந்திருக்கார், ஆனா அது எல்லாம் மீறி எனக்கு பிடிச்சதை நான் செய்ய அனுமதிச்சார்… அது உனக்கு புரியலையா… அவர் எப்பவும் நம்மை பத்தி மட்டுமே யோசிக்கறார்…”

 

“ரெண்டு பெண்களுக்கு தகப்பனா அவர் அந்த கண்டிப்பை காட்டினதுல என்ன தப்பிருக்கு மேகா… அவரோட குரல் அவர் பார்க்கற வேலையினால நம்மகிட்டயும் அப்படியே பிரதிபலிச்சுது”

 

“அது ஏன் உனக்கு புரியலை… எனக்கு என்ன வேணும்ன்னு முடிவு பண்ணி அவர்கிட்ட கேட்டு எனக்கு தேவையானதை நான் நடத்திக்கும் போது உனக்கு ஏன் அது தோணலை… ஏன்னா உனக்கு அது தெரியலை… அவரை வில்லனாவே பார்த்திருக்க, அப்பாவா பார்க்கலை…” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினாள்.

 

“நீ எப்போயிருந்துடி அப்பாக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சே??” என்றாள் மேக்னா.

 

“நான் என்னைக்கு அவரை தப்பா பேசியிருக்கேன்…” என்று பதில் கேள்வி கேட்டாள் தங்கை.

 

“எத்தனை முறை அவர் ஏன் அப்படி பண்றாருன்னு நீ புலம்பியிருக்கே, இப்போ புதுசா பேசறே??”

“புலம்பி இருக்கேன் யார் இல்லைன்னு சொன்னா… அது என்னோட அப்போதைய ஆதங்கம் மட்டும் தான்… நமக்கும் அப்பாக்கும் இடையில இருக்கறது தலைமுறை இடைவெளி தான்…”

 

“ஆனா ஒரு நாளும் அவரை நான் தப்பா நினைச்சதில்லை… சரி உன்கிட்ட ஒண்ணு கேட்கிறேன், நீ அவரை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு முடிவெடுத்தல”

 

“அப்போ ஏன் அதை வீட்டுல சொல்லலை??”

 

“அதெப்படி சொல்ல அப்பாவை நினைச்சு எனக்கு பயமா இருந்துச்சு…”

 

“அப்போ இப்போ உனக்கு பயம் போயிடுச்சா??”

 

“அப்படியில்லை…”

 

“உனக்கு சொல்ல ஒரு காரணம் கூட உருப்படியா இல்லைல… உனக்கு அவ்வளவு சுயநலம், நீ போனியே ஒரு நிமிஷம் எங்க எல்லாரை பத்தியும் யோசிச்சியா நீ”

 

“நீ ஒருத்தரை விரும்பறேன்னு சொன்னா அப்பா வேணாம்ன்னு சொல்லியிருப்பார்ன்னு நினைக்கறியா…”

 

“அம்மாவும் அப்பாவும் சொந்தமா இருந்தாலும் வீட்டை எதிர்த்து காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அதெல்லாம் மறந்து போச்சா உனக்கு…”

“ஆனா அவங்க அப்படியா இருந்தாங்க??”

 

“அப்படி இல்லைன்னு உனக்கு தெரியுமா… உன் முன்னாடியே எல்லாம் லைவ் ஷோ காட்டியிருக்கணும்ன்னு சொல்றியா??” என்று கேட்டு வைத்தாள் ஜெயக்னா.

 

“இப்போ என்ன தான்டி சொல்ல வர்றே… நான் செஞ்சது தப்புன்னு சொல்றியா…”

 

“இல்லைன்னு வேற நீ சொல்லுவியா…”

 

“நான் அப்படி சொல்லலை… எனக்கு நியாயமான காரணமிருக்கு ஜெயா அதை நீ புரிஞ்சுக்கோ…”

 

“என்ன நியாயம் புடலங்காய் நியாயம்… நீ சொன்னது எதுவுமே சரியான காரணமா எனக்குப்படவே இல்லை… அவரோட உன் கல்யாணம் வேணாம்ன்னு நான் சொன்னதுக்கு காரணம் அன்னைக்கு நான் அவரை பேசினது மட்டுமில்லை…” என்று நிறுத்தினாள்.

 

‘அப்போ வேற என்ன??’ என்பதாய் ஒரு பார்வை பார்த்தாள் மேக்னா.

 

“அன்னைக்கு அவர் பேசினதுக்கு நான் சும்மா இல்லாம கையை நீட்டிட்டேன்… அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில அவரை உனக்கு கல்யாணம் பேசினாங்க…”

 

“அவரை பார்க்கும் போது எனக்கும் என்னை பார்க்கும் போது அவருக்கும் சங்கடமா இருக்கும்ன்னு பீல் பண்ணேன்… அதனால தான் அன்னைக்கு திரும்ப திரும்ப எல்லார்கிட்டயும் சொன்னேன் கல்யாணம் வேணாம்ன்னு”


“இப்போ நீ அடிச்சவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டியே??” என்று கேள்வியாக்கினாள் மேக்னா.

 

“ஹ்ம்ம் அப்போ அவரை நீ கல்யாணம் பண்ணிக்கறதா இருந்துச்சு சங்கப்பட்டேன்… இப்போ அவர் என் புருஷன், நாங்க அடிச்சுக்குவோம், புடிச்சுக்குவோம் இதை யாரும் கேள்வி கேட்க முடியாது, நீ உட்பட”

 

“உன்கிட்ட இப்போ இதை சொன்னதுக்கு காரணம் நான் ஏன் உனக்கும் அவர்க்கும் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன் அப்படிங்கறதை நீ தெரிஞ்சுக்க தானே தவிர, அவரை நீ இறக்கமா பேசுறதுகில்லை”

 

“அவரை பத்தி பேச உங்க யாருக்குமே தகுதியில்லை… அப்பாவோட தேர்வு என்னைக்குமே தப்பில்லைன்னு உனக்கு தான் புரியலை…”

 

“நானும் அப்படியே இருப்பேன்னு நினைச்சியா… இவர் அன்னைக்கு பேசினதை என்னால ஒத்துக்க முடியலை தான்… ஆனா இப்போ யோசிச்சு பார்த்தா அதுல எந்த தப்புமில்லைன்னு தோணுது…”

 

“கடைசியா உனக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லணும்…” என்றவள் திரும்பி சற்று தள்ளி நின்றிருந்த செல்வத்தை பார்த்தாள்.

“இவரை எந்தளவுக்கு நம்பலாம்ன்னு நீ தான் முடிவு பண்ணணும்… இவர் பேச்சுல சுத்தமில்லை, நீ வாணலிக்கு பயந்து கடைசியில அடுப்புல போய் விழுந்துட்டியோன்னு தோணுது எனக்கு”

 

“கவனமா இரு இவர்கிட்ட, உனக்குன்னு இப்போ யாருமில்லை…”

 

“என்ன ஜெயா சொல்றே?? அப்போ நீங்க…”

 

“நாங்க யாரும் எப்பவும் உனக்காக வரமாட்டோம்… நீ செஞ்சுட்டு போன காரியம் அப்படி… அப்பா, அம்மா மன்னிச்சு ஏத்துக்கணும்ன்னா அதுக்கெல்லாம் ரொம்ப காலம் ஆகும்”

 

“அதுவரை உன் வாழ்க்கை உன்னோட கையில தான்… உனக்கு யாருமில்லைன்னு எல்லாரும் ஏறி மிதிக்க பார்ப்பாங்க… நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கையாச்சும் உன் கையைவிட்டு போகாம பார்த்துக்கோ…”

 

“அப்போ நீங்க யாரும் என்கிட்டே பேச மாட்டீங்களா??” என்று மீண்டும் ஆரம்பித்த மேக்னாவின் குரல் உடைப்பெடுத்தது.

 

“இப்போ உன்கிட்ட நான் பேசணும்ன்னு நினைச்சதே நீ ஏன் அப்படி செஞ்சேன்னு கேட்க தான்… எனக்கும் உன் மேல உள்ள கோபம் அப்படியே தான் இருக்கு… இதுக்கு மேல உன்கிட்ட பேச எதுவுமில்லை…” என்று அவள் எழுந்து நின்ற போது சரியாக அவர்களருகே வந்தான் ராகவ்.

அவனை பார்த்ததும் தான் இன்னொன்று ஞாபகம் வந்தது அவளுக்கு, தமக்கைக்கு மட்டுமே கேட்குமாறு தணிந்த குரலில் “அவரை ஏற்கனவே அவமானப்படுத்தினது போதாதுன்னு லாட்ஜ்லயும் தங்கி அவரை ஏன் சங்கடப்படுத்தறீங்க”

 

“ஒழுங்கா உன் புருஷன்கிட்டே சொல்லி வேற இடத்துக்கு போங்க…” என்று கட்டளையாகவே சொன்னாள் அவள்.

 

ராகவ் வந்ததும் “போகலாம்…” என்று அவன் கைப்பிடித்து அங்கிருந்து நகர்ந்திருந்தாள். அவனுமே யாரிடமும் பேச வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

 

ஆனால் தன் கைப்பிடித்து இழுத்துச் செல்பவளை ஆசையாகவும் பெருமையாகவும் பார்த்தான் முதல் முறையாய்.

 

போன் பேசி வருகிறேன் என்று அந்தப்புறம் சென்றிருந்தவன் வெகு நேரமாய் அக்காவும் தங்கையும் பேசுகிறார்களே, எப்போது கிளம்பலாம் என்று கேட்க மனைவிக்கு போன் செய்திருக்க அவளோ கட் செய்வதற்கு பதிலாக அட்டென்ட் செய்திருந்தாள்.

 

ராகவ் தற்செயலாய் தான் அவர்களின் பேச்சை கேட்க நேர்ந்தது. அப்போ தான் ஜெயக்னா அவள் தந்தை பற்றி தமக்கையிடம் பேசிக் கொண்டிருந்தது. கைகள் தன்னையுமறியாமல் அவர்கள் பேச்சை ஏனோ பதிவு செய்தது.

கடைசியாக தன்னைப் பற்றியும் அவள் தமக்கையிடம் பேசியது அவனுக்கு நிறைவாய் ஓர் கணம் கர்வமாய் உணர வைத்தது என்றால் மிகையாகாது. நடந்த தவறு கூட சரியாய் தான் நிகழ்ந்திருக்கிறதே என்றே தோன்றியது அவனுக்கு.

 

நீ அன்று

கொடுத்த அடியில்

உன் விரல்

தடம் பதிந்தது

என் கன்னத்தில்!!

நீ இன்று

கொடுத்த பதிலடியில்

உன் கால்

தடம் பதிந்தது

என் இதயத்தில்!!

அன்று வலித்தது

இன்று இனித்தது!!

Advertisement