Advertisement

அத்தியாயம் – 9

 

“உள்ள வாங்க மாப்பிள்ளை… உள்ள வா புவி…” என்று மணமக்களை உள்ளே அழைத்தார் கனியமுது.

 

“பால், பழம் கொடுங்க பொண்ணு மாப்பிள்ளைக்கு…” என்று நெருங்கிய உறவினரொருவர் சொல்ல மணமக்கள் இருவரும் நடந்து முடிந்த நிகழ்வுகளில் இருந்து இன்னமும் வெளி வந்திருக்கவில்லை.

 

அதற்குள் அடுத்தடுத்த நிகழ்வுகள் தன் போக்கில் நடக்க எதையும் சிந்திக்க நேரமில்லாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

 

தனுஷ் சங்கடமாய் நெளிந்து கொண்டிருப்பது பார்த்து சக்திவேல் தன் மகனை அழைத்து அவனிடம் பேசிக்கொண்டிருக்குமாறு சொல்ல பாலாஜி முகம் சுளித்தவாறே தனுஷின் அருகில் சென்றான்.

 

புவனாவின் தம்பி பாலாஜிக்கு ஏனோ திடீர் மாப்பிள்ளையான தனுஷை அவ்வளவாக பிடிக்கவில்லை.

 

அத்தனை நாளாக மாறனை தன் அக்காவின் கணவனாக கண்டவனால் தனுஷை உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாறனிடம் இருந்த ஒட்டுதல் தனுஷிடம் அவனுக்கு ஏற்படுமாவென்று அவனுக்கு சந்தேகமே!!

 

தனுஷ் புவனாவின் தந்தை பாலாஜியை அழைத்து பேசியதும் பின் பாலாஜி முகச்சுளிப்புடன் தன்னை நோக்கி வருவதும் புரிந்தது.

 

எதிர்பாராது நடந்துவிட்ட நிகழ்வில் அவன் தவறு என்பது ஏது?? மாறன் திருமணம் வேண்டாம் என்று சென்றுவிடுவான் என்று யாரறிவார்?? எது எப்படியோ பாலாஜிக்கு மட்டுமல்ல தனக்குமே இந்த திருமணம் பிடிக்கிறதா என்பது அவனுக்குமே புரிபடவில்லை.

 

விரும்பிய பெண்ணை திருமணம் செய்ததில் உண்மையில் அவனுக்கு மகிழ்ச்சியே இருந்திருக்க வேண்டும். மாறாக அவன் முகத்தில் வருத்தம் மட்டுமே தெரிந்தது.

 

அவன் மிகவும் நேசித்த பெண் தான் ஆனால் அவள் அவனை நேசிக்கவில்லையே!! வேறு ஒருவரை மணக்க சம்மதம் தெரிவித்து மணமேடை வரை வந்துவிட்டாள் தானே!!

 

அந்த மணமகனை குறித்தான அவளின் ஆசைகள் கற்பனைகள் எல்லாம் சட்டென்று மாறிப்போனதில் அவளுக்கு எவ்வளவு கவலையும் வருத்தமும் இருக்குமோ என்று எண்ணிக்கொண்டான்.

 

“புவி மாப்பிள்ளை நின்னுட்டே இருக்கார் பாரு… உன்னோட ரூம்க்கு கூட்டிட்டு போ…” என்றதும் அவள் அன்னையை பார்த்து திருதிருவென விழித்தாள். மகளின் நிலை அவரும் உணர்ந்ததே!!

 

தங்கள் குடும்ப மானம் காக்க அவர் தந்தை சொன்ன ஒரே காரணத்துக்காக தங்கள் மகளை மணந்துக் கொண்ட அவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டுமே!! அது பெற்றவர்களின் கடமையாயிற்றே!!

 

மகள் அசையாது நிற்கவும் “என்னங்க மாப்பிள்ளையை கூட்டிட்டு போங்க…” என்று கணவருக்கு கண்ணை காட்டினார் அவர்.

 

“வாங்க மாப்பிள்ளை கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க… மாடியில ரூம் இருக்கு ரிலாக்ஸ் பண்ணுங்க…” என்று அவர் அழைக்க எந்த பிகுவும் செய்யாமல் அவருடன் சென்றான்.

 

அவனுக்குமே இந்த கூட்டத்தில் இருந்து தனியே செல்ல வேண்டும் என்றே தோன்றியது. அவர் அவனை வெளியே அழைத்து சென்று அங்கிருந்த மாடியேறினார்.

 

தனுஷ் வீட்டை பார்வையிட்டுக் கொண்டே வந்தான். மாடியில் புதிதாய் இரு அறைகள் கொண்ட வீடு இருந்தது.

 

சின்ன ஹாலும், குளியலறையுடன் சேர்ந்த படுக்கையறை ஒன்றும் இருந்தது. மகளின் திருமணத்திற்காய் புதிதாய் கட்டியிருப்பார்கள் போலும்.

 

மாடியில் ஓரிருவர் நின்றுக்கொண்டிருக்க “நீங்க கீழே போங்க… மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று அவர்களை அனுப்பி வைத்தார் சக்திவேல்.

 

தாள் போட்டிருந்த அறைக்கதவை திறந்துவிட்டு “நீங்க உள்ள வாங்க மாப்பிள்ளை” என்றார்.

 

“என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்களேன்… மாப்பிள்ளைன்னு ஒரு ஒரு முறையும் சொல்லும் போது ஏதோ வித்தியாசமா இருக்கு எனக்கு” என்றான்.

 

“அது சரியா இருக்காதுங்க மாப்பிள்ளை…”

 

“நீங்க எங்கப்பாவுக்கு தெரிஞ்சவர் தானே… அவரோட பிரண்ட் தானே… அப்போ நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடலாமே…”

 

“நீங்க இன்னும் இன்னை மாமான்னே கூப்பிடலை” என்றார் அவர்.

 

“சரிங்க மாமா” என்று அவன் சொன்னதும் அவருக்கு மிகுந்த சந்தோசம்.

 

“அவசர அவசரமா கல்யாணம் நடந்திருச்சு… உங்களுக்கு தர்மசங்கடமா இருக்கும்ன்னு எனக்கு தெரியும்…”

 

“மாறன் என்னோட அக்கா பையன் தான்… ரெண்டு வருஷம் முன்னாடி அவன் துபாய் போறதுக்கு முன்னாடியே நாங்க பேசி வைச்சிருந்தோம் கல்யாணத்துக்கு…”

 

“இன்னைக்கு என்னென்னமோ ஆகிப்போச்சு… அவன் இப்படி ஓடிப்போவான்னு நாங்க யாருமே நினைக்கலை… வெளிநாட்டுக்கு வேலைக்கு போயிட்டு வந்தவனுக்கு என் பொண்ணை கட்டிக்க கசந்திருச்சு போல… பேடிப்பயல் இப்படி செஞ்சிட்டான்…”

 

“மாமா எதுக்கு அதெல்லாம் பேசிட்டு விடுங்க…”

 

“இல்லை உங்களை வேற… உங்க விருப்பம் கூட கேட்காம வேணு அப்படி சொல்வார்ன்னு நானும் நினைக்கலை…”

 

“உங்களுக்கு எந்த கவலையும் வேணாம் மாமா… நான் இந்த கல்யாணத்துக்கு மனபூர்வமா தான் சம்மதம் சொன்னேன்…”

 

“இருந்தாலும் இப்படி சட்டுன்னு…”

 

“எங்கப்பா எனக்கு எந்த கெட்டதும் செய்ய மாட்டார் மாமா… போன வாரம் தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்…”

 

“எங்கப்பா எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சார்… உங்களுக்கு ஒரு கஷ்டம் அப்படிங்கறதுக்காக மட்டுமில்லை மாமா… உங்க பொண்ணுக்காகவும் அவங்க வாழ்க்கைக்காகவும் யோசிச்சு தான் அப்பா அப்படி செஞ்சிருப்பார்…”

 

“உங்களுக்காக எல்லாம் யோசிக்கறவர் எனக்காக யோசிச்சிருக்க மாட்டாரா என்ன… எனக்கு பிடிக்காததை ஒண்ணும் எங்கப்பா கொடுக்க மாட்டார் மாமா…” என்றான்.

அவன் பேச்சு அவருக்கு புரிந்ததோ இல்லையோ அவனின் பேச்சில் ஒன்றை மட்டும் உணர்ந்தார். அது அவன் பிடிக்காமல் எல்லாம் திருமணம் செய்யவில்லை என்று.

 

போகிற இடத்தில் தங்கள் மகளை அவர்கள் நன்றாகவே பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணமும் அவருக்கு உறுதிப்பட்டது.

 

எங்கே அவசரப்பட்டுவிட்டோமோ என்று உள்ளே கொஞ்சம் பதட்டம் இருந்தாலும் அப்படியெல்லாம் இல்லை என்பதாய் இருந்த அவன் பேச்சு காயப்பட்டிருந்த அவர் உள்ளத்திற்கு மருந்தாகவே இருந்தது.

 

“சந்தோசமா இருக்கு நீங்க பேசுறது கேட்கும் போது… எங்க அக்கா அவசரப்பட்டாங்கன்னு நாங்களும் அவசர அவசரமா கல்யாணம் வைச்சது தப்புன்னு இப்போ புரியுது…”

 

“என் பொண்ணு அப்போவே சொன்னா இப்போ எதுக்கு இவ்வளவு அவசரம்ன்னு… நாங்க தான் குருபலன் முடியுது அது இதுன்னு சொல்லி என்னென்னமோ ஆகிப்போச்சு…”

 

“புவனா ரொம்ப நல்ல பொண்ணு… என் பொண்ணு அப்படிங்கறதுக்காக மட்டும் சொல்லலை… நிஜமாவே அவ ரொம்ப நல்ல மாதிரி… யார் மனசையும் கஷ்டப்படுத்த மாட்டா…”

 

“அவளுக்கு திடுதிப்புன்னு நடந்து போன இந்த கல்யாணத்துல கண்டிப்பா அதிர்ச்சியா இருக்கும்… நாளாக ஆக அவளுக்கு அது பழகிடும்… நான் அவங்கம்மாகிட்ட சொல்லி அவளுக்கு பபுரிய வைக்கிறேன்… அது வரைக்கும் நீங்க அவளை கொஞ்சம்…” என்று அவர் முடிப்பதற்குள் அவன் தொடர்ந்தான்.

 

“நான் பார்த்துக்கறேன் மாமா… உங்களுக்கு எந்த கவலையும் இனி வேண்டாம்… இனி உங்க பொண்ணு எங்க பொறுப்பு…”

 

“அவங்களை கஷ்டபடுத்தவோ கஷ்டப்படுத்தியோ பார்க்க மாட்டோம்” என்றான், தன் பேச்சும் செயலுமே அவளை வருத்தப்பட வைக்கப் போகிறது என்பதறியாமல்…

 

அவர் மீண்டுமொருமுறை அவனுக்கு நன்றி சொல்லி அவன் கைப்பிடித்து சென்றார். நேற்று வரை கூட அவன் நினைக்கவில்லை தான் நேசித்த பெண்ணையே கைப்பிடிப்போம் என்று.

 

இதோ அது நடந்தேவிட்டது. ஆனாலும் மனதில் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை, ஒரு நிம்மதி மட்டுமே அவனிடத்தில். அது அவளை திருமணம் செய்ததினால் என்று மட்டும் புரிந்தது.

 

தாங்களிருவரும் மனமொத்து விரும்பி இந்த திருமணமும் அதன் பின்னான நிகழ்வுகளும் நடந்திருந்தால் இருவருக்கும் எவ்வளவு உவகை கொடுத்திருக்கும் என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

 

இப்போது அவனால் ஒரு பெருமூச்சை மட்டுமே விட முடிந்தது. அவளிடம் அவனால் இயல்பாய் பேசக்கூட முடியுமா என்றிருந்தது அவனுக்கு.

 

தன் விருப்பம் ஒரு துளி கூட அவளை பாதிக்கவில்லை என்பது அவனுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. தான் விரும்பி அவளும் கட்டாயம் தன்னை விரும்பியே ஆகவேண்டும் என்று அவன் எண்ணவில்லை.

 

ஆனாலும் ஒரு ஓரத்தில் கூட அவளுக்கு தன் நினைவு இல்லையே என்ற வலி அவனுக்கு இல்லாமலில்லை. இந்த உணர்வே அவனை அவளிடம் நெருங்கவிடாமல் செய்யப் போகிறது என்பதும் இதனால் தானே அவளை பேசி பேசி வருந்தச் செய்யப் போகிறோம் என்பது அவனே அறியவில்லை.

 

கட்டிலில் அமர்ந்திருந்தவன் எப்போது உறங்கினான் என்றே அறியாமல் உறங்கி போயிருந்தான். மதிய உணவின் போது அவனை எழுப்பவென வந்திருந்தாள் புவனா.

 

அறைக்குள் அரவம் கேட்டு மெதுவாய் அவன் கண் விழித்து பார்க்க எதிரில் நின்றிருந்தாள் அவள். “சாரி தூங்கிட்டேன்… ஆமா நீங்க எப்போ வந்தீங்க??”

 

“இப்போ தான் வந்தேன், உங்களை சாப்பிட கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன். தூங்கிட்டு இருந்தீங்க அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”

 

“எழுப்பி இருக்கலாமே” என்றான்.

 

“அசந்து தூங்கிட்டு இருந்தீங்க, அதான்…”

 

“சரி இதோ வர்றேன்…” என்றவன் அங்கிருந்த வாஷ்பேசினில் முகம் கழுவ அவள் புது துண்டு ஒன்றை அவனிடம் நீட்டினாள்.

 

“தேங்க்ஸ்” என்றவாறே அதை வாங்கி முகம் துடைத்துக் கொண்டான். அவள் தனக்காக காத்திருப்பது உள்ளுக்குள் ஒருவித சந்தோசத்தை கொடுத்தது.

 

உணவு அருந்தி முடிக்கும் வரை எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. அமைதியாகவே நடந்து முடிந்தது. யாகாஷ் அழைத்திருந்தான் அவனுக்கு.

 

“சொல்லு யாகாஷ்…”

 

“எப்போடா இங்க வர்றீங்க?? நல்ல நேரம் முடியறதுக்குள்ள சீக்கிரம் வந்து சேருங்கடா… அப்பா நீங்க எப்போ வருவீங்கன்னு தவிச்சுப்போய் வாசலுக்கும் வீட்டுக்குமா நடையா நடந்திட்டு இருக்கார்” என்றான்.

 

“தெரியலை யாகாஷ்… நான் இங்க பேசிட்டு உனக்கு கால் பண்றேன்…” என்றுவிட்டு போனை வைத்தான்.

“மாமா வீட்டுக்கு எப்போ கிளம்பலாம்?? நல்ல நேரம் முடியறதுக்குள்ள போகணுமாமே…”

 

சக்திவேல் திரும்பி மனைவியை பார்த்தார். அதற்குள் உறவுப்பெண்மணி ஒருவர் வாய் துடுக்காக “அங்கிட்டு யாரு இருக்கா… பொம்பளைக யாருமில்லை… அங்க யாரு ஆரத்தி எல்லாம் எடுப்பாங்க… அவ்வளவு அவசரமா போயே ஆகணுமா… நாளைக்கு போனா தான் என்ன…” என்றார் வெடுக்கென்று.

 

தனுஷுக்கு லேசாய் கோபம் எட்டிப்பார்த்தது. “வள்ளி நீ சும்மா இருக்க மாட்டியா…” என்று அவரை அதட்டிய சக்திவேல் “தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை…” என்றார் சங்கடத்துடன்

 

அவன் பதிலொன்றும் பேசவில்லை அமைதியாகவே நின்றான். சக்திவேல் மனைவியிடம் கண் ஜாடை காட்டினார்.

 

“மூணு மணிக்கு மேல நேரம் நல்லாயிருக்குங்க… நாம அப்போவே கிளம்பலாம்… நீங்க என்ன சொல்றீங்க??”

 

“ஹ்ம்ம் சரி…” என்றவன் எப்போதடா மூன்று மணியாகும் கிளம்பலாம் என்றிருந்தான். புது இடம் பழக்கமில்லா புது மனிதர்கள் அவர்களை சட்டென்று உள்வாங்கிக் கொள்ள அவனுக்கு சிரமாகவே இருந்தது.

 

ஒரு வேளை புவனாவும் விரும்பி இந்த திருமணம் நடந்திருந்தால் இந்த அந்நியம் அவனுக்கு தோன்றியிருக்காதோ?? என்னவோ??

உறவினர் பெண்மணியின் பேச்சு அங்கு ஒரு சங்கடத்தையே அனைவருக்கும் கொடுத்திருக்க புவனாவுமே உம்மென்றிருந்தாள்.

 

“புவி நீ போய் மாப்பிள்ளைக்கிட்ட பேசிட்டு இரு…” என்று கனியமுது சொல்வதும் “நான் போய் என்னம்மா பேச…” என்று அவள் பதில் சொல்வதும் மெல்ல பேசினாலும் அவனுக்கு கேட்கவே செய்தது.

 

அவளுக்குமே அவனிடம் பேச வேண்டும் போலத் தான் இருந்தது. எல்லோரும் சூழ்ந்திருக்க தான் மட்டுமாய் அவனிடம் சென்று எப்படிப் பேச என்று நினைத்து அவள் அன்னையிடம் அப்படி கூறினாள்.

 

மேலும் அவளால் இன்னமும் தான் தேவாவின் மனைவி என்பதை நம்ப முடியவில்லை. நேற்று வரை இருந்த சூழல் வேறு இன்று வேறு அதை சட்டென்று ஏற்றுக்கொண்டு உடனே தன்னை அதற்கேற்றார் போல மாற்றிக்கொள்ள அவளுக்கு சிரமாகவே இருந்தது.

 

அவளுக்கும் சிறிது அவகாசம் தேவைப்படும் தானே. மகளின் மனம் புரிந்தவர் போல் கனியமுது “இந்த காபியை அவர்கிட்ட கொடுத்திட்டு கொஞ்சம் நேரம் பேசிட்டு வா…” என்று சொல்ல காபியுடன் சென்றாள்.

 

ஹாலில் அவன் மட்டும் தனித்து அமர்ந்திருக்க அவனருகே சென்றாள். “காபி எடுத்துக்கோங்க…”

 

“எனக்கு இந்த நேரத்துல காபி குடிக்கற பழக்கமில்லை…”

“அம்மா கொடுக்க சொன்னாங்க…” என்று அவள் சொல்லவும் ஒன்றும் பேசாமல் வாங்கிக்கொண்டான். அவள் ஏதாவது பேசுவாளா என்று அவன் பார்த்திருக்க அவளும் அவன் எதுவும் கேட்பானோ என்றிருந்தாள்.

 

அவன் குடித்து முடித்ததும் கோப்பையை கீழே வைக்க போக “இப்படி கொடுங்க…” என்று அவள் சொல்லவும் திரும்பி அவளை பார்த்தான்.

 

நீட்டிய கோப்பை அப்படியே இருக்க அவளை ஆழ்ந்து பார்த்திருந்தான். அவனிடம் காபியை கொடுத்துவிட்டு சென்றிருப்பாள் என்று அவன் இருக்க அவள் இன்னமும் அங்கேயே நின்றிருந்தது எதற்காகவோ என்ற எண்ணம் ஓடியது.

 

சக்திவேல் வெளியில் இருந்து உள்ளே வந்திருந்தார். “வண்டி சொல்லிட்டேங்க மாப்பிள்ளை கிளம்பலாங்களா??” என்று வந்து நின்றார்.

 

சுதாரித்துக்கொண்டு “ஹ்ம்ம் கிளம்பலாம் மாமா…” என்று எழுந்து நின்றிருந்தான் அவன்.

 

இப்போது புவனாவிற்கு படபடவென்று அடித்துக் கொண்டது. ‘அவ்வளவு தானா… இப்போது கிளம்பினால் இனி நான் இங்கு வரமாட்டேனா… இந்த வீட்டில் நான் அன்னியப்பட்டு விட்டேனா…’ என்று உள்ளுக்குள் ஒரு கதறல் அவளிடத்தில்.

 

முகம் வெளுத்து நின்றிருந்தாள். திருமணம் என்று சொல்லி அவள் ஊரில் இருந்து வந்ததில் இருந்தே நடந்த நிகழ்வுகள் எல்லாம் எதுவுமே அவளுக்கு பிடித்தமில்லை தான்.

 

ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு புகுந்த வீடு செல்ல வேண்டும் என்று முன்பே தெரியும் தான். ஆனாலும் இந்த நிமிடம் அதை நினைக்கையில் கண்கள் கரிக்கும் உணர்வு அவளுக்கு.

 

“புவி என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கே… அப்பா சொல்றது காதுல விழலையா… போ… போய் மூஞ்சி கழுவிட்டு தலைவாரிட்டு வா…” என்று அவளை அங்கிருந்து கிளப்பினார் கனியமுது.

 

ஒருவழியாய் அவர்கள் அங்கிருந்து தனுஷின் வீட்டிற்கு புறப்பட்டனர். தனுஷின் காரை அவன் உபயோகத்திற்காக தேவைப்படும் என்று யாகாஷ் மண்டபத்தில் விட்டு சென்றிருக்க தனுஷ் அதை எடுத்து வந்திருந்தான் மாமியார் வீட்டிற்கு வரும் போது.

 

மண்டபத்தில் இருந்து வரும் போது காரை புவனாவின் உறவினர் ஒருவர் ஓட்டிவர மணமக்கள் பின் அமர்ந்து வந்திருந்தனர்.

 

இப்போது அவன் வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் இருவர் மட்டும் ஒன்றாக வருமாறும் அவர்கள் வண்டியை தொடர்ந்து தாங்கள் வேறு வண்டியில் வருவதாக சக்திவேல் கூறிவிட இருவரும் காரில் ஏறினர்.

 

அவள் வீட்டிற்கும் அதிக தூரமில்லை தான்… குறைந்த பட்சம் பதினைந்து நிமிட நேர பயணமே!! வண்டியில் அமர்ந்ததும் அருகே அவன் விரும்பிய பெண்ணுடன் பயணம் என்பதே அவனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

 

ஆனால் ஒன்றும் பேசத் தோன்றவில்லை அவனுக்கு. அந்த நிமிடங்களை தனக்குள் ரசித்துக் கொண்டிருந்தான் அவன் வீடு வரும் வரை…

Advertisement