Advertisement

அத்தியாயம் – 4

 

அழுத அவள் முகம் அவனை ஏதோ செய்ய அவளை நோக்கி எட்டி நடைப்போட்டான். கேட்கலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பத்தை புறந்தள்ளி “என்னாச்சு??” என்றிருந்தான் அவளிடம்.

 

அவனை பார்த்ததும் ஏனோ அழுகை அதிகமாய் பொங்க அப்போது தான் அழுது முடித்து அடக்கி வைத்திருந்த அழுகை மீண்டும் எட்டிப்பார்த்து கண்ணில் நீர் துளிர்த்தது அவளுக்கு.

 

“என்ன ப்ராப்ளம்??”

 

அதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. “இன்டர்வியூல நீங்க செலக்ட் ஆகலையா?? அதுக்கு தான் இவ்வளோ பீல் பண்றீங்களா??” என்றதும் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

 

அவனுக்கு புரிந்து போனது அது தான் பிரச்சனை என்று. “அதுக்காக தான் அழறீங்களா?? இவங்க இல்லைன்னா வேற ஆளு அவ்வளவு தானே… இதுக்கு எதுக்கு பீல் பண்ணுறீங்க??”

 

“இல்லை அவங்க எனக்கு சரியா பேச வரலைன்னு… நீயெல்லாம் எதுக்கு இந்த வேலைக்கு ஆசைப்படுறன்னு…” என்று முடிக்க முடியாமல் போக மீண்டும் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிந்தது.

 

உள்ளே என்ன நடந்திருக்கும் என்று அவனுக்கு இப்போது தெளிவாய். அங்கு சென்று இவளை பேச சொல்லி இருப்பார்கள், காலையில் போல் இவளுக்கு லேசாய் திக்கியிருக்கலாம், அதை காரணம் காட்டி அங்கு இவளை எதுவும் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.

 

“அதுக்காக அழுதா எல்லாம் சரியாகிடுமா… முதல்ல சொன்னது தான் இவங்க இல்லைன்னா இன்னொருத்தர் வேலை கொடுப்பாங்க…”

 

“முதல்ல நீங்க பதட்டப்படாம பேசுங்க… என்கிட்டே பேசும் போது உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரலை… தெளிவா தான் பேசறீங்க…”

 

“உள்ள மட்டும் எதுக்கு நெர்வஸ் ஆனீங்கன்னு தெரியலை… மே பீ இது உங்க முதல் இண்டர்வ்யூவா இருக்கலாம். அதுக்காக இப்படி ஆனா எப்படி…”

 

“எதையும் தைரியமா எதிர்கொள்ளணும்… உங்களோட பிரச்சனை எனக்கு புரியுது. அதுக்கு ஒரு வழி சொல்றேன் செய்வீங்களா??” என்று தொடர்ந்து பேசியவன் சற்று நிறுத்தினான்.

 

‘என்ன தெரியும் இவனுக்கு என்னைப்பத்தி?? எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறான்…’ என்று லேசாய் கோபம் எட்டிப்பார்த்தது. இருந்தும் இவன் என்ன சொல்கிறான் என்று கேட்போமே என்று தான் தோன்றியது.

 

அவனுக்கு மறுமொழி கூறாமல் அவனையே பார்த்திருந்தாள்.

 

“நீங்க பேசாம இருக்கறதையே நான் சம்மதமா எடுத்துக்கறேன்…” என்றவன் தொடர்ந்தான்.

 

“உங்களுக்கு நீங்களே பேசிக்கற பழக்கம் இருக்கா?? அதாவது தனியா நீங்க மனசுக்குள்ள பேசிக்கற பழக்கம்…”

 

“கண்டிப்பா அது எல்லாருக்கும் இருக்கும்… இதுவரை மனசோட அப்படி பேசியிருப்பீங்க… இனி அதை நீங்க தனியா இருக்கும் போது வாய்விட்டு பேசி பாருங்க…”

 

“உங்களுக்கு பிரண்ட்ஸ் இருப்பாங்க இல்லையா… அவங்களோட நெறைய பேசுங்க, பேச பேச தான் உங்களோட இந்த பிரச்சனை சரியாகும்… உங்களோட வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு…”

 

“நீங்க வேணா பாருங்க இதே பண்பலைவரிசை உங்களை தேடி வந்து வேலை கொடுக்கறேன்னு சொல்லுவாங்க… காலம் எல்லாம் மாத்தும்” என்று அவளுக்கு அறிவுரை சொன்னான்.

 

அவன் பேசியதற்கு அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாது போக ‘தனு இது உனக்கு தேவையா…’ என்று எண்ணிக்கொண்டவன் அதற்கு மேல் அங்கிருக்கவில்லை கிளம்பிவிட்டான்.

 

இப்போதும் கூட அவள் அவனுக்கு நன்றியுரைக்கவில்லை. காலையில் இருந்து அவனை இரண்டாம் முறையாய் பார்க்கிறாள்.

 

தெரிந்தோ தெரியாமலோ அவள் கேட்காமலே அவளுக்கு உதவியும் அறிவுரை செய்தும் இருக்கிறான். அவன் பேச்சு அவளுக்கு இதமாய் உள்ளே இறங்கி அவளை ஆறுதல்படுத்தியிருந்தது உண்மையே!!

 

ஆனாலும் அவனை நிறுத்தி பேச அவளுக்கு தோன்றவேயில்லை. அவன் பேச்சு கொடுத்த தெளிவில் சரியாகி இருந்தவள் மின்தூக்கியை நாடிச்சென்றாள்.

 

ஆறுமாதங்கள் தன்னைப் போல ஓடியிருந்தது. தினமும் இல்லையென்றாலும் எப்போதாவது அவளை அதே பேருந்து நிலையத்தில் சந்திக்க நேரிடும்.

 

எப்போது பார்த்தாலும் தன்னையுமறியாமல் அவளைப் பார்த்து லேசாய் ஒரு புன்னகை எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

 

பதிலுக்கு அவளும் பார்த்து வைப்பாள் அவ்வளவே, சிரிக்கவெல்லாம் மாட்டாள். அன்று அவனுடன் அவன் உடன் பணிபுரியும் யாகாஷும் வந்திருந்தான்.

 

முதல் நாள் தனுஷுடன் வந்திருந்தவன் அவன் வீட்டிலேயே தங்கி மறுநாள் அவனுடனே வேலைக்கு கிளம்பியிருந்தான்.

 

இருவரும் ஒன்றாய் ஒரே ஹோட்டலில் தான் பணியிலிருந்தனர். தோழர்கள் இருவரும் பேசிக்கொண்டே பேருந்து நிலையம் வந்திருந்தனர். தற்செயலாய் அன்று அவளும் வந்திருந்தாள்.

 

அவளைக் கண்டதும் எப்போதும் போல் தனுஷ் அவளைப் பார்த்து புன்னகைத்திருந்தான். அவனுடன் நின்றிருந்த யாகாஷ் அவளைப் பார்த்ததும் சட்டென்று கூவினான்.

 

“ஹேய் இவங்க நீங்களும் நானும் ப்ரோகிராம்ல வர்ற புவனா தானே… செம வாய்ஸ் தெரியுமா இவங்களுக்கு, ஆளு பார்க்க சுமார் தான் ஆனா செம கியூட் வாய்ஸ்டா இவங்களுக்கு… இரு நான் போய் பேசிட்டு வர்றேன்…” என்று தன் போக்கில் சொல்லிவிட்டு நகர்ந்து செல்லும் நண்பனை புரியாமல் தான் பார்த்தான் மற்றவன்.

 

ஆம் புவனாவே தான்… இப்போது ஒரு தனியார் கேபிள் தொலைக்காட்சியில் நீங்களும் நானும் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாள் தங்கு தடையில்லாமல்.

 

தனுஷின் அறிவுரைக்கு பின் தீவிரமாய் தன்னை தயார்ப்படுத்தினாள். இப்போது அவளுக்கு தொய்வில்லாமல் பேச வந்தது. எப்போதாவது மட்டுமே லேசாய் திக்கியது அவளுக்கு.

 

“ஹலோ புவனா எப்படி இருக்கீங்க??” என்று அவளிடம் நேராய் சென்று நின்ற யாகாஷை புருவம் சுருங்க பார்த்தாள் அவள்.

“நான் யாகாஷ்… உங்க ப்ரோகிராம் தொடர்ந்து பார்ப்பேன்… ரொம்ப நல்லா தொகுத்து வழங்குறீங்க… உங்க வாய்ஸ் ரொம்ப நல்லாயிருக்குங்க…” என்று அவனே தொடர்ந்தான்.

 

“தேங்க்ஸ்…” என்றாள் ஒற்றை சொல்லாய். மேற்கொண்டு எந்த பேச்சையும் அவனிடம் வளர்த்தவில்லை, அதை அவள் விரும்பவுமில்லை.

 

மீண்டும் அவளிடம் பேச்சுக் கொடுத்தான் யாகாஷ். அவளிடம் இருந்து ஒற்றைச் சொல்லே பதிலாக வரவே தோளைக் குலுக்கி நகர்ந்திருந்தான்.

 

“ரொம்ப தான் பண்றாடா… சப்ப பிகரு, ஆண்டவன் இவளுக்கு குரலை சூப்பரா படைச்சிருக்கான். போய் பேசுவோமேன்னு பார்த்தா மொக்கை பண்றாடா…” என்று நண்பனிடம் அவன் அலுத்துக் கொண்டான்.

 

தனுஷோ நண்பனை மேலிருந்து கீழாக முறைத்தான். “நீ எதுக்குடா என்னை முறைக்கிறே??”

 

“உனக்கு பிடிச்சா ஒரு மாதிரி பிடிக்கலைன்னா ஒரு மாதிரி பேசாதா… எப்பவும் ஒரே மாதிரி இரு…” என்று சொல்லிவிட்டு “ஆமா இவங்க எந்த டிவியில ப்ரோகிராம் பண்றாங்க??” என்றான்.

 

‘இவன் ஒருத்தன் சரியான அட்வைஸ் அம்புஜமா இருக்கான்… அம்புஜம் பொம்பிளை பேராச்சா ஆம்பிளைக்கு என்ன சொல்வாங்க… அட்வைஸ் அம்பின்னு வைச்சுக்குவோம்…’ என்று மனதிற்குள்ளாக சொல்லிக்கொண்டான்.

 

“ஏன் நீ அந்த ப்ரோக்ராம் பார்க்கலையா??”

 

“கேட்டா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு… தெரியாம தானே கேட்கிறேன்… தெரிஞ்சுட்டே நான் ஏன் உன்கிட்ட கேட்க போறேன்…”

 

“லோக்கல் கேபிள் சேனல்டா சிறுவாணின்னு வரும்ல… அதுல தான் நீங்களும் நானும்ன்னு ஒரு ப்ரோகிராம்… டெலி கால் பண்ணுறது…”

 

“ஓ!!” என்று கேட்டக்கொண்டவன் ஒன்றும் சொல்லவில்லை அவனிடத்தில்.

 

சிறிது நேரம் கழித்து “எத்தனை மணிக்கு போடுறான்?? தினமுமா??” என்றான்.

 

“ஆமா தினமும் தான்… ஹோட்டல்ல நான் நாலு டூ அஞ்சு காணாம போறேனே அப்போவே தெரிய வேணாம் உனக்கு…”

 

“நான் டிவி பார்க்க போறேன்னு… வேறென்ன இந்த ப்ரோக்ராம் தான் பார்க்க போவேன்…” என்றான் அசுவாரசியம் போல்.

 

மீண்டும் ஒரு ஓ!! மட்டுமே அவனிடத்தில். ‘பரவாயில்லை தன் முயற்சியில் வந்திருக்கிறாள்’ என்ற மனதிற்குள் அவளுக்காய் பாராட்டு படித்துக்கொண்டான்.

 

அவர்கள் ஏறிய பேருந்தியிலேயே அவளும் ஏறியிருந்தாள். ஏனோ அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் தனுஷ்.

 

முன்பை விட இப்போது அவளது முகத்தில் தெளிவிருந்ததை அவனால் உணர முடிந்தது. அந்த தெளிவில் தன்னம்பிக்கையும் உறுதியும் அவள் முகத்தில் காண முடிந்தது.

 

முகம் இன்னும் பளபளப்பாய் இருந்ததுவோ என்று கூட தோன்றியது அவனுக்கு. அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில்லாமலே பயணம் முழுதும் அவளை பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான் அவன்.

 

அவர்கள் இறங்குவதற்கு முன்பே அவள் இறங்கியிருக்க செல்லும் அவளையே பார்க்க சட்டென்று தோன்றிய உணர்வில் அவளும் திரும்பி பார்த்திருந்தாள்.

 

உள்ளே ஒரு உற்சாக ஊற்று பீறிட்டு எழ தலையசைத்து அவளிடம் விடைப்பெற்றான்.

 

ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த பின்னும் ஏனோ அவள் நினைவே!! அன்று செய்த உணவனைத்தும் ருசியாய் இருந்ததுவோ!! என்றும் தோன்றியது. நேரமாக ஆக உள்ளே ஓர் பரபரப்பு அவனுக்குள், ஏனென்றும் புரியவில்லை…

கை தன் போக்கில் வேலை செய்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் வேலை குறைந்து அக்கடா என்று உட்கார்ந்தவன் அப்போது தான் மணி பார்க்க அது மூன்று ஐம்பதை காட்டியது.

 

சுற்றும் முற்றும் பார்க்க யாகாஷ் இவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். “தனு நான் அந்த கேக் எல்லாம் செஞ்சு வைச்சுட்டேன்… ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு தேவையானது எல்லாம் தயாரா வைச்சுட்டேன்…”

 

“கொஞ்சம் போய் ரெஸ்ட் எடுத்திட்டு வந்திடறேன்டா…” என்று சொல்லி அவன் நகரப்போக “யாகாஷ் கொஞ்சம் நில்லு…” என்ற தனுஷின் குரல் அவனை நிறுத்தியது.

 

“என்னடா??”

 

“இந்த காய்கறி எல்லாம் நீளநீளமா கட் பண்ணி வை… இந்த பன்னீர் எல்லாம் விரல் நீளத்துக்கு கட் பண்ணிடு, பன்னீர் ப்ரை பண்ணுறதுக்கு…”

 

“அப்புறம் வைட் சாஸ்க்கு தேவையானது எடுத்து வைச்சிருக்கேன்… அதையும் ரெடி பண்ணிடு, எனக்கு இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கு, நான் போய் ரெஸ்ட் ரூம்ல இருக்கேன்…”

 

“அஞ்சரை மணிக்கு தான் வருவேன், அதுக்குள்ளே இதெல்லாம் ரெடியா இருக்கணும்… சாலமன் நீ அவனுக்கு உதவியா இரு…”

 

“தாசண்ணே நீங்க இவங்களை பார்த்துக்கோங்க… நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் அவன்.

 

யாகாஷ் ஏதோ சொல்ல வருவதை கூட கவனிக்காதவன் போல் நகர்ந்துவிட்டானவன் ஒரு நமுட்டு சிரிப்புடன்.

 

ஓய்வறைக்கு வந்தவன் அங்கிருந்த தொலைக்காட்சியை உசுப்பிவிட்டு அமர்ந்தான். ஓரிருவர் உடைமாற்றவென அடுத்திருந்த அறைக்குள் நுழைந்தனர்.

 

ஒரு பார்வையால் எல்லாம் அளந்தவன் இப்போது நேரம் பார்த்தான். சரியாக நான்கு மணியை அது காட்ட அவன் பார்வை தொலைக்காட்சியில் லயித்தது.

 

திரையில் அவள் அழகாய் சிரித்து இனிமையாய் பேசி நிகழ்ச்சியை ஆரம்பித்திருந்தாள். ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் பார்த்தான்.

 

நிறைய மாற்றங்கள் அவளிடத்தில், பேச்சு சரளமாய் இருந்தது இப்போது. தைரியமாகவும் உறுதியாகவும் அவளை அது காட்டியது.

 

தோற்றத்தில் கூட மாற்றங்கள் உணர்ந்தான். இத்தனை நாளும் அவ்வப்போது அவளை பார்ப்பது தான் ஆனாலும். இவ்வளவு உன்னிப்பாய் கவனித்ததில்லை.

 

இப்போது யாகாஷ் அவளை சுமார் என்று சொன்னது ஞாபகம் வர, அப்படியொன்றும் இல்லையே!! என்று அவன் மனம் சொல்லிக் கொண்டது.

 

ஒவ்வொருவராக பேச அவளும் அதற்கு தக்க பதில் சொல்வதும் பாட்டு போடுவதுமாக அரைமணி நேரம் கடந்திருந்தது.

 

தனுஷிற்கு தானும் அவளிடம் பேசினால் என்ன என்ற ஒரு ஆவல். நேரலை தானே என்ற எண்ணம் தோன்ற திரையில் தோன்றிய எண்ணிற்கு அழைத்திருந்தான் இப்போது.

 

இருபது நிமிடமாக முயற்சித்தும் அழைப்பு காத்திருப்பிலேயே செல்ல வைத்துவிடலாம். இது தான் கடைசி என்று எண்ணிக் கொண்டு அவன் அழைப்பை துண்டிக்க போக அவன் அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

அவள் இனிமையான குரலில் “ஹலோ நான் உங்க வீஜே புவனா பேசறேன். நீங்க யார் பேசறீங்க??” என்று ஆரம்பித்திருந்தாள்.

 

“ஹலோ நான் தேவா பேசறேன்…” என்றான்.

 

“ஹலோ தேவா சொல்லுங்க எப்படி இருக்கீங்க?? உங்களை பத்தி சொல்லுங்க??”

 

“என்னைப்பத்தியா என்ன சொல்லணும்??”

 

“நீங்க இந்த நிகழ்ச்சிக்கு புது காலரா??”

 

“ஆமா…”

 

“அதான் உங்களுக்கு தெரியலை… சரி நானே சொல்றேன்… இந்த நிகழ்ச்சியில கலந்துக்கறவங்க அவங்களை பத்தி சொல்லணும் நான் அதுல இருந்து உங்களை சில கேள்விகள் கேட்பேன்…”

 

“நீங்க சொல்ற பதில் எங்களை திருப்தி படுத்தும் விதமா இருந்தா உங்களுக்கு ஒரு ஆச்சரியமான பரிசு காத்திருக்கு…” என்று அவள் நிகழ்ச்சியை விளக்க அவனும் ஆர்வமாகவே அவளுக்கு பதில் சொன்னான்.

 

அவன் பேச்சின் முடிவில் “தேவா பரிசு பற்றிய விவரங்களை நாங்க நிகழ்ச்சியோட முடிவுல தான் தெரிவிப்போம்… நீங்க தொடர்ந்து நிகழ்ச்சியை கேளுங்க…”

 

“உங்களுக்கு பிடித்த பாடல் எதுவும் கேட்கணுமா தேவா… சொல்லுங்க அந்த பாட்டை யாருக்காக கேட்க விரும்பறீங்க…”

 

“இந்த அழகிய மாலை பொழுது எனக்கு மிக இனிமையா போச்சு. ஹ்ம்ம் அதையொட்டியே எனக்கு மிகப் பிடித்த இந்த பாடலை எனக்காக போடுங்க…”

 

“இந்த பாட்டை யாருக்கும் நான் டெடிகேட் பண்ணலை, எனக்காகவே பாட்டை கேட்க விரும்பறேன்… பாடல் என்னன்னா…” என்றவன் இருவரிகளை பாடியே காண்பித்தான்.

 

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஹா ஹா… ஏ… ஓ… ஹா… ல ல லா….
ம் ம்… ஏ… ஓ… ஹா… ம் ம்…. ம்…

 

புவனாவிற்கு எப்போதாவது சில நேயர்களுடன் பேசும் தருவாயில் மனம் மகிழ்ச்சியாக உணரும். அது போன்றதொரு நாள் இன்று என்று அவள் உணர்ந்தாள்.

 

அந்த குரலும் அவளுக்கு பழக்கமானது போலவே தோன்றியது அவளுக்கு. அவன் ரசித்து பேசிய விதமும் பாடிய விதமும் கூட அவளை கவர்ந்தது.

 

வாழ்க்கையில் சில நிகழ்வுகள் அதுவாகவும் சில நிகழ்வுகள் மற்றவர்களால் நிகழ்த்தப்பட்டதாகவும் அமையும்.

 

புவனா தனுஷின் சந்திப்பு முதலில் அதுவாகவே நிகழ்ந்திருந்தாலும் பின்னர் அது தனுஷின் விருப்பத்தினாலோ என்னவோ அவ்வப்போது நிகழ்ந்துக் கொண்டிருந்தது.

 

தனுஷிற்கு அவன் மனது மெல்ல புரிய ஆரம்பித்ததும் தன் காதலை ஊரறியவே அவளிடம் உரைத்தான் ஓர் நாள்… அந்நாள்….

Advertisement