அத்தியாயம் – 8
அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும் அவள் நினைத்திருக்க அவளின் அன்னை கனியமுது அழைத்துவிட்டார் அவளுக்கு.
“சொல்லுங்கம்மா…”
“யாரு புவனா அது??”
“எதைப்பத்திம்மா கேட்கறீங்க??” என்று அவர் என்ன கேட்க வருகிறார் என்பது தெரிந்தே தெரியாதது போல் கேட்டாள்.
“எவனோ இன்னைக்கு உன்கிட்ட ஐ லவ் யூன்னு சொன்னானே… நல்ல வேளை இன்னைக்கு உங்கப்பா நிகழ்ச்சி பார்க்கலை… இல்லைன்னா என்கிட்ட தாம்தூம்ன்னு குதிச்சிருப்பார்…”
“ஏன்ம்மா என் மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு??” என்றாள் குரலில் கொஞ்சம் கோபத்துடன்.
“நான் என்ன பேச வந்தேன் நீ என்ன பேசுற புவி… நான் உன் மேல நம்பிக்கை இல்லாம எல்லாம் எதுவும் கேட்கலை…”
“ம்மா நான் எத்தனை முறை சொல்லியிருக்கேன் உங்களுக்கு. இந்த மாதிரி மீடியால எல்லாம் இது போல சமயத்துல நடக்கறது தானேம்மா…”
“எனக்கு தெரியும் புவி… நீ எதுவும் சங்கடமா இருப்பியோன்னு தான் போன் பண்ணேன்டா” என்றார் அவர்.
“நான் நல்லா தான்ம்மா இருக்கேன்…”
“சரி நீ உடனே வீட்டுக்கு வா… அப்பா வந்திடுவார், வேற யாரும் எதுவும் சொல்ல முன்ன நாமே சொல்லிட்டா அவர் பேசாம இருப்பார்…” என்று அவர் சொல்ல சரியென்று போனை வைத்தாள்.
‘ச்சே இன்னைக்கே தேவாகிட்ட பேசிடலாம்ன்னு நினைச்சா இந்தம்மா வேற வீட்டுக்கு உடனே வரச்சொல்றாங்க…’ என்று எண்ணியவாறே வீட்டிற்கு கிளம்பினாள்.
மறுநாளே அவனை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லி பார்க் ஒன்றிற்கு வரச்சொன்னாள். அவனே முதலில் வந்திருந்தான் அங்கு. அவள் சரியாய் அந்த நேரத்திற்கு தான் வந்து சேர்ந்தாள். இதோ அவர்கள் இருவரும் வந்து பத்து நிமிடங்கள் கடந்துவிட்டது.
யார் முதலில் பேசுவது பேச்சை எப்படி தொடங்குவது என்ற தயக்கம் அங்கு நிலவியது. தனுஷ் அவள் முதலில் பேசட்டும் என்றே காத்திருந்தான்.
அவள் பேச தயங்குவது புரிய “சொல்லுங்க என்ன விஷயம்??” என்று நேரிடையாகவே பேச்சை ஆரம்பித்தான்.
அவளுக்கு சுருசுருவென்று கோபம் வந்தது. “தெரிஞ்சுகிட்டே கேட்கறீங்க?? உங்ககிட்ட இதை நான் எதிர்பார்க்கலை…”
“வேற என்ன எதிர்பார்த்தீங்க??”
“என்ன கிண்டலா??”
“நிச்சயமா இல்லை…”
“நேத்து எந்த தைரியத்துல நீங்க எனக்கு சேனல்க்கு போன் பண்ணீங்க… ஹோட்டல்ல வைச்சு சொன்னீங்க… அதுவும் நான் கிளம்பற நேரத்துல… அதுவே எனக்கு ஷாக்…”
“சரி அப்புறம் பதில் சொல்லிக்கலாம்ன்னு பார்த்தேன்… ஆனா நீங்க இப்படி ஊருக்கே சொல்லி வைச்சிருக்கீங்க… எனக்கு எவ்வளவு எம்பரசிங்கா இருந்துச்சு தெரியுமா… ஒரு மாதிரி சங்கடமா போச்சு…” என்றவளின் குரல் லேசாய் பிசிறியது.
“உங்க மேல எனக்கு எவ்வளவு மதிப்பு இருந்துச்சு தெரியுமா… அத்தனையும் இப்படி ஒரு நொடியில கீழ தள்ளிட்டீங்க…”
“நீங்க ரொம்ப நிதானமானவர், தெளிவானவர் எது பேசினாலும் யோசிச்சு தான் பேசுவீங்கன்னு நினைச்சேன்… இப்படி யோசிக்காம பண்ணிட்டீங்களே!!” என்றவளின் குரலில் ஆதங்கம் இருந்தது.
“நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்… நீங்க எந்த பதிலும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்??” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.
வீட்டில் என்னவோ அவனிடம் நிதானமாய் பேச வேண்டும் என்று தான் எண்ணியிருந்தாள். பலவிதமாய் பேசி பார்த்து மனதிற்குள் உருவேற்றினாள்.
ஆனால் அவனை நேரில் பார்த்ததும் முதல் நாள் அவன் போனில் ஊரறிய சொன்னதே ஞாபகத்திற்கு வந்து தொலைக்க கொஞ்சம் நிதானம் தவறியது அவள் பேச்சில்.
“நீங்க பேசி முடிக்க தான் வெயிட் பண்ணேன்… இப்போ நான் பேசலாமா??” என்று சொன்னவனை அவள் ஏதோ இடைமறிக்க முயன்று பின் அமைதியானாள்.
“சொல்லுங்க…” என்று ஊக்கினான்.
“இல்லை நீங்களே பேசுங்க…” என்று அமைதியானாள்.
“முதல்ல உங்களுக்கு ஒரு தேங்க்ஸ்… என்னைப் பத்தி புரிஞ்சு வைச்சதுக்கு… நான் ரொம்ப நிதானமானவன், தெளிவானவன், யோசிச்சு பேசுவேன்னு சொன்னீங்களே அதை தான் சொல்ல வந்தேன்…”
“அப்படி நான் தெளிவா இருக்கப்போ எதையுமே யோசிக்காம உங்ககிட்ட என்னோட விருப்பத்தை சொல்லியிருப்பேன்னு நினைக்கறீங்களா??” என்ற அவனின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.
“சரி உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை?? நான் உங்ககிட்ட என்னோட விருப்பத்தை சொன்னதா?? இல்லை அதை ஊரறிய ஒரு டிவி சேனல்ல சொன்னதா??” என்றான் நிதானமாய்.
அவன் கேள்வியில் சட்டென்று குழம்பியவள் ‘இதென்ன கேள்வி’ என்று எண்ணிக்கொண்டு “ரெண்டும் தான்…”
“என்னோட விருப்பத்தை சொல்ல எனக்கு உரிமையில்லையா??”
‘என்ன இப்படி பேசுகிறான்?? என்ன தான் சொல்ல வருகிறான்??’ என்ற குழப்பம் அவளுக்குள் மீண்டும்.
“இங்க உரிமை பத்தி யாரும் பேச வரலை…”
“நான் ஒண்ணும் உங்க சொத்துல உரிமை வேணும்ன்னு கேட்டு பேசலை… என் மனசுல உள்ளதை சொல்ல எனக்கு உரிமை இருக்குன்னு தான் சொல்ல வந்தேன்…”
“சரி சொன்னீங்க அத்தோட விட வேண்டியது தானே… போன் பண்ணி இப்படி எல்லார் முன்னாடியும் சொல்லிட்டீங்க…”
லேசாய் சிரித்தான் பின் சொன்னான். “நேத்து லஞ்ச் சாப்பிடும் போது நாம சில விஷயம் பேசினோம், ஞாபகம் இருக்கா!! மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன். போன்ல சொல்றதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட நேர்ல தான் சொன்னேன்… நீங்க பதிலொன்னும் சொல்லலை…”
“நம்ம பேசிய விஷயம் எல்லாம் யோசிச்சு பார்த்தேன்… உங்களுக்கு என் மேல விருப்பம் இருக்கோ!! இல்லையோ!! நான் செய்யறது சரியோ!! தப்போ!! ஆனா அந்த நிமிஷம் உங்க ஆசைப்படி ஊரறிய சொல்லணும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்”
“அது என் ஆசைன்னு நான் எப்போ சொன்னேன்… ஜஸ்ட் அந்த பாட்டுக்கு கேட்டதும் தோணிச்சு. இப்படிலாம் கூட நடக்குமா நிஜத்துல நடந்தா எப்படி இருக்கும்ன்னு ஒரு கற்பனை அவ்வளவு தான்…” என்று இடையிட்டாள்.
“ஒத்துக்கறேன் அது உங்க ஆசைன்னு நீங்க சொல்லலை தான்… ஆனா நீங்க சொன்ன விதம் என்னை அப்படி நினைக்க வைச்சுது… சோ எதையும் நான் யோசிக்கலை, சொல்லிட்டேன்”
அவன் இப்படி சொன்னால் என்ன பதில் சொல்வாள் அவள். நேற்று தான் ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் சொன்னதை அவன் செய்வான் என்று அவள் கண்டாளா என்ன!!
‘நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்… இனி இவனின் விருப்பத்திற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்’ என்று எண்ணியவள் பேச்சை அடுத்த கட்டத்திற்கு மாற்றினாள்.
“சரி அதை விடுங்க… இப்போ உங்களோட விருப்பத்துக்கு என்னோட பதில் எனக்கே தெரியலைன்னு தான் சொல்லணும்”
“தெரியலைன்னு சொல்றதை விட நீங்க இப்படி சொல்வீங்கன்னு நான் எதிர்பார்க்கலை… அடுத்து எனக்கு உங்க மேல அந்த மாதிரி எந்த எண்ணமும் தோணவேயில்லை”
“உங்களை ஒரு நண்பரா மட்டுமே தான் என்னால பார்க்க முடிஞ்சது இது வரை… அதை தாண்டி நான் யோசிச்சதில்லை… எனக்கு அதுக்கு மேல யோசிக்கவும் வராது…”
“ஏன்னா நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி… எனக்கு காதல் மேல பெரிசா நம்பிக்கை கிடையாது… என் கணவர் என் அம்மா அப்பாவோட விருப்பமா தான் இருப்பாங்க… தவிர…” என்று இழுத்தவள் அதை சொல்லவில்லை.
அவளுக்கு அவளின் அத்தை மகனுடன் பேசி வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல வந்தவள் அப்படியே நிறுத்திவிட்டாள்.
ஒருவேளை அவள் அதை சொல்லியிருந்தால் அவனும் தன் எண்ணத்தை காலாகாலத்தில் மாற்றிக் கொண்டிருந்திருக்கலாம்…
அவள் எண்ணமோ இந்த நேரத்தில் தனக்கு மாறனுடன் பேசி வைத்ததை பற்றிச் சொல்லி அவனுக்கு ஏன் குற்றவுணர்வை உண்டாக்க வேண்டும் என்றே நினைத்தாள்.
திருமணம் நிச்சயம் செய்த பெண்ணை போய் தான் விரும்பிவிட்டோம் என்று எண்ணி அவன் வருந்துவான் என்று நினைத்தே சொல்லாது விட்டாள்.
அவள் தெளிவாய் தன் மனதை எடுத்து சொன்னதும் அமைதியாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “நீங்களும் என்னை விரும்பணும்ன்னு நான் உங்களை எந்த கட்டாயமும் செய்ய மாட்டேன்…”
“என்னோட விருப்பத்தை சொன்னேன்… உங்களுக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டீங்க, உங்க சூழ்நிலையும் எனக்கு புரியுது… இனிமே என்னால உங்களுக்கு எந்த தொந்திரவும் இருக்காது…”
“நான் போன்ல சொன்னது உங்க மனசை புண்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க…”
“ச்சே!! ச்சே!! மன்னிப்பெல்லாம் வேண்டாம்…”
“நான் மன்னிப்பு கேட்டது உங்களை காயப்படுத்திட்டமோன்னு தான்… மத்தப்படி நான் அதை சொன்னதுல எந்த மாற்றமும் இல்லை… போன் சொன்னதை தப்புன்னும் நான் நினைக்கலை” என்றான் உறுதியாய் திடமாய்.
அவர்கள் பேச்சு வார்த்தை அத்துடன் முடிந்தது. அன்று பார்த்தது தான் அவனை அதன்பின் இத்தனை நாட்கள் மாதங்களாகி இரண்டு வருடங்கள் உருண்டோடிய போதும் அவனை அவள் பார்க்கவேயில்லை.
அந்நிகழ்வுக்கு பிறகு அவள் அந்த கேபிள் சேனல் வேலையை விட்டுவிட்டாள். சென்னையில் அமைந்திருந்த புகழ்பெற்ற அந்த பண்பலைவரிசையில் நடைப்பெற்ற ஆர்ஜே நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தாள்.
வீட்டினருக்கு அவள் சென்னை வரை செல்வது பிடிக்கவில்லை என்றாலும் அவளின் விருப்பத்திற்காகவும் விடாமுயற்சிக்காகவும் அவளை அங்கு செல்ல அனுமதித்தனர்.
நினைவலைகள் நீங்கிச் செல்ல அடுத்து என்னவென்ற சிந்தனை வந்து சிந்தையை ஆட்கொண்டது அவளை. ஒரு பெருமூச்சுடன் இருக்கையை விட்டு எழுந்தவள் அவளின் சேனல் ஹெட் சித்தார்த்தை தேடிச் சென்றாள்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்…”
“யா எஸ் கம் இன்சைட்” என்றான் அவன்.
“உட்காருங்க மேடம்… அப்புறம் என்ன விஷயம் சொல்லுங்க??”
“சார்ர்…”
“சொல்லு புவனா என்னைத்தேடி நீயே வந்திருக்கன்னா எதாச்சும் முக்கியமான விஷயமா தான் இருக்கும்… என்ன லீவ் எதுவும் அப்பிளை பண்ணப் போறியா…”
“ஹ்ம்ம் ஆமாம் சார்…”
புவனா வேலைக்கு சேர்ந்து இத்தனை நாட்களில் அதிகம் விடுப்பு எடுத்ததில்லை என்பதால் அவள் எப்போது விடுப்பிற்கு விண்ணப்பித்தாலும் அதை உடனே ஓகே செய்துவிடுவான் சித்தார்த்.
அது போல இப்போதும் “ஓகே போயிட்டு வா புவனா… எப்பவும் போல ரெண்டு நாள் தானே என்னைக்கு கிளம்பறே??”
“சார் ரெண்டு நாள் எல்லாம் இல்லை… ஒரு ஒரு மாசம்…”
“வாட் ஒன் மந்தா?? என்ன சொல்றே புவன்?? இவ்வளவு நாள் லீவ் எல்லாம் நீ இதுக்கு முன்ன கேட்டதில்லையே?? என்னாச்சு??” என்று ஒட்டுமொத்த கேள்வியும் ஒரேடியாய் கேட்டான்.
“கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு சார்… ஊர்ல இருந்து போன் வந்துச்சு… அதுக்காக தான் லீவ் கேட்டேன்…”
“என்ன கல்யாணமா!! என்ன புவனா நீ இதெல்லாம் சொல்லவே இல்லை எங்ககிட்ட”
‘எனக்கே தெரியலை… நான் எங்க இருந்து சொல்ல’ என்பதாய் இருந்தது அவள் மனசாட்சி.
“திடிர்ன்னு பிக்ஸ் ஆகிடுச்சு…”
“அப்படியே இருந்தாலும் பொண்ணு பார்க்கற படலம் இதெல்லாம் எதுவுமே இல்லையா…”
“அத்தை பையன் தான் சார், ஏற்கனவே பேசி வைச்சது… இப்போ கல்யாணம் வைச்சுடலாம்ன்னு…” என்றாள். ‘இவனுக்கு இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டுமா’ என்ற எண்ணம் வேறு.
“ஓ!! ஹ்ம்ம்…” என்று யோசனைக்கு தாவியவன் “அப்போ ப்ரோக்ராம்??”
“நான் லீவ்ல போறப்போ எப்படி நடக்குமோ அதே போல மானேஜ் பண்ணிக்க வேண்டி இருக்கும் சார்… நளினி என்னைவிட நல்லா பண்ணுவாங்க…” என்றாள்.
“அது எனக்கு தெரியும்…” என்றான் முகத்திலடித்தது போல்.
அவன் பேச்சில் சற்றே கோபம் வரத்தான் செய்தது அவளுக்கு. இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“ம்ப்ச் ஓகே புவன்… நீ போயிட்டு வா… கல்யாணம்ன்னு சொல்றே முடியாதுன்னு சொல்ல முடியாது… ஆபீஸ் ரூல்ஸ் தெரியும்ல அதே தான் உனக்கும்…”
“எக்ஸ்ட்ரா லீவ் எடுத்திருந்தா சாலரில கட் ஆகும்…” என்றான் தான் ஒரு சிறந்த மேலாண்மை அதிகாரி என்பதை நிரூப்பிப்பதாய்.
“தெரியும் சார்… ரொம்ப தேங்க்ஸ் என்னோட லீவ் அக்செப்ட் பண்ணதுக்கு…” என்றுவிட்டு எழுந்தாள்.
“ஹலோ மேடம் என்ன அவ்வளோ தானா??”
“வேறன்ன சார்…”
“கல்யாணத்துக்கு எல்லாம் கூப்பிட மாட்டீங்களா??”
“கண்டிப்பா கூப்பிடுவேன் சார்… இப்போ அங்க என்ன நிலவரம்ன்னு நான் ஊருக்கு போனா தான் தெரியும்… அங்க போயிட்டு நான் போன் பண்றேன் சார்…”
“என்னைக்கு கிளம்பறே புவனா??”
“நாளைக்கு சார்…”
“ஓகே விஷ் யூ ஹாப்பி மாரீட் லைப்”
“தேங்க்யூ சார்…” என்றுவிட்டு கிளம்பினாள்.
மறுநாள் மதியம் கிளம்பும் ரயிலில் தான் அவளுக்கு டிக்கெட் கிடைத்திருந்தது. வீட்டிற்கு போன் செய்து விஷயம் சொல்ல “இதுக்கு தான் அப்பா வர்றேன்னு சொன்னாங்க…”
“மத்தியானம் கிளம்பினா நைட் தானே வருவே… நேரம் கெட்ட நேரத்துல வந்தா நல்லாவா இருக்கும்…” என்றார் கனியமுது.
“ம்மா அப்போ தான் டிக்கெட் கிடைச்சுது… நான் என்ன புதுசாவா ஊருக்கு வர்றேன் எப்பவும் வர்றது தானே…”
“சரி சரி நான் அப்பாவையும் பாலாஜியையும் அனுப்பி வைக்குறேன் ஸ்டேஷன்க்கு…” என்றவரிடம் “சரிம்மா” என்றுவிட்டு வைத்தாள்.
____________________
“யாகாஷ் சொன்னான் நீங்க எங்கயோ கிளம்பிட்டு இருக்கீங்கன்னு?? எங்கப்பா??” என்றான் தேவ்தனுஷ் அவன் தந்தையிடம் போனில்.
“நேத்தே போன்ல சொன்னேன்ல தேவா இன்னைக்கு ஒரு பங்க்ஷன் இருக்குன்னு…”
“ஆமாப்பா மறந்தே போயிட்டேன்”
“போகும் போது யாகாஷ் கூட்டிட்டு போங்க… தனியா போக வேண்டாம்… ரிடர்ன் வரும் போதும் அவனுக்கு போன் பண்ணுங்க அவனே வந்து உங்களை பிக்கப் பண்ணிக்குவான்…”
“அங்க போய் சாப்பாட்டுல விதவிதமா இருக்குன்னு எல்லாம் சாப்பிட்டு வைக்காதீங்க… பார்த்து சாப்பிடுங்க… உங்களுக்கு எது வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க நான் ஊட்டில இருந்து வந்ததும் செஞ்சு தர்றேன்”
“நான் என்ன சின்ன குழந்தையா தேவா??”
“ஆமாப்பா வளர்ந்த குழந்தை…” என்றான் அவன் சிரிப்போடு.
“தேவா நான் இந்த மாதிரி விழாக்கெல்லாம் இப்போ எதுக்கு போறேன்னு நீ நினைக்கிறே!! எல்லாம் உன் கல்யாண விஷயமா தான்…”
“உனக்கு அங்க எதுவும் நல்ல பொண்ணு கிடைக்குதான்னு பார்க்கப் போறேன்…”
அவனின் திருமணம் பற்றிய தந்தையின் பேச்சில் சற்றே அமைதியானான். அவன் திருமணத்திற்கு சரி என்று சொல்லி இரண்டு மூன்று நாட்கள் ஓடிவிட்டது.
அவரும் பரபரப்பாய் தான் மகனுக்கு பெண் தேட ஆரம்பித்துவிட்டார். தேவா ஊட்டியில் அவர்களின் ஹோட்டல் பிரான்ச் ஒன்றை திறப்பதிற்காய் இடம் பார்க்க முதல் நாள் தான் சென்றிருந்தான்.
அமைதியாய் இரண்டு நாட்கள் அங்கு இருந்துவிட்டு வரலாம் என்ற எண்ணமும் உடன் சேர்ந்து கொண்டதனால் அங்கு சென்றிருந்தான்.
“சரி தேவா நீ எப்போ இங்க வரப்போறே??”
“வர்றேன்ப்பா ஒரு ரெண்டு நாள் கழிச்சு வர்றேன்”
“ஹ்ம்ம் சரி தேவா… பங்க்ஷனுக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்…” என்றுவிட்டு போனை வைத்தார் அவர்.
திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டானே தவிர அவனுக்குள் இன்னமும் குழப்ப மேகங்களே!! அவன் சரி சொன்ன நொடியில் இருந்து அவன் தந்தைக்கு கால்கள் தரையில் படவில்லை.
யார் யாருக்கோ போனில் அழைப்பதும் பெண் தேடச் சொல்வதுமாய் இருந்தார். அதனாலேயே அவன் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டான் இடம் பார்க்கும் சாக்கு வைத்து.
ஏதேதோ எண்ணிக்கொண்டு ஒருவாறு அவன் உறங்கிய போது மணி இரண்டை தாண்டியிருந்தது. காலை நான்கு மணிக்கே அவன் கைபேசி அடிக்க பதறிக் கொண்டு எழுந்தான்.
அழைப்பது யார் என்று கண்டதும் அவனின் இதயத்துடிப்பு தாறுமாறானது. “ஹலோ சொல்லு யாகாஷ்… என்ன இந்த நேரத்துல… அப்பா… அப்பாக்கு ஒண்ணுமில்லையே…”
“டேய் கொஞ்சம் நிதானம்டா… யாருக்கும் எதுவுமில்லை… அப்பா நல்லா இருக்கார்…”
“என்னடா இந்த நேரத்துல போன் பண்ணியிருக்க…”
“ஒரு நிமிஷம் இரு அப்பாகிட்ட தரேன்… அவர் தான் உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னார்…”
“ஹலோ என்னப்பா சொல்லுங்க…”
“தேவா நீ இங்க உடனே கிளம்பி வரணும்…”
“என்னாச்சுப்பா??”
“எனக்காக நீ ஒரு உதவி செய்யணும்…”
“என்னப்பா சொல்றீங்க… எனக்கு ஒண்ணும் புரியலை… என்ன உதவி??”
“நீ நேர்ல வா நான் சொல்றேன்… நீ இப்போ உடனே குளிச்சுட்டு அங்க இருந்து கிளம்பு… நீ அங்க ஒரு வண்டி புடிச்சுக்கோ நான் கொஞ்ச நேரத்துல உனக்கு ஒரு அட்ரஸ் அனுப்பறேன்… நீ நேரா அங்க வந்திடு”
“என்னப்பா இதெல்லாம்??”
“தேவா அப்பாக்காக… நீ இப்போ கிளம்பி வருவியா!! மாட்டியா!!”
“வர்றேன்ப்பா…”
“உடனே கிளம்பு” என்றவர் மேற்கொண்டு எந்த பேச்சும் வளர்த்தவில்லை போனை வைத்துவிட்டார்.
‘என்னாச்சு இவருக்கு போன் பண்ணார் உடனே வான்னு சொல்றார்… என்னன்னும் சொல்ல மாட்டேங்குறார்… இந்த யாகாஷ் மடையன் என்ன செய்யறான்…’ என்று யோசித்தவன் நெட்டை ஆன் செய்து யாகாஷ்க்கு மெசேஜ் தட்டினான்.
ஆனால் அவன் அதை பார்த்ததிற்கான எந்த அறிகுறியும் இல்லை. உடனே போன் செய்து பார்க்க அழைப்பு எடுக்கப்படாமலே ஓய்ந்தது.
குளித்து முடித்து வரவும் தந்தையிடம் இருந்து மெசேஜ் வரவும் சரியாய் இருந்தது. ஹோட்டலிலே வண்டியை ஏற்பாடு செய்துக்கொண்டு கிளம்பினான்.
தந்தை சொன்ன இடத்திற்கு வந்து சேர ஏழு மணியாகி இருந்தது. ‘இந்த இடத்துக்கு எதுக்கு வரச்சொன்னார்’ என்று யோசித்துக்கொண்டே அந்த திருமண மண்டபத்தினுள் நுழைந்தான்.
வாயிலில் மாறன் வெட்ஸ் சக்தி என்றிருந்தது. குழப்பத்தோடு வாயிலில் நின்றவனை யாகாஷ் வந்து இழுத்துச் சென்றிருந்தான்.
பிறகு நடந்ததெல்லாம் அவனுக்கு கனவாய் தானிருந்தது. இதோ புவனசக்தி அவன் மனைவியாய் அவனருக்கருகில்.
இனி நடக்கவே நடக்காது என்று அவன் நினைத்திருந்தது அவன் எதிர்பாராதவிதமாக நடந்தேறி முடிந்திருந்தது…
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று!!