Advertisement

அத்தியாயம் – 1

 

“ஹலோ வணக்கம் வெல்கம் டு தி ஷோ இது உங்கள் பண்பலைவரிசை 105.7… கேளுங்க கேளுங்க காற்றின் வழி கேட்கும் ஒலி…”

 

“இது நம்ம நிகழ்ச்சி ஆசையை காத்துல தூதுவிட்டு, நான் உங்க பீ.எஸ் பேசறேன்… நேயர் ஒருத்தர் காத்திட்டு இருக்கார் நம்ம இணைப்புல வாங்க நாம அவரோட லைன்ல இணையலாம்…”

 

“ஹலோ சொல்லுங்க நான் உங்க பீ.எஸ் பேசறேன்… நீங்க யார் பேசறீங்க எங்க இருந்து பேசறீங்க??” என்று விடாமல் பேசிக்கொண்டிருந்தவள் நம் நாயகி ஆர்.ஜே பீ.எஸ் என்று எல்லோராலும் அழைக்கப்படும் புவனசக்தி.

 

அந்த பண்பலைவரிசையில் இரண்டாண்டு காலமாக பணிபுரிபவள் தன் பேச்சில் தனக்கென்று தனி அடையாளம் ஏற்படுத்தி இந்த வருடத்தில் மக்கள் விரும்பும் ஆர்ஜேவாக தேர்வாகியிருந்தாள்.

 

“ஹலோ பீ.எஸ் நிஜமாவே எனக்கு லைன் கிடைச்சிருச்சுப்பா… ஹாப்பி பார் தாட், என் பேரு மீரா, நான் புனாவில இருந்து கால் பண்றேன்…”

 

“வணக்கம் மீரா… என்ன நீங்க புனாவில இருந்து கூப்பிடுறீங்களா… அங்க நம்ம அலைவரிசை வராதே… எப்படிங்க நீங்க நம்ம நிகழ்ச்சியை கேட்பீங்க??”

 

“அதுக்குன்னு எனக்கு ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்குங்க… அவங்க ப்ரோகிராம் ரெக்கார்ட் பண்ணி எனக்கு அனுப்பிடுவாங்க…”

 

“ஹா ஹா சூப்பர் மீரா… ஆனா இதுக்கெல்லாம் வாட்ஸ்அப் குரூப்பா ஆச்சரியம் தான் போங்க…”

 

“அப்புறம் சொல்லுங்க மீரா நீங்க யாருக்கு தூது அனுப்பப் போறீங்க காற்று வழியா… என்ன பாட்டு உங்களுக்கு வேணும் சொல்லுங்க…”

 

“பீ.எஸ் என்னோட கணவர் வெளிநாட்டுக்கு போயிருக்கார்… அவருக்காக இந்த பாட்டை நீங்க தூது அனுப்பணும்…”

 

“ஓ!! மிஸ்ஸிங் யுவர் பிரியாணி மாதிரி மிஸ்ஸிங் யுவர் ஹப்பியா… கண்டிப்பா உங்களுக்கு பிடிச்ச பாட்டை நாங்க தூது அனுப்பிடுறோம் அவருக்கு… ஆனா நீங்க இன்னும் என்ன பாட்டு வேணும்ன்னு சொல்லவே இல்லையே மீரா…”

 

“ஆசையை காத்துல தூதுவிட்டு ஜானி மூவி சாங்…”

 

“வாவ் நல்ல பாட்டு நம்ம நிகழ்ச்சியோட தலைப்பே அது தானே… கண்டிப்பா உங்களுக்காகவும் உங்க கணவருக்காகவும் அந்த பாட்டு இப்போ வந்துட்டே இருக்கு…”

 

“கேளுங்க கேளுங்க காற்றின் வழி கேட்கும் ஒலி… இது நம்ம நிகழ்ச்சி ஆசையை காத்துல தூதுவிட்டு…”

“நம்ம நேயர் மீராவுக்காக அவங்க விரும்பி கேட்ட பாட்டு நம்ம நிகழ்ச்சியோட தலைப்புப்பாடல் முதல் பாடலா வர இருக்கு நீங்களும் கேட்டு மகிழுங்க… ஸ்டே டியூன்…”

 

ஆசையை காத்துல தூதுவிட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

 

இளையராஜாவின் மெல்லிசையில் பாடல் ஒலித்து முடிக்கவும் மீண்டும் ஒரு நேயர் இணைப்பில் வர “ஹலோ நான் உங்க பீ.எஸ் சொல்லுங்க அந்த பக்கம் யாரு?? எங்க இருந்து பேசறீங்க??”

 

“ஹாய் பீ.எஸ் நான் சசி காஞ்சிபுரத்துல இருந்து பேசறேன்… சென்னையில தான் வொர்க் பண்ணிட்டு இருக்கேன்…”

 

“ஹாய் சசி சொல்லுங்க நீங்க யாருக்கு காற்றின் வழி தூது விடப் போறீங்க… என்ன பாடல் உங்கள் விருப்பம்??”

 

“கொஞ்சம் முன்னாடி பேசினாங்களே மீரா அவங்களுக்காக தான் இந்த பாட்டை டெடிகேட் பண்ணுறேன்… நாங்க எல்லாம் ஒரே குரூப் மக்கள் தான் பீ.எஸ்…”

 

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல்… முக்கியமா எங்க மீராம்மாவோட மூடுக்கு ஏத்த வரிகள் வர்ற பாடல் அது…”

 

“எந்த வரிகளை சொல்றீங்க சசி??”

 

“சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் என்ற வரியும் அதை தொடர்ந்த வரிகளும்…”

 

“கண்டிப்பா உங்களுக்காகவும் உங்க மீராவுக்காவும் இந்த பாடல் இப்போது…” என்று அவள் சொல்லி முடிக்கவும் அந்த பாடல் ஒலிக்க ஆரம்பித்தது அலைவரிசையில்.

 

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இன்னாள் நல்ல தேதி…

 

அவள் காதில் மாட்டியிருந்ததை சற்று கழற்றி அருகே வைத்துவிட்டு இருக்கையைவிட்டு எழுந்து வெளியில் வரவும் அவளின் தோழி நிவேதா கையில் காபி கோப்பையுடன் வரவும் சரியாக இருந்தது.

 

“தாங்க்ஸ் நிவி… காபி குடிக்கணும் போல இருந்துச்சு அதுக்காக தான் வெளிய வந்தேன்… நீயே கொண்டு வந்திட்ட, தேங்க்ஸ் பேபி…”

 

“எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேணாம் மச்சி… வீட்டுக்கு போகும் போது ஒரு ஹாட் டாக் வாங்கி தர்றியா…” என்று டீல் பேசினாள் அவள்.

 

“ஹாட் டாக் எல்லாம் இல்ல, வேணா ராஜாபாளையம் டாக் வாங்கி தரவா…” என்று நம் நாயகி கண்ணடித்து சொல்ல “ஏன்டி இந்த கொலைவெறி உனக்கு??” என்று வலிக்காமல் அவள் முதுகில் ஒன்று வைத்தாள் மற்றவள்.

 

“பாட்டு முடியப் போகுது நான் உள்ள போறேன்…” என்று வந்திருந்தாள் அவள்.

 

மீண்டுமொரு அழைப்பு வர “ஹலோ சொல்லுங்க…” என்று ஆரம்பித்து அவள் வழக்கமாக பேசுவதை பேசி முடித்தாள்.

 

“ஹலோ புவி மேடம் நான் அனு பேசறேன் சிவகாசில இருந்து…”

 

“அனு என்னோட பேரு எல்லாம் சொல்லி கூப்பிடுறீங்க நன்றி… சொல்லுங்க அனு யாருக்காக இந்த பாட்டு என்ன பாட்டு வேணும் உங்களுக்கு??”

 

“எங்க மீம்மாக்காக இந்த பாட்டு வான் வருவான் காற்று வெளியிடை படத்துல இருந்து…”

 

“கண்டிப்பா நீங்க கேட்ட பாடலை போடுறோம்” என்று சொல்லி அந்த பாடலை அவள் லிஸ்ட்டில் தேடிக்கொண்டே பேச்சை தொடர்ந்தாள் அனுவிடம்.

 

“மீம்மான்னா யாரு உங்கம்மாவா??”

 

“எங்கம்மா இல்லைங்க முதல்ல ஒருத்தர் பேசி இருப்பாங்களே மீரா… அவங்களை நான் ஷாட்டா மீம்மான்னு தான் கூப்பிடுவேன்…”

 

“ரொம்ப ஷாட்டா தான் கூப்பிடுறீங்க… மீராவே ரெண்டு எழுத்து தான் இதுல மீ மட்டுமா… சூப்பருங்க… ஆமா அதென்ன உங்க குரூப்ல இருந்து ஒவ்வொருத்தரா போன் பண்ணிட்டே இருக்கீங்க… அவ்வளவு க்ளோஸா நீங்க எல்லாரும்”

 

“ஆமாங்க நாங்க பத்து பேரு ஹனி கேர்ள்ஸ் எங்க குரூப் பேரு… மீம்மா தனியா பீலிங்க்ஸ்ல இருக்காங்களா அதான் அவங்களுக்கு பாட்டு போட்டு குஷியாக்கலாம்ன்னு…”

 

“ரொம்ப நல்ல விஷயம்… அதென்ன போன காலர் சசி பிரிவு பாட்டு கேட்டாங்க… நீங்க ரொமான்ஸ் பாட்டு கேட்கறீங்க…”

 

“அவங்களே பீலிங்க்ஸ்ல இருக்காங்க… அதான் கொஞ்சம் ரொமாண்டிக்கா பாட்டு போடலாம்ன்னு… எனக்கு ரொமான்ஸ் பாட்டு தாங்க பிடிக்கும்…”

 

“அப்புறம் இந்த பாட்டை நான் மட்டும் இல்லைங்க எங்க குரூப்ல இருக்க மத்த எல்லாருமே சேர்ந்து மீம்மாக்காக டெடிகேட் பண்ணுறோம்…”

 

“மீம்மா கேளுங்க கேளுங்க… காற்றின் வழி… அப்புறம் என்னவோ சொல்வீங்களே… ஹான் கேட்கும் ஒலி… நானே சொல்லிட்டேங்க…” என்று பெருமை பேசினாள் அப்பெண் அனு.

 

“தேங்க்ஸ் அனு… நீங்க கேட்ட பாடல் வந்திட்டே இருக்கு… நேயர்களே மீராவுக்காக அவங்க தோழமைகள் எல்லாரும் எப்படி மாய்ஞ்சு மாய்ஞ்சு பாட்டு கேட்குறாங்க பாருங்களேன்”

 

“ஹனி கேர்ள்ஸ் எல்லாருமே நிஜமாவே ரொம்ப ஸ்வீட் தான் இல்லீங்களா…”

 

“முதல் இரண்டு பாடல் நம்ம ஆஸ்தான நாயகர் இளையராஜாவின் பாடல் இப்போ கேட்க போறது நம்ம ஆஸ்கார் நாயகனோட பாடல் இதோ வான் வருவான் நம் நேயர் விருப்பம்…” என்று சொல்லி அவள் வழக்கமாய் பேசுவதை பேசி முடித்து பாட்டை போட்டுவிட்டாள்.

 

நிகழ்ச்சி தொடர்ந்து ஒரு மணி நேரம் ஓடியிருக்க அடுத்து அறுவை அருண் தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்து சேரவும் இவள் அவனுக்கான அறிமுகம் கொடுத்து விடைபெற்று வெளியில் வந்தாள்.

 

“புவி…” என்றழைத்தான் அவன்.

 

“என்ன??”

 

“அருமையா பண்ணே புவி…”

 

“தேங்க்ஸ்”

 

“அவ்வளோ தானா…”

 

அதற்கு மேல் அவனிடம் நின்று எல்லாம் அவள் பேசவேயில்லை, வெளியேறி சென்றுவிட்டாள்.

கொஞ்சம் விட்டா ஓவரா ஈன்னு பேசுவான்… என்று எண்ணிக்கொண்டே அவள் இருக்கையை ஆக்கிரமிக்க நிவேதா அவள் தோளில் தட்டினாள்…

 

“என்னடி அந்த அருண் உன்கிட்டயும் அறுவையை ஆரம்பிச்சுட்டானா??”

 

“ஏன்??”

 

“இப்போ தான் என்கிட்ட ஒரு பிளேடு போட்டான், நான் மூக்கடைச்சு அனுப்பினேன்… எப்படியும் அடுத்து உன்கிட்ட தான் ஆரம்பிப்பான்னு நினைச்சேன்… உன் முகத்தை பார்த்தா தான் தெரியுதே…”

 

“உனக்கு வேற வேலை இல்லையாடி…”

 

“எனக்கு இனிமே நாளைக்கு தானே ஷோ… அதான் கொஞ்சம் குக்கரி டிப்ஸ் எடுத்திட்டு இருக்கேன், உனக்கு தெரிஞ்ச புது ரெசிபி எதுவும் இருந்தா சொல்லுடி…” என்று ஆர்வமாய் அவளருகே இருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள் அவள்.

 

“ஹேய் என்ன விளையாடுறியா?? எனக்கு அடுத்து நைட் ஷோ இருக்கு, நான் அதுக்கு ரெடியாகணும்… மெயில்ஸ் பார்க்கணும், மெசேஜஸ் பார்க்கணும் நீ இடத்தை காலி பண்ணு” என்று விரட்டினாள் அவளை.

 

நிவேதாவின் வேலை நேரம் காலையில் இருந்து மாலை வரை மட்டுமே. புவனாவிற்கு மதியத்தில் இருந்து இரவு அவளின் ஷோ முடியும் வரையிலான வேலை நேரம்.

 

அவளுக்கென்று இரண்டு ஷோக்கள் ஒன்று ஆசைய காத்துல தூதுவிட்டு மற்றொன்று தூங்காத விழிகள் ரெண்டு என்ற இரவு நேர ஷோ…

 

நிவேதா கிளம்பிச்சென்ற பின்னே இன்னும் சிலர் மட்டுமே அங்கு பணியில் இருந்தனர். அவள் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் முடிந்து இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

 

சட்டென்று ஒரு முகம் அவள் மனத்திரையில் வந்து போனது. இரண்டு வருடத்திற்கு பின் ஏனோ இன்று தான் அந்த முகம் அவள் எண்ணத்தில் வந்து போகிறது.

 

விழிகள் சோம்பலாய் திறந்து அவ்வுருவத்தை மறைக்கப் பார்க்க அதுவோ உன் எண்ணத்தில் இருக்கும் நான் அவ்வளவு சீக்கிரம் உன்னைவிட்டு அகலுவேனா என்று அழிச்சாட்டியம் செய்தது.

 

யாரோ அவளை அழைக்கும் ஒலி கேட்டு இயல்பிற்கு வந்தவள் திரும்பி பார்க்க சேனல் ஹெட் சித்தார்த் நின்றிருந்தான்.

 

“சொல்லுங்க சார்…” என்று எழுந்து நின்றிருந்தாள்.

 

“என்ன யோசனை புவன்?? யூ பீல் சிக் ஆர் டயர்ட்”

 

“இல்லை சார் அதெல்லாம் இல்லை… நான் நல்லாயிருக்கேன்…”

 

“ஓகே… உங்க ஷோக்கு டைம் ஆச்சு புவன்… நான் அதை கேட்க தான் காத்திட்டு இருக்கேன்… ஆரம்பிங்களேன்…” என்றான் அவன்.

 

‘நம்ம ரேடியோல வர்ற ஒரு நிகழ்ச்சி இவன் முழுசா கேட்டதில்லை… என் நிகழ்ச்சியை இவன் கேக்கறானாம்… இதை நான் நம்பணும்…’

 

‘டேய் நீ எப்படி வேலை வாங்குவேன்னு எனக்கு தெரியாது. உன் மானிட்டர்ல என்னை வாட்ச் பண்ணியிருப்பே… அடடா இவ தூங்குறாளே ஷோ லேட் பண்ணிருவாளோ வந்து எழுப்பி இருக்கே…’

 

‘இப்படி இருக்கறதுனால தான்டா நீ பாஸ் நாங்க லூஸ்…’ என்று ரைமிங்காக வரவேண்டும் என்று தங்களை லூஸ் என்று சொல்லிவிட்டு அதற்கும் அவளே தன்னையே குட்டிக் கொண்டாள்.

 

“என்னாச்சு புவன்??”

 

“நத்திங் சார்… பேப்பர்ஸ் எடுக்க மறந்திட்டேன் அதான்…” என்று சமாளித்து அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.

 

உள்ளே அறைக்கு சென்று அவள் இருக்கையில் அமர்ந்து தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளவும் முதல் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

 

“அனைவருக்கும் மாலை வணக்கம்… நான் உங்க பீ.எஸ்… இது நம்ம பண்பலைவரிசை 105.7…”

 

“இப்போ நான் வந்திருக்கறது நம்மோட சிறப்பு நிகழ்ச்சியான தூங்காத விழிகள் ரெண்டு”

 

“ஒரு நேயர் ரொம்ப நேரமா இணைப்புல காத்திட்டு இருக்காங்க… ரொம்ப பேசி நேரம் கடத்த விரும்பலை, நம்ம நேயர்கிட்ட பேசலாம்…”

 

“ஹலோ சொல்லுங்க நான் உங்க ஆர்.ஜே பீ.எஸ் பேசறேன்… நீங்க யார் பேசறீங்க?? எங்க இருந்து இருந்து பேசறீங்க??”

 

“ஹாய்…” என்ற குரல் அவளை ஒரு கணம் பேச்சடைக்க செய்தது.

 

பழக்கமான குரலாய் தெரிந்தது. ஆனாலும் இந்த குரலில் வேறு ஏதோ புதிதாய் இருந்தது. ஒரு வேளை இது அந்த குரல் இல்லையோ என்று எண்ணத் தோன்றியது.

 

“சொல்லுங்க சார்… உங்க பேரென்ன?? நீங்க எந்த ஊர்ல இருந்து பேசறீங்க??”

 

“ஹாய் பீ.எஸ் நான் டிடி பேசறேன்…”

 

“என்ன டிடியா… தூர்தர்ஷன ஷார்ட் பாரம்ல சொன்ன மாதிரி சொல்றீங்களே சார்… உங்க முழுப்பேரு என்ன சார்??”

“நீங்க பீ.எஸ்குள்ள மறைஞ்சு இருக்கும் போது நானும் டிடியாவே இருக்கேங்க…”

 

‘என்ன இவன் இப்படி பேசறான்…’ என்று எண்ணியவள் ‘எதுவா இருந்தா என்ன இது அவனோட பர்சனல் நான் இதுக்கு மேல இதை குடையறது நல்லதில்லை…’ என்று எண்ணியபோதும் ஏனோ அவளுக்கு அவன் பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும் போல் ஒரு உணர்வு.

 

“ஓகே டிடி இந்த நேரத்துல உங்க தூக்கத்தை கெடுத்தது யாரு… நீங்க தூங்காம இருக்க என்ன காரணம் பகிருங்க…”

 

“ஒரு ராட்சஸியால இன்னைக்கு எனக்கு தூக்கம் போச்சு…”

 

“என்ன சார் பேய் கனவு எதுவும் கண்டீங்களா… ராட்சஸின்னு சொல்றீங்க??”

 

“பேய் கனவெல்லாம் இல்லை… இவ எப்பவும் என்னை இம்சை பண்ணுற ராட்சஸி இன்னைக்கு வீட்டுக்குள்ளயும் வந்திட்டா…”

 

“இன்னைக்கு தான் வந்தாங்களா??”

 

“எப்பவும் வர்றது தான்… இன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷல் டே எங்க ரெண்டு பேருக்கும்…”

 

“சார் நீங்க சொல்றது பார்த்தா உங்க மனைவியை சொல்ற மாதிரி இருக்கு…”

“ஆமாங்க மனைவி தான்…”

 

“ரொம்பவும் தைரியம் சார் உங்களுக்கு… அவங்களும் இந்த நிகழ்ச்சி கேட்டுட்டு தான் இருப்பாங்கல… இன்னைக்கு உங்களுக்கு கட்சேரி இருக்கு போங்க…”

 

“ஹ்ம்ம் கேட்டுட்டே தான் இருக்கா…” என்றான் அவன் ஆழ்ந்த குரலில்.

 

“இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள்ன்னு சொன்னீங்க… உங்க கல்யாண நாளா சார்…”

 

“என்னை டிடின்னு கூப்பிடுங்க மிஸ். பீ.எஸ்… சார் என்னவோ போல இருக்கு… ஹான் என்ன கேட்டீங்க கல்யாண நாளான்னு தானே…”

 

“இல்லைங்க என்னோட லவ்வை அவகிட்ட ப்ரொபோஸ் பண்ண நாள்… எனக்கு இன்னும் பசுமையா அந்த நாள் ஞாபகமிருக்கு… அவளுக்கு தான் அது ஞாபகத்திலேயே இல்லை…” என்ற அவன் குரலில் இருந்த ஏக்கம் அவளை எதுவோ செய்தது.

 

சட்டென்று இதயம் நின்று துடிக்கும் ஓர் உணர்வு. அவனிடம் பேசும் போது தன்னை எதுவோ இழுப்பதாய் தோன்றியது அவளுக்கு.

 

“உங்களோட கதையை நாம ஒரு பாடலுக்கு பிறகு தொடருவோம்… சொல்லுங்க சார் உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது??”

 

நீ வருவாய் என நானிருந்தேன்

ஏன் மறந்தாய் என நானறியேன்

கண்கள் உறங்கவில்லை

இமைகள் தழுவவில்லை

கவிதை எழுத

ஒரு வரியும் கிடைக்கவில்லை

அமைதி இழந்த மனம்

எதையும் நினைக்கவில்லை

வாராயோ!!

 

என்று சன்னக்குரலில் அழகாய் அவன் பாடியிருக்க அதில் அப்படியே மெய்மறந்திருந்தாள் அவள்…

Advertisement