Advertisement

அத்தியாயம் – 7

 

“புவனா எப்படிம்மா இருக்கே??” என்றார் கனியமுது தன் மகளிடம் போனில்.

 

இப்புறம் அவளோ “நல்லாயிருக்கேம்மா… நீங்க அப்பா பாலாஜி எல்லாம் எப்படி இருக்கீங்க??”

 

“எல்லாரும் நல்லாயிருக்கோம் புவி… சரிம்மா நீ நாளைக்கே ஊருக்கு புறப்பட்டு வாம்மா…”

 

“என்னம்மா எதுக்கு உடனே வரச்சொல்றீங்க??”

 

“உனக்கும் மாறனுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிருக்கோம்மா… ஏற்கனவே பேசி வைச்சது தானே, மாறன் ஊர்ல இருந்து வந்திருக்கான்… உங்க அத்தையும் அவன் ஊருக்கு போறதுக்குள்ள கல்யாணம் வைச்சுட சொன்னாங்க… நேத்து போய் நல்ல நாள் பார்த்திட்டு வந்தோம்…”

 

“உனக்கு இன்னும் ஒரு மாசம் தான் குருபலன் இருக்காம்… அதுக்குள்ளே நல்ல முகூர்த்தம்ன்னு பார்த்தா இன்னும் பத்து நாள்ல வருது… அதான் அந்த முகூர்த்தமே குறிச்சாச்சு…” என்றார் அவர் சாவதானமாய்.

 

“அம்மா அதுக்குள்ளே கல்யாணத்துக்கு என்னம்மா அவசரம்??”

 

“என்ன பேசற புவி நீ?? உனக்கும் வயசு ஏறிகிட்டே போகுதுல… அதுவும் இல்லாம நாம ஏற்கனவே பேசி வைச்சது தானே புதுசா பேசுற மாதிரி சொல்றியே புவி…”

 

மாறன் இரண்டு வருடத்திற்கு முன்பே அவளுக்கென பேசி வைத்திருந்த அவளின் அத்தை மகன் தான். அது அவளும் அறிந்ததே!! அவனை அத்தை மகன் என்றளவில் தெரியும் அவ்வளவு தான். அதற்கு மேல் அவனைப்பற்றி அவள் அதிகம் யோசித்ததில்லை இன்று வரை.

 

திடுதிப்பென்று திருமணம் என்று சொல்லவும் ஏதோ குற்றம் செய்த உணர்வு தன்னுள் பரவியதை அவளால் தடுக்க முடியவில்லை. ஏனோ அவளுக்கு தேவாவின் முகம் கண் முன் வந்து போனது.

 

“என்ன புவி எதுவுமே பேச மாட்டேங்குற??” என்று கனியமுது அழைக்கவும் “ம்மா…” என்று இழுத்தாள் அவள். “என்னம்மா உடனே கிளம்பு, இங்க நெறைய வேல கிடக்கு… புடவை எடுக்கணும், நகை வாங்கணும், பத்திரிகை அடிக்கணும் இப்படி தலைக்கு மேல வேல கிடக்கு…”

 

“அம்மா இவ்வளவு அவசரம் ஏன்ம்மா…”

 

“புவி என்ன நீ இப்படி கேட்குறே… அதான் உனக்கு நான் எல்லாம் விளக்காம சொன்னேன்ல அப்புறமென்ன…”

 

“நான் கல்யாணத்துக்கு இன்னும் தயாராகலைம்மா…”

அவளின் பதில் கேட்டவர் சில அமைதி காத்தார் பின் “புவி அப்பா உன்கிட்ட பேசணுமாம்…” என்றுவிட்டு போனை அவள் தந்தையிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தார் அவர்.

 

“புவிம்மா எப்படிடா இருக்கே??” என்ற நெகிழ்வான தந்தையின் குரலில் “நல்லாயிருக்கேன்பா…”

 

“அம்மா சொன்னாளாடா… சீக்கிரம் ஊருக்கு கிளம்பிவாடா”

 

“அப்பா என் கல்யாணத்துக்கு இவ்வளவு அவசரம் தேவையாப்பா…”

 

“ஏன்மா இப்படி கேட்கறே?? நீ அம்மாகிட்ட கல்யாணத்துக்கு இன்னும் தயாராகலைன்னு சொன்னது நானும் கேட்டேன்… போன் ஸ்பீக்கர்ல தான் இருந்துச்சுடா”

 

“என்னாச்சும்மா எதுக்குடா அப்படி சொன்னே?? மாறனை உனக்கு பேசி வைச்சு வருஷம் இரண்டாக போகுதே… இப்போ வந்து இப்படி சொல்றியேம்மா…” என்றார் அவளின் தந்தை சக்திவேல்.

 

“உனக்கு மாறனை பிடிக்கலையா…” என்ற அவரின் கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்வாள். ஏற்கனவே பேசி வைத்திருந்த திருமணமாயிற்றே!! பிடிக்கவில்லை என்ற பதிலை இப்போது சொன்னால் அபத்தமாய் தோன்றுமே!!

 

“என்னடாம்மா…” என்ற தந்தையின் அழைப்பில் மொத்தமாய் உருகிப் போனவள் “அப்படிலாம் ஒண்ணுமில்லைப்பா…” என்றாள்.

 

“சரிம்மா அப்போ நீ கிளம்பி வந்திடுடா…” என்றவர் என்ன நினைத்தாரோ “வேண்டாம்மா நானோ இல்லை அம்மாவோ நேரா வந்தே உன்னை அழைச்சுட்டு வர்றோம்…” என்றார்.

 

“அப்பா அதெல்லாம் வேணாம்ப்பா நான் என்ன சின்ன குழந்தையா நானே வந்திடுவேன்…” என்றுவிட்டு போனை வைத்தாள் அவள்.

 

ஏனோ சில நாட்களாகவே அவளுக்கு தேவாவின் நினைப்பே!! அவன் விருப்பத்தை அவளிடம் நேரில் உரைத்த அன்று கூட அவனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து தன் மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று சொன்னவள் தான் அவள்.

 

இங்கு வந்து இத்தனை நாட்களில் ஒரு முறை கூட அவன் ஞாபகம் அவளுக்கு வந்ததேயில்லை. சில நாட்களுக்கு முன் வந்த நேயர் அழைப்பு தான் அவனை நினைவுக்கொள்ளச் செய்தது.

 

மனம் பின்னோக்கிச் செல்லவாரம்பித்தது. பழைய நினைவுகளின் ஊர்வலம் மெல்ல அணிவகுத்து சென்றது அவள் உள்ளத்தில்.

____________________

 

“ஹலோ நான் புவனா பேசறேன்…”

“சொல்லுங்க மேடம்…” என்றான் தனுஷ் எதிர்முனையில்.

 

“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே??” என்று அவள் சொல்லவும் அவன் மனதில் சாரலடித்தது.

 

“ஓ!! கண்டிப்பா பேசலாமே!! சொல்லுங்க என்ன விஷயம்??”

 

“இல்லை உங்ககிட்ட நேர்ல பேசணும்… சும்மா ஒரு சர்ப்ரைஸ்” என்றாள்

 

“சர்ப்ரைஸா!! என்னன்னு சொல்லுங்களேன்…”

 

“சர்ப்ரைஸ்ன்னு இல்லை அது சும்மா…”என்பர் இழுத்தவள் “நேர்ல பேசலாமே…”

 

“சரி எப்போன்னு சொல்லுங்க??”

 

“நீங்களே சொல்லுங்க உங்க வசதி தான் முக்கியம்…”

 

‘என்னடா இது பில்டப் ஓவரா இருக்கே’ என்று அவன் எண்ணாமல் இல்லை.

“இன்னைக்கே மீட் பண்ணுவோமா??”

 

“இன்னைக்கேவா…” என்று இழுத்தவள் “ஹ்ம்ம் சரி ஓகே… எங்க மீட் பண்ணலாம்??”

 

“அதுவும் என் விருப்பம் தானா??”

 

“ஹ்ம்ம் உங்க விருப்பம் போலவே சொல்லுங்க…”

 

“ரெசிடென்சி ஹோட்டல் வந்திடுங்க…”

 

“என்ன?? என்ன சொன்னீங்க??”

 

“ரெசிடென்சி ஹோட்டல்ன்னு சொன்னேங்க…” என்றதும் அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

 

“என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க… நானா வந்து பேசுறதுனால எங்க கூப்பிட்டாலும் வருவான்னு நினைச்சுட்டீங்களா…” என்று படபடவென்று பொரிந்தாள் அவள்.

 

“ஏங்க இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்… ரெசிடென்சி ஹோட்டலுக்கு தானே வர சொன்னேன்… லஞ்ச் சாப்பிட்டே பேசலாம்ன்னு நினைச்சேன், நீங்க என்னமோ நான் ரூம் போட சொன்ன மாதிரி என்னென்னவோ சொல்றீங்க…” என்றான் அவன்.

 

‘அச்சோ தப்பா நினைச்சிட்டமோ… இப்போ என்ன செய்ய… அவ்வளோ பெரிய ஹோட்டல்க்கு கூப்பிட்டா வேற என்ன நினைப்பாங்களாம்… நாம எல்லாம் என்னைக்கு அங்க போய் சாப்பிட்டு இருக்கோம்… நாம இன்வைட் பண்ணிட்டோம், ரொம்ப செலவாகுமோ… சரி பார்ப்போம்…’

 

“என்னங்க எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க… என்னைப்பத்தி தப்பா தானே நினைச்சீங்க… அதுக்கு தானே கோபப்பட்டீங்க??”

“தப்பு தாங்க சாரி… ஆனா இவ்வளவு பெரிய ஹோட்டல்க்கு எல்லாம் போய் நான் லஞ்ச் எல்லாம் சாப்பிட்டதில்லை… அதுனால தான் தப்பா நினைச்சிட்டேன்… நாங்க அதிகப்பட்சம் அன்னபூர்ணா போயிருக்கோம் அவ்வளவு தாங்க…”

 

“தப்பா எடுத்துக்காதீங்க… ரியலி வெரி சாரி…” என்றாள் மீண்டும்.

 

“ஓகே அதைவிடுங்க… உங்களுக்கு இடம் தெரியும் தானே…”

 

“நல்லா தெரியும்… நீங்க தான் மறந்துட்டீங்க போல…”

 

“நானா… நான் மறக்கவே மாட்டேன் அந்த இடத்தை… உங்களை கூட அங்க ஒரு முறை பார்த்திருக்கேன் ஞாபகம் இருக்கா உங்களுக்கு…”

 

“நான் மறக்க நினைக்கிறதை எதுக்கு நினைவுப்படுத்துறீங்க…”

 

“தோல்விகளை தாங்க நாம எப்பவும் நினைவு வைச்சுக்கணும்… ஏன்னா அது தான் நம்மோட உந்து சக்தியே!! நாம ஜெயிக்க வழியும் அது தான் தரும்…”

 

‘அவன் சொல்வது உண்மை தானே, அந்த தோல்வி தானே என்னை இப்போது இங்கு நிறுத்தியிருக்கிறது… இன்னமும் சாதிக்கச் சொல்லி என்னை உந்துகிறது’ என்று எண்ணினாள்.

 

“சரிங்க நேர்ல பார்க்கலாம்…” என்றுவிட்டு போனை வைத்தாள். சொன்னது போலவே ஹோட்டலுக்கும் வந்து சேர்ந்தவள் அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

 

“ஹலோ நான் வந்துட்டேங்க… ரிஷப்ஷன்ல இருக்கேன்”

 

“நீங்க அங்கவே இருங்க நானே வந்து கூட்டிட்டு போறேன்…”

 

அங்கு ரிசப்ஷனில் நின்றிருந்தவன் இவளை கண்டதும் புன்னகை புரிந்தவன் இவளை நோக்கி நடந்து வந்தான். “நீங்க அந்த டிவி ப்ரோகிராம் பண்ற புவனா தானே…”

 

அவளும் பெயருக்கு புன்னகைத்து “ஆமாம்…” என்றாள்.

 

“சூப்பர் நல்லா ஹோஸ்ட் பண்றீங்க…”

 

“நன்றிங்க…” என்றவள் தேவா எப்போது வருவான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“சாம்…” என்ற குரலில் அவன் திரும்ப “ஹாய் பாஸ் என்ன இந்த பக்கம்…” என்றான் புவனாவுடன் பேசிக்கொண்டிருந்த சாம் என்பவன்.

 

“அவங்க என்னோட கெஸ்ட், அவங்களை கூட்டிட்டு போகத் தான் வந்தேன்…”

 

“பாஸ் இவங்க அந்த…” என்றவன் திரும்பி அருகிருந்தவளை ஒரு முறை பார்த்தான். ‘இவங்க அவங்க தானே’ என்பது போல் தனுஷிடம் சைகை செய்தான்.

 

அவனோ பதிலேதும் சொல்லாமல் “சாம் நான் உள்ள போறேன்… வாங்க புவனா…” என்று அவளை அழைத்துச் சென்றான். சாம் என்பவன் தோளைக் குலுக்கிச் சென்றுவிட்டான்.

 

ஹோட்டலுடன் இணைந்த ரெஸ்டாரண்ட்ற்குள் இருவரும் நுழைந்தனர். ‘இதென்ன பஃபெட் மாதிரி இருக்கு… இதெல்லாம் நமக்கு கட்டுப்படி ஆகாதே… பேசாம மீட் பண்ணவேண்டிய இடத்தை நானே சொல்லியிருக்கலாம் போலவே’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் அவள்.

 

“உட்காருங்க… என்ன சாப்பிடறீங்க…”

 

அவன் கேட்டதும் தான் தாமதம் “எனக்கு ஒரு காபி… காபி போதும்… இப்போ தான் சாப்பிட்டேன் வயிறு டொம்ன்னு இருக்கு…”

 

அவள் சொன்ன விதம் கண்டு அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. “ஏங்க இந்த நேரத்துல காபி சாப்பிட்டா சாப்பாடு எப்போ சாப்பிடுவீங்க??”

 

“வீட்டுக்கு போய் சாப்பிடுவேன்…” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே யாகாஷ் அங்கு வந்தான் “சார் ஆர்டர் ப்ளீஸ்” என்றவாறே.

 

“டேய் நீ இங்க என்னடா பண்றே??”

“ஆர்டர் எடுக்க வந்தேன் சார்…”

 

“டேய் உனக்கு நான் என்ன வேலை கொடுத்தேன், போய் அதை செய் நீ… இல்லைன்னா நாளைக்கு வெட்ட வேண்டிய காய்கறியும் இன்னைக்கே உன்னை செய்யச் சொல்லிருவேன்…” என்று தனுஷ் மிரட்டினான்.

 

“சரி சரி போறேன்…” என்று நகர்ந்தான் யாகாஷ் இருவரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே!!

 

“ஏங்க இவரு உங்க பிரண்ட் தானே இங்க தான் வேலை பார்க்கறாரா… அப்போ நீங்க…”

 

“நானும் இங்க தான் வொர்க் பண்ணுறேன்…”

 

“என்னவா??”

 

“செஃப்”

 

“ஓ!! அப்போ இங்க உங்களுக்கு சாப்பாடு ப்ரீயா…”

 

“ஹ்ம்ம்… ஆமாம்…”

 

“அதான் என்னை இங்க வரச் சொன்னீங்களா??”

 

“ஹ்ம்ம் சரி தான்…” என்றான்.

 

“இப்போ தைரியமா சாப்பிடுவீங்க தானே…”

 

“சாப்பிடுவேன் ஆனா நான்ல உங்களுக்கு ட்ரீட் கொடுக்கணும்ன்னு நினைச்சேன்…”

 

“எனக்கா!! என்ன விசேஷம் எனக்கு ட்ரீட்லாம் கொடுக்க நினைக்கறீங்க…” என்றான் ஆச்சரியமாய்.

 

“விசேஷம்ன்னு எல்லாம் பெரிசா ஒண்ணுமில்லை… உங்களோட பேச்சு தான் என்னை மாத்தியிருக்கு… இதே ஹோட்டல்ல வைச்சு தான் அழுதிட்டு வந்த எனக்கு நம்பிக்கை கொடுத்தீங்க…”

 

“அதை நான் இன்னமும் மறக்கலைங்க… அதுக்காக ஒரு முறை கூட நான் உங்களுக்கு நன்றியோ இல்லை பாராட்டோ தெரிவிக்கவேயில்லை…”

 

“அது ஒரு குற்றவுணர்ச்சியாவே இருந்துச்சு எனக்கு… உங்களை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைக்கணும்ன்னு ஆசை தான்…”

 

“ஆனா உங்களை பத்தி எல்லாம் நான் வீட்டில எதுவும் சொன்னதேயில்லை. எங்கப்பாவுக்கு பொண்ணுங்க பசங்க கூட பேசுறது கூட பிடிக்காது…”

 

“அதுக்காக அவர் கட்டுப்பெட்டியான ஆளெல்லாம் இல்லை… அவரோட தங்கையை அப்பா கூட நல்லா பழகிட்டு இருந்த அவரோட பிரண்ட் ஒருத்தர் கூட்டிட்டு போய்ட்டார்…”

 

“அதுல இருந்து கொஞ்சம் சிடுசிடுப்பு காட்டுவார்… இதுவரை என்கிட்ட அப்படி இருந்ததில்லை தான்… ஆனாலும் அம்மா சொல்ல கேட்டிருக்கேன்… சோ எனக்கும் பெரிசா எந்த ஆண் நண்பர்களும் இருந்ததில்லை…”

 

“அதுனால தான் உங்ககிட்ட கூட ஆரம்பத்துல என்னால சகஜமா பேச முடிஞ்சதில்லை… ஒரு முறை கூட உங்களுக்கு நன்றி சொன்னதில்லையேன்னு தோணிட்டே இருக்கும்…”

 

“அதான் உங்களுக்கு வீட்டில கூப்பிட்டு விருந்து வைக்க முடியலைன்னு நீங்க ஹோட்டல் சொன்னதும் சரின்னு சொல்லிட்டேன்…” என்றவளை அவன் பார்த்த பார்வையில் “சரி சரி நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது எனக்கு”

 

“எனக்கொரு சந்தேகம் நீங்க விருந்து கொடுக்கணும்ன்னா நீங்களே இடத்தை சொல்லி கூப்பிட்டு இருக்கலாமே… ஒரு வேளை நான் ஹோட்டல்ன்னு சொல்லாம பார்க் போகலாம் மால்ல மீட் பண்ணலாம்ன்னு சொல்லியிருந்தா…”

 

“மால்ன்னா அங்க பூட் கோர்ட் இருக்குமே, அங்க உங்களை கூட்டிட்டு போயிருப்பேன்… பார்க் போயிருந்தா கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறம் உங்களை வாங்க ஒரு காபி சாப்பிட்டு போகலாம்ன்னு ஹோட்டல் கூட்டிட்டு வந்திருப்பேன்”

 

“ஹ்ம்ம் தெளிவு தான்…” என்றானவன். “அப்புறம் வேறென்ன சொல்லுங்க…” என்றவாறே இருவரும் பேசியவாறே உண்டு முடித்திருந்தனர்.

தனுஷ்க்கு இது தான் சரியான தருணம் தன் மனம் உரைக்க என்று தோன்றிக் கொண்டே இருந்தது. பேச்சின் ஊடே அதற்காய் சரியான சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தானவன்.

 

“ஹப்பா இன்னைக்கு சாப்பாடு ரொம்ப ஹெவிங்க… உங்களால நெறைய சாப்பிட்டேன்… இந்த நாளை என்னால எப்பவும் மறக்க முடியாது…”

 

“ஐஸ்கிரீம் சாப்பிடலையே இன்னும்…”

 

“அதுக்கு என் வயித்துல இடமில்லையே… நான் என்ன செய்வேன்…” என்ற அவள் பாவத்தில் கொஞ்சம் சிரிப்பு வந்தது அவனுக்கு.

 

அப்போது “எஸ் ஐ லவ் திஸ் இடியட் ஐ லவ் திஸ் லவபிள் இடியட்” என்று தொடர்ந்தவாறே காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் என்ற கோபுர வாசலிலே பாடலை யாரோ யூடியூபில் கொஞ்சம் சத்தமாகவே வைத்திருக்க இவர்கள் காதிலும் அது விழுந்தது.

 

“நல்ல பாட்டுல எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு… கார்த்திக் சான்சே இல்லை… அவரும் என்னமா நடிச்சிருப்பாரு…”

 

“எப்பவும் தடாலடி தான் அவரு… லவ் கூட ஊருக்கே கேட்குற மாதிரி சொல்வாரு… சேம் மௌனராகம் படத்துல கூட ரேவதிக்கிட்ட அப்படி தான் சொல்வாரு…”

 

“அவங்க காலேஜ் பிரின்சி ரூம்ல இருக்க மைக் வழியா சொல்வார்… அதே இப்போ கேட்ட பாட்டுல ஹீரோயின் லவ் சொல்ல வைப்பார்… ஆனா இதெல்லாம் நிஜத்துல நடக்க வாய்ப்பே இல்லைல…”

 

“இப்படி எல்லாம் நடந்தா வீட்டில விளக்குமாறு பிஞ்சிடாது… ஆனாலும் ஒரு நல்ல பீல் இல்ல…” என்று அனுபவித்து சொன்னாள் அவள்.

 

சில மாதங்களுக்கு முன் தான் அவனிடம் பேசவே கூலி கேட்பவள் போல் இருந்தோம் என்ற நினைவெல்லாம் இல்லை அவளுக்கு. மடை திறந்த வெள்ளம் போல் பேசிக் கொண்டேயிருந்தாள்.

 

எதிரிலிருப்பவன் அதிகம் பேசவில்லை என்ற உணர்வெல்லாம் இல்லை அவளுக்கு. என்று அவளுக்கு பேச்சு தான் தொழில் என்று ஆகிப்போனதோ அன்றிலிருந்தே இப்படி தான்.

 

நீளமாய் பேச ஆரம்பித்திருந்தாள். தனுஷோ அவள் பேச்சை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தான். அவள் ஆசைகளை உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டிருந்தான். இன்று தன் மனம் திறப்பது என்று முடிவு செய்திருந்தவன் அதை சிறிது நேரம் தள்ளிப்போட்டான்.

 

கிளம்பும் தருவாயில் அவளிடம் “இன்னைக்கு ப்ரோகிராம் இருக்கு தானே…” என்றான்.

 

“ஆமா இருக்கு… நேரா அங்க தான் போறேன்…”

“ஓகே”

 

“என்ன ஒகே??”

 

“ஒண்ணுமில்லை சும்மா தான் கேட்டேன்…”

 

“சும்மா எல்லாம் கேட்கலை, போன் பண்ணுறதுக்கு தானே கேட்டீங்க…”

 

அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. ஆனால் அவன் மனமோ தீவிர சிந்தனையில் இருந்தது. போனில் சொல்வது இருக்கட்டும் நேரில் ஒரு முறை சொல்லிவிடேன் இப்போதே!! என்று அது அவனை தொல்லை செய்தது.

 

புவனா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ஏதோ சொல்ல வந்து பின் தயங்குவது போலிருக்க “என்கிட்ட ஏதாச்சும் சொல்லணுமா??” என்று கேட்டாள்.

 

“ஹ்ம்ம்… ஆனா உங்களுக்கு அதை கேட்க இப்போ நேரம் இருக்குமா??” என்று பதிலுக்கு வினவினான் அவன்.

 

“நேரம் குறைவா தான் இருக்கு… இருந்தாலும் பரவாயில்லை நீங்க சொல்லுங்க…” என்றுவிட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

 

அவள் என்ன சொல்வாளோ என்று உள்ளே தோன்றினாலும் என் மனதை தானே வெளிப்படுத்தப் போகிறேன் அதை ஏன் மூடி மறைக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

 

இவன் பேச ஆரம்பிக்கும் முன் அவள் கைபேசி அழைத்தது. எடுத்து பேசியவள் “கிளம்பிட்டேன் சார்… வந்திடுவேன், ஒரு அரைமணி நேரத்துக்குள்ள இருப்பேன் சார்…”

 

“கண்டிப்பா சார் அதுக்கும் முன்னாடியே வரப் பார்க்குறேன் சார்…” என்றுவிட்டு போனை வைத்தாள்.

 

“என்னாச்சு??”

 

“இன்னைக்கு அடுத்த வாரம் வரப்போற பண்டிகைக்காக ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம் ஒண்ணு ஷூட் பண்ணப் போறாங்க… அதுக்கு சீப் கெஸ்ட் வருவாங்க… அவங்க கொஞ்சம் முன்னாடியே வர்றேன்னு சொல்லிட்டாங்களாம்… அதான் எனக்கு போன் பண்றாங்க…”

 

“ஓகே அப்போ நீங்க கிளம்புங்க…”

 

“இல்லையில்லை நீங்க சொல்லுங்க…” என்றவள் அவன் சொல்லப் போவதை அறிந்திருந்தால் கிளம்பிச் சென்றிருக்கக் கூடுமோ!! என்னவோ!!

 

அவனுக்கும் அதற்கு மேல் தாமதம் செய்ய விருப்பமில்லாமல் “சுத்தி வளைக்காம நேராவே சொல்லிடறேங்க… எனக்கு உங்களை பிடிச்சிருக்கு…”

 

“ஹ்ம்ம் உங்க பார்வை எனக்கு புரியுது… எஸ் பிடிச்சிருக்கு அப்படிங்கறதுக்கு அர்த்தம் நீங்க நினைக்கிறது தான்… உங்களை விரும்பறேன்…” என்று ஒருவழியாய் அவன் மனதை உரைத்துவிட்டான்.

 

அவளிடத்தில் அதிர்ச்சியும் மௌனமுமே. பேச்சிழந்து நின்றிருந்தாள். அவள் கைபேசி மீண்டும் ஒலி எழுப்பி அவளை சுய உணர்வுக்கு கொண்டு வந்தது. “கிளம்பிட்டேன் சார்… பத்து நிமிஷத்துல இருப்பேன்” என்றவள் அவனை திரும்பியும் பாராமல் பேசிக்கொண்டே வெளியில் சென்று விட்டாள்.

 

அவளின் இச்செயல் அவனுக்கு சற்றே அவமானமாய் தோன்றியது. அப்படியே அருகிருந்த இருக்கையில் சாய்ந்தவன் கண்ணை மூடி அமர்ந்துவிட்டான்.

 

‘நானும் இப்படி திடுதிப்பென்று சொல்லியிருக்க கூடாது தானே. அந்த அதிர்ச்சி அவளுக்கும் இருக்கத்தானே செய்யும்’ என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டான். அவள் அப்படி நடந்துக்கொண்டது இப்போது பெரிதாய் தோன்றவில்லை.

 

அவள் உள்ளம் உலைக்கலம் போல் கொதித்துக் கொண்டிருந்தது. தேவா இப்படி சொல்லுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தான் இப்படி ஒன்றுமே சொல்லாமல் வந்துவிட்டோமே!!

 

இதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான். ஒரு வேளை மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொண்டால்!! ச்சே!! ச்சே!! அப்படி இருக்காது… என்று எண்ணிக்கொண்டே சேனல் அலுவலகம் வந்தடைந்தாள்.

 

அவன் கேட்டானே இன்று இங்கு ப்ரோக்ராம் இருக்கிறதா என்று ஒரு வேளை போனும் செய்வானோ… செய்தால் என்ன செய்வோம்…  என்று அவள் எண்ணம் தன் போக்கில் கண்டதும் நினைத்துக் குழம்பியது.

 

ஒவ்வொரு அழைப்பு வரும் போதும் இது அவனாய் இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது. தான் ஏன் அவன் அழைப்பை எதிர்பார்க்கிறோம் என்று தன்னையே குட்டிக்கொண்டாள்.

 

நிகழ்ச்சி முடிய பத்து நிமிடமே இருக்க அவள் எதிர்பார்த்த அழைப்பு சோர்ந்திருந்த அவள் மனதை மேலும் வாட்டவென வந்து சேர்ந்தது அவனிடத்திலிருந்து. “ஹலோ தேவா பேசறேன்…”

 

“ஹாய் தேவா” என்றவளின் குரலில் என்றுமேயில்லாத தணிவு… வெகு இயல்பாய் தன்னை காட்டிக்கொள்ள முனைந்தாள் அவள்.

 

“இன்னைக்கு நிகழ்ச்சியில நான் கேட்ட கேள்வியை உங்ககிட்ட மறுபடியும் கேட்கறேன்” என்று ஆரம்பித்து அவள் பேச அவனும் சரியான பதில் கொடுக்க அவனை பாராட்டிவிட்டு “ஓகே தேவா உங்ககிட்ட பேசினது ரொம்ப மகிழ்ச்சி…” என்று அவள் முடிக்கும் முன்னே இடையிட்டான் அவன்.

 

“நான் ஒண்ணும் சொல்லணும் உங்ககிட்ட”

 

“சொல்லுங்க தேவா…”

 

“மனசுல இருக்கறதை சொல்லணும்ன்னு தோணிச்சு…” என்று அவன் ஆரம்பிக்கவும் படபடவென்று அடித்துக்கொண்டது அவளுக்கு.

 

“என்னன்னு சொல்லுங்க…” என்று உள்ளேப் போன குரலில் இவள் கேட்க “ஐ லவ் யூ…” என்று இவன் சொல்லவும் இவள் எந்தவித உணர்வும் இல்லாது உறைந்து நிற்கவும் மேற்கொண்டு அவன் ஏதோ பேச வர இவளின் முகபாவம் கண்டு அருகிருந்த சேனல் கோஆப்பரேட்டர் அந்த அழைப்பை துண்டித்திருந்தார்.

 

“ஆர் யூ ஓகே புவனா…” என்று அவள் தோளை தட்டவும் “ஹான் சார்…” என்று திருதிருத்தாள். “ஓகே வான்னு கேட்டேன்…”

 

“ஹ்ம்ம் ஓகே சார்…”

 

“எதுக்கு இப்படி ஷாக் ஆகறீங்க… சேனல்ல சமயத்துல இப்படி நடக்கறது தானே… இது ஒண்ணும் புதுசில்லையே… தூக்கிப் போட்டு போங்க…” என்று அவர் சொல்லவும் தான் அதிகமாக ரியாக்ட் செய்துவிட்டோம் என்றுணர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

 

நிகழ்ச்சி முடிந்ததும் முதல் வேலையாய் அவனுக்கு போன் செய்து நேரில் பேச வேண்டும் என்றிருந்தாள்…

Advertisement