Advertisement

தாயே யசோதா!!!

 

அத்தியாயம் 1

“யதுக்கா எங்க இருக்க? பேசாம நானும் உன்னை மாதிரியே படிச்சுட்டு,  உன் கூடவே அங்க வந்துடவா?” என்றபடியே  மாடியிலிருந்து இறங்கி வந்தாள் யாமினி..

யாமினியின் பேச்சைக் கேட்டு லேசாக முறுவலித்தபடியே, “யாமி! இன்னிக்கு உனக்கு பர்ஸ்ட் டே காலேஜ், போய் கிளம்பும்மா.. நமக்கு யோசிக்க இன்னும் நிறைய டைம் இருக்கு.. ஈவினிங் பேசிக்கலாம்..” என்றாள் யசோதரா.

யசோதரா என்று எந்த நேரத்தில் அவளின் பெற்றோர்கள் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. அந்த  மாயக் கண்ணனை பெறாமலே பெற்ற யசோதையைப் போலவே,  இந்த யசோதராவும் தங்கை யாமினிக்கு கன்னி தாயானாள்.

பதினேழு வயது குழந்தை யாமினி என்றால்,  இருபத்தியிரண்டு வயது அன்னை யசோதரா.

இருவருக்கும் உள்ள இடைவெளி வெறும் ஐந்து வருடங்கள் தான்..

தாய் லட்சுமிக்கும், தந்தை ராஜசேகருக்கும் பிறந்த செல்வங்கள் தாம் இவர்கள்..

ஆம்!! செல்வங்கள் எதிலுமே பற்றற்று போனதால் துறவறம் மேற்கொண்ட பெற்றவர்களுக்கு பிறந்த செல்வங்கள் தான் இந்த யசோதராவும், யாமினியும்.

உயிரற்ற செல்வங்களின் மீது எல்லா பற்றையும் துறந்தவர்கள், இந்த உயிருள்ள செல்வங்களின் மீது இருந்த பற்றை துறக்கும் போது யசோதராவின் வயது பத்து,யாமினி ஐந்து வயது குழந்தை..

(இப்படியும் பெற்றவர்கள் இருப்பார்களா? என்று கேள்வி அனைவருக்கும் வரலாம். வடஇந்தியாவில், பிறந்து மூன்றே மாதங்களான பெண் குழந்தையை, மூன்று கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன்,தாத்தாபாட்டியிடம் விட்டு, ஒரு தம்பதி ‘துறவறம்’ சென்றார்கள்..!! என்றசெய்தியை பத்திரிகையில் நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். அதை நினைவில் கொண்டு கதையை தொடருங்கள்)

குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த அறிவார்ந்தவளாக இருந்தாள் யசோதரா.. அவளின் அறிவு திறமையைப் பார்த்த பெற்றவர்களுக்கு நிறைய பெருமை.. அதனால் அவளின் அறிவு பசிக்கு  நிறைய நிறைய உணவிட்டனர்..

அதாவது யசோதராவின் அறிவுக்கேற்றபடி நிறைய நிறைய கற்றுக்கொடுத்தனர்..

விளைவு, அவளின் மனமுதிர்ச்சி!!

பெற்றவர்கள் துறவறம் செல்ல அனுமதி கேட்டு நிற்கும்போது, ஒரே வார்த்தையில், ‘சரி’ என்று முடித்த போது, அவளின் மனமுதிர்ச்சியைப் பார்த்து பெற்றவர்களே ஒரு நொடி அதிர்ந்து தான் போயினர்.. 

“எங்களுக்கு கார்டியானாக தாத்தா பாட்டியைப் போட்டுவிட்டு செல்லுங்கள்.. யாமி யை நானே பார்த்துப்பேன்..!” என்ற யசோதராவின்உறுதியான வார்த்தைகளில் தான்உடனடியாக அவர்களின் முடிவை எடுக்க முடிந்தது..

துறவறம் மேற்கொள்ளும் முடிவை ஏற்கனவே எடுத்திருந்தாலும், பெண் குழந்தைகளை தனியே விட்டு செல்கிறோமே என்ற கவலையே அவர்களுக்கு ஏற்படாதவாறு இருந்தது யசோதராவின் மனமுதிர்ச்சி….

யசோதரா அழுது ஆர்ப்பாட்டம் செய்திருந்தால், அவர்களின் முடிவில் மாற்றம்இருந்திருக்கலாமோ, என்னமோ… ஆனால் அதை செய்ய அவளுக்கு மனம் இல்லை..

தங்களின் கடமையை விட்டு செல்ல நினைப்பவர்களிடம்கெஞ்சி, கொஞ்சி அவர்களின் கடமையை செய்யவைக்க யசோதராவின் மனமுதிர்ச்சி இடம் அளிக்கவில்லை..

பெற்றவர்களின் முடிவு மட்டுமே அந்த குழந்தைகளின் வாழ்வில் பேரிடியாக இருந்தது.

இறைவனின் அருளால் நெருங்கிய சொந்தங்களின் உதவியுடன் யாமினியையும் நன்றாக வளர்த்து, தானும் வளர்ந்தாள் யசோதரா.

‘பிஞ்சிலேயே பழுத்தவளோ!!’ என்று தவறாக நினைத்திருந்த சொந்தங்கள், அவளின் வளர்ப்பு, மற்றும் அவளின் வளர்ச்சிக்  கண்டு பெருமிதமே கொண்டனர்.. 

வீடு முழுவதும் குவிந்திருந்த விருதுகள் பறை சாற்றியது அவளின் அறிவு திறமையை.. படிக்கும் எல்லாவற்றிலும் முதன்மையாவே இருந்தாள்..

இயற்கையிலேயே பேரழகானவள் தான் யசோதரா..மிகுந்த அறிவுடனும், நிறைய பொறுமையுடனும் இருந்ததால் அவளின் அழகு பன்மடங்கு உயர்ந்தே இருந்தது..

சிலருக்கு அறிவு கொடுக்கும் ‘கர்வம்’ அவளுக்கு அறவே கிடையாது.. எல்லோராலும் எல்லாமும் செய்துவிட முடியாது.. அவரவர்க்கென்று தனிதனி திறமை இருக்கும் என்பதை நன்றாக புரிந்தவள் இந்த யசோதரா.

அவளுக்கு என்று எடுத்துக்கொண்ட பொறுப்பை, ஏனோ தானோ என்று செய்யாமல், பெற்ற அன்னைக்கும் மேலாகமிகுந்த மனவிருப்புடனே செய்தாள்.

வெகு சிலருக்கு மட்டுமே  எல்லா விஷயங்களிலும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடப்பது, என்பது குழந்தையிலேயே இருக்கும்.. அப்படிப்பட்ட தெய்வப்பிறவி தான் இந்த யசோதரா..

யாமினியோ இன்னமும் குழந்தை தான்..அனாவசிய கொஞ்சலோ, அசட்டு தனங்களோ இல்லாமல்அக்காவின் வழிகாட்டுதலின் படி வளர்ந்த குழந்தை..

யசோதரா எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவளே யோசித்து மிக நன்றாக செயல்படுவாள்.. அதனால் அவளுக்கு என்று ஒரு ரசிகப் பட்டாளமே இருக்கிறது என்பது வேறு விஷயம்.. அத்தனையும் யாமினியின் தோழமைகள் தான் என்று சொல்ல வேண்டுமா, என்ன?

யாமினியிடம் என்ன ஒரு பழக்கம் என்றால், எதிலுமே அவளால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாது.. அனைத்திற்கும் அக்கா யசோதராவிடம் வந்து கேட்டு கேட்டு செய்வாள்.. இதில் ஒன்றும் தவறில்லை தான்..

இப்பொழுதுதான் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் அடியெடுத்துவைக்கும் ஒரு சாதாரண பதின் பருவ பெண்.. அவளிடம் மனமுதிர்ச்சியை எதிர்பார்ப்பதும் தவறு தான்..

அந்தந்த வயதில் ஏற்படும் அனுபவங்களின் வாயிலாக வருவது தானே மனமுதிர்ச்சி..  யாமினிக்கு இன்னும் வயது இருக்கிறது அப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற!!

எல்லாவற்றிற்கும் ஒரு விதிவிலக்கு இருப்பதைப் போல, இங்கு யசோதரா ஒரு விதிவிலக்கு!!! அவளுக்கு வந்த மனமுதிர்ச்சி, அவளின் அறிவால்,குழந்தைப் பருவத்திலேயே வந்தது..

எல்லாவற்றிலும் சுயமாக அலசிசிந்தித்து செயல்படும் திறனை இறைவன் அவளுக்கு குழந்தையிலேயே பரிசாக கொடுத்திருந்தார்..

அக்கா யசோதராவை போலவே யாமினியும் நல்ல அழகு.. குழந்தைத்தனம் மாறாத முகத்துடன், ஒரு பொம்மையைப் போல, நல்ல நிறத்தில், மிகுந்த அழகுடன் இருந்தாள் யாமினி..

மொத்தத்தில் அழகு சிற்பங்கள் தான் இந்த சகோதரிகள் இருவரும்..

ஐந்து வருடங்களுக்கு முன் தாத்தாவை பறிகொடுத்த அவர்கள், இந்த வருடம் பாட்டியையும் பறிகொடுத்திருந்தார்கள். நெருங்கிய சில சொந்தங்கள் அவ்வப்பொழுது வந்து செல்வார்கள்.

யசோதராவின் அறிவிலும், வளர்ப்பினிலும் அந்த சொந்தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு!!

அவர்களின் அழகு, தாய் – தந்தை சேர்த்து வைத்திருந்த சொத்து மற்றும் அந்த சகோதரிகளுக்குள் இருக்கும் புரிதல், இவையெல்லாம் சில பேருக்கு பொறாமையை தூண்டிவிட்டிருந்ததால் சமீப காலங்களாக தனிமை மட்டுமே துணையாக இருக்கிறது அந்த சகோதரிகளுக்கு.

“யாமி, சொன்னது எல்லாம் நினைவிருக்கு இல்ல! பஸ்ல ஏறினதும் தூங்க கூடாது.. கரெக்டா ஸ்டாப்ல இறங்கி காலேஜ் உள்ள போய்டணும்.. எனக்கு மெசேஜ் பண்ண மறக்கக்கூடாது சரியா?”

“யதுக்கா, இத்தனை சொல்றதுக்கு நீயே என்னை கொண்டுவிடலாம் இல்லை.. எனக்கு பயமா இருக்குக்கா!  பஸ்ல ஒரே கூட்டமா இருக்குமே!!” என்று சொன்னவளை ஆதரவாக பார்த்தாள் யசோதரா.

“நான் எடுத்திருக்கும் முடிவிற்கு நீ தனியே இயங்க கத்துக்கணும் யாமி, நீ இப்போ ஸ்கூல் கேர்ள் இல்லை.. அக்கா சொல்கிறமாதிரியே செய்தாய் என்றால் சீக்கிரமே உன்னால் நான் இல்லாமல் தனியே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள முடியும்..  புரிஞ்சிக்கோ யாமி..!!”

“அதுக்குதான் நானும் உன்னை மாதிரியே படிக்கிறேன்ன்னு சொல்றேன்..” என்று உதட்டைப் பிதுக்கியபடியே கூறினாள் யாமினி.

யசோதரா அறிவியல் துறையில் முதுகலை படிப்பின் இறுதியில் இருக்கிறாள்.. யாமினிக்கு அறிவியலிலோ, கணக்கு பாடத்திலோ துளியும் விருப்பம் இல்லாததால் வரலாறு பிரிவில் பள்ளி படிப்பை முடித்து, இசைத்துறையில் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள்..  

அறிவியலுக்கும், இசைக்கும் வித்தியாசம் தெரியாதவளில்லை இந்த யாமினி.. அக்காவுடனேயே  இருப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறது என்று அவளின் சிறு மூளையை வைத்து யோசித்ததின் விளைவே இந்த பேச்சு..

“யாமிம்மா இப்போ கிளம்பு.. எனக்கும் டைம் ஆகுது இல்லை..”

“யதுக்கா, ப்ளீஸ் இன்னிக்கு மட்டும் வாயேன்..!”

“நோ யாமி!!” என்று அழுத்தமாக சொன்னாள் யசோதரா..

அழுத்தமான குரலில் அக்கா எது சொன்னாலும் அவளின் நல்லதுக்கு தான் என்பதை யாமினி புரிந்திருந்ததால்  கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.

ஆறாம் வகுப்பில் இருக்கும்போதே யாமினிக்கு படிப்பில் ஆர்வம் குறைவு என்பதை நன்கு புரிந்துக்கொண்டாள் யசோதரா.. அடிப்படை கல்வி வாழ்க்கைக்கு அவசியம் என்பதை மனதில் கொண்டு மேற்கொண்டு அவளை வலியுறுத்தாமல் யாமினியின் போக்கிலேயே பள்ளிப் படிப்பை முடிக்க வைத்திருந்தாள் ..

யாமினி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதேகர்னாடக இசையில் உயர்தேர்வு(higher) எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றிருந்தாள்  யாமினியின் குரல் வளத்திற்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் பொருட்டே அவளை இசைத்துறையில் இளங்கலை சேர்த்தாள் யசோதரா…

யாமினி மென்மேலும் இசைத்துறையில் முன்னேற என்னென்ன வழி முறைகள் இருக்கிறதோ அத்தனையும் யாமினியின் குரு உதவியுடன் செய்துக் கொண்டிருக்கிறாள் யசோதரா..

அவள் எடுத்திருக்கும் முடிவிற்கு தங்கைக்கு நல்ல வளமான எதிர்காலத்தை சீக்கிரம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய கட்டாயம்..

அந்த ‘நல்ல வளமான’ என்பதில்,  அன்பில் வளம் மிகுந்த ஒருவரை வாழ்க்கை துணையாக யாமினிக்கு கொண்டு வருவதும் அடக்கம்.

யசோதராவின் அறிவு அவளை ஏதாவது தேட சொல்லிக்கொண்டே இருக்கும்..

இந்த வயதில் அவள் அப்படி தேடி தேடிக் கற்றது ஏராளம்..

அவளிடம் குவிந்திருக்கும் சான்றிதழ்களும், பதக்கங்களுமே அதற்கு சான்று. 

இப்பொழுது அவள் எடுத்திருக்கும் முடிவும்  அந்த தேடலினால் வந்த விளைவு தான்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் புதிய முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தைசெய்தித் தாள்களில் படித்ததும், யசோதராவின் அறிவு பசி பூலோகத்தை விட்டு வேற்று கிரகத்திற்கு சென்றுப் பார்க்க உந்தி தள்ளியது.

அது ஒருவழிப் பாதைப் பயணம்..!!

மனிதர்களால் வேற்று கிரகத்தில் வசிக்க முடியுமா என்ற கேள்விக்கான விடையை தேடி நடக்கும் சோதனை..!!

யசோதராவின் அறிவுத் தேடல், அந்த சோதனையையும் செய்துப்பார்க்க சொன்னது..!!

அதற்காக நாசா நடத்திய எழுத்து தேர்வில் இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே இந்தியர் என்ற பெருமையுடன் தேர்ச்சிப் பெற்றாள்.

இவளுடன் சேர்த்து மேலும் இரண்டு இந்தியர்கள் தேர்வாகியிருந்தாலும், அவர்கள் வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றவர்கள்.

எதிலுமே முதலில் வந்துவிடும் யசோதரா இதிலும் முதலில் வந்தது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை தான்..!!

விண்வெளி பயணம் செய்ய சில வருடங்கள் இருந்தாலும், அதற்கான பயிற்சிக்கு கூடிய விரைவிலேயே அமெரிக்கா செல்லவேண்டும்..

அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றதும் தான் யாமினியிடம் விஷயத்தை சொன்னாள் யசோதரா.

தமக்கையின் முடிவில் தங்கைக்கு மிகுந்த வருத்தம், மற்றும் பயம்..!!

அக்காவை விட்டு தன்னால் தனியே இயங்க முடியுமா என்ற பயம் தான், ‘நானும் உன்னை மாதிரியே படிச்சுட்டு உன் கூடவே வருகிறேனே ‘ என்ற பிதற்றல்..

பிதற்றல்!! ஆம்!! யசோதராவிற்கு அது பிதற்றலாகத்தான் சில சமயங்கள் தோன்றிற்று..! 

பல சமயங்கள் யாமினியின் மனமுதிர்ச்சி குறைந்த நடவடிக்கையில் ‘பாவம் யாமி..!’ என்றும்  நினைத்துக்கொண்டாள்..

தன் பொறுமையை சோதித்துப் பார்க்க போகிறாள் இந்த யாமினி என்பதையறியாத யசோதரா, தங்கைக்காக பரிதாபப்பட்டாள்..

 

Advertisement