Advertisement

அத்தியாயம் : 5

 

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியிருந்தனர் சகோதரிகள் இருவரும்.

யாமினியின் கல்லூரிக்கு அருகிலேயே வீடு அமைந்ததால் அவளுக்கு கல்லூரி சென்றுவர இலகுவாக இருந்தது. தனி வீட்டில் இருக்கும் போதே அவளின்அநேகபொழுதுகள்சிறார்களுடன் தான் கழியும். இங்கு வந்ததும் கேட்கவே வேண்டாம், அவளுக்கென்று நிறைய குட்டி குட்டி நண்பர்களை தேடிக்கொண்டாள்.

வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்திருக்கும் மன முதிர்ச்சியற்ற பருவ பெண்ணான யாமினியை சில கழுகு கூட்டங்கள் பார்வை இட்டு கொண்டிருந்ததை யாமினியும் அறியவில்லை. யசோதராவும் அறியவில்லை.

யசோதராவின் முன் அந்த கூட்டம் தங்களை ஒழுக்க சீமான்களாக காட்டிக்கொண்டது. யசோதராவின் நிமிர்வு, தைரியம்  அந்த கூட்டத்திற்கு சற்று பயத்தை கொடுத்திருந்தது. அதனால் அவளிடமிருந்து ஒதுங்கி, யாமினியை வளைக்க அந்த கழுகு கூட்டம் முயற்சித்துக்கொண்டிருந்தது.

கல்லூரியில் யாமினியின் குரல்வளம் அவளுக்கு சில நல்ல நட்புகளை பெற்றுக் கொடுத்திருந்தாலும், சுஜி போன்ற தீய குணங்கள் கொண்டவர்களும் நட்பு போர்வைக்குள் புகுந்து தங்கள் உண்மையான குணத்தை மறைத்து யாமினியிடம் நட்பு பாராட்ட வைத்தது யாமினியின் கெட்ட நேரமோ!!

சுஜி முதல் நாள் கல்லூரியில் கிடைத்த முதல் நட்பு.

முதல் நாள் தனியே பேருந்தில் பயணம் செய்ய பயந்த யாமினி, கல்லூரியில் அடியெடுத்து வைத்ததும் அவள் கண் முன்னே இருந்த கட்டிடங்கள், இருபாலினத்தவரும் கலந்திருந்த மாணவவர்கள், ஆசிரியர்கள் என்று பார்த்த அனைத்திலேயும், அவள் உணர்ந்ததுபயம்! பயம்! பயம்மட்டுமே!!

அதே பயத்துடன் உள்ளே நுழைந்தவளைப் பார்த்து புன்னகை புரிந்தாள் சுஜி எனும் சுஜிதா.

அதே கல்லூரியில் இளநிலை முதல் வருட ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்திருந்தாள் சுஜிதா. யாமினியைப் போன்றே 17 வயது நிரம்பியவள் தான், கூடவே இந்த நவீன கணினி உலகில் இருக்கும் அனைத்து வித கெட்ட பழக்கங்களையும் நிரம்பப் பெற்றவள்.

இந்த உலகில் சுற்றி இருக்கும் எல்லாவற்றிலுமே நல்லதும், தீயதும் கலந்து இருக்கும், அதில் நன்மையை மட்டுமே எடுத்துக்கொள்வது அவரவர் கைகளில் உள்ளது என்று நம்புபவள் யசோதரா. அவளின் இளைய சகோதரிக்கு அத்தகைய அறிவு (மனமுதிர்ச்சி) இன்னும் வரவில்லை. அதனால் சுஜியின் நட்பு புன்னகையை ஏற்றவுடன் தன்னைப் பற்றி அனைத்தையும் கூறினாள்.

குடும்பம், படிப்பு, விருப்பம் என்று ஆரம்பித்து சகோதரி தன்னை தனியே விட்டு செல்லப் போகிற கதை வரை அனைத்தையுமே சுஜியின் இடையூறின்றி சொல்லி முடித்தாள் யாமினி.

எப்பொழுதுமே பொது இடத்தில் தன் குடும்ப விஷயங்கள் பேசுவது தவறு என்பதையறியாத யாமினி, முதல் முறை பார்க்கும் ஒருவரிடம் மடை திறந்த அணை போல அனைத்தையுமே கொட்டிக்கொண்டிருந்தாள்.

சுஜியோ வாயை திறந்து தன்னைப் பற்றி ஒரு வார்த்தையை உதிர்த்தாளில்லை. சின்ன கண்களுடன் கூடிய அவள் பார்வை, கழுகு தன் இரையை கூர்ந்துப் பார்க்கும் பார்வையை ஒத்திருந்தது.

பெண்களுக்கு சில சமயம் அந்த பெண்களே எதிரியாகி விடுவது பெரிய துரதிர்ஷ்டமே!

சுஜிக்கு யாமினியின் அழகும், குரலும் அவள் மனதில் பொறாமையை தூண்டிவிட்டிருந்தது. யாமினியை தன் நட்பு(!) வட்டத்தில் இணைத்தால் ஆடவ நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் வெகுமதிக்காக யாமினியை வேவுப் பார்த்துக்கொண்டிருந்தாள் சுஜி.

இவர்களின் நட்பு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. இதுவரை சுஜி யசோதராவை சந்தித்திருக்கவில்லை என்பதை விட அவள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.

முதல் நாள் தன் குடும்பத்தை பற்றி சொன்ன யாமினியுடன் இணைந்து இன்டர்நெட் கஃபேக்கு சென்றிருந்த சுஜி, சில நாராசமான யோசனைகளை அறிவுரை என்ற பெயரில் சொல்லியிருந்ததை தன் அக்கா யசோதராவிடம் யாமினி சொல்லிக்கொண்டிருந்ததை மறைந்திருந்து பார்த்திருந்தாள் சுஜி.

அதற்கு யசோதரா கொடுத்த விளக்கமான, “யாமிம்மா, சுஜியும் உன் வயதுடைய பெண் தானே! மெச்சூரிட்டியான பொண்ணு இல்லையே. ஆண் நட்புகள் வைத்திருப்பது தவறில்லை.அவளுக்கு சோசியல் மீடியா, பப்ல  இருக்கிற ஆபத்துகள் புரியல. அவளுக்கு புரியும்போது காலம் கடந்துக்கூட போகலாம்.

சுஜி மாதிரி இருக்கும் நட்புகளைநாம் அவ்வளவு எளிதாக  புறக்கணித்துவிடவும் முடியாது. அது ஆண் நட்பாகவும் இருக்கலாம். அவர்களின் நிறையை மட்டும் மனதில் கொண்டு வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைத்து போய்க்கொண்டே இருக்கவேண்டியது தான். சரி விடு யாமி!! சுஜியை உன் நல்ல நட்பு மூலம் நல்ல வழிக்கு மாற வைத்துவிடு. உனக்கும் ஒரு அநுபவம் கிடைத்தாற்போல் இருக்குமே!!” என்று யசோதரா சொன்னதையும் சுஜி கேட்டிருந்தாள்

யசோதராவின் அழகை கண்டதும்,  சுஜியின் மனம் அவளிடமும் நட்பு பாராட்ட விழைந்தது தான் ஆனால் யசோதராவின் தெளிவு அவளின் அருகில் செல்லக்கூட ஒருவித பயத்தை கொடுத்தது சுஜிக்கு. அதனால் அவளை நேரில் சந்திக்க சுஜி விரும்பவேயில்லை.

யசோதரா அவளின் மனமுதிர்ச்சி மற்றும் மன உறுதியை கொண்டு தங்கைக்கு அறிவுரை கூறியது தப்பாக தான் முடிந்தது.

யாமினி இதுவரை அக்காவின் வழிகாட்டுதலின் படி நல்லவிதமாக நடந்துக்கொண்டிருந்தாள். சுஜியின் நட்பை அக்கா விட சொல்லியிருந்தால் சுஜியை திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டாள் யாமினி.

ஆனால், சுஜியிடம் இருக்கும் நல்லதை எடுத்துக்கொண்டு அவளை நல்வழிப் படுத்து என்று யசோதரா சொன்னதால், சுஜியிடம் நல்ல நட்பை உருவாக்கிக்கொண்டாள் யாமினி. சுஜியோ யாமினியின் மனதில் கள்ளத்தை அவளுக்கே தெரியாமல் புகுத்திக்கொண்டிருந்தாள்.

யாமினி இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் சுஜியின் வெளிவட்டார நட்பு கூட்டம் இருந்ததை அவள் அறியவேயில்லை.

அவர்களின் நட்புக்கு வயது நான்கு மாதங்கள் ஆன சூழ்நிலையில், யாமினியின் பிறந்த நாள் வந்தது.

“யாமி! ஹாப்பி பர்த்டே!!” என்று வாழ்த்திய அக்காவின் கன்னத்தில் முத்தமிட்டு நன்றியுரைத்தாள் யாமினி.

“சொல்லு யாமி என்ன ஸ்வீட் செய்யலாம்?” என்றால் யசோதரா.

இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே சமையல் பொறுப்பை இருவருமே எடுத்துக்கொண்டிருந்தனர். தனிவீட்டில் இருக்கும் போது சமையல் செய்ய ஒரு பாட்டி வந்துகொண்டிருந்தார். அவரது வயது மூப்பின் காரணமாக அவரால் பணியை தொடர்ந்து செய்யமுடியவில்லை. மேற்கொண்டு சமையலுக்கு ஆட்களை நியமிக்காமல், சகோதரிகள் இருவருமே சமையலை பார்த்துக்கொண்டனர்.

“யதுக்கா என்ன வேணும்னாலும் செய். இன்னிக்கு பிரண்ட்ஸ்க்கு ட்ரீட் கொடுக்கணும். ஈவினிங் என்னால கம்ப்யூட்டர் கிளாஸ் போகமுடியாது.” என்றாள் யாமினி.

யாமினி அந்த வகுப்புக்கு அடிக்கடி மட்டம் போடுவது அவளின் வழக்கமாக இருந்தது. தினம் ஏதோ ஒரு காரணம் அந்த வகுப்பைப் புறக்கணிக்க.

இதுவரை யாமினி கிளாஸ்க்கு என்று சொல்லிவிட்டு வெளியே சுற்றியதில்லை. அவளிடம் பொய் இன்னும் நுழையவில்லை.

“என்ன யாமி இது? நாளைக்கு சன்டே தானே! உன்னோட டிரீட்டை நாளைக்கு வச்சுக்கோ. இன்னிக்கு கிளாஸ் அட்டென்ட் பண்ணும்மா.”

“இன்னிக்கு பர்த்டேக்கு நாளைக்கு ட்ரீட்டா? இல்ல யதுக்கா என்னால இன்னிக்கு கிளாஸ் போக முடியாது. ஈவ்னிங் லேட்டா தான் வருவேன்.” என்று கோபப்பட்டு குரலை உயர்த்தியிருந்தாள் யாமினி.

இப்பொழுதெல்லாம் அவளுக்கு கோபம் நிறைய வருகிறது. அதேப் போல நண்பர்களுக்காக நிறைய பணமும் செலவளித்தாள்.

என்ன செய்வது எல்லாம் அவள் வயது செய்யும் வேலை.

 

யசோதராவிற்கு தங்கையை புரிந்தது. அவளின் போக்கிலேயே சென்று நல்வழி படுத்த முனைந்தாள்.

“ஓகே யாமி! இது தான் லாஸ்ட்.. நெக்ஸ்ட் ஒன் மந்த்க்கு நீ கிளாஸ்க்கு லீவ் போடவேக் கூடாது.” என்று சொன்ன யசோதரா யாமினியிடம் அன்றைய செலவுகளுக்கு பணம் கொடுத்தாள்.

“யதுக்கான்னா யதுக்கா தான். தேங்க்ஸ்க்கா. நெக்ஸ்ட் மந்த் கண்டிப்பா நான் லீவ் போடவே மாட்டேன்.”

“போ பர்த்டேவ என்ஜாய்செய்.இன்னிக்கு வேலையிலிருந்து உனக்கு ரெஸ்ட்!!”

“அய்யோ யதுக்கா!! சூப்பர்!!” என்று குதித்தபடியே கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள் யாமினி.

அன்று அவளின் பிறந்தநாள் என்பதை யதீந்திரன் முதல் நாளே அறிந்திருந்தான். யாமினியிடம் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க ஆவலாக காத்திருக்க ஆரம்பித்தான்.

யதீந்திரன் அந்த கணினி வகுப்பில் பகுதி நேரமாக இணைந்த அன்றே யாமினியும் சேர்ந்திருந்தாள். அடுத்த நாள் வகுப்பிற்காக வந்ததுமே யாமினி தான் முதலில் கண்ணில் பட்டாள்.  அவளைக் கண்டது மனதிற்கு இதமாக இருந்தாலும் அவனை சுற்றி அப்போதிருந்த வீடு பிரச்சினை மேலும் யாமினியை ரசிக்க விடாமல் செய்தது.

அவனின் மனதை சலனப்படுத்தும் அவளை கண்டு சில சமயங்கள் கோபம் பெருகியது. அப்பொழுதெல்லாம் வகுப்பில் அவளிடம் கடினமாக நடந்துக்கொண்டான். தன்னை ஒரு கண்டிப்பான ஆசிரியராக காட்டிக்கொண்டான்.  அந்த கண்டிப்பும் யாமினியை வகுப்பிலிருந்து விடுப்பு எடுக்க காரணமாக இருந்தது யதீந்திரனுக்கு புரியவேயில்லை.

அவனின் பிரச்சினைகள் ஓரளவு சரியானதும் யாதவனின் கல்யாண வேலைகள் அவனை இழுத்துக்கொண்டது.

யாதவன் – ரோஜா திருமணம் முடிந்து, அவர்களை மாடியில் குடியேற்றி தங்கை யுவராணியுடன் கீழேயே தங்கிக்கொண்டான்.

யாதவனுக்கு தான் அதில் சிறு மனவருத்தம்.  யுவியை ஆடிட்டர் அலுவலகத்திற்கு கூட்டி சென்று வருவதை மட்டும் யாதவனே தான் பார்த்துக்கொண்டான். இப்பொழுது ரோஜாவுடனும் அவ்வப்பொழுது யுவராணி சென்று வருகிறாள்.

யாதவன் அவனின் முதல் ஓவிய கண்காட்சியை அடுத்த மாதம் நடத்த இருக்கிறான். அதற்கான பணிகள் நிறைய இருந்தாலும், யுவியை சரியான நேரத்திற்கு கூட்டி சென்று வருவதை யதீந்திரனிடம் கொடுக்க முனையவேயில்லை.

யதீந்திரனின் குடும்ப பிரச்சினைகள் ஓரளவிற்கு சரியானதும் அவனின் கவனம் மறுபடியும் யாமினியிடம் திரும்பியது.  தன் கண்டிப்பை குறைத்துக்கொண்டதால் சில மாணவர்களின் நட்பு வட்டத்திற்குள் சென்றான். யாமினியும் சிறிதளவு சிநேக பாவனையை அவனிடம் காட்ட ஆரம்பித்திருந்தாள்.

யாமினி மீதான தனக்கு இருக்கும் சலனத்தை காதல் என்று உணர்ந்திருந்த யதீந்திரனுக்கு அதை எப்படி வெளிப்படுத்துவதென்பது தான் இப்போதைய அவனின் சிந்தனை. வகுப்புக்குள் காதலை கொண்டுவர அவனின் மனம் விரும்பவில்லை. அதுமட்டுமில்லை யாமினியின் வயதும் அவனுக்கு இடைஞ்சலாகத்தான் இருந்தது.

தங்கை யுவியைவிட ஐந்து வருடங்கள் இளையவளாக இருந்தாள் யாமினி.

அவனுடைய செர்டிபிகேட்டில் உள்ள  பிறந்ததினத்தை வைத்து பார்க்கும் போது, அவனுக்கும் யாமினிக்குமான வயது வித்தியாசம் கிட்ட தட்ட எட்டு வருடங்கள்.

அவளின் வயதைக் கணக்கிட்டு தன்னுடைய காதலை புதைத்துக்கொள்ளவும் நினைத்திருக்கிறான். ஆனால் அவளைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளத்தில் பெருகும் காதலை அடக்க முடியாமல் தவித்து தான் போனான். இறுதியில் காதலை அவளிடம் வெளிப்படுத்தி அதை அவள் மறுத்தால் அவளை மறந்துவிடலாம் என்று அவனாகவே முடிவு செய்தான்.

அவளை வெளியில் அழைத்து சென்று தன்னுடைய காதலை சொல்ல தக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அலுவலகத்தில் வேலை குறைந்த நாட்களில் சீக்கிரம் பயிற்சி நிலையத்திற்கு வந்து யாமினிக்காக காத்திருந்த நாட்களில் எல்லாம் அன்றைய வகுப்பை புறக்கணித்திருப்பாள் யாமினி. அவள் வரும் நாட்களில் அவனுக்கு வேலை பளு மிகுதியாக இருந்திருக்கும்.

இந்த சூழ்நிலையில் தான் அவளின் பிறந்தநாளை அறிந்த யதீந்திரன், அன்றே தன்னுடைய காதலை வெளிப்படுத்த முடிவு செய்து, அலுவலகம் மற்றும் கணினி பயிற்சிக்கும் விடுப்பு எடுத்துக்கொண்டு அவளுக்காக காத்துக்கொண்டிருந்தான்.

அன்றைய வகுப்பை அவள் புறக்கணிப்பாள் என்று அவன் கொஞ்சம் கூட நினைத்தே பார்க்கவில்லை. காலை முதல் சற்று முன்னர் வரை  அவன் இருந்த மனநிலைக்கும் இப்போது இருக்கும் அவனின் மனநிலைக்கும் எவ்வளவு வித்தியாசங்கள்.

காலையில் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தான் இருந்தான் யதீந்திரன். யுவி கிளம்பும்போது கூட “தீராண்ணா உங்க முகத்துக்கு பின்னாடி ஒளிவட்டம் தெரியுது. ஏதாவது விசேஷமா, இரண்டாவது அண்ணி ரெடியா?” என்று கிண்டலுடன் கேட்டிருந்தாள். அவளிடம் சிரித்து மழுப்பியவன் கதவை அடைத்துக்கொண்டு எப்படி யாமினியிடம் காதலை சொல்வதென்று மனதிற்குள்ளேயே ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான்.

மாலை வந்ததும் கிளம்பி இங்கே வந்தப்போதும்அவனின் உற்சாகம் குறையவேயில்லை. ஆனால் நேரம் ஆக ஆக அவனின் உற்சாகம் எல்லாம் வடிந்து, சோகமுகத்துடன் வீட்டிற்கு கிளம்பி சென்றான்.

வீட்டிற்கு செல்லும் வழியில் சிக்னலுக்காக காத்திருந்தபோது அருகில் இருந்த காரில் இருந்த நபரைப் பார்த்ததும் மனதின் உள்ளேயிருந்த அவனின் சோகத்தையும் மீறி கோபம் கொப்பளித்தது அவனுக்குள்.

காரில் இருந்த பெண்மணியையே ஆழ்ந்து பார்த்தவனை பின்னால் இருந்து கேட்ட ஹார்ன் சத்தம் கலைத்தது. சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறியதை அவனுக்கு அறிவுறுத்துவதற்காகவே ஒலி எழுப்பப்பட்டது. சில நொடிகளில் இயல்புக்கு திரும்பி வண்டியை கிளப்பி வேகமாக ஓட்டிச் சென்றான் யதீந்திரன்.

அவனுள் இருக்கும் யாமினியின் நினைவு சற்றே பின் சென்றிருந்தது.

யாதவன் தன்னுடைய ஓவிய கண்காட்சியை வைக்கும் இடத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தான். அந்த இடம் மகாபலிபுரத்தில் இருந்தது.

அவனுடைய வண்டியில் தான் சென்றிருந்தான். கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுபோக்கு.

மனைவி ரோஜாவுடனான திருமணவாழ்க்கை நிறைவை கொடுத்திருக்க, ரோஜாவை நினைத்தபடியே முகத்தில் லேசாக விரவிய புன்னகையுடனேயே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

நேரம் இரவு ஒன்பதை கடந்திருக்க பனையூரை தாண்டியிருந்தான் யாதவன். சிறிது தூரம் சென்றதும் இயற்கை உபாதை அழைக்க அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கை தேடியபடியே சென்றான்.

சில நிமிடங்கள் கழிந்ததும் அந்த இடத்திலிருந்து சற்று உள் அடங்கிய சாலையில் ஏதோ அசைவு தெரிய வண்டியை நிறுத்திப்பார்த்தான்.

அங்கு நாலைந்து பேர் இணைந்து யாரையோ தூக்கி செல்வது அவனுக்கு தெரிந்தது. அப்படி தூக்கி செல்லும்போது அந்த உடம்பிலிருந்து நீண்ட துணி தொங்கியதை வைத்துப் பார்க்கும் போது அது பெண்ணாக இருக்கலாம் என்று யூகித்துக்கொண்டான். அந்த துணி துப்பட்டாவாகவோ இல்லை புடவை முந்தானையாகவோ தான் இருக்கும் என்று நினைத்தான்.

ஏதோ ஒன்று அவனின் மனதிற்கு சரியாக படாததால், அங்கு சென்று பார்க்க முடிவு செய்து வண்டியை திருப்பினான்.

அவனின் வண்டியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் அது பெண் தான் என்பது நன்றாக தெரிந்தது. வண்டியின் வெளிச்சத்தை பார்த்ததும் அந்தப்பெண்ணை அங்கேயே போட்டு விட்டு எல்லோரும் விரைந்து ஓடி, தங்களின் காரில் ஏறி  தப்பித்தனர்.

யாதவன் அந்த காரை பார்த்தானேயொழிய அதன் நம்பர் பிளேட்டை பார்க்கவில்லை. பார்க்க தோணவும் இல்லை.

அந்த பெண்ணின் அருகில் சென்று பார்த்ததுமே தெரிந்தது அவள் இருபது வயது கூட நிரம்பாதவள் என்று. மிகவும் அழகாக இருந்தாள். குடித்திருப்பாள் போல எதையோ உளறிக்கொண்டிருந்தாள்.

“சூசி யதுக்க்ஷா தேழுவா! வா போழாம்!!” என்று அவள் பேசியது ஒரு அக்ஷரம் கூட புரியவில்லை யாதவனுக்கு.

“இங்க பாரும்மா!! யாரு நீ? எங்க போகணும்?” என்று அவளின் கன்னத்தில் லேசாக தட்டியபடியே கேட்டான்.

“அழ்க்கா பார்ழ்க்கணும்!! பிளிச் கூழ்ட்டி போன்க!!”

“அம்மாட்ட இப்போ போலாம்.!! எங்க போகணும்? எப்படி வந்த இங்க?”

“தெழ்ர்ல!! அழ்க்கா வேணும்!”

“என்னது அழகாவா? அது யாரு?” என்று யாதவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே மயங்கினாள் அந்த பெண்.

அவளை அப்படியே விட்டுச்செல்ல மனம் வரவில்லை அவனுக்கு. அவளின் முகத்தில் தங்கை யுவியே தெரிந்தாள். ஆனால் எப்படி அந்த இடத்தை விட்டு போவது என்று யோசித்து, அவனின் வண்டியை ஓரமாக நிறுத்தி பூட்டினான். பின் கால் டாக்ஸி புக் செய்தான்.

காரில் தன்னுடைய வீட்டிற்கே அந்த பெண்ணை கூட்டி வந்தான். கார் ஓட்டுனரின் கேள்விகளுக்கு பதில் அளித்தபடியே, யதீந்திரனுக்கு மெசேஜ் செய்தான் யாதவன்.

யதீந்திரனும் ரோஜா மற்றும் யுவியை அழைத்து யாதவன் ஒரு பெண்ணை அழைத்து வரும் விஷயத்தை கூறினான்.

ஒருமணி நேரம் கடந்து அவர்களின் வீட்டின் முன் கார் நின்றது.

“யாதவா!!” என்று அழைத்த யதீந்திரனை எதுவும் பேசவிடாமலேயே “தீரா! பாரு இவளைப்பாரு, மயங்கியிருக்கா!! நம்ம டாக்டர் வந்துட்டாரா?” என்று கேள்வி கேட்டு அருகில் இருக்கும் ட்ரைவரை ஜாடையாக காட்டினான்.

“வந்துட்டார் யாதவா!” என்ற யதீந்திரனும் காரின் பின் கதவை திறந்து அந்த பெண்ணை பார்த்தான்.

பார்த்ததுமே “ஐயோ!! யாமினி !!” என்று தலையில் அடித்துக்கொண்டே விரைந்து அவளை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

 

 

 

 

 

 

 

 

Advertisement