Advertisement

அத்தியாயம் : 15

அன்று யசோதரா அடிபட்ட நிலையிலும் தங்கை யாமினியை பாதுகாக்கவே விரும்பியது அவளின் குரலிலேயே யதீந்திரனுக்கு தெரிந்தது. அதனால் யசோதராவை ஆம்புலன்ஸில் ஏற்றியதுமே அவளை அலைபேசியில் படம் பிடித்துக்கொண்டான். அவளின் துண்டுபட்ட கால் விரல்களையும் படம் பிடித்து வைத்தான். யாமினி இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையிலேயே இல்லை.

யாமினி மூலம் அவர்களின் சொந்த வாழ்க்கையை அறிந்தவன், காவல்நிலையத்தில், யசோதராவிற்கோ, யாமினிக்கோ எந்தவித ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கு சுஜி மற்றும் அவளை பெற்றவர்களே காரணம் என்று புகார் அளித்தான். மேலும்,

காவல் துறையின் மீது இருந்த அபார நம்பிக்கையால்(!) எடுத்த புகைப்படங்களையும் அளித்த புகாரின் நகலையும் சமூக வலைத்தளங்களில் பதிந்து நியாயம் கேட்டிருந்தான். அவனின் பதிவிற்கு ஏராளமான லைக்ஸ் கிடைத்திருந்த்து. பார்த்த அனைவருமே அதையே ஷேரும் செய்திருந்தனர்.

ஏற்கனவே சில பத்திரிக்கையின் வாயிலாக யசோதரா சிலருக்கு பரிட்சயம் ஆகியிருந்தாள்.  செவ்வாய் கிரகத்திற்கு செல்ல இந்தியாவிலிருந்து தேர்வாகியிருந்த ஒரே நபர் என்ற காரணத்திற்காக சில பத்திரிக்கைகள் யசோதாராவின் பேட்டியை அவளின் படத்துடன் வெளியிட்டு இருந்தன.

தற்போது அவள் அடிபட்டு இருக்கும் படத்துடன் இந்த பேட்டியை தேடி எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தனர் சில நல்ல உள்ளங்கள். (அதில் யசோதராவின் கல்லூரி நட்புகள் மற்றும் பேராசிரியர்களும் அடக்கம்)

இதையெல்லாம் பார்த்திருந்த காவல் துறை சுஜியின் பெற்றவர்களை எச்சரித்திருந்தது. கல்லூரி நிர்வாகம் சுஜியை டிஸ்மிஸ் செய்து வெளியேற்றி அவர்களின் வெறியை ஏற்றியிருந்தது.   

யதீந்திரன் கொடுத்த புகாரால் மேற்கொண்டு சுஜியின் பெற்றவர்களால் சகோதரிகளை நெருங்கவே முடியவில்லை.  இவர்களின் வன்மம் யதீந்திரனின் மீது திரும்பியது.

அவனை அழிப்பதற்கு காத்துக்கொண்டிருக்கும் இந்த கயவர்களின் முன்னே தான் யாமினியிடம் காதலை வெளிப்படுத்தியிருக்கிறான் யதீந்திரன்.

“யாமி என்னோட வர்றியாமா டாக்டர் கிட்ட பேசிட்டு வரலாம்.” என்று கேட்டப்படியே அறையினுள் நுழைந்தான் யாதவன். அவனுடனேயே வந்த யதீந்திரன்,

“யசோதரா எப்படி இருக்கீங்க?” என்று சாதாரணமாக பேசியபடியே யாமினியை கவனித்துக்கொண்டான்.

யாமினியின் முகத்தில் சிறு குழப்பத்தை தவிர வேறெதுவும் தெரியாததால் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டான் யதீந்திரன்.

அதுவரை மூவரின் முகத்திலேயும் பார்வையை வைத்திருந்த யசோதரா, “போ யாமிம்மா, டாக்டர் எப்போ  டிஸ்சார்ஜ் செய்வாருன்னு கேட்டுகிட்டு வா.!!” என்று தங்கையை யாதவனுடன் அனுப்பிவைத்தாள்.

தலைகுனிந்து செல்லும் யாமினியையே பார்த்திருந்த யதீந்திரனை, “என்ன சொல்ல வந்தீங்க யதீந்திரன்?” என்று கேட்டாள் யசோதரா.

அவளை திரும்பிப் பார்த்து பேச ஆரம்பிக்கும் போது, “நீங்க கொடுத்த கம்பலைன்ட்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. இப்போ கூட என்ன பிரச்சினைன்னாலும் சொல்லுங்க நாங்க வரோம் ன்னு நிறைய பேர் சோசியல் மீடியால சொல்லியிருக்காங்க. இதுல எந்த அளவுக்கு நன்மை இருக்கோ அதே அளவு தீமையும் இருக்கு. தனியா இருக்கிற யாமினியை கூடுதல் கவனமாவே பார்த்துக்கறோம்ன்னு இப்போ தான் யாதவன் சொல்லிக்கிட்டு இருந்தார். உங்க எல்லாருக்கும் நாங்க ரொம்பவே நன்றிக்கடன் பட்டு இருக்கோம். ரொம்ப தேங்க்ஸ் யதீந்திரன்.!” என்றாள் யசோதரா.

“தேங்க்ஸ் எல்லாம் எதுக்குங்க? உறவுகளுக்குள் நன்றியெல்லாம் கொண்டுவரவேண்டாமே ப்ளீஸ்!!”

“உறவுகளா?”

“ஆமா, நீங்க ரெண்டுபேரும் எங்க உறவுகள் தான். யாதவன் மூலம் எங்களுக்கு ரோஜா சொந்தமா கிடைச்சாங்க. அதேப்போல என் மூலம் யாமினி எங்களுக்கு சொந்தமாகப் போறா! அவளோட அக்காவும்  எங்க எல்லோருக்கும்  சொந்தம் தான்.” என்று தன் மனதை தெரிவித்தான் யதீந்திரன்.

என்ன தான் யாதவன் மூலம் யதீந்திரனின் காதலை அறிந்திருந்தாலும் நேரடியாக பேசியது சற்று அதிர்ச்சியை தான் அளித்தது.அவனின் தைரியத்தை மனதினுள்ளேயே பாராட்டிக் கொண்டாள் யசோதரா.

இருந்தாலும் அவளால் உடனடியாக யதீந்திரனுக்கு தங்கையை தர சம்மதம் தெரிவிக்க சற்றே யோசனையாக இருந்தது. ஏதோ மிகவும் அவசரபடுவது போல தோன்றியது.

“யசோதரா?” என்று கேள்வியாக அழைத்தான் யதீந்திரன்.

“நீங்க ரொம்ப அவசரப்படுறீங்கன்னு தோணுது யதீந்திரன். கொஞ்சம் டைம் எடுத்து யோசிங்க! எனக்கு உடம்பு சரியான பிறகு பேசிக்கலாம். யாமினி கிட்ட இப்போதைக்கு பேசிடாதீங்க!!”

“அவ கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டேன் யசோதரா!”

“ஹா.ன் !!” என்று அதிர்ந்தவள், “என்ன மிஸ்டர் எதுக்கு இந்த அவசரம்? இப்போ தானே யாதவன் கிட்ட கூட எனக்கு யோசிக்க டைம் வேணும்ன்னு சொன்னேன்.” என்று தன்னை மீறி குரலை உயர்த்தியிருந்தாள்.

“எனக்கு இப்போதைக்கு ப்ரொபோஸ் பண்ற ஐடியாவே இல்லை யசோதரா. ஆனா,” என்று அன்று காலையில் வீட்டில் நடந்தவற்றைப் பகிர்ந்துக்கொண்டான்.

“யாமினி எக்குத்தப்பா எதுவும் கேட்டுவிட கூடாதேன்னு நான் பயந்தது எனக்கு தானே தெரியும்.! ஹாஸ்பிடல் வாசல்ல வச்சு தான் சொன்னேன். யாமினி கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸுமே இல்ல. அவ உங்க கிட்ட இதைப் பத்தி சொல்றதுக்குள்ள நானே உங்க கிட்ட சொல்லிடலாம்ன்னு தான் இப்போ உங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்.

தயவுசெஞ்சு புரிஞ்சுக்கங்க யசோதரா. மனசுல காதலை வச்சுக்கிட்டு அவ கிட்ட சாதரணமா பேச முடியல. இன்னிக்கு ரொம்ப யோசிச்சுக்கிட்டே இருந்தா, கேட்டா உங்க ஹெல்த், படிப்பு மார்ஸ் அது இதுன்னு எதேதோ சொன்னா. கடைசியா சித் சித்தார்த் சித்தார்த்தன்ன்னு முடிக்கறா.”

“சித்தார்த்தா?” என்றாள் சற்றே சிந்தனையுடன்.

“யெஸ் யாருங்க அது?”

“தெரியல!!”

“என்ன இப்படி சொல்றீங்க? உங்க சொந்தத்துல தான் யாரோ அந்த பேருல இருக்காங்கன்னு நினைச்சனே!!” என்றவன் குரலில் சற்று பயம் கலந்தது. திரும்பவும் வெறேந்த ஆபத்திலாவது யாமினி மாட்டிக்கொள்வாளோ! என்ற பயம் தான் அது.

“அதை நான் பார்த்துக்கிறேன் யதீந்திரன். அவ கிட்ட பேசிக்கறேன். பிளீஸ் இப்போதைக்கு இந்த விஷயத்தை அப்படியே விடுங்க. யாமினி உங்க கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசமாட்டா. எங்களோட ப்ரச்சினைகளை சரி பண்ண எனக்கு டைம் வேணும்.”

“கண்டிப்பா உங்க கூட நாங்க இருப்போம் யசோதரா. எப்படியும் அவ படிப்பு முடிஞ்சு தான் கல்யாணம். அதுக்கு முன்ன உங்க கல்யாணம் இருக்கே!! அதுக்கெல்லாம் டைம் நமக்கு நிறைய தேவைப்படும்.” என்றவன்

“யசோதராஇப்போதைக்கு எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் தான் உங்க கிட்ட இருந்து வேணும்.” என்றான் யதீந்திரன்.

“என்னது?”

“அது நீங்க மார்ஸ்க்கு போகலன்னு யாமினிக்கிட்ட சொல்லனும்.உங்கள பிரியப் போறோம்ன்னு நினைச்சு அவ படற வேதனையை என்னால பார்க்கவே முடியல. நீங்க போகலன்னு தெரிஞ்சா ரொம்ப நிம்மதியா இருப்பா.” என்றவனை இடையிட்டாள் யசோதரா.

“எனக்கு இப்போ சுத்தமா முடில யதீந்திரன். ஐ நீட் சம் ரெஸ்ட்.” என்று நிறுத்திக் கொண்டாள் யசோதரா.

“உங்க ஹெல்த் கன்டிசன் எனக்கு புரியுது யசோதரா. ஆனா, யாமினியின் பயம் தான் என்னை பேச வைக்குது. எனக்கு நம்பிக்கை இருக்குங்க உங்க தங்கையை தனியா விட்டுட்டு போக மாட்டீங்கன்னு. உங்க கல்யாணம் முடிஞ்சதும் நீங்களே யாமினியை எனக்கு கல்யாணம் செஞ்சு தருவீங்க. இதெல்லாம் நடக்கும்ன்னு தெரியும் தான். கண்டிப்பா நடக்கும்ன்னு நம்பறேன்.

கொஞ்ச நாள் கழிச்சு யாமினி சந்தோஷப்படறத விட இப்போவே நீங்க மார்ஸ்க்கு போகலன்னு தெரிஞ்சா ரொம்ப நிம்மதியா இருப்பா!! நாம எல்லாரும் சேர்ந்து அவளை நல்லா பார்த்துக்கலாம். ப்ளீஸ் யசோதரா!! என்றான் யதீந்திரன்.

“பார்த்து கொஞ்ச நாள் ஆன உங்களுக்கே யாமினி மேல இவ்வளவு அக்கறை இருந்தா, என் கூட பிறந்த சகோதரி மேல எனக்கு எவ்வளவு அக்கறை இருக்கும் யதீந்திரன்? அப்படியும் நான் இந்த முடிவு ஏன் எடுத்திருக்கிறேன்ன்னு உங்களால புரிஞ்சுக்க முடியவே முடியாது. உங்க அவசரத்துக்காக என்னால என் முடிவுகளை மாத்திக்கிட்டும் இருக்க முடியாது. ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி செய்ங்க யதீந்திரன்!! இப்போ உங்களுக்கு தேவை பொறுமை மட்டுமே.. உங்கள ஹர்ட் செய்யறது என் நோக்கம் இல்லை. எனக்கு நிஜமாவே ரொம்ப கால் வலிக்குது. இதுக்கும் மேல ஏதாவது பேசவேணும்ன்னு  இருந்தா, நான் discharge ஆனப் பிறகு பேசிக்கலாம்.” என்றாள் யசோதரா.

“சாரி யசோதாரா இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்க!! நாம பிறகு பேசிக்கலாம்.!!” என்றவன் குரலில் பேசியே ஆகவேண்டும் என்ற அழுத்தம் இருந்தது.

சில நிமிட இடைவெளியில் யாதவனும், யாமினியும் அறைக்குள் நுழைந்தனர்.

“யதுக்கா, இன்னும் 2 டேஸ் இங்க தான். உங்க பிங்கர்ஸ் சீக்கிரமே ஒட்டிவிடும்ன்னு சொல்லிட்டார் கா.பட் நடக்க இன்னும் டைம் ஆகுமாம். அது தான் கவலையா இருக்குக்கா. எப்படி இந்த காலோட எக்ஸாம்ஸ் அட்டென்ட் பண்ண முடியும்? பேசாம படிப்பை டிஸ்கன்டினியு பண்ணிடு யதுக்கா!!” என்று கூறிய யாமினியை புண் முறுவலுடன் பார்த்திருந்தாள் யசோதரா.

யாதவனும் யதீந்திரனும் சற்று அதிர்ச்சியுடனே பார்த்தார்கள்.

முதுகலை படிப்பின் கடைசி தேர்வு எழுதினால் யசோதரா ஒரு முதுநிலை பட்டதாரி. தேர்வை எப்படியாவது எழுதி முடித்துவிடுவாள் இந்த யசோதரா என்பது அதிர்ச்சியுடன் நின்றுக்கொண்டிருந்த சகோதரர்களுக்கு எப்படி தெரியும்.

“யாமிம்மா, என் படிப்பை நான் நிறுத்தினா தானே நீயும் நிறுத்த முடியும்? அதுக்கு தானே இந்த உபசரிப்பு!! என்ன நடந்தாலும் நானும் எக்ஸாம்ஸ் எழுதுவேன். நீயும் உன்னோட படிப்பை கன்டினியூ பண்ற!!” என்று அழுத்தமாக கூறினாள் யசோதரா.

“சரிக்கா!!” என்ற யாமினியின் குரலில் வேப்பங்காயின் சுவை.

யாமினிக்கு யதீந்திரன் தன்னிடம் காதலை சொன்னது நினைவிலேயே இல்லை. யாதவனுடன் சென்று மருத்துவரிடம் பேசியபோதே காலையில் நடந்திருந்ததை பாதி மறந்தாள். மீதியை யசோதரா படிப்பை பற்றி பேசியதும் மறந்தாள்.

அவள் மறந்திருப்பாள் என்றே எதிர்பார்க்காத யதீந்திரன், யசோதரா ஓய்வெடுக்கும்போது யாமினியிடம் பேசிட முடிவு செய்திருந்தான்.

“யசோதரா நீங்க ரெஸ்ட் எடுங்க. என்னோட ஓவிய கண்காட்சிக்காக ஒருத்தரைப் பார்க்கவேண்டியிருக்கு. நான் நாளைக்கு காலைல வரேன்.!இல்லைல்ல ரோஜாவையும், யுவியையும் இன்னிக்கு ஈவ்னிங் கூட்டிக்கிட்டு வரேன். உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க.”என்ற யாதவன், திரும்பி “தீரா யாமினியை பார்த்துக்கோ.!” என்று யதீந்திரனிடம் கூறிவிட்டு யாமினியிடம் கண்களாலேயே விடைபெற்றான்.

சகோதரிகள் இருவரும் தனியே பேசட்டும் என்று யதீந்திரனும் அறையை விட்டு வெளியே சென்றான்.

யாமினி ஏதாவது தன்னிடம் யதீந்திரனைப் பற்றி கூறுவாளா? என்று அவளையே பார்த்தாள் யசோதரா. ஆனால் யாமினியின் சிந்தனை முழுக்க திரும்பவும் காலேஜ் போய் அனைவரின் முகத்திலும் விழிக்கவேண்டுமே!! என்பது தான்.  அக்காவிற்காக சில சமயங்கள் தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், பல சமயங்கள்தைரியத்தை இழந்து எதிர்மறையாகவே சிந்தித்தாள்.

“யாமி என்னம்மா?”

“அக்கா நான் காலேஜ் போகணுமா?”

“கண்டிப்பா..!!” என்று அழுத்தத்துடன் கூறியவள் “வேற பேசலாம் யாமி. ஒரு பாட்டு பாத்தேன் யாமி. உனக்கும் ப்ராக்டிஸ் செஞ்சமாதிரி இருக்குமே!!” என்றாள்.

தியாகராஜ கீர்த்தனை ஒன்றை மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள். அறையின் வெளியே நின்று அதை ரசித்திருந்தான் யதீந்திரன்.

யசோதாரா உறங்கிய பின்னும் யதீந்திரனுக்கு யாமினியிடம் பேச நேரமே கிடைக்கவில்லை. அலுவல் அழைப்புகள் அவனுக்கு வந்த வண்ணம் இருந்ததால் யசோதராவின் உறக்கம் கெட்டுவிடாதிருக்க மருத்துவமனையின் வாசலிலேயே இருந்தான். மதிய உணவின்போது யசோதரா விழித்திருந்தாள். அதன் பிறகு அவள் உறங்காமல் தங்கையிடம் ஏதோ பேசியபடியே இருந்ததால், அவனுக்கு யாமினியிடம் பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

“யுவி ரெடியா? ஆட்டோ வந்துடுச்சு!!” என்றாள் ரோஜா.

“ரெடி அண்ணி.!! அண்ணா ஹாஸ்பிடல் வந்துடுவார் இல்ல?”

“வரேன்னு தான் சொல்லி இருக்கார். லேட் ஆச்சுன்னா நாம கிளம்பி வீட்டுக்கு வந்துடலாம். விசிட்டிங் ஹௌர்ஸ் முடிஞ்சுதுன்னா வெயிட் பண்ண முடியாதில்லை.”

“சரி அண்ணி!! வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் படிக்கணும் அண்ணி.!!” என்றவளுக்கு தெரியாது இன்று தன்னை பெற்றவளை சந்திப்போம் என்று. அந்த சந்திப்பின் விளைவாக அவள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப ஒரு வாரம் ஆகுமென்று. இதெல்லாம் தெரியாமலே ரோஜாவுடன் மருத்துவமனைக்கு சென்றாள் யுவராணி.

தங்கைக்கு அவளை பற்றிய ரகசியத்தை முன்னாடியே தெரிவித்திருக்கலாம் என்று காலம் கடந்து சிந்திப்போம் என்றே தெரியாமல், யதீந்திரன் யாமினியிடம் தனிமையில் பேச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

சுஜியைப் பெற்றவர்கள் யதீந்திரனின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்திருந்தனர்.

Advertisement