Advertisement

அத்தியாயம் : 9

யாமினி யதீந்திரனின் தொடுகையில் பயந்து தன் அக்காவிடம் சரண் புகுந்தாள். யசோதராவிற்கு கோபம் மிகுந்திருந்தது. தங்கையின் நிலையை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்ற கவலையும் எட்டிப் பார்த்தது. கொஞ்சம் பயமும் எட்டி பார்த்ததும் உண்மையே!

“யாமி, நீ உள்ள போ!” என்று யசோதரா சொன்னதுமே வேகமாக எழுந்து தன்னுடைய அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள் யாமினி.

அறைக்குள் போகும்போது அவள் ஒருவித பயத்துடன் யதீந்திரனை பார்த்துவிட்டு சென்றது, யதீந்திரனுக்கு வலித்தது.

அவனின் கண்கள் தங்கையை தொடர்வதைப் பார்த்த யசோதரா கோபத்துடன் அவனுடன் பேச ஆரம்பித்தாள்.

“மிஸ்டர். யதீந்திரன்! உங்களை மதிச்சு எங்க வீட்டு சாப்பாட்டு அறை வரைக்கும் கூட்டிக்கிட்டு வந்ததுக்கு நல்ல காரியம் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க.!!”

“யசோதரா, ப்ளீஸ் நான்.!” என்று ஏதோ சொல்ல வந்த யதீந்திரனை கோபத்துடன் கைகாட்டி நிறுத்தினாள் யசோதரா.

“உங்க விளக்கம் எதுவும் தேவையில்லை யதீந்திரன். நேத்து நீங்க செஞ்ச உதவிகளுக்கு நன்றி! இப்போ எனக்கு நிறைய வேலை இருக்கு.இப்போ நான் இருக்கிற மனநிலைல எனக்கு வார்த்தைகள் கடுமையா உபயோகிக்க வரலாம். கண்டிப்பா வரும்!

ஆனா,மேலும் மேலும் பிரச்சினைகளை வளர்க்க நான் விரும்பல. ப்ளீஸ் நீங்க கிளம்புங்க. இனிமே இங்க வராம இருக்கிறது தான் உங்களுக்கு நல்லதுன்னு நினைக்கிறேன்.” என்று மேற்கொண்டு பேச ஆரம்பித்தவளை தடுத்தான் யாதவன்.

“ஓகே சிஸ்டர்! நாங்க கிளம்பறோம். எந்த என்குயரிக்கும் நான் வர தயாரா இருக்கேன். இது என்னோட நம்பர்!” என்றவன், ஏற்கனவே  அவனுடைய அலைபேசி எண்களை எழுதியிருந்தசிறு காகிதத்தை யசோதராவிடம் நீட்டினான் யாதவன்.

அதை வாங்கிய யசோதராவும் அவனுக்கு நன்றி தெரிவிக்க பேச ஆரம்பிக்கும்போது யாதவன் மறுபடியும் இடையிட்டான்.

“யதீந்திரனை நான் நியாயப்படுத்தலை! ஆனா, அவன் தவறான எண்ணத்துல யாமினியின் கைகளை பிடிக்கவில்லை என்பதை மட்டும் உறுதியா சொல்ல முடியும். அவனுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தா அவனுடைய செயலுக்கான விளக்கத்தை கொடுப்பான். உங்களுக்கு எப்போ அதை கேட்க மனம் வருகிறதோ அப்போ எனக்கு போன் செய்ங்க! இவனை கூட்டிக்கிட்டு வரேன்! இப்போ நாங்க கிளம்பறோம். தீரா வாடா போகலாம்.!” என்று யதீந்திரனின் கையைப் பிடித்து அழைத்து சென்றான் யாதவன்.

சகோதரர்கள்  வெளியே சென்றதுமே கதவை சாற்றிய யசோதராவிற்கு, இவர்களிடம் பொய்மையோ, கயமையோ அறவே இல்லை என்பது புரிந்து தான் இருந்தது. இருந்தாலும் முதலில் தங்கையை கவனிக்க எண்ணி அந்த சகோதரர்களைப் பற்றி சிந்திப்பதை தள்ளி வைத்தாள்.

வெளியே வந்த யதீந்திரனுக்கு யாமினியிடம் பேச முடியாத ஆதங்கமே மிகுந்து இருந்தது. அதை அவனின் கோபம் மூலம் புரிந்துக்கொண்டான் யாதவன்.

“தீரா! நீ அர்த்தமில்லாம கோபப்படற! அதுல துளிக் கூட நியாயமே இல்லை. யாமினி ரொம்ப பயந்துப் போய் இருக்கிறது அவளைப் பார்த்தாலே தெரியுது! இன்னும் இரண்டு நாள் கழித்து வந்துப் பார்க்கலாம்ன்னு எத்தனை தடவை சொன்னேன்.கேட்டியா நீ?

நீ ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு நடந்துக்கிட்டதுனால தானே யசோதரா வெளிய போக சொல்லிட்டாங்க! கொஞ்சம் பொறுமையா நடந்துக்கோ!கொஞ்சநாள் அமைதியா இரு. சீக்கிரமே உன்னோட காதலை யாமினிக்கிட்ட சொல்லலாம்.” என்று யதீந்திரனை அமைதிப் படுத்தினான் யாதவன்.

யாதவனின் அலைபேசி அடித்தது. அவனின் மனைவி ரோஜா தான் அழைத்திருந்தாள். யாமினியின் நலத்தை விசாரித்தவள் கணவனின் குரலில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்தவள், பிறகு அழைப்பதாக கூறி வைத்தாள் ரோஜா.

அதில் நெகிழ்ந்த யாதவனுக்கு ரோஜாவைப் போல் யாமினி இருப்பாளா? என்ற சந்தேகம் எழுந்தது. அதை ஒதுக்கி யதீந்திரனுடன் வீட்டிற்கு கிளம்பினான் யாதவன்.

தங்கை இருந்த அறை கதவை தட்டி யாமினியை அழைத்தவளுக்கு, யாமினியின் அலைபேசி எங்கே என்ற நினைவு வந்தது.

“யாமி, உன்னோட போன் எங்க?”

“யதுக்கா அதான் சுஜி பிடுங்கி வச்சுக்கிட்டான்னு சொன்னேனே!!”

யாமினியின் மொபைலை வைத்துக்கொண்டே தன்னிடம் எதுவுமே நடக்காதது போல பேசிய அந்த சுஜியின் மீது எரிச்சல் கலந்த கோபம் தான் எழுந்தது. அவளின் அலைபேசியை எடுத்து யாமினியின் எண்ணிற்கு அழைத்தாள். அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக வந்த தகவலில் மேலும் கோபம் கொண்டாள்.

“யாமி போய் கிளம்பு! காலேஜ்ல போய் அவ கிட்ட பேசலாம்!”

“இல்லக்கா நான் வரமாட்டேன்! என்னை எல்லாரும் ரொம்ப அசிங்கமா பார்ப்பாங்க! எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இந்த வீட்டை விட்டு நான் வெளிய போகவே மாட்டேன்!!” என்றவள் ஓடிச் சென்று தன் அறையினுள் புகுந்தாள் யாமினி.

அந்த சுஜியின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் தங்கையை தேற்ற சென்றாள் யசோதரா.

யசோதரா தங்கையை ஓரளவிற்கு தைரியப்படுத்தி, அவளை வெளியே அழைத்து வர அவளுக்கு முழு இரண்டு நாட்கள் தேவையாய் இருந்தது. ஏற்கனவே அக்காவின் தயவை எல்லாவற்றிலும் எதிர்பார்க்கும் யாமினியை இந்த சம்பவத்திற்கு பிறகு தேற்றுவது யசோதராவிற்கு மிகவும் கடினமாக இருந்தது. சில சமயங்களில் கோபம் கூட வந்தது தான், ஆனால் தன்னுடைய கோபம் அவளை தப்பான முடிவிற்கு எடுத்துச்செல்லுமோ என்று பயந்து, பொறுமையாகவே யாமினியை தேற்றினாள் யசோதரா.

தங்கையுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த யசோதரா அடுத்து சென்ற இடம், யாமினியின் கல்லூரி.

யாமினியை கண்டதும் அவளின் நட்புகள் அவளை சூழ்ந்துக்கொண்டது. ஒருவரிடமும் சரியாக முகம் கொடுத்து பேசாமல், அவர்களைப் பார்த்து பயத்துடன் அக்காவிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள் யாமினி.

அந்த கூட்டத்தில் சுஜி இருக்கிறாளா? என்று தேடினாள் யசோதரா. அக்காவின் பார்வையை பார்த்து ‘இல்லை!’ என்பதாக தலை அசைத்தாள் யாமினி.

சில நிமிடங்கள் அந்த நட்புக் கூட்டத்துடன் பேசினாள் யசோதரா. யாமினி அக்கா என்ற மரியாதையுடனே அவர்களும் நன்றாக பேசினர்.

மேலும் சில நிமிடங்கள் கடந்த நிலையில் சுஜி கல்லூரிக்கு வந்தாள். அங்கு யசோதராவும், யாமினியும் இருப்பதைப் பார்த்து சற்று பயம் உண்டானது. அதை உதறி அவர்களிடம் சற்று திமிராகவே சென்றாள்.

அதன் பிறகு நடந்தது அத்தனையும்  சகோதரிகள் இருவருக்கும் எதிர்மறையாகவே முடிந்தது.

காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சுஜியை விசாரிக்க சென்ற காவலர்களுக்கு தக்க ஒத்துழைப்பு கொடுத்தாலும், சுஜியின் மேல் எந்தவித குற்றமும் இல்லை என்று வாதாடினர் அவளின் பெற்றோர்.

ஆம்! சுஜியின் பெற்றவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள். நிறைய வழக்குகளை திசை திருப்பும் வல்லமை பெற்றவர்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடுவது என்ற குறிக்கோளுடன் இருப்பவர்கள்.

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு காமுகனுக்கு முன் ஜாமீன் எடுத்து கொடுத்து, அவன் பேரில் இருக்கும் வழக்கை ரத்து செய்ய போராடி வருகின்றவர்கள் தான் இந்த சுஜியைப் பெற்றவர்கள்.

பணத்திற்காக எதையும் செய்ய தயங்காதவர்களான இவர்கள், தங்கள் பெண்ணை மட்டும் விட்டு கொடுத்துவிடுவார்களா, என்ன? அதுமட்டுமில்ல, வழக்கறிஞர்கள் மத்தியிலும் தங்களை ஒரு சிறந்த(!) வழக்கறிஞர்களாக எப்போதுமே காட்டிக்கொள்ளும் பேராசையும் அவர்களுக்கு உண்டு.

சிறந்த வழக்கறிஞர்களாக இருக்க மட்டுமே நினைத்த அவர்கள் சில நொடிகளேனும் சிறந்த பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் சுஜி இப்படி வழி தவறி சென்றிருக்க மாட்டாளோ, என்னவோ?

யாமினி, சுஜி மற்றும் அவளின் சில நண்பர்களுக்கு பிறந்தநாள் என்ற பெயரில் ட்ரீட் கொடுத்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர் சுஜியைப் பெற்றவர்கள். பார்ட்டி முடிந்ததுமே அனைவரும் கிளம்பும்போதே சுஜியும் கிளம்பியது சகோதரிகளுக்கு பாதகமாக முடிந்தது.

யாமினி தனியாக வேறு நண்பர்களுடன் சென்று குடித்ததாகவும், அங்கு அவளுக்கு நடக்கவிருந்த கொடுமைகளுக்கு அவளே பொறுப்பு என்று வாதாடினர்.

தங்கள் மகளின் நற்பெயரை களங்கப்படுத்திய குற்றத்துக்காக அந்த சகோதரிகள் மீது மான-நஷ்ட வழக்கு தொடுக்கவும் மறக்கவில்லை இந்த நியாயவான்கள்.

இந்த சகோதரிகளின் தனிமை வாழ்வையும் சுஜியின் பெற்றவர்கள் கேலிக்கூத்தாக்கியதில் மனதளவில் மிகவும் நொடிந்து போனாள் யசோதரா.

 

 

 

Advertisement