Advertisement

அத்தியாயம் : 8

யாமினியை தூக்கி வந்த யதீந்திரன் அவளின் படுக்கையில் படுக்க வைத்தான்.

யசோதரா அவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு லேசாக முறுவலித்து, தலையை அசைத்தாள். அந்த புன்னகையில் வருத்தமே நிறைந்திருந்தது.

யாமினியை தூக்கி கொண்டு வரும் போது, அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் முதல் எதிர்ப்பட்ட அனைவரும் கேட்ட கேள்விகளால் துவண்ட யசோதராவை, யதீந்திரன் அவர்களுக்கு கொடுத்த பதில்கள் தான் மேலும் அவளை உடையாமல் காத்தது.

அதுமட்டுமில்லாமல், தங்களை யசோதராவின் சொந்தங்கள் என்று அனைவரிடமும் யதீந்திரன் அறிமுகப்படுத்திக்கொண்டது அவளின் மனதிற்கு இதமாக தான் இருந்தது.

அதற்கான நன்றியுடன் தான் அவள் யதீந்திரனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“யசோதரா, நைட் ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா தயவுசெஞ்சு எனக்கு கால் செய்ங்க! காலைல யாமினிக்கு எப்படி இருக்குன்னு நானே கால் செஞ்சு கேட்டுக்கிறேன்!!” என்றான் யதீந்திரன்.

“பரென்ட்ஸ்க்கு கால் செஞ்சுடுங்க சிஸ்டர்!!” என்று கூறிய யாதவனிடம் மெளனமாக தலையாட்டினாள்.

யசோதராவின் முகத்தில் ‘பரென்ட்ஸ்’ என்று சொன்னதுமே தெரிந்த விரக்தியை யதீந்திரன் கவனித்து கோபம் கொண்டான்.

சகோதரிகள் இருவரையும்  தனிமையில் விட்டு சென்ற அந்த பெற்றவர்களை நினைத்து கோபம் தான் பெருகியது.

‘பொறுப்பற்ற பெற்றவர்கள்!!’ என்று அவர்களை மனதில் சாடியவன், ‘பெண் பிள்ளைகளை இப்படி தனியே  தவிக்கவிட்டு, எப்படி தான் பணத்தின்பின்னால் ஓடுகிறார்களோ?’ என்று தனக்குள்எழுந்தகேள்வியுடன் யோசித்தான் யதீந்திரன்.

‘பொருளீட்டில் இருக்கும் ஆர்வத்தைசற்றே பெற்ற பிள்ளைகள் மீதும் காட்டலாம்!’ என்று நினைத்தவனுக்கு என்ன தெரியும்? இவர்களின் பெற்றவர்கள் எதிலுமே பற்றற்று குழந்தையிலேயே இவர்களை தவிக்கவிட்டு சென்றவர்கள் என்று!

யதீந்திரன், யாதவன் பெற்றவர்கள் அற்ற அநாதைகள் என்றால், யுவராணி, யசோதரா மற்றும் யாமினி பெற்றவர்களால் அநாதையாக ஆக்கப்பட்டவர்கள்.

இவர்களுக்குள் சொந்தம் ஏற்பட வேண்டும் என்ற காரணத்தினால் தானோ, என்னவோ விதி இவர்களை நெருங்கிய உறவுகள் ஏதும் இல்லாமல் செய்திருந்தது போலும்.

“தேங்க்ஸ் சார்!” என்று யதீந்திரனுக்கு விடைகொடுத்த யசோதரா, சிறு தலையசைப்புடன் யாதவனுக்கு விடை கொடுத்தாள்.

கதவை அடைத்துவிட்டு தங்கையின் அருகில் அமர்ந்த யசோதராவிற்கு நிறைய சிந்தனைகள் வந்து சென்றன.

நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற யாமினியின் தலையை கோதியவளின் விழிகளில் நீர் கோர்த்தது. எத்தகைய ஆபத்தில் இருந்து தங்கை தப்பித்திருக்கிறாள் என்று நினைக்க நினைக்க யசோதராவிற்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

யாதவனுக்கு மீண்டும் ஒரு நன்றியை மனதினுள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கையை யோசித்துக்கொண்டிருந்த யசோதராவை உறக்கம் தழுவியது.

“யதுக்கா!!” என்று அணைத்து முத்தமிட்ட யாமினியின் குரலில் தான் விழித்தாள் யசோதரா.

“யாமிம்மா!!” என்று அவளும் யாமினியை அணைத்துக்கொண்டாள்.

தூக்க கலக்கத்தில் இருந்த யசோதராவிற்கு இரவு நடந்த சம்பவங்கள் அனைத்தும் நினைவிற்கு வரவில்லை.

“யதுக்கா! நீ என் கூட படுத்து எவ்வளவு நாள் ஆச்சு? இனிமே என் ரூம்லயே படுத்துக்கோ யதுக்கா!!” என்ற குரலில் தான் இரவில் நடந்ததனைத்தும் நினைவுக்கு வந்தது.

நினைவிற்கு வந்ததுமே பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தாள்.

யசோதராவின் பதட்டத்தில் யாமினி பயந்து அவளும் எழுந்து அமர்ந்தபோது தான் கவனித்தாள்.

“என்னக்கா ட்ரஸ் இது?” என்று முகம் சுழித்த யாமினியை மெளனமாக பார்த்தாள் யசோதரா.

“போ யாமி, பிரஷ் பண்ணிட்டுவா! நாம பேசலாம்!” என்றவள் அவளுடைய அறைக்குள் சென்றாள் யசோதரா.

காலைக்கடன்களை முடித்த யசோதரா காலை உணவையும் தயார் செய்து முடிக்கும்போது தான் யாமினி வந்தாள்.

“யதுக்கா! ரொம்ப ஹெட்ஏக்கா இருக்கு!” என்றவளிடம் சூடான பாலை நீட்டினாள்.

“யாமி, நைட் எங்க போனீங்க? யாரெல்லாம் வந்தாங்க?”

“நைட் நான் ஒண்ணுமே சொல்லலையாக்கா?” என்ற யாமினிக்கு பதிலேதும் சொல்லாமல் இருந்தாள் யசோதரா.

அவளின் மௌனத்தில் தானாகவே யார் யாருடன் எங்கே சென்றாள் என்ற விவரத்தை கூறினாள் யாமினி.

“இன்னும் ஏதாவது சொல்லனுமா யாமி?” என்றாள் யசோதரா.

நடந்தவற்றை சொல்லும்போது எந்தவித தடங்கலும் இல்லாமல் சொல்லிக்கொண்டே சென்ற யாமினிக்கு, சுஜியின் செயலை எப்படி சொல்லுவது என்ற தடுமாற்றம் வந்தது.

தங்கையின் தடுமாற்றத்தை கவனித்த யசோதரா, யாமினியின் மனது புண் படாமல் நடந்தவற்றை அறிந்துக்கொள்ள முடிவு செய்தாள்.

“சொல்லு யாமி! இன்னும் ஏதாவது சொல்லனுமா?” என்ற யசோதராவின் குரலில் நிறைய அழுத்தம் இருந்தது.

“அது வந்து யதுக்கா, ஸு சு சுஜிஎன் கண்ணை கட்டி காருக்குள்ள கூட்டிட்டு போனா! வீட்டுக்கு அவளே வந்து விடறேன்னு ஏற்கனவே அவ சொல்லியிருந்தா! இந்த கேம் நல்லா இருக்கேன்னு நானும் நல்லா என்ஜாய் செஞ்சுட்டு இருக்கும்போது படக்குன்னு என் வாய்ல சரக்கு ஊத்தி விட்டுட்டா!!” என்றவள் தமக்கையின் முகத்தை பயத்துடன் பார்த்தாள் யாமினி.

“சரக்கா? என்னது அது?”

“எனக்கு எதுவுமே தெரிலக்கா, வீட்டுக்கு தெரியாம இப்படி சரக்கு அடிக்கறது செம்ம கிக்ன்னு சொல்லிக்கிட்டே வாயில நிறைய ஊத்தினா! நான் வேண்டாம்ன்னு எவ்வளவோ தலையை ஆட்டிப் பார்த்தேன். ஆனா என் வாயை டைட்டா பிடிச்சுக்கிட்டு ஊத்திவிட்டுட்டே இருந்தா! அதுக்கு பிறகு என்ன நடந்ததுன்னு தெரில.

இப்போ வரைக்கும் அது எனக்கு நியாபகம் வரலை. என்னச்சுக்கா சுஜி வந்து விட்டுட்டு போனாளா? அந்த ட்ரஸ் நல்லாவேயில்லை யதுக்கா! அந்த ட்ரஸ் எப்போ வாங்கினோம்? நீ தான் எனக்கு ட்ரஸ் மாத்தி விட்டயா? என்று அடுக்குக்கடுக்காக கேள்விகளை அடுக்கினாள் யாமினி.

யசோதரா சுஜியின் செயலில் அதிர்ந்து தான் போனாள். அவளின் வக்ர குணம் தெரியாமல் தங்கையை அவளிடம் பழக சொன்ன தன்னுடைய முட்டாள் தனத்தை மனதினுள்ளேயே திட்டிக்கொண்டாள். சுஜி மீது கண்டிப்பா நடவடிக்கை எடுக்க முடிவு செய்து தங்கையிடம் நடந்த விபரீதத்தை மெதுவாக எடுத்து சொன்னாள்.

தமக்கை கூறியதுமே யாமினிக்கு அழுகை பொங்கியது. யசோதராவை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“யாமி அழாதடா! உனக்கு ஏதாவது புரியுதா எப்படிப்பட்ட ஆபத்துல இருந்து நீ தப்பிச்சு இருக்கன்னு? சுஜி அந்த சுஜி இவ்வளவு மோசமானவளா? அதைப் பத்தி நீ கொஞ்சம் முன்னமே சொல்லி இருக்கலாமே! முதல் நாள் அவளை பற்றி சொன்ன, அதன் பிறகு ஏன் யாமி சொல்லலை? அக்கா உன் கிட்ட ஹார்ஷா நடந்துக்கிட்டேனா?” என்று கேட்ட யசோதராவை மேலும் இறுக கட்டிக்கொண்டு அழுதாள்.

“சொல்லு யாமி!!”

“ம்ம்ஸ்ம் தெரிலக்கா!” என்று தேம்பியவள், “ஆனா அவ செஞ்சது எதுவுமே எனக்கு பிடிக்காம இல்லக்கா! நேத்து அவ ஊத்தி விட்டது தான் எனக்கு பிடிக்கல!”என்று அழுதாள் யாமினி.

யசோதராவிற்கு சுஜியை புரிந்தது. யாமினியின் மனதில் விஷத்தை ஏற்றுவதை அவள் அறியாமல் கூட செய்திருந்த சுஜியின் கள்ளத்தனத்தை புரிந்துக்கொண்டாள்.

“யாமி கார்ல யாரெல்லாம் இருந்தாங்கன்னு கொஞ்சம் நியாபகப் படுத்தி பாரும்மா! நாம இப்போ போய் கம்பளைண்ட் கொடுத்துட்டு வரலாம் வா!” என்றவளை தங்கையின் அழுகுரல் தடுத்தது.

“நோ யதுக்கா! நான் வரமாட்டேன் எல்லோரும் ரொம்ப கேள்வி கேப்பாங்க! என்னை ரொம்ப அசிங்கமா பார்ப்பாங்க! நான் வெளியவே வரமாட்டேன். எனக்கு படிப்பும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். என்னை விட்டு நீ எங்கயும் போகாத யதுக்கா!! எனக்கு ரொம்ப பயமாயிருக்கு!” என்று பயந்து அலறினாள் யாமினி.

யசோதராவிற்கு சுஜியின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தாலும், முதலில் தங்கையின் பயத்தைப் போக்கவே நினைத்தாள்.

“அதுமட்டுமில்லைக்கா எனக்கு அங்க யாரெல்லாம் இருந்தாங்கன்னு தெரியவேயில்லை. எதுவுமே நினைவுக்கு வரலை.!!” என்று மேலும் அழுதாள் யாமினி.

“சரி யாமி, முதல்ல கண்ணை துடை! நாம சாப்பிட்ட பிறகு என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்! இப்போ வா சாப்பிடலாம். நைட் நான் சாப்பிடவேயில்ல, பசிக்குது யாமி.!”

“எனக்கு சாப்பிட பிடிக்கவேயில்லக்கா!!” என்று அழுதபடியே கூறினாள்.

“பசில இருந்தா பயம், கோபம் எதுவுமே குறையாது! கொஞ்சமா சாப்பிடு வா!! அக்கா இருக்கேன்ல நான் பார்த்துக்கிறேன்!” என்று அவளை அணைத்தவாறே சாப்பிட அமரவைத்தாள்.

அவல் உப்புமாவில் இருந்த வேர்க்கடலையை தனியே எடுத்துக்கொண்டிருந்த யாமினியை சிறு பெருமூச்சுடன் பார்த்தாள் யசோதரா.

சாப்பிடாமலே ஏதோ ஒரு யோசனையில் இருந்த சகோதரிகளை வாயிலின் அழைப்புமணி ஓசை நடப்புலகிற்கு கொண்டு வந்தது.

“நீ சாப்பிடு யாமி! நான் யாருன்னு பார்த்துட்டு வரேன்.!”

கதவில் இருந்த சிறு கண்ணாடி துளை வழியே வந்திருப்பது யார் என்று பார்த்தாள் யசோதரா.

வாசலில் யாதவன் மற்றும் யதீந்திரன் நிற்பது தெரிந்தது.

கதவை திறந்து அவர்களுக்கு முகமன் கூறி உள்ளே அழைத்தாள் யசோதரா.

“ஹெலோ யசோதரா! யாமினி எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் யதீந்திரன்.

“இப்போ நல்லா இருக்கா!”

“யார் இப்படி செஞ்சாங்கன்னு யாமினி ஏதாவது சொன்னாங்களா?” என்று அவசரமாக கேட்ட யதீந்திரனின் கையைப் பிடித்து அமைதி படுத்தினான் யாதவன்.

“யாமினி ஏதாவது சொன்னாளா சிஸ்டர்?” என்று யதீந்திரன் கேட்ட கேள்வியையே மெதுவாக கேட்டான் யாதவன்.

“அவளுக்கு எதுவுமே நியாபகம் இல்லை.! கம்ப்ளைண்ட்  செய்யவும் ரொம்ப பயப்படறா! கொஞ்சம் யோசிச்சு தான் முடிவு எடுக்கணும்.!”

“யாமினியை நாங்க பார்க்கலாமா?” என்று கேட்டான் யதீந்திரன்.

“உள்ளே வாங்க சாப்பிடலாம்! அவ சாப்பிட்டுக்கிட்டு இருக்கா!” என்று சமையல் அறைக்குள் இருந்த சாப்பாட்டு மேஜைக்கு அவர்களை அழைத்து சென்றாள்.

இரு படுக்கை அறைகளை கொண்ட சிறிய வீடு தான் அது. ஹாலில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் நன்றாகவே சமையலறையினுள் கேட்கும் தான். இவர்கள் பேசியதும் யாமினியின் காதுகளில் விழுந்தது தான் ஆனால் அவள் நல்ல மன நிலையில் இல்லாததால் தன்னை சுற்றி நடக்கும் எதிலும் அவளின் கவனம் பதியவில்லை. ‘தன்னை அனைவரும் அசிங்கமாக பார்ப்பார்களே!’ என்று நினைத்து நினைத்து மறுகினாள்.

அவளையேப் பார்த்துக்கொண்டிருந்த யதீந்திரனின் நெஞ்சில் ஏதோ ஒரு பாரம் ஏறியது. அதன் கனம் தாங்காமல் சொத்தென்று அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

பொம்மைப் போல் இருந்த யாமினியின் முகத்தில் எப்போதுமே குழந்தைத்தனம் மிகுந்திருக்கும். அந்த முகத்தைப் பார்த்து தான் யதீந்திரன் காதல் கொண்டான். ஆனால் இப்பொழுது அந்த குழந்தைமுகத்தில் தெரிந்த, வேதனை கலந்த பயம், அவனின் காதல் நெஞ்சத்தை தைத்தது.

“எப்படி இருக்க யாமினி?” என்று யாமினியின் கைகளைப் பற்றி அழுத்திக் கேட்டான் யதீந்திரன்.

வந்ததிலிருந்து யதீந்திரனின் செயல்களை கவனித்திருந்த யசோதராவின் முகத்தில் சற்றே கோபம் எட்டிப் பார்த்தது.

 

 

Advertisement